💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 35
வினிதா மற்றும் அஷோக்கைப் பின் தொடர்ந்து சென்ற தேவனுக்கு உள்ளம் கொதித்தது. அவள் மீது கோபம் தான், என்றாலும் வேறு ஒருவனுடன் அவளைப் பார்க்கையில் இதயத்தைப் பிடுங்கி எறியும் வலி.
“பேபிமா! பாப்கார்ன் வாங்கிட்டு வர்றேன் இரு” என்றவாறு அவளை விட்டுச் சென்றான் அஷோக்.
அவள் பார்வை தேவன் மீது படிந்தது. அவனும் அவளைத் தான் விழியகற்றாது பார்த்தான். அவளோடு கரம் கோர்த்துப் பயணித்த பொழுதுகள், காதல் கதை பேசிய கணங்கள் கண்முன் நிழலாடின.
“பேபிமா…!!” எனும் அழைப்போடு தூரத்தில் அஷோக் வருவதைக் கண்டவனுக்கு இரத்த நாளங்கள் கொதிக்க, வினிதாவின் கைப்பற்றி அங்கிருந்த அறையினுள் சென்றான்.
எதிர்பாராத அச்செயலில் அதிர்ந்து போனவளோ “என்ன பண்ணுற தேவன்? கையை விடு” என்று திமிற, “அடேங்கப்பா! அதுக்குள்ள மறந்து போன ஞாபகங்கள் வந்துருச்சா?” என்று கேட்க ஒரு செக்கன் யோசனைக்குச் சென்றாள்.
“புரியாத மாதிரி நடிக்காத டி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னைத் தெரியாதுன்னு சொன்னியே. இப்போ பெயர் சொல்லிக் கூப்பிடற. அதைக் கேட்டேன்”
“அது வந்து.. அஷு” என்றவளுக்கு பதில் வரவில்லை.
“என்னடி நீங்க இவ்ளோ அசிங்கமா நடந்துக்கிறீங்க? புது பாய் ப்ரெண்ட் பிடிக்கிறது முக்கியம் இல்ல. பழையதை எல்லாம் சொல்லிட்டு புடிங்க. என்னைப் பற்றி மறைக்கிறதால அவனுக்கும் உண்மையா இல்ல. அது தெரியுமா?” அவன் கேட்ட கேள்வியில் விழி விரித்தாள் வினிதா.
“பாய் ஃப்ரெண்ட்?” அவன் சொன்ன வார்த்தையை உச்சரித்துப் பார்த்தவளின் முகத்தில் பல உணர்வுகளின் கலவை.
“இல்லையா பின்ன? அவன் பேபிமானு உருகுறதும், அவன் கையைப் பிடிச்சா நீ காந்தம் மாதிரி இழுபட்டுப் போறதும் அடடா.. என்ன ஒரு லவ்வு” படுநக்கலாகக் கேட்டான் தேவன்.
“போதும் தேவன்! இத்தோட உன் பேச்சை நிறுத்திக்க. உன் கற்பனைக்கு ஏத்த மாதிரி அளந்து விடுறதைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்” கோபமாக கையை விடுவிக்கப் போராட,
“நீ இப்படிப்பட்ட ஒருத்தியா இருப்பேனு நான் நினைக்கவே இல்ல. ச்சே நீ எல்லாம் ஒரு மனுஷியா?” என்று கேட்டவனை ஒரு பார்வை பார்த்தாளே அன்றி எதுவும் பேசவில்லை.
“இப்போ பேசு. வாய் திறந்து பொய்யை இஷ்டத்துக்கு இழுத்து வீசு”
“உன்னை மாதிரி புரிஞ்சுக்காத ஆளுங்க கிட்ட பேசினா என் சக்தியும் நேரமும் தான் வேஸ்ட் ஆகுமே தவிர பத்து பைசா பிரயோசனம் இல்லை. உன்னை என்னவோனு நெனச்சிட்டு இருந்தேன் டா. ஆனால் இப்படி ஒரு நெனப்போட இருக்கியே” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வினிதா.
“இப்படி இல்லனா எப்படி இருப்பேன்னு நெனச்ச? ஒன்னு விட்ட உடனே இன்னொரு பொண்ணுக்கு ரூட்டு விட்டு லவ் பண்ணிட்டு இருப்பேன்னு நெனச்சியா, உன்னை மாதிரி?” அவளை வெறுப்போடு பார்த்தான் தேவன்.
