29. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.6
(64)

சொர்க்கம் – 29

வெளியே வந்து லைலாவுக்கு அருகே அமர்ந்த செந்தூரிக்கு அதன் பின்னர் அவர்களுடன் பேசும் எண்ணம் அறவே அற்றுப் போனது.

“நீ சொன்ன எல்லாத்தையும் கேட்டதும் எனக்கு ரொம்பவே ஆசை அதிகமாயிருச்சு செந்தூரி.. ஃபேமஸான ஹீரோயின்ஸ் எல்லாருமே என்கிட்டதான் மேக்கப் போட்டுக்குவாங்க.. அவங்கள்ல நிறைய பேர் நம்ம சாரப் பத்தி சொல்லிருக்காங்க.. ஆனா நீ சொன்ன மாதிரி யாருமே சொன்னது இல்ல.. இன்னைக்கு நைட் ரொம்ப கிக்கா இருக்கும்னு தோணுது…” எனச் சிரித்தபடி கூற இவளுக்கோ முகம் அஷ்ட கோணலாக மாறியது.

லைலா எந்த எண்ணத்தில் விநாயக்கை இரவு விருந்திற்கு அழைத்திருக்கிறாள் என்பது அப்போதுதான் புரிய அதிர்ந்து போனாள் செந்தூரி.

‘கலிகாலம் கலிகாலம்..’ என தன் தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டாள் அவள்.

‘இவகிட்ட வாய கொடுத்து நாமளே நம்ம பேரக் கெடுத்துக்கிட்டோமே..’ என மனதிற்குள் நொந்து கொண்டவள் அதன் பின்னர் வாயைத் திறக்கவே இல்லை.

அவளுக்கு மெனிக்யூர் பெடிக்யூர் ஃபேஷியல் என அனைத்தும் செய்து முடித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றதன் பின்னர்தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

என்ன‌ பெண் இவள்..?

கொஞ்சமும் கூச்சமே இன்றி இப்படி வெளிப்படையாக உறவுக்கு அழைக்கின்றாளே.

இவர்களுடைய வீட்டிற்கெல்லாம் இது தெரிந்தால் திட்ட மாட்டார்களா.?

இல்லை வருங்காலக் கணவனைப் பற்றிய எண்ணமே இல்லையா.?

சினிமா உலகமே ஒரு சாக்கடை தான் போலும்.

சற்று நேரத்தில் மீண்டும் கீழே வந்த விநாயக்கோ செந்தூரியைக் கண்டு மெச்சுதலாக புன்னகை பூத்தான்.

“இப்போ பாக்குறதுக்கு நீ ரொம்ப அழகா இருக்க..”

‘அதுக்காக என்ன அவார்டா தரப் போற..?’

“சீக்கிரமே உனக்கு நிறைய ஃபேன்ஸ் கிடைப்பாங்க..”

‘அட போடா லூசுப் பயலே..’

“நல்லா ஆக்ட் பண்ணணும்…”

‘இப்பவும் உங்க முன்னாடி ஆக்ட் பண்ணிட்டுத்தான் இருக்கேன்..’

“ஏய் உன்கிட்டதான் பேசிகிட்டு இருக்கேன்.. எதுக்கு இப்போ அமைதியா இருக்க..?”

‘நான் எப்போ அமைதியா இருந்தேன்.. கவுண்டர் கொடுத்துட்டுதானே இருக்கேன்..’ என மறுபடியும் மனதிற்குள் அவனுக்கு பதில் கொடுத்தாள் அவள்.

“ஏய் உன்னைத்தான்டி.. பேசு..”

“பெரியவங்க நீங்க பேசும்போது நான் குறுக்கா பேசுறது நல்லா இருக்காது இல்லையா..? அதனாலதான் அமைதியா இருந்தேன்..” எனச் சிரிக்காமல் கூறியவள் அவனைத் தாண்டி படிகளில் ஏறிச் சென்றுவிட இவள் நிஜமாகத்தான் கூறினாளா இல்லை தன்னைக் கலாய்த்து விட்டு சென்று விட்டாளா எனக் குழம்பிப் போனான் விநாயக்.

அதன் பின்னர் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

நேரே படம் எடுக்கப் போகும் இடத்திற்குச் சென்றிருந்தனர்.

மிகப்பெரிய ஆற்றிற்கு அருகே அமைக்கப்பட்டு இருந்தது படப்பிடிப்புக்கான செயற்கை வீடு.

எல்லா நடிகர்களுக்கும் அவர்களுடைய பாத்திர அமைப்பைப் பற்றியும் கதை பற்றியும் கூறி இருக்க, இது எதுவும் தெரியாது அங்கே இருந்த அனைவரையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்றிருந்தாள் செந்தூரி.

சக்கரவர்த்தியின் பிஏ அவளை அழைத்துச் சென்று அவளுடைய கதாபாத்திரத்தின் குண இயல்புகளையும் அவள் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் படத்தின் கதையையும் மேலோட்டமாக கூறத் தொடங்கினான்.

விருப்பமே இல்லாத துறைதான். வேறு வழி இன்றி இதற்குள் நுழைந்து விட்டாள் அல்லவா.

தன்னுடைய வேலையை சிறப்பாக முடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு தனக்கு கூறப்பட்டவற்றை மிகக் கவனமாக செவிமடுக்கத் தொடங்கினாள் அவள்.

சற்று நேரத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகி விட கேமராவின் முன்பு வெகு இயல்பாக தன்னுடைய நடிப்புத் திறமையை காட்டி கொண்டிருந்தான் விநாயக் மகாதேவ்.

அவனுடைய சில காட்சிகள் முடிந்ததன் பின்னர்தான் நாயகியின் காட்சிகள் எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்கள்.

ஆதலால் அவளுக்கு கொடுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதை தவிர அவளுக்கு வேறு எந்த வேலையும் அங்கே இருக்கவில்லை.

சற்று நேரத்தில் அவளின் அருகே கௌதமன் வந்துவிட அவளுடைய முகமோ பூவாய் மலர்ந்தது.

“ஹாய் கௌதம் உன்னோட ஷூட் எப்போ..?”

“இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்டார்ட் ஆயிரும்னு சார் சொன்னாரு..” என்றவனின் முகம் வாடியிருந்தது.

“என்னாச்சு கௌதம்..? ஏன் உன்னோட முகம் இவ்வளவு டல்லா இருக்கு..?” எனக் கேட்டாள் செந்தூரி.

“உன் பக்கத்துல வர்றதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. யாருமே என்ன அலோவ் பண்ணல.. இப்போ நீயும் பெரிய ஆளாயிட்ட.. என்கூட பேசுவியோ என்னவோ..?” என தயக்கமாக அவன் இழுக்க, அவனுடைய தலையில் நங்கெனக் கொட்டினாள் அவள்.

“அட பைத்தியமே.. நான் எப்போ பெரிய ஆளானேன்..? நல்லா பாரு உன்னை விட குள்ளமாதான் இருக்கேன்..” எனக் கூறி கிளுக்கிச் சிரித்தவளைக் கண்டு அவனுடைய முகமோ சட்டென மலர்ந்தது.

“அடிப்பாவி… ஹா.. ஹா..” வாய்விட்டுச் சிரித்தான் அவன்.

“என் பக்கத்துல வர்றதுக்கு உன்னை யார் தடுத்தா..? யார் என்ன சொன்னாலும் நீ என்னோட பெஸ்ட் பிரண்டுன்னு சொல்லு.. எனக்கு இங்க இருக்க எல்லாரையும் விட உன்ன தான் ரொம்ப பிடிக்கும்… இப்படி எல்லாம் நினைச்சு நீயும் என் கூட பேசாம விட்றாத ப்ளீஸ்..” என நெகிழ்ந்த குரலில் கூறினாள் அவள்.

“இது போதும்.. இனி நீயே போடான்னு சொன்னாலும் போகமாட்டேன்..” என்றவன்

“அன்னைக்குப் பார்த்ததைவிட இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க..” என்றான்.

கௌதமின் வார்த்தைகளில் அவளுடைய இதழ்களில் புன்னகை பூவாய் மலர்ந்தது.

“நீயும்தான் ஆளே மாறிட்ட.. உன்னோட ஹேர் ஸ்டைல்ல இருந்து ட்ரெஸ்ஸிங் சென்ஸ் வரைக்கும் எல்லாமே மாறிடுச்சு..” என ஆச்சரியமாகப் பார்த்தவாறு கூறினாள் செந்தூரி

“இப்படி எல்லாம் பண்ணினாதான் படத்துல நடிக்க வாய்ப்பே கிடைக்குது. மூணு பாக்கெட் ஜெல்ல தலையில பூசிட்டு வந்திருக்கேன் தெரியுமா..?” என எழுந்து நின்று அவனுடைய சிகையைக் காட்டியவாறு கூற அடக்க மாட்டாமல் நகைத்து விட்டாள் செந்தூரி.

“என்னடா நம்ம பிரண்டோட தல சுருள் சுருளா இருக்குமே.. இப்போ இப்படி கம்பி மாதிரி நிமிர்ந்து நிக்குதேன்னு அப்போவே சந்தேகப்பட்டேன்.. ஆனா இதுக்காக மூணு பாக்கெட் ஜெல்ல செலவழிச்சுருப்பேன்னு சத்தியமா நினைக்கல..” என்றவள் மீண்டும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க,

“அடியேய் சிரிச்சு எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்கிடாத.. நேச்சுரல் ஹேர் ஸ்டைல்னு சொல்லி வச்சிருக்கேன்..” என அவளுடைய காதில் கிசுகிசுப்பாகக் கூறினான் அவன்.

அவ்வளவுதான் அவளுக்கோ சிரிப்பு வெடித்து விடும் போலானது.

வெகு சிரமப்பட்டு இரு கைகளாலும் தன்னுடைய வாயை மூடிக் கொண்டவள் சத்தமின்றி குலுங்கிச் சிரித்தாள்.

எத்தனை நாட்களுக்குப் பிறகு இப்படி மனம் விட்டுச் சிரிக்கிறாள்.

நிச்சயமாக இவனிடம் ஏதோ ஒரு மாயம் இருக்கிறது என எண்ணியது அவளுடைய மனம்.

“ஏய் சாரைப் பாரேன்.. எவ்ளோ சூப்பரா நடிக்கிறாரு.. ஒரே டேக்லயே எல்லாத்தையும் ஓகே பண்ணிடுவாரு செம.. என்னோட ரோல் மாடலே அவர்தான்..” என கௌதம் விநாயக்கைப் பார்த்துக் கூறியதும்

“சாவடிச்சிடுவேன் உன்ன..” என்றிருந்தாள் செந்தூரி.

“அடிப்பாவி இப்போ நான் என்ன சொல்லிட்டேனு நீ என்ன திட்டுற..?”

“ஏன்டா உனக்கு வேற நல்ல ரோல் மாடலே கிடைக்கலையா..?”

“ஏன்டி அவர மாதிரி ஹார்ட் வொர்க் பண்ற ஆக்டர் இங்க யாரு இருக்கா..? இப்போ நம்ம சினிமா இண்டஸ்ட்ரில விநாயக் சார் தானே கொடிகட்டிப் பறக்கிறாரு..”

“ஆமா ஆமா நல்லா பறக்குறாரு..” இதழ்களை வளைத்தவாறு கூறினாள் அவள்.

“சரி அத விடு.. சாக்லேட் இருக்கு சாப்பிடுறியா..?”

“என்ன சாக்லேட் டா..?” என ஆவலாகக் கேட்டாள் அவள்.

“டைரி மில்க் வாங்கிட்டு வந்தேன்..” தன்னுடைய பாக்கெட்டில் இருந்து சாக்லேட்டைப் பிரித்து பாதியை தன்னுடைய வாய்க்குள் போட்டுக் கொண்டவன் மீதியை அவளிடம் கொடுக்க மறுக்காமல் அதனை வாங்கி சுவைக்கத் தொடங்கினாள் செந்தூரி.

“எனக்கு டைரிமில்க்கை விட கேலக்ஸி சாக்லேட்னா ரொம்ப பிடிக்கும்..”

“அப்போ நாளைக்கு வாங்கிட்டு வரேன்..” எனக் கூறியவனின் பார்வை சாக்லேட்டை சுவைத்த செந்தூரியின் மீது ரசனையாய் படர்ந்தது.

அவளுடைய கீழ் உதட்டில் சாக்லேட் அப்பி இருக்க,

“குழந்தை மாதிரி சாப்பிடாதடி..” என்றவன் அவளுடைய கீழ் உதட்டை தன்னுடைய விரலால் அழுத்தித் துடைத்து விட்டான்.

“ஹி.. ஹி.. இதெல்லாம் பெர்ஃபெக்ட்டா சாப்பிடக்கூடாதுடா இப்படி ரசிச்சு ருசிச்சுதான் சாப்பிடணும்.. அதெல்லாம் உனக்கு எங்க தெரியப்போகுது..” என்றவள் மீண்டும் தன் கரத்தில் கரைந்து கொண்டிருந்த சாக்லேட்டை நாவால் சுவைக்கத் தொடங்க,

“கட் கட்…” என்றார் சக்கரவர்த்தி.

எப்போதும் கூறிய காட்சியை அப்படியே நடித்து விடும் விநாயக் இன்று சில நொடிகள் கவனம் தவறி நின்று விட்டதை எண்ணி வியந்து போனார் அவர்.

என்னவாயிற்று இவனுக்கு எப்போதும் இவனுடைய கவனம் இப்படித் தவறாதே என எண்ணியவாறு கட் சொன்னவர் “என்னாச்சு விநாயக் சார்..? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கலாமா..?” எனக் கேட்க தன்னுடைய பார்வையை சக்கரவர்த்தியின் மீது திருப்பியவன் ‘நோ இந்த ஷாட்டை முடிச்சுடலாம்..” என்றான்.

அவனுடைய பார்வை அங்கே அமர்ந்திருந்து சிரித்துப் பேசியவாறு சாக்லேட்டை சுவைத்துக் கொண்டிருந்த செந்தூரியின் மீதும் கௌதமின் மீதும் அடிக்கடி படிந்து மீண்டது.

“கேமரா ரோலிங் ஆக்க்ஷன்..” என்றதும் மீண்டும் அவன் தவறவிட்ட காட்சியை தத்ரூபமாக சில நிமிடங்களில் நடித்து முடித்து விட சுற்றி இருந்தவர்களோ கைதட்டத் தொடங்கியிருந்தனர்.

விநாயக்கின் அசிஸ்டன்ட்டோ மின்விசிறியோடு ஓடி வந்து அவன் அருகே நிற்க, கைக்குட்டையால் தன்னுடைய வியர்வையை ஒத்தி எடுத்தவாறு கேரவனுக்குள் நுழைய முயன்றவனின் பார்வை மீண்டும் செந்தூரியின் மீது படிந்தது.

கலகலத்துச் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

கேரவனுக்குள் நுழையாமல் அப்படியே நின்றவன் அந்த இடத்திலேயே தனக்கு இருக்கையை போடும்படி கூறிவிட்டு அங்கேயே அமர்ந்து விட்டான்.

படக்காட்சிகளைப் பற்றி தன்னுடைய உதவியாளரிடம் கூறிய சக்கரவர்த்தியோ செந்தூரியை அழைத்திருந்தார்.

“சொல்லுங்க சார்..”

“வாம்மா எப்படி இருக்க..?”

“நல்லா இல்ல சார்..” என்றிருந்தாள் வெளிப்படையாக.

“எனக்குப் புரியுதும்மா சாரி.. சில விஷயங்கள் நம்ம கை மீறிதான் நடக்குது.. ஆனா இந்தப் படம் மறுபடியும் எனக்கு கிடைச்சதுக்கு காரணமே நீதான்.. உன்னாலதான் முடியாதுன்னு சொன்ன படத்த விநாயக் சார் நடிச்சுத் தரேன்னு சொல்லி இருக்காரு… இந்த படத்துல நீயும் நல்லா நடிச்சுக் கொடுத்தீன்னா அடுத்தடுத்த படங்கள்ல நானே உனக்கு வாய்ப்பு தரேன்..” என்றார் சக்கரவர்த்தி

அவளுக்கோ அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கெல்லாம் கிஞ்சித்தும் ஆசையில்லை.

அவளுக்கு தேவை நிமிர்வாக வாழ்வதற்கு சற்றே பணம்.

பணம் இல்லாமல்தானே அவளுக்கு இந்த அவலம்.

இதே பணம் அவளிடம் இருந்து இருந்தால் அவளை இப்படியெல்லாம் ஆட்டி வைத்திருக்க முடியாது அல்லவா..?

அதற்காக மட்டும்தான் அவள் இந்தத் துறையில் கால் வைத்திருந்தாள்.

அவரிடம் வேறு எதையும் கூறாது “ஓகே சார்..” என்றதோடு பேச்சை முடித்துக் கொண்டாள் அவள்.

“இந்தப் படத்துல இருக்க எல்லாருக்குமே கதை நல்லா தெரியும்.. திடீர்னுதான் உன்ன ஹீரோயினா எடுக்க வேண்டி வந்ததால உன்கிட்ட என்னால பேச முடியல.. இன்னைக்கு என்னோட அசிஸ்டன்ட் படத்தோட கதையைப் பத்தி உன்கிட்ட சொல்லிட்டான்னு நினைக்கிறேன்..”

“ஆமா சார் சொன்னாரு..”

“குட் உனக்கு ஏதாவது குழப்பம் இருந்தா என்கிட்ட கேட்டுக்கோ..

இப்போ எல்லாருக்கும் 30 நிமிஷம் பிரேக் குடுத்துருக்கேன்.. இன்னைக்கு உன்னோட சீன்ஸ் ஷூட் பண்ண மாட்டோம்.. நாளைக்கு நீ எப்படி ட்ரெஸ் பண்ணனும் உன்னோட மேக்கப் எப்படி இருக்கணும்னு எல்லாம் லைலா உன்கிட்ட சொல்லுவா.. அவளோட ஃபோன் நம்பரை கண்டக்ட்லயே வச்சுக்கோமா..”

“சரி சார்.”

“முடிஞ்ச வரைக்கும் நாளைக்கு நல்லா நடிக்க ட்ரை பண்ணுமா.. நிறைய டேக் போகாத.. உனக்கு ப்ராக்டிஸ் பண்ணனும்னா இன்னைக்கு கொஞ்ச நேரம் செட்லையே இருந்து பிராக்டிஸ் பண்ணிட்டுப் போ.. என்னென்ன சீன்ஸ் டயலாக்னு எல்லாம் நான் இன்னைக்கு உனக்கு சொல்றேன்..’

“ம்ம்….”

“திரும்பத் திரும்ப டேக் போகும்போது உன் கூட சேர்ந்து விநாயக் சாரும் மறுபடி மறுபடி நடிக்க வேண்டி வரும்.. அது அவரோட கோபத்த தூண்டி விட்டிச்சுன்னா ஷூட்டிங் நாசமா போய்டும்.. கொஞ்சம் கேர்ஃபுல்லா பண்ணு.. அவருக்கு பொறுமையே கிடையாது..” என மெல்லிய குரலில் எச்சரித்தார் சக்கரவர்த்தி.

ஆக மொத்தத்தில் அவன் தன்னை மட்டுமல்ல இங்கே இருக்கும் அனைவரையும் மிரட்டி வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவள் நாளை என்னவெல்லாம் நடக்கப் போகின்றதோ என்ற பீதியில் தலையை அசைத்தாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 64

No votes so far! Be the first to rate this post.

1 thought on “29. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!