3. வாடி ராசாத்தி
வாடி ராசாத்தி – 3
நிலப் பத்திரவு வேலை விஷயமாக பத்திர பதிவு அலுவலகத்திற்கு வந்த கார்த்திக்கை குழப்பமான முகத்துடன் எதிர்கொண்டான் சற்குணம்.
“என்னடா ஏதாவது பிரச்சினையா….?” தெரிந்தே கேட்டான் கார்த்திக்.
“பிரச்சனை வரணும்னு செஞ்ச வேலை எப்படிடா பிரச்சனையை கொண்டு வராம இருக்கும்? உன் மாமா வந்து இருக்கார்….”
“இங்கேயே வந்துட்டாரா மாமா….? சூப்பர் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு….” கொஞ்சம் கூட கவலை இல்லாமல் பேசுபவனை வழக்கம் போல், இவன் எதுக்கும் அலட்டிக்க மாட்டானே என்று மனதில் மெச்சி கொண்டு பின் தொடர்ந்தான் சற்குணம்.
அவன் உள்ளே நடக்க, இவன் விற்கும் போகும் நிலத்தை வாங்குபவருடன் அவனின் சொந்த தாய் மாமன் செல்வராஜும் வந்தார். எந்த பிரச்சனையும் அவர்களுக்குள் இல்லாதது போல்,
“வாங்க மாமா, நல்லா இருக்கீங்களா…? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு….” என்றான் கார்த்திக்.
கார்த்திக்கின் அம்மா இறந்த பின் இரண்டு குடும்பங்களுக்கும் பேச்சு வார்த்தை கிடையாது. பொது விழாக்களில் பார்த்துக் கொள்வது தான். அம்மா வழி தாத்தா சொக்கலிங்கம் மற்றும் பாட்டி அம்சவல்லியும் எண்பது வயதை தொட்டு நலமுடன் இருக்கிறார்கள்.
கேபியின் குடும்பத்தை போல மிகவும் வசதியானவர்கள் கிடையாது. நடுத்தரத்திற்கு சற்று மேலே என்று சொல்லலாம். செல்வராஜ் அரிசி ஆலை வைத்து இருக்கிறார். கடந்த வருடங்களில், அவரின் அம்மா அப்பா இருவருக்கும் ஆப்ரேஷன் செய்து உடல்நிலையை சீர் செய்ய வேண்டி வந்ததில் இப்போது சற்று பணமுடை ஆகி விட்டது அவருக்கு.
தங்கை மகனை கண்டால் செல்வராஜிற்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது போன வருடம் வரை. ஆனால் கடந்த ஒரு வருடமாக அவன் நடந்து கொள்ளும் விதத்தில் கொஞ்சம் எரிச்சல் அடைந்து இருந்தார்.
“எதுக்கு என் நிலத்தை விற்க நான் விலை பேசுற பார்ட்டிக்கு எல்லாம் நீ வேற இடம் காட்டி மாத்தி விடுற….?” நேரடியாக மருமகனிடம் கோபமாக கேட்டார் செல்வராஜ்.
“உங்களுக்கே காரணம் தெரியும் மாமா….” அமைதியாக சொன்னான் கார்த்திக்.
“நீ நினைக்கிறது ஒருநாளும் நடக்காது…. உனக்கு அந்த இடத்தை விற்க நாங்க ரெடியா இல்லை….” என்றார் அழுத்தி செல்வராஜ். நாங்க என்பதில் அவர் கொடுத்த அழுத்தம் யாரை குறிக்கிறது என்று புரிய, உள்ளுக்குள் கோபம் கனன்றது கார்த்திக்கிற்கு.
“நீங்க எல்லாரும் என்ன வேணா நினைச்சுக்கங்க மாமா, ஆனா எனக்கு அந்த இடத்தை வாங்கிக்க மட்டுமில்லை விற்கவும் வேண்டாம். அது அப்படியே இருந்தா போதும்.” என்றான் கோபத்தை கட்டுப்படுத்தி. அவனும் எல்லாரும் என்ற வார்த்தைக்கு நன்றாக அழுத்தம் கொடுத்தான்.
“என் இடம், நான் விற்பேன்…. நீ ஏன் எங்க விஷயத்தில தலையிடுற….? என் பார்ட்டி எல்லாரையும் திசை திருப்பி விடுற….?”
“என்கிட்ட வந்து கேட்கிறவங்க கிட்ட நான் உண்மையை மட்டும் தான் சொல்றேன் மாமா. அஞ்சு ஏக்கர் நிலத்துக்கு நடுவில உங்க பேரிலும் இரண்டு ஏக்கர்ல இடம் இருக்காமே…. அதை விற்க ஒத்துழைப்பு கொடுப்பீங்களா பின்னாடினு கேட்கிறாங்க…. எத்தனை வருஷம் ஆனாலும் அது எங்க அம்மா வழி சொத்து எனக்கு, அதை விற்க எனக்கு விருப்பமில்லைனு சொன்னேன்….” என்றான் கூலாக.
“நீ என்ன நினைச்சு இதெல்லாம் செய்றேனு எனக்கு தெரியும்! ஒரு நாளும் அது நடக்காது…. என் தங்கச்சியை கட்டி கொடுத்து அவளை நாங்க தொலைச்சுது போதும்…. அதுக்கு மேல என்….”
அதற்கு மேல் அவரை பேசவிடாமல், “மாமா…..” என்றான் அழுத்தமாக. அவர் பேச நினைத்த வார்த்தைகள் அவனை புரட்டி போட பார்த்தது. முகம் ஜிவு ஜிவு என்றானது. செல்வராஜூம் தான் பேச நினைத்ததை நினைத்து அதிர்ந்து போனார்.
அவனுக்கு கோபம் வந்ததை நிலம் வாங்க வந்தவர் உணர்ந்து, “கேபி சார், பொறுமை…. பொறுமையா இருங்க….” என்றார். செல்வராஜும் அதற்கு மேல் அங்கு நிற்காமல் வேகமாக கிளம்பி விட்டார்.
செல்லும் அவருக்கு மனம் உலைக்களமாக கொதித்தது. அவரின் செல்ல தங்கை இப்போது இல்லையே…. அவர்கள் வீட்டின் சந்தோஷம், நிம்மதி அனைத்தும் அவளோடு போய் விட்டதே…. சொக்கலிங்கம் மனைவி மீது இருந்த பிரியத்தில் பெண் குழந்தை பிறந்ததும், மனைவியின் பெயர் வருமாறு அமிர்தவல்லி என்று பெயரிட்டார். அவ்வளவு அழகு அவள். அவளை ஒரு திருமணத்தில் கண்டு, கண்டவுடன் பிடித்து விட்டதாக ஞானவேல் நேரடியாக வந்து பெண் கேட்டார். இருவருக்கும் பதினோரு வயது வித்தியாசம் இருக்கிறது என்று செல்வராஜ் பெற்றவர்களிடம் மறுப்பு தெரிவித்தார். ஜாதகத்தில் சில குறைகள் இருந்ததால் அமிர்தவல்லிக்கும் இருபத்து நான்கு வயதாகி இருந்தது. முப்பது வயதாக போகிறது என்றாலும் தங்கைக்கு திருமணம் செய்த பின் தான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று செல்வராஜும் இருந்தார். தொழிலில் கவனமாக இருந்ததால் தான் திருமணம் பற்றி தான் யோசிக்கவில்லை, இப்போது உங்கள் பெண்ணை தவிர வேறு யாரையும் திருமணம் செய்யும் எண்ணமில்லை, ஜாதகம் எல்லாம் பார்க்க வேண்டாம் என்றெல்லாம் கூறி சொக்கலிங்கம் மனதை ஞானவேல் கலைக்க, அவர்கள் திருமணம் நடந்தேறியது.
அதன் பின் ஐந்தே வருடங்கள் மட்டுமே வாழ்ந்த அம்ரிதவல்லி தற்கொலை செய்து கொண்டார். ஏன், என்ன பிரச்சனை என்று யாருக்கும் தெரியவில்லை. திருமணம் ஆகி வாழ்ந்த ஐந்து வருடங்களில் தாய் வீட்டிற்கு வந்து பெரிய பிரச்சனை என்று எதுவும் சொல்லியதில்லை அவர். அதனால் யாருக்கும் எதுவும் புரியவில்லை. கார்த்திக்கை ஜெயந்தி இவர்களிடம் விடாமல் தானே வைத்து கொள்ள, நாளிடைவில் தொடர்பு மொத்தமாக அறுந்து விட்டது. முதல் சில வருடங்கள் மிகவும் சோர்ந்து இருந்த ஞானவேல் பின் தன்னை தேற்றிக்கொண்டு மீண்டும் தொழிலில் மூழ்கி விட்டார். வேறு திருமணமென்றே பேச்சே கூடாது என்று சொல்லி விட்டார்.
போகும் மாமனை தன் ஏக்கம் சுமந்த விழிகளால் கண்டான் கார்த்திக். அவனுக்கு அமிர்தவல்லி இருந்த போது பெரிதாக சிறுவயது நியாபகங்கள் இல்லை. ஆனால் அவர் இறந்த பின் ஏன் மாமா நம்மை பார்க்க வரவில்லை, பைக்கில் அழைத்து செல்லவில்லை என்று தோன்றும். இருவரும் ஒரே ஊர் என்கையில், தங்கையின் மீது அதீத பாசம் வைத்திருந்த செல்வராஜ் அடிக்கடி வந்து தங்கையை பார்த்து விட்டு போவார். அப்படி வரும் போது கார்த்திக்கை பைக்கில் வைத்து இரண்டு ரவுண்ட் அடிக்காமல் செல்லவே மாட்டார். அம்மாவும் இல்லை, மாமாவையும் காணவில்லை என்று கார்த்திக் ஏங்கியது தான் அவன் நினைவில் என்றும் இருக்கும்.
செல்வராஜுற்கு இரண்டு பிள்ளைகள். அமிர்தவல்லி திருமணம் முடிந்து சில மாதங்களில் அவருக்கும் வாசுகிக்கும் திருமணம் நடந்தது. கார்த்திக்கிற்கும் அவர் பிள்ளை சம்பத்திற்கும் சில மாதங்கள் தான் வித்தியாசம். அதன் பின் அம்ரிதவல்லி இறந்து சில மாதங்களில் பிறந்த தன் பெண்ணிற்கு தன் தங்கையின் பெயரையே அம்ரிதா என்று வைத்து விட்டார். அவள் தான் இப்போது அவர்கள் வீட்டின் மகாராணி. அண்ணன் சம்பத் கூட அவளிடம் அடங்கி தான் போவான்.
இப்போது பணமுடை என்று அவர் அல்லல்படுவது தெரிந்து தான் உதவுவதாக ஒரு வருடம் முன்பே சற்குணம் மூலம் சொல்லி அனுப்பினான் கார்த்திக். ஆனால் தனக்கு யார் உதவியும் தேவையில்லை என்று சொல்லி விட்டார் செல்வராஜ். அவரின் நிலத்தை விற்க ஏற்பாடு செய்ய, அதற்கு அவனால் முடிந்த விதத்தில் எல்லாம் தடைகள் கொண்டு வந்தான். ஒரு முறை இவனை பொருட்படுத்தாமல் வெளியூர் ஆள் ஒருவரை அவர் அணுக, இவன் நேரடியாக வாங்க வந்தவரை சந்தித்து, இவன் பெயரில் இருக்கும் இடத்தை எக்காலத்திலும் நான் விற்க மாட்டேன், அதற்கு சம்மதம் என்றால் மற்ற இடத்தை வாங்கி கொள்ளுங்கள் என்றான். இவனின் பேச்சில், நீ அந்த இடத்தை வாங்கினால் உன்னை சும்மா விட மாட்டேன் என்ற மறைமுக எச்சரிக்கையை புரிந்துகொண்ட மனிதர் செல்வராஜிடம், முதல்ல குடும்ப பிரச்சனையை சரி பண்ணுங்க சார் என்று சொல்லி விட்டு ஓடியே விட்டார்.
இப்போது கோபமாக போகும் மாமனை முகத்தில் உணர்வில்லாமல் பார்த்தான் கேபி. சொக்கலிங்கம் தாத்தா கேபி மற்றும் அம்ரிதாவின் பெயரில் அவர்களின் சிறு வயதிலேயே ஒரு நிலம் வாங்கி போட்டு இருந்தார். அப்போது செல்வராஜிற்கு இந்த விஷயம் தெரியாது. தெரிந்து இருந்தால் தடுத்து இருப்பார். இப்போது தங்கை மகனிடம் சென்று நிற்க விருப்பம் இல்லாமல் சுத்தி இருக்க நிலங்களை மட்டும் விற்க பார்க்கிறார். அவரை ஒரு வழி செய்கிறான் கேபி.
“என்ன மாப்பிள்ளை, உங்க மாமா கோபமா போய்ட்டார்?” சற்குணம் கொஞ்சம் கவலையாக கேட்க,
“ஆமா, ரெண்டு நாள் முன்னாடி வரை அவர் நிலத்தை வாங்க போறவரா இருந்த ஆள்கிட்டே நம்ம நிலத்தை வித்தா அவருக்கு கோபம் வராம குளு குளுனா இருக்கும்?”
“ம்ம்… அதெல்லாம் சரி, ஆனா நீ விற்கிற இந்த இடம் நல்ல இடம்…. அந்த ஆளை உங்க மாமா இடம் வாங்க விடாம செஞ்சு, நம்ம பக்கம் இழுக்கணும்னு இந்த இடத்தை போய் கொடுக்குறியே….” ஆதங்கமாக வினவினான் சற்குணம்.
அவனிடம், “லாபம் இல்லாம நான் ஒரு காரியமும் செய்றதில்லைனு இத்தனை வருஷம் என்கூட இருந்தும் உனக்கு புரியலையே….” என்றான் கேபி சிரித்தபடி.
அவனின் அமைதியான சிரிப்பில் இருந்த வசீகரம் மட்டும் தீவிரத்தில் கவரப்பட்ட சற்குணம்,
“இந்த பாண்டியருக்கு அப்படி என்ன தான் அந்த பாப்பா மேல ஆசையோ….? உனக்கு பொண்ணு கொடுக்க அவ்ளோ போட்டி இருக்கு…. நீ என்னனா கட்டினா அவளை தான் கட்டுவேன்னு நிற்கிறே….” என்றான் அலுப்பாக.
சற்குணத்தின் பேச்சால் அவனின் எண்ணம் அந்த பாப்பாவிடம் தாவியது. மனதில், அவளின் நினைப்பால் ஏற்படும் உற்சாகத்தை உணர்ந்தபடி,
“ஆசை எல்லாம் இல்லை, சின்ன வயசுல என்னை கட்டிக்க மாட்டேன்னு திமிரா சொல்லுவா, இப்போவும் என்னை அதே திமிரோட தான் பார்க்கிறா…. அந்த திமிரை அடக்க வேண்டாம்….? அதுக்கு தான்…. இந்த பாண்டி யாருன்னு அவளுக்கு காட்டுறேன்….!” அவர்கள் குடும்பத்தில் பேச்சு வார்த்தை இல்லை என்றாலும், சொந்தம் என்று சிறியவர்களுக்கு தெரியும். அவர்கள் பேசி கொள்வார்கள். அவனை சிறுவயதில் எங்கு பார்த்தாலும் அவள் பண்டி என்று ஆரம்பித்து பாண்டி என்று தான் வம்பு இழுப்பாள்.
“ஓ! இதுக்கெல்லாம் யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா….நம்பிட்டேன் டா….” ஓட்டினான் கேபி.
“டேய், அந்த சில்மிஷத்தோட சேட்டையை எப்படி அடக்கிறேன்னு மட்டும் பாரு…. வா இந்த லாண்ட் ரிஜிஸ்டர் வேலையை முடிச்சிட்டு கிளம்பலாம். அவக் கிட்டே ஒரு கணக்கு தீர்க்கணும் எனக்கு….” என்றான்.
“டேய், பார்க்கணும்னு நேரா சொல்றா….”
“அப்படி எல்லாம் நீயா நினைச்சுக்கிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது….” என்றவனின் வாய் மட்டும் தான் திமிராக பேசியது, மனமோ ஏக்கமாக, ஒரு வாரம் ஆச்சு அவளை பார்த்து, சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடி பார்த்தது என்று சரியாக கணக்கு சொன்னது!
கணக்கு தீர்க்கிறேன் என்ற சாக்கோடு அவளை பார்க்க செல்ல அவன் இருக்க, நிஜமாகவே அவன் கணக்கை மொத்தமாக தீர்த்து விடும் கொலை வெறியோடு அவனை காண வந்து கொண்டிருந்தாள் அம்ரிதா என்கிற அம்மு. பாண்டியனின் சில்மிஷம். அவள் அப்பாவின் வேதனையை கண்டு பொங்கி எழுந்து இருந்தாள்.
பாண்டியனையும் அவன் ராஜ்ஜியத்தையும் ஆட்டி வைப்பாளா? அல்லது அவனின் அடாவடியில் அடங்கி விடுவாளா?