காலையில் எழுந்ததும் கல்லூரி செல்பவள் அது முடிந்து வீட்டிற்கு வந்ததும் குருவுக்காக காத்திருக்கத் தொடங்கி விடுவாள்.
அவன் இல்லாமல் ஒரு பொழுதைக் கழிப்பதே அவளுக்கு பெரும் யுகத்தை நெட்டித் தள்ளுவது போல இருக்கும்.
ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை என்றால் வெறும் கசப்பு என எண்ணி இருந்தவளின் மனநிலை இப்போது முற்று முழுதாக மாறிப் போயிருந்தது.
அவளுக்குப் பிடித்த ஆடை தொடக்கம் அவளுக்குப் பிடித்த அனைத்தையும் நொடியில் அவளிடம் சேர்ப்பித்து விடுவான் குருஷேத்திரன்.
நினைத்த நேரம் அன்னையுடன் பேசலாம்.. அன்னையின் வீட்டிற்குச் செல்லலாம்.. நண்பர்களோடு அரட்டை அடிக்கலாம் என மீண்டும் அவளுடைய சுதந்திரம் அவளையே வந்தடைந்திருந்தது.
ஆம் சர்வ சுதந்திரத்தை அவளுக்குக் கொடுத்திருந்தான் குருஷேத்திரன்.
அதனாலோ என்னவோ அவனை அவளுக்கு இன்னும் இன்னும் அதிகமாகப் பிடித்துக் கொண்டது.
அவன் அணியும் ஆடை தொடக்கம் அவனுடைய முடியின் அசைவு வரை இப்போதெல்லாம் நுணுக்கமாக கண்காணிக்கத் தொடங்கி இருந்தாள் பெண்ணவள்.
அவன் அருகில் வந்தாலே அவளுக்கு அழையாத விருந்தாளியாக வெட்கமும் வந்து ஒட்டிக் கொள்ளும்.
முன்பெல்லாம் அவன் தொட்டால் அஞ்சி நடுங்குபவள் இப்போதெல்லாம் தானாகவே அவனோடு சென்று ஒட்டிக் கொள்வாள்.
இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் மகிழ்ச்சிக் களிப்பில் காதலின் ஆரம்பத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள் நம் நாயகி அபர்ணா.
ஆம் குருஷேத்திரனின் மீது காதல் வரவில்லை என்றால்தான் ஆச்சரியம்.
அவளுக்கும் அவன் மீது காதல் வந்து விட்டிருந்தது.
அவன் அவள் மீது காட்டும் அக்கறையும் அன்பும் அவனுடைய இறுகிய அணைப்பும் அவளுக்காக அவன் பார்த்துப் பார்த்து செய்யும் சிறு சிறு விடயங்களும் அவளுடைய மனதை கொள்ளை கொள்ள மிக இலகுவாகவே காதல் எனும் காவியக் கப்பலில் கால் வைத்திருந்தாள் அவள்.
திருமணம் முடித்து நான்கு மாதங்கள் இனிதாக முடிந்திருந்தன.
அன்று காலையில் வெகு தாமதமாகவே விழித்துக் கொண்டவள் தன் எதிரே சோபாவில் அமர்ந்து சில ஓவியங்களை ஆராய்ந்து கொண்டிருந்த குருஷேத்திரனை பார்த்தாள்.
சாதாரணமாகவே மிக அழகாகத் தெரிபவன் இப்போதெல்லாம் அவளுடைய கண்களுக்கு பேரழகனாக தெரிகின்றான்.
“குரு..”
“எஸ்.. சொல்லுடி..”
“குட் மார்னிங்..”
“குட் மார்னிங் அபி..”
“ம்ம் பா…”
“ஹேய் காலேஜ்கு இன்னைக்கு லீவ் சொல்லிட்டேன்… சோ தூங்குறதுன்னா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு…” என்றவனை புரியாமல் பார்த்தவள்,
“ஏன் லீவு சொன்னீங்க..?” எனக் கேட்டாள்.
