41. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.7
(78)

சொர்க்கம் – 41

தன்னுடைய அன்னையின் அழைப்பு வந்ததிலிருந்து அதிவேகமாய் துடித்துக் கொண்டிருந்த அவளுடைய இதயம் விநாயக் உதவுகிறேன் என்றதும்தான் சீராகியது.

“அப்…அப்பாக்கு அப்பாக்கு உடம்பு முடியலையாம்.. சீக்கிரமா ஒரு ஹாஸ்பிடல் கூட்டிட்டும் போகணும்.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. அம்மா அங்க தனியா இருக்காங்க..” என கைகளைப் பிசைந்தவாறு அவள் பதற,

“அப்பாவை இப்போ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயாச்சா..?”

“இல்லையே அங்க யாரும் இல்ல.. நாம போய் கூட்டிட்டுப் போகலாமா ப்ளீஸ்…” எனக் கேட்டாள் அவள்.

“வாட்..? பைத்தியமா உனக்கு..? இங்க இருந்து உங்க வீட்டுக்கு போறதுக்கு அரை மணி நேரம் ஆயிடும்… அதுவரைக்கும் உடம்புக்கு முடியாத அவரைக் காக்க வைக்க முடியுமா..?” என்றவன் சட்டென தன்னுடைய அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

“நாம சீக்கிரமா போகலாமே..” என்றவள் நொடிக்கு நொடி பதற,

அவளை விழிகளால் அமைதி படுத்தியவன் “ஹலோ குணா ஒரு அட்ரஸ் உனக்கு வாட்ஸ்அப் பண்ணிருக்கேன்.. இந்த அட்ரஸ்ல இருக்குறவர இப்பவே ஹாஸ்பிடல் கொண்டு போ.. உனக்கு பக்கம்தான்.. நான் ஸ்ட்ரைட்டா ஹாஸ்பிடலுக்கு வந்துடுறேன்..” எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் தவிப்போடு நின்றவளின் கரத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

“நாம நேரா ஹாஸ்பிடல் போனா போதும்.. நமக்கு முன்னாடியே உங்க அப்பா ஹாஸ்பிடல் போயிருவாங்க.. நான் அரேஞ்ச் பண்ணிட்டேன்.. நீ கிளம்பு..” என்றவன் அவளை அழைத்து வந்து வெளியே விட்டுவிட்டு காரை எடுத்து வர,

தன்னருகே வந்து நின்ற காருக்குள் அமர்ந்து கொண்டவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

“என்னாச்சு அப்பாக்கு..?”

“தெ.. தெரியல அம்மா பேசுறது எதுவுமே அவருக்கு புரிய மாட்டேங்குது.. எதுக்குமே ரியாக்ட் பண்ணலையாம்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..”

“எதுவும் ஆகாது பாத்துக்கலாம்..” என்றவன் ஒற்றைக் கையால் ஸ்டேரிங்கை அசைத்தவாறு மற்றைய கையால் அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பிடித்துக் கொள்ள அவளுக்கோ அக்கணம் அந்த அழுத்தம் தேவைப்பட்டது.

ஏதோ பயத்தின் விளிம்பில் நின்றவளுக்கு பற்றுக் கோலாக அவனுடைய கரம் கிடைத்துவிட அவளும் இறுக்கமாக அந்தக் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவனுடைய ஃபோனுக்கு குறுஞ்செய்தி வர அதனை எடுத்துப் பார்த்தவன் “கிரேட்..” என்றான்.

“தூரி… உங்க அப்பாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியாச்சு.. நாம போறதுகுள்ள ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க..” என்றதும் அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டாள் அவள்.

“ஹேய் என்ன இது..?” என அவளுடைய கரத்தைப் பிடித்து கீழே இறக்கியவனின் கார் இன்னும் வேகம் கூடியது.

அடுத்த சில நிமிடங்களில் அந்த மிகப்பெரிய மருத்துவமனையின் முன்பு வண்டியை நிறுத்த அந்த மிகப்பெரிய பிரம்மாண்டமான மருத்துவமனையைப் பார்த்தவளுக்கோ நெஞ்சுக்குள் ஒரு விதமான பயம் கவ்விக் கொண்டது.

இங்கெல்லாம் அவளுடைய தந்தையை வைத்து அவளால் மருத்துவம் பார்க்க முடியுமா..?

கையில்தான் சேமிப்போ சம்பளமோ ஏன் கொஞ்ச பணம் கூட அவளிடம் கிடையாதே..

இங்கே அட்மிஷனுக்கே 10,000க்கு மேல் அல்லவா போய்விடும்.

முகம் பயத்தில் வெளறிப் போனது.

பின் முதலில் அப்பாவின் உடல்நலம்தான் முக்கியம் என தன்னைத் திடப்படுத்திக் கொண்டவள் அதன் பின்னர் தலையை அடமானம் வைத்தாவது கட்டி விடலாம் என்ற நம்பிக்கையோடு அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.

மறக்காமல் மாஸ்கை எடுத்து அணிந்து கொண்டவன் அவசர சிகிச்சை பிரிவை நோக்கி அவளை மின் உயர்த்தியில் அழைத்துச் செல்ல அவளுக்கோ எப்போது தன்னுடைய தந்தையைப் பார்ப்போம் என்றிருந்தது.

அவன் அங்கே சென்றதும் சொல்லி வைத்தாற் போல வைத்தியரும் வெளியே வர அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் விநாயக்.

“பிரஷர் ரொம்ப அதிகமா இருக்கு.. அத குறைக்கிறதுக்கான மருந்து கொடுத்துருக்கோம்..‌ இப்போ அவரோட மூளைக்கு போதிய அளவு ரத்த ஓட்டம் ரொம்ப அவசியம்.. இன்னும் அரை மணி நேரத்துல என்ன பிரச்சனைன்னு சொல்றோம்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க..” என்ற வைத்தியர் மீண்டும் உள்ளே சென்றுவிட செந்தூரிதான் விதிர்விதிர்த்துப் போய் நின்றிருந்தாள்.

அவளுடைய தந்தைக்கோ நாளம் மூலம் திரவம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

செயற்கை பிராணவாயுவும் கொடுக்கப்பட்டிருந்தது.

அவளுடைய தந்தையை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்த்த குணாவுக்கு நன்றி கூறி அனுப்பி வைத்தான் விநாயக்.

பதற்றத்தோடு அவ்வளவு நேரமும் நின்றிருந்த மேகலாவோ தன்னுடைய மகளைக் கண்டதும் ஓடிவந்து அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டார்.

“பயமா இருக்குடி.. அவருக்கு ஒன்னும் ஆகாதுல்ல..?” எனக் கலங்கிய குரலில் அவர் கேட்க தன்னுடைய அன்னையை அணைத்துக் கொண்டவளுக்கு வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை.

கண்ணீர் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் வைத்தியரை சந்தித்தான் விநாயக்.

“இனி பயப்படுறதுக்கு எதுவும் இல்லை.. பிரஷர் சுகர் எல்லாமே ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.. அத கட்டுப்பாட்டுல வைக்கலைன்னா இன்னும் பிரச்சனை ஆயிடும்..

கொஞ்சம் ட்ரீட்மென்ட் நல்லா எடுத்துக்கிட்டா இவர் பழையபடி நடக்குறதுக்கு 80 சதவீதம் வாய்ப்பு இருக்கு.. பிசியோதெரபி செய்யணும்..” என வைத்தியர் கூற அனைத்தையும் அவன் அருகே நின்று கேட்டவளுக்கு அப்போதுதான் உயிரே வந்தது.

“ஓகே டாக்டர்.. என்ன ட்ரீட்மெண்ட் பண்ணனுமோ இங்க வச்சே பண்ணுங்க.. உங்களால முடிஞ்ச பெஸ்ட் ட்ரீட்மென்ட்டை அவருக்குக் கொடுங்க..” என்றான் அவன்.

“ஷூர் சார்..” என்ற அந்த வைத்தியன் சற்று நேரத்தில் தன்னுடைய பேனாவை விநாயக்கிடம் நீட்டி “ப்ளீஸ் உங்களோட ஆட்டோகிராப் கிடைக்குமா..?” எனக் கேட்க உள்ளே எழுந்த சலிப்பை வெளியே மறைத்து விட்டு அவன் நீட்டிய இடத்தில் சைனை வைத்தான் அவன்.

“தேங்க்யூ சார்.”

ஒற்றைத் தலை அசைப்புடன் அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவனுக்கு செந்தூரியின் மீதுதான் பார்வை அடிக்கடி திரும்பியது.

சற்று நேரத்தில் செந்தூரியின் தந்தையை இன்னொரு அறைக்கு அவர்கள் மாற்றிவிட அதன் பின்னர் மேகலாவும் செந்தூரியும் அவரைச் சென்று பார்த்தனர்.

ஒருமுறை கண்விழித்தவர் அவள் கேட்ட கேள்விக்கு தன் தலையசைப்பை கொடுத்து பதில் கூற அப்போதுதான் அவளுக்கு மனம் சற்று அமைதி அடைந்தது.

சிறிது நேரம் பேசிவிட்டு வெளியே வந்தவளுக்கு விநாயக்கைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சியாக இருந்தது.

அவனை வெகு நேரம் இங்கேயே காக்க வைப்பது சரியில்லை என்று தோன்றியது.

விநாயக் இவ்வளவு தூரம் வந்து உதவியதே மிகப்பெரிய விடயம் என எண்ணியவள் அவனை இங்கிருந்து செல்லச் சொல்லி விடலாம் என எண்ணியவாறு அவனருகே வர, அவனோ செக் புக்கை எடுத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.

“நீங்க இங்க வந்து நாலு மணி நேரம் ஆகுது.. இனி நான் பாத்துக்குறேன்.. நீங்க கிளம்புங்க.. என்னால உங்களுக்குதான் ரொம்ப சிரமம்..” என அவள் மென்மையான குரலில் நன்றி உணர்வோடு கூற அவளைப் புருவம் உயர்த்தி அழுத்தமாகப் பார்த்தவன்,

“வெயிட் பண்ணு நான் பில்லை கட்டிட்டு வரேன்..” என எழுந்து கொண்டான்.

“இல்ல வேணாம்.. எப்படியாவது நானே கட்டிடுறேன்..” எனத் திணறியவளை இன்னும் அழுத்தமாகப் பார்த்தவன் “இட்ஸ் ஓகே.. நான் பாத்துக்குறேன்..” என்க,

“எவ்வளவு ஆச்சு..?”

அவளுக்கோ மிகுந்த தயக்கமாக இருந்தது.

நிச்சயம் பல ஆயிரங்களைத் தொட்டிருக்கும் என அவள் நினைக்க “ஜஸ்ட் டூ லேக்ஸ்..” என்றான் அவன்.

தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு.

“என்னது 2 லட்சமா..? ஏன் அவ்வளவு..? இங்கேயே வச்சு நீங்க டிரீட்மென்ட் பண்ண சொன்னிங்களே.. அதனாலதான் இவ்வளவு ஜாஸ்தியா வந்திருக்கா…?” எனப் பதறியவளாய் கேட்டாள் அவள்.

“நோ.. ட்ரீட்மென்ட்க்கு தனியா கொடுக்கணும்.. இது இப்போ அவர பார்த்ததுக்கு..” என அவன் கூற அவளுக்கோ தலையே சுற்றி விட்டது.

மார்பில் கரத்தைப் பதித்து அப்படியே நின்று விட்டாள் அவள்.

இதற்கே இரண்டு லட்சம் என்றால் இங்கேயே தங்கி மருத்துவம் பார்ப்பதற்கு எத்தனை லட்சங்கள் முடியுமோ..?

“இல்ல நாம வேற ஹாஸ்பிடல்ல வச்சு ட்ரீட்மெண்ட் பாத்துக்கலாம்..” என அவள் தயங்கிவாறு கூற,

“இந்த ஹாஸ்பிடல் மாதிரி வேற எங்கேயும் பார்த்துக்க மாட்டாங்க.. என்ன பொருத்தவரைக்கும் இங்கதான் பெஸ்ட் ட்ரீட்மென்ட்.. சோ இங்கேயே வச்சு பாத்துக்கலாம்.. பணத்தப் பத்திக் கவலைப்படாத..”

அவளுக்கோ தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.

விழிகளில் குளம் கட்டி விட அவனையே பார்த்தவாறு நின்றவளின் தலையை வருடி விட்டவன்,

“யோசிக்காதடி இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.. நான் பார்த்துக்கிறேன்..” எனக் கூறி விட்டு பில்லை செலுத்துவதற்காக சென்றுவிட இவளுக்குத்தான் உள்ளம் பிசையத் தொடங்கியது.

அந்த வழியாக வந்த உதவி மருத்துவரை நிறுத்தியவள், “இங்கேயே வச்சு அப்பாக்கு ட்ரீட்மென்ட் பிசியோதெரபி எல்லாம் பண்றதுன்னா எவ்வளவு டாக்டர் முடியும்..?” எனக் கேட்டாள்.

“ஃபைவ் இல்லனா சிக்ஸ் லேக்ஸ் ஆகும்னு நினைக்கிறேன்.. உங்களோட அப்பா எவ்வளவு நாள் இங்க ஸ்டே பண்றாருங்கிறத பொறுத்திருக்கு… சீக்கிரமாக ட்ரீட்மென்ட் முடிஞ்சதுன்னா கொஞ்சமா செலவாகும்.. இல்ல அவரோட உடம்பு ஒத்துழைக்காம அதிக நாட்கள் தேவப் பட்டுச்சுன்னா அதிகமா ஆகும்..” என்றவர் புன்னகைத்து விட்டு சென்றுவிட அவளுக்கோ மூச்சடைத்து போனது.

சரேலென வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள் தன் அருகே நின்ற மேகலாவை இயலாமையுடன் பார்த்தாள்.

“என்னடி..?”

“இல்லம்மா என்னால மத்த எல்லாருக்குமே ரொம்ப கஷ்டம்.. இந்த பணத்தை எப்படித் திரும்பக் கொடுக்கிறது..?”

“நீ எதுக்கு திரும்ப கொடுக்கணும்..?”

“என்னமா பேசுறீங்க..? நம்ம அப்பாக்காக அவர்தானே செலவு பண்றாரு.. அவரோட பணத்தை நாம திருப்பி கொடுக்கிறது தானே சரி..”

“ஏன்டி அவன் செலவு பண்ணாதான் என்ன..? உன்ன இந்த பாடு படுத்துறானே.. இவ்வளவு நாளா உன்னைக் கூடவே வச்சிருக்கான்.. உனக்காகத்தானே பண்றான் பண்ணட்டும்..” என அன்னை கூறியதும் படபடத்துப் போனது அவளுக்கு.

“என்ன பேசுறீங்கன்னு யோசிச்சுதான் பேசுறீங்களா..?”

“நான் என்னத்தடி தப்பா சொன்னேன்..? நீ அடிச்ச சின்ன விஷயத்தை பெருசு பண்ணி கட்டாயப்படுத்தி உன்னை கூட்டிட்டு போய் அவன் கூடவே வச்சிருக்கான்… சும்மாவா வச்சிருப்பான்..? இவ்வளவு பண்றதுக்கு கைமாற இது இருந்துட்டுப் போகட்டும்..” என அன்னை கூறியதும் சேற்றை அள்ளி அவள் மீது கொட்டியது போல இருந்தது செந்தூரிக்கு.

விழிகள் கலங்கி விட “நான் ஒன்னும் அவர் கூட படுக்கல… அவரும் என் கூட படுக்கல.. என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாதீங்க..” என சீறினாள் அவள்.

மேகலாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இவ்வளவு நாட்களாக அவன் தன்னுடைய மகளை அதற்காகத்தானே அழைத்துச் சென்றிருக்கிறான் என எண்ணியிருந்தார் அவர்.

அப்படி இல்லை என்றால் எதற்காக அவளை அழைத்துச் செல்ல வேண்டும்..?

“என்னடி சொல்ற..?”

“தயவு செஞ்சு இப்போ என்கிட்ட எதுவும் பேசாதீங்கம்மா ப்ளீஸ்..” என சீறியவள் அன்னையை விட்டு சற்று தள்ளி வந்து அமர்ந்து கொண்டாள்.

தலை வலிப்பது போல் இருந்தது.

‘ஏன் கடவுளே எனக்கு மட்டும் இவ்வளவு பிரச்சனை..? இந்தப் பணத்தை எல்லாம் நான் எப்படி மறுபடியும் கொடுக்கப் போறேன்..? எனக்கு ஏதாவது நல்ல வழியைக் காட்டு ப்ளீஸ்..” என மனமுருக கடவுளை வணங்கி முடித்தவள் விழிகளைத் திறக்கும் போது அவளையே பார்த்தவாறு நடந்து வந்து கொண்டிருந்தான் விநாயக் மஹாதேவ்.

💜🔥💜

தூங்கிடாதீங்க தங்கம்ஸ்

அடுத்த எபிசோட் ஆன் தி வே 🔥

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 78

No votes so far! Be the first to rate this post.

1 thought on “41. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!