32. ஜீவனின் ஜனனம் நீ…!!

4
(1)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 32

 

வீட்டு வாசலில் அடியெடுத்து வைத்த தேவனுக்கு தான் கண்ட காட்சியில் கோபம் பொங்க, “சத்யா…!!” என்றழைத்தான்.

 

ஜனனிக்கு அடிக்க ஓங்கிய கரத்தைக் கீழிறக்கிய சத்யா அங்கு தேவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஜனனியின் கண்கள் கலங்கிப் போயிருந்தன.

 

“என்ன பண்ணிட்டு இருக்க?” தேவன் கோபமாகக் கேட்க, “இதில் நீ தலையிடாத தேவா. எனக்கும் ஜனனிக்கும் இடையில் உள்ள விஷயம் இது” அடிக்குரலில் சொன்னான் ஆடவன்.

 

“கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணை அடிக்க கை ஓங்குறது ஒரு ஆம்பளைக்கு அழகு இல்லனு அடிக்கடி சொல்லுறது யாரு? உங்கப்பா தான். அதை மறந்துட்டீங்களா மிஸ்டர் சத்யா. உங்களுக்கு அப்பா வாக்கு வேத வாக்காச்சே” எதையோ நினைத்துக் கொண்டு கோபத்தோடு சொன்னான் தேவன்.

 

“அவரு உனக்கும் அப்பா தான். மறந்துடாத” என்று மட்டும் அழுத்திச் சொல்ல, தனது அறையினுள் நுழைந்தான் தேவன்.

 

சத்யாவைப் பார்த்த ஜனனிக்கு சற்று முன் நடந்த நிகழ்வு மனக்கண் முன் படமாக ஓடியது.

 

மேகலை ரூபனோடு கோயிலுக்குச் சென்றிருந்தார். யுகன் அறையில் டிவி பார்த்துக் கொண்டிருக்க ஜனனி சமயலறையில் இருந்தாள்.

 

ஹாலில் இருந்த சத்யா அலைபேசியில் மூழ்கியிருந்தான். அவனருகில் வந்த ஜனனிக்கோ அவனை எப்படி அழைப்பது என்ற திண்டாட்டம்.

 

‘பெயர் சொல்லி கூப்பிடவும் ஒரு மாதிரி இருக்கு. என்னங்கனு கூப்பிடவும் முடியல. பேசாம ஹிட்லர்னு கூப்பிடலாமா’ தீவிர யோசனையோடு நின்றிருந்தவள் தொண்டையைச் செரும, அதை உணர்ந்தும் காட்டிக் கொள்ளாது நின்றான் அவன்.

 

“க்கும்” மீண்டும் தொண்டையை செரும, அருகிலிருந்த ஜக்கை நீட்டி, “தண்ணி குடி” என்றவனை ஏகத்துக்கும் முறைத்தாள் ஜனனி.

 

“நான் பேசுறது கேட்கலயோனு நெனச்சேன். ஆனால் காதுல விழுந்தும் அமைதியா இருந்துட்டு கிண்டல் வேறயா?”

 

“ஹலோ ஹலோ! ஒரு சின்ன கரெக்ஷன். நீ பேசல இருமின. இருமுறதுக்கும் பேசுறதுக்கும் வித்தியாசம் தெரியாத மக்குப் பொண்ணா இருக்கியே” அவளை வெறுப்பேற்றுவது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

 

“இதோ பாருங்க. மக்கு கொக்குனு சொன்னா அவ்ளோ தான். எப்படி பேசுறதுனு தெரியாம இருமினேன். வேற எதுவும் இல்லை” காரமாகச் சொன்னாள் அவள்.

 

“பேச தான் பெயர் வெச்சிருக்காங்க. ஆனால் நீ என்னைப் பெயர் சொல்லி கூப்பிடாத” அவன் சொன்னதும், “ஓகே சத்யா” தலையசைத்துக் கூறியவளை முறைத்தான்.

 

“பெயர் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்” 

 

“கூப்பிட தானே பெயர் வெச்சிருக்காங்க சத்யா. நான் அப்படியே கூப்பிடறேன் சத்யா. ஓகேவா சத்யா?” என்று அவள் கேட்க, அவனுக்கு கோபம் எட்டிப் பார்த்தது.

 

“ஏய்ய்” என்று சீற, “கத்தாதீங்க சத்யா” என்று சொன்னவளை அடிக்கக் கை ஓங்கி விட்டான்.

 

தேவன் மட்டும் வரவில்லை என்றால் என்னவாகி இருக்கும் என்று தெரியாது. அவள் விளையாட்டுக்காக சொன்னாள். அது அவளது இயல்பு தான். மகிஷா, நந்திதாவிடம் அவர்கள் வேண்டாம் என்பதை இவள் அடிக்கடி செய்து காட்டுவாள்.

 

நந்திதா செல்லமாக முறைப்பாள். ‘போ ஜானு’ என மகிஷா சிணுங்கலுடன் அவளுக்கு அடிப்பாள். அவளது அடியை வாங்கிக் கொண்டு சிரிப்பாள் ஜனனி. அவர்களை கடுப்பேற்றுவது போன்ற எண்ணத்தில் இவனோடு விளையாடிப் பார்த்தவளுக்கு அவனது அதீத கோபம் அச்சத்தை கொடுத்தது.

 

அவன் கை நீட்டியதும் அதிர்ந்து போனாள். கூடவே கண்களும் கலங்கித் தான் போயின. அவளை இதுவரை யாரும் கை நீட்டியதில்லை. மாரிமுத்து எவ்வளவு தான் திட்டினாலும் அடிப்பதில்லை. ஆனால் முதல் முறை இவன் கையோங்கியதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

அவனுக்கோ தேவனின் பேச்சைக் கேட்டு கோபம் வர, அவனைத் திட்டி அனுப்பினான். ஆனால் இவளது கண் கலங்கியதைப் பார்த்ததும் ஏதோ போது ஆகியது.

 

அவளைப் பிடிக்கவில்லை, முகம் பார்க்கவும் பிடிப்பதில்லை. அப்படியிருக்க எந்த உரிமையில் அவளுக்குக் கை ஓங்கியது என்று யோசித்தவனுக்கு தன்னை நினைத்தே அசிங்கமாக இருந்தது.

 

அதை தேவன் பார்த்ததோடு சரி. ஆனால் மேகலை பார்த்திருந்தால் என்னவாகி இருக்கும்? அவரது வளர்ப்பு தவறானது போல் உடைந்து போவார் என்பது சர்வ நிச்சயம்.

 

“சா..சாரி” என்று மட்டும் சொல்லி விட்டுச் சென்றவனை விரக்தியோடு நோக்கினாள் ஜனனி.

 

எல்லாம் செய்து விட்டு மன்னிப்புக் கேட்பதால் ஒன்றும் ஆகி விடப் போவதில்லை என்ற சொல் வாய் வரை வந்தாலும் அதைச் சொல்லி வெறொரு சண்டையை ஆரம்பிப்பதற்கு அமைதியாக இருந்து விடலாம் என்று மௌனித்தாள்.

 

மகிஷாவுடன் பேச வேண்டும் போல் தோன்றியது. அவள் காலேஜுக்கு சென்றிருப்பாள் என்று நினைத்து அழைக்காமல் விட்டவளுக்கு யுகனின் நினைவு.

 

ஓடிச் சென்று அவனைப் பார்க்க, “கார்ட்டூன் பார்க்கலாமா ஜானு?” என்று கேட்டான் அவன்.

 

“என் கூட கொஞ்ச நேரம் வர்றியா யுகி?” என்று கேட்டவளுக்கு குரல் கரகரத்தது.

 

அறையினுள் அமர்ந்திருந்த சத்யாவுக்கு அவள் குரலின் மாற்றம் மனதைப் பிசைந்தது.

 

“வெயிட் ஜானு” டிவியை அணைத்து விட்டு வந்தவனது கையைப் பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

 

அங்கிருந்த ஊஞ்சலில் அவனோடு அமர்ந்தவளது முகத்தை இமைக்காமல் பார்த்தான் சின்னவன்.

 

“வீட்டு ஞாபகம் வந்துருச்சா ஜானு?” என்று அவன் கேட்டதும் வேறு வழியின்றி தலையாட்டி வைத்தவள், “உன் மடியில் கொஞ்சம் சாஞ்சுக்கட்டுமா?” எனக் கேட்டாள்.

 

புன்னகையோடு தலையை அசைத்தான் யுகன். சம்மதம் கிடைத்த மறு நொடி அவனது மடியில் லேசாக தலை சாய்த்தாள் மங்கை.

 

என்ன நினைத்தானோ, யுகன் அவளது தலையை வருடிக் கொடுக்க, கண்களை மூடிக் கொண்டவளுக்கு இமையோரம் கண்ணீர்த் துளி. அவனறியாமல் அதைத் துடைத்துக் கொண்டாள்.

 

சத்யாவின் காயத்திற்கு அவன் மகன் மருந்தானான். இந்த அன்புச் சிட்டின் மீது இன்னுமின்னும் பாசம் பெருகி வழிந்தது பெண்ணவளுக்கு.

 

“டேய் பெரிய மனுஷா” என்றவாறு அங்கு வந்த தேவனுக்கு அவனைக் கண்டதும் நிமிர்ந்த ஜனனியின் மனநிலை புரிவதாய்.

 

“எப்போ வந்தீங்க சித்தா?” அண்ணன் மகனின் கேள்விக்கு, “நீயும் ஜானுவும் சென்டிமென்ட்டை சாறு பிழியும் போதே வந்துட்டேன்” என பதிலளிக்க,

 

“உன் கிட்ட கேரம் விளையாடலாமானு கேட்க வந்தேன். பார்த்தா நீ உன் ஜானு கூட பிசியா இருக்கே” என்றான் தேவன்.

 

“ஜானுவையும் கூட்டிட்டு விளையாடலாம்” என்று யுகன் சொல்ல, “அய்யோ! எனக்கு கேரம் விளையாட வராது. நீங்க விளையாடுங்க நான் பார்த்துட்டு இருக்கேன்” மறுப்புத் தெரிவித்தாள் ஜனனி.

 

“என்ன விளையாடப் போறீங்க? நான் இல்லாம எப்படி விளையாடலாம்?” வேகமாக வந்து அவர்களின் முன் நின்றான் ரூபன்.

 

“ஹய்.. ரூபியும் வந்தாச்சு. ஜாலியா நாலு பேரும் விளையாடலாம்” கைத்தட்டி ஆர்ப்பரித்த யுகியின் ஆசைக்காக ஜனனியும் விளையாட சம்மதித்தாள்.

 

“நானும் ஜானுவும் ஒரு டீம்” சின்னவன் சொன்னதைக் கேட்டு, “என் கூட வந்தா தோற்க வேண்டி வரும். நீ வேற யார் கூடவாவது விளையாடு” என்று அவள் கூற,

 

“இல்ல ஜானு! தோற்றாலும் வின் பண்ணாலும் நான் உன் கூட தான் வருவேன். தோற்றுப் போவேனு தெரிஞ்சாலும் ப்ரெண்டை கை விடக் கூடாதாம்னு டாடி சொல்லுவார். ஏதோ பழமொழி இருக்குல்ல அன்பு..” என்றவாறு அவன் யோசிக்க,

 

“அன்பு இல்ல டா. அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம். நீ சொன்னது நிஜம் தான் செல்லம். தோற்றாலும் ஜெயிச்சாலும் நாம நம்ம ஃப்ரெண்டை விட்டுக் கொடுக்காம அவங்க கூட இருக்கனும்” அவனது கன்னம் கிள்ளி முத்தமிட்டாள்.

 

“அது சரி. ஆனால் இந்த இத்துப் போன கேரம் விளையாட்டுக்கு ஆபத்து அன்புனு பாடம் எடுக்குறியே டா. நீ வேற லெவல் போ” என்று ரூபன் சொல்ல, தேவன் சிரித்தான்.

 

“எதுவா இருந்தாலும் அதை நாம இப்படிப்பட்ட விஷயங்களோட பொருத்திப் பார்க்கிறது நல்ல பழக்கம் ரூபன். ஹீ வில் ஹேவ் எ ப்ரைட் பியூச்சர்” ஜனனியின் விழிகள் யுகனை அன்பு ததும்ப நோக்கின.

 

“ஆமா அண்ணி. அவன் கிட்ட வயசுக்கு மீறின ஒரு முதிர்ச்சி இருக்கு. இது நல்ல விஷயம்” என்ற தேவனுக்கு சத்யாவின் வளர்ப்பை எண்ணி பெருமையாக இருந்தது.

 

இருப்பினும் அவன் மீது கோபம் வந்தது, அவனது செயல்களால் மேகலையின் வளர்ப்பு தவறாவதை நினைத்து. 

 

“எல்லாரும் ஜூஸ் எடுத்துக்கோங்க” ஜூஸ் ட்ரேயோடு வந்தார் மேகலை.

 

“நீங்க எதுக்கு அத்தை இதெல்லாம் பண்ணுறீங்க? கோயிலுக்குப் போயிட்டு வந்து டயர்டா இருப்பீங்க. அதற்குள்ள ஜூஸ் போடனுமா?” என்று கேட்டவாறு ட்ரேயை வாங்கி அனைவருக்கும் வழங்கினாள் ஜனனி.

 

“என்னம்மா நீயும் இவனுங்களைப் போல என்னை நோயாளியா பார்க்கிற. அதைப் பண்ணாதீங்க இதைப் பண்ணாதீங்கனு என் கையை கட்டிப் போட்டு வைக்கிறாங்க. நீயும் இப்படி பண்ணா நான் பாவம் இல்லையா?” முகத்தை சோகமாக வைத்துக் கொண்டார் மேகலை.

 

“பாவம் புண்ணியம் எல்லாம் இல்லவே இல்லை. நீங்க டயர்டாகி வேலை பார்க்கக் கூடாது அவ்வளவு தான்” கண்டிப்போடு சொன்னான் தேவன்.

 

“ஆமா டா. இப்படி பாவமா மூஞ்சை வெச்சுக்கிட்டு நம்ம மனசை மாத்தி எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யுறாங்க. கேட்டா சும்மா இருக்க போரடிக்குதாம்” ரூபன் சொல்ல, 

 

“நான் உங்களுக்கு அம்மா. என்னவோ நீங்க என் அப்பன் ஆத்தா மாதிரி இவ்ளோ கண்டிஷன் போடுறது நல்லா இல்லை சொல்லிட்டேன்” அவர் சொன்னதைக் கேட்டு,

 

“யாருக்கும் இவ்ளோ கேர் எடுத்துப் பார்த்துக்கிற பசங்க கிடைக்க மாட்டாங்க அத்தை. உங்களுக்கு கிடைச்சத நெனச்சு சந்தோஷப்படுங்க. சின்ன வயசுல ஒரு அம்மா அவங்க பசங்களை எப்படியெல்லாம் கவனிச்சு ஆராட்டி சீராட்டி வளர்க்கிறாங்க. ஆனால் அந்த பிள்ளைகள் வளர்ந்ததும் எல்லாத்தையும் மறந்துடுறாங்க.

 

அப்பாம்மாவுக்கு தேவைப்படுற நேரத்தில் அவங்க கூட இருக்க மாட்டாங்க. சின்ன வயசுல நாம ஏதாவது வேணும்னா கேட்டு வாங்கிப்போம். கேட்கலனா கூட நமக்குத் தேவையானது கிடைக்கும். வயசான காலத்தில் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாத டைம்ல வாய் திறந்து தண்ணி கேட்டா அவங்களுக்கு அதைக் கொடுக்காத பசங்க இருக்காங்க. அவங்களுக்கு அவ்வளவுக்கு டைம் இல்ல.

 

தனக்கு நோய் வந்தா அதைச் சொல்லி மருந்து வாங்கிக்கிட்ட பிள்ளைக்கு, அம்மா காய்ச்சலோட இருக்காங்கனு தெரியாத அளவுக்கு பிசி. அவங்க முகத்தைப் பார்த்து சிரிச்சு பேசி அதை உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு அவங்க வேலையில் மூழ்கி பெத்தவங்க செஞ்ச தியாகங்களை மறந்துடுறாங்க.

 

ஆனால் இவங்க அப்படி இல்ல அத்தை. உங்களுக்கு ஒன்னுனா துடிச்சு போயிடுறாங்க. உங்களை குழந்தை மாதிரி பார்த்துக்கிறாங்க. இப்படிப்பட்ட தங்கமான பிள்ளைகள் கிடைக்கிறது வரம்னு சொல்லுவேன். அந்த வகையில் நீங்க அதிர்ஷ்டசாலி” என்று ஜனனி சொல்ல மேகலை நெகிழ்ந்து போனார்.

 

“இல்ல ஜானு! எங்கம்மா மாதிரி ஒரு அன்பான, ஃப்ரெண்ட்லியான அம்மா கிடைக்க நாங்க தான் லக்கி” என்ற ரூபன் மேகலையின் கையைப் பிடித்துக் கொள்ள, தேவனும் அவரை அணைத்துக் கொண்டான்.

 

“இவங்க மட்டுமில்ல ஜானு. நான் மனசார சொல்லுறேன். உன்னை மாதிரி நல்ல மனசுள்ள பொண்ணு எனக்கு மருமகளா கிடைக்க நான் புண்ணியம் பண்ணி இருக்கனும்” அவளது தலையைத் தடவினார் மேகலை.

 

அத்தையை நெகிழ்வோடு பார்த்த ஜனனியின் கைகள் யுகனை அணைத்துக் கொண்டன. அவனும் அவளுக்கு உயிர் என்று அவ்வணைப்பு சொல்லாமல் சொல்லியது.

 

இக்காட்சியைக் கண்ட சத்யாவுக்கு இனம்புரியாத உணர்வலையொன்று உடலில் ஊடுறுவியது. ஆம்! அனைத்தையும் அவன் கேட்டான், பார்த்தான். இந்த அழகிய காட்சியைத் தன் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்ட சத்யாவின் விழிகள் ஜனனியைத் தொட்டு மீண்டன.

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!