உள்மன உதறல்கள் உன்னிடமே சிதறல்களாக உடைபடும் நேரம் எப்போதோ?
———————————————–
இருவரும் திருமணம் முடிந்த பின் அவரவர் வேலைக்குச் செல்லும் முதல் நாள்.
ஷக்தி மகிழவனின் ரொட்டின் படி, பிரக்ருதியும் வேலைகளைத் துரிதப்படுத்தினாள்.
அவன் தனியாக இருப்பதும் இதுவே முதன்முறை. இத்தனை வருடங்கள் பெற்றவர்களுடன் இருந்ததால், லேகா சரியான நேரத்தில் அனைத்தையும் தயார் செய்து விடுவார்.
பிரக்ருதி சீக்கிரமாக எழுந்து அடுக்களை வேலைகளைப் பார்த்து விடுவாள். உடற்பயிற்சி செய்து முடித்து விட்டு, அவனும் உதவி செய்து விட்டே குளிக்கச் செல்வான்.
“குக்கிங் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” இட்லியின் மீது சட்னியை ஊற்றியபடி பிரக்ருதி கேட்க, “நல்லா இருக்குற மாதிரி தான் இருக்கு…” என்று விட்டு உண்ண, “அப்போ பிடிக்கலையா?” அவள் வருத்தத்துடன் கேட்டாள்.
“நான் அப்படி சொல்லலையே… உன் முன்னாடி நல்லா தான சாப்பிட்டுட்டு இருக்கேன்” அவன் புரியாமல் கேட்டான்.
‘பிடிச்சு இருக்குன்னு சொல்றதுல என்ன வந்துடுச்சாம் இவருக்கு…’ தனக்குள் நொடித்துக் கொண்டவள்,
“உங்களுக்கு கொஞ்சம் ஹெட் வெய்ட் ஜாஸ்தியா மகிழ்” என நேரடியாகக் கேட்டாள்.
அதில் ஒரு கணம் உண்பதை நிறுத்தியவன், அவளை நிமிர்ந்து ஏறிட்டு, “சிலர் இந்த வார்த்தை சொல்லிக் கேட்டிருக்கேன்” என்றான் கண் மட்டும் புன்னகைக்கும் படி.
“அதென்ன நீங்க வாயில சிரிக்க மாட்டுறீங்க… உங்களுக்கு தினமும் ஸ்மைலிங் க்ளாஸ் எடுக்கணும் போலயே” என மூக்கைச் சுருக்கினாள்.
“சரி அதுக்குன்னு டைம் ஒதுக்குறேன். க்ளாஸ் எடுத்துக்கோ” எனத் தீவிரமாகக் கூறியவனை தலையைச் சொரிந்தபடி பார்த்தாள் பாவை.
“நீங்க நல்லா காமெடி பண்றீங்க?” என சிரித்து வைத்தவளிடம், “ஐ ஆம் சீரியஸ் பிரக்ருதி…” என்றிட,
“நான் மட்டும் உங்களை மகிழ்னு கூப்பிடுறேன். நீங்க என்னை முழுப்பேர் வச்சு தான் கூப்பிடுவீங்களா? கல்யாணம் ஆனா செல்லப்பேர் எல்லாம் வச்சு கூப்பிடுவாங்க தான?” எனக் கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“எனக்குத் தோணல. சரி சொல்லு உன்ன எப்படி கூப்பிட?” எனத் தனது மடிக்கணினியை எடுத்து வைத்தபடி அவன் கேட்க,
“நீங்களா தான் யோசிக்கணும்… எங்க வீட்ல என்னை பிரகான்னு கூப்பிடுவாங்க!” என முணுமுணுத்தாள்.
“ஓகே ருதி. பை. ஈவ்னிங் மீட் பண்ணலாம்” என அவன் காரில் பறந்து விட, அவள் பாத்திரங்களை ஒதுக்கி விட்டு, சில நிமிடங்கள் தொலைவில் இருக்கும் ரேடியோ ஸ்டேஷனுக்குச் சென்றாள்.
முதல் நாள், புது இடம், புது மனிதர்கள் என இருந்தாலும் புன்னகை முகத்துடன் சுற்றி வந்தவள், முதல் நாள் நிகழ்ச்சியை புன்னைகையுடன் பிசிறின்றி முடித்து வைத்து வந்தாள்.
