கிட்டத்தட்ட 12 வருடங்களாக தன்னைத் தயார்படுத்திப் பார்த்து நிகழ்த்திய அனைத்து திட்டங்களும் இன்றும் மண்ணோடு மண்ணாகிப் போனதை அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
குழந்தை விடயத்தில் அபர்ணாவுக்கு இப்படி ஒரு குறை இருக்கும் என அவன் எண்ணிக் கூட பார்க்கவில்லையே.
அவளை விவாகரத்து செய்ததற்கு பின்னர் பல கேள்விகள் எழும்பும் அதற்கும் தான் பதில் கூறியாக வேண்டும் என்று எண்ணி நொந்து கொண்டவனை வேலைகள் அழைத்தன.
செய்து முடிக்காத அலுவலக வேலைகள் அதிகம் இருந்ததனால் அனைத்து சிந்தனைகளுக்கும் தடா போட்டுவிட்டு வேலைகளை கவனிக்கச் சென்றான் குருஷேத்திரன்.
சில மணி நேரத்தில் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தவன் அந்த அறையின் அமைதியை அறவே வெறுத்தான்.
“ஷிட்.. இரிடேட்டிங்கா இருக்கு..” என முணுமுணுத்தவாறு ஓவியம் வரையும் அறைக்குள் நுழைந்தவன் தன்னுடைய மனதை ஒருநிலைப்படுத்தி ஓவியத்தை வரையத் தொடங்க ஒருநிலைப் படுத்திய அவனுடைய மனமோ அப்படியே நில்லாது மரத்திற்கு மரம் தாவும் குரங்கைப் போல அலைபாயத் தொடங்கியது.
எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் முடியாது போக எரிச்சலோடு தன் கரத்திலிருந்த தூரிகையை விசிறி அடித்தவன் ஓவிய அறையிலிருந்து வெளியே வந்து தன்னுடைய படுக்கையில் அமர்ந்து கொண்டான்.
“நோ.. நான் மறுபடியும் வாழ்க்கைல தோத்துடக் கூடாது… கூடவே கூடாது…” என தனக்குத் தானே உருப்போட்டுக் கொண்டவன் வேகமாக தன்னுடைய அலைபேசியை எடுத்து முத்துவுக்கு அழைத்தான்.
எத்தனையோ அழகான பெண்களின் புகைப்படங்களைத் தேடி எடுத்து வந்து அவனிடம் காட்டுவது முத்துதானே..
மீண்டும் அவனையே நாடினான் குருஷேத்திரன்.
அழைத்த உடனேயே அழைப்பை ஏற்ற முத்துவோ “சொல்லுங்க சார்..” என்றான்.
“மறுபடியும் பொண்ணு தேடு முத்து.. நான் சொன்ன அதே ரூல்ஸ்தான்.. பொண்ணு ரொம்ப ரொம்ப அழகா இருக்கணும்.. கூடுதலா அவளால குழந்தை பெத்துக்க முடியும்கிற மெடிக்கல் ரிப்போர்ட்டும் வேணும்…” என்றதும் திகைத்துப் போனான் முத்து.
‘இப்போ தானே சாருக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சுது.. இப்போ எதுக்காக மறுபடியும் அழகான பொண்ணைத் தேடுறாரு…? சாரோட மனைவிதான் ரொம்ப ரொம்ப அழகா இருப்பாங்களே…’ என எண்ணியவன்
“யாருக்கு சார் பொண்ணு தேடுறீங்க…?” என தன்னை மீறி ஆவலுடன் கேட்டு விட,
“வேற யாருக்கும் பொண்ணு பாத்து கொடுக்கிற அளவுக்கு நான் ஒன்னும் இங்க வெட்டியா இருக்கல… நான் எனக்குத்தான் பொண்ணு தேடுறேன்.. புரிஞ்சுதா.. நீ முதல்ல அழகான பொண்ணா தேடிக் கொண்டு வா… நான் செலக்ட் பண்ற பொண்ணுங்களோட மெடிக்கல் ரிப்போர்ட்ட அதுக்கு அப்புறமா வாங்கிக்கலாம்…” என அழுத்திக் கூறிவிட்டு அவன் அலைபேசியைத் துண்டித்து விட முத்துவுக்கோ தலை சுற்றுவது போல இருந்தது.
