தேன் 33
காலை தேநீர் இடைவேளை நேரத்தில் ராதாவை தேடத் தொடங்கிய மகிழ்மதியின் மனசு, ஒரு முள் நுனியில் அமர்ந்தது போல பெரும் அவஸ்தைப்பட்டது..
“எப்படியும் லஞ்ச் டைம்ல எப்பாடு பட்டாவது அவங்கள கண்டுபிடிச்சு உண்மையை வெளிக்கொண்டு வரணும் நம்மளுக்கு இப்போதைக்கு வேறு வழியே இல்லை..” என்று முடிவெடுத்தாள்.
இயந்திரங்களின் பின்புறம் நிழல் போல ஒளிந்துகொண்டு அவள் ராதாவுக்காக காத்திருந்தாள்.
நொடிகள் மணி போலவும், நிமிடங்கள் நாள் போலவும் சென்று கொண்டிருந்தன.
அந்த நேரம் மணி ஒன்று அடிக்க, இடம் முழுவதும் சத்தமிட்டுக் கொண்டிருந்த இயந்திரங்கள் திடீரென உயிரை இழந்தது போலச் சத்தமின்றி நின்றன.
ஒரே நேரத்தில் எல்லா சக்கரங்களும் மந்தமடைந்து, சுழலும் பட்டன்களின் ஒளி கூட கறுத்து மறைந்தது.
அந்த அமைதிக்குள், தொழிலாளர்கள் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர்.
மகிழ்மதி அவசரமாகக் கண்களை அலசி ராதாவைத் தேடினாள்.
அவளுக்குத் தேவைப்படுகிற ஒரே முகத்தைத் தேடிய போது, கூட்டத்திலிருந்து தனியே வந்து அவளது கண் முன் நின்றார் ராதா.
கண்களில் வியப்பும் பயமும் கலந்திருந்தது.
எந்த வார்த்தைகளும் மொழியாமல், இரும்பு கையால் மகிழ்மதியைப் பிடித்து, கூட்டத்திலிருந்து மறைவான ஒரு இடத்திற்கு இழுத்துச் சென்றாள்.
விரைவாக, யாரும் கவனிக்காத வழியாக, தொழிலாளர்கள் உடைமாற்றும் இடத்திற்கு அழைத்துச் சென்று கதவைத் தாழிட்டார்.
அங்கு ஒரு மாயான அமைதி. வெளியில் கூட்ட நெரிசல் இருந்தாலும், இந்த அறைக்குள் சுவரில் அடைபட்ட காற்று போல ஒரு திடீர் அமைதி. மகிழ்மதி அங்கிருந்த ராதாவின் மனதில் உள்ள பாரத்தை உணர்ந்தாள்.
அதன் நடுவே, ராதா தன் மனக் கதவைத் திறந்தாள்.ராதா அதிரும் குரலில்,
“இங்க பாரம்மா… நான் சொல்லறதை கவனமா கேளு இது ரொம்ப ஆபத்தான இடம் மருந்துன்னு எதையோ தயாரிக்குற மாதிரி காட்டுறாங்க… ஆனா உண்மையிலே அதெல்லாம் வெறும் முகச் சாயம் தான்
இங்கே பெரிய பெரிய பெட்டிகளை கொண்டு வருறாங்க அதுல முக்கியமா போதை மருந்துகளும் இருக்குது… இன்னும் ஏதோ இருக்குது…”
ராதா மூச்சை இழுத்துப் பிடித்து குரலின் ஓசையை குறைத்தபடி,
“இங்க பல பேரு வேலை செய்றாங்க அதோட மர்மமா சில பெட்டிகள் வருது திரும்பியும் போகுது அந்தப் பெட்டிகளுக்குள்ள என்ன இருக்குன்னு எங்களுக்கு தெரியாது ஆனா… ஒருத்தருக்குத்தான்..” என்று இழுத்தார்.
மகிழ்மதியின் கண்கள் இருண்டன.
“அது யாரு..? அந்தப் பெட்டில என்ன இருக்குன்னு இதுவரைக்கும் நீங்க ஒரு தடவை கூட பார்த்ததில்லையா நல்லா யோசித்து பாருங்க..” என்று ஏதாவது துப்பு கிடைக்குமா என்று மகிழ்மதி ஆர்வத்துடன் கேட்டாள்.