மாலை வேளையில் அவன் வீடு திரும்பும் நேரம், அவன் சொன்ன நேரத்திற்கு இரவு உணவை தயார் செய்து வைத்திருந்தாள்.
“இன்னைக்கு பர்ஸ்ட் டே எப்படி இருந்துச்சு ருதி?” ஷக்தி உடையை மாற்றி வந்து ஆசுவாசமாக ஹால் சோபாவில் அமர்ந்தபடி கேட்க, “ம்ம் நல்லா போச்சு மகிழ். நியூ கொலிக்ஸ் நல்லா பழகுறாங்க…” என்றாள் முறுவலுடன்.
“குட்!” என்றவன், அவளை நிதானமாக அளந்தான்.
அழகான இளஞ்சிவப்பு நிற சுடிதாரை உடுத்தி இருந்தவள், கூந்தலைத் தழையப் பின்னலிட்டு பளிச்சென்ற முக பாவத்துடன் அமர்ந்திருந்தாள்.
அவளைப் பார்க்கும்போதே மனதில் ஒரு இதம் பரவியதை தடுக்க இயலவில்லை ஷக்திக்கு.
“இங்க ஒரு பால்கனி சும்மா தான இருக்கு. பிளாண்ட்ஸ் வச்சுக்கலாமா?” அவன் பார்வை அவளை தடுமாறச் செய்ய பேச்சை வளர்த்தாள்.
“ம்ம்” அவன் தலையை ஆட்டிட, “சரி நாளைக்குப் போய் நம்ம பிளாண்ட்ஸ் வாங்கிட்டு வரலாம். எனக்கு இங்க கடை எதுவும் தெரியாது. நீங்க கூட்டிட்டுப் போங்க…” என உரிமையுடன் கேட்டதும், “சியூர்” என்றான்.
இரவு உணவை உண்டு விட்டு, அவன் எப்போதும் போல புத்தகம் படிக்கச் செல்ல, அவளோ “கொஞ்ச நேரம் நான் அந்த ரூம்ல இருந்துட்டு. தூங்குறப்ப வரட்டா?” எனக் கேட்டதும், “நீ அங்கேயே தூங்குறதுன்னாலும் தூங்கு ருதி” என்று கூறி விட்டு அவன் கவனத்தைப் புத்தகத்தில் பதித்ததில், அவள் முகம் செத்தே விட்டது.
‘நான் பக்கத்துல இருந்தா பிடிக்கலையோ?’ என எண்ணியபடி மற்றொரு அறைக்குச் சென்றவள், மறுநாளுக்குத் தேவையான திட்டமிடலைச் செய்து விட்டு, மகிழைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்தாள்.
பார்ப்பவரை மீண்டும் ஒரு முறை பார்க்க வைக்கும் வசீகரத் தோற்றம். கம்பீரத்திற்கும் மிடுக்கிற்கும் குறைவில்லா பேச்சு. தன்னை சிறு விஷயத்திற்கும் கண்டித்துக் கொள்வது இல்லை தான். தனக்குப் பிடிக்காத எந்தவொரு விஷயத்தையும் அவன் செய்யவும் இல்லை இதுவரை. ஆனால், தன்னைப் பிடிக்காததினால் தான் இது போல ஒதுங்கி இருக்கிறாரோ என்ற கவலை எழுந்தது.
சில நிமிடங்களில் அறைக்கதவு தட்டப்பட, அங்கு ஷக்தி தான் நின்றிருந்தான்.
“இங்கயே தூங்கப் போறியா ருதி?” அவன் கேள்வியில் அவனே அறியா ஒரு தவிப்பு. அதனை அவன் புரிந்து கொண்டானோ இல்லையோ அவள் புரிந்து கொண்டாள்.
“நீங்க தான என்னை இங்க தூங்க சொன்னீங்க?” உதட்டைச் சுளித்து பிரக்ருதி கூற,
“உனக்கு இங்க தூங்க தோணுமோன்னு நினைச்சேன். அப்படி தோணலைன்னா, என் கூட தூங்குறியா?” அழுத்த விழிகளதை அவளிடம் செலுத்திக் கேட்டான் ஷக்தி மகிழவன்.
‘அப்போ என்னைப் பிடிச்சு தான் இருக்கு போல…’ என மனதினுள் தீர்மானித்துக் கொண்டவள், “ம்ம் சரி” என வேகமாகத் தலையாட்டி, அவனுடன் சென்றாள்.
அவளுக்கு இரு நாள்களாக சோபாவில் படுத்து முதுகு வலி வந்தது தான் மிச்சம். இன்றும் அது முடியாது எனப் புரிய, “நான் பெட்ல படுக்கட்டா?” என அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
“படுத்துக்கோ” இயல்பாய் கூறியவன், தலையணை மற்றொரு புறம் தள்ளிப் போட்டு அவளுக்கும் ஒரு தலையணையை அருகில் போட்டான்.
அவள் விருப்பபப்டி விளக்கை முழுதாய் அணைத்து விட்டவன், இருட்டை வெறித்துப் படுத்திருக்க, அவளோ “இன்னைக்காச்சு என் ஷோ கேட்டீங்களா?” என்றாள் ஆர்வமாக.
“கேட்டேன். உன் வாய்ஸ் எனக்குள்ள என்னவோ செய்யுது ருதி. நீ பேசுற டாப்பிக்கும் நேர்த்தியா இருக்கு. கீப் இட் அப்” என்றவனின் புகழ்ச்சி மழையில் நனைந்தாள் அவள்.
“நிஜமாவே பிடிச்சுருந்துச்சா மகிழ்?”
“நான் பொய் சொல்ல மாட்டேன் ருதி” என்றவனின் கூற்றில் பிரக்ருதியின் முகம் மலர்ந்து போனது.
“தேங்க்ஸ் மகிழ். அப்பறம் நீங்க கிரியேட் பண்ணுன ஒரு பசில் கேம் நான் விளையாடுனேன். செம்ம இன்டரஸ்டிங் தெரியுமா? எனக்கு அவ்ளோ பிடிச்சு இருந்துச்சு…” எனச் சிலாகித்துக் கூற,
“தேங்க்ஸ் ருதி!” என்றான் மென்மையாக.
இருட்டில் வளவளத்தபடி இருவருமே உறங்கிப்போக, மறுநாள் எப்போதும் போல வேலையை முடித்து விட்டு வந்தவள், அவனுக்காக இரவு உணவைத் தயார் செய்து விட்டு, அவனுடன் பூச்செடிகள் வாங்கப் போவதற்காக காத்திருந்தாள்.
எப்போதும் போல ஏழு மணியளவில் வீட்டிற்கு வந்த ஷக்தி மகிழவன், அவன் வேலையை மட்டும் பார்த்திட, பொறுக்க இயலாமல் அவள் கேட்டே விட்டாள்.
“இன்னைக்கு பிளாண்ட்ஸ் வாங்க போகலாம்னு சொன்னீங்களே?”
அதன்பிறகே நினைவு வந்தவனாக, “சாரி ருதி. நேத்து நைட்டே என் டு – டூ லிஸ்ட்ல ஆட் பண்ணனும்னு நினைச்சேன். அப்பறம் உங்கிட்ட பேசிட்டே தூங்கிட்டேன். நாளைக்குப் போகலாமா? நான் இப்பவே நோட் பண்ணிக்கிறேன். இப்போ பிளாண்ட்ஸ் வாங்கப் போனா, என்னோட ரீடிங் டைம் மிஸ் ஆகிடும்” என்றதும், பிரக்ருதியின் வதனம் வாடிப்போனது.
“சரி…” வெளியில் மட்டும் சரியென்றவள் உள்ளுக்குள் ஏமாற்றத்தை அடக்கிக் கொள்ள, அவனோ “குட்!” என்று விட்டு புத்தகத்தில் மூழ்கி விட்டான்.
ஆனால், மறுநாள் அவனே அவளை அழைத்துச் சென்றான் மறக்காமல்.
அவளுக்குப் பிடித்த மாதிரியான, அவள் கேட்ட விதத்திலான பூச்செடிகளை வாங்கிக் கொடுத்தவன், அதனை அழகாக பால்கனியில் செட் செய்தும் கொடுத்தான்.
“ஹையோ… இந்த இடமே சூப்பரா இருக்குல்ல மகிழ்!” கன்னத்தில் கை வைத்துக் கொண்டவள், பூக்களின் அழகை ரசித்துக் கொள்ள, அவன் விழிகள் அவளை ரசித்தது.
“ம்ம் அது தெரியல… ஆனா, இதை விட உன்னைப் பாக்குறப்ப தான் மனசு லைட் ஃபீல் குடுக்குது” அதீத வர்ணனைகள், பசப்பு வார்த்தைகளின்றி தனது மன உணர்வைக் கடத்தி இருந்தான் ஷக்தி.
ஒரு கணம் திகைத்து நின்றவள், “அப்போ உங்களுக்கு என்னைப் பிடிக்குமா?” எனப் புன்னகையுடன் கேட்க,
மெல்லிய புன்னகை அவனை மீறியும் வெளிவந்தது.
அவன் வார்த்தையால் சொல்லாதது சின்ன வருத்தத்தைக் கொடுத்தாலும், புன்னகைத்தால் அத்தனை அழகாய் தெரிந்தான் ஆணவன்.
அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, சற்றே தாமதமாகாவே எழுந்தாள் பிரகிருதி. தினமும் இட்லியாக உண்டு போரடித்து விட, காலையில் தோசை வார்த்துக் கொள்ள திட்டமிட்டவள், இருவருக்குமாக தோசையை கொண்டு வந்து வைத்தாள்.
அதனை அழுத்தத்துடன் பார்த்த ஷக்தி, “இட்லி இல்ல?” எனக் கேட்க,
“நான் லேட்டா தான் எந்திரிச்சேனா… அதான், தோசை ஊத்திக்கலாம்னு, டெய்லி இட்லி சாப்பிட்டு போர் அடிக்குது… இதோ பாருங்க க்ரிஸ்பியா இருக்கு தோசை” என்று அவன் தட்டில் வைத்தாள்.
சில நொடிகள் அதனை வெறித்துப் பார்த்தவன், மொழியறியா ஒரு தலையசைப்பைக் கொடுத்து விட்டுப் பின் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டான்.
“இன்னைக்கு ஈவ்னிங் பீச்சுக்குப் போகலாமா?” காலை உணவை முடித்து விட்டு ஷக்தி கேட்க,
ஒரு கணம் விழித்தவள், பின் “போகலாமே…” என்றாள்.
“டின்னர் வெளில சாப்பிட்டு வரலாம்” அவன் சேர்த்து சொல்ல தலையாட்டிக்கொண்டாள்.
இருவரும் முதன்முதலில் தனியாக வெளியில் செல்ல இருவருக்குள்ளும் சிறு ஆசை இருந்தது. பின், நினைவு வந்தவனாக “ருதி… இன்னைக்கு லன்ச் எதுவும் செய்ய வேணாம். அம்மா வீட்டுக்கு வர சொன்னாங்க. அங்க போயிட்டு அப்டியே பீச்க்குப் போகலாம்” என்றதும் அவள் திகைத்து விட்டாள்.
“நேத்தே சொல்லலையே?”
“நேத்து கொஞ்சம் ஒர்க் இருந்துச்சு. நீயும் சீக்கிரம் தூங்கிட்டல்ல…” என இயல்புடன் கூறியவன், “இப்ப கிளம்பலாமா?” என்றான்.
மேலும் திடுக்கிட்டவள், “இப்போ… இப்போவா. நான் இன்னும் ரெடியாகல” எனப் பதற்றமாகக் கூற, அவன் அவளை மேலிருந்து கீழ் வரை அளந்தான்.
எப்போதுமே ‘ஹோம்லெஸ்’ ஆக அவள் இருந்ததே இல்லை. அழகாக குர்தி அணிந்து, கூந்தலை வாரி எப்போதும் வெளியில் செல்லத் தயார் என்ற நிலையிலேயே இருப்பாள்.
இன்றும் அதே போல கத்தரிப்பூ நிற சுடிதாரில் மலர் தோட்டமாய் காட்சியளித்தவள், இனி தயாராக எதுவும் இல்லை என்ற எண்ணத்தில் தான்
அவன் கேட்டதும்.
அவளோ “எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்று விட்டு மற்றொரு அறைக்குச் சென்று விட, ஷக்தி தோளைக் குலுக்கிக் கொண்டான்.
ஒரு மணி நேரம் கழித்து, சிவப்பு நிற ஜார்ஜெட் புடவையில் வந்தவளை விட்டு நகர மறுத்தது அவன் விழிகள்.
