விஷம் – 44
முழு இருட்டு…
எங்கு பார்த்தாலும் அவனுடைய விழிகளுக்கு இருள் மட்டுமே தெரிந்தது.
திக்குத் தெரியாத வனாந்தரப் பகுதியில் தனித்து நிற்பதைப் போல இருந்தது.
எந்த ஓசையும் கேட்கவில்லை.
எந்த ஒளியும் அவனைத் தீண்டவில்லை.
சற்று நேரத்தில் ஏதோ ஒரு மருத்துவ இயந்திரத்தின் “பீப்… பீப்.. பீப்..” என்ற ஒலி அவனுடைய செவிகளை மெல்லத் தீண்டியது.
அதைத் தொடர்ந்து மெதுவாக ஒரு பெண்ணின் குரல்.
அந்தக் குரலுக்கு இத்தனை மென்மையா..?
அந்த குரலின் ஆழத்தை முழுதாக உணர வேண்டும் என எண்ணியவன் அந்தக் குரல் கேட்ட திசைப் பக்கம் இருளில் நடக்கத் தொடங்கினான்.
நடப்பதற்கு சிரமமாக இருந்தது.
பாதைகள் கடினமாக இருந்தன.
இந்தப் பாதை மிகவும் சிரமமாக இருக்கின்றதே மீண்டும் திரும்பி சென்று விடலாமா என அந்த இடத்தில் தயங்கி நின்றவாறே சிந்தித்தான் அவன்.
இப்போது இன்னும் தெளிவாக அந்தக் குரல் கேட்டது.
“யாழாஆஆ..”
திகைத்து நின்று விட்டான் அவன்.
இந்தப் பெயரை அவன் எங்கேயோ கேட்டிருக்கிறானே.
அட இது என்னுடைய பெயர்தான் அவனுடைய மூளை உணர்த்தியது.
அந்தக் குரல் இன்னும் என்னவெல்லாம் பேசும் என அறிந்து கொள்ளும் ஆவலில் மேலும் முன்னேறினான் அவன்.
இப்போது அவனுக்கு பாதையின் கடினம் பெரிதாக இருக்கவில்லை.
இன்னும் முன்னேறினான் அவன்.
“ஐ லவ் யு யாழன்..” இம்முறை வெட்கம் கலந்து காதலைக் கூறியது அந்தப் பெண் குரல்.
அவனுடைய இதயத்துடிப்பில் வேகம் அதிகரிப்பதை அக்கணம் அவனால் உணர முடிந்தது.
இவ்வளவு நேரமும் மிக மிக மெதுவாக கேட்ட பீப் என்ற ஒலி இப்போது மிகவும் சத்தமாக அவனுடைய காதுகளுக்குள் ஒலித்தது.
அந்தப் பெண்ணின் குரலை பின் தொடர்ந்து தன்னுடைய நடையின் வேகத்தை அதிகரித்தான் யாழவன்.
என்ன அதிசயம் அங்கே சிறிய ஒளி வெள்ளம் அவனுடைய கண்களுக்கு விருந்தானது.
அந்த ஒளியில் அழகிய மாதுவின் முகம் தெரிய மறுபடியும் திகைத்து நின்றான் அவன்.
இந்த முகம் அவனுடைய உயிருக்கு நிகரான அவளின் முகம் அல்லவா..?
தன் அச்சுமாவின் முகம் அல்லவா..?
இன்னும் வேகமாக அந்த ஒளி வெள்ளத்தை நோக்கி ஓடத் தொடங்கினான் யாழவன்.
அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள் அர்ச்சனா.
அவனுடைய சிறிய உடலுக்குள் பூகம்பம் நிகழ்வது போல இருந்தது.
வியர்வையில் தன்னுடைய உடல் ஈரமாவதை உணர்ந்தான் அவன்.
இக்கணமே அவளைத் தொட்டுவிட வேண்டும் என அவனுடைய கரம் மெல்ல உயர்ந்தது.
விரல்கள் நடுங்கின.
இருள்…
பிறகு வெளிச்சம்…
மறுபடியும் இருள்…
மீண்டும் வெளிச்சம்…
வெளிச்சத்துக்குள்ளே அர்ச்சனாவின் குரலுக்கு உட்பட்ட அந்த ஒரு வார்த்தை மட்டும் மீண்டும் ஒலித்தது…
“யாழா வா…”
அசைவற்றுக் கிடந்த அந்த உடலுக்கு உயிர் கொடுத்தது அந்த வார்த்தைகள்.
****
அந்த மருத்துவ அறைக்குள் அசைவின்றிப் படுத்துக்கு கிடந்த யாழவனின் கை அசைந்ததைப் போல இருந்ததை அந்தப் பெண் வைத்தியர் கண்டு திகைத்தார்.
“இப்போ கை அசைஞ்சுதா இல்லையா..?” என குழம்பிப் போனார் அவர்.
தூண்டுவது போல மெதுவாக அவன் விரலைத் தொட்டுப் பார்த்தார்.
அவரது விரல் தொடுவதை யாழவனின் நரம்புகள் உணர்ந்தன…
மறுநொடியில், அவனது நடுவிரல் சிறிதளவுக்கு நெளிந்தது!
“மை காட்… டாக்டர்! டாக்டர்…! அவர்… அவர்… கை அசைச்சாரு!”
“அவர் கை அசைச்சாரு…!” என சத்தமாக குரல் கொடுத்தார் அந்த பெண் வைத்தியர்.
மருத்துவக் குழு அடுத்த சில விநாடிகளில் அந்த அறைக்குள் பாய்ந்தது.
அக்கணம் யாழவனின் மூடிய விழிகளில் இருந்து ஒரு துளி கண்ணீரும் வழிந்தது.
ஆம் இரண்டு மாத போராட்டாத்திற்குப் பின் கோமாவில் இருந்து விழித்து விட்டான் அவன்.
****
நாட்கள் மிக வேகமாக நகர்ந்து கொண்டே சென்றன.
அர்ச்சனாவுக்குத்தான் நாட்கள் நகர்ந்து ஆறு மாதங்கள் கடந்ததை இன்னும் நம்ப முடியவில்லை.
இன்னும் யாழவன் இந்த உலகத்தில் இல்லை என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மூளை நிதர்சனத்தை எடுத்து உரைத்தாலும் அவளுடைய காதல் மனம் அதை ஏற்கத் துணியவில்லை.
அரணைத் தன்னிடம் கொடுக்கும்படி அவள் எவ்வளவோ கெஞ்சியும் கூட யாழவனின் அன்னையோ குழந்தையை அவளிடம் கொடுப்பதற்கு மறுத்து விட்டிருந்தார்.
அழுது கெஞ்சி போராடி ஒரு கட்டத்தில் குழந்தையைக் கேட்பதை நிறுத்தி விட்டாள் அர்ச்சனா.
இறுதியில் அவள்தான் அரணைப் பார்ப்பதற்காக தினமும் யாழவனின் வீட்டிற்குச் சென்று வர நேர்ந்தது.
இன்று காலையில் எழுந்ததுமே அழத் தொடங்கி விட்டிருந்த தன்னுடைய குட்டி தேவதையை தூக்கி மடியில் வைத்தவளுக்கு நெஞ்சம் நெகிழ்ந்து போனது.
குழந்தைக்குப் பெயர் சூட்டும் பொழுது தன்னுடைய கணவனின் நினைவாக யாழினி என்ற பெயரையே தேர்ந்தெடுத்திருந்தாள் அர்ச்சனா.
யாழினியின் நெற்றி மீது முத்தமிட்டு, நெஞ்சில் அணைத்துக் கொண்டவளுக்கு கண்களில் சற்றே ஈரம் சுரந்தது.
குழந்தையை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு பொறுப்புகள் அதிகமாகிவிட்டன என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
அதுவும் பெண் குழந்தை..!
இந்த உலகத்தில் பெண் குழந்தையை அவளால் தனியாக வளர்த்து விட முடியுமா..?
சற்று அச்சமாக இருந்தது.
இல்லை இல்லை அச்சம் அதிகமாகவே இருந்தது.
அவளுடைய யாழன் இருந்திருந்தால் அவள் சற்றும் அஞ்சி இருக்கத் தேவையில்லைதான்..
ஆனால் இனி அனைத்தையும் அவள் தனியாக கடந்து விட வேண்டிய கட்டாயம் அல்லவா..?
இதில் கடந்த மாதத்திலிருந்து இன்னொரு திருமணத்தை செய்து கொள்ளும்படி வற்புறுத்திக் கொண்டிருந்த அன்னையை எப்படி சமாளிப்பது என்று அவளுக்குப் புரியவில்லை.
