விடிந்த பின்பும் கூட ஆதவனை வானில் மறைத்த வண்ணம் மழை மேகங்கள் சூழ்ந்து கொள்ள இருளாகவே இருந்தது அந்தக் காலை வேளை.
அபர்ணாவோ தூக்கம் நீங்கி எழுந்து கொண்டவள் தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்து இடிந்து போனாள்.
எது வரக்கூடாது என அவள் நேற்று எல்லா மதக் கடவுளிடமும் வேண்டுதல் வைத்தாளோ அது இன்று வந்தே விட்டது.
வேதனையோடு படுக்கையிலிருந்து மெல்ல எழுந்து கொண்டவள் குளித்து முடித்து ஆடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த போது குருஷேத்திரனும் எழுந்து அமர்ந்திருந்தான்.
“குட் மார்னிங் அபி..” என அவன் புன்னகையோடு கூற இவளுக்கு சிரிப்பே வர மறுத்தது.
தனக்கு மாதவிடாய் வந்துவிட்டது எனத் தெரிந்தால் எங்கே திட்டுவானோ எனப் பயந்து போய் நின்றிருந்தாள் அவள்.
அவளுடைய முக மாற்றத்தைக் கண்டு அவனுடைய புருவங்கள் உயர்ந்தன.
சட்டென எழுந்து அவள் அருகில் வந்தவன் “வாட்..” எனக் கேட்க அவனைப் பார்த்து மறுப்பாகத் தலை அசைத்தாள் அவள்.
“வாயைத் திறந்து என்னன்னு சொல்லு..” எனக் கிட்டத்தட்ட அந்த அறையே அதிரும் வண்ணம் அவன் கர்ஜிக்க அதிர்ந்து போய் பின்னால் நகர்ந்தவள்,
“எ.. எனக்கு பீரி…யட்ஸ் வந்துருச்சு..” எனத் திக்கித் திணறிக் கூறி முடித்தாள்.
அவ்வளவுதான் நொடியில் அவனுடைய முகம் இறுகிக் கறுத்துப் போக சோபாவுக்கு முன்பு இருந்த கண்ணாடி மேசையை தன்னுடைய காலால் எட்டி உதைத்து இருந்தான் குருஷேத்திரன்.
அவன் உதைத்த வேகத்தில் அந்தக் கண்ணாடி மேசையோ நொறுங்கி தரையில் விழ அலறிவிட்டாள் அவள்.
“கு… குருஉஉஉஉ..”
“ஷட் அப்… பேசாத..”
“எ.. என்ன எது… எதுக்குத் திட்டுறீங்க..? நான் என்ன ப.. பண்ணினேன்..?” எனத் துடித்துப் போனவளாய் அவள் கேட்க சட்டென மீண்டும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான் அவன்.
அவளுக்கோ அழுகை பெருகியது.
“சாரி அபர்ணா..” என்றவன் அவள் அடிபட்ட பார்வை பார்க்கவும் “அபி..” எனத் தன்னுடைய அழைப்பைத் திருத்திக் கொண்டான்.
அவளோ மொத்தமாக உடைந்து போனாள்.
விம்மி வெடித்து அழுகை பொங்கியது.
“இட்ஸ் ஓகே விடு. நான் பாத்துக்குறேன்..” என்றவன் எங்கோ வெளியே கிளம்பிச் சென்றுவிட இவளோ தனிமையில் மூழ்கிப் போனாள்.
அதன் பின்னர் நான்கு நாட்கள் அமைதியாகவே கழிந்தது.
வழமை போல காதலாக அவனோடு அவளால் உரையாட முடியவில்லை.
அவன் நிஜமாகத் தன்னை காதலிக்கிறானா இல்லையா என்ற கேள்வி அவளுக்குள் எழுந்ததிலிருந்து ஒரு விதமான மன அழுத்தத்துடனேயே இருந்தாள் அவள்.
அதிக சிந்தனைகள் அவளுடைய அழகிய முகத்தை பொலிவிழக்கச் செய்தன.
