💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 37
“டேய் நான் தான் ஃபர்ஸ்ட்” ரூபன் சத்தமாகச் சொல்ல, “நோ ரூபி. நான் ஃபர்ஸ்ட்” அவனோடு சண்டைக்கு வந்தான் யுகன்.
“இல்லை. நான் தான் ஃபர்ஸ்ட்” தேவனும் போட்டியில் பங்கு கொள்ள, “ஏதாச்சும் கேம் விளையாடுறீங்களா? ஃபர்ஸ்ட் செக்கண்ட்னு கோஷம் எழுப்புறீங்க” எனக் கேட்டவாறு அறையில் இருந்து வந்தாள் ஜனனி.
“நீயே பாரு ஜனனி. சாப்பாடு ஊட்டனும்னு கேட்டாங்க. அதைக் கூட பண்ண விடாம யாரு முதல்ல சாப்பிடுறதுனு சண்டை போடுறாங்க” கையில் உணவுத் தட்டுடன் பாவமாகப் பார்த்தார் மேகலை.
“யுகி சின்னப் பையன். நீங்க ரெண்டு பேரும் எதுக்கு போட்டிக்கு வரீங்க? விட்டுக் கொடுக்கலாம்ல?” பெரியவர்களைப் பார்த்துக் கேட்டாள் ஜனனி.
“அப்படி எல்லாம் முடியாது அண்ணி. நீங்க எப்படியும் இந்த சில்வண்டுக்கு தான் சப்போர்ட் பண்ணுறீங்க” உதட்டைப் பிதுக்கினான் ரூபன்.
“நீங்க சின்னப் பையனா ரூபி? எனக்கு பாட்டி கையால் சாப்பிட விடுங்க” என்று யுகன் சொல்ல, “யாருக்கும் ஊட்டல. இந்தா டா நீ சாப்பிடு” அங்கு வந்த சத்யாவுக்கு முதலில் ஊட்டி விட்டார் மேகலை.
சண்டையிட்ட மூவரும் இப்போது கூட்டு சேர்ந்து “அது எப்படி சத்யாவுக்கு ஊட்டுவீங்க?” என்று கோரசாக கூச்சலிட, “என் முதல் பையன் சத்யா தான். அவனுக்கே என்னிக்கும் முதலிடம்” என்றவரை அன்பு கனிய நோக்கினான் மூத்த மைந்தன்.
“பிரச்சினையை சரியா சால்வ் பண்ணிட்டீங்க அத்தை. இப்போ இவனுங்களுக்கு ஊட்டுங்க” ஜனனி சிரிப்பூடே சொல்ல, மூவரும் பாவமாகப் பார்த்தனர்.
“சிரிக்காத ஜானு! என் யுகி பாவம்” என்று சொன்ன சத்யாவை அனைவரும் ஒரு கணம் ஆச்சரியமாகத் தான் பார்த்தனர்.
“என்னடா நம்மாளு ஜானு பக்கம் ஜகா வாங்குறார்” ரூபன் தேவனின் காதில் ரகசியம் பேச, “அதான் டா தெரியல. புலி பதுங்குறது நல்லதுக்கில்ல” தேவன் யோசனையாகப் பார்க்க,
“புலியை ஒரு பூனை பதுங்க வெச்சிருச்சு” எனும் குரலில், “எங்க அண்ணியைப் பூனைனு சொன்னது யாரு?” என்று ரூபன் பார்க்க, அவளே தான் அதைச் சொல்லி இருந்தாள்.
“அண்ணி நீங்களா?” தேவன் சங்கடமாகப் பார்க்க, “நானே அது நானே. உங்கண்ணா இன்னிக்கு ஒரு நாள் மட்டும் இப்படி இருப்பார். சோ ஓவரா ஆராய்ச்சி நடாத்தி சந்தோஷப்படாதீங்க. அப்பறம் ரகசியத்தை கொஞ்சம் மெதுவா பேசவும் கத்துக்கங்க” என்று மெதுவாகச் சொன்னவளைப் பார்த்து இளித்து வைத்தனர் இரட்டையர்.
“என்னை விட்டுட்டு என்ன பேசுறீங்க மூனு பேரும்?” யுகி முட்டைக் கண்களை விரித்துப் பார்க்க, “இவங்களுக்கு ரகசியம் பேச தெரியல யுகி. அதான் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தேன்” என்றாள் ஜனனி.
“ரகசியம் பேசலாம் ஜானு, தனியா இருக்கும் போது. எல்லாரும் இருக்குறப்போ அவங்களை வெச்சுட்டு ரகசியம் பேசக் கூடாதுனு” அவன் சொல்ல வரும் போது, “உன் டாடி சொல்லி இருக்கார்ல?” தேவனும் ரூபனும் ஒன்றாகக் கேட்க,
யுகி தலையாட்டியதும் “டேய் ஏன்டா?” மூவரையும் முறைத்துப் பார்த்தான் சத்யா.
“டாடி சொன்னார் டாடி சொன்னார்னு சொல்லியே இவன் எங்களை டெட் பாடி ஆக்காம விட மாட்டான் போல” ரூபன் கூறிய ஸ்டைலில் மேகலையும் சிரித்து விட்டார்.
“நல்ல விஷயங்களைத் தானே அவன் சொல்லுறான். அதைக் கேட்கிறதை விட்டுட்டு கிண்டல் பண்ணுவீங்களா?” மகன்களைச் செல்லமாக முறைத்தார் தாய்.
“சொல்லுறதச் சொன்னா கேட்போம். ஆனால் லாஸ்ட்ல டாடி புராணம் பாடியே காதைக் கழுவுறான். அதான் முடியல” என்ற ரூபனை அனைவரும் முறைத்தனர்.
மகன்கள் மற்றும் பேரனுக்கு மேகலை ஊட்டி விட, “ஜானுவுக்கு நான் ஊட்டப் போறேன்” பெரிய மனுஷனாக தட்டை ஏந்திக் கொண்டான் யுகி.
“நான் சாப்பிட்டுக்கிறேன் கண்ணா! நீ கஷ்டப்படாத” என்றவளை முறைத்து, “நான் தான் ஊட்டுவேன்” என அவளுக்கு ஊட்ட, நெகிழ்வோடு சாப்பிட்டாள் ஜனனி.
யுகனின் அளவு கடந்த அன்பு அவளை நாளுக்கு நாள் உருக வைத்துக் கொண்டிருந்தது. சிறுவர்கள் அப்படித் தானே? தமக்கு ஒன்றைப் பிடித்து விட்டால் அதை விட மாட்டார்கள். பொம்மையைக் கூட யாருக்கும் தராமல் நெஞ்சோடு அணைத்துக் கொள்வது அவர்களது இயல்பு.
இதில் மனிதர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? ஜனனியை அவ்வளவு பிடித்து விட்டது யுகனுக்கு. இவர்களது பிணைப்பைப் பார்த்த அனைவருக்கும் தோன்றியது ஒன்று தான், இந்த பந்தம் என்றும் நீடிக்க வேண்டும் என்று.
இருப்பினும் அவ்வுறவில் விரிசல் ஏற்படப் போவதையோ, அதனால் உறவுகள் மத்தியில் அன்புக்கான போராட்டங்கள் நடக்கவிருப்பதையோ எவரும் அறிய வாய்ப்பில்லை.
மேகலை மாத்திரை போடுவதற்காக அறைக்குச் சென்று விட்டார். மற்றவர்கள் அங்கு இருக்க,
“யுகி டார்லிங்! டான்ஸ் பண்ணலாம் வரியா?” ரூபன் கேட்ட கேள்வியில், “ரூபி” என்றவாறு தந்தையைப் பார்த்தான் யுகன்.
“என்ன கண்ணா?” அன்போடு அவனோ ஏறிட, “டான்ஸ் பண்ணட்டுமா?” எனக் கேட்டவனை அள்ளித் தூக்கிக் கொண்டு, “என் கிட்ட ஏன்டா கேட்கிற? உனக்கு பிடிக்கும்னா டான்ஸ் பண்ணு”
“உங்களுக்குப் பிடிக்காதுல்ல?” அவன் இழுவையாகக் கேட்க, “உனக்கு பிடிச்சத நீ பண்ணு செல்லம்” என்ற தேவனின் பார்வை சத்யா மீது கோபமாகப் படிந்தது.
உனக்குப் பிடிக்காது என்பதால் அவனையும் வேண்டாம் என்பது எந்த விதத்தில் நியாயம் எனக் கேட்டது அவன் பார்வை.
