மகிழ்மதி கமிஷனர் அலுவலகத்தில், மேசை மேல் சிதறிக் கிடக்கும் கோப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக புரட்டி ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
அறையில் இருக்கும் மந்தமான விளக்கின் கீழ் அவளது கண்கள் தீவிரமாக முக்கிய தலைவர்கள் கிடைக்கின்றதா என்று தேடியது. அப்போது திடீரென்று அவளது அலைபேசி சத்தமிட்டது.
‘யாரடா இந்த நேரத்தில்?’ என்று சலிப்புடன் ஒரு நொடி யோசித்தவள், திரையில் மின்னும் எண்ணைப் பார்த்ததும் கண்கள் ஆச்சரியத்துடன் பெரிதானது.
ஒரு நிமிடம் தொலைபேசியின் திரையில் இருந்து பார்வையை எடுக்காமல் அப்படியே அசையாமல் இருந்தாள். பின் அழுத்திக் காதில் வைத்தவள்,
“சொல்லுங்கப்பா…” என்றாள்.
அந்தக் குரல் கேட்டவுடனே, தொலைபேசியின் மறுபக்கத்தில் இருந்த சிங்காரவேலனுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் கவலையும் சேர்ந்து மனதை உலுக்கியது.
“என்னம்மா… ஒரு வாரமா உன் கிட்ட இருந்து ஒரு கால் வரல்ல நான் ரொம்ப பயந்துட்டேன் உங்க அண்ணா கிட்ட ‘மகிழ்மதிய காணலப்பா, கால் பண்ணலன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன்
என் மனசே அமைதியில்லாம போயிட்டுச்சு இப்போதான் அவன் என்னோட தொல்லை தாங்க முடியாம சென்னைக்கு புறப்பட்டு உன்னைத் தேடி வர்றான்
ஆனா, ஏன்மா என்ன பிரச்சனைமா உடம்புக்கு ஏதும் முடியலையா இல்லன்னா அப்பா மேல எதுவும் கோவமா.. நீ அப்பா கூட பேசாம இருக்க மாட்டியே..!” என்று கூறியவரது உள்ளம் படபடத்தது.
மகிழ்மதி தந்தையின் அன்பில் உருகிப் போனவள்,
“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா நான் நல்லா தான் இருக்கேன் வேலை ரொம்ப அதிகமா இருக்கு அதனால்தான் கால் பண்ண முடியல அதோட என்னோட போனும் மிஸ் ஆயிடுச்சு… அதனால தான் கால் பண்ண முடியலப்பா வேற ஒன்றும் இல்லை நீங்க சும்மா போட்டு கண்டதெல்லாம் யோசிச்சு உடம்ப கெடுத்துக்காதீங்க..” என்றாள்.
“என்னம்மா இதெல்லாம் ஒரு காரணமா? உனக்கு அப்பா மேல எதுவும் கோவமா? சொல்லு என்ன பிரச்சனையா இருந்தாலும் நீ அப்பாவோட மட்டும் பேசாம இருந்துடாத உன்ன பாக்காம பேசாம எனக்கு உயிரே என்ன விட்டு போன மாதிரி இருக்கு எதுக்குடா இந்த வேலை, நாட்டுக்காக சேவை செஞ்சதெல்லாம் போதும்
இப்படி இரவும் பகலும் வேலை செய்து உன்னோட உடம்ப கெடுத்துக்காத. நீ நாட்டுக்கு நல்ல பிள்ளையா இருக்கத் தேவையில்லை எனக்கு என் மகளா மட்டும் நீ இருந்தா அதுவே போதும்.” என்று இடைவிடாமல் தனது பாச மழையை பொழிந்து கொண்டிருந்த சிங்காரவேலனைப் பார்க்க மகிழ்மதிக்கு பரிதாபமாக இருந்தது.
அதோடு அவரின் அந்தப் பிள்ளைத்தனமான பாசக் குரலைக் கேட்ட மகிழ்மதி முகத்தில் சிறு புன்னகை தவழ்ந்தது.
“அச்சோ அப்பா! சின்ன புள்ள மாதிரி புலம்பாதீங்க இன்னும் மூணு நாள்ல நானே உங்கள பாக்க வருவேன் குற்றவாளியை கண்டுபிடிச்சிட்டோம் கூடிய சீக்கிரம் இந்த கேஸ் முடிஞ்சிடும்…” என்றாள்.
“அப்படியா? அவன் யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?”
“இல்லப்பா இன்னும் தேடிக்கிட்டே இருக்கேன் ஆனா முக்கியமான தடயங்கள் கிடைச்சிருக்கு அத வச்சு எப்படியும் அவனை பிடிச்சிடுவோம்..”
“அது என்ன தடயம்மா..?”
“சாரிப்பா அதெல்லாம் கேஸ் சீக்ரெட் ப்ளீஸ் அதை மட்டும் கேட்காதீங்க..”
“சரி… பரவால்லம்மா கேஸ முடிச்சுட்டு பத்திரமா ஊருக்கு வந்து சேரணும்உங்க அண்ணன் இப்போ வர்றான் அவன் உன்னைப் பார்த்துட்டு போகட்டும்.”
“இல்லப்பா, வேணாம். அவன் வந்தா என்ன வேலை செய்ய விடமாட்டான். ஒரே தொல்லை தான் கேஸ் விஷயமா நான் வெளிய கிளம்பிப் போகப் போறேன் நான் எங்க இருப்பேன்னு எனக்கே தெரியாது ப்ளீஸ்பா அவன கூப்பிட்ட எடுத்துடுங்க..”
அதற்கு சிங்காரவேலன் சத்தமாகச் சிரித்துக்கொண்டு,
“சரி… மூணு நாள்ல நீ வரலன்னா நான் உன்ன கூட்டி வர சொல்லி அவன அனுப்பிடுவேன்..”
“அந்த விக்ரம் பயல வச்சு, ஒரே எனக்கு பூச்சாண்டி காட்டுவது தான் உங்களுக்கு வேலை..”
‘ஆனா நீ பண்ற சேட்டைக்கு உனக்கு அவன்தான் சரி,” என்று வெளிப்படையாகக் கூறிச் சிரித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
துண்டித்த பிறகு, சில நொடிகள் கையில் அலைபேசியை பார்த்தபடி மகிழ்மதியின் முகம் இரும்பாக இறுகிப் போனது.
மகிழ்மதி காலையிலேயே அந்த “வி.எம். டிரேடர்ஸ்” எனும் பெயர்பலகை உயரமாக தொங்கியிருக்கும் பேரரண்மனை போன்று காட்சியளிக்கும் கட்டிடத்தின் முன் வந்து நின்றாள்.
அவள் முகத்தில் கருப்பு நிற மாஸ்க், கண்களில் பதட்டம் மறைத்த உறுதியின் ஒளி. கட்டிடத்தின் எதிரே இருந்த பழைய டீக்கடையின் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தவளாக, கையில் டீக் கப் வைத்தபடியே, அங்கு நடப்பவை அனைத்தையும் கூர்மையாகக் கவனித்தாள்.
அந்தக் கட்டிடம் சும்மா ஒரு அலுவலகம் அல்ல. புறத்தில் எளிமையாக தோன்றினாலும், உள்ளே ஒரு ரகசிய உலகம் சுழன்று கொண்டிருந்தது.
அதிகாலையிலேயே அங்கு ஊழியர்கள் வரிசையாக சீருடை அணிந்து உள்ளே சென்றனர். அந்த கூட்டத்தோடு சேர்ந்து பல பெரிய லாரிகள் தொடர்ந்து கட்டிடத்திற்குள் புகுந்து கொண்டிருந்தன.
அவற்றில் ஏற்றியிருந்த பொருட்களைப் பார்த்தால் மருந்துப் பெட்டிகள் போலத் தோன்றினாலும், மகிழ்மதியின் உள்ளுணர்வு ‘இது சாதாரண பொருட்களல்ல, பின்னால் ஒரு மிகப்பெரிய குற்ற வலையாகத்தான் இருக்கும்..’ என்று கூறிக் கொண்டிருந்தது.
அவள் சந்தேகம் மேலும் பெருக, அந்த லாரிகளில் ஒன்றின் பின்னால் தொலைவிலிருந்து அவள் பின்தொடர்ந்தாள்.
நகரின் சாலைகள் குறைந்து, காட்டு வழியாக வளைந்த வளைந்த சாலையில் சென்ற அந்த லாரிகள் இறுதியில் ஒரு மறைந்த குடோனில் நிறுத்தப்பட்டன.
மரங்களின் நடுவே மறைந்திருந்த அந்த இடம், வெளியில் இருந்து எவராலும் எளிதில் கண்டு பிடிக்க முடியாதது.
மரங்களின் நிழலில் ஒளிந்து கொண்ட மகிழ்மதி, தனது கைப்பேசியை எடுத்து புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினாள்.
லாரி டிரைவர்கள் சில புகைப்படங்களை கையில் வைத்துக் கொண்டு, கதவின் முன் இருந்த ஒருவரிடம் ஒப்படைத்ததை அவள் தெளிவாகப் பார்த்தாள்.
சிலவேளை அந்தப் புகைப்படங்களில் இருப்பது கடத்தி இருக்கும் பெண்களின் புகைப்படமாக இருக்கலாம் ஆனால் மகிழ்மதி தொலைவில் இருப்பதால் அது முழுமையாக விளங்கவில்லை.
“இவர்கள் தான் அந்த கடத்தல் கும்பலா..? ஆனால் எங்கிருந்து பெண்களை கடத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள்..?” என்று உள்ளத்தில் பெரும் அதிர்ச்சியுடன் ஒரு கேள்வி எழுந்தது.
அந்தக் காட்சிகள் ஒவ்வொன்றையும் அவள் புகைப்படமாகத் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்துக் கொண்டாள்.
லாரிகளின் எண்கள், டிரைவர்களின் செயல்கள், அந்த இடத்தின் அமைப்பு எதையும் தவற விடவில்லை. பின்னர், அந்த லாரிகள் மீண்டும் புறப்பட்டு நகரை நோக்கிச் செல்ல, மகிழ்மதி மீண்டும் அமைதியாக பின்தொடர்ந்தாள்.
இந்த முறை அவள் பார்த்த காட்சி, அவளது நரம்புகளையே அதிரவைத்தது. அந்த லாரிகள் நேராக துறைமுகம் சென்றன.
அங்கு, ஒவ்வொரு நீளமான பெட்டிகளையும் இறக்கி, ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் ஏற்றினர். அந்த பெட்டிகளைப் பார்த்தால் சாதாரணமானதாகத் தெரியவில்லை; பத்து பன்னிரண்டு பெட்டிகள் ஏற்றப்பட்டதும் அந்தப் படகுகள் வேகமாக புறப்பட்டன.
மகிழ்மதியின் மனம் துடிக்கத் தொடங்கியது. ‘இவைகளை நிறுத்தாமல் விட்டால் இன்னும் பல பெண்கள் உயிருடன் திரும்ப முடியாது..’ என்று மனதினுள் எண்ணியவள், பாய்ந்து அருகில் இருந்த துறைமுக காவலர்களிடம் ஓடினாள்
“அந்த படகை நிறுத்துங்க! அதில சட்ட விரோதமான பொருட்களை ஏற்றிச் செல்றாங்க ப்ளீஸ் நிறுத்துங்க..” என்று சத்தமாகக் கூறினாள்.
ஆனால் காவலரோ அதற்கு எந்த ஒரு எதிர் வினையையும் காட்டவில்லை.
மாறாக மகிழ்மதியைப் பார்த்து,
“யார் நீ..? யாரைக் கேட்டு உள்ள வந்த..? இது என்ன உங்க அப்பன் வீடா நீ நினைச்சதும் ஓடுற போட்ட நிப்பாட்டுறதுக்கு..?” என்று அந்த போலீஸ் அதிகாரி மகிழ்மதியின் மீது எரிந்து விழுந்தார்.
முகத்தில் மாஸ்க் இருந்ததால், அவளை அவர் அடையாளம் காணவில்லை. அதேசமயம், அவர் பேசும் விதத்தில் மகிழ்மதிக்கு உடனே புரிந்து விட்டது.
இவனும் அந்தக் கும்பலின் கைக்கூலிதான் என்று. அந்தக் கணம் அவள் உள்ளம் துவண்டது. தனியே நின்று மடத்தனமாக இவர்களிடம் மாட்டிக் கொள்வதை விட தனது அடையாளத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், அதோடு கண் முன்னே தவறு நடக்கும் போது எதையும் செய்ய முடியாத அவலத்தில் சிக்கித் தவித்து போனாள்.
பின்பு அங்கிருந்து நகர்ந்து மறைந்திருந்து பார்க்க அந்த ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு ஒரு பெரிய கப்பலின் அருகில் போய் நின்றது.
அந்தப் படகில் இருந்த பெட்டிகள் பெரிய மலை அளவு உயரம் இருந்த அந்தக் கப்பலுக்கு கைமாறப்பட்டது.
உடனே அதையும் புகைப்படமாக தனது தொலைபேசியில் சேமித்து வைத்துவள், தனது கையில் இருந்த புகைப்படங்களை உடனடியாக அசிஸ்டன்ட் கமிஷனர் ரகுவரனுக்கு அனுப்பி வைத்தாள்.
ஆனால், அங்கேயே அவளுக்குத் தெரியாமல் ஒரு கருப்பு நிறக் கார் சிறிது தூரத்தில் மறைவாக நின்றிருந்து, அவளது அங்க அசைவுகள் ஒவ்வொன்றையும் மிகக் கூர்மையாகக் கொலை வெறியுடன் கவனித்துக் கொண்டிருந்தது அந்த இரு செந்நிறவிழிகள்