நெஞ்சம் – 29
தன்னை விழி விரித்து பார்க்கும் தன்னவளின் உணர்வுகள் அர்விந்திற்கு நன்றாக புரிந்தது. அவளை என்று அவனுக்கு புரியாமல் இருந்திருக்கிறது? எப்போதும் புரியும்! ஆனாலும் வேண்டுமென்றே அமைதியாக இருப்பான். ஆனால் இன்று அது போல் இல்லாமல், அவள் படுத்து இருந்த கட்டிலில் அவள் அருகில் ஏறி அமர்ந்தான், அவன் அவளை நோக்கி செல்லும் போதே, கண்ணகி கணவனுக்கு ஜாடை காட்டி வெளியில் அழைத்து சென்று விட்டார்.
மலரின் அருகில் அமர்ந்தவன், அவள் கைகளை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டு,
“நம்ம குழந்தை நல்லபடியா பிறக்கணும்னு தான் எனக்கும் ஆசை. ஆனா அதே சமயம் எனக்கு இன்னும் பிறக்காத குழந்தையை விட என் கூடவே எனக்காக இருக்க என் பொண்டாட்டியோட ஹெல்த் தான் ரொம்ப முக்கியம். டாக்டர்ஸ் என்ன சொல்றாங்களோ அதை கேட்போம். உன்கூடவே நான் இருப்பேன்…. சரியா?” என்றவன், அவன் போனை எடுத்து அவளிடம் கொடுத்து ஆன் செய்ய சொன்னான். அவள் ஆன் பண்ண, அழகாக ஒளிர்ந்தது அர்விந்த், மலர் மற்றும் அவந்திகா இருக்கும் புகைப்படம். முன்பு ஒரு நாள் மாலில் ஒரு பெண் எடுத்துக் கொடுத்ததே அந்த புகைப்படம்.
“அன்னைக்கு என் நெஞ்சில் நீ சாய்ஞ்ச அப்போவே, எனக்கு நீ பொண்டாட்டியாவும் அவந்திகா போல நமக்கு ஒரு குழந்தையும் வேணும்னு ஆசை வந்துருச்சு எனக்கு! அப்படி இருக்கும் போது நீ சந்தேகப்படுற மாதிரி நான் எப்படி விழி செய்வேன்?” என்றான் குரல் கரக்கரக்க.
அவளால் நம்பவே முடியவில்லை அவன் சொல்வதை. அவன் எதையுமே தான் காட்டிக்கொள்ளவில்லையே….
“ஆசை இருந்தும் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கலையே…. உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகாம இருந்திருந்தா எனக்கு உங்களைக் கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பே இல்லை…. அப்படித் தானே?”
“இப்படி பேசுறதில நீ என்னை மட்டும் குறை பேசலை உன்னையும் சேர்த்து அசிங்கப்படுத்துற…. ப்ளீஸ், இன்னொரு முறை இப்படி பேசாதே….”
“ஆனா நீங்க….” அவள் மேலும் ஆரம்பிக்க,
“நீயும் நானும் தான் இந்த ஜென்மத்தில சேர்ந்து வாழ போறோம், வேணா டெய்லி காலையில தூங்கி எழுந்தவுடனே சத்தியம் பண்றேன்டி, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், உன்னை விரும்பி தான் கல்யாணம் பண்ணிகிட்டேன்னு” அவன் கேலி பேச,
அவள், அவன் தேற மாட்டான் என்பது போல் பார்க்க, அவள் நெற்றியில் இரண்டு முட்டு முட்டி, இதழ் பதித்து,
“இப்போ கொஞ்சம் நேரம் தூங்கு…. கண்டிப்பா நாம பேசலாம்…. உனக்கு எல்லாம் சொல்றேன்” என்றான் மென்மையாக அர்விந்த்.
அவள் எதிர்பார்ப்பது புரிந்தது அவனுக்கு ஆனால் எல்லாம் பேசும் நேரம் இதுவல்லவே அதனால் இப்போதைக்கு அவளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று நினைத்தான்.