“நான் எப்படி வேணா இருப்பேன். அதுக்கு நீ கமெண்ட் அடிக்கக் கூடாது. லவ்வு லவ்வுங்கிறியே நான் லவ் பண்ணுறதை நீ பார்த்தியா?”
“அதான் பார்த்தேனே கையைப் பிடிச்சத” என்று சொன்னவனைக் கூர்ந்து நோக்கி, “நீ என் கையைப் பிடிச்சிட்டு இருக்கியே. அப்போ நீ என்னை லவ் பண்ணுறதா நெனச்சிக்கவா?” தன்னைப் பற்றியிருந்த அவனது கையைப் பார்த்துக் கேட்க, சட்டென கையை உதறிக் கொண்டான் தேவன்.
“உன்னை லவ் பண்ணனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல. நீ அவனையே” என்று சொல்ல வந்தவன் அடுத்து அவள் செய்த காரியத்தில் ஸ்தம்பித்து நின்றான்.
சட்டென உயர்ந்து அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தாள் வினி. அவனுக்கோ கண்கள் அகன்று விரிய, “இதே மாதிரி அஷுவுக்கு முத்தம் கொடுத்ததைப் பார்த்தா சொல்லு, நான் ஒத்துக்கிறேன் அவனை லவ் பண்ணுறேன்னு” அங்கிருந்து சென்று விட, அதிர்வு மாறாமல் நின்றிருந்தான் தேவன்.
அவள் தந்த முத்தம்! அதுவும் இரு வருடங்களின் பின்பு என நினைத்தவுடன், அவளது பிரிவு மனதில் தோன்ற மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிற்று.
“என்னை விட்டுப் போனவ தானே நீ” கோபமாக அங்கிருந்து சென்றவனை நோக்கி அதிர்ச்சியோடு வந்தான் ரூபன்.
“என்னடா ஆச்சு? பேயைப் பார்த்த மாதிரி முழிக்கிற?” என்று தேவன் வினவ, “அ..அது ஒன்னும் இல்ல. நாம வீட்டுக்கு போகலாம்” என்றவனை ஆழ்ந்து பார்த்து, “வினிதாவைப் பார்த்தியா?” எனக் கேட்டான்.
ஆமென்று தலையாட்டிய ரூபனுக்குப் புரிந்து போனது தேவனும் அவளைப் பார்த்து விட்டான் என்று.
“ஒரு அக்கா வந்தாங்க சித்தா! என்னைப் பார்த்து சிரிச்சிட்டு போனாங்க” என்று யுகன் சொல்ல, “நீ சிரிக்காத டா. அவளுங்க அப்படித் தான் சிரிச்சு சிரிச்சு நம்மளையும் சிரிக்க வெப்பாளுங்க. அப்பறம் அந்த சிரிப்பை மொத்தமா துடைச்சிப் போட்டு அழ வெச்சிட்டுப் போவாளுங்க” அழுத்தமாக பிடரியைக் கோதிக் கொண்டான் தேவன்.
“தேவா! சின்னப் பிள்ளை கிட்ட என்ன பேசுற நீ? வா வீட்டுக்குப் போகலாம்” ரூபன் அவனது தோளில் கை போட, “இங்கே வந்திருக்கக் கூடாதுல்ல சித்தா. சாரி! நான் கூப்பிட்டதால தானே வந்தோம்” முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான் சின்னவன்.
“நோ யுகி அப்படி சொல்லாத. நடக்கனும்னு இருந்தா அது நடந்தே தீரும். நாம அதிலிருந்து தப்பிக்க முடியாதுல்ல. நீ இப்படி சொல்லும் போது தான் எனக்கு கில்ட்டியா இருக்கு” தேவனுக்கு முகம் வாடியது.
“டோன்ட் வொர்ரி சித்தா. அய்ம் ஓகே. இதோ சிரிக்கிறேன்” இதழ் விரித்துச் சிரித்தவனை அள்ளிக் கொண்டான் பெரியவன்.
……………
தன்னோடு சற்று மென்மையாகப் பேசியவனைக் கண்டு ஜனனி வியக்கும் போதே அவனது வன்மை சொரூபம் வெளிவந்திருந்தது.
தரையில் அடித்த அலைபேசி சில் சில்லாக நொறுங்கிப் போய் அலுமாரி மூலையில் அடைக்கலம் புகுந்தது.
கண்களில் அத்தனை சீற்றம். குறுக்கும் நெடுக்கும் நடந்தவனுக்கு ஆத்திரம் தீரவில்லை. அதில் சொல்லப்பட்ட செய்தி அவனை வெறியேற்றி இருந்தது.
ஜனனிக்கு அவனோடு பேச வேண்டும் போல் இருந்தது. விடயம் என்னவென்று தெரிந்தால் ஆறுதலாகப் பேசலாம். ஆனால் அவன் இருக்கும் மனநிலைக்கு எதுவும் சொல்ல மாட்டான் என்பது புரிய அமைதியாக நின்றாள்.
‘என்ன பண்ணுறது? கோபமா இருக்காரே. பேசினா நம்மளை கடிச்சுக் குதறிடுவார். அதுக்காக கை கட்டி இருக்கவும் மனசு கேட்கல’ இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துப் போனாள் ஜனனி.
அடுத்த ஐந்து நிமிடங்களில் யுகன் வந்து விட, “டாடி” என தந்தையைக் கட்டிக் கொண்டான்.
அவனுக்கு உடல் இறுகி இளகியது. அவ்வளவு தான் உடைந்து விட்டான் சத்யா. யுகனை இறுக்கி அணைத்துக் கொண்டவனது பார்வை ஜனனியைத் தொட்டு மீள, அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவளுக்கு இதயத்தில் மெல்லிய வலி.
அவளை இங்கிருந்து செல்லுமாறு சொல்கிறான். தனது பலவீனமான நிலையை அவள் பார்ப்பதை சத்யா விரும்பவில்லை. அதன்படி அங்கிருந்து சென்று பல்கோணியில் நின்று கொண்டவளுக்கு காரணம் அறியாது கண்ணீர் சுரந்தது.
தான் விலக்கி வைக்கப்பட்டது போன்றதொரு உணர்வு. அவனது நிலமையை சரி செய்ய வேண்டும் என்று தானே அவள் மனம் சற்று முன் துடித்தது. ஆனால் அவன் தன்னை ஒற்றைப் பார்வையில் விலக்கி நிறுத்தி விட்டானே.
யுகனை இறுக்கிக் கொண்டவனோ, “எனக்கு மட்டும் ஏன் டா இப்படி நடக்குது? நான் யாருக்கு துரோகம் செஞ்சேன்? நான் நல்லவன் இல்லையா?” மனம் பதைபதைக்கக் கேட்டான்.
“நோ டாடி! யூ ஆர் ஜெம். நீங்க ரொம்ப நல்லவர் தெரியுமா? கடவுள் நல்லவங்களைத் தான் அதிகமா சோதிப்பாராம். ஆனால் அவங்களுக்கு தான் கடைசியில் அழகான கிஃப்டையும் தருவாராம். அப்படிப் பார்க்கும் போது நீங்க நல்லவர் டாடி. உங்களுக்கு கண்டிப்பா கிஃப்ட் கிடைக்கும்” தந்தைக்கு தந்தையாகிப் போனான் மகன்.
“எனக்கு என்ன கிஃப்ட் கிடைக்கப் போகுது? எனக்குக் கெடச்ச மிகப் பெரிய கிஃப்ட் நீ தான்டா” என்றவனோ, ‘ஆனால் உன்னையும் தொலைச்சிடுவேனோன்னு பயமா இருக்கு கண்ணா. நீ என்னை விலகிட்டா என் உசுரே போயிடும்’ என உள்ளுக்குள் கதறித் தீர்த்தான்.
“நான் மட்டுமில்ல டாடி. பாட்டி, ரூபி, சித்தானு எல்லாருமே உங்க மேல பாசமா இருக்காங்க. அவங்களும் உங்களுக்கு கிஃப்ட் தான். ஜானுவும் கூட” இறுதியாக ஜனனியின் நாமம் கூற,
“ஜானுவா?” புருவம் இடுங்கக் கேட்டான் சத்யா.
“எஸ் டாடி! இப்போ நான் வரலனா நீங்க ரிலாக்ஸா ஃபீல் பண்ணி இருப்பீங்களா?” என்று கேட்க, இல்லையென்று தலையசைத்தான்.
நிச்சயமாக இல்லை! யுகியின் பூ முகமும், ஆறுதலான வார்த்தைகளும், அன்பான தலை வருடலும் அல்லவா அவன் காயத்துக்கு மருந்தாகின.