சில நாட்கள் அவளை விட்டு முழுமையாக விலகி இருந்தவன் மீண்டும் அவளை நெருங்கி வந்து உறவுக்கு அழைத்த போது அவளுக்கோ உள்ளுக்குள் உள்ளம் குமுறியது.
திகதி, நேரம், காலம் எல்லாம் பார்த்து விட்டுத் தான் என்னோடு ஒன்றாக இருப்பதற்கு வந்திருக்கிறான் போலும் என எண்ணிக் கொண்டவளுக்கு அக்கணம் வாழ்க்கை சலித்துப் போனது.
என்னைத் தொட வேண்டாம் என கத்திக் கதற வேண்டும் போல இருக்க அதற்குக் கூட முடியாது வாயை இறுக மூடிக் கொண்டு அப்படியே அமைதியாகப் படுத்துக் கிடந்தாள் அபர்ணா.
‘குழந்தைக்காக இது எல்லாவற்றையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்..’ என வேதனையோடு எண்ணிக் கொண்டது அவளுடைய மனம்.
அதன் பின்னர் அவனும் அவளை நெருங்கி இயந்திர கதியில் இயங்கி விட்டு விலகிப் படுக்க அவளுக்கோ உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப் போகத் தொடங்கின.
எதிலும் பிடித்தம் இல்லாமல் போனது.
தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டவள் தன்னுடைய அழுகையையும் அவனிடமிருந்து மறைத்துக் கொண்டாள்.
தன் வாழ்க்கையில் இனி எல்லாமே அவன்தான் என எண்ணியிருந்தவளுக்கு பெருத்த அடியாக இருந்தது அவனுடைய செயல்கள்.
அதன் பின்னர் வந்த நாட்களில் அவள் கல்லூரியில் மட்டுமே அவளாக இருந்தாள்.
அவளுடைய சிந்தனைகள் வேதனைகள் யாவும் நண்பர்களின் நகைச்சுவைப் பேச்சில் காணாமல் போய்விடும்.
வீட்டிற்கு வந்தபின் மீண்டும் அவனுடைய ஆளுமையின் கீழ் அழுத்தப்படுவதைப் போல உணரத் தொடங்கினாள் அவள்.
“ஹேய் அபி… என்ன நீ இப்போல்லாம் பேசுறதே இல்ல..?”
“அப்படியெல்லாம் இல்லையே..!” என மறுத்தாள் அவள்.
“இன்னைக்கு ஸ்விம் பண்ணலாமா..?” என அவனே அவளை அழைக்க அவளுக்கு சற்று புத்துணர்ச்சியாக இருந்தது.
அவனை உணர்ச்சியோடு பார்த்தவள்,
“எனக்கு ஸ்விம் பண்ணத் தெரியாது..” எனத் தலைசரித்துக் கூற,
“அதனால என்ன நான் சொல்லிக் கொடுக்கிறேன்..” என்றவன், அவர்களுடைய நீச்சல் தொட்டிக்கு அவளை அழைத்துச் செல்ல அவளோ அனைத்தையும் மறந்து அவனோடு மீண்டும் ஒன்றிக் கொண்டாள்.
நீச்சல் குளத்தில் இறங்கி நீந்தும் முறையை அவளுக்கு கற்றுக் கொடுத்தவன் அவன் கற்றுக் கொடுத்ததைப் போலவே அவள் மெல்ல மெல்ல நீந்த அவனுடைய கரங்களோ அவளுடைய மேனியை பதமாக இதமாக வருடி விட்டன.
அவளும் தன்னை மறந்து அவனுடைய அணைப்புக்குள் வந்துவிட நீச்சல் குளத்திற்குள் வைத்தே அவளுடைய கன்னங்களை அழுத்தமாக பற்றிக் கொண்டவன் அவளுடைய இதழ்களை குனிந்து சுவைக்கத் தொடங்கினான்.
நீண்ட நாளாக அவனுடைய காதலுக்காக ஏங்கிப் போயிருந்தவள் அவனுடைய அன்பான அணைப்பிலும் அழுத்தமான முத்தத்திலும் தன்னை மறந்து அவன் மீது சரிய அவனுடைய கரங்களோ அவளுடைய ஆடையில் பதிந்து அகற்றத் தொடங்க சட்டென பதறி விலகினாள் அவள்.
“இ.. இப்போ வேணாம்..”
“ஏன்..?”
“இ… இல்ல குரு இப்போ வேணாம் ப்ளீஸ்..”
“இது பிரைவேட் ஏரியாதான்.. இந்த கண்ணாடி மூலமா நாமதான் வெளிய இருக்கிறவங்கள பார்க்க முடியும்.. வெளியே இருக்கிறவங்களுக்கு நம்மள தெரியாது பயப்படாத..” என்றவனின் கரங்கள் அவளை இழுத்து தன்னோடு இறுக்க அவனுடைய மார்பில் தன் கரத்தை பதித்து அவனைத் தள்ளிவிட்டவள்,
“பரவாயில்லை.. இப்போ வேணாம்..” என்றவாறு நீச்சல் குளத்தில் இருந்து எழுந்து வெளியே செல்ல முயன்ற கணம் அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டவன்,
“இன்னைக்கு நாம கட்டாயம் பண்ணியே ஆகணும்.. இப்ப பண்ணாதான் சீக்கிரமா பேபி கன்சீவ் ஆகும்..” என அவன் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்திக் கூற அவளுக்கோ நெருப்பை அவள் மீது அள்ளிக் கொட்டியது போல இருந்தது.
அப்படியே சோர்ந்து போனாள் அவள்.
அதன் பின் அவனோ அவனுடைய தேவையை முடித்துவிட்டு அவளை விலக நெருப்பாய் தகித்தது அவனுடைய நெருக்கம்.
அனைத்தையும் முடித்துவிட்டு அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன் தங்களுடைய அறைக்குள் அவளை அழைத்துச் சென்று அவளுக்கு தலையையும் துவட்டி விட தன்னுடைய வாயை அழுத்தமாக மூடிக்கொண்டு எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.
“அபி..”
“…….”
“ஏய்.. அபி..”
“ஹாங்..”
“வாட் ஹப்பன்..”
“ஒன்னும் இல்ல..” எனக் கூறும் போது அவளுடைய கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.
சட்டென உடல் இறுகிப் போனான் அவன்.
“உன்ன ஹர்ட் பண்ணிட்டேனா..?” என அவன் கேட்க,
அவளுடைய உதடுகளோ விரக்தியாக புன்னகைத்தன.
வழக்கம்போல இல்லை என்ற வார்த்தையை பொய்யாக உதிர்த்து விட்டு அவனைப் பார்த்து போலியான சிரிப்பை கொடுத்தவள் அங்கிருந்து எழுந்து சென்றுவிட “ஷிட்..” என முணுமுணுத்தான் அவன்.
அவளுடைய அழுகை அவனை மிகவும் பாதித்தது.
எப்போதும் போல ஏன் அவள் இல்லை என்று அவனுக்குப் புரியவே இல்லை.
அவளுடைய துரு துரு பேச்சுக்களும், சேட்டைகளும் இல்லாமல் போனதைப் போல உணர்ந்தவன் அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கி அவளை மறந்தும் போனான்.
அந்த மாதத்தில் நாட்கள் ஒவ்வொன்றாக நகர்ந்து முடிந்து அடுத்த மாதமும் வந்துவிட இவளுக்கு நெஞ்சம் பதைபதைக்கத் தொடங்கிவிட்டது.
இந்த முறையும் மாதவிடாய் வந்து விடுமோ என எண்ணி அஞ்சியவள் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த முடியாது படிப்பை தவறவிடத் தொடங்கினாள்.
அவளுடைய சிந்தனைகளோ வேறெங்கும் பதியாது போனது.
அவள் நினைத்துப் பயந்ததைப் போலவே அந்த நாட்களில் அவளுக்கு வயிறு வலிக்கத் தொடங்கி அடுத்த நாளில் மாதவிடாய் மீண்டும் வந்து விட மொத்தமாக உடைந்து போனாள் அபர்ணா.
இது வந்ததே மிகப்பெரிய அழுத்தம் என்றால் இதை தெரிந்து கொண்டால் அவன் ஆடும் ஆட்டத்தில் இன்னும் அவளுக்கு பைத்தியமே பிடித்து விடுமே..!
சொல்வதா மறைப்பதா மறைத்தாலும் எப்படியும் கண்டுபிடித்து விடுவான் என எண்ணிக் கலங்கியவள் வேறு வழி இன்றி கண்ணீரோடு தயங்கித் தயங்கி அவனிடம் கூற அவள் நினைத்ததைப் போலவே அவனுடைய உடல் இறுகிப் போனது.
யார் என்றே தெரியாத ஒரு அந்நியன் போலத்தான் தன்னுடைய முகத்தை வைத்திருந்தான் அவன்.
அதன் பின்னர் நான்கு நாட்களாக அவன் வீட்டிற்கு வரவே இல்லை.
அவளும் அவன் வர வேண்டுமென எதிர்பார்க்கவும் இல்லை.
இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை சுத்தமாக நின்று போனது.
ஐந்தாவது நாள் அவளுடைய மனம் மீண்டும் அவனைத் தேடத் தொடங்கியது.
பைத்தியக்காரத்தனம் என நினைத்துக் கொண்டாள் அவள்.
மீண்டும் இரவுகள் அவன் இன்றி கண்ணீரில் நனையத் தொடங்கின.
அவன் அருகே இருந்தாலும் கண்ணீர்தான்…
அவன் இல்லை என்றாலும் கண்ணீர்தான் என எண்ணிக் கொண்டவளுக்கு தன்னுடைய மனம் எதை எதிர்பார்க்கின்றது என்று அவளுக்கே புரியவில்லை.
தன்னுடைய இயல்பை கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைக்கத் தொடங்கினாள் அவள்.
ஆறு நாள் கழித்து மீண்டும் அவன் வீட்டிற்கு வந்தபோது அவனுடைய முகத்திலோ புதிதாக அரும்பி இருந்தது தாடி.
என்னதான் அவளுக்கு பிடிக்காதது நடந்திருந்தாலும் கூட ஆறு நாட்கள் கழித்து அவனைக் கண்டதும் அவளுக்கு விழிகள் கலங்கத்தான் செய்தன.
அழுகையோடு தன்னை மறந்து அவனை நோக்கி பாய்ந்து சென்றவள் அவனை இறுக அணைத்து அவனுடைய மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
நீ இல்லாத நாட்கள் எனக்கு நரகம் என்பதை உணர்த்துவது போல இருந்தது அவளுடைய இறுகிய அணைப்பு.
“ஐ… ஐ மிஸ் யூ குரு…”
“ஐ மிஸ் யூ சோ மச் குரு…” என அழுகையினூடே தன்னுடைய மனதை வெளிப்படுத்தினாள் அவள்.
“கண்ணத் தொடைச்சிட்டு ரெடியாகு அபி.. ஹாஸ்பிடல் போகணும்..” என அவன் கூற அவளுக்கோ சட்டென வெறுமை சூழ்ந்தது.
அதன் பின் அவனோடு ஒற்றை வார்த்தை கூட பேசத் தோன்றவே இல்லை.
அமைதியாக அவன் சொன்னதை செய்தவள் அவன் முன்பு தயாராகி சிலை போல நிற்க, அடுத்த கணம் அவளை அழைத்துக்கொண்டு மிகப்பெரிய மருத்துவமனைக்கு தன்னுடைய காரை செலுத்தத் தொடங்கினான் குருஷேத்திரன்.