30. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.8
(16)

வரம் – 30

ஷர்வாவைப் பின் தொடர்ந்து அவனுடைய அறைக்குள் நுழைந்தவளுக்கு ஏதோ சிறைக்குள் நுழைந்த உணர்வே தோன்றியது.

ஏதாவது ஒரு முடிவை உடனடியாக எடுக்க வேண்டும் என எண்ணிக் கொண்டவள் தன் கரத்தில் இருந்த பையை வைத்தவாறு ஷர்வாவைப் பார்க்க அவனுடைய பார்வையோ அந்த அறையின் ஒரு பக்கச் சுவற்றில் அர்த்தமற்று வெறிப்பதைக் கண்டு தானும் அந்தச் சுவற்றைப் பார்த்தாள்.

பார்த்தவளுக்கோ அடுத்த நொடியே அதிர்ச்சி தொற்றிக் கொண்டது.

அங்கே அவளுடைய புகைப்படம் மிகப் பெரிதாக்கி அந்தச் சுவர் முழுவதையும் மறைத்தபடி இருப்பதைக் கண்டவளுக்கு உள்ளம் பிசையத் தொடங்கியது.

‘என்னோட போட்டோவ எவ்வளவு நாளா எப்படி ரூமுக்குள்ள வெச்சு பார்த்துக்கிட்டு இருக்கான்னு தெரியலையே….? இதெல்லாம் சின்னப் பசங்க பண்ற மாதிரி இருக்கு.. பைத்தியக்காரத்தனம்…’ என தனக்குள் எண்ணிக் கொண்டவள் தன்னுடைய முகத்தில் எந்த விதமான பாவனையையும் காட்டாது அங்கிருந்த சோபாவில் சோர்வாக அமர்ந்து கொண்டாள்.

இருவருக்கும் நடுவில் நின்று மூச்செடுக்க முடியாமல் சிரமப்படுவதைப் போல இருந்தது அவளுடைய நிலமை.

அக்கணம் கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்க திடுக்கிட்டுத் திரும்பி சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தாள் அவள்.

அங்கே ஷர்வாவோ தன்னுடைய கைமுஷ்டியை மடித்து கண்ணாடியில் ஓங்கி குத்திக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவளுக்கு விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.

“ஷர்வாஆஆஆ…. ஐயோ என்ன பண்றீங்க..? உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா…?” என பதறியவாறு அவன் அருகே நெருங்கியவள் அந்தக் கண்ணாடி உடைந்து உதிரம் சொட்டுவதைக் கண்டு விக்கித்துப் போனாள்.

அவனோ நிறுத்தாது மீண்டும் மீண்டும் தன்னுடைய கரத்தை காயப்படுத்திக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அந்த கோரத்தை பார்க்க முடியாது பதறியவள் கண்ணாடிக்கும் அவனுக்கும் இடையே அச்சத்தோடு புகுந்து கொண்டாள்.

“போதும் நிறுத்துங்க… தயவு செஞ்சு இப்படி மிருகம் மாதிரி நடந்துக்காதீங்க… நிறுத்துங்க ஷர்வா.. ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு…” என அவள் அலற,
உதிரம் சொட்டச் சொட்ட வீங்கிப் போயிருந்த அவனுடைய காயம்பட்ட கரத்தை அவளின் முகத்திற்கு நேரே தூக்கிக் காட்டியவன்,

“இந்தக் கையைத்தான உடைக்கணும்னு நீ ஆசைப்பட்ட.. இந்தக் கைய வெட்டி நெருப்புக்குள்ள போடணும்னு நீதானே சொன்ன… உனக்கு என்ன பண்ணணுமோ அதைப் பண்ணு…” என்றவாறு அவனுடைய அடிபட்ட கரத்தை அவளுடைய கரத்தில் திணிக்க ஆங்காங்கே கண்ணாடித் துண்டுகள் குத்தி சிதைந்து போயிருந்த அந்தக் கரத்தைப் பார்த்து அவளுக்கோ இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் ஏறியது.

“ஓ மை காட்.. ப்ளட் வருது…. ஷர்வா ப்ளீஸ் போதும்…. போதும்…” என பலவீனமான குரலில் கூறியவள் நடுங்கியவாறே அவனுடைய காயம் பட்ட கரத்தைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டாள்.

“இப்படி சைக்கோ மாதிரி நடந்துக்காதீங்க ஷர்வா…”

“ஆமாடி நான் சைக்கோதான்…” என்றான் அவன்.

அவளோ அவனுடைய கையை உதறிவிட்டு அவனை விட்டு விலகிச் சென்று விட அவனோ தன் கையைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாது சற்றுத் தள்ளி இருந்த படுக்கையில் அப்படியே படுத்துக்கொண்டான்.

கட்டிலுக்கு வெளியே நீட்டப்பட்டிருந்த அவனுடைய கரத்தில் இருந்து உதிரம் நில்லாது வழிந்து கொண்டே இருக்க இவளுக்கோ மனம் அமைதி அடைய மறுத்தது.

தான் சொன்னதால்தான் அவன் தன்னுடைய கரத்தைக் காயப்படுத்திக் கொண்டான் என்பதை உணர்ந்த பின்னும் எதுவுமே நடக்காதது போல அமைதியாக அவளால் நடிக்க முடியவில்லை.

அந்த அறையில் இருந்த முதல் உதவிப்பெட்டியை தேடி எடுத்துக் கொண்டவள் பெருமூச்சோடு கட்டிலுக்கு அருகே தரையில் அமர்ந்து அவனுடைய கரத்தை ஏந்தி மருந்து போட முயன்றாள்.

அந்தக் கரம் முழுவதும் கண்ணாடித் துண்டுகள் ஆங்காங்கே குத்தி காயப்படுத்தி இருப்பதைக் கண்டவளுக்கு ‘ஏன் இப்படி எல்லாம் செய்கிறாய்’ எனக் கத்த வேண்டும் போல இருந்தது.

அடக்கிக் கொண்டாள்.

மிக மெதுவாக அவனுக்கு வலிக்காமல் ஒவ்வொரு சிறிய கண்ணாடித் துண்டுகளையும் அவனுடைய கரத்திலிருந்து அவள் அகற்றிவிட்டு அவனுடைய முகத்தைப் பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய ஆழ்ந்த பார்வையில் அவளோ அசைவற்றுப் போனாள்.

என்ன பார்வை இது..?

உயிரை உருக்கி விழிகளின் வழியே இதயத்திற்குள் நுழைவது போல் அல்லவா இருக்கிறது அவனுடைய பார்வை.

அவளோ தடுமாறி தன்னுடைய பார்வையை தழைத்துக் கொள்ள,
“சாரி…. என்ன இருந்தாலும் நான் ஹாஸ்பிடல்ல வச்சு உன்ன கிஸ் பண்ணி இருக்கக் கூடாது… இனி இந்த மாதிரி நடக்காம பாத்துக்கிறேன்…” என அவன் கூற இப்போது இவளுக்கோ இன்னும் குற்ற உணர்ச்சிக் கூடிப் போனது.

அவனை வீதியில் வைத்து அடித்ததும் தவறு தானே என எண்ணியவள்,
“நானும் சாரி…” என்றாள்.

அடுத்த கணமே ஷர்வாவின் உடல் இறுக்கம் மெல்லத் தளர்ந்தது.

“என்னோட கைய உடைக்கணும் நெருப்புக்குள்ள போடணும்னுலாம் சொன்னியே… இப்போ எதுக்காக மருந்து போட்டுக்கிட்டு இருக்க…?”

“தெரியல… என்னால யாரையும் கஷ்டப்படுத்த முடியாது…” என்றாள் அவள்.

அவள் மருந்து போட்டு முடித்ததும் எழுந்து கொண்டவன், “தேங்க்ஸ்டி…” என்க,

அவனுடைய டி என்ற உரிமையான அழைப்பில் மீண்டும் ஒரு மாதிரியாகிப்போனது அவளுக்கு.

“டைமண்ட் திருட்டுப் போன விஷயத்துல அரவிந்தன் திவாகர் மேலே சந்தேகப்பட்டு அவன ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டான்… அவனுக்கு எழுந்து நடக்கக் கூட முடியலையாம்.. என்னோட பிஏவா இருந்தாலும் அவன் என் தம்பி மாதிரி… அவனைப் போய் பார்த்துட்டு வந்துடுறேன்..” எனக் கூறிவிட்டு ஷர்வா சென்றுவிட இவளுக்கோ எல்லாம் அந்த வைரத்தால் வந்தது என்ற எண்ணமே எழுந்தது.

ஷர்வா சென்ற அரை மணி நேரத்தில் அவளுடைய அலைபேசிக்கு அரவிந்தனிடம் இருந்து அழைப்பு வர வேகமாக அதை ஏற்றுக் கொண்டவள் “சொல்லு அர்வி…” என்றாள்.

“நான் உன்ன இப்பவே பாக்கணும்…” என்றான் அவன்..

“இப்போவேவா…? சரி ஓகே ஹாஸ்பிடல் வரவா….?”

“இல்ல வேணாம்… நான் டாக்டர்கிட்ட பேசி டிஸ்சார்ஜ் ஆகிட்டேன்… நீ என்னோட வீட்டுக்கு வந்துரு… நாம அங்கேயே மீட் பண்ணலாம்..” என்றான் அரவிந்தன்.

“ஓகே அர்வி, நீ ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காத ரெஸ்ட்ல இரு நான் அங்க வரேன்…” எனக் கூறி அழைப்பைத் துண்டித்து விட்டு நல்ல வேளை ஷர்வா இப்போது வீட்டில் இல்லை என்பதை உணர்ந்து நிம்மதி கொண்டவள் தன்னுடைய அழுது வீங்கி இருந்த முகத்தை தண்ணீரால் கழுவி விட்டு கீழே சென்றாள்.

ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஷர்வாவின் அன்னையை நெருங்கியவள்,

“ஆன்ட்டி என்னோட ப்ரண்டை பாத்துட்டு வந்துர்றேன்… உங்க காரை எடுத்துட்டு போகட்டுமா…?” என அவள் கேட்க

“தாராளமா எடுத்துட்டு போம்மா..” என்றார் ஷர்வாவின் அன்னை.

அடுத்த கணம் தலை சரித்து அவருக்கு சிறு நன்றியை உதிர்த்து விட்டு அவருடைய காரின் சாவியை வாங்கிக் கொண்டவள் அடுத்த நொடியே அரவிந்தனின் இல்லத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கினாள்.

அவளுக்கும் அவனுடன் தனியாக பேச வேண்டியது நிறைய இருந்தது.

இந்தப் பிரச்சனையை எப்படி முடித்து வைப்பது என அவனிடம் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என எண்ணியவள் காரை வேகமாக செலுத்தினாள்.

சற்று நேரத்தில் அரவிந்தனின் வீட்டை வந்து அடைந்தவள் காரில் இருந்து இறங்கி அவனுடைய வீட்டிற்குள் நுழைய ஹால் சோபாவில் அமர்ந்திருந்தான் அவன்.

மருத்துவமனையில் பார்த்ததைப் போல அவனுடைய தோற்றம் அவ்வளவு சோர்வாக இல்லாமல் இருப்பதைக் கண்டு அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

“வா வா பேபி…”

“ஹேய்… இவ்ளோ காயத்தோட உன்ன எப்படி டிஸ்சார்ஜ் பண்ணாங்க…?” என அவள் சற்றே அதிர்ச்சியாகக் கேட்க,

“நான்தான் டாக்டர்கிட்ட பேசி என்ன டிஸ்சார்ஜ் பண்ண சொன்னேன்… ரொம்ப டென்ஷனா இருக்கு பேபி. இதுக்கு மேல என்னால அங்க படுத்துகிட்டு இருக்க முடியாது… ஆல்ரெடி நாலு நாள் நல்லாவே பெட்ரெஸ்ட் எடுத்துட்டேன்… அதான் இப்போ நீ வந்துட்டியே… இனி நீ என்ன பாத்துக்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை..?” என அவன் கேட்க அவளுக்கோ உள்ளம் கசிந்தது.

“உனக்கு இப்படி ஆயிடுச்சுன்னு அப்போவே தெரிஞ்சிருந்தா உடனேயே கிளம்பி வந்திருப்பேன் அர்வி… அப்பாவோட விஷயத்துல நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். என்னால அதிலிருந்து அவ்ளோ சீக்கிரமா வெளியே வர முடியல. அங்க என்ன நடந்துச்சு? என்ன பண்ணாங்க? எதுவுமே எனக்குத் தெரியாது… எல்லா வேலையும் ஷர்வாதான் பாத்துக்கிட்டாரு.. அந்த டைம் ஷர்வா மட்டும் என் கூட இல்லைன்னா ரொம்பவே உடைஞ்சு போயிருப்பேன்…” என்றவள் அந்த நினைவுகளின் தாக்கத்தில் கண்கலங்க சட்டென பேச்சை மாற்றினான் அவன்.

“சரி நடந்து முடிஞ்சது முடிஞ்சு போச்சு. அதைப் பத்தி எல்லாம் இனி நினைக்காத பேபி…. உன்னோட ட்ரெஸ் எல்லாத்தையும் இங்க எடுத்துட்டு வந்துரு… இல்லன்னா அது கூட தேவலை.. நாம புதுசா எல்லாத்தையும் வாங்கிக்கலாம். நீ இங்கே என் கூட இருக்கிறதுதான் உனக்கு நல்லது…” என அழுத்தமான குரலில் கூறினான் அரவிந்தன்.

“நான் எப்படி இங்க உன் கூட தனியா இருக்க முடியும்..?” என அதிர்ந்து போய் கேட்டாள் அவள்.

“இடியட் மாதிரி பேசாத பேபி. நீயும் நானும் லவ் பண்றோம்ல? நாம இங்க ஒன்னா இருக்கறதுல என்ன தப்பிருக்கு…?

முதல்ல இந்த நெத்தில வச்சிருக்க பொட்டையும், கழுத்துல தொங்குற தாலியையும் கழட்டி அவன்கிட்டயே கொடுத்துட்டு வந்துரு.. அப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கும்.” என்றான் அவன்.

“அவசரப் படாத…. ப்ராப்பரா டிவோர்ஸ் வாங்கணும்… இந்த பிரச்சனைல இருந்து நான் முழுசா வெளியே வரணும் அர்வி. எனக்கு கொஞ்சம் டைம் வேணும் புரிஞ்சுக்கோ… இப்போ இப்படி எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வந்தேன்னா ஷர்வாவோட அம்மா பதறிப் போயிடுவாங்க…. அவங்களும் வயசானவங்க… யாரையும் கஷ்டப்படுத்த நான் விரும்பல…
ஷர்வா நமக்காகத்தான் அவரோட வேலை எல்லாம் விட்டுட்டு அங்க வந்தாரு… நாம சொல்லித்தான் என்னையும் கல்யாணம் பண்ணாரு… எல்லா தப்பையும் நம்ம மேல வச்சுகிட்டு அவங்க மேலயும் நாம தப்பு சொல்ல முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் கொடு…. எப்படியாவது ஷர்வாவுக்கு எல்லாத்தையும் சொல்லி புரிய வெட்டு ப்ராப்பரா எல்லா பிரச்சனையும் முடிச்சிட்டு நானே உன்கிட்ட வந்துர்றேன்…” என நிதானமாக எடுத்துக் கூறினாள் அவள்.

“உனக்கு என்ன பைத்தியமா..? அவன் என்னடான்னா என் கண்ணு முன்னாடியே ஹாஸ்பிடல்ல வச்சு உன்ன கிஸ் பண்றான். அப்போ வீட்டுல வச்சு உன்ன என்ன எல்லாம் பண்ணுவான்…? அவன் இவ்ளோ பண்ணியும் நீ எப்படி இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்க…? ஒருவேள அவன் பண்றது உனக்கும் பிடிச்சிடுச்சா…?” என்பதைப் போல அவன் கேட்டு விட துடிதுடித்துப் போனாள் அவள்.

💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!