“என்னை இங்கே வர வெச்சது ஜானு. நான் சித்தா கூட வெளியில் போனேன்ல. ஜானு கால் பண்ணி உடனே வர சொன்னா. அதான் வந்தோம்” என்று சொல்ல, அவனுக்கோ நெஞ்சம் நெகிழ்ந்தது.
அவள் பேசினால் பிரச்சினை வரும் என்று அவனுக்காக யுகியை வரவழைத்து இருக்கிறாள். ஆக, இன்றைக்கு அவனது மருந்து ஜனனி தானே?
“நான் போகட்டுமா டாடி?” என்று கேட்ட மகனை, ஏன் என்பதாகப் பார்க்க, “நீங்க ஜானுவைத் தேடுறீங்க தானே? போய் தாங்க்ஸ் சொல்லுங்க” அறையிலிருந்து வெளியேறினான் யுகன்.
உண்மையே. அவன் மனமும் கண்களும் அவளைத் தான் தேடின. பால்கணிக்குச் சென்றதை நினைவு கூர்ந்தவனோ அங்கு செல்ல, எங்கோ வெறித்துப் பார்த்திருந்தாள் அவள்.
“ஜானு” மெல்லமாய் அழைக்க, திடுக்கிட்டுத் திரும்பினாள்.
“சொல்லுங்க” சுரத்தையின்றி வந்தது அவள் குரல்.
அவனுக்கு குற்றவுணர்ச்சி தலை தூக்கியது. எத்தனை கலகலப்பான பெண் அவள். அவளது ஊரில் வைத்து அதனைப் பார்த்தானே. அவள் இப்படி இருக்கக் காரணம் அவன் தான் என்று மனம் குடைந்தது.
“தாங்க் யூ. யுகி மட்டும் இந்நேரம் வரலைனா நான் இப்படி இருந்திருக்க மாட்டேன். அவனை வர வெச்சது நீ தான்னு தெரிஞ்சது. என்ன சொல்லுறதுன்னு தெரியல” என்றவனை நொடி நேரம் நோக்கி விட்டு,
“நான் யுகிக்காக தான் பண்ணேன். எனக்கு யுகியை பிடிக்கும். அவனுக்கு உங்களைப் பிடிக்கும். நீங்க கஷ்டப்பட்டா அது அவனைப் பாதிக்கும்னு நெனச்சேன். தாங்க் யூ எல்லாம் தேவையில்லை.
இனிமேல் அவ்ளோ எல்லாம் கோபப்படாதீங்க. நீங்க கோபப்பட்டு வீசின செல்ஃபோன் திருப்பி வராது. அதைக் கூட வாங்கிக்கலாம். ஆனால் இதுவே வேற ஏதாவது இப்போர்டன்டான ஒன்னா இருந்திருந்தா அதை திரும்ப வாங்க முடியாம போயிரும். அப்பறம் ஃபீல் பண்ணி பிரயோசனம் இல்ல” என்றவளது பேச்சை உள்வாங்கிக் கொண்டு அமைதியாக நின்றான் சத்யா.
“லெக்சர் எடுக்குறேன்னு திட்ட மாட்டீங்களா?” அவள் அதிசயமாகப் பார்க்க, “இன்னிக்கு உனக்கு என் ஏச்சில் இருந்து விடுதலை” என்றதும் தன்னை மறந்து துள்ளிக் குதித்தாள்.
“நெஜமாவே திட்ட மாட்டீங்களா? சண்டை போட மாட்டீங்களா? நான் என்ன பண்ணாலும் எதுவும் சொல்ல மாட்டீங்களா?” என்று அவள் கேட்க,
“ஒன்னுமே சொல்ல மாட்டேன்” மறுப்பாகத் தலையசைத்தான்.
“ஹிட்லர் ஹீட்டான மூடில் இருந்து வெளி வந்தாச்சு. ஜாலி” கவலை மறந்து அங்கிருந்து ஓட,
‘அடிப்பாவி! ஹிட்லரா?’ வாயில் கை வைத்து நின்றவனுக்கு கொஞ்ச நஞ்ச கோபமும் பறந்து போனது போலிருந்தது.
இருப்பினும் மறந்து போகவில்லை, அலைபேசியில் சொல்லப்பட்ட விடயத்தை. மனம் அதைப் பற்றிப் பிடித்து சுற்றிச் சுழல, இனி தன் குடும்பத்தில் என்ன நடக்கும் என்பது புரியாமல் நிற்கலானான் ஆடவன்.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி