குளியல் அறைக்குள் நுழைந்த நொடி முதல் தற்போது வரை ஷவரைத் திறந்து விட்டு ஏதேதோ சிந்தனைகளில் ஆழ்ந்து போயிருந்தவள் திடீரென குளியலறைக் கதவு வேகமாக தட்டப்படும் சத்தத்தில் அதிர்ந்து துவாலையை எடுத்து தன் உடலில் அவசர அவசரமாக சுற்றி விட்டு கதவைத் திறந்தாள்.
வெளியே அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் குரு.
“எ.. என்ன என்னாச்சு..?”
“நீ உள்ள போய் ரெண்டு மணி நேரம் ஆகுது.. இவ்வளவு நேரமா என்ன பண்ணிட்டு இருக்க அபி..? எத்தனை தடவைதான் கதவைத் தட்டுறது..?” என கிட்டத்தட்ட அவன் கோபத்தில் கத்த,
அவனுடைய கோபத்தைக் கூட உணராமல் உறைந்து போய் நின்று விட்டாள் அவள்.
‘என்னது நான் உள்ள வந்து ரெண்டு மணி நேரம் ஆச்சா..? இவ்வளவு நேரமா தனியா நின்னு யோசிச்சுக்கிட்டு இருந்திருக்கேனா..?’
தன் செயலை நினைத்து அவளே அதிர்ந்து போனாள்.
நொடியில் விழிகள் கலங்கிப் போயின.
“என்னாச்சு அபர்ணா..?” என அவன் கேட்டதும் அவளுக்கோ அபர்ணா என்ற அவனுடைய அழைப்பு கசந்து வழிந்தது.
“தயவு செஞ்சு என்னை அபர்ணான்னு கூப்பிடாதீங்க.. இவ்வளவு நாளா அபின்னுதானே கூப்பிட்டீங்க..? இப்போ திடீர்னு அபர்ணான்னு ஏன் கூப்பிடுறீங்க..? எ.. எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை குரு… நீங்க என்ன விட்டுத் தள்ளிப் போற மாதிரியே இருக்கு..
எ.. என்னால தாங்க முடியல… என்னடா இவ இப்படி சொல்றான்னு உங்களுக்குத் தோணலாம்… பைத்தியக்காரத்தனமா நான் பேசுற மாதிரி தெரியலாம்… நீங்க எப்படி நினைச்சாலும் எனக்கு கவலையே இல்லை… பட் ப்ளீஸ் தயவு செஞ்சு என்னை அபின்னு கூப்பிடுங்க.. யாரோ மாதிரி ஃபுல் நேம் சொல்லிக் கூப்பிடாதீங்க கஷ்டமா இருக்கு..” என்றவள் அவன் முன்பு அழுதே விட அவனோ திகைத்துப் போனான்.
“ஏய் இதுல என்ன இருக்கு ஜஸ்ட் ரெண்டுமே உன்னோட பேரு தானே.. இதுக்கு ஏன் இவ்வளவு எமோஷன் ஆகுற அபி… ஓகே ஓகே ரிலாக்ஸ் இனி அபர்ணான்னு கூப்பிடவே மாட்டேன் போதுமா…?”
“ம்ம்…”
“சரி இப்போ சொல்லு இவ்வளவு நேரம் உள்ள நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருந்த..?”
“தெரியல குரு நீங்க சொல்லிதான் இவ்வளவு நேரம் ஆச்சுன்னு தெரியும் சத்தியமா எனக்கு தெரியல..” என்றவளின் இதழ்கள் அழுகையில் துடிக்க சட்டென குளியலறைக்குள் நுழைந்தவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே…” என்றவன் அவளை அப்படியே குளியல் அறையில் இருந்து வெளியே அழைத்து வந்து இன்னொரு துவாலை ஒன்றை எடுத்து அவளுடைய தலையை துவட்டத் தொடங்க படுக்கையில் அமர்ந்திருந்தவள் அவனுடைய வயிற்றில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
அவளுடைய நீண்ட கூந்தலை துடைத்துக் கொண்டிருந்த அவனுடைய கரம் அவள் தன்னை இறுக்கி அணைத்து தன் வயிற்றில் முகத்தை புதைத்ததும் ஒரு கணம் அசைவற்று அப்படியே நின்றன.
அவளோ அவனை விட்டு விலகவே மாட்டேன் என்பதைப் போல இன்னும் இன்னும் இறுக்கமாக அவனை அணைத்துக் கொண்டவள் “எப்பவுமே என் கூட இருப்பீங்க தானே குரு..” என தழுதழுத்த குரலில் கேட்கத் துவாலையை படுக்கையில் போட்டவன் தானும் அவளை அணைத்துக் கொண்டான்.
அவனிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லாது போக கண்ணீரோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு..? ஏன் இவ்வளவு வித்தியாசமா நடந்துக்குற..?” என அவன் கேட்க, அவளோ ஒன்றும் இல்லை என்பது போல மறுப்பாக தலை அசைத்தவள் மீண்டும் அவனுடைய வயிற்றில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவள் அணைத்திருந்த விதத்தில் அவனுக்கோ ஆயிரம் ஆசைகள் உடலுக்குள் தோன்றத் தொடங்க சட்டென தன்னை அடக்கிக் கொண்டவன் அவளுடைய கரங்களை விலக்கி விட்டு
“தலைய நல்லா துவட்டு அபி..” என்றான்.
பெருமூச்சோடு துவாலையை எடுத்துக் கொண்டவளுக்கு மனம் வெறுமையாக இருந்தது.
‘இத்தனை நாட்களும் குழந்தைக்காக மட்டும்தானா என்னை நெருங்கினாய் என அவனிடம் நேரடியாக கேட்டு சண்டை போட்டு விடலாமா..?’ எனத் துடியாய் துடித்தது அவளுடைய மனம்.
எங்கே அவள் கேட்டு அதுதான் நிஜம் என்பதைப் போல அவன் கூறிவிட்டால் அவளால் அதை கிஞ்சித்தும் தாங்கவே முடியாது அல்லவா..
எங்கே அவன் அதுதான் உண்மை என ஒத்துக் கொண்டு விடுவானோ என்ற அச்சம் அவளை அவனிடம் எந்தக் கேள்வியும் கேட்க விடாது தடை செய்தது.
சற்று நேரத்தில் குருவோ அவளை அழைத்து “ஹாஸ்பிடல் போயிட்டு வந்துரலாம்..” எனக் கூற,
“ப்ளீஸ் நாளைக்கு போகலாம் இன்னிக்கு வேணாம்..” என பிடிவாதமாய் மறுத்தாள் அவள்.
“வாட் இஸ் திஸ் அபி.. இன்னைக்கு போனா என்ன..? என்றான் அவன்.
“அதேதான் நானும் கேட்கிறேன் நாளைக்கு போனா என்ன மாறிட போகுது.. ப்ளீஸ் நாளைக்கு போகலாமே இன்னைக்கு என்னோட மனசு சரியில்ல குரு புரிஞ்சுக்கோங்க..” என அவள் கூற அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“நாளைக்கு என்ன நடந்தாலும் நீ என் கூட ஹாஸ்பிடல் வந்து தான் ஆகணும்..” என்ற கட்டளையோடு அந்த அறையை விட்டுச் சென்றுவிட இவளுக்கோ மனம் வாடிப் போனது.
அடிக்கடி வந்து போகும் அடி வயிற்று வலி வேறு எப்படியும் மாதவிடாய் வந்து விடும் என்பதை அவளுக்கு அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருக்க இவளோ நெஞ்சம் பதைபதைத்துப் போனாள்.
பிஸ்னஸ் விடயமாக ஏதோ அவசரமான அழைப்பு ஒன்று குருஷேத்திரனுக்கு வந்துவிட,
“அபி வெளிய கொஞ்சம் வேலையா கிளம்புறேன் நான் வர லேட் ஆகும்.. பை..” என்றவன் அவளிடம் கூறிவிட்டு கிளம்பி விட இவளோ தன்னுடைய அன்னைக்கு அழைப்பெடுத்தாள்.
அடுத்த சில நொடிகளில் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார் அவளுடைய அன்னை.
“ஹேய் எப்படி இருக்க பாப்பா நல்லா இருக்க தானே..!”
“நான் நல்லா இருக்கேன்மா எனக்கு இங்க எந்தக் குறையும் இல்ல..” என்றாள் அவள்.
“அதுதான் தெரியுமே மாப்பிள்ளை மாதிரி ஒருத்தர் உனக்கு கிடைக்க நீ ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.. நம்ம சொந்தக்காரங்களுக்கு எல்லாம் நீ ரொம்ப நல்ல இடத்துல போய் சேர்ந்துட்டேன்னு எரிச்சலும் பொறாமையும்.. என் கண்ணு முன்னாடியே எப்படி எல்லாம் பேசுறாங்க தெரியுமா..?” என்றார் பத்மா.
“என்ன கேள்வி இது..? அம்மா கிட்ட உனக்கு என்ன தயக்கம் கேளு..”
“இல்லம்மா அது வந்து பீரியட்ஸ் வராம இருக்கிறதுக்கு ஏதாவது பண்ண முடியுமா..?”
“ஏய் என்னடி பேசுற..? அது மாசம் மாசம் வந்தாத்தான் உடம்புக்கு நல்லது அதை எதுக்கு நிறுத்த ட்ரை பண்ற..”
“பீரியட்ஸ் வந்தா பாப்பா வராதேம்மா..” என மெலிதான குரலில் வேதனை மேலோங்க அபர்ணா கூற திகைத்துப் போனார் பத்மா.
“என்னடி இப்படி எல்லாம் பேசுற..? பாப்பா தங்கிச்சின்னா தானாவே பீரியட்ஸ் நின்னு போயிடும்.. நீ எதுவும் பண்ணவே தேவையில்லை..” என்றார் அவர்.
“எப்போ எனக்கு பாப்பா கிடைக்கும்..?” எனக் கேட்க வந்தவள் சட்டென தன்னுடைய வாயை இறுக மூடிக்கொண்டாள்.
இதற்குமேல் அன்னையிடம் கேள்விகள் கேட்டால் அவர் குழம்பிப் போய்விடுவார் என உணர்ந்தவள், “ஓகே மா..” எனத் தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டாள்.
“நீ நல்லாதானே இருக்க பாப்பா..? உனக்கு அங்க எந்த பிரச்சனையும் இல்ல தானே..!” எனச் சற்றே பதற்றத்தோடு கேட்டார் பத்மா.
“இ.. இல்லம்மா… எனக்கு இங்க எந்தப் பிரச்சனையும் இல்ல.. நீங்க என்ன நெனச்சு க.. கவலைப்படாதீங்க..”
“கல்யாணம் பண்ணி இப்போ தானே நாலு மாசம் ஆகுது… உன்னோட படிப்பு முடியட்டும் அபர்ணா.. மாப்ள என்ன சொல்றாரோ அது படி நடந்துக்கோ..” என்றார் அவர்.
‘உன்னோட மாப்பிள்ளை தான்மா குழந்தை வேணும்னு ஒத்த கால்ல நிக்கிறாரு..’ என மனதிற்குள் எண்ணிக்கொண்டவள் வெளியே சரி எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
சிந்தை சீராக செயல்பட மறுத்தது.
மீண்டும் அடிவயிற்றில் இருந்து வலி வர ஆரம்பிக்க இவளுக்கோ விழிகள் கலங்கத் தொடங்கின.
“நோ.. நோ.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. வரக்கூடாது.. வந்துரவே கூடாது.. இது பேபியாத் தான் இருக்கணும்..” என மனம் உருக இறைவனை பிரார்த்தித்துக் கொண்டவள் சற்று நேரம் சோபாவில் படுத்துக்கொண்டாள்.
அசந்து உறங்கியவள் கண் விழித்து எழும்போது நேரமோ இரவு எட்டை நெருங்கியிருந்தது.
‘அச்சச்சோ இவ்வளவு நேரமா தூங்கிட்டோமா..’ என எண்ணியவாறு எழுந்து கொண்டவள் குரு வந்துட்டாரா இல்லையான்னு தெரியலையே என நினைத்தவாறு அறையை விட்டு வெளியே வந்தாள்.
அங்கே ஹால் சோபாவில் அமர்ந்திருந்து வேலையாட்களோடு சீற்றமான குரலில் உரையாடிக் கொண்டிருந்தவனைக் கண்டு அவளுக்கோ புன்னகை விரிந்தது.
‘இவர் சிரிக்கிறதே என்கிட்ட மட்டும்தான்.. மத்த எல்லார்கிட்டயும் எப்ப பார்த்தாலும் கோபமா தான் நடந்துக்கிறாரு.. ஏன் இந்த முரட்டுக் குணம்..?” என நினைத்தவாறு அவனை நெருங்கிச் சென்று அவன் அருகே வந்து நிற்க,
அவளைத் திரும்பிப் பார்த்தவன், “ஹாய் அபி.. நல்லா தூங்கி எழுந்துட்ட போல..” என அவன் கேட்க ஆம் என்றவளின் உச்சந் தலையில் கரம் பதித்து அவளுடைய கூந்தலை வருடி விட்டவன்,
“மறக்காம நான் கொடுத்த டேப்லெட்டை எடுத்துக்கோ..” எனக் கூற மலர்ந்த முகம் காற்றுப் போன பலூன் போல மாறிப்போனது.
சரி என்றவள் அதற்கு மேல் அங்கே நிற்கப் பிடிக்காமல் தன்னுடைய அறைக்குள்ளேயே நுழைந்து கொண்டாள்.
அறை தேடி வந்த உணவை பேருக்கு உண்டு முடித்துவிட்டு அவன் கொடுத்த மாத்திரையை விழுங்கிக் கொண்டவளுக்கு தொண்டை அடைத்தது.
அப்படியே படுக்கையில் சுருண்டு படுத்துக்கொண்டாள் அவள்.
ஒவ்வொரு இரவும் அவனுடைய அணைப்பில் தூங்குவதற்காக காத்திருப்பவள் இன்றோ தலையணையை எடுத்து அனைத்தவாறு தன்னுடைய உறக்கத்தைத் தொடர்ந்தாள்.
மனதின் ரணம் அவளைத் தனிமையை நாடச் செய்தது.
சற்று நேரத்தில் தன்னுடைய உணவையும் முடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்த குருவோ உறங்கிக் கொண்டிருந்த அபர்ணாவை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.
பின் பெரு மூச்சோடு அவள் அருகே படுத்துக் கொண்டவன் அவளை இழுத்து தன் மார்பின் மீது போட்டுக் கொண்டான்.
அடுத்த சில நொடிகளிலேயே அவன் மனம் அமைதி அடைந்தது.
விடிந்ததும் அவனுடைய எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறப்போவதை அறியாது பல கற்பனைகளில் மூழ்கியவாறே உறங்கத் தொடங்கினான் அவன்.