அந்தக் காகிதத்தை நன்கு வாசித்தவள், திடீரென நேராக நிமிர்ந்து, விக்ரமின் கண்களை நேராகப் பார்த்தாள். அவளது பார்வையில் கிண்டலும், கேலியும் கலந்திருந்தது.
அவள் பார்க்கும் பார்வையை பார்த்துச் சினம் கொண்ட விக்ரம்,
“பார்த்ததெல்லாம் போதும், முதலில் இந்த பேப்பர்ஸ்ல சைன் வை உடம்பில உசுரு இருக்கணும்னு ஆசைப்பட்டின்னா மரியாதையா நான் சொன்னத வாய மூடிட்டு செய் அப்படி செய்யலன்னா இவங்ககிட்ட பேசி உனக்கு போனா போகுதுன்னு உயிர் பிச்சை வாங்கித் தாரேன்..” என்று விக்ரம் கூற,
“அதெல்லாம் சரி… இந்த பேப்பர்ல ஒரு பிழை இருக்கே… கவனிச்சீங்களா?” என்று அவள் புன்னகையோடு கேள்வி எழுப்பினாள்.
விக்ரம் குழப்பமடைந்தான். அவளது வார்த்தைகளில் மறைந்திருக்கும் சதியைப் புரிந்து கொள்ள முடியாமல், “என்ன குழப்புற? சும்மா நேரம் கடத்திக்கிட்டு இருக்காம சீக்கிரமா சைன் வை,” என்று சத்தமிட்டான்.
“ஐயோ அண்ணா!” என்று அவள் வதனத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு உதட்டிற்குள் சிரிப்பை அடக்கியபடி,
“சொத்து என்னண்ணா சொத்து எல்லாத்தையும் நீயே வச்சுக்கொள் ஆனா அது எல்லாம் எழுதி வாங்குறது இருக்கட்டும் முதல்ல இங்க வா இந்தப் பத்திரம் சம்பந்தமா உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் அதை உன் மண்டைக்குள்ள வெச்சி முதல் கேள் அப்புறம் சைன் வைக்கிறேன்.” என்று அவள் கூறும் பேச்சின் சுருதி, அவளது பார்வை அனைத்தும் விக்ரமின் மனதைக் குழப்பச் செய்தன.
‘சரி, அருகில் சென்று பார்ப்போமே… என்னதான் சொல்லப் போகிறாள் இவள் என்ன கூறினாலும் அனைத்து சொத்தும் எனக்கு மட்டும்தான் அதிலிருந்து நான் கொஞ்சம் கூட மாறவே மாட்டேன்’ என்ற எண்ணத்தில் அவன் மெதுவாக முன்வந்தான்.
மகிழ்மதி, காகிதத்தின் முதல் பக்கத்தைத் சுட்டிக் காட்டினாள். தனது பெயரின் பக்கத்தில் விரலை வைத்து,
“பாருங்க அண்ணா! மண்ட மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே..! இதுல இனிஷியல் பிழையா போட்டு இருக்காங்க பாருங்கோ… அப்படி இருந்தா, சொத்து எல்லாம் உங்களுக்கு வராது அதைக் கொஞ்சம் திருத்துங்க… அப்புறம் சைன் பண்ணுறேன்,” என்று ஒரு சிறு பிள்ளைக்கு எழுத்துப் பிழையைச் சொல்வது போல, நகைச்சுவை கலந்த குரலில் விளக்கினாள்.
அவளது கிண்டலால் விக்ரமின் கண்கள் சிவந்தன. கோபம் தலைக்கேறியது.
“என்னடி! புதுசா ஏதோ கதை சொல்லுற… என்ன குழப்பீட்டு, இங்கிருந்து தப்பிச்சுப் போயிடலாம் என்று நினைக்கிறியா?” என்று பெரும் குரலில் கத்தினான்.
“அண்ணா!” என்று அவள் மீண்டும் சிரித்தாள்.
“நான் உங்களை ஏமாத்தறது என் எண்ணமே இல்ல ஆனா… உங்க அப்பன் உனக்கு எதுவும் சொல்லலையா? இத்தனை நாளாக ஒரு உண்மையை மறைத்து வைத்த அந்த மகான் எங்கே…?”
அந்த வார்த்தை விக்ரமின் நெஞ்சில் இடியாய் விழுந்தது. அவனது கண்கள் பிதுங்கி வெளுத்தன. அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் இரு அடிகள் தன்னை அறியாமல் பின்னே நகர்ந்து நின்றான்.
மகிழ்மதி சிறிய புன்முறுவலோடு திருப்தியாய்ப் பார்த்தாள்.
“எங்கே உங்க அப்பன்? கதவுக்குப் பின்னாலேயே ஒழிஞ்சிருந்து எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தானே இருக்கிறார் அவர முதல்ல வரச் சொல்லுங்க.. சரி அவரையும் நானே கூப்பிடுறேன் சிங்கரவேலன் மாமா… எங்க இருக்கீங்க? சீக்கிரமா வாங்க! உங்கள பார்க்க உங்களோட அன்பு மருமகளும், மகனும் வழி மீது விழி வைத்து காத்திருக்கின்றோம்..” என்று அவள் சத்தமிட்டு அழைத்தாள்.
அந்தக் கதவின் பின்னால் இருந்த சிங்கரவேலன், முகத்தில் பதற்றமும், அதிர்ச்சியும் ஒன்றாய் போட்டி போட்டு நிற்க முன்னே வந்தார். அவரைக் கண்டதும் அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவர் மீது திரும்பியது.
மகிழ்மதி எதிர்பார்த்தது போலவே, அவர் வந்து நின்ற நொடியில், கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது.
“என்னடி! எல்லாம் தெரிஞ்சிருச்சுன்னு திமிர்ல ஆடுறியா?” என்று கோபக் குரலில் கத்தினார்.
சிங்காரத்திடம் இப்படி ஒரு பதிலை எதிர்பாராத விக்ரம் அதிர்ச்சியில் பூமிக்குள் சென்றது போல அவனது மனம் உடைந்து போனது.
“அப்பா என்ன சொல்றீங்க..? அப்போ இவ்வளவு நேரம் அவள் சொன்னது எல்லாம் உண்மைதானா..?” என்று நடப்பது ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் மூழ்கிய படி விக்ரம் கேட்டான்.
சிங்கரவேலன் குழப்பத்துடன், “இது எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
“என்ன மாமா… நான் யாரு..? போலீஸ்காரி! ஒரு சின்ன துரும்பு கிடைச்சாலும் அதை பெரிய இரும்பா மாத்துறதுதான் போலீஸ்காரங்களோட புத்தி என்னோட விஷயத்துல அவ்வளவு வீக்னஸா நான் இருப்பேனா..?” என்று சிரித்தாள்.
“நீ என்ன சொல்ற..? நான் எந்த விஷயத்திலையும் அவ்வளவு சீக்கிரம் தப்பு பண்ணவே மாட்டேன் எல்லாத்தையும் பக்காவா பிளான் போட்டுத்தான் செய்றது அப்படி இந்த விஷயம் வெளிவர கொஞ்சம் கூட சான்சே இல்ல..” என்று சிங்காரம் கூறியதும்,
மகிழ்மதி பெருமையோடு சிரித்தாள்.
“மாமா… உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் நடந்திருக்கு அந்த சம்பவத்தால்தான் எனக்கு எல்லாமே தெரிய வந்தது டாக்டர் அங்கிள்… நீங்களே சொல்லுங்க உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு! உங்க மேல இருக்க நட்பாலதானே அவரோட மூத்த மகனுக்கே உங்க பேர வச்சாரு அப்படிப்பட்டவர் கிட்ட போய் நீங்க இந்த உண்மைய மறைச்சு இருக்கீங்களே இதுதான் உங்களோட விசுவாசமா..?”
விக்ரமின் உடம்பெல்லாம் வியர்த்து வழிந்தது. சிங்கரவேலன் டாக்டர் விக்ரமை முறைத்தபடி அருகில் வர பயத்தில் நான்கு அடிகள் பின்னே நகர்ந்து சுவரில் மோதினான்.
அவனது உடல் நடுக்கமும் பேச முடியாமல் வாய் தடுமாறி நிற்க அவனது சட்டை காலரைப் பிடித்து உலுக்கியபடி,
“சொல்லு! என்ன நடந்துச்சு? என்னாச்சு? எதை என்கிட்ட இருந்து மறைச்ச..? அவ சொல்றது உண்மையா நீ என்னை ஏமாத்திட்டியா? சொல்லுடா சொல்லு..” என்று வெறியோடு கத்தினார்.
“ஆமாடா… நீ போன பிறகு காயத்ரிக்கு மீண்டும் வயிற்று வலி வந்துச்சு காயத்ரி முதல் குழந்தை பிறக்கும் போதே மயக்கத்திலிருந்தா அப்புறம் இன்னொரு குழந்தையும் பிறந்துச்சு அப்போதும் அவளுக்கு சுய நினைவு திரும்பல அதுவும் பெண் குழந்தை தான் இரட்டை பெண் குழந்தைகள்தான் பிறந்தாங்க நீ கொண்டு போனது மூத்தவள் மகிழ்மதி… இன்னொரு குழந்தை நிவேதா ஆனா அந்த உண்மையை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெரியாம நான் மறைச்சிட்டேன் அந்த நேரம் காயத்ரி மயக்கம் தெளிஞ்சு குழந்தை எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்றது சரி குழந்தை இறந்து போச்சுன்னா இறந்த குழந்தை எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன் அந்த நேரம் வேற குழந்தையாவது அந்த ஆஸ்பத்திரியில் எடுத்து மாறி கொடுப்போம்னா அன்னைக்குன்னு நடந்த பிரசவங்கள் மிகக் குறைவு அப்படி இருக்கக் கடவுளா பார்த்து நான் தப்பிக்க எனக்கு கொடுத்த ஒரு பெரிய வாய்ப்பு என்று தான் இதை நான் சொல்லணும் என்னோட கெரியர் கெடக்கக் கூடாது என்பதற்காக மட்டும்தான்… அந்த இரண்டாவது குழந்தையை உன்கிட்ட காட்டவே இல்ல..”
இந்த வார்த்தைகளைக் கேட்ட சிங்கரவேலன், அதிர்ச்சியில் அவனை உற்றுப் பார்த்தார். மகிழ்மதியின் கண்கள் பெருமையோடு பிரகாசித்தன.
விக்ரமின் குரல் துடித்தது.
“25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பங்ஷன்ல நிவேதாவை பார்க்கும் போது தான் மகிழ்மதி, நிவேதா இருவரும் ஒரே மாதிரி இருக்காங்க என்ற நிதர்சனமே எனக்கு விளங்கியது ஆமாண்டா அவங்க ஐடெண்டிகல் டுவின்ஸ் எப்படியும் இந்த உண்மை கூடிய சீக்கிரம் வெளி வரும்னு அப்பவே எனக்கு தெரிஞ்சுடுச்சு செய்த பாவம்… இன்னைக்கு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.”
அங்கு நின்ற அனைவரின் இதயமும் கொதித்தது.
மகிழ்மதி சிரிப்போடு,
“நீங்க செய்த பாவங்களுக்கு தண்டனை… சீக்கிரமே உங்களைத் தேடி வரும்,” என்று உறுதியுடன் கூறினாள்.
அறையில் இருந்த ஒவ்வொருவரின் மூச்சும் கனமாகியது. உண்மை வெளிப்பட்ட நொடியில், காற்றே நிறுத்தப்பட்டது போல் உணர்ந்தனர்.