“உனக்கு ஆடனும்னா நீ டான்ஸ் பண்ணு கண்ணா! டாடி எதுவும் சொல்ல மாட்டேன். டான்ஸ் பண்ணுறது தப்பு இல்ல. சோ நீ இதுக்காக என் கிட்ட பர்மிஷன் கேட்க வேண்டாம்” மகனின் நெற்றியில் முத்தமிட்டவன், தேவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அறையினுட் சென்று விட்டான்.
ஜனனியின் கண் ஜாடையில் ரூபன் யுகனை அழைத்துக் கொண்டு கார்டனிற்குச் செல்ல, தேவனுக்கு என்னவோ தவறு செய்தது போன்ற உணர்வு. தந்தை மகனுக்கு இடையில் வந்து தான் பேசியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.
“ஒன்னு பண்ண முன்னாடி அப்பா கிட்ட கேட்கிறது நல்ல பழக்கம் தான் தேவா. ஆனால் இந்த மாதிரி சின்ன விஷயத்துக்காக எல்லாம் கேட்க தேவையில்லைனு சின்னப் பிள்ளைக்கு தெரியல. அப்படி யுகி கேட்டது அவரை உங்க கண்ணுக்கு தப்பா காண்பிச்சதுல்ல, என்னவோ சர்வாதிகாரி போல” என்று கேட்டாள் ஜனனி.
“அண்ணி!” தலையைக் குனித்துக் கொண்டான் தேவன்.
“இதோ பாருங்க. உங்களுக்கு அட்வைஸ் பண்ணுற அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. இருந்தாலும் நீங்க செஞ்சது திரும்ப நடக்கக் கூடாது என்பதற்காக நான் சொல்லுறேன். பிடிச்சதை பண்ணுனு நீங்க சாதாரணமா சொல்லி இருந்தா அது ஓகே.
பட், உங்க அண்ணாவைக் குத்திக் காட்டி யுகியை அவர் இஷ்டப்படி ஆட்டி வைக்கிறார் என்கிற அர்த்தத்தில் பேசியது தான் பிழை. அதைப் பார்த்தும் என்னால சொல்லாம இருக்க முடியல. நீங்க எல்லாரும் என் குடும்பம் ஆகிட்டீங்க. அதில் நடக்கிற சில தவறுகளை ஒரு குடும்ப உறுப்பினரா தட்டிக் கேட்கிறது தப்பு இல்லைனு நினைக்கிறேன்” என்று அவள் பேச,
“இல்ல. நிச்சயமா இல்லண்ணி. தப்பை கேட்கிற எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு” பதற்றத்தோடு பதிலிறுத்தினான்.
“நீ பேசியதை அத்தை கேட்டு இருந்தா சும்மா இருந்திருப்பாங்களா?” என்று அவள் கேட்டதும், அவன் தலை மறுப்பாக ஆடியது.
நிச்சயமாக இல்லை. மேகலை வருந்தியிருப்பார். உடைந்து போயிருப்பார். தன் மகன்கள் மனஸ்தாபத்தோடு இருப்பதை எந்தத் தாய் மனம் தான் விரும்பும்?
“அப்படினா நீங்க புரிஞ்சுக்கனும் உங்க பக்கம் பிழை இருக்குன்னு. அதை இனிமே பண்ணாதீங்க” மென் புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தாள் ஜனனி.
அவளைப் பார்த்துக் கொண்டு நின்ற தேவனுக்கு குற்றவுணர்வு ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் ஜனனியை எண்ணி வியப்பும் மேலிட்டது. அவள் சொன்னதில் தவறு இல்லை.
அவனது தவறை சரியாகச் சுட்டிக் காட்டி விட்டாள். அனைத்திலும் மேலாக அவனைக் கவர்ந்தது தனிமையில் சொன்னது தான். மற்றவர் முன் அவனைக் குற்றவாளிக் கூண்டில் அவள் ஏற்றவில்லை. மாறாக, தனியாக வைத்து தன்மையாக எடுத்துச் சொன்ன பாங்கு தேவனுக்கு மன அமைதியைக் கொடுத்தது.
ஜனனியின் இச்செயல் மூலம் ஒன்றைக் கற்றுக் கொண்டான். சத்யா மீது பிழையே இருந்தாலும் அதனை மற்றவர் முன் சொல்லி இருக்கக் கூடாது. இருப்பினும் அவன் இல்லாத ஒரு குற்றத்தை அல்லவா சுமத்தினான்? தான் இரட்டிப்பாய் தவறு செய்த எண்ணம் தேவனுக்கு.
அறையினுள் இருந்த சத்யாவுக்கு சற்று முன் நடந்த விடயத்தை விட்டும் வெளி வர முடியவில்லை. யுகன் அனுமதி கேட்ட சமயம் அவனுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது.
யூ.எஸ்சில் இருக்கும் போது ஒரு நாள் தொழில்முறை நண்பனின் பார்ட்டிக்குச் சென்றிருந்தான். யுகன் நடனமாடத் துவங்கும் நேரம் மது போதையில் இருந்த ஒரு பெண் சத்யாவை இடித்துக் கொண்டு நடனமாட அழைத்து தொந்தரவு கொடுத்தாள்.
அவளது செயலில் கடுப்பான சத்யா முகம் கடுகடுக்க “யுகி ஸ்டாப் இட்! நாம கிளம்புவோம்” மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் அன்று முதல் பார்ட்டிகளை தவிர்த்துக் கொண்டான்.
அந்த நிகழ்வுக்குப் பின் யுகி நடனமாடுவதை நிறுத்திக் கொண்டான், சத்யாவுக்குப் பிடிக்காது என்று நினைத்து. இது அறியாத சத்யா இன்று தான் மகனின் எண்ணத்தை அறிய நேர்ந்தது.
அதில் திகைத்துப் போய் விளக்கம் கொடுக்கும் முன், தேவன் பாய்ந்து கொண்டு குற்றம் சாட்டவும் கோபத்தோடு ஆத்திரமும் வந்தது.
“என்னைப் பார்த்தா எப்படி இருக்கு அவனுக்கு?” பிடரியை அழுந்தக் கோதிக் கொண்டவனுக்கு உள்ளக் கொதிப்பு குறைய மறுத்தது.
ஜனனி தன் பின்னே வருவாள் என்று எதிர்பார்த்தது அவன் மனம். எனினும் அவள் வராது போனதில் இனம் புரியாத வேதனை. ஏன் என்று தெரியவில்லை. இருந்தும் அவளை எதிர்பார்த்தான்.
சற்று நேரம் கழித்து தன் முன்னே வந்த உருவத்தைக் கண்டு சடாரெனத் திரும்பியவனுக்கு ஆச்சர்யத்தில் விழிகள் விரிந்தன. அவன் முன் நின்றிருந்தது தேவன் அல்லவா?
“சாரி சத்யா! என்ன இருந்தாலும் நான் பேசியது தப்பு. யாருமே குறை சொல்ல முடியாதளவு தனியா இருந்து நீ யுகியை வளர்த்து இருக்க. அதைப் போய் நான் வேற கண்ணோட்டத்தில் பார்த்துட்டேன். இனி இப்படி நடக்காம பார்த்துக்கிறேன். ரியல்லி சாரி” என்றவனுக்கோ அண்ணனின் முகம் பார்க்கும் சக்தி இல்லை.
“இனிமே நடக்காதுன்னு சொல்லாத தேவா! உனக்கு எப்போ என் மேலுள்ள கோபம் போகுதோ உன் கண்ணுக்கு அப்போ தான் நான் சரியான கண்ணோட்டத்தில் தெரிவேன். அதுவரை என்ன வேணாலும் நடக்கலாம், இதை விட அதிகமா கூட நீ என்னை ஹர்ட் பண்ணலாம்” என்றான் சத்யா.
அவன் சொல்வது மறுக்க முடியாத உண்மை. இப்போது மன்னிப்புக் கேட்டவன், வேறு ஒரு சமயமும் இப்படி பேசக் கூடும்.
தேவன் அவனையே பார்த்தபடி நிற்க, “பட் இந்த நிமிஷம் நீ பேசினது ஆறுதலா இருக்கு” என்று புன்னகைத்தான்.
அப்புன்னகை தேவனின் இதழில் வலியோடு மலர, என்ன நினைத்தானோ தெரியவில்லை அண்ணனை அணைத்து விடுவித்து விட்டு வெளியேறினான்.
அவனது அணைப்பில் அதிர்ந்து போன சத்யாவுக்கு இறுக்கமெல்லாம் தளர்ந்து விட, புன்னகையும் தன் பரப்பை விசாலப்படுத்திக் கொண்டது.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி