33. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

4.8
(80)

நெருக்கம் – 33

டிவோர்ஸ் என்ற வார்த்தையில் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப் போனாள் அபர்ணா.

அவன் டிவோர்ஸ் என்றுதான் கூறினானா..?

இல்லை எனக்குத்தான் தவறாக காதில் விழுந்து விட்டதா..?

புரியவில்லை அவளுக்கு.

சற்றே திணறிப் போய் அமர்ந்திருந்தவள் மெல்ல மெல்ல தன்னை இயல்பாக்கி கொண்டு அவனுடைய முகத்தை அண்ணாந்து பார்த்தாள்.

“நீ.. நீங்க என்ன சொன்னீங்க…? எனக்கு அது தெளிவா கேட்கல.. ம.. மறுபடியும் சொல்ல முடியுமா ப்ளீஸ் குரு…?” என திக்கித் திணறியவாறு அவள் கூற அவனோ பெரிய மூச்சை மீண்டும் உள்ளே இழுத்துக் கொண்டவன்

“நான் சொன்னது உன்னோட காதுல சரியாதான் விழுந்திருக்கு அபர்ணா.. எனக்கு விவாகரத்து வேணும்.. இந்தக் கல்யாணத்துல இருந்து விடுதலை வேணும்… எஸ் ஐ வாண்ட் டிவோர்ஸ்… இந்த டிவோர்ஸுக்குப் பதிலா நீ என்ன கேட்டாலும் உனக்கு கொடுக்கிறதுக்கு நான் தயாரா இருக்கேன்..” என நிறுத்தி நிதானமாக அவன் தெளிவாகக் கூற அவளோ விக்கித்துப் போனாள்.

அவனுடைய பிடிக்குள் அகப்பட்டிருந்த அவளுடைய கரங்களோ கிடுகிடுவென நடுங்கத் தொடங்கின.

விழிகள் கலங்கிப் போய்விட,

“நான் அப்படி என்ன தப்பு பண்ணினேன்..? நீங்க சும்மா தானே சொல்றீங்க.. எ… எனக்குத் தெரியும்.. நீங்க என்ன டிவோர்ஸ் பண்ண மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்… இதெல்லாம் விளையாட்டு தானே..? ஏதோ பிராங் பண்றீங்க அப்படித்தானே..?” என குரல் நடுங்க தலையை மறுப்பாக அசைத்து அசைத்து பேசிய அவளை விளங்காத பார்வை பார்த்தவன் தன்னுடைய விழிகளை ஒரு கணம் இறுக மூடித் திறந்தான்.

“லிசின்… எனக்கு பிராங்க் பண்றதுக்கோ உன் கூட விளையாடுறதுக்கோ கொஞ்சம் கூட நேரம் இல்ல அபர்ணா..” என்றான் அவன்.

“இ..இல்ல நீங்க பொய் சொல்றீங்க நான் நம்ப மாட்டேன்.. இது பொய் தான்…” என்றவளது உடலும் ஒரு தடவை தூக்கிப் போட்டது‌

“நான் பொய் சொல்றது கிடையாது..” மீண்டும் அழுத்தமாக வெளிவந்தது அவனுடைய குரல்.

அவளோ உடைந்து போனாள்.

அவளுடைய கண்களைக் கட்டி அழைத்து வந்து மிகப்பெரிய நடுக்காட்டில் அவளை நிறுத்திவிட்டு எதுவுமே கூறாமல் சென்றதைப் போல அந்த அறைக்குள் தத்தளித்தவள் அவனையே அடிபட்ட பார்வை பார்க்க அந்தப் பார்வையை அவனால் சந்திக்க இயலாமல் போனது.

“நி.. நிஜமாத்தான் சொல்றீங்களா குரு..? என்ன டிவோர்ஸ் பண்ணப் போறீங்களா…?” என அவளாகவே மீண்டும் தழுதழுத்த குரலில் கேட்க இப்போது அவளைப் பார்த்தவன் “எஸ்..” என்றான்.

அவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தன.

தொண்டையின் மீது மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்து அழுத்தியதைப் போல இருந்தது.

