அத்தியாயம் 3
தியாவின் பரீட்சை முடிவுகள் வந்து விட்டது அனைத்து பாடத்திலும் சென்டம் வாங்கியிருந்தாள். வெற்றியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மகளை அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்தவன் அடுத்த வினாடியே கம்பெனி மேனேஜருக்கு போன் போட்டு கம்பெனியில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இனிப்புகளுடன் சம்பளத்தோடு கூடிய போனஸும் கொடுக்கச் சொல்லிவிட்டான்.
மாதவியோ மகளுக்கு பிடித்த குலோப் ஜாமூனை செய்து வைத்திருந்தவள் தந்தையும் தாயும் சேர்ந்து மகளுக்கு ஊட்டி விட்டனர்.
“தேங்க்ஸ் டாடி தேங்க்ஸ்மா” என்ற மகளின் முகத்தில் பழைய துள்ளல் காணாமல் போயிருந்தது.
எப்போது தான் இந்தியா போக முடியாது என்று தெரிந்ததோ நாளிலிருந்து தியா முகத்தில் செழிப்பு குறைந்திருந்ததை மாதவி கண்டுபிடித்துவிட்டாள்.
தியா தந்தையின் முன்பு எதார்த்தமாக சந்தோசமாக இருப்பதை போல காட்டிக்கொண்டாலும் அவளது அறைக்குள் இருக்கும்போது தனிமையான நேரத்தில் விட்டத்தை பார்த்துக்கொண்டு படுத்துக்கிடப்பாள் தான் நினைத்தது நடக்கவில்லையே என்று கவலையில்.
ஏன் தந்தை தன்னை இந்தியா போகக்கூடாதுனு சொல்கிறார் என்று அவளுக்கு இன்னும் சந்தேகம் வலுத்துக்கொண்டு வந்தது.
தந்தைக்கும் மகளுக்கும் இடையே பிறந்த நாள் அன்று சின்ன சண்டை மறைந்த அடுத்த வாரத்தில் வெற்றி ஆபிஸ் கிளம்பிய பின் சமையல்கட்டை சுத்தம் செய்துக் கொண்டிருந்த தாயின் பக்கம் வந்து நின்ற தியாவை திரும்பி பார்த்த மாதவியோ “எதாவது சாப்பிட வேணுமாடா?” மகள் தோளில் கையை வைத்தாள். சமையல்கட்டு பக்கம் எட்டிக்கூட பார்க்கவிட்டதில்லை மாதவி இன்று தாயை தேடி வந்திருக்கிறாளென்றால் மகள் மனதில் இந்தியாவுக்கு தந்தை அனுப்பவில்லை என்ற ஆதங்கம் மகள் முகத்தில் இழையோடியிருப்பதை கண்டு மனம் சுணங்கிப்போனது மாதவிக்கு.
“எ.எனக்கு சாப்பிட எதுவும் வேணாம்மா நான் உங்ககிட்ட முக்கியமான விஷயம் கேட்கணும் என்கூட வாங்க” என்று மாதவியின் கையை பிடித்துக்கொண்டு தன் அறைக்குச் சென்று மெத்தையில் உட்கார்ந்து தாயின் கையை விடாமல் தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு “அம்மா எ.எனக்கு தாத்தா பாட்டி, அத்தை மாமா, சித்தி சித்தப்பா, பெரியப்பா பெரியம்மா எல்லாரும் எனக்கு இருக்காங்களா?” என்று கண்ணை விரித்து கேட்டு தாயின் பதிலுக்காய் காத்திருந்தாள்.
தன்னிடம் எப்போதாவது இந்த கேள்வியை மகள் கட்டாயம் கேட்பாள் என்ன சொல்வது என்று மனதில் முரண்டிக்கொண்டிருந்தவளுக்கு இப்போது தியாவிடம் என்ன பதில் கூறுவது என்று விடை தெரியவில்லை மகளை வலி நிறைந்த மனதோடு பார்த்துக்கொண்டிருந்தாள் மாதவி.