அடுத்த ஒரு நாள் அங்கே ரெஸ்ட் எடுத்துக் கொண்டு அவனும் மலரும் மட்டும் பெங்களூர் கிளம்பினார்கள். கனிமொழி தனியாக இருப்பாள் என்பதாலும், இப்போவே கண்ணகி வரத்தேவையில்லை, தேவைப் படும்போது வாருங்கள் என்று அர்விந்த் கூறியதாலும் அவர்கள் இருவரும் திருக்கோவிலூர் சென்று விட்டனர்.
பெங்களூர் வந்து அவர்கள் பார்க்கும் மருத்துவரை மீண்டும் பார்க்க, அவரும் இப்போதைக்கு பேபி ஓகே. நாம மானிட்டர் தான் பண்ணனும்…. வேற ஆப்ஷன் இல்லை. உங்களுக்கு ரொம்ப கஷ்டமான சூழ்நிலை தான் என்று கூறிவிட்டார்.
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஒருவித பயத்தோடு தான் கழிந்தது அனைவருக்கும். உடம்பெல்லாம் தடித்து சிவந்து இருக்கும் மலரை பார்க்கவே அனைவருக்கும் கஷ்டமாக இருக்கும். அவளுக்கு உடம்பில் கிரீம் தடவுவது, அவளுக்கு மருந்து கொடுப்பது என அனைத்தும் சலிக்காமல் செய்வான் அர்விந்த். மெல்லிய காட்டன் துணியில் உடைகள் அணிந்து முடிந்தவரை ஏசி அறையிலேயே இருக்கும் அவளை தாங்கினார்கள் புகுந்த வீட்டில்.
அருணா கூட அவளிடம் மறைமுகமாக கேட்டார், “இவ்ளோ கஷ்டம் ஏன்மா? எவ்ளோவோ பேர் செய்றாங்க” என்றார் மெதுவாக.
“அடுத்த தடவை மாசமானா இந்த மாதிரி செய்யாதுனு எதவாது நிச்சயம் இருக்கா அத்தை? நல்லா வளர்ற குழந்தையை பத்தி நாமளே நெகட்டிவ்வா யோசிக்க வேண்டாம் அத்தை ப்ளீஸ்…. எங்க குழந்தை என்கிட்டே நல்லபடியா வரும் அத்தை, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்று உறுதியாக சொல்லி விட்டாள் மலர். அதை அவர் வீட்டினரிடம் பகிர்ந்து கொண்டார்.
அடுத்த ஐந்து மாதங்கள் அறையே கதி என்று தான் இருந்தாள் மலர். அந்த அளவிற்கு அவளின் தோல் மோசமாக ஆனது, மிகவும் ஜாக்கிரதையாக அவளை பார்த்துக்கொள்ள வேண்டி இருந்தது. கொஞ்சமாக அரிப்பும் ஆரம்பிக்க, மலரால் தூங்கவே முடியாது.இதில் அர்விந்தின் பாடு தான் பெரும்பாடு. அவளை சொரிய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதெல்லாம் மலருக்கு மிகுந்த கோபம் வரும்.முதலில் பொறுமையாக இருந்தான் அர்விந்த், அவள் ஓவராக பேசி சொரிய பார்ப்பாள். அதன் பின் அவனின் பழைய ரூபத்தை காட்ட, கொஞ்சம் அமைதி ஆவாள். அவளை சமாளிப்பதை தான் கடந்த மாதங்களில் கற்றுக் கொண்டு இருக்கிறான் அவன்.
மலருக்கு அர்விந்த் செய்யும் சேவகத்தில், வெறும் ஆசை கொண்டு மணந்தவனால் இது போல் முகம் சுளிக்காமல், சளைக்காமல் ஒரு நாள் இல்லை, ஒரு நிமிடம் கூட செய்ய முடியாது என்று உணர்ந்துக் கொண்டாள் மலர். ஆனாலும் அவளின் மனதின் ஓரம் அவர்களை பொருந்தா ஜோடியாக தான் நினைக்கிறாள் மலர். அவளுக்கு இன்னும் அவனின் அன்பின் ஆழம் தெரியாதே.
குழந்தையின் வளர்ச்சியில் எந்த குறையும் இல்லை என்பதை பல்வேறு ஸ்கேன், டெஸ்ட் என எடுத்து உறுதிப்படுத்திக் கொண்டே வந்தார் மருத்துவர்.
இப்போது ஏழாம் மாதம் தொடக்கத்தில் இருக்கிறார்கள், இப்போது அவளின் தடிப்பு நன்றாக குறைந்து அவளின் தோல் நன்றாக கருத்து இருந்தது. மலர் முற்றிலும் வேறாக இருந்தாள். சதை போட்டு, தேகம் எல்லாம் கருத்து பொலிவிழந்து காணப்பட்டாள் மலர். ஏற்கனவே அவனுக்கு அவள் பொருத்தம் இல்லை என்பவள், இப்போது இன்னும் கவலை ஆனாள்.
அன்று இரவு அவர்கள் அறையில், வளைகாப்பு பற்றி அவன் பேச, யாரையும் அழைக்க வேண்டாம் என்றாள் மலர்.
“என்ன அதிசயம், புருஷன் கூட வேண்டாம் பிள்ளை மட்டும் வேணும்னு சொன்னவ, யாருக்கும் உன் தொப்பையை காட்ட போறதில்லையா?” என்று கேலி செய்தான். பேசிக் கொண்டே அவள் கால்களை அமுக்கி கொண்டு இருந்தான் அர்விந்த்.
“இந்த புருஷனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டியானு எல்லாரும் கேலி பேசவா? ஒன்னும் வேண்டாம் என்றாள் மலர் வேகமாக அவள் கால்களை அவனிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு. அவள் குரலில் இருந்த தொனியில் அவளின் மனதில் இருக்கும் பல கால ஏக்கம் புரிய, அவளின் அருகில் சென்று அமர்ந்தவன்,
“நீ எனக்கு எவ்ளோ அழகா தெரிவேனு உனக்கு தெரியாது…. ஏன்னா நீ அர்விந்த் இல்லை…. எத்தனை நாள் உனக்கு கிரீம் போட்டு விடுற அப்போ என்னை கன்ட்ரோல் பண்ணிக்க நான் சிரமப்பட்டு இருக்கேன் தெரியுமா? உன் மேல ஆசை உன் அழகை பார்த்து மட்டும் வரலை, அப்படினா இப்போ ஆசை வரக்கூடாது தானே…. ஆனா இப்போ கூட எனக்கு உன் மேல் அவ்ளோ ஆசையா இருக்கு” என்றவன், மெதுவாக அவளின் இதழை பற்றினான். அவளுடன் மென்மையாக கட்டிலில் சாய்ந்தவன், இதழோடு இதழ் உரசி, அவள் இதழிலேயே பல வித்தைகள் காட்டி அவளை அவனுக்கு ஈடு கொடுக்க தயார் செய்தான். அவன் கிரீம் போட்டு விட்ட போது வராத வெட்கம் இப்போது வர,
“ஏய், சும்மா இருடி…. இத்தனை மாசம் காயவிட்டதுக்கு கொஞ்சமாச்சும் மனுஷனை சந்தோஷப்பட விடுடி” என்றான் செல்ல கோபத்துடன்.
“பயமா இருக்கு, பாப்பா….” என்று அவள் இழுக்க,
“எல்லாம் டாக்டர் கிட்டே கேட்டுட்டேன் தெய்வமே…. உன் அழகு என்னனு சொல்லி கொண்டாடுற என்னை கொஞ்சம் கொண்டாட விடுடி” என்றவன் அதற்கு மேல் அவளை பேசவிடவில்லை.
அவளுக்கு வேண்டியதை செய்யாமல் தள்ளி போனவனை இழுத்து கொண்டு வந்து சேவை செய்ய சொல்ல, இவ்ளோ ஆசை இருக்கா என் பொண்டாட்டிக்கு என்று மிகவும் சந்தோஷம் அடைந்தான் அர்விந்த். ஆரம்பத்தில் இருந்தே நிறைவாக உணருபவளுக்கு, இன்று அவளின் இந்த கோலத்தையும் கொண்டாடும் கணவன் கிடைத்ததில் முழுமை பெற்றாள்.
தன் நெஞ்சில் சாய்ந்து இருந்தவளிடம்,
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும்….” என்றவன், இந்த ஆக்ஸிடெண்ட் ஆகலைனா உன்னை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்னு சொல்றியே…. உன்னை கல்யாணம் பண்ணிக்காம வேற யாரையோ கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையை தொலைச்சுட்டேங்கிற விரக்தியில தான் இந்த ஆக்ஸிடெண்டே நடந்தது. இந்த தழும்பு உனக்காக நான் ஏங்கின ஏக்கத்தோட சின்னம்டி என்றான்.
“என்ன….? அப்போவேவா….” என்று சத்தமாக கேட்டபடி அவன் நெஞ்சில் சாய்ந்து இருந்தவள் சட்டென்று எழுந்து அவன் முகம் பார்த்தாள்.
“ஆமா, அதுக்கும் முன்னாடியே கூட தான். ஆனா என்னால எதையும் சரியா தீர்மானிக்க முடியலை அப்போ. நிவேதா இங்க வீட்டுக்கு வந்த அப்போ, நீ அவளுக்காக வேலை பார்த்தது எல்லாம் எனக்கு பிடிக்கவே இல்லை. நிவேதாவோட கல்யாணம் ஆனப்போ எனக்கு கொஞ்சமும் சந்தோஷம் இல்லை. அன்னைக்கு ஈவ்னிங் அவ என்னை தொட்ட உடனே எனக்கு தெரிஞ்சு போச்சு, இந்த ஜென்மத்துக்கு நீதான் எனக்கு வேணும்னு…..”
அவன் சொல்லி முடிக்கவில்லை, அவனை பாய்ந்து கட்டிகொண்டு கண்ணீர் விட்டாள் மலர். அவள் அழுததில் கடுப்பானவன்,
“ஏண்டி நீ எதுக்குமே சந்தோஷப்பட மாட்டியா? எல்லாத்துக்கும் ஊஊனு அழற?”
“இப்போ பிள்ளை பெத்து கொடுக்காம பத்து வருஷம் கழிச்சு பெத்துக் கொடுத்தா அழுவீங்களா சிரிப்பீங்களா? நாம ரொம்ப எதிர்பார்க்கிற விஷயம் அப்போ நடக்காம ரொம்ப லேட்டா நடந்தா இப்படி தான் அழுகை வரும்!”
“என்னை பார்த்து பயந்து முழிக்கிற விழி இன்னைக்கு என்னையே மிரட்டது… ம்ம்ம்…”
“அப்போவே எனக்கு புரியாம போச்சு…. இல்லைனா நீங்க என்னை படுத்தினா பாட்டுக்கு எல்லாம் உங்களை ஒரு வழி பண்ணி இருப்பேன்….”
“எனக்கு தான் தெரியுமே என் பொண்டாட்டி மக்குனு…. என்னை மாதிரி ஒரு ஆளு, என் கல்யாணத்தை அவ்ளோ ஈசியா நீ முடிவு பண்ணு, நான் தாலி கட்டுறேன்னு இருப்பேனா? அதை யோசிச்சு இருந்தா கூட என் காதல் புரிஞ்சு இருக்கும் உனக்கு!”
“அப்பறம் ஏன் என்னை இப்படி சுத்த விட்டீங்க….?” அவனிடம் அவள் செல்லம் கொஞ்ச,
“கொஞ்சம் ஈகோ தாண்டி செல்லம், எல்லாம் நீயே வேகமாக செஞ்சே, என்னை கேட்டு, இல்லை நான் சொல்றதுக்குள்ள கன்ட்ரோல் எடுத்தே….அதான் கொஞ்சம் கடுப்பாகி விட்டேன்…. அதோடு உன்னோட இந்த காம்ப்ளெக்ஸ் நமக்குள் கல்யாணம் வரை போகுமானு நான் கொஞ்சம் யோசிக்கிறதுகுள்ளே மேடம் ஆக்ஷன்ல ஏறங்கிட்டீங்க…. நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணி என்ஜாய் பண்ணேன்.”
“இப்போ மட்டும் எப்படி திடீர்னு இறங்கி வந்துட்டீங்க ஐயா?”
“இருக்கிறது இந்த ஒரு பொண்டாட்டி, விட்டுகொடுக்க முடியுமா? அதான்….”
“ஆனாலும் நீங்க ரொம்ப ஓவர்…. நான் மட்டும் சீக்கிரம் வீட்டில சொல்லி கல்யாணம் பண்ணிக்கலைனா, நீங்க யோசிச்சுகிட்டே இருந்திருப்பீங்க….”
“உனக்கும் எனக்குமான பந்தம் நாம உருவாக்கலை, அது தானா உருவானது. என்னை மீறி தான் நான் உன்பக்கம் வந்தேன் பலமுறை. அது மாதிரி நிச்சயம் என் வழியிலேயே உன்னை கல்யாணமும் பண்ணி இருப்பேன்…. போடி…..”
“போடா….”
“என்ன போடாவா? சார்னு கூப்பிடுடி ஒழுங்கா…. உன்னை எல்லாம் வைக்கிற இடத்தில வைக்கணும்…. கொஞ்சம் ப்ரீயா விட்டா இப்படித்தான் ஓவரா பண்ணுவே….”
“அப்படித்தான்டா அர்விந்த் பண்ணுவேன்….”
“பேர் வேற சொல்றியா?”
“அர்விந்த்! அர்விந்த்!”
ஐய்யோயோ, இத்தனை நாள் நம்மளை போட்டு பாடாய் படுத்தி ரணமாக்கி இப்போ தான் மனசு விட்டு பேசி சரியாகி இருக்காங்கனு நிம்மதியாக படுக்க போன மனசாட்சியும் க்யூபிட்டும் மறுபடியும் ஆரம்பிச்சுருவாங்களோ என்று பயந்து போனவர்களாக அலறிக் கொண்டே மெதுவாக எட்டிப் பார்த்தனர். பார்த்தவர்களுக்கு ரொம்ப நிம்மதி. பேச்சு பேச்சாக இருக்க, அவனை பெயரிட்டு அழைக்கும் அவள் கண்களில் இருந்த காதலில் அவன் நெஞ்சில் இருந்த காதல் அவன் கண்களில் நிறைய, இருவரும் இறுக்க அணைத்துக் கொண்டனர். பரவாயில்லை ரொமான்ஸ் தான் நடக்க போகுது…. ஆனாலும் ரொமான்ஸை கூட வெட்டுவேன் குத்துவேன் மாதிரி பில்டப் கொடுக்கிறான் என்று அர்விந்தை திட்டியது க்யுபிட்.
“டேய், என் ஆளை திட்டாதே, அவன் லேட் ஆனாலும் ஸ்கோர் பண்ணிட்டான்” அர்விந்தின் மனசாட்சி ஓனருக்காக பொங்கிக் கொண்டு வர,
“கிழிச்சான்…. இன்னும் கொஞ்சம் நாள் போய் இருந்தா நான் சட்டையை கிழிச்சிட்டு அலைஞ்சு இருப்பேன்….” க்யுபிட் எகிற,
“சரி சரி விடுயா…. இவ்ளோ குழப்பத்துக்கு அப்பறம் சேர்ந்து இருக்காங்க, இனிமே பிரிவே வராது. பாரு பாரு அந்த காதல்ல நிறைஞ்சு இருக்க அந்த ஜோடியோட சந்தோஷத்தை பாரு….” மனசாட்சி க்யுபிட்டை சமாதானம் செய்து திசை திருப்பியது.
காதல் என்றவுடன் டக்கென்று உற்சாகமான க்யுபிட்,
“ஆமா ஆமா, இது நேசம் கூடிய நெஞ்சம், யாராலும் ஒன்னும் பண்ண முடியாது. வாழ்க வளமுடன்!” என்று வாழ்த்தியது.
Cute ending and bonding
thank u dear