மறுமணம் செய்து கொள்வதோ இன்னொரு வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வதோ தவறு எனக் கூறும் அளவுக்கு அவள் ஒன்றும் பிற்போக்குவாதி அல்ல.
தன்னை நம்பியுள்ள வாழ்க்கைத் துணைக்கு துரோகம் செய்து இன்னொரு வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்வதுதான் பெரும் தவறு.
தவிர வாழ்க்கையை இழந்து தனியாக தவிப்பவர்கள் இன்னொரு துணையைத் தேடிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதுதான் அவளுடைய கருத்து.
ஆனால் அவளுடைய கருத்தையே வைத்து அவளுடைய மனதை மாற்ற அன்னம் முயற்சிக்க அவளுக்கோ வெறுத்துப் போனது.
மறுமணம் ஒன்றும் தவறானது இல்லைதான்.. அதற்காக மனம் முழுவதும் ஒருவன் நிலைத்து நிற்கும் போது இன்னொருவனை எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும்..?
நிச்சயமாக அவளால் அதை ஏற்கவே முடியாது.
இதோ இப்போது வரை யாழவனின் காதல் பார்வையை அவளால் மறக்கவே முடியவில்லையே.
இமை மூடிய அடுத்த நொடியே அவனுடைய காதல் ததும்பும் பார்வை அல்லவா அவளை கொல்லாமல் கொல்கின்றது.
இறுதியாக அவன் அவளுடன் பேசும் போது என்னை விட்டு பிரிந்து செல்லாதே என்பதைப் போல பார்த்து வைத்தானே அந்த கலங்கிய பார்வையை அவளால் எங்கனம் மறந்து இன்னொருவனுடன் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்..?
அது மட்டுமா அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனரே.
இனி அவர்களை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வருவது தானே அவளுடைய குறிக்கோள்.
அர்ச்சனாவோ தனக்குள் சிந்தித்துக் கொண்டிருக்க, குழந்தையோ அவளைப் பார்த்து சிரித்தது.
அந்தக் குழந்தையின் அழகிய சிரிப்பில் அவளுக்கோ சற்றே வலி மட்டுப்பட்டது.
“என்ன நடந்தாலும் அம்மா உன்ன ரொம்ப நல்லா பாத்துக்குவேன் தங்கம்..” என்றாள் அவள் குழந்தையின் சிரிப்பை ரசித்தபடி.
“என்னோட தங்க குட்டி பாட்டி கூட சமத்தா இருப்பீங்களாம்.. அம்மா போய் உங்களோட அண்ணாவ பார்த்துட்டு சீக்கிரமா உங்ககிட்ட ஓடி வந்துருவேனாம்…” என அவள் குழந்தையோடு கொஞ்சிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தார் அன்னம்.
“நான் சொல்றத கேட்கவே கூடாதுன்னு இருக்கியா அர்ச்சனா..?” என கோபத்துடன் கேட்டார் அன்னம்.
“ம்மா இப்போ எதுக்கு என் மேல கோபப்படுறீங்க..? நான் என்ன பண்ணினேன்..?”
“போதும் அர்ச்சனா.. இந்த ஆறு மாசமும் டெய்லி அவங்க வீட்டுக்கு போய் வந்துகிட்டுதான் இருக்க.. அவங்களும் குழந்தையை கொடுக்க மாட்டாங்க.. இத்தோட விட்ரு..”
“அவங்க கொடுக்க மாட்டேங்கிறதுக்காக நான் எப்படி மா அவன விட முடியும்..? நான் வருவேன்னு அரண் குட்டி எனக்காக காத்துகிட்டு இருப்பான்.. அவனுக்கும் பால் கொடுக்கணும்மா..” என்ற மகளை இயலாமையுடன் பார்த்தார் அவர்.
“சரி போய் பால் கொடு.. ஆனா இப்படியே எத்தனை நாளைக்குத்தான் உன்னால அங்க டெய்லி போக முடியும்..?”
“நான் சாகுற வரைக்கும் போவேன்..” என்றாள் அவள்.
“முட்டாள் மாதிரி பேசாத அர்ச்சனா.. நல்ல சம்பந்தம் வீடு தேடி வந்திருக்கு.. அவங்க எல்லா பிரச்சனையும் தெரிஞ்சதுக்கு அப்புறமும் நீதான் வேணும்னு சொல்றாங்க.. ராமன் மாதிரி பையன் வேணும்னு அடிக்கடி கேட்பியே.. இதோ அப்படிப்பட்ட வரன்தான் தேடி வந்திருக்கு.. வேணாம்னு சொன்னா என்னடி அர்த்தம்..?”
