ஏதோ ஒரு வெறுமை அவனுடைய மனம் முழுவதும் சூழ்ந்து அவனைத் தனிமையாக்குவது போலத் தோன்றியது.
இரண்டு நாட்களில் திருமணம் எனக் கூறியதில் இருந்து அவனுடைய உள்ளம் சமநிலை அடைய மறுத்தது.
அடிக்கடி அவனுடைய இரும்பு மனம் கூட இளகிப் போய் அபியைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்க தடுமாறிப் போனான் குருஷேத்திரன்.
இதோ அவள் இந்த வீட்டை விட்டு வெளியேறி இன்றோடு முழுதாக மூன்று நாட்கள் முடிந்து போன பின்பும் கூட தினம் தினம் அவளுடைய நினைவுகள் அவனை ஆட்கொள்ளத் தவறவே இல்லை.
அவள் கூறிய வார்த்தைகள், அவளுக்குப் பிடித்த விடயங்கள், அவள் பயன்படுத்திய பொருட்கள், படுக்கையில் அவள் படுத்திருக்கும் ஒரு பகுதி என அனைத்தும் மீண்டும் மீண்டும் அவனுக்கு நினைவில் தோண்றிக் கொண்டே இருக்க மிகவும் குழம்பிப் போனான் அவன்.
ஒரு முடிவை எடுத்துவிட்டு அது இயலாது என பிற்போடுவதோ அல்லது அந்த முடிவை கைவிடும் பழக்கமோ தன்னிடம் இல்லவே இல்லையே.
அப்படி இருக்கையில் எதற்காக இந்த அபர்ணாவின் விடயத்தில் மட்டும் அவனுக்கு ஏகப்பட்ட தடுமாற்றங்கள் ஏற்படுகின்றது என சிந்தை குழம்பினான் அவன்.
அவனுடைய சிந்தனைகளைத் தடை செய்யும் விதமாக உள்ளே நுழைந்தான் சதீஷ்.
“சார் நீங்க சொன்ன மாதிரியே பத்திரிக்கைய அடிச்சிட்டேன்… எப்போ கொடுக்கணும்னு சொன்னா எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பிச்சுடலாம்..” என்றவனைப் பாராமல் தன்னுடைய கரங்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து விடுவித்தவன் “ம்ம்..” என்ற ஒற்றைச் சொல்லில் முடித்துக் கொண்டான்.
“சார்… நீங்க ஒரு தடவை செக் பண்ணி ஃபைனல் பண்ணிட்டீங்கன்னா நல்லா இருக்கும்…” என தயக்கத்தோடு கூறினான் சதீஷ்.
“கிவ் மி..” என்றவன் அந்தப் பத்திரிகையை வாங்கிப் பிரித்து படிக்கத் தொடங்க தலைவலி வந்துவிடும் போல இருந்தது அவனுக்கு.
தன்னுடைய பெயருக்கு அருகே திருநிறைச் செல்வி கீர்த்தனா என இருப்பதைப் பார்த்தவனுக்கு உதடுகள் பிடித்தம் இல்லாமையால் வளைந்தன.
தன்னை மறந்து அவனுடைய உதடுகளோ அபர்ணா என்ற பெயரை உச்சரிக்க சதீஷின் முகத்திலோ அப்பட்டமாக அதிர்ச்சி தென்பட்டது.
“சா… சார் பத்திரிகையில் அபர்ணான்னு அடிக்கலையே.. கீர்த்தனான்னுதான் நேம் அடிச்சிருக்கு.. நீங்க எதுக்கு அபர்ணான்னு சொல்றீங்க..?” எனப் பயத்தோடு வினவினான் அவன்.
எங்கே தான் சரியாகப் பத்திரிகையைப் படித்து பார்க்கவில்லையோ என்ற அச்சம் சத்ஷுக்குள் வந்து விட்டிருந்தது.
சதீஷின் கேள்வியில்தான் தன்னை மறந்து அபியின் பெயரை உச்சரித்து இருக்கிறோம் என்பது குருவுக்குப் புரிய மேலும் குழம்பிப் போனவன் தன்னுடைய கரத்தில் இருந்த பத்திரிகையை சுக்கு நூறாகக் கிழித்து தரையில் வீசினான்.
“இது எதுவுமே நல்லா இல்ல…” என அவன் அந்த இடமே அதிரும்படி கத்த,
திகைத்துப் போய் இரண்டடி பின்னால் நகர்ந்து நின்ற சதீஷோ “வேற டிசைன்ல ரெடி பண்ண சொல்லவா சார்…?” எனப் பவ்யமாகக் கேட்டான்.
அந்தப் பத்திரிகைகளிலும் இதே பெயர்தான் தன்னுடன் இணையப் போகிறது என்றதும் கசந்து வழிந்தது அவனுக்கு
“நோ… நான் சொல்லும்போது பண்ணு.. இப்போ எதுவும் பண்ண வேணாம்… நவ் கோ அவுட் சைட்..” என இறுகிய குரலில் கூறிவிட்டு தன் தலையைப் பிடித்துக் கொண்டான் அவன்.
கீர்த்தனா என்ற பெயர் பிடிக்கவில்லையா..?
இல்லை அபர்ணாவின் பெயர் இருக்கும் இடத்தில் கீர்த்தனா என்ற பெயர் இருப்பது பிரச்சினையா..?
அவனுக்கே பதில் தெரியவில்லை.
மனம் மேலும் மேலும் அமைதி அடைய மறுத்து அலைபாயத் தொடங்க மீண்டும் மதுபானத்தை நாடினால் என்ன என்ற எண்ணமே அவனுக்குள் எழுந்தது.
பெருமூச்சோடு எழுந்து கொண்டவன் தன்னுடைய அறையை நோக்கிச் செல்ல முயன்ற கணம் அவனைப் பார்ப்பதற்காக கீர்த்தனா மேடம் வந்திருப்பதாக வேலையாள் ஒருவன் வந்து கூற மீண்டும் ஹால் ஷோபாவிலேயே அமர்ந்தவன் தன்னுடைய கேசத்தை அழுத்தமாகக் கோதி விட்டான்.
“சார் அவங்கள உள்ள வரச் சொல்லவா.. இல்லன்னா திருப்பி அனுப்பவா..?” என அவனுடைய மௌனத்தைக் கண்டு தயக்கத்துடன் மீண்டும் கேட்டான் அந்த வேலையாள்.
“ம்ம்… அவள உள்ள வரச் சொல்லு..” என உத்தரவிட்டான் அவன்.
அடுத்த சில நொடிகளிலேயே அமைதியாக இருந்த அந்த வீட்டைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தது அவளுடைய குரல்.
“ஹாய் டார்லிங்… எப்படி இருக்கீங்க..? பத்திரிகை எல்லாம் அடிச்சிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன்… அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்…” என்றவளை அளவெடுப்பது போல பார்த்தவன்,
“ஓஹ்… சிட்..” எனக் கூறியவாறு புருவத்தை உயர்த்தி அவனுக்கு முன்பிருந்த இருக்கையைக் காட்ட அவன் கூறியதைப் போலவே அவனுக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தவளுக்கு அவன் தன்னை அவன் அருகே அமரும்படி கூப்பிட மாட்டானா என்ற ஏக்கமும் எழுந்தது.
“பத்திரிகை எங்க நான் பார்க்கலாமா..?”
என அவள் கேட்டதும் அவனுடைய பார்வை கீழே கிழிந்து கிடந்த காகிதத் துண்டுகளைப் பார்க்க அவனுடைய பார்வை செல்லும் திசை நோக்கி தானும் பார்த்தவள் கிழிந்து கிடந்த பத்திரிகையைக் கண்டு பதறித்தான் போனாள்.
“ஐயோ இது கல்யாண பத்திரிக்கை மாதிரி இருக்கு… நம்மளோடதுதானா..?” என அவள் பதறியவாறு கேட்க,
“ஆமா நம்மளோடதுதான்..” என மிக நிதானமாகக் கூறினான் அவன்.
அவளிடம் இருந்த பதற்றம் படபடப்பு எல்லாம் அவனிடம் சிறிதும் இருக்கவில்லை.
“முதன்முதலா அடிச்ச கல்யாண பத்திரிகைய போய் இப்படி கிழிச்சு வச்சிருக்கீங்களே… ஏன் இப்படி பண்ணீங்க..?” என அவள் ஆதங்கத்தோடு கேட்க,
“எனக்குப் பிடிக்கல..” என முடித்துக் கொண்டான் அவன்.
அவனுடைய இறுகிய குரலில் சட்டென தன்னுடைய குரலின் தொனியை மாற்றியவள்
“என் கூட பேச உங்களுக்கு வேற எதுவுமே கிடையாதா..?’ எனக் கேட்டாள் அவள்.
“கிடையாது..”
அவளுக்கோ எரிச்சலாகிப் போனது.
‘இவன் சரியான ரோபோ ச்சை..’ என மனதிற்குள் அவனைத் திட்டிக் கொண்டவள் வெளியே அவனைப் பார்த்து சிரித்து வைத்தாள்.
அவளுடைய போலியான சிரிப்பு அவளுடைய கண்களை எட்டாது போக இவனுக்கோ சலிப்பாக இருந்தது.
மெல்ல தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து அவன் அருகே சென்று அமர்ந்து கொண்டவள் அவனுடைய அனுமதி இன்றியே மெல்ல அவனுடைய கரங்களைப் பற்றிக் கொண்டாள்.
“இன்னும் ரெண்டே ரெண்டு நாள்தான்… அதுக்கப்புறமா நான் நிரந்தரமா உங்க கூடவே இருந்திடுவேன்.. இனி எனக்கு எல்லாமே நீங்கதான்..” எனக் கூறியவாறு அவனுடைய தோளில் தன்னுடைய முகத்தைப் புதைத்தாள் கீர்த்தனா.
அவள் அருகே நெருங்கிய கணமே அபர்ணாவின் முகம் அவன் மனதில் வந்து போக தடுமாறிப் போனான் குரு.
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு கீர்த்தனா.. ஏதாவது சொல்லனும்னா சொல்லிட்டு கிளம்பு..” என்றான் அவன்.
அவளுடைய முகம் நொடியில் சுருங்கி போனது.
“என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க… எல்லாருமே ட்ரீட் கேட்டு இருக்காங்க…”
“அவங்க கேட்டத வாங்கிக் கொடு..”
“பட் அவ்வளவு பணம் என்கிட்ட இல்லையே…” என கைகளை விரித்து இதழ்களைப் பிதுக்கினாள் அவள்.
தன்னிடம் இருந்து அவள் பணத்தை எதிர்பார்க்கிறாள் என்பது நொடியில் புரிந்து போக,
“ஒன் செக்..” எனக் கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்றவன் மீண்டும் வெளியே வரும்போது தன்னுடைய கரத்தில் கத்தை பணத்தோடு வந்தான்.
“உன்னோட ப்ரெண்ட்ஸ் என்ன கேட்டாங்களோ அத வாங்கி கொடு..”
அவனுடைய கரத்தில் இருந்த கட்டான பணத்தைப் பார்த்தவளுக்கோ நொடியில் தலை சுற்றிப் போனது.
இவ்வளவு பணத்தை அவன் ஒரே தடவையில் அள்ளித் தருவான் என கிஞ்சித்தும் எதிர்பாராதவள் மகிழ்ச்சியின் உச்சத்தையே அடைந்தாள்.
“ஓ மை காட் நீங்க ரொம்ப ரொம்ப ஸ்வீட்… தேங்க்யூ சோ மச் டார்லிங்..” எனக் கொஞ்சம் குரலில் கூறியவள் அவனைத் தாவி அணைத்து அவனுடைய உதடுகளில் முத்தம் பதிக்க முயன்ற கணம் தன்னுடைய ஒற்றைக் கரத்தால் அவளுடைய கழுத்தை இறுக்கமாகப் பற்றித் தன்னிலிருந்து அவளை தள்ளி நிறுத்தியவன்,
“எனக்கு வேலை இருக்கு… இப்போ கிளம்பு…” என அழுத்திக் கூற அவளுக்கோ அவன் கழுத்தைப் பிடித்த பிடியின் வலியில் உடல் உதறியது.
‘ஸ்ஸ்… க…கழுத்த விடுங்க.. எனக்கு வலிக்குது..” எனத் திணறியவாறு கூறியவள் அவன் விடுவித்ததும் திரும்பிக் கூடப் பார்க்காது அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வேக வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேறிச் சென்றாள்.
அவள் சென்றதும் தான் இவனுக்கு சற்றே மனம் அமைதிப்பட்டது.
“இரிடேட்டிங்..” என முணுமுணுத்துக் கொண்டவன் இவளைத் திருமணம் முடித்துக் கொண்டு எப்படி ஒரே வீட்டில் ஒரே அறையில் ஒன்றாக இருப்பது எனவும் எண்ணினான்.
என்னதான் அபர்ணாவை நினைக்கவே கூடாது என உறுதி எடுத்து இருந்தாலும் கூட அபர்ணாவின் குணத்தையும் கீர்த்தனாவின் குணத்தையும் அவனால் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
அபி எப்போதும் பணத்திற்கோ நகைக்கோ ஆடம்பர செலவுகளுக்கோ முக்கியத்துவம் கொடுப்பவள் அல்லவே.
அவளுடைய ஆசைகள் ஒவ்வொன்றும் அன்பு எனும் ஆயுதத்துக்குள் அடங்கி விடுமே.
தான் வாங்கிக் கொடுத்த நகைகள் துணிகளை விட பழைய கசங்கிய தன்னுடைய தந்தை வாங்கிய ஆடைகளுக்காக சண்டை பிடித்தவள் ஆயிற்றே அவள்.
அவளை எண்ணும் போது மனதிற்குள் சாரல் வீசுவதைப் போல இருந்தது.
தென்றல் காற்று மென்மையாக அவனைத் தீண்டித் தாலாட்டுவது போல இருக்க தன்னை மறந்து விழிகளை மூடி “அபி..” என முணுமுணுத்தான் அவன்.
அவளுடைய பெயரை உச்சரித்த அவனுடைய உதடுகளும் நாவும் தித்திக்கத் தொடங்க மீண்டும் மீண்டும் அவளுடைய பெயரை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு.
‘அன்னைக்கு ரொம்ப அழுதாளே.. என்ன விட்டுப் போக முடியல என்ன காதலிக்கிறேன்னு சொன்னாளே… என்ன நிஜமாவே காதலிக்கிறாளா…?
அவளுக்கும் என்னோட ஞாபகம் வந்திருக்குமா..?
காலேஜ் போனாளா இல்லையா..?
வீட்டுக்குப் போனதும் அவளுக்கு பிடிச்ச மாதிரி சமோசா சாப்பிட்டு இருப்பாளா…?
அவங்க அப்பா வாங்கி கொடுத்த எல்லா ட்ரஸ்ஸயும் எடுத்து ஆசையா போட்டுருப்பாளா…
என்ன மறந்தாலும் மறந்திருப்பா.. என ஒவ்வொன்றாக அவளைப் பற்றி எண்ணிக் கொண்டே வந்தவன் திகைத்தான்.
இந்த மானம் கெட்ட மனம் ஏன் முடித்து வைத்த உறவைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
அபியின் அத்தியாயம்தான் என் வாழ்க்கையில் முடிந்து போனதே.
அபியால் தன்னுடைய வாழ்வை மலரச் செய்ய முடியாது.
அவள் எப்பேர்ப்பட்ட நல்லவளாக இருந்தாலும் என் குழந்தைக்கு தாயாக முடியாதே.
அவளைப் பற்றி சிந்தியாதே மனமே என இப்போது கெஞ்சலோடு உருப் போடலானான் அவன்.
அக்கணம் அபியின் அன்னையின் இலக்கத்தில் இருந்து அவனுக்கு அழைப்பு வர அவனுடைய இதயமோ வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
“வாட் இஸ் திஸ் என்னோட ஹார்ட் பீட் ஏன் இவ்வளவு பாஸ்ட்டா இருக்கு..?” என திகைத்தவன் அபி பற்றி அறியும் ஆர்வத்தில் தன்னுடைய ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு அலைபேசியை ஏற்றுத் தன் காதில் வைத்து கம்பீரம் தொலைத்த குரலின் “ஹலோ…” என்றான் அவசரமாக.
🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️