“உனக்கு இந்த மாசம் இன்னும் பீரியட்ஸ் வரலைல்ல… சோ டாக்டரை பார்த்து செக் பண்ணிட்டு வந்துடலாம்…” எனப் புன்னகையோடு கூறியவனைப் பார்த்து விழி விரித்தவள்
“இ..இல்ல குரு.. பேபியா இருக்க சான்ஸே இல்ல… எனக்கு வயிறு வேற வலிக்கிற மாதிரி இருக்கு… சம் டைம் நாளைக்கு பீரியட்ஸ் வந்தாலும் வந்துரும்…” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“ஸ்டாப் இட் அபர்ணா… பீரியட்ஸ் வரக்கூடாது…” என அழுத்திக் கூற அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“எ.. என்ன.. ஆனா ஏன்..?” திணறிப் போனவளாய் அவனைப் பார்த்து அவள் கேட்க,
அவனோ தன்னுடைய தலைக் கேசத்தைக் கோதி விட்டவன் எழுந்து அவள் அருகே வந்து அவளுடைய கரத்தைப் பற்றிக் கொண்டான்.
“ஊஃப்… இவ்வளவுதானா நான் பயந்தே போயிட்டேன்… நான்தான் ஆல்ரெடி உங்ககிட்ட அதுக்கு ஓகே சொல்லிட்டேனே… காலேஜ் முடிக்கும் வரைக்கும் பேபி வேணாம்னு நினைச்சிருந்தேன்… ஆனா நீங்க கேட்டதும் எனக்கும் நம்ம குழந்தை பத்தி ஆசை வந்துருச்சு.. குழந்தை கிடைச்சுதுன்னா நானும் ரொம்ப சந்தோஷமாவே அதை ஏத்துக்குவேன்…” என்றாள் அவள்.
“பட் ஏன் இன்னும் நீ கன்சீவ் ஆகலை..?” எனக் கேட்டான் அவன்.
அவளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.
இதற்கு அவளால் என்ன பதில்தான் கூறிவிட முடியும்..?
“எ… எனக்கு எப்படிங்க தெரியும்..?” என்றவள் கலங்கிப் போனாள்.
“இட்ஸ் ஓகே… இந்த முறை கண்டிப்பா நீ கன்சீவ் ஆகிடுவ…” என்றவன் அவளுடைய உதடுகளில் அழுத்தமாய் முத்தமிட்டு விட்டு விலகிச் சென்று தன் வேலையில் மூழ்கிப் போக அவளுக்கோ ஏனோ உள்ளம் பதறத் தொடங்கியது.
ஒருவேளை இந்த முறையும் தான் கர்ப்பமாகவில்லை என்றால் என்ன ஆகும்..?
போன மாதமும் இப்படித்தானே நடந்தது.
மாதவிடாய் நான்கு நாட்கள் தள்ளிப் போக பிரக்னன்சி டெஸ்ட் கிட் வரை வாங்கி வந்து அவன் தன்னை பரிசோதிக்கச் சொன்னதும் அதன் முடிவு நெகட்டிவ் என வந்ததும் பின் அவன் கோபமாக நடந்து கொண்ட விதமும் அவளால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா என்ன..?
பின்னர் அடுத்த நாளே மாதவிடாய் வந்ததும் அவன் பேசாமல் அன்று முழுவதும் அவளை விட்டு விலகி இருந்ததும் மீண்டும் நினைவில் வர அவளுக்கோ வயிற்றுக்குள் பயப்பந்து உருளத் தொடங்கியது.
எங்கே இந்த முறையும் மாதவிடாய் வந்தால் கோபத்தில் தன்னை விட்டு பேசாமல் விலகி இருந்து விடுவானோ எனப் பதறியவள் மெல்ல எழுந்து அவன் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
சோபாவில் தன்னருகே அமர்ந்த அபர்ணாவைப் பார்த்தவன் தன் கரங்களில் இருந்த ஓவியங்களை எடுத்து மேசை மீது வைத்து விட்டு அவளுடைய தோளில் தன் கரத்தைப் பதித்துக் கொண்டான்.
“என்னடி..?”
அவளோ அப்படியே அவனுடைய மார்பில் சாய்ந்தவள்,
“இன்னைக்கே டாக்டர பார்க்கப் போயாகணுமா..?” எனக் கேட்டாள்.