“ஆஹ்.. ஒரு தடவை… நானும் இன்னும் சில பெண்களும் அந்த பெட்டிகளை தூக்கும்போது, அந்தப் பெட்டியின் ஓரத்தில் இரத்தம் ரத்தக்கரை படிந்து கிடந்தது அப்போ தான் புரிஞ்சது… இதுக்குள்ள வேற ஏதோ தப்பா இருக்குன்னு..”
அதற்குப் பிறகு, தினமும் அந்தப் பெட்டிகளை தூக்கிச் செல்வது ஏதோ பாவத்தை சுமப்பது போல இருந்தது..”
“சரி அந்த ஒருத்தர் யாரு..?”
“இல்லம்மா எனக்கு மூணு பொண்ணுங்க இருக்காங்க அவங்க பெயரை சொல்லிட்டா… என்னோட மூணு பொண்ணுங்களோட வாழ்க்கையும் நாசமா போயிடும்.. அவங்களுக்காக தான் நாம் உயிரோடு இருக்கேன் தயவுசெய்து இதுக்கு மேல என்கிட்ட ஒன்னும் கேட்காதம்மா…” என்று கூறிய ராதாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
மகிழ்மதி திடீரென அருகே நெருங்கி கையைப் பிடித்து,
“அம்மா, நீங்க கவலைப்படற அளவுக்கு எதுவுமே நான் நடக்க விட மாட்டேன் இங்க நடக்கும் குற்றங்களை எப்படியாவது தடுக்கணும்
நீங்க சொல்லுற ஒவ்வொரு விஷயமும் எனக்கு பெரிய ஆதாரம் பயப்படாதீங்க உங்க பொண்ணுங்களுக்கு எதுவும் ஆகாது ..” என்று நம்பிக்கையான வார்த்தைகளை கூறினாள்.
ராதாவின் உதடுகள் நடுங்கின. ஒரு நிமிடம் நம்பிக்கை, அடுத்த நிமிடம் பயம், அந்தக் கலக்கம் அவரது முகத்தில் வெளிப்பட்டது.
அவர் மெல்லத் தலை குனிந்து,
“எங்களுக்கு சம்பளம் தர்றது நாராயணன் அவன் தான் முதலாளியோட நேரடியா பேசுறவன்
முதலாளி பெயர்… எங்களுக்குத் தெரியாது அவன் வி. எம் சார் என்று ம்ட்டும் தான் கூப்பிடுவான் அவர் மூன்றாவது மாடி ரூம்ல இருக்கார் அவ்வளவுதான்.. வேற ஒன்றும் தெரியாது..” என்று வேகமாக அனைத்தையும் ஒப்பித்தார் ராதா.
மகிழ்மதி மேலும் ஏதோ கேட்க வாய் திறந்த அந்த நேரம் வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“டக்… டக்…”
அந்த அமைதியிலே அந்த ஒலி மின்னல் அடித்தது போல இருவரையும் உறைய வைத்தது.
மகிழ்மதி, ராதா இருவரும் ஒரே நேரத்தில் கதவினைப் பார்த்தனர்.
அவர்களின் மூச்சுக் காற்றே சத்தமாகக் கேட்கும் அந்த நொடி, உண்மையிலே உயிர் மரணம் என்னும் கேள்வியுடன் ஸ்தம்பித்து போய் நின்றது.
“டக்… டக்…”
மீண்டும் கதவு தட்டும் சத்தம். ராதா நடுங்கும் விரல்களால் மகிழ்மதியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“அவன் தான்…” என்று மெல்ல மனம் துடிக்க கிசுகிசுத்தாள்.
மகிழ்மதி ஒரு நொடி ‘நாராயணன்..’ என்ற வார்த்தையை மனதில் இரும்பாகப் பதித்துக் கொண்டாள்.
உடனே தன் முகத்தில் இருந்த போலீஸ் அதிகாரியின் தீவிரத்தைக் களைந்து, அங்கே வேலைக்கு வந்த ஒரு சாதாரண பெண்ணின் தோற்றத்தை அணிந்து கொண்டாள்.