என்ன நடக்கின்றது என எதுவும் புரியாது போக அவனுடைய வார்த்தைகளை மீற முடியாமல் மீண்டும் பெண் தேடும் படலத்தைத் தொடங்கினான் அவன்.
விட்ட தவறுகளை மீண்டும் திருத்தி விடலாம் என்ற நம்பிக்கையோடு அப்படியே படுக்கையில் சாய்ந்து உறங்க முயன்றான் அவன்.
விழிகளை மூடிக்கொண்டதும் அந்த படுக்கையில் இருந்து அபர்ணாவின் வாசனை எழுந்து அவனைத் தாக்க நொடியில் அவனுடைய உடல் இறுகிப் போனது.
‘இந்த டிவோர்ஸ் மேட்டர சீக்கிரமா முடிச்சு இந்தக் கல்யாணத்துல இருந்து நான் வெளியே வந்தாகணும்..” என முணுமுணுத்தவன் ரூம் ஸ்ப்ரேயை எடுத்து அந்த அறை முழுவதும் வேகமாக அடித்தான்.
அவளுடைய வாசனையை அந்த அறையில் இருந்து முற்றும் முழுதாக அகற்ற எண்ணினான் போலும்.
சிறிது நேரத்திலேயே அதில் வெற்றியும் கண்டான் அவன்.
********
தனக்கு இருக்கும் ஒரே ஒரு அடைக்கலம் தன்னுடைய குடும்பத்தினர் மட்டுமே என எண்ணி அங்கே வந்தவளுக்கு சாதனாவின் வருகை திகைக்க வைத்தது.
உண்மையைக் கூற வேண்டும் என்றால் ஒருபுறம் மகிழ்ந்துதான் போனாள் அவள்.
அங்கே அந்த கொடுமைக்காரனோடு இருந்து அவள் வதைப்படுவதை விட பெற்றோருடன் இருந்தால் மகிழ்ச்சியாக இல்லாவிடினும் நிம்மதியாக வாழ்வாளே என எண்ணினாள் அபர்ணா.
பெருமூச்சோடு உள்ளே நுழைய முயன்றவளுக்கு சாதனா கூறிய வார்த்தைகள் அவளைத் தடுத்து நிறுத்தின.
தன்னுடைய வாழ்க்கையைப் பார்த்து மகிழ்ச்சி அடையும் அவளுடைய மனதையும் அன்னையின் மனதையும் எங்கனம் அவளால் உடைக்க முடியும்..?
சாதனாவுக்குத்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை அபர்ணாவக்காவது கிடைக்கும் இல்லையா என்பது போன்ற அவர்களுடைய பேச்சில் மூச்சடைத்துப் போனது அவளுக்கு.
என்னாலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிந்தால் இவர்கள் ஒட்டுமொத்தமாக நொறுங்கிப் போவார்களே..
ஏற்கனவே துன்பத்தில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் படுபவர்களை இன்னும் அதல பாதாளத்தில் தள்ளுவதா..?
வேண்டாம் என் துன்பம் அனைத்தும் என்னோடு மாத்திரமே தொலைந்து போகட்டும் என எண்ணியவள் வீட்டிற்குள் செல்லாமல் வெளியே செல்லத் தொடங்கினாள்.
மூன்று அடிகள் எடுத்து வைத்தவளுக்கு பணத்திற்காக காத்திருந்த ஆட்டோ ட்ரைவரைப் பார்த்ததும் கண்ணீர் சட்டென வழிந்தது.
எப்படி பணத்தைக் கொடுப்பாள்..?
2000 ரூபாய் கொடுத்தாக வேண்டுமே.. திணறிப் போனாள் அவள்.
சட்டென தன்னுடைய கரத்தில் இருந்த தந்தை வாங்கிக் கொடுத்த மோதிரத்தைப் பார்த்தவள் கண்ணீரோடு அதைக் கழற்றி அந்த ஆட்டோ ட்ரைவரிடம் சென்று நீட்டினாள்.
“சாரி அண்ணா.. என்கிட்ட இப்போ பணம் இல்ல… எங்க வீட்டுக்கு என்னால இப்போ போக முடியாத சூழ்நிலை… பணத்துக்கு பதிலா இதை வாங்கிக்கோங்க ப்ளீஸ்..” என உடைந்து போன குரலில் கண்ணீரை துடைத்து விட்டவாறு கூறிய சிறு பெண்ணைப் பார்த்து இரக்கம் முகிழ்த்தது அவருக்கு.
“இல்ல பரவால்லம்மா உனக்கு எப்போ முடியுதோ அப்போ பணத்தை கொடு..”
“இல்லண்ணா.. இனி நான் உங்கள எப்போ பார்ப்பேன்னு கூடத் தெரியல… இதை வாங்கிக்கோங்க…”
“ஐயோ… இது தங்கம் மாதிரி இருக்கு பாப்பா.. 2000 ரூபாக்காக தங்க மோதிரத்தையே கழட்டி கொடுக்கிறியே.. இத வாங்கிட்டுப் போனா நான் சாப்பிடுற சாப்பாடு கூட எனக்கு உடம்புல ஒட்டாது.. சின்ன பொண்ணு மாதிரி தெரியிற… அழுதுகிட்டே இருக்க.. என்ன பிரச்சனையா இருந்தாலும் வீட்டுக்குப் போய் உன்ன பெத்தவங்ககிட்ட சொல்லுமா… அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க…
இவ்வளவு தூரம் வீட்டுக்கு வந்துட்டு உள்ள போகாமயே வெளிய போறியே.. உனக்கு என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியல.. ஒரு அண்ணனா நினைச்சுத்தான் உனக்கு இதைச் சொல்றேன்.. வீட்டுக்குப் போய் அப்பா அம்மா கிட்ட எதுவா இருந்தாலும் பேசு..” என அவர் கூறியதும் உடைந்து போய் அழத் தொடங்கி விட்டாள் அவள்.
“அம்மாடி என்னாச்சும்மா..? ஏன் இப்படி அழுகுற..? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா..?” எனப் பதறினான் மாதவன்.
“இ.. இல்ல.. என்னோட பாதுகாப்புக்காக நான் எங்க வீட்டுக்குப் போனா மொத்த குடும்பமும் என்னோட நிலைமையப் பார்த்து உடைஞ்சு போயிடுவாங்கண்ணா… என்னால இனி எங்க வீட்டுக்குப் போகவே முடியாது.. அக்கா அவளோட புகுந்த வீட்டை விட்டு நிரந்தரமா இங்கேயே வந்துட்டா.. இப்போ நானும் வீட்டை விட்டு வந்துட்டேன்னு தெரிஞ்சா அவங்களால தாங்கிக்கவே முடியாது..
குழந்தை பெத்துக்கவே முடியாதுங்கிற சாபத்தோடு வந்திருக்கேன் அண்ணா… என்னால யாரும் காயப்படக் கூடாதுன்னு நினைக்கிறேன்.
இந்த மோதிரத்தை வாங்கிகிட்டு என்னை எங்கேயாவது தூரமா கொண்டு போய் ஒரு ஊர்ல விட்டுட முடியுமா ப்ளீஸ்.. எனக்கு எங்கேயும் போறதுக்கு வழி தெரியாது… காலேஜ் தவிர எங்கேயும் போகவும் தெரியாது… பயமா இருக்கு அண்ணா..” என தேம்பித் தேம்பி அழுத அபர்ணாவைக் கண்டு தவித்துப் போனான் மாதவன்.
என்ன கொடுமை இது..?
சிறிய பெண் போல இருக்கும் இவளுக்குள் இத்தனை துயரமா..?
“எதுவுமே தெரியாத உன்னால எப்படிமா வேற எங்கேயும் போய் பிழைக்க முடியும்..? சொன்னா கேளு… உங்க வீட்டுக்குப் போயிருமா..”
“எனக்கு மட்டும் எங்க வீட்டுக்குப் போகணும்னு ஆசை இல்லையா அண்ணா..? இப்பவே ஓடிப்போய் எங்க அம்மா மடில படுத்துக் கதறி கதறி அழனும் போல இருக்கு… என்னோட ரூமுக்குள்ள போய் கதவைப் பூட்டிட்டு என்னோட வலி எல்லாம் மறக்கிற அளவுக்கு தூங்கணும் போல இருக்கு..
பட் நான் ஒன்னும் பழைய அபர்ணாவா இப்போ வரலையே… ஒரு கல்யாணத்தை முடிச்சு வாழ முடியாத பாவியா வந்து நிக்கிறேன் அண்ணா.. போனஸ்ஸா குழந்தை பெத்துக்க முடியாதுங்கிற குறை வேற இப்போ என்கிட்ட இருக்கு… இது மட்டும் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சுதுன்னா சத்தியமா அவங்களால தாங்கிக்கவே முடியாது… அப்பா ஆல்ரெடி ஹார்ட் பேஷண்ட்… என்னால அவங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு..
ப்ளீஸ் உங்களால முடிஞ்சா என்னை எங்கேயாவது வேற ஊர்ல கொண்டு போய் விட்டுட முடியுமா..? ப்ளீஸ் அண்ணா.. ஏதாவது உதவி பண்ணுங்க…” என அவள் கையெடுத்து கும்பிட்டவாறு அழத் தொடங்கி விட பதறிப் போனான் மாதவன்.
அதே கணம் அவளுடைய வீட்டு வாயிலைத் திறந்து வெளியே வந்த அன்னையைக் கண்டு பதறிப் போனவள் சட்டென மாதவனின் ஆட்டோவில் ஏறி தன் முகத்தை மறைத்தவாறு அமர்ந்து கொண்டாள்.
மழை வருவதைப் போல இருக்க வெளிய கொடியில் காயப் போட்ட துணிகளை எடுக்க வந்த பத்மாவை ஆட்டோவுக்குள் இருந்தவாறே பார்த்தவளுக்கு உள்ளம் நெகிழ்ந்து போனது.
‘ம்மாஆ….’
‘ம்மா மிஸ் யூ மா.. இதுவரைக்கும் நீங்க என்ன அழ விட்டதே கிடையாது… எந்தவிதமான கஷ்டத்தையுமே நீங்க எனக்குக் கொடுத்ததில்லை.. எவ்வளவோ பணக்கஷ்டத்திலையும் என்ன ரொம்ப நல்லா வளர்த்தீங்க… நான் ஆசைப்பட்டத படிக்க வச்சீங்க… உங்கள மாதிரி ஒரு குடும்பம் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்…
உங்க கூட இருக்கும்போது நான் என்ன தேவதை மாதிரிதான் உணர்ந்திருக்கேன்… பழைய தேவதையா உங்ககிட்டவே வந்துடனும் போல ரொம்ப ஆசையா இருக்குமா.. ஏக்கமா இருக்கு.. ஆனா எனக்காக நல்லது மட்டுமே செஞ்ச உங்களை என்னோட குறைய சொல்லி நான் காயப்படுத்த விரும்பல.. இந்த அபர்ணா சிறகொடிஞ்சு போனவளா உங்ககிட்ட அறிமுகமாக மாட்டா.. நீங்க என்னப் பத்தி நினைச்சு கவலைப்படாம அக்கா கூட சந்தோஷமா இருக்கணும்…’ என ஆடைகளை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டிருந்த அன்னையை மறைந்திருந்து பார்த்தவாறே தன் மனதிற்குள் கூறிக் கொண்டவளுக்கு அருவி போலத்தான் விழிகளில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது.
“எனக்குத் தெரியும் என்கிட்ட என்ன குறை இருந்தாலும் நான் உங்களோட செல்ல பாப்பாதான்… உங்களோட குட்டி கண்ணம்மா தான்.. அவன் வேணாம்னு என்னை தூக்கி எறிஞ்ச மாதிரி நீங்களோ அப்பாவோ அக்காவோ யாருமே என்னை தூக்கி எறிய மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. இந்த அதீத அன்பால தான் உங்ககிட்ட என்னால வர முடியலம்மா.. கொஞ்ச நாள் போகட்டும்… அக்காவோட வலி மறந்து நீங்க எல்லாம் பழைய நிலைமைக்கு திரும்பும் போது மறுபடியும் உங்களத் தேடி வர்றேன்..
உங்கள விட்டா எனக்கு வேற யார் இருக்கா..? அதுவரைக்கும் எங்கேயாவது தனியா இருந்துக்கிறேன்மா..’ என மானசீகமாக உரையாடி முடித்தவள்,
“கிளம்புங்க அண்ணா…” என்றதும் மாதவனோ ஆட்டோவை செலுத்தத் தொடங்கினார்.
அவள் சிறு பெண்தான்..
22 வயது தான்..!!
ஆனால் சில சில சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவள் அனுபவித்த வலிகளும் அவளை சற்றே திடமாக்க ஆரம்பித்திருந்தன.
Nice