“எஸ் செக் பண்ணணும்ல அபி..” என்றான் அவன்.
“கொஞ்ச நாள் ஆகட்டும் குரு.. பீரியட்ஸ் டேட் ரெண்டு நாள் தானே தள்ளிப் போய் இருக்கு.. எனக்கு எப்பவுமே இப்படி லேட் ஆகிதான் வரும்.. ஒரு பத்து நாள் பார்த்துட்டு அதுக்கப்புறம் வரலைன்னா செக் பண்ணிக்கலாம்..” என்றவளின் கரத்தை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டவன்,
“நோ திஸ் டைம் நீ கண்டிப்பா கண்சிவ் ஆகிடுவ.. ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்து பண்ணி இருக்கேன்… இந்த முறை என்னோட டார்கெட் மிஸ் ஆகவே ஆகாது…” என்றவனை புரியாத பார்த்தாள் அவள்.
“எனக்குப் புரியலைங்க..”
அவள் குரல் சற்றே நடுங்கியது.
“இந்த மாசம் முழுக்க உன் கூட நான் ஒன்னா இருந்த ஒவ்வொரு நாளும் நீ பிரக்னன்ட் ஆகுறதுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்த டேஸ்தான்.. அதைவிட டெய்லி உனக்கு பாலிகசிட் டேப்லெட் கொடுத்துட்டேதான் இருக்கேன்… அப்புறம் உன்னோட சாப்பாடு முழுக்க என்னோட கண்ட்ரோலுக்கு வந்து மூணு மாசம் ஆகுது… இனியும் மிஸ் ஆகுறதுக்கு சான்ஸே இல்ல..” என்றவனை விக்கித்துப் போய் பார்த்தாள் அவள்.
சில தினங்களில் தன்னுடன் உறவில் இருந்தே ஆக வேண்டும் என அவன் மீண்டும் மீண்டும் நாடியதெல்லாம் குழந்தைக்காகத் தானா..?
தன் மீது கொண்ட அளவற்ற காதலின் வெளிப்பாடு என்றல்லவா நினைத்து இருந்தாள்.
உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைவதைப் போல இருந்தது.
திருமணம் முடித்ததிலிருந்து இப்போது வரை அவன் கொடுக்கும் மாத்திரையும் குழந்தைக்காகத்தானா..?
இப்போது குழந்தைக்கு அப்படி என்ன அவசரம்…?
நான் என்ன அவனுக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க மாட்டேன் என்றா சொன்னேன்..?
ஏன் என் மனதை புரிந்து கொள்ளாமல் இப்படி நடந்துக்கிறாரு.. என எண்ணிக் கலங்கியவளுக்கு விழிகளும் கலங்கிப் போயின.
‘கடவுளே இந்த முறை எனக்கு பீரியட்ஸ் வந்துடவே கூடாது… அவர் குழந்தைக்காக ரொம்ப எதிர்பார்த்துகிட்டு இருக்காருன்னு தோணுது… ப்ளீஸ் அவர ஏமாத்திடாத… என்னால் அவரோட ஏமாற்றத்தை சத்தியமா தாங்கிக்க முடியாது…” என மனதார இறைவனை பிரார்த்தித்துக் கொண்டவள் சிறு கலக்கத்துடனே இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்.
“எங்க போற அபி..?”
“வாஷ் ரூம்..”
“ம்ம் போ…”
அவளோ குளியலறைக்குள் நுழைந்து கொண்டவள் பொலபொலவென கண்ணீர் சிந்தத் தொடங்கினாள்.
அவன் முன்பு அழுது விடக்கூடாது என அடக்கி வைத்திருந்த அத்தனை அழுகையும் குளிர்ந்த நீருக்கு அடியில் நிற்கும் போது அவளுக்கு அப்படியே வெளிப்பட்டது.
இத்தனை நாட்களாக குருவை முழுதாக புரிந்து கொண்டோம் என நினைத்தது தவறோ..?
ஒவ்வொரு இரவும் அவன் தன்னைத் தீண்டும் போதெல்லாம் காதலில் கரைந்து உருகி அவனுடன் ஒட்டிக் கொண்டதை நினைத்து நெஞ்சம் பிளவு பட்டது போல வலிக்கத் தொடங்கியது.
தன்னுடன் பிடித்துத்தான் இருந்தானா இல்லை குழந்தைக்காக மட்டும் அந்த நாட்களில் ஒன்றாக இருந்தானா..?
புதிதாக எழுந்த கேள்வி அவளுடைய தலையை சூடாக்க அப்படியே பாத்ரூம் சுவற்றில் தன் தலையை அழுத்திக் கொண்டவள் எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு என தனக்குத்தானே புலம்பிக் கொண்டாள்.
மூன்று மாதமாக என்னுடைய உணவையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்து விட்டதாகக் கூறினானே.. எப்போது.. எப்படி.. எதுவும் புரியவில்லை அவளுக்கு.
தன்னைச்சுற்றி என்னதான் நடந்து கொண்டிருக்கிறது..?
வீட்டில் இருந்தால் இப்படியே இதைப் பற்றி சிந்தித்து சிந்தித்து இன்னும் வேதனைக்குள் சென்று விடுவோம் என எண்ணியவள் வெளியே எங்காவது சென்று வரலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
அன்னையைச் சென்று பார்த்து விட்டு வந்தால் என்ன எனத் தோன்றத் தொடங்கியது அவளுக்கு.
அன்னையைப் பற்றி நினைத்ததும் அழையாத விருந்தாளியாக தன்னுடைய சகோதரியின் நினைவும் அவளைத் தேடி வந்து அணைத்துக் கொண்டது.
கிட்டத்தட்ட திருமணம் முடித்து ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் அவளின் நிலையை எண்ணி கதி கலங்கிப் போனாள் அவள்.
வெறும் நான்கு மாத திருமண வாழ்க்கையில் குழந்தை இல்லை என்றதுமே குருவின் மாற்றம் அவளைப் பேதலிக்கச் செய்யும்போது ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் சாதனாவின் நிலைமை எப்படி இருக்கும் என அக்கணம் தெளிவாக உணர்ந்து கொண்டவளுக்கு மேலும் அழுகை கூடியது.
‘சாதனாக்கா ரொம்ப பாவம்… எவ்வளவோ வலிய அனுபவிச்சிட்டா… அந்த பாவியை விட்டுட்டு அம்மா அப்பா கூடவே அவ இருந்து இருக்கலாம்ல… குழந்தை இல்லை குழந்தை இல்லைன்னு அவள போட்டு அவன் அவ்வளவு டார்ச்சர் பண்றானே… அவன விட்டு வந்திருந்தான்னா ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பா…’ என நினைத்துக் கொண்டவளுக்கு சட்டென உடல் தூக்கி வாரிப் போட்டது.
குழந்தை இல்லை என்றால் குருவும் இப்படி மாறிப் போய் விடுவானா..?
ஒருவேளை குரு தன்னுடைய அத்தானைப் போல மாறி தன்னையும் துன்பப்படுத்தினால் அவளால்தான் அவனை விட்டுவிட்டு தன்னுடைய அன்னையின் வீட்டில் சென்று இருந்து விட முடியுமா..?
உடலில் ஆயிரக்கணக்கான ஊசிகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டது போல வலித்தது அவளுக்கு.
அக்கணம் மனதிற்குள் புதுவித அச்சம் வேகமாக பரவத் தொடங்க,
“நோ நோ நோ நோ நோ நோ நோ., அப்படியெல்லாம் எதுவுமே ஆகாது… எல்லாமே நல்லபடியாதான் நடக்கும்… நான்தான் ரொம்ப ஓவரா திங்க் பண்றேன்…” என தனக்குத்தானே கூறி தன்னை சமாதானப்படுத்திக் கொண்டவள் பாத்ரூம் கதவு படபடவென தட்டப்படும் சத்தத்தில் அதிர்ந்து துவாலை ஒன்றை எடுத்து தன் உடலில் சுற்றிக்கொண்டு குளியலறைக் கதவை வேகமாகத் திறந்தாள்.