39. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

4.7
(116)

நெருக்கம் – 39

இரண்டு நாட்களுக்குப் பிறகு..!

குருஷேத்திரனின் முன்பு அமர்ந்திருந்தாள் ஓர் அழகி.

அவனுடைய பார்வை அவளில் அழுத்தமாகப் படிந்திருந்தது.

“எனக்கு சம்மதம் டார்லிங்..” என அத்தனைப் பற்களையும் காட்டி அவனைப் பார்த்து அழகாய் சிரித்து வைத்தாள் அந்த முத்துப்பல் அழகி.

“சம்மதம் ம்ம்…?” புருவம் உயர்த்தினான் அவன்.

“நான் இன்னும் என்னோட சைட் ரூல்ஸ்ஸை உன்கிட்ட சொல்லவே இல்லையே.. அதுக்குள்ளயே சம்மதமா..? இன்ட்ரெஸ்டிங்…” என்றான் குரு.

“என்ன ரூல்ஸ்..?” எனக் கேட்டவளின் முகத்தில் மெலிதாக திகைப்பு எட்டிப் பார்த்தது.

“என்னால உன்ன காதலிக்க முடியாது… எனக்கு காதலும் வராது…. இந்தக் கல்யாணம் நான் பண்ணிக்கிறதுக்கு காரணமே எனக்கு குழந்தை வேணும்… நான் பிக்ஸ் பண்ற டேட்ல நமக்குள்ள பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் இருந்தே ஆகணும்.. அப்புறம் தயவு செஞ்சு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறமா இவ்வளவு மேக்கப் போடாத..” என அவன் முகத்தில் அடித்தாற் போலக் கூற அவளுடைய முகமோ அஷ்ட கோணலாக மாறியது.

“மத்தபடி உனக்கு என்ன வேணுமோ அத நீ தாராளமா பண்ணிக்கலாம்.. இந்த வீட்ல உனக்கான சுதந்திரம் நிச்சயமா கிடைக்கும்… உனக்கு தேவையான ஜுவல்ஸ் ட்ரஸ் உன்னோட மொத்த செலவு எல்லாமே என்னோட பொறுப்பு.. நான் சொன்னதுக்கெல்லாம் ஓகேன்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. அப்பா அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணுன்னு கேள்விப்பட்டேன்.. பெரியவங்க யாரும் இருந்தா சொல்லு… அவங்ககிட்ட பேசணும்னாலும் பேசுறேன்…” என குருஷேத்திரன் தெளிவாகக் கூற,

அடுத்த நொடியே,

“நீங்க சொன்ன எல்லாத்துக்கும் நான் ஒத்துக்குறேன்… எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம்தான்.. நான் ஆசிரமத்துலதான் வளர்ந்தேன்.. எனக்கு சொந்தக்காரங்கன்னு யாருமே கிடையாது… சோ நீங்க எந்த பெரியவங்ககிட்டையும் பேசணும்னு அவசியம் இல்ல..” என்றாள் அவள்.

“ஓகே ஃபைன்..” என முடித்துக் கொண்டான் அவன்.

“இப்போதானே உங்களுக்குக் கல்யாணம் ஆச்சு.. உங்க மனைவியால குழந்தை பெத்துக்க முடியாதுன்னுதான் அவங்கள டிவோர்ஸ் பண்ணிட்டீங்களா…?” எனக் கீர்த்தனா கேட்க அவனுக்கோ சுர்ரென ஏறியது கோபம்.

“அவளால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு நான் உன்கிட்ட சொன்னேனா..?” அவன் கோபமாய் வார்த்தைகளை அழுத்திக் கேட்க,

“இல்… இல்ல..” எனத் திணறியவாறு பதில் கூறினாள் அவள்.

“அவளப் பத்தி ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது.. மைன்ட் இட்..” எச்சரித்தான் அவன்.

பலமாக தலை அசைத்தாள் அவள்.

“வெல்.. உன் பேர் என்ன..?”

‘இன்னும் என் பெயர் கூடத் தெரியாதா..?’ என்பதைப் போல அவனைப் பார்த்தவள்,

“என்னோட பேரு கீர்த்தனா.. நீங்க என்ன கீத்தூன்னே கூப்பிடலாம்..” என அவள் கூறியதும் சட்டென அபியின் எண்ணம் அவனுக்குள் எழுந்தது.

“ப்ளீஸ் குரு என்ன அபர்ணான்னு கூப்பிடாதீங்க… நல்லாவே இல்ல.. அபின்னு கூப்பிடுங்க.. நீங்க ஃபுல் நேம் சொல்லிக் கூப்பிட்டா யாரையோ கூப்பிடற மாதிரி ஃபீல் ஆகுது..” என அன்று சிணுங்கலாகக் கூறிய அபர்ணாவின் வார்த்தைகள் அவனுடைய காதுகளுக்குள் மீண்டும் ஒலிக்க தன் தலையை உலுக்கி கொண்டவன்,

“நான் உன்ன கீர்த்தனான்னே கூப்பிடுறேன்…” என முடித்துக் கொண்டான்.

“ஓகே கல்யாண டேட்டை நாளன்னைக்கு பிக்ஸ் பண்ணிக்கலாம்… இப்போதைக்கு கல்யாணம் மட்டும்தான் பண்ண முடியும்.. ப்ராப்பரா இன்னும் அபிக்கும் எனக்கும் டிவோர்ஸ் கிடைக்கல.. சோ டிவோர்ஸ் கிடைச்சதும் நம்ம மேரேஜை ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்.. கல்யாணத்துக்கு தேவையான எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு உன்கிட்ட சொல்றேன்…” என்றவனைப் பார்த்தவள்,

“ஓகே டார்லிங்…” என்றவாறு எழுந்து அவன் அருகே வந்தாள்.

“வாட்…?” என்றவனோ அவளைக் கேள்வியாகப் பார்க்க மெல்ல வந்து அவனுடைய பரந்து விரிந்த மார்பில் தன்னுடைய கரத்தை அழுத்தி வருடியவள்,

“நான் வேணும்னா இங்கேயே தங்கிக்கவா..?” எனக் கேட்க அவனுக்கோ புருவங்கள் சுருங்கின.

அவளோ தன்னுடைய முன்னுடல் மொத்தமும் அவனுடைய இரும்பு உடலில் பதியும் வண்ணம் மிக மிக நெருக்கமாக அவனை நெருங்கி நின்றவள் அவனுடைய தாடி அடர்ந்த கன்னத்தில் தன் கரத்தைப் பதித்து தலை சரித்து அவனைப் பார்த்து மயக்கும் புன்னகையை சிந்தினாள்.

அவனுடைய உடலோ இறுகியது.

நேற்றைய தினம் அவனுடைய உடல் ஒரு பெண்ணின் நெருக்கத்திற்காகத்தானே ஏங்கித் தவித்தது எனச் சிந்தித்தவன் அவளுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தவாறு “கிஸ் மீ…” என்றான்.

“ஷோர் டார்லிங்..” என்றவளின் கரங்கள் அவனுடைய கழுத்தில் மாலையாகக் கோர்த்தன.

அவனுடைய உயரத்திற்கு தன்னுடைய கால்களை எம்பி தானும் சற்று உயர்ந்தவள், அவனுடைய அழுத்தமான உதடுகளில் தன்னுடைய சிவந்த இதழ்களைப் பதித்தாள்.

அழுத்தமான இதழ் முத்தம் அது.

அவனோ ஒற்றைக் கையால் அவளைத் தன்னிலிருந்து விலக்கினான்.

“நான் இங்கேயே ஸ்டே பண்ணட்டுமா..?” எனக் கேட்டாள் கீர்த்தனா.

“நோ… கல்யாணத்துக்கு அப்புறமாகவே வா.. எனக்கு இப்போ உன் கூட படுக்கிறதுல எந்த அவசரமும் இல்ல..” என முகத்தில் அடுத்தாற் போலக் கூறிவிட்டு அவன் சென்று விட விக்கித்துப் போனால் அவள்.

என்ன மனிதன் இவன்..?

இவன் என்ன மிஷினா..?

கொஞ்சம் கூட ஃபீலிங்ஸ் இல்லவே இல்லையா..? என மனதிற்குள் அவனைத் திட்டிவிட்டு தன்னுடைய ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு கோபமாக அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் கீர்த்தனா.

கீர்த்தனாவின் நெருக்கத்தில் ஏற்பட்ட ஒவ்வாமையை உணர்ந்து கொண்டவாறு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தான் அவன்.

இரண்டு இரவுகளும் ஒரு பெண்ணின் நெருக்கத்திற்காகத் தானே அவனுடைய உடல் தவித்துக் கொண்டிருந்தது.

அந்தச் சந்தர்ப்பம் இப்போது கிடைத்தும் ஏன் அதை அனுபவிக்கப் பிடிக்கவில்லை என சிந்தித்தவாறே வந்து கொண்டிருந்தான் அவன்.

இதுவே இப்படி அபர்ணா தன்னை நெருங்கி முத்தமிட்டிருந்தால் அவளையும் இப்படித் தள்ளியா விட்டிருப்பான்..?

இல்லவே இல்லை என அலறியது அவனுடைய மனசாட்சி.

சட்டென அபர்ணாவின் நினைவுகளை ஒதுக்கிவிட்டு கீர்த்தனாவைப் பற்றி எண்ணத் தொடங்கினான் குருஷேத்திரன்.

அவள் அணைத்தது போல நானும் அவளை அணைத்து அடுத்த கட்டத்திற்கு சென்றிருந்தால் நிச்சயம் அதற்கு கீர்த்தனா அனுமதித்திருந்திருப்பாள் என்பது அவளுடைய செயலிலேயே அவனுக்குப் புரிந்தது.

இருந்தும் அதில் எந்தவிதமான விருப்பமும் இல்லாது போக அமைதியாகக் காரை நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி தன்னுடைய அலுவலகத்திற்குள் நுழைந்தவன் அதன் பின்னர் தன்னுடைய வேலைகளில் மூழ்கிப் போனான்.

வேலைகள் அவனை முழுவதுமாக சூழ்ந்து கொண்டன.

மதியம் வரை சில கோப்புகளை சரி பார்த்து தன்னுடைய கையொப்பத்தை இட்டு முடித்தவன் முக்கியமான மீட்டிங் ஒன்றை ஒரு மணி நேரத்தில் ஒழுங்கு செய்யும்படி தன்னுடைய பிஏவிடம் கூறியவன் மதிய உணவை உண்பதற்காக வெளியே செல்லலாம் என நினைத்து தன்னுடைய அறையை விட்டு வெளியே வர,

அங்கே சிலர் சமோசாவை வரவழைத்து உண்டு கொண்டிருப்பதைக் கண்டதும் மீண்டும் அவனுக்கு அபர்ணாவின் நினைவு வந்தது.

பைவ் ஸ்டார் ஹோட்டலுக்குச் செல்ல இருந்தவன் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் தன்னுடைய அறைக்கே வந்து அமர்ந்தான்.

அலைபேசியை எடுத்து அன்று அவளுக்கு ஆர்டர் செய்து கொடுத்ததைப் போல சமோசாவையும் சாஸையும் எடுத்து வரும்படி கூறியவனுக்கு தன்னை நினைத்தே வியப்பாக இருந்தது.

அன்று அவள் அவ்வளவு ரசித்து உண்டது இன்னும் அவன் நினைவில் இருக்க, மெல்ல சிரித்துக் கொண்டவன் சற்று நேரத்தில் அவன் முன்பு வைக்கப்பட்ட சமோசாவை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

ஏதோ ஒரு ஆர்வத்தில் உணவை வரவழைத்தவனுக்கு இப்போது அதை உண்ண தயக்கமாக இருந்தது.

‘அவ சாப்பிட்டா நானும் சாப்பிட்டே ஆகணுமா என்ன..? எனக்கு ஒன்னும் இந்த லோ கிளாஸ் புட் தேவையே இல்லை…’ என எண்ணிக் கொண்டவன் இறுதிவரை அவற்றை உண்ணவே இல்லை.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ அவனே அறியான்.

மதியநேர உணவு இடைவேளை முடிந்து அவன் ஒழுங்கு செய்யச் சொன்ன மீட்டிங் நேரமும் வந்தடைய கான்ஃபரன்ஸ் ஹாலை நோக்கிச் சென்றவன் புதிய செயற்றிட்டத்தைப் பற்றி தன்னுடைய ஊழியர்களிடம் கூறத் தொடங்கினான்.

அந்த செயற்றிட்டத்தைப் பற்றி விவரிக்கும் நேர இடைவேளையில் அனைவருக்கும் சமோசா பகிரப்பட இவனுக்கோ மீண்டும் அபியின் நினைவு எழுந்தது.

அவனுடைய அலுவலகத்தில் எந்த மீட்டிங் நடந்தாலும் அதற்கு இடையே சிற்றுண்டி உணவுகள் வழங்கப்படுவது வழக்கம்தான்.

பழத் துண்டுகள் அல்லது காரமான சிற்றுண்டி வகைகள் வழமையாக வழங்கப்பட்டு வர இன்றோ சமோசா பகிரப்படுவதைப் பார்த்ததும் அவனுடைய பேச்சு சற்றே தடைப்பட்டது.

அவனுடைய மேஜையிலும் ஒரு தட்டு வைக்கப்பட பெருமூச்சோடு தன் பேச்சை முடித்துக் கொண்டவன்,

“ஐயோ உங்களுக்கு சமோசா எப்படி சாப்பிடணும்னே தெரியாதா‌..? அத நல்லா சாஸ்ல முக்கி எடுத்து சாப்பிட்டாதான் ரொம்ப டேஸ்டா இருக்கும்…” என அன்று அபர்ணா கூறிய வார்த்தைகள் அவனுடைய செவிதனில் மீண்டும் ஒலிக்க தன் நிலை மறந்தான் அவன்.

அடுத்த நொடியே அந்த சிறிய தட்டில் சாஸை ஊற்றியவன் அவள் கூறியதைப் போலவே சமோசாவை அதில் முக்கி மூழ்கடித்து வாயில் வைத்துக் கடிக்க அங்கே இருந்த அத்தனை பேரும் அவனைத்தான் வாயைப் பிளந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கே வேலை செய்பவர்களுக்குத் தான் அவனுடைய பழக்கவழக்கங்கள் அனைத்தும் அத்துபடி ஆயிற்றே..

கையால் கூட உணவை எடுத்து உண்ணாமல் ஸ்பூனால் வெகு நளினமாக உணவை எடுத்து வாயில் வைக்கும் தன்னுடைய பாஸா இது என்பதைப் போலத்தான் அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ அதைப் பற்றி எல்லாம் கவனத்தில் கொள்ளாது அபர்ணா கூறியதைப் போலவே அவசர அவசரமாக உண்டு முடித்துவிட்டு நிமிர்ந்தான்.

அப்போதுதான் அங்கு இருக்கும் அனைவரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதும் தான் செய்து கொண்டிருந்த செயலும் அவனுக்கு சுயத்தில் பதிந்தது.

சட்டென உடல் விறைத்துப் போனான் அவன்.

தன்னுடைய கரங்கள் முழுவதும் சாஸ் அப்பி இருப்பதைக் கண்டு அருவருப்புடன் இதழ்களைச் சுழித்தவன்,

“எக்ஸ்கியூஸ் மீ..” எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறி கோபமாக தன்னுடைய அறைக்குள் நுழைந்து தன் கைகளைச் சுத்தப்படுத்திவிட்டு சோபாவில் அமர்ந்தவனுக்கு தலை வெடிப்பதைப் போல இருந்தது.

அவமானம் பிடுங்கித் தின்றது.

சில நொடிகளுக்குள் தனக்கு என்னதான் ஆகிப்போயிற்று..?

சுயம் மறந்து சுற்றம் மறந்து உணவையே காணாதவன் போல இப்படி உண்டு விட்டு வந்திருக்கிறோமே என தன்னையே நொந்து கொண்டவன் அடுத்த கணம் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வெளியேறி வீட்டை நோக்கிப் புறப்படலானான்.

எல்லாம் அவளால்தான்..!!

அவளைப் பற்றி நினைத்ததால்தான் தன்னை மறந்து முட்டாள்தனமாக இப்படி எல்லாம் நடந்து கொண்டு விட்டோம் என எண்ணி சலித்துக் கொண்டவன் இன்னொரு முறை அவளைப் பற்றி நினைக்கவே கூடாது என்ற முடிவை உறுதியாக எடுத்துக் கொண்டான்.

நம் நாயகனின் உறுதி நிலைக்குமா..?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 116

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “39. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!