“ஏன்மா நான் உங்ககிட்ட கேட்கக்கூடாதது ஏதும் கேட்டுட்டேனா என்கிட்ட எதையாவது மறைக்குறீங்களா? என்னோட க்ளாஸ்மேட் தர்ஷினிக்கு இந்தியாவுல தாத்தா பாட்டி சித்தி சித்தப்பா எல்லாரும் இருக்காங்க எனக்கும் இந்தியாவுல நம்ம சொந்தம் இருக்கணும்ல நான் சின்னப் பொண்ணு கிடையாது என்கிட்ட உண்மையை சொல்லுங்கம்மா” என்று மாதவியின் கன்னத்தை பிடித்துக் கொண்டாள் தியா.
நிதர்சனத்தை கூற முடியாமல் முள்மேல் நிற்பது போல தவித்துக்கொண்டிருந்தாள் மாதவி.
“உன் கேள்விக்கு டாடி பதில் சொல்றேன் புஜ்ஜிமா” என்ற வெற்றியின் கரகரப்பு குரலை கேட்டதும்
“டா.டாடி நா.நான் சும்மா” என்று தியா தடுமாறினாள்.
கையை மட்டும் உயர்த்தி எதுவும் பேச வேணாம் என்று மகளை பேச தடுத்தவன் “உனக்கு நானும் மாதவியும் மட்டும்தான் உறவு வேற யாரும் சொந்தம் பந்தம் கிடையாது நாளைக்கு யுனிவர்சிட்டியில ஃபுட் டெக்னாலஜி கோர்ஸ் அட்மிஷன் போடப்போறோம் ரெண்டு பேரும் ரெடியா இருங்க” என்று இரும்புக்குண்டை முழுங்கியவன் போல பேசி முடித்து அவன் எடுக்க வந்த ஃபைலை கபோர்டிலிருந்து எடுத்துக்கொண்டு மகளை திரும்பிப்பார்க்காமல் சென்றுவிட்டான்.
“நீ என்கிட்ட கேட்ட கேள்விக்கு உன் டாடி பதில் சொல்லிட்டாருடா தியா எனக்கு சமையல்கட்டுல வேலை இருக்கு” என்று பெரும்மூச்சுடன் மகளின் தலையை வருடிச் சென்றாள் மாதவி.
“அப்போ எனக்கு தாத்தா பாட்டினு எல்லாரும் இருக்காங்க டாடி என்கிட்ட மறைக்குறாரு” என்று பட்டென மெத்தையிலிருந்து இறங்கி தந்தையின் கபோர்ட்டில் அப்பாவோட குடும்ப போட்டோ எதாவது இருக்கிறதாவென்று தேட ஆரம்பித்தாள். அவள் எதிர்பார்த்த ஒன்றும் அவள் கையில் கிடைக்கவில்லை.
அப்பா ஏன் அவங்க குடும்பத்தை வெறுக்கணும் என்ன காரணம இருக்குமென்று பதின்ம வயது பொண்ணுக்கு ஆயிரம் கேள்விகள் மண்டைக்குள் வண்டாய் குடைந்தது. நகத்தை கடித்து துப்பிக்கொண்டு
யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு எந்த விடையும் கிடைக்கவில்லை. சோர்ந்து போய் மெத்தையில் படுத்து உறங்கிவிட்டாள்.
மாலை எழுந்ததும் வெற்றிக்கு போன் போட்டு “டாடி எப்போ வருவீங்க நான் உங்ககிட்ட பேசணும்?” என்று படபடப்பாக பேசிய மகளிடம் “டாடிக்கு இம்பார்ட்டென்ட் ஆன்லைன் மீட்டிங் இருக்குடா நான் வர நேரம் ஆகும் நீ சாப்பிட்டு தூங்கு” மகள் பேசாமல் இருக்கவும் கண்ணை மூடித்திறந்தவன் “கண்டபடி மனசை போட்டு குழப்பிக்காதே நீ தேடறது எதுவும் உனக்கு இப்போது கிடைக்காது புஜ்ஜிமா” என்று அழுத்தமாய் கூறிவிட்டு போனை வைத்துவிட்டான்.
கடைசி நிமிடத்திலாவது தன்னை இந்தியாவுக்கு படிக்க அனுப்பி வைப்பானென்று எதிர்பாத்திருந்தவளுக்கு தோல்விதான் மிஞ்சியது. ‘நான் உங்க மேல கோபமா இருக்கேன் டாடி ஐ ஹேட் யூ’ மெத்தையில் புதைந்துக் கொண்டு அழுதாள் சிறு குழந்தை போல.
வெற்றி அன்றிரவு இரவு ஆபிஸிலிருந்து தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான். மாதவி அவனுக்காக ஹாலில் காத்திருந்தாள்.
“எனக்காக வெயிட் பண்ணவேணாம்னு சொல்லியிருக்கேன்ல மாதவி” என்றபடியே அவனது கால்கள் தன் அறைக்கு தான் சென்றது. உறங்கிக்கொண்டிருந்த தியாவின் பக்கம் சென்று உட்கார்ந்தவன் மகளின் நெற்றியில் முத்தமிட்டு குளிக்கச் சென்றுவிட்டான்.
அடுத்த நாள் காலையில் மகளுடன் மாதவியுடன் யூனிவர்சிட்டிக்குச் சென்று அட்மிஷன் போட்டு விட்டான் வெற்றி.
மகளுக்கு விருப்பம் இல்லாமல் அட்மிஷன் போட்டுவிட்டோமென்று அவன் மனம் சுணங்கினாலும் அவள் இந்தியா போககூடாது என்பதில் உறுதியாக இருந்தது. தியா வெற்றி மேல் கோபத்தில் அவனிடம் பேசவேயில்லை அன்று முழுவதும்.
“பை புஜ்ஜிமா” என்று அவன் மகள் முகம் பார்க்க தியாவோ கண்ணீரை துடைத்துக்கொண்டு அவன் முகத்தை பார்க்காமல் தலையை அசைத்தாள். வெற்றிக்கு இதயம் வலித்ததுதான் ஆனால் இந்தியாவுக்கு போனால் அவளுக்கு வரும் வலியைவிட இப்போது அவள் அழுவது அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. அழுதுக் கொண்டே தியா அறைக்குச் சென்றுவிட்டாள்.
“வெற்றி எல்லாமே என் பொண்ணோட விருப்பப்படித்தான் நடக்கும்னு சொல்லிட்டு படிப்பு விசயத்துல நீங்க பண்றது எனக்கு பிடிக்கல” என்றாள் முகம் சுளித்து மாதவி.
“உனக்கு இந்தியாவுக்கு போகணும்னு விருப்பம் இருந்தா சொல்லு நாளைக்கே ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணுறேன்”
“நான் இந்தியா போறேன்னு உன்கிட்ட சொன்னேனா?” என்று வெற்றியை முறைத்தாள்.
“தியாவை சமாதானப்படுத்தி சாப்பிட வை ப்ளீஸ்” என கதவு வரை சென்றுவிட்டு என்ன நினைத்தானோ தெரியவில்லை “சாரி உன்கிட்ட ஹார்ஷா பேசினதுக்கு அண்ட் அப்பா பொண்ணுக்கு இடையில வராதே” என்று அவளை முறைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
முதல் நாள் வெற்றிதான் தியாவை யூனிவர்சிட்டிக்கு அழைத்துச்சென்றான். மகளிடம் ஆயிரம் அறிவுரைகள் கூறியதும் “டாடி நான் எல்.கே.ஜி பொண்ணு கிடையாது. நான் மெச்சூர் ஆகிட்டேன்” என்று மெதுவாய் சிரித்தாள்.
“என் புஜ்ஜிமாவுக்கு என் மேல கோபமா?” என்று மகளின் முகம் தாங்கி கேட்டான் பாசக்கார தந்தை.
“கொஞ்சம் இருக்கு” என்று கண்ணை உருட்டினாள்.
அங்கே மரத்தடியில் போட்டிருந்த கல்பெஞ்சில் மகளை உட்கார வைத்து அவளது கையை பிடித்து நெஞ்சில் வைத்துக்கொண்டு “டாடி உனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் நீ என்ன கேட்டாலும் வாங்கிக்கொடுத்திருக்கேன்ல நீதான் என்னோட உயிர்னு உனக்கு தெரியும்ல. உன்னை விட்டு இந்த டாடியால எப்படி இருக்க முடியும் தங்கம்மா சொல்லு உன்னை விட்டு என்னால ஒரு நாள் இருக்க முடியாது உன்னை பார்க்காம எனக்கு தூக்கம் வராது எல்லா அப்பனும் பொண்ணுங்க பெரியவ ஆகிட்டா அவளை தனியா படுக்க வச்சிடுவாங்க ஆனா நா.நான் உன்னை தனியா விடலைடா எனக்கு என் மக எப்பவும் குழந்தைதான் உனக்காக அப்பா பிஸ்னஸை கொஞ்ச நாளுல டேக் ஓவர் பண்ணிட்டு இந்தியா கூட்டிட்டு போறேன் நீ இப்படி அப்பாகிட்ட பேசாம இருந்தினா அப்பாவால தாங்க முடியாது தங்கம்மா” என குரல் நடுங்கி பேசியவனுக்கு கண்கள் கலங்கியது.
தந்தை பேச பேச மகளுக்கும் கண்ணீர் வந்துவிட்டது. “டாடி நா.நான் சும்மா உங்க மேல கோபம் இருப்பது போல காட்டினேன் உங்ககிட்ட நான் கோவிச்சுக்குவேனா சொல்லுங்க… இந்தியா போக முடியலனு கொஞ்சம் மனசு வருத்தமா இருந்துச்சு அவ்ளோதான் இப்ப நீங்க என்னை இந்தியா கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டீங்களே” என்று வெற்றியை அணைத்துக்கொண்டாள்.
அன்று முதல் இருவரும் கொஞ்சிக்கொண்டனர். சமையல் பண்ணுகிறேன் என்ற பேரில் சமையல்கட்டை ஒரு வழி ஆக்கிவிடுவாள் தியா.
“அச்சோ உன்னை ஃபுட் டெக்னாலஜி படிக்க வச்சதுக்கு எனக்கு ரெட்டை வேலை பார்க்க வைக்குறடி” என்று மாதவியை புலம்ப வைத்துவிடுவாள் தியா.
தந்தையும் மகளும் பழையபடி கலகலப்பாக பேசிக்கொண்டனர்.
“தம்பி அப்பத்தாவை பார்க்கத்தான் வரலை அப்பா சீரியஸா இருக்காருடா வாடா உன்னை பார்க்கணும்னு ஆசைப்படுறாரு” என்றார் வெற்றிவேலின் அண்ணா வஜ்ரவேல் போனில் பலமுறை அழைத்துப்பார்த்தார்.
“அந்த ஆள் பண்ணுன காரியத்தாலதான் நான் பிறந்த மண்ணை விட்டு வந்து மலேசியாவுல கிடக்குறேன் உயிர் போன பிறகு சொல்லுங்க வந்து என் கடமையை முடிச்சிட்டு வந்துடறேன்” என்று அந்த பக்கம் பேசும் முன் போனை கத்தரித்து விட்டான் வெற்றி.
சென்னையில் சிமெண்ட் ஆலை, டிபார்ட்மெண்ட், நகைக்கடை என்று பல தொழில் நிறுவனங்கள் இருந்தாலும் அனைத்து நிறுவனங்களையும் கட்டி ஆளும் அருந்ததியின் கவனம் முழுவதும் காட்டிக்கொள்வது என்னவோ இவர்களின் முதன் முதல் ஆரம்பித்த தொழிலான மசாலா கம்பெனியில்தான்.
இன்று தனக்கு விருது வழங்கும் விழாவிற்கு தயாராகிக்கொண்டிருந்தாள் அருந்ததி. நிலா பிறை நெற்றியில் வில் போன்ற புருவத்தின் மத்தியில் சின்னதாய் மெருன் நிறப்பொட்டும் முகத்துக்கு எந்த வித ஒப்பனையும் இல்லாமலேயே அவளது முகம் விளக்கி வைத்த வெண்கலசிலைப்போல இருக்கும் அழகு பதுமை.
அவளுக்கு 38 வயது என்று சூடம் அடித்து சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். 30 வயது பெண் போல வேலையை இழுத்துப்போட்டு செய்பவள் வீட்டிற்கு வந்தாலும் ஆபிஸ் வேலை பார்க்க ஆரம்பித்துவிடுவாள். காலையில் சூரியனுக்கு முன்னே எழுந்து விடுவாள் அவளுக்கு யோகாசனம் செய்யவில்லையென்றால் அன்றைய பொழுது போகாது. கண்டிப்பு மிக்கவள் கம்பெனியில் அவள் கண்ணசைவில் பயந்து நடுங்கிவிடுவர். அவளுக்கு பிடிக்கவில்லையென்றால் அடுத்த நிமிடம் யாரும் அங்கே வேலை பார்க்க முடியாது.
தூக்கிப்போட்ட கொண்டையும் கழுத்தை மறைத்து ப்ளவுசும் காட்டன் சேலையில் கையில் ஹேன்ட் பேக்கை மாட்டிக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தாள் அருந்ததி.
ஹாலில் சோபாவில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த ஆதிகேசவனோ தன்னை நோக்கி மெல்லிய சிரிப்போடு வந்த தங்கையை கண்டு “உனக்காகத்தான்டா நான் காத்திருக்கேன்” என்றபடியே தன் பக்கம் வைத்திருந்த ஸ்டிக்கை எடுக்க தடுமாற “இருங்க அண்ணா” என்று ஸ்டிக்கை எடுத்து கேசவன் கையில் கொடுத்து அவர் எழுந்திருப்பதற்கு உதவி செய்தாள். பல வருடங்களுக்கு முன்பு நடந்த பெரிய ஆக்சிடன்டில் ஒரு கால் முழுவதும் நசுங்கி காலை எடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. கோமாவில் இந்தவர் கண்விழிக்க மூன்று மாதங்கள் ஆகியது.
இன்று அருந்ததிக்கு இளவயது தொழிலதிபர் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொள்ள அண்ணனும் தங்கையும் கிளம்பியவர்கள் மகன் இன்னும் வரவில்லையே என்று அருந்ததி மகன் ஆதித்யா அறையை நிமிர்ந்து பார்த்தனர்.
வீட்டில் வேலைபார்க்கும் அன்னக்கிளியோ கையில் கீரின் டீயுடன் வந்து நின்றாள்.
தன் மகனின் அறையை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே அன்னக்கிளி கொடுத்த கீரீன் டீயை வாங்கிக்குடித்தவள் மணிக்கட்டை திரும்பி பார்த்து மகனுக்கு போன் போட்டுவிட்டாள்.
“வந்துட்டேன்மா” என்று படிகளில் காற்றில் அடங்கா முடியை கையால் அடக்கிக் கொண்டு வேக எட்டுடன் இறங்கிவந்தான் அருந்ததியின் மகன் ஆதித்யா.
ஃபுட் டெக்னாலஜி டிகிரி பிஜி இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறான். யூஜி முடித்தவுடன் “அம்மாவுக்கு உதவியா கம்பெனியை உன் கையில எடுத்துக்கோ… அம்மா ஒருத்தியா நம்ம பிஸ்னஸை மேனேஜ் பண்ணுறாளே அவளுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடு” என்று தங்கைக்காக பரிந்துக் கொண்டு வந்தார் ஆதிகேசவன்.
அருந்ததியோ “அவன் பிஜி முடிச்சு கம்பெனிக்கு வரட்டும் இப்ப என்ன அவசரம் உன் தங்கச்சிக்கு வயசு ஆகிடுச்சு இனி கம்பெனியை பார்க்க முடியாதுனு நினைச்சிட்டியா அண்ணா?” என்று சிரிக்கவும்
“அச்சோ நான் அப்படி சொல்லலை அருந்ததிமா நீ ஒருத்தியா நம்ம பிஸ்னஸை கவனிக்குறியே நானும் பாதி முடம் ஆகி கிடக்கேன் உனக்கு உதவியா இருக்கும்னு தான்டா” என்று ஆதிகேசவன் குரல் கமறி வந்தது.
“மாமா நான் அடுத்த வருசம் என் படிப்பை முடிச்சு அம்மாகிட்ட ஆறே மாசத்துல பிஸ்னஸை கத்துக்கிட்டு அவங்களை வீட்ல இருக்க வச்சிடறேன் போதுமா?” என்றான் நமட்டுச்சிரிப்புடன்.
“இதோ இன்று அம்மாவுக்கு விருது வழங்குற விழாவுல நான் இல்லாமலா” என்று கார் சாவியை அருந்ததியிடமிருந்து வாங்கிக் விரலில் சுழட்டிக்கொண்டு காரில் ஏறினான்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு தொழிலதிபர் விருது வஜ்ரவேலுக்குத்தான் கிடைத்தது. இன்று விருதினை அருந்ததிக்கு கொடுப்பதற்காக அவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தனர்.
இளம் பெண் தொழிலதிபர் விருதினை அருந்ததிக்கு கொடுக்கிறோம் விருதினை கொடுக்க வஜ்ரவேலை மேடைக்கு அழைக்கிறோம் என்று மைக்கில் கூறவும்
அருந்ததி ஆதிகேசவனை ஒரு முறை விழிகள் கலங்க பார்க்க அவரோ “போமா” என்று கண்ணை அசைத்தார்.
ஆதித்யாவோ ஆதிகேசவன் பக்கம் குனிந்தவன் “மாமா இவர்தான் அம்மாவுக்கு விருது கொடுக்கணுமா? எப்பவும் அம்மாவை எங்க பார்த்தாலும் முறைப்போடு பார்த்துட்டு போயிடுவாரு எனக்கு இந்த ஆள் கையில அம்மா விருது வாங்கறது பிடிக்கவேயில்ல” என்று முகம் சுளித்தான்.
“நாம அப்படி சொல்லக்கூடாதுப்பா இத்தனை வருசமா வஜ்ரவேல்தான் தொழலதிபர் விருது வாங்கிட்டு இருந்தாரு இப்போ உங்க அம்மாவுக்கு கிடைக்கவும் அம்மா மேல கோபம்” என்றார் மிதப்பாக.
“அவருக்கு பொறாமை கண்ணுல தெரியுது” என்றான் எரிச்சலாக ஆதித்யா.
ஒற்றை முந்தானையை கையில் பிடித்துக்கொண்டு மேடை ஏறியவளை கண்கள் தெறிந்து விழும் அளவிற்கு முறைத்தார் வஜ்ரவேல். மாறாக அருந்ததியோ முகத்தில் மெல்லிய புன்னகையுடன் வஜ்ரவேல் அருகே சென்றாள்.
விருதை வாங்கிய வஜ்ரவேலோ “வாழ்த்துகள் மேடம்” என்று அழுத்தி கூறி விருதை அருந்ததியின் கையில் கொடுத்தார்.
“தேங்க்ஸ் அண்ணா உங்க கையால இந்த விருது வாங்கறது எனக்கு பெருமையா இருக்கு” என்றவளுக்கு கண்கள் கலங்கியதுதான் ஆனாலும் வெளியே தெரியாதவாறு சமாளித்து சிரித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தாள்.
விருதை கொடுத்து முடித்த அடுத்த நிமிடம் மேடையை விட்டு இறங்கிவிட்டார்.
விழா முடித்து சாப்பிட்டு முடித்து காரில் வரும்போது “அம்மா அந்த ஆளும் முகரையும் பாரு அவனை அப்படியே கன்னத்துல ஒன்னுவிடணும்னு தோணுச்சு உங்களுக்கு விருது கிடைச்சிருச்சுனு அவருக்கு பொறாமை கண்ணுல தாண்டவம் ஆடுது” என்று பொங்கினான் ஆதித்யா.
“பெரியவங்கள ஆளு கீளுனு சொல்லக்கூடாது ராஜா” என்று மகனை கடிந்துக் கொண்டாள் அருந்ததி.
“எனக்கு வஜ்ரவேல் அங்கிளை பிடிக்கலமா” என்று சலிப்பாக காரை ஓட்டினான்.
நாட்கள் பறந்தோடியது வெற்றிவேல் இந்தியா வரும் நேரம் வந்துவிட்டது.
வெற்றிவேலின் தந்தை ஞானவேல் இறைவனடி சேர்ந்து விட்டார் என்று நள்ளிரவு வெற்றிக்கு போன் வந்தது வஜ்ரவேலிடமிருந்து. அவனது நல்லநேரமோ என்னவோ ஃப்ளைட் டிக்கெட் இருந்தது குடும்பத்துடன் கிளம்பிவிட்டான்.