அவனுடைய பிடிக்குள் இருந்த தன்னுடைய நடுங்கிய கரங்களை உருவி எடுத்துக் கொண்டவள் இதழ்கள் துடிக்க சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

விழிகளில் இருந்து கண்ணீர் மழை போல வழியத் தொடங்கியது.

உள்ளுக்குள் சீராக துடித்துக் கொண்டிருந்த அவளுடைய இதயத்தை யாரோ கரத்தால் பிடித்து கசக்கி எடுத்ததைப் போல வலிக்கத் தொடங்க தன்னுடைய வலது கரத்தை உயர்த்தி மார்போடு அழுத்திப் பிடித்துக் கொண்டவள் தன்னுடனேயே போராடத் தொடங்கினாள்.

உடலும் உள்ளமும் அவளுடைய சொல் பேச்சு கேட்காமல் தடுமாறி தவித்து வேதனையில் சுருண்டுகொள்ள அதைத் தட்டி எழுப்பும் வழிவகை தெரியாது மேலும் அழுகையே பெருகியது அவளுக்கு.

“நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா குரு..? தப்பு பண்ணினா ம.. மன்னிச்சிடுங்க… இல்லன்னா ஏதாவது தண்டனை கொடுங்க… நான் ஏதாவது தப்பு பண்ணினா எங்க அப்பா என்ன அடிப்பாரு… அதுக்கு அப்புறமா நான் அந்த தப்பை மறுபடியும் பண்ணவே மாட்டேன்… ப்ரோமிஸ்… நான் ஏதோ ஒரு தப்பு பண்ணிட்டேன்னு தோணுது… அது என்ன தப்பா இருந்தாலும் அதுக்கான தண்டனையை மட்டும் கொடுங்க.. நா.. நான் மறுபடியும் அந்தத் தப்பை சத்தியமா பண்ணவே மாட்டேன்.. ஆனா.. இந்த டிவோர்ஸ் மட்டும் வேண்டாமே… என்ன ஏதுன்னு புரியாம என்னை உங்க வாழ்க்கைய விட்டு துரத்த பார்க்கிறது கொஞ்சம் கூட சரியில்ல குரு…” என்றாள் அவள்.

“இதோ பாரு அபிம்மா… நீ தப்பு பண்ணிட்டேன்னு நான் சொல்லவே இல்லையே… இதுல உன்னோட தப்பு எதுவுமே இல்லை… என்னோட தப்புதான் எல்லாமே..” என்றான் அவன்.

விழிகளில் வழிந்த கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்டவள் “அப்போ நான் தப்பு பண்ணல தானே..? அப்போ எதுக்காக என்ன தண்டிக்கிறீங்க..? ஏன் என்ன வேணாம்னு சொல்றீங்க..?” என அழுதவாறே கேட்டாள் அவள்.

“எனக்கு இப்போ 38 வயசு ஆகுது… இத்தனை வயசு வரைக்கும் நான் கல்யாணமே பண்ணிக்கல… இனி பண்ணிக்கவும் கூடாதுன்னுதான் இருந்தேன்… ஆனா என்னோட மனசு மாறியதுக்கு ஒரே ஒரு காரணம் எனக்குன்னு ஒரு குழந்தை வேணும்…

என்னோட குழந்தைக்காக மட்டும்தான் நான் இந்த கல்யாணமே பண்ணிக்கிட்டேன்.. இப்போ அதுவே முடியாதுன்னா இந்தக் கல்யாணத்துக்கு அர்த்தமே இல்லையே அபர்ணா…” என அவன் கூற அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து வேகமாக எழுந்து நின்றவள்,

“கு.. குழந்தைக்காகவா..? எ… எனக்கு புரியல..” என்றாள்.

“இப்போ உன்னோட ரிப்போர்ட் பாத்துட்டுதான் வந்தேன்… உன்னால குழந்தை பெத்துக்க முடியாது அபர்ணா… உன்னோட கர்ப்பப்பை ரொம்ப வீக்கா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.. அதைவிட கர்ப்பப்பை குழாயில் அடைப்பு இருக்குன்னு சொன்னாங்க… அதுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணினா கூட உன்னால அம்மாவாக முடியாது..” என அவன் கூறி முடிக்க இவளுக்கோ தலை சுற்றத் தொடங்கியது.

