64
தேன் 34
அவளது தலையில் பட்ட அடியின் கனத்த வலியில் உலகமே இருண்டு போனது. எத்தனை நேரம் கடந்தது என்று தெரியவில்லை.
மெல்ல மெல்ல அவளது கண்கள் திறக்கும் போது, அவள் முதலில் பார்த்தது ஒரு காரிருள் நிறைந்த அறை.
அவளுக்கு நேராக மேலே ஒரு மின்குமிழ் மட்டும் ஆடிக் கொண்டிருந்தது. அவள் நகர முயன்றாள். ஆனால் கைகள், கால்கள் அனைத்தும் பெரிய கயிறுகளால் கட்டப்பட்டு இருந்தன.
குளிர்ந்த தரையின் குளிர்ச்சியால் அவளது உடலே நடுங்கியது. ‘நான் எங்கே?’ என்று அவள் மனதிற்குள் குரல் கொடுக்க, வெளியில் எங்கோ ஒரு பெரிய கதவு கரகரப்பாக மூடப்பட்ட சத்தம் கேட்டது.
அதோடு சேர்ந்து தொலைவில் யாரோ பேசிக்கொண்டிருக்கும் குரல்கள் மெல்லிய சலசலப்பாய் வந்தது.
அந்தச் சத்தங்கள் அதிகரிக்க, ஒருவன் தீவிரமாகச் சிரித்துக் கொண்டே,
“அந்தப் பொண்ணு இப்போ அங்கே போகப் போறா… நம்ம கையில் விழுந்தவங்க யாரும் பிழைக்கவே முடியாது…” என்று கூறினான்.
அந்த வார்த்தைகள் மகிழ்மதியின் இதயத்திற்குள் கத்தி பாய்ந்தது போல இருந்தது. அவள் மூச்சை அடக்கி, கைகளால் கட்டுக்களை அவசரமாகச் சுழற்றி தளர்த்த முயன்றாள்.
ஆனால் கயிறு அவள் தோலை வெட்டியபடி இரத்தம் சொட்ட வைத்தது. அதே நேரத்தில், சுவர்களுக்குள் இருந்த பழைய விசிறி சத்தமிட்டுப் புழங்க, மின்னல் போல ஒரு ஒளி ஒளிர்ந்து திடீரென அணைந்தது. அந்தச் சிறு ஒளியில், சற்றே தொலைவில், இரண்டு கண்கள் மட்டுமே சிவப்பாய் ஒளிர்ந்தன.
அவளது இதயம் அதிர்ச்சியில் துடிக்க, அந்தக் கண்கள் யாருடையது என்று தெரிந்துகொள்ளும் முன்பே, மெல்ல அந்த நிழல் அவளிடம் நெருங்கிக் கொண்டிருந்தது.
அந்தச் சிவந்த கண்கள் மெதுவாக அவளது அருகே வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு அடியும் தரையில் உலோகச் சங்கிலி இழுக்கும் சத்தம் போல ஒலித்தது.
அவளது மூச்சு நெஞ்சுக்குள் சிக்கி, ஒரு துளி வியர்வை கன்னத்தில் வழிந்தது. “ஹூம்…” என்று ஒரு குரல்.
அந்தக் குரலில் கூசும் சிரிப்பு கலந்திருந்தது. மகிழ்மதி தன் கண்களைச் சுருங்கச் சுருங்க பார்த்தாள்.
இப்போது தெளிவாகத் தெரிந்தது. அவன்… நாராயணனின் வலது கை. இரும்பு போல பாரிய உடல், அகோரமான முகம், மற்றும் இருண்ட சிரிப்பு.
“எழுந்துட்டாளா…?” என்று கேலி சிரிப்புடன் அவன் அவளை நோக்கினான்.
அவன் கையில் இருந்த இரும்புக் கோல் தரையில் அடிக்கப்பட்டவுடன், அறை முழுக்க அதிர்ந்தது.
“யார் நீ? சும்மா வந்து நம்ம வேலையில தலையிடுற… உன்ன மாதிரி ஆளுகளுக்கு என்ன நடக்கும்னு இப்போ பாரு…” என்று அவன் சத்தமாகக் கூற,
வெளியில் இருந்தவர்கள் சிரித்துக் கொண்டே அந்தக் கதவை மூடினர். இப்போ அந்த இருண்ட அறையில், மகிழ்மதி அந்த வலிமையான கைதி போலிருக்கும் குண்டன். இருவரும் மட்டுமே.
அவன் மெதுவாக நெருங்கி, அவளது கட்டிய கைகளை நோக்கியபடியே சிரித்தான்.
மகிழ்மதி கண்களை மூடி ஒரு நொடியில் மூச்சை இழுத்து வெளியே விட மனதில் உள்ள கோபமும், தைரியமும் சேர்ந்து எரியத் தொடங்கியது.
மகிழ்மதி அந்த கொடூரனின் கண்களை நன்கு ஏற்றுக் கவனித்தாள். அவனது மலை போன்ற உருவத்தை பார்த்தும் மகிழ்மதியின் உதட்டில் எகத்தாளமான சிரிப்பு ஒளிர்ந்தது.
அந்தச் சிரிப்பை பார்த்ததும், எரிமலை போலக் கொதித்த அந்த உருவம்,
“என்னடி… என்ன போலிஸ் என்கிற திமிரா? இப்பவே உன்னை இங்கேயே கொன்று புதைச்சிடுவேன், பார்த்துக்கோ!” என்று சீறினான்.
அதற்குச் சற்றும் சளைக்காமல், மகிழ்மதி தன்னம்பிக்கையோடு,
“நான் நக்கிற நாயோட பேச விரும்பல… உன் முதலாளியோட தான் பேசணும் அவர உடனே வரச் சொல்லு!” என்று கடுமையாகக் கூறினாள்.
அவளது வார்த்தைகள் அந்தக் கொடூரனை ஒரு கணம் அதிர வைத்தது.
‘இப்படி கட்டி வச்சிருந்தும் இவளுக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?’ என்று அவனது உள்ளம் கோபத்தோடு சிந்தித்தது.
அடுத்த நொடி அவளுக்கு பின் இருந்து கைதட்டும் ஓசை கேட்டது. முன் வந்து நின்றவன் வேறு யாருமில்லை, டாக்டர் விக்ரம்.
“என்னம்மா, சௌக்கியமா இருக்கியா?” என்று கேலி கலந்த சிரிப்புடன் கேட்டான்.
அவனைப் பார்த்த மகிழ்மதி கர்வமாகப் புன்னகைத்தபடி,
“சொல்லுங்க விக்ரம் அங்கிள்… இந்த நிலைமையிலேயும் என்னைப் பார்த்து சௌக்கியமா இருக்கியா என்று கேட்கிறீங்களே… ஓஹ் ஓஹ்! நீங்க டாக்டரல்லோ, அப்படித்தான் கேப்பிங்க
நான் ரொம்ப சௌக்கியமா இருக்கேன் ஆனா உங்க சௌக்கியத்துக்குத்தான் பிரச்சினை வரப்போகுது..!” என்று மகிழ்மதி கூறியதும் அவளது வார்த்தைகள் விக்ரமின் முகத்தில் சிரிப்பை ஒரு கணத்தில் மறையச் செய்தது.
சற்று நேரம் களிப்பு கொண்டிருந்த முகம், கண் முன்னே புயல் போல் மாறியது.
“அச்சச்சோ! உனக்கு இன்னும் இந்த விக்ரம் அங்கிளப் பற்றி முழுசா தெரியலமா…? இவ்வளவு தெரிஞ்சதுக்கு அப்புறமும் நான் உன்னை உயிரோட விட்டுடுவேன்னு நினைக்கிறியா..?” என்று மகிழ்மதியின் அருகில் வந்து அவளது முகத்தின் அருகே உற்றுப் பார்த்து பற்கள் கடித்தான்.
மகிழ்மதி சற்றும் அசராமல் சிரித்தபடி,
“தெரிஞ்சுக்கலாம்னு தான் வந்து இருக்கேன் விக்ரம அங்கிள் உங்களோட ஃபுல் ஹிஸ்டரிய அழகா சொன்னிங்கன்னா என்னோட கேஸ க்ளோஸ் பண்ண வசதியா இருக்கும் அதோட உயிருக்கு பயந்திருந்தா, நான் உங்க இடத்துக்குள்ள இவ்வளவு தைரியமா நுழைந்திருப்பேனா?” என்ற அவளது சொற்கள் விக்ரமின் நரம்பை புடைக்க வைத்தது.
அவன் பின்வாங்கி, இரு விரல்களைச் சேர்த்து சுடக்கிட, அடுத்த நிமிடம் அவள் முன் ஒருவரின் உருவம் நிழலாய்த் தோன்றியது.
அந்த முகத்தைக் கண்டவுடன் மகிழ்மதியின் கண்கள் அதிர்ச்சியுடன் விரிந்து, மறுபடியும் சுருங்கின. பலவிதமான உணர்ச்சிகள் அவளது முகத்தில் மின்னியதை ரசித்தவனாய் விக்ரம் மனநிறைவோடு சிரித்தான்.
“என்னம்மா… இவன் எப்படி இங்கேன்னு பார்க்கிறியா..?” என்று கேலியுடன் கேட்க,
அந்த நேரம் சேகர் முன்வந்து, அவளது கழுத்தைப் பிடித்து,
“இந்த பொட்டக் கழுதை எவ்வளவு டார்ச்சர் பண்ணினா தெரியுமா? என்னால அந்த அடியெல்லாம் தாங்கிக்கவே முடியல சொல்லுங்க டாக்டர்… இவளை உடனே கொல்லலாமா? இல்லா ஒவ்வொரு விரலையும் நறுக்கி, டார்ச்சர் பண்ணி சாகடிக்கலாமா..?” என்று பாட்டுப் பாடுவது போல ஏதோ ஸ்ருதியில் பாடியபடி கேட்டான்.
முதலில் வாயடைத்துப் போன மகிழ்மதி, ஒரு கணம் சுவாசத்தைச் சரிசெய்து சிறு சிரிப்போடு,
“ஓகே, ஓகே… நீங்க ஆறுதலாகவே கொள்ளலாம் சேகர் ஆனா, உங்க பார்ட்னர் ரகுவரன் அசிஸ்டன்ட் கமிஷனர் எங்கே? அவரையும் கூப்பிடுங்க கடைசியாக அவர முகத்தையும் பார்த்துப் பேசிட்டு போறேன்…” என்று நக்கலாய்ப் பேசினாள்.
அவளது வார்த்தைகள் கேட்டு விக்ரமும், சேகரும் திடுக்கிட்டுப் பார்த்தனர்.
அதே நேரம் முன்னிருந்த கதவு திடீரெனத் திறந்து, ரகுவரன் உள்ளே வந்தான்.
“சபாஷ் மகிழ்மதி! எங்களோட போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு உங்களைப் போல ஒரு ஆள் கிடைத்திருக்கிறதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும்!” என்று சிரித்தபடி கூறினான்.
அவளோ அவனை வெறுப்போடு பார்த்து எச்சில் உமிழ்ந்தபடி,
“ச்சீ! உனக்கு அந்த வார்த்தையைச் சொல்ல அருகதையே இல்லை போலீஸ்னு சொல்லிக்கிட்டு இந்த மாதிரி நாய்களுக்கு வாலாட்டுற தேசதுரோகி!” என்று சினம் கொண்ட சிங்கமாக கர்ச்சித்தாள்.
உடனே ரகுவரன் துப்பாக்கியை எடுத்து, அவளது நெற்றியில் வைத்து,
“இங்கே மரணம் மட்டும் தான் உனக்குக் கிடைக்கும் மகிழ்மதி பயமா இருக்கா.. உயிர் போய்விடும் என்று பயப்படுறியா..? வேணும்னா இவங்கள்ட்ட பேசி உனக்கு உயிர் பிச்சை வாங்கி தாரேன் கண் காணாத இடத்துக்கு ஓடிப் போயிரு..” என்று கிண்டலிட்டான்.
மகிழ்மதி உதடுகளில் மில்லி மீட்டர் அளவு சிறிய புன்முறுவல் தோன்றியது.
“நான் சாவுக்கு பயப்படுறவளா இருந்திருந்தா, இந்த போலீஸ் வேலைக்கு வந்திருக்க மாட்டேன் நான் செத்தாலும் பரவாயில்லை… ஆனா உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வராம விடமாட்டேன்..!”
அவளது துணிச்சலைக் கண்டு ரகுவரன் வியப்புடன், துப்பாக்கியை மீண்டும் பாக்கெட்டில் வைத்தான்.
“நல்ல தைரியம்… ஆனா எப்படி நான் இவங்களோட ஆள்ன்னு கண்டுபிடிச்ச?” என்று கேட்டான்.
மகிழ்மதி நிதானமாய்,
“மிஸ்டர் ரகுவரன், அந்த விஷயத்தில நான் உங்கள ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டேன் போல ஓகே தென் நான் இந்த குரூப்பின் வேலைகள் பத்தின ஆதாரங்களைத் திரட்டி உங்களுக்கு போன்ல அன்னைக்கு நைட்டே அனுப்பிட்டேன் ஆனா நீங்க அந்த மெசேஜைப் பார்த்தும் எந்த ரெஸ்பான்ஸும் இல்ல அதே நேரம் காலையில உங்கள ஆபீசுக்குத் தேடி வந்தா ஆபீஸ்லையும் நீங்க இல்ல, அதோட உங்களோட கஸ்டடியில் இருந்த சேகரையும் காணல ஆனா அதுக்கு முன்னுக்கே உங்க மேல எனக்கு சந்தேகம் ஆரம்பிச்சிட்டு எப்போன்னா முதன்முதல் சேகர்ட கேள்வி கேட்டப்போ, அவன் உங்களைப் பார்த்து தான் பதில் சொன்னான் அதுவே என்ன ரொம்ப யோசிக்க வச்சது..” என்றாள்.
ரகுவரன் புன்னகையோடு,
“வாவ்… ரொம்ப புத்திசாலி ஆனா இந்த புத்திசாலித்தனம்தான் உனக்கு மரணத்தைத் தரப்போகுது..!” என்று மீண்டும் துப்பாக்கியை எடுக்க முனைந்தான்.
“சரி, எதற்கும் சாகிறதுக்கு முன்னால டாக்டர் அங்கிள் கூட இன்னொருவர் இருந்தாரே… அவரையும் கூப்பிடுங்க அவரை பார்த்து ஒரு வார்த்தை பேசிட்டு உங்களோட துப்பாக்கிக்கு பதில் சொல்றேன்..” என்றவள்,
“வேணாம்! நானே கூப்பிடுறேன்…” என்று கூச்சலிட்டாள்.
“அண்ணா! அண்ணா!”
அவள் குரல் கேட்டவுடனே அந்த இரும்புக் கதவு மெதுவாக இரைச்சலுடன் திறந்து கொண்டது. இருண்ட முகத்துடன் வேட்டையாடும் வேங்கையைப் போல மகிழ்மதியின் முன் வந்து நின்றான் விக்ரம்.
மகிழ்மதி அவனை பார்த்து,
“வாங்க அண்ணரே ரெண்டு பேருக்கும் பெயர்ல தான் ஒற்றுமை இருந்துச்சுன்னு பார்த்தா… நீங்க செய்ற களவாணித்தனத்துலையும் ஒத்துப் போகுதே வாட் இஸ் த மெடிக்கல் மிராக்கிள்..!” என்று கிண்டலிட்டாள்.
விக்ரமோ கோபத்துடன்,
“நீ என் மேல கை வச்ச நேரமே உன்னோட உயிரை எடுத்திருக்கணும்!” என்று எரிக்கும் பார்வையோடு கூறினான்.
மகிழ்மதி அனல் கக்கும் கோபத்துடன்,
“ச்சே! நீ எல்லாம் அண்ணான்னு சொல்றதுக்கே வெட்கமா இருக்கு? தங்கச்சி குளிக்குறதையும், டிரஸ் மாத்துறதையும் ஒழுக்கமில்லாம மறைந்திருந்து பார்க்குற இழிவான ஜென்மம் அப்படிபட்ட ஒரு கேவலமானவன நான் அண்ணன்னு கூடச் சொல்ல மாட்டேன்!” என்று வெறுப்புடன் கத்தினாள்.
அவளது வார்த்தைகள் விக்ரமின் மனதை குத்தியது. ஆனாலும் அவன் சிரித்தபடி சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு வந்து,
“எங்களோட பழைய பாக்கி எல்லாம் அப்புறமா தீர்த்துக் கொள்ளலாம் முதல் இந்த பேப்பர்ல சைன் வை சீக்கிரம்!” என்று கட்டளையிட்டான்.
மகிழ்மதி புருவம் சுருக்கியபடி அந்த தாள்களை எடுத்துப் பார்த்தவள், அவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று வாசிக்கத் தொடங்கினாள்…