43. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

4.7
(107)

நெருக்கம் – 43

குருஷேத்திரனைத் தாங்கிப் பிடித்தவாறு நின்றிருந்த மாதவனுக்கு நெஞ்சம் பிசையத் தொடங்கியது.

இவ்வளவு துடிப்பவன் எப்படி அன்று பொய்யாகிப் போனான்..?

எதற்காக அவளை வீட்டை விட்டு அனுப்பினான்..?

குறையோடு வந்திருப்பதாக அல்லவா அந்தப் பெண் கூறி அழுதாள்.

எதுவுமே புரியவில்லை அவனுக்கு.

ஆனால் அவனுடைய கதறலையும் துடிப்பையும் நெஞ்சத்தின் பதைபதைப்பையும் நேரடியாகக் கண்ட மாதவனுக்கு அதற்கு மேலும் தான் அமைதியாக இருந்தால் அது தவறாகிப் போகும் என்ற முடிவுக்கு வந்தான்.

இனியும் இப்படியே அமைதியாக இருந்தால் உள்ளே இருப்பது தன் மனைவிதானோ என நினைத்தே இவன் மாய்ந்து போவான் என்பதை உணர்ந்து கொண்டவன்,

“சார் அது உங்க பொண்டாட்டியா இருக்காது… நான் அவங்கள பஸ் ஸ்டாப்லதான் ட்ராப் பண்ணினேன்.. தைரியமா போய் பாருங்க சார்… அது உங்க பொண்டாட்டியா இருக்காது..” என மாதவன் கூற விலுக்கென நிமிர்ந்து அவனைப் பார்த்தவன் அவனுடைய இரு தோள்களையும் பற்றிக் கொண்டு,

“நி…நிஜமாவா..? நீ அவளை இங்கே ட்ராப் பண்ணலதானே..? பஸ் ஸ்டாப்ல அவளை ட்ராப் பண்ணியா…?” என திரும்பத் திரும்ப குரு கேட்க அவன் கேட்ட அனைத்திற்கும் ஆம் ஆமென பதில் கூறினான் மாதவன்.

அக்கணம் அவன் மாதவனிடம் அவ்வாறு கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு வயதான பெண்மணியும் இன்னும் சிலரும் கதறிக்கொண்டு ஓடி வருவதைக் கண்டு திகைத்து வழிவிட்டு நின்றான் குருஷேத்திரன்.

“ஐயோ என் கண்ணம்மா…. ஏன்டி இப்படி பண்ண…?” எனக் கதறி அழுதவாறு வந்த அந்தப் பெண்மணியோ எல்லோரையும் தள்ளி விட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தவர் இன்னும் பெரும் குரல் எடுத்து அழத் தொடங்கி விட அது அவர்களுடைய பெண்தான் என அங்கே உறுதியாகிப் போனது.

“உன்னோட புருஷன் உன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டா.. நம்ம வீட்டுக்கு வர வேண்டியதுதானே..? நாங்க என்ன உன்ன வேணாம்னு தலை முழுகியா விட்டுட்டோம்..? இல்லையே… ஏன்டி இந்த அம்மாவோட ஞாபகம் உனக்கு வராம போச்சு..? இப்படி யாருமே இல்லாத அனாதை மாதிரி ஏதோ ஒரு ரூம் எடுத்து தற்கொலை பண்ணிக்க உனக்கு எப்படி மனசு வந்துச்சு..?

அந்தப் பரதேசி எல்லாம் மனுசனா..? அவனெல்லாம் நல்லாவே இருக்க மாட்டான்.. அவனோட தேவைக்காக உன்னை பயன்படுத்திட்டு இப்போ உன்னை கறிவேப்பிலை மாதிரி தூக்கி எறிஞ்சிட்டான்ல… நான் வயிறு எரிஞ்சு சொல்றேன் அவ நல்லாவே இருக்க மாட்டான்..

என் பொண்ணோட வாழ்க்கையை இப்படி சிதைச்சிட்டானே பாவி.. ஐயோ கண்ணம்மா… நான் என்ன செய்வேன்..? இனி நீ இல்லாம நான் எப்படி வாழ்வேன்….? என்னோட உலகமே நீ தானடி… ஏன்டி இப்படி பண்ணின..? ஏன் இப்படி பண்ணின..? இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா உனக்கு கல்யாணமே பண்ணி வச்சிருக்க மாட்டேனே ஐயோ..!” என அந்தத் தாய் கதறிக் கதறி அழுது கொண்டிருக்கும் அவலக் குரல் குருஷேத்திரனை பலமாகத் தாக்கியது.

அவருடைய அத்தனை வசவு வார்த்தைகளும் தனக்காகவே கூறப்பட்டதைப் போல இருக்க சுளீர் என வலித்தது அவனுக்கு.

“இப்போ எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமாதான் பொண்ணுங்க தற்கொலை பண்ணிக்கிறாங்க.. வீட்ல ராணி மாதிரி தேவதை மாதிரி வளர்ந்த பொண்ணுங்க எல்லாம் புகுந்த வீட்ல கொடுமை அனுபவிக்க முடியாம அதை தாங்கித் தாங்கி சிலர் டிப்ரஷனுக்குள்ள போறாங்க.. சிலர் ஒரு கட்டத்துக்கு மேல அதைத் தாங்க முடியாம சூசைட் பண்ணிக்கிறாங்க.. காலக்கொடுமை..” என அருகே நின்ற ஒரு காவல்துறை அதிகாரி இன்னொரு அதிகாரியிடம் கூறிக் கொண்டிருக்க தன் தலையை உலுக்கிக் கொண்டான் குருஷேத்திரன்.

‘எங்கே அது அபியாக இருந்து விடுமோ..!’ என எண்ணி இவ்வளவு நேரமும் அந்த அறைக்குள் செல்லாமல் இருந்தவன் இப்போது அது அபி இல்லை என்றதும் மெல்ல தன்னுடைய பாதங்களை முன்னே வைத்து அந்த அறைக்குள் நுழைய சித்தம் கொண்டான்.

அடுத்த சில நொடிகளில் அந்த அறையின் வாயிலுக்கு நேரே வந்து நின்றவன் இறந்து கிடந்த பெண்ணின் முகத்தைக் கண்டதும் துடித்துப் போனான்.

அந்தப் பெண்ணின் முகம் கோரமாக மாறி இருந்தது.

விழிகள் வெளியே பிதுங்கி, தொண்டை இறுகிச் சுருங்கி நாக்கு வெளியே தொங்கிய வண்ணம் விகாரமாக மாறிப் போயிருந்த அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்க இதயத்திற்குள் சுருக் சுருக்கென தைத்தது.

போலீஸ் அதிகாரியும் அந்த பெண்ணின் சாதாரண புகைப்படத்தைக் காட்டி “இதுதான் உங்க பெண்ணா..?” என்பது போல் வந்தவர்களிடம் விசாரிக்க ஆம் என்றனர் அந்தப் பெண்ணின் உறவுக்காரர்கள்.

தற்செயலாக அந்தப் பெண்ணின் புகைப்படத்தை பார்த்தவனுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்தது.

அழகான பெண்..

அந்த அழகெல்லாம் இப்போது எங்கே போயிற்று..?

இப்படி சிதைந்த கோலத்தில் இருக்கும் பெண்ணின் முகத்தில் சட்டென அபியின் முகம் வந்து போக விக்கித்துப் போனான் அவன்.

‘நான் அபிக்கு பண்ண தப்ப இன்னொருத்தன் இந்தப் பொண்ணுக்கு பண்ணி இருக்கான்..’ என நினைத்துக் கொண்டவனுக்கு மனம் வெகுவாகக் காயப்பட்டது.

பாரிய தவறை இழைத்து விட்டோம் என்பது வெகு தாமதமாகவே புரிந்தது.

அழுது கொண்டிருந்த அந்தப் பெண்ணின் உறவினர்களை பார்க்கவே அஞ்சியவன் வேகமாக தன் விழிகளைத் துடைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி வந்தான்.

இந்தச் சம்பவம் அவனுக்கு பெருத்த அடியாக இருந்தது.

தளர்ந்த நடையுடன் வெளியே வந்தவன் சோர்ந்த பார்வையுடன் மாதவனை ஏறிட்டுப் பார்த்தான்.

நடுங்கிய அவனுடைய கரங்களோ அவனை நோக்கி உயர்ந்து கும்பிட்டன.

“அபிய பத்தி ஏதாவது தெரிஞ்சி இருந்தா தயவு செஞ்சு உண்மைய சொல்லுங்க.. அவளுக்கு ஏதும் ஆகிடக் கூடாது… நான் சீக்கிரமா அவ கிட்ட போகணும் ப்ளீஸ்..” என மன்றாடும் குரலில் கேட்டவன் அப்படியே அவன் முன்பு கையெடுத்து கும்பிட்டவாறு மண்டியிட்டு தரையில் அமர்ந்து விட பதறிப் போய் அவனைத் தூக்கினான் மாதவன்.

“ஐயோ எந்திரிங்க சார்.. இப்படி பண்ணாதீங்க நான் சொல்லிடுறேன்..” என்றவன் குருவை அழைத்துக் கொண்டு அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்தான்.

அன்று அவள் அழுது கொண்டே வந்ததும், தன்னுடைய வீட்டின் வாயில் வரை வந்து உள்ளே செல்ல முடியாமல் எங்கேயாவது தன்னைக் கொண்டு விடும்படி கதறி அழுததும், பணம் இல்லாமல் அவள் நகையை விற்று பேருந்தில் ஏறி மட்டக்களப்புக்கு சென்றது வரை அனைத்தையும் முழுமூச்சாக மாதவன் கூறி முடிக்க இவனுக்கோ உயிரை உருவி எடுத்தாற் போல வலித்தது.

“என்னோட அபி கைல பணம் கூட இல்லாம இவ்வளவு கஷ்டப்பட்டாளா..? நான் வீட்டுக்கு போயிடுவான்னு தானே நினைச்சேன்… ஐயோ இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைச்சுப் பார்க்கவே இல்லையே… நானே அவளைக் கொண்டு வந்து வீட்டில் விட்டுட்டு போயிருக்கணுமோ..!” என அவன் மனம் கலங்கி எண்ணிக் கொண்டிருக்கும் போது அவனுடைய மனசாட்சியோ அவனை கோபமாக எச்சரித்தது.

‘இன்னுமா உனக்குப் புரியவில்லை அவளை இனியும் உன்னால் ஒதுக்கி வைக்க முடியுமா..? கொஞ்ச நேரத்தில் அவள் இல்லை என்றால் இறந்து விடும் அளவுக்கு முடிவை எடுத்தது மறந்து போய்விட்டதா..’ என மனசாட்சி கேள்வி கேட்க தன் நெஞ்சை அழுத்தமாக நீவி விட்டுக் கொண்டான் அவன்.

‘முதலில் அவளைக் கண்டுபிடிக்க வேண்டும்.. எந்தவித ஆபத்தும் இல்லாமல் தன்னுடைய தேவதையை மீட்டு எடுக்க வேண்டும்.. அதன் பிறகு மீதியை பார்த்துக் கொள்ளலாம்..’ என எண்ணியவன் மாதவனிடம் சுரேஷின் முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டு தன்னுடைய இன்னொரு காரை அந்த இடத்திற்கு வர வைத்தவன் மட்டக்களப்புக்குச் செல்ல அக்கணமே முடிவெடுத்தான்.

‘இவ்வளவு படிச்சிருந்தும் இத்தனை வயசு வந்தும் அறிவில்லாம முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன்.. முட்டாள்தனம்னு சொல்றத விட சுயநலமா நடந்துக்கிட்டேன்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.. ஆனா யாருன்னே தெரியாத ஒரு பொண்ணுக்கு நீங்க பண்ண உதவி ரொம்ப ரொம்ப பெருசு.. உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க… நான் உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன்.. என்னோட அபிய கூட்டிகிட்டு உங்களோட வீட்டுக்கு நானே வரேன்.. இப்போ நான் அவளைப் பார்த்தே ஆகணும் போய்ட்டு வரேன்..” என்றவன் அவசர அவசரமாக மாதவனை அணைத்து விடுவித்து விட்டு தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு மட்டக்களப்பு நோக்கி பயணிக்கத் தொடங்கினான்.

இத்தனை நேரமும் சீரற்று துடித்துக் கொண்டிருந்த அவனுடைய இதயம் தற்போது தான் சற்றே அமைதி அடைந்தது.

அவள் மட்டக்களப்பில் இந்த இடத்தில்தான் இருக்கிறாள் என்ற விடையமே அவனுக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுத்து விட அப்போதுதான் தன்னை குனிந்து பார்த்தான் குருஷேத்திரன்.

சில மணி நேரத்தில் ஆளே மாறிப் போயிருந்தான் அவன்.

யாருக்காகவும் அவன் இப்படி துடித்ததே இல்லையே..!

எங்கிருந்து இவள் மீது இத்தனை அன்பு தனக்கு வந்தது..?

இன்னும் புரியாத புதிராகத்தான் இருந்தது அவனுக்கு.

இந்த நொடியே அவளைத் தன் கண்களால் பார்த்து ஆரத் தழுவி இறுகணைத்துக் கொள்ள வேண்டும் போல எழுந்த வெறியை அடக்க முடியாது ஸ்டேரிங்கை இறுகப் பற்றிக் கொண்டவன்,

“சா.. சாரி அபி.. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.. குழந்தைக்காக உன்னை தூக்கி எறிஞ்சிட்டேன்.. வேணாம் இதுவரைக்கும் நான் மத்தவங்களுக்காக என்னை மாத்தி வாழ்ந்தது போதும்.. இனி உனக்காக, எனக்காக, நமக்காக மட்டுமே வாழலாம் அபி.. குழந்தை இல்லைன்னா என்ன..?

நான் உன்ன என்னோட குழந்தை மாதிரி பாத்துக்குறேன்.. இல்லனா நீயும் நானும் இன்னொரு குழந்தையை தத்தெடுத்து வளத்துக்கலாம்… குழந்தையே இல்லைன்னா கூட பரவாயில்ல… எனக்கு நீ மட்டும் போதும்… நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்… என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது…

இனி ஒரு நிமிஷம் கூட உன்னை பிரிஞ்சு வாழக் கூடாதுன்னு நினைக்கிறேன் அபி மா.. இன்னும் சில மணி நேரத்துல நான் உன் முன்னாடி நிப்பேன்.. என்னோட எல்லாத் தவறையும் திருத்திக்க வாய்ப்பு கேட்டு உன் முன்னாடி நிக்கப் போறேன் சாரி.. சாரிடி…” என்றவன் விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

தன் கரத்தில் இருந்த கண்ணீர் துளியை அவன் பார்த்த கணம் தான் மீண்டும் காதலில் விழுந்துவிட்டது அவனுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.

“நீ எங்கே இருந்தாலும் உன்ன தேடி நான் வருவேன் மை லவ்..” என்றவனின் கரங்களில் அவனுடைய காரோ அதிவேகத்தில் பறந்தது.

பாவம் அங்கேயும் ஏமாறப் போவதை அறியாது சென்று கொண்டிருக்கிறான் அவன்.

💜🔥💜

இன்னொரு எபிசோட் இருக்கு டியர்ஸ் தூங்கிடாதீங்க..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 107

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “43. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”

  1. ஜீஷா ஶ்ரீ

    தூக்கம் வராது நீங்க போடுங்க இன்னும் அழுது சாகட்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!