தன்னுடைய சுய கட்டுப்பாடு மொத்தமாக இழந்து அதிர்ச்சியின் தாக்கத்தில் தன் தலையைப் பற்றிக் கொண்டவள் நிற்க முடியாது அப்படியே தரையில் சரிய நொடியில் வேகமாக எழுந்து அவளைத் தாங்கிக் கொண்டான் குருஷேத்திரன்.

“ஓ காட்..” என முனகியவாறு அவளைத் தன்னுடைய கையில் ஏந்திக் கொண்டவன் அப்படியே அவளைத் தூக்கிச் சென்று அங்கிருந்த படுக்கையில் கிடத்த மெல்ல விழிகளை மூடியவாறு கிடந்த அபர்ணாவுக்கோ கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சுரணை வரத் தொடங்கியது.

“ஹேய் ஆர் யூ ஓகே நவ்..?” என அவன் அவளுடைய கன்னத்தில் தட்டியபடி அழுத்தமாகக் கேட்க *ஆம்..” என்றாள் அவள்.

“எ… என்னால குழந்தை பெத்துக்க முடியாதா குரு…? எ.. என்னால நம்ம கு.. குழந்தைய சுமக்க முடியாதாஆஆ…?” நடுங்கியவாறு வெளிவந்தது அவளுடைய மென் குரல்.

ஆம் என்றான் அவன்.

அவளுடைய உரையாடல்கள் அவனை பலவீனமாக்குவதைப் போல இருந்தன‌

சீக்கிரமாக அவளிடம் அனைத்தையும் எடுத்துக் கூறிவிட்டு எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என எண்ணியவன்,

“ஐ அம் சாரி..” என்றான் .

அவளுக்கு அழுகை பெருகியது.

தேம்பித் தேம்பி உடல் குலுங்கும் வண்ணம் அழுகையில் கரைந்தாள் அவள்.

மனம் முழுவதும் ஏமாற்றமும் வெறுமையும் அச்சமும் ஒரே நொடியில் சூழ்ந்து கொள்ள அக்கணமே தன்னுடைய அன்னையைக் காண வேண்டும் போல பரிதவித்தது அவளுடைய காயம் கண்ட மனம்.

“வலிக்குது குரு.. ஏன் ஏன் எனக்கு இப்படி..? நான் யாருக்கும் எந்த பாவமும் பண்ணவே இல்லையே.? என்னால ஏன் ஒரு குழந்தையை சுமக்க முடியாது..?”

“ப்ளீஸ் டோன்ட் க்ரை அபர்ணா..”

“மு..முடியலையே.. என்னால தாங்க முடியலையே.. ஐயோ….” மார்பைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள் அவள்.

“நா… நான் நிஜமாவே உங்களுக்கு வேணாமா..? குழந்தை பெத்துக்க முடியாதுங்கிற ஒரே காரணத்துக்காக என்ன வேணாம்னு முடிவு பண்ணிட்டீங்களா…?” என உடைந்து போன குரலில் அவள் அழுகையோடு கேட்க,

“இத்தனை வருஷம் கழிச்சு நான் கல்யாணம் பண்ணது அந்த குழந்தைக்காகத்தான்.. குழந்தைக்காக மட்டும்தான்… அதுவே எனக்கு கிடைக்காது என்கிறப்போ இந்த கல்யாணம் நீ எல்லாமே எனக்கு தேவையில்லாதது தான்.. ஆல்ரெடி 12 வருஷத்துக்கு முன்னாடியே ஒருத்தி என்ன ஆண்மை இல்லாதவன்னு சொல்லி விட்டுடுட்டுப் போயிட்டா… இப்ப கூட நிறைய பேர் எனக்கு ஆண்மை இல்லை நான் ஆம்பளையே இல்லைன்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க… அவங்க அத்தனை பேருக்கு முன்னாடியும் நானும் ஆம்பள தான்னு நிரூபிக்கணும்… அதுக்கு எனக்கு குழந்தை வேணும்..

மனைவி குழந்தைன்னு எல்லார் முன்னாடியும் நானும் வாழ்ந்து காட்டணும்னு ஆசைப்படுறேன்… அதுக்காக மட்டும்தான் இத்தனை வருஷம் கழிச்சு இந்த வயசுல கல்யாணம் பண்ணி இருக்கேன்… ஆனா இப்போ உன் மூலமாக இப்படி ஒரு பிரச்சனை வரும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல…

உன்னால குழந்தை பெத்துக்க முடியாதுங்கிற குறை மறுபடியும் என் மேல திரும்பிடக் கூடாது அபர்ணா.. இனியும் நமக்கு குழந்தை இல்லன்னா பாக்குறவங்க இன்னமும் அவன் அப்படியே தான் இருக்கான்னு என்னதான் தப்பா நினைப்பாங்க… யாருமே உன் மேல குறை இருக்குன்னு நம்ப மாட்டாங்க… நான் ஆம்பள இல்லன்னுதான் நினைப்பாங்க… எனக்கு என்னோட கௌரவம்தான் முக்கியம்..” என அவன் கூறிக் கொண்டே போக,

“அப்போ எதுக்காக என்ன கல்யாணம் பண்ணீங்க..?” என வெடித்தாள் அவள்.

“நானா என்ன கல்யாணம் பண்ணுங்கன்னு உங்ககிட்ட கேட்டேன்..? நீங்க தானே தேடி வந்து என்னை பொண்ணு கேட்டீங்க… இப்போ இப்படி வேணாம்னு சொல்றதுல என்ன நியாயம்…?” எனக் கூச்சலிட்டாள் அவள்.

“ஏன்னா நீ ரொம்ப அழகா இருந்த.. நான் உன்னை தேடி வந்ததுக்கு அது மட்டும்தான் காரணம்.. நான் என்னோட மனைவின்னு எல்லாருக்கும் முன்னாடி காட்டும் போது என் மனைவி அழகா இருக்கனும்னு ஆசைப்பட்டேன்… நீ அழகா இருந்ததால மட்டும்தான் நான் உன்னைத் தேடி வந்தேன்.. மத்தபடி எந்தக் காரணமும் கிடையாது…”

அ… அப்போ நீங்க என்ன காதலிக்கவே இல்லையா…? என்ன பிடிச்சதால கல்யாணம் பண்ணிக்கலையா..?” என அடிபட்ட குரலில் ஏக்கமாக வினவினாள் அவள்.

“வாட் நான்சென்ஸ்..? காதலா..? ஹா.. ஹா… காதல் எனக்கு இனி வரவே வராது.. அந்தக் காதலை 12 வருஷத்துக்கு முன்னாடியே குழி தோண்டி புதைச்சுட்டேன்.. நான் உன்னை காதலிக்கவும் இல்ல இனியும் காதலிக்க மாட்டேன் முட்டாள்தனமா உளர்றத நிறுத்து…” எனக் கர்ஜித்தான் அவன்.

துடிதுடித்துப் போனாள் அவள்.

அவளுடைய உடலை மிகப்பெரிய கத்தியால் யாரோ இரண்டாக பிளந்தது போல வலித்தது அவளுக்கு.

அவன் தன்னை ஒரு மனுசியாகக் கூட நினைத்துப் பார்க்கவில்லை என அக்கணமே உணர்ந்து கொண்டாள் அபர்ணா.

அவனுடைய அவப்பெயரை துடைப்பதற்காக மட்டுமே இந்தக் கல்யாணம் நடந்திருக்கின்றது என்பது அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.

தன்னைத் தேடி வந்து பெண் கேட்டது காதலால் அல்ல வெறும் உடல் கவர்ச்சியால் என்பதை புரிந்து கொண்டவள் நொறுங்கிப் போனாள்.

ஒட்டுமொத்த வேதனையும் அவளை சிதைக்கத் தொடங்கியது.

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என எண்ணி அழுவதா… இல்லை தன் உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒருவன் தன்னை வேண்டாம் என குப்பையைப் போலத் தூக்கி எறிவதை நினைத்து அழுவதா..?

எந்த இழி நிலையை எண்ணி அழுது கரைவது எனப் புரியாது துடித்துக் கொண்டிருந்தது அந்தப் பெண்ணின் மனம்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 80

No votes so far! Be the first to rate this post.

1 thought on “33. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!