கண்களில் ஆர்வம், உதடுகளில் ஓர் அப்பாவித்தனம், அவள் தன் வேடத்தில் சிறப்பாக மிளிர்ந்தாள்.
கதவு திறந்தது. அதன் வாசலில் உயரமான கருமை நிறம் கொண்ட உடல்வாகுடன், சிவந்த கண்களை உடைய ஒருவன்.
முகத்தில் சற்றே அகந்தை, அதிக கடுமை ஆனால் முழுவதும் கூர்மையான சந்தேக நிழல். அவனது உருவ அமைப்பை வைத்தே அவன் நாராயணன் தான் என்று ஊகித்தாள் மகிழ்மதி.
கதவை திறந்ததும் அவனது பார்வை உடனே அறைக்குள் ஓடியது. முதலில் ராதாவைப் பார்த்தான்.
அடுத்த நொடியில் மகிழ்மதியிடம் சற்று நீண்ட பார்வையை நிறுத்தினான்.
நாராயணன் மிகக் கடினமான குரலில்,
“இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க லஞ்ச் டைம்ல எல்லாரும் வெளியே போய் சாப்பிடுறாங்க இங்க தனியா என்ன பேச்சு நடக்குது..?” என்று அவன் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் விசாரணை போலவே இருந்தது.
ராதா பயத்தில் திணறினாள். ஆனால் மகிழ்மதி ஒரு நொடியும் தடுமாறவில்லை.
அவள் புன்னகையுடன் நிமிர்ந்து, அப்பாவியாக,
“எதுவுமில்ல சார்… நான் புதுசா வந்தவங்க ராதா அம்மா தான் எனக்கு வேலை எப்படிச் செய்யணும், விதிமுறைகள் என்னன்னு சொல்லிக் கொண்டிருந்தாங்க…” என்ற மகிழ்மதியின் குரல் சாதாரணமாக இருந்தாலும், உள்ளுக்குள் அவளது இதயம் துடித்துக்கொண்டிருந்தது.
நாராயணன் இன்னும் ஒரு கணம் இருவரையும் பார்த்தான்.
அவன் கண்களில் நம்பிக்கையும், சந்தேகமும் ஒன்றோடொன்று சண்டையிட்டது.
பிறகு அவன் மெதுவாக மகிழ்மதியை ஒவ்வொரு அங்குலமாக தலை முதல் பாதம் வரை மோகத்துடன் ரசித்தபடி,
“சரி… புதுசா வந்தவங்களா? ஹ்ம்… பரவாயில்லை ஆனா ராதா… நீ கவனமா இரு யாருக்கும் அதிகம் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல. புரிஞ்சுதா..?” என்ற அவனது வார்த்தைகளில் எச்சரிக்கையும், மறைமுக அச்சுறுத்தலும் பளிச்செனத் தெரிந்தது.
அவனது பார்வை மீண்டும் மகிழ்மதியைக் கடந்து சென்றது.
ஒரு கணம் உருத்து விழித்துவிட்டு,
“போங்க… எல்லாரும் ஹாலுக்குப் போய் சாப்பிடுங்க” என்று கூறிவிட்டு வெளியேறினான்.
அவன் வெளியேறியதும், அறைக்குள் இருந்த காற்றே சுதந்திரமாக மாறியது போல இருந்தது.
ராதா அதிர்ச்சியில் அமர்ந்தாள். மகிழ்மதி ஆழ்ந்த மூச்சை இழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
ஆனால் அவள் மனதில் ஓர் சிந்தனை மட்டும் புகைந்து கொண்டிருந்தது.
‘இந்த நாராயணன் தான் அடுத்த சாவி அந்தக் கொம்பை பிடிக்க வேண்டும் என்றால் இந்த வாலைப் பின்தொடர வேண்டும்…’
நாராயணன் தனது முதலாளியை சந்திப்பதற்காக மூன்றாவது மாடியை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
மகிழ்மதி அவனுக்கு பின்புறம், ரொம்பக் கவனமாக அடி எடுத்து வைத்தாள்.
ஒரு நொடி கூட அவள் மனசு தளரவில்லை. ஒவ்வொரு பக்கமும் கண்களால் அளந்தபடி, அவனது நகர்வை ரகசியமாய் பின்பற்றினாள்.
மூன்றாவது மாடிக்கு செல்லும் படிக்கட்டின் முன் வந்தவுடன், நாராயணன் திடீரென்று நின்றான்.
பின் திரும்பிப் பார்த்தான். மகிழ்மதியின் இதயம் அங்கேயே பாய்ந்து விழுந்தது போல இருந்தது. நாராயணன் திரும்பிப் பார்ப்பான் என்று மகிழ்மதி சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவள் உடனே அருகிலிருந்த சுவர் ஓரம் சாய்ந்து கொண்டாள். நாராயணன் ஒருவேளை சந்தேகப்பட்டான் போலத் தோன்றியது.
நாராயணனின் கண்கள் கூர்மையாய் சுற்றின. பின்பு அவன் கைபேசியை எடுத்து யாருடனோ குறுகிய குரலில்,
“அந்த வேலை தேர்ட் ஃபுலோர்ல தான் நடக்குது யாரும் உள்ளே வரக்கூடாது நீங்க எல்லாம் தயாரா இருங்க… நான் பாத்துட்டு வர்றேன்…” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
மகிழ்மதியின் காதுகள் அந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டன. அவள் மனதில் ஓர் சந்தேகம் பிறந்தது.
‘மூன்றாவது மாடிதான் உண்மைகள் இருக்கும் இடம் அங்கேதான் அந்த ரகசியம் புதைக்கப்பட்டிருக்கு..’ என்று மகிழ்மதி மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.
நாராயணன் மெல்ல மேலே ஏறத் தொடங்கினான். மகிழ்மதி ஒரு நொடிக்கூட இழக்காமல், அவனுக்குப் பின்னால், நிழல் போலச் சென்றாள்.
அவள் மூச்சு விடும் சத்தம் கூட வெளியே ஒலிக்காதபடி கட்டுப்படுத்திக் கொண்டாள். ஒவ்வொரு படிக்கட்டும் அவளுக்குப் போர்க்கள அடி போலவே இருந்தது.
அந்த மாடி தான் அவள் தேடிய பதில்களைத் தரப்போகிறது என்பதை மனம் முழுக்க உணர்ந்தாள். மூன்றாவது மாடி கதவின் முன் நாராயணன் நின்றான்.
அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய கீ-கார்டு எடுத்து கதவின் முன் வைத்தான்.
டீப் என்ற மெல்லிய ஒலி கதவு திறக்கப்பட்டது. அவன் உள்ளே நுழைந்தவுடனே கதவு சத்தமாக அடைந்தது.
மகிழ்மதி உடனே சுவர் ஓரத்தில் சாய்ந்து நின்றாள். அவள் இதயம் துடிப்பு அந்த கதவின் அடைப்பு சத்தத்தோடு ஒன்றாகச் சேர்ந்து போனது.
அவள் சுவாசத்தை சமப்படுத்திக்கொண்டு அந்த கதவின் மேல் கவனம் செலுத்தினாள்.
அந்தக் கதவு சரியாக தாழிடாமல் ஓரம் திறந்திருக்கிறதைக் கவனித்தாள். அந்தக் கணம் அவளுக்கு ஒரு வித அதிர்ஷ்டம் போலத் தோன்றியது.
மெல்ல மெல்ல, சத்தமே வராதபடி அவள் அந்தக் கதவைத் தள்ளினாள். உள்ளே நுழைந்தவுடன் அவள் பார்வைக்கு தெரிந்தது.
சிறிய இருட்டறை. அதன் நடுவில் பெரிய இயந்திரங்கள், அவற்றின் மேல் மின்விளக்குகள் பச்சை, சிவப்பு என மினுக்கிக் கொண்டிருந்தன.
அந்த இயந்திரங்களைச் சுற்றி சில ஆண்கள் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒருவன் பெரிய பெட்டியிலிருந்து வெள்ளை பவுடர் நிறைந்த பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தான்.
மற்றொருவன் அந்தப் பாக்கெட்டுகளை வேறு பாக்ஸ்களில் அடைத்துக் கொண்டிருந்தான்.
மகிழ்மதியின் கண்ணில் மின்னல் பாய்ந்தது.
“இது மருந்து தொழிற்சாலை இல்லை இது சட்டவிரோதமான போதைப் பொருள் தயாரிப்பு மையம்!” என்று அவளது உதடுகள் மெதுவாக முணுமுணுத்தன.
அந்தத் தருணத்தில், ராதாவின் முகம் அவள் மனதில் தோன்றியது. அவள் சொல்லாமல் தடுமாறிய எல்லாம் இப்போது வெளிப்படையாகி விட்டது.
மகிழ்மதி அவளது தொலைபேசியை எடுத்து அனைத்தையும் புகைப்படம் அளிக்க முயற்சி செய்தாள். அப்போது
“யார் அங்கே?!” என்ற குரல் கேட்டதும், மகிழ்மதி உடல் முழுக்க சலனமடைந்தது.
மெல்லத் திரும்பிப் பார்த்தாள். அந்தக் குரல் காதில் பட்டவுடனேயே, மகிழ்மதி திடீரென சுவர் ஓரத்தில் இருந்த இருளைப் பயன்படுத்தி தன்னை மறைத்துக் கொண்டாள்.
அவளது இதயத் துடிப்பு அவளது காதுகளுக்கே பெரும் சத்தமாகக் கேட்கும் அளவிற்கு வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது.
சில நிமிடங்களில் அங்கிருந்த ஆட்கள் அனைவரும் வேகமாக வெளியேறி சென்றார்கள்.
அந்த அறை ஒரே ஒரு அமைதியான இருள் மண்டலமாக மாறியது.
மகிழ்மதி நெஞ்சிலிருந்த சுவாசத்தை தணித்து,
‘இப்போ தான் சரியான சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு சீக்கிரம் எல்லாத்தையும் போட்டோ எடுக்கனும்…’ என்று நினைத்தாள்.
மெல்ல கையடக்கத் தொலைபேசியை எடுத்து புகைப்படம் எடுக்க முனைந்தாள்.
அவள் லென்ஸை அந்த இயந்திரங்களும் பவுடர் பாக்கெட்டுகளும் உள்ள திசையை நோக்கித் திருப்பினாள்.
வெறும் ஒரு கிளிக்கில், பெரிய சான்று கைக்கு வந்துவிடும் போலிருந்தது. ஆனால் அந்த தருணமே வாசல் மீண்டும் திறந்தது.
காலடி சத்தங்கள் அதிர்வுடன் ஒலித்தன. மகிழ்மதி திடுக்கிட்டு தொலைபேசியை அணைத்து வைத்துக் கொண்டு மீண்டும் அதே இடத்தில் சுருண்டு ஒளிந்தாள்.
இம்முறை நான்கு, ஐந்து பேர் உள்ளே நுழைந்தனர்.
அவர்களோடு வந்திருந்த நாராயணன் சற்றே முன் வந்து,
“இதுதான் சார், ஒரிஜினல் பவுடர். இந்த ஒரு பவுடராலேயே பல கோடி வருது இன்னைக்கு அந்த பொண்ணுகளோட சேர்த்து இதையும் அனுப்பிடுவோம்…” என்று கூறினான்.
அந்தக் குரல் மகிழ்மதியின் உடலை முழுவதும் மின்னல் போலக் குத்தியது.
அவள் கண்கள் பெரிதாக விரிந்து, அந்த நால்வரின் முகங்களை நோக்கி சில நொடிகள் உறைந்து போயின.
அவர்கள் யார் என்பதை உணர்ந்த அதிர்ச்சியில் அவளது மூளை ஒரு பாறையாகி சிந்திக்க மறந்து நின்றது.
அதே நொடியில் மூச்சை மறைத்திருந்த இருளில் ஒரு நிழல் அவளது பின்புறத்தில் நகர்ந்தது.
மகிழ்மதி திரும்பிப் பார்க்க முயன்ற கணமே அவளது தலையில் பலமாக பெரும் அடி வீழ்ந்தது.
ஒரு கணத்தில் கண்ணில் தெரிந்த காட்சிகள் அனைத்தும் காரிருளில் மறைந்தன.
அவளது முயற்சி, அவள் கண்ட சான்றுகள், அவளது உற்சாகம் அனைத்தும் அந்த ஒரே அடி இடியாக தலையில் இறங்கிய நொடியில் சிதறிப் போனது.