அவனது பார்வையில் தடுமாறியவள், “நல்லாருக்கா?” என மெதுவாய் கேட்க,
ஒற்றைப் புருவம் உயர்த்தி விட்டுப் பதில் ஏதும் சொல்லாமல் அறையை விட்டு வெளியில் சென்றான்.
சட்டென அவளுக்கு மனம் சுருங்கி விட்டது.
போன வேகத்தில் திரும்பி அவளிடம் வந்தவனின் கையில் அவன் பால்கனியில் பூத்த சிவப்பு ரோஜா மலர்.
“உன் சேரிக்கு மேட்ச்சா இருக்கும் ருதி… சைட்ல வச்சுக்கோ” என்று கொடுக்க, அதனை வாங்கிக் கொண்டவளுக்குள் சட்டென ஒரு பனிப்பொழிவு.
“தேங்க்ஸ் மகிழ்” கன்னம் சிவக்க ரோஜாவை வாங்கிக் கொண்டவளிடம், “உன் கன்னத்துலயும் ரோஸ் பவுடர் போட்டியா?” எனக் கேட்க, கன்னத்தை வேகமாகத் தேய்த்தாள், “இல்லையே” என்று.
ஒரு வித சில்லென்ற மனநிலையிலேயே ஷக்தி மகிழவனின் வீட்டிற்குச் சென்றனர் இருவரும்.
லேகாவும் பிரகாசமும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்க, “வீட்ல எல்லாம் செட் ஆகிடுச்சா பிரகா?” என லேகா கேட்டார்.
“கல்யாணத்துக்கு வரமுடியாத நம்ம சொந்தக்காரங்க எல்லாம் உன்னைக் கேட்டாங்க. நீங்க இன்னைக்கு வர்றீங்கன்னு சொன்னதும், என் பெரிய அண்ணி உன்னைப் பார்க்க வரேன்னு சொல்லிருக்காங்க” என்றார் லேகா.
அதனைக் கேட்டு பிரகிருதி திகைக்க, “அம்மா இன்னைக்கு நாங்க பீச்க்குப் போறோம்” எனப் புருவம் சுருக்கினான் ஷக்தி.
“தெரியும்டா. அதான் நீ லிஸ்ட் போட்டு உன் பிளானை அனுப்பிட்டியே. லன்ச் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள வந்துடுவாங்க… கொஞ்ச நேரம் தான பேசிட்டுப் போய்டுங்க. நீ வேணும்னா ரூம்ல போய் இரு. அவங்கப் பார்க்க வர்றது என் மருமகளைத் தான்” என்றார் பெருமையாக.
“ஃபைன்” என்றவன், உண்டு முடித்து விட்டு தனதறைக்குச் சென்று விட, பிரகிருதிக்கு கண்ணீர் அணை எப்போது வேண்டுமென்றாலும் உடைந்து விடும் அளவு இருந்தது.
“அத்… அத்தை நான் நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரட்டுமா?” எனக் கேட்டு அவர் பதில் அளிக்கும் முன்னே, லேகாவின் பெரிய அண்ணியான சரஸ்வதி பட்டுப்புடவை மினுக்க அங்கு வந்து விட்டார்.
“வாங்க அண்ணி… அண்ணா வரலையா?” எனக் கேட்டுக்கொண்டே மருமகளை அறிமுகம் செய்தார்.
அவளும் பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டு, “வ வணக்கம்…” என்றிட, “என்னமா… எப்படி இருக்க?” என பொதுவாகப் பேசினார்.
அவளும் பதில் அளித்தாலும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அவ்வப்பொழுது அவளது விழிகள் தனது கணவன் இருக்கும் மாடி அறையைத் தழுவியது.
“ஏன் உன் கையெல்லாம் நடுங்குது?” சரஸ்வதி கேட்டதும், “இல்லையே…” எனக் கையை மறைத்துக் கொண்டவள், புன்னகையை வரவழைத்துப் பேசி முடித்திட, நான்கு மணி அளவில் தான் அவன் அறையை விட்டு வந்தான்.
அவனுடன் காரில் அமர்ந்தவள் நடுங்கிய கரத்துடனே சீட் பெல்ட்டை அணிந்து கொள்ள, அதனைப் பார்த்து விட்ட ஷக்தி, “நீ ஓகே தான ருதி?” எனக் கேட்டான்.
கண்கள் கலங்கி நிற்க, சிவந்த விழிகளுடன் அவனைப் பார்த்த பிரகிருதி, “ஐ ஆம் ஓகே” என்றிட, “குட்” என்று விட்டு காரைக் கிளப்பினான்.
தனது முகத்தில் தெரிந்த மாற்றம் கூட புரியவில்லையா இவனுக்கு? என்ற ஆதங்கம் எழ, கண்ணீர் மடை திறந்து வரத் துடித்தது.
“வீட்டுக்குப் போங்க” அவள் கூறியதும் ஷக்தி புருவம் சுருக்கிப் பார்த்தான்.
“ஏன் ருதி? பீச்…?” அவன் கேள்வியாய் வினவ, அவளிடம் பதில் இல்லை.
“அப்செட்டா இருக்கியா?” கேட்கும்போதே அவளது விழியில் இருந்து ஒரு துளி நீர் பிரிந்து வழிய, அதனை அசையாமல் பார்த்தவன் வீட்டிற்கே காரை விட்டான்.
வீட்டினுள் நுழைந்ததும், தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் புகுந்து கொண்டவள், இரவு வரையிலும் வெளியில் வரவில்லை.
ஷக்தி தனது அறைக்குச் செல்வதும், பின் அவள் அறை வாயிலில் நிற்பதுமாக ஒரு மாதிரியான குழப்ப நிலையில் இருந்தான்.
இரவு உணவு வேளை வந்ததுமே அவனே கதவைத் தட்டினான்.
கதவைத் திறந்த பிரகிருதியின் முகம் இன்னும் தெளியாததைக் கண்டு, “டின்னர்க்கு டைம் ஆச்சு. வா சாப்பிடலாம்…” என அழைக்க, “எனக்குப் பசிக்கல” என்றாள் அவனைப் பாராமல்.
“சரி பசிச்சதும் வந்து சாப்பிடு. நான் நூடில்ஸ் பண்ணிருக்கேன்” என்று விட்டு சென்று விட, கதவை அடைத்தவளுக்கு நின்ற அழுகை மீண்டும் வரும்போல இருந்தது.
‘ஏன் இவர் இப்படி பட்டும் படாம இருக்காரு. அப்பாக்கு மாதிரி இவருக்கும் என்னைப் பிடிக்கல. அதான் நான் அழுதா கூட கண்டுக்காம இருக்காரு’ என மீண்டும் கேவல் கொண்டாள்.
அவனது ரீடிங் டைம் முடிந்து, உறங்கவும் அவள் வராது போக, மீண்டும் அவளது அறைக்கதவைத் தட்டினான்.
“இன்னும் நான் சாப்பிடவே இல்ல…” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
“சாப்பிடு அப்போ. இல்லன்னா தூக்கம் வராது. நான் வெய்ட் பண்றேன்” என்றவன் தனதறைக்குச் சென்று விட, “இவரை…” எனப் பல்லைக்கடித்தவள் அவன் செய்து வைத்திருந்த நூடில்ஸை ஏனோ தானோவென உண்டு விட்டு அறைக்குச் சென்றாள்.
இருவரும் விளக்கணைத்துப் படுத்து விட்டதும், “அப்செட்டா இருக்கியா?” என மீண்டும் வினவினான்.
“ஆமா” அவள் வெடுக்கென பதில் அளித்ததும், அவன் ஒன்றும் பேசவில்லை. சில நொடிகளில் உறங்கியும் விட்டான். அவளுக்குத் தான் ஏமாற்றம் நெஞ்சை நிறைத்தது.
அவளை பொறுத்தவரை அவன் ஒரு புரியாத புதிரே! திடீரென அவளை இளவரசியாக உணர வைக்கிறான். திடீரென அசட்டையாக ஒதுக்குகிறான்! அவள் என்னவென்று நினைப்பாளாம்?
இதனிடையில் மறுநாள் ரேடியோ ஸ்டேஷன் சென்று விட்டு அபார்ட்மெண்ட்டிற்கு வந்தவளை லேகாவே வரவேற்றார். அவரைக் கண்டதும் மெல்ல அதிர்ச்சியை விழுங்கியவர் “என்ன அத்தை திடீர்னு வந்துருக்கீங்க?” எனக் கேட்டு வைக்க, “ஏன்மா நான் சொல்லிட்டு தான் வரணுமா?” என லேசாய் கோபம் கொண்டார்.
“அப்படி இல்ல அத்தை…” எனப் பதறியதில், மெல்ல கோபம் குறைய,
“உன்னைக் கூட்டிட்டு ஷாப்பிங் போக தான் வந்தேன். அப்டியே ரெப்ரெஷ் ஆகிட்டு வா போலாம்” என்றதும் விழித்தாள்.
“என்… என்ன அத்தை திடீர்னு?”
“என் பையனுக்கு தான் எல்லாமே ரொட்டினா நடக்கணும். உனக்கு அப்படி இல்ல தான. அப்பறம் என்ன. வா போலாம்” என்று சோபாவில் சட்டமாக அமர்ந்து கொண்டார்.
“அதில்ல அத்தை… தலைவலி அதான்” எனப் பொய்யுரைத்து சமாளிக்க, “வெளில போய் ஒரு காபி குடிச்சா சரியாகப் போகுது. ஷாப்பிங்ன்னதும் பம்பரமா கிளம்பி வர வேணாமா பிரகா. என்ன பொண்ணு நீ?” என்று அதட்டியதில், வேறு வழியற்று கிளம்பி வந்தாள்.
இரவு ஒன்பது மணிக்கே மருமகளை அபார்ட்மென்ட்டில் இறக்கி விட்டு கிளம்பினார் லேகா.
தனது ரீடிங் நேரத்தை முடித்து விட்டு, படுக்கச் சென்றவன் மனையாளைக் கண்டதும், “லேட் ஆகிடுச்சா ருதி. சாப்பிட்டியா?” எனக் கேட்க,
“நான் சாப்ட்டா என்ன சாப்பிடலைன்னா உங்களுக்கு என்ன?” என்று வெடித்தாள்.
விழி இடுங்க அவளை ஏறிட்ட ஷக்தி, “என்ன ஆச்சு? அப்செட்டா இருக்கியா?” அவன் கேட்டதும், “ஆமா அப்செட்டா இருக்கேன் என்ன செய்யப்போறீங்க?” என்றாள் கேவலாக.
அவன் மீது ஏன் கோபமென்று தெரியவில்லை அவளுக்கு. இப்படியெல்லாம் யார் முன்னாடியும் தன்னிலை இழந்ததில்லை அவள்.
“நேத்தே நீ அப்செட்டா இருக்குறது தெரிஞ்சு தான், அம்மாவை உனக்கு கம்பெனி குடுக்க சொன்னேன்” என்றவனை திகைத்துப் பார்த்தாள்.
“நீங்க தான் அத்தையை வர சொன்னீங்களா?” தேம்பலாகக் கேட்க,
புரியாமல் தலையசைத்தவன், “ம்ம்… நீ அப்செட்டா இருக்கன்னு சொன்னேன். அவங்க தான் ஷாப்பிங் போனா சரியாகிடும்னு சொன்னாங்க…” என இயல்பாகக் கூறியதில், “எதையும் என்கிட்ட கேட்டு செய்ய மாட்டீங்களா?” என்றாள் கண்ணில் நீர் தளும்ப.
அதே கண்ணீருடன் சோபாவில் சென்று அமர்ந்து கொண்டவள் முதுகைப் பிடித்துக் கொண்டாள். அவளுக்கு அருகில் தானும் அமர்ந்த ஷக்தி, “நான் எதுவும் தப்பா பண்ணிட்டேனா ருதி?” என்றான் வருத்தம் தோய்ந்த முகத்துடன்.
“இன்னைக்கு எனக்கு பீரியட்ஸ் தெரியுமா. வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சேன். செம்ம பெயின் வேற” என மூக்கை உறிஞ்சினாள்.
அவனோ அமைதியாய் கேட்டுக்கொண்டு, “நீ கம்ஃபர்ட்டா இருக்கணும்னு பண்ணேன்… இப்ப நான் என்ன செய்யணும்னு சொல்லு செய்றேன்!” அவன் வேகமாகக் கேட்க,
“என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க ப்ளீஸ்” என்றாள் குமுறலுடன்.
“சரி ஓகே. கொஞ்ச நேரம் தனியா இருந்துட்டு ரூம்க்கு வா. நான் வெய்ட் பண்றேன்” என்று அவன் அறைக்குச் சென்று விட, பாவம் அவள் திருதிருவென விழித்தபடி அமர்ந்திருந்தாள்.