3. செந்தமிழின் செங்கனியே!

4.6
(36)

செந்தமிழ் 3

 

அடுத்த ஒரு மணிநேரத்தில் அவர்கள் பார்ட்டி நடக்கும் ஹோட்டல்லை அடைந்தார்கள். அவர்களுக்கு கொடுத்து இருந்த அழைப்பிதழையும் இனியனின் ஐடி கார்டையும் பார்த்த காவல் ஊழியன் அவனை உள்ளே அனுப்ப, அவனின் பின்னே வந்த செங்கனியை வழி மறைத்தான்.

 

அவள் இனியனை பார்க்க, “ஷி இஸ் மை வைப்”, என்று சொல்லவும் அவளை உள்ளே விட்டுட்டு விட்டான். அவர்களின் பின்னால் வந்த ஒரு அரைகுறை ஆடை பெண்ணை மட்டும் எதுவுமே கேட்காமல் உள்ளே விட்டதை கனி கவனிக்க தவறவில்லை.

 

“அது என்ன என்னை மட்டும் நிறுத்தினான். அந்த பொண்ண அப்படியே விடுறான்”, என்று அவள் அவனை பார்த்து கேட்க, “அவ போட்டு இருக்க டிரஸ் தான்… அவ எப்படி டிரஸ் பண்ணி இருக்கா? நீ எப்படி டிரஸ் பண்ணி இருக்க?”, என்று அவனின் பதிலில் எரிச்சல் அடைந்தவள், “அவ எல்லாத்தையும் காட்டிகிட்டு இருக்கா, நான் எல்லாத்தயும் மூடிக்கிட்டு இருக்கேன் அதான் வித்யாசம்”, என்றவளை பார்த்து முறைதான்.

 

“முறைக்காதீங்க… உண்மைய தான சொன்னேன்… இந்த மாதிரி டிரஸ் பண்றதுக்கு பேரு தான் நாகரிகமா? நான் ஒன்னும் நவீனமா டிரஸ் பண்றதுக்கு எதிரானவ கிடையாது… ஆனா அதுக்காக இப்படிலாம் உடை உடுத்தறதுக்கு பேரு நாகரிகம் கிடையாது… நவீனம் நாகரிகம்லாம் உடுத்துற உடைல இல்ல, சிந்திக்கிற சிந்தனைல தான் இருக்கு…”, என்று அவள் பேசிக்கொண்டே செல்ல, “கொஞ்சம் உன் சொற்பொழிவ நிறுத்துறியா? இங்கயும் வந்து என் மானத்தை வாங்காத”, என்று எரிச்சலாய் பேசி உள்ளே சென்றான்.

 

இருவரும் ஒரு சேர பார்ட்டி ஹாலில் நுழைய அங்கே அவனின் உயர் அதிகாரி நின்று இருந்தார். ஐம்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க நபர் அவர். உடன் அவரின் மனைவியும் நின்றிருந்தார். அவரும் புடவை தான் அணிந்து  இருந்தார்.

 

இனியனையும் கனியையும் பார்த்தவர்கள் புன்னகையுடன் வரவேற்றனர். ஒருஇரண்டு முறை இனியனின் வீட்டிற்கு சென்றதால், அவர்களுக்கு கனியையும் தெரியும்.

 

“எப்படிம்மா இருக்க?”, என்று அந்த அதிகாரியின் மனைவி கேட்க, “நல்லா இருக்கேன்…நீங்க?”, என்று அவளும் கேட்க, “நான் நல்லா இருக்கேன் மா… நீயாச்சு என்னை மாதிரி புடவைல வந்திருக்கியே… எங்க டா நம்ப கலாச்சாரத்தை எல்லாரும் மறந்துட்டாங்களோனு நான் கூட நினைச்சேன்”, என்று அவர்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.

 

இனியேனும் அவனின் மேலதிகாரியுடன் மற்ற அலுவலக நண்பர்களை பார்க்க தனியாக சென்று விட்டான்.

 

“குழந்தைங்களாம் எப்படி இருகாங்க?”, என்று கேட்டவரிடம், “நல்லா இருக்காங்க”, என்று புன்னகைத்தாள்.

 

“கனி உங்கிட்ட ஒன்னு சொல்லணும் தப்பா நினைக்கதா”, என்றவரை அவள் சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

 

“இவங்க ஆபீஸ்ல மேக்னானு ஒருத்தி வேலை செய்யுறா தெரியுமா உனக்கு?”, என்று அவர் கேட்டவுடன், அவளுக்கும் நினைவு வந்தது. ஆம், அவளும் அந்த பெயரை கேள்வி பட்டிருக்கிறாள் தான். இனியன் அவனின் கைபேசியில் பேசும் போது இந்த நபரின் பெயர் அடிபட்டு இருக்கிறது.

 

“தெரியும்… அவர் பேசும் போது கேட்டு இருக்கேன்”, என்றவளை பார்த்தவர், “கொஞ்சம் ஜாக்கிரதையா இரு மா… அவளுக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகி டிவோர்ஸ் ஆகிருச்சு… அது அவளோட பர்சனல் வச்சிக்கோ… ஆனா டிவோர்ஸ்க்கு காரணம் அவ வேற ஒருத்தனோட இருந்ததா அவளோட வீட்டுக்காரன் பார்த்துட்டு இருக்கான்”, என்றவுடன் அவளின் கண்கள் விரிந்தன.

 

இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை அல்லவா!

 

“அத ஏன் என்கிட்ட சொல்றிங்க?”, என்று கேட்டவளிடம், “இப்போ அவ உன் புருஷன் கூட தான் நெருங்கி பழக ட்ரை பண்ணிட்டு இருக்கா”, என்று சொல்லவும், அவள் எந்த உணர்வுகளையும் வெளி காட்ட வில்லை என்றாலும் அவள் உள்ளுக்குள் ஏதோ நெருடல் வந்தது உண்மை தான்.

 

இனியனை பற்றி அவளுக்கு நன்கு தெரியும். பெண்கள் விஷயத்தில் அவன் மிகவும் நல்லவன். கனியை தாண்டி இன்று வரை அவன் ஒருவரையும் ஏறெடுத்து பார்த்தது இல்லை. ஆனால் அந்த பெண்ணின் மேல் தான் ஏதோ நெருடலாக இருந்தது.

 

“அதோ அவ தான் மேக்னா”, என்று கை காட்டிய திசையை பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை தான். அந்த பெண் இனியனை ஆரத்தழுவும் காட்சியை தான் பார்த்தாள்.

 

அவர்களின் அலுவலகத்தில் கட்டி அணைப்பதெல்லாம் சாதாரணம் தான். அவள் இரண்டு வருடங்களுக்கு முன் சென்ற இப்படி பட்ட ஒரு பார்ட்டியில் வெளிநாட்டு பெண்மணி ஒருவர் இனியனை கட்டி தழுவியதை பார்த்திருக்கிறாள் தான். ஆனால் அந்த பெண்ணின் அணைப்பில் நட்பு ரீதியான உணர்வு தான் இருந்தது.

 

பெண்கள் இந்த மாதிரி விடயங்களில் மிகவும் கை தேர்ந்தவர்கள் ஆயிர்றே! அவர்களுக்கு தெரியும் மற்றொரு பெண் அவர்களின் இணையை எந்த நோக்குடன் பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். இது ஆணிற்கும் பொருந்தும். மனித இயல்பு அது!

 

“அவளும் அவ ட்ரெஸ்ஸும்… நீ கொஞ்சம் கேர்புல்லா இரு கனி”, என்றவர், “நான் போய் நமக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி நகர்ந்து விட்டார்.

 

அப்போது அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது என்னவோ மேக்னாவும் இனியேனும் தான்.

 

அவளின் அருகில் வந்தவர்கள், “கனி இவங்க மேக்னா என் கூட வேலை பார்குறவங்க”, என்று அறிமுகம் செய்யவும், மேக்னாவோ இனியனை ஒட்டியே நின்று கொண்டிருந்தாள்.

 

கனி சிறு தலையசைப்புடன் நிறுத்தி கொள்ள, மேக்னாவோ, இனியனின் தோளை பற்றி இழுத்து, “நீங்க ரொம்ப லக்கி உங்களுக்கு செம்ம ஹாண்ட்சம் அண்ட் ஸ்மார்ட் ஹஸ்பெண்ட் கிடைச்சிருக்காரு”, என்று சொல்லவும், அதற்கும் சிறு தலையசைப்பு மட்டும் தான்.

 

கனியின் கண்கள் நிலைத்து இருந்தது என்னவோ, இனியனின் தோள் மீது தான். அதை அவன் உணர்ந்தானோ என்னவோ, அவனே மோகனாவின் கையை பற்றி இறக்கி வைத்து விட்டான்.

 

அதே நேரம் அந்த அதிகாரியின் மனைவி வர, “ஹலோ மிஸ்ஸஸ் சுரேஷ், உங்களுக்கு ஏத்த பார்ட்னர் கிடைச்சிட்டாங்க போல”, என்று கனியை காட்ட, அவள் அவர்களின் உடையை வைத்து தான் சொல்கிறாள் என்று இருவரும் உணர்ந்து கொண்டனர்.

 

“உங்களுக்கு தான் நிறைய பார்ட்னர் இருக்காங்களே மேக்னா! எங்களுக்கு ஒரு பார்ட்னர் போதும்”, என்ற கனியின் பதில் சற்று அதிர்ந்து தான் போய் விட்டனர் மூவரும்.

 

மிஸ்ஸஸ் சுரேஷோ, “நெத்தி அடி பதில்”, என்று நினைத்து கொண்டார்.

 

“நீங்க என்ன சொல்றிங்க மிஸ்ஸஸ் இனியன்?”, என்று மேகனா கோவமாக கேட்க, “நீங்க என்ன அர்த்தத்துல சொன்னிங்களோ அதே அர்த்தத்துல தான் நானும் சொன்னேன்”, என்று வந்தன கனியின் வார்த்தைகள்.

 

சமயோஜித புத்திக்கு பெயர் போனவள் அவள்! அவளிடம் மேக்னாவின் வார்த்தைகள் எல்லாம் எம்மாத்திரம்!

 

அவளுக்கு மூக்கு உடை பட்ட உணர்வு, அங்கிருந்து சட்டென நகர்ந்து விட்டாள்.

 

இனியனும் சென்றுவிட, “நீ கெட்டிகாரி தான் கனி… அவ வழியில போய் அவளுக்கு சாட்டையடி கொடுத்துட்ட”, என்று சொல்லி அவளுக்கு எடுத்து வந்த ஜூஸ் கிளாசை கொடுத்தார்.

 

அடுத்து பார்ட்டியும் துவங்கியது. முதலில் அவர்களின் அலுவலத்தில் பணி புரியும் சிறந்த பணியாளர்களுக்கு விருதை வழங்கினார். அந்த அலுவலகத்தின் மிக திறமையான பணியாளர் விருது கிடைத்தது என்னவோ இனியனுக்கு தான்.

 

இப்படியாக அந்த நிகழ்ச்சி முடிய, அடுத்து இரவு உணவு பரிமாற பட்டது.

 

இனியன், கனி, சுரேஷ் மற்றும் அவரின் மனைவி நால்வரும் ஒரு மேஜையில் அமர, அங்கே அவளின் உணவு தட்டோடு வந்தாள் மேக்னா.

 

“என்ன இந்த மங்கூஸ் இங்க வருது?”, என்று மிஸ்ஸஸ் சுரேஷ் மிஸ்டர் சுரேஷின் காதை கடிக்க, “கொஞ்சம் அமைதியா இரு டி”, என்று அவர் தான் அவரின் மனைவியை அடக்கினார்.

 

“நானும் இங்க உட்காந்து சாப்பிடலாமா?”, என்று கேட்கவும், “வேணான்னு சொன்னா போய்டுவீங்களா?”, என்று கேட்டது கனி தான்.

 

இனியனுக்கு புரை ஏறி விட்டது. சுரேஷிற்கும் சிரிப்பு தான் அடக்கி கொண்டார். மிஸ்ஸஸ் சுரேஷ் தான் சிரித்தே விட்டார்.

 

மேக்னாவிற்கோ மூக்கு ஆறுபட்டது போன்ற உணர்வு.

 

“உட்காருங்க மேக்னா”, என்று இனியன் இருக்கையை காட்ட, அவளும் அமர்ந்து கொண்டாள்.

 

அப்போது கனியின் வாயில் ஏதோ உணவு பொருள் ஒட்டிக்கொள்ள, அவள் மிஸ்ஸஸ் சுரேஷிடம், “கொஞ்சம் அந்த பேப்பரை கொடுங்க” என்று கூறவும், “பேப்பரா டிஸ்ஸு மிஸ்ஸஸ் இனியன்”, என்று நக்கலாக கூற, “எதுவா இருந்தா என்ன… சொல்றது எனக்கு புரிஞ்சிது”, என்று மிஸ்ஸஸ் சுரேஷ் என்னவோ இதை சாதாரணமாக தான் எடுத்து கொண்டார்.

 

மிஸ்டர் சுரேஷிற்கும் கூட இது பெரிய விடயமாக தோன்ற வில்லை. ஆனால் இனியனிற்கு தான் இது அவனின் பிரெஸ்டிஜை சீண்டியதாக தோன்றிவிட்டது.

 

அடுத்து அங்கிருந்த பார்ட்டி நடத்துனர், “கம் அண்ட் டான்ஸ்”, என்று அழைப்பு விடுக்கவும், “இனியன் கம் லெட்ஸ் டான்ஸ்”, என்று மேக்னா அவனின் கையை பற்ற, கனியின் விழிகள் விரிந்தன.

 

“இல்ல மேக்னா ஐ அம் நாட் இன்டெரெஸ்ட்டேட்”, என்று முதலில் அவன் மறுத்தான் தான். ஆனால் அவள் விடுவதாக தெரியவில்லை. அது இனியனின் மேல் உள்ள விருப்பு வெறுப்பை தாண்டி, அவளின் மூக்கை உடைத்த கனியின் மனதை உடைத்தே தீர வேண்டும் என்கிற வேட்கை.

 

ஒரு கட்டத்தில் அவனும் எழுந்து சென்று விட்டான். மேக்னாவே அவனின் கையை பற்றி இடையை பிடிக்க வைத்தாள். கையில்லாத உடையை அணிந்தவள், அவளின் தோள்களை பற்ற வைத்தாள்.

 

ஆடவும் துவங்கினர். இனியனுக்கு ஆடுவது ரொம்ப பிடிக்கும் ஒரு முறை மேகனாவிடம் அதை கூறியும் இருக்கிறான் தான். ஆனால் இப்படி பார்ட்டியில் எல்லாம் ஆடியது கிடையாது. இது தான் முதல் முறை.

 

சில நேரத்தில் அவனும் நடனத்தை விரும்ப துவங்கினான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அந்த அரங்கில் அவர்கள் தான் மிக நேர்த்தியாக ஆடி கொண்டு இருந்தனர்.

 

“இவங்க செம்ம பேர்ல ரியலாவும் இவர்களே பேர்ரா இருந்தா நல்லா இருக்கும்”, என்று ஒருவர் சொல்ல கேட்கவும், அவளுள் ஏதோ உடைந்த உணர்வு.

 

இப்படி அனைத்திற்கும் உணர்ச்சியில் மாட்டிக்கொள்பவள் இல்லை கனி. ஆனால் அவளும் மனுஷி தானே, அவளை அறியாமல் அவளின் கண்களில் நீர் வழிந்தது. ஏனோ அவளுக்கு இனியன் அவளை விட்டு தொலைதூரம் சென்று கொண்டு இருப்பது போல் தோன்றியது.

 

“கனி”, என்று மிஸ்ஸஸ் சுரேஷ் அழைக்கவும், அவள் அங்கிருந்து நகர்ந்து சென்று அந்த நவீன கழிப்பறையில் நுழைந்தவள், கதறி அழுது விட்டாள்.

 

எத்தனை பெண்களின் மனக்குமுறல் இது! நவீனம் நாகரியம் என்கிற பெயரில் இப்படியும் நடந்து கொள்வது தான் முறையா? என்று கேட்டு கேட்டு அவளின் மனம் வாடியது.

 

சிறிது நேரம் கழித்து அவளே வந்து இருக்கையில் அமர, அவர்களும் ஆடி முடிக்க, அங்கிருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.

 

அடுத்த சில மணி நேரத்தில், இனியனும் கனியும் கிளம்பும் முன் அங்கு வந்த மேக்னா, இனியனை கட்டி அணைக்கவும் தவற வில்லை.

 

இருவரும் காரில் ஏறிக்கொண்டு வீட்டை நோக்கி பயணத்தை துவங்கினர். வீட்டை அடையும் முன் இருவரின் மனதிலும் விரிசல் விழுந்து விடுமோ?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 36

No votes so far! Be the first to rate this post.

1 thought on “3. செந்தமிழின் செங்கனியே!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!