“ப்ச்… ஏன்மா வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம்னு உங்களுக்குத் தெரியாதா..? நோ மீன்ஸ் நோ.. எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லமா.. அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் யாழவனை மறந்து என்னால இன்னொருத்தர் கூட சத்தியமா வாழ முடியாது..”
“இதோ பாருடி உன்ன மாதிரி இருந்தவ தான் நானும்..”
“அதத்தான்மா நானும் சொல்றேன்.. அப்பா இறந்ததுக்கு அப்புறமா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலையே.. எனக்காகவும் கீர்த்தனக்காகவும் தானே வாழ்ந்தீங்க… அதே மாதிரி நான் அரணுக்காகவும் யாழினிக்காகவும் வாழ்ந்துட்டு போறேனே.. என்ன மட்டும் எதுக்கு இப்படி ஃபோர்ஸ் பண்றீங்க..?”
“ஏன்னா பெண் குழந்தைய வெச்சுகிட்டு தனியா வாழ்றது ஒன்னும் அவ்வளவு ஈசி கிடையாது அர்ச்சனா… நீங்க ரெண்டு பேரும் சின்ன பொண்ணுங்களா இருக்கும்போது நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? எத்தனை பேரை சமாளிக்க வேண்டியது இருந்துச்சு தெரியுமா..? வேலைக்கு போனாலும் தப்பாதான் பாப்பாங்க.. எல்லா ஆம்பளைங்களும் நல்லவங்க இல்லை.. எத்தனையோ நல்லவங்களுக்கு மத்தியில கேடுகெட்டவனுங்களும் இருக்காங்க..
உங்கள வச்சுக்கிட்டு நான் நிம்மதியா தூங்கினது கூட இல்லடி.. நான் பட்ட கஷ்டம் உனக்கு வேணாம்மா.. விதவையா வாழ்ந்தாலே எத்தனை கேள்விய எதிர் நோக்க வேண்டி வரும்னு உனக்குத் தெரியுமா..?
ஏதோ புருஷன் செத்ததும் உடல் தேவைக்காக நாம தவிச்சு துடிச்சுகிட்டு இருக்க மாதிரியே பார்க்கிறவனெல்லாம் பேசுவானுங்க.. நமக்கும் ஒரு மனசு இருக்குங்குறது அவனுங்களுக்கு எப்பவுமே புரியாது..” என்றவருக்கு விழிகளில் இருந்து கண்ணீர் பொங்கி விட்டது.
“எந்த வாழ்க்கையை என்னோட பொண்ணு எப்பவுமே அனுபவிக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ இப்போ அந்த நிலமையே உனக்கு வந்துருச்சு.. இதெல்லாம் உன்னால தாங்க முடியாதுடி… நான் சொல்றத தயவு செஞ்சு கேளு… உனக்குன்னு ஒரு வாழ்க்கைத் துணை இருக்கிறது அவசியம்..” என தவிப்போடு கூறினார் அன்னம்.
அன்னையின் தவிப்பு அவளுக்குப் புரியத்தான் செய்தது.
“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாமே சரியாயிடும்னு நம்புறீங்களா..?”
“நிச்சயமா… அந்தப் பையன்தான் உன்ன ரொம்ப வருஷமா காதலிக்கிறானே.. நீ யாழவனை கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரிஞ்சு சூசைட் எல்லாம் ட்ரை பண்ணிருக்காரு..” என்றதும் சலித்துக் கொண்டாள் அர்ச்சனா.
அவளுக்கும் அது தெரிந்த விடயம்தான். அவள் யாழவனின் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து கதிர் என்பவன் கொடுத்த காதல் தொல்லைகளை அவள் இன்னமும் மறக்கவில்லை.
மிகவும் நல்லவன்தான்.. ஆனால் ஏனோ அவளுடைய மனம் அவனோடு ஒன்றவே இல்லை.
அதன் பின்னர் யாழவனைச் சந்தித்ததும் கதிரைப் பற்றி அவள் மறந்தே போனாள்.
இப்போது யாழவனுடைய மரணத்தை அறிந்து வீடு தேடி வந்து அவன் பெண் கேட்டு விட்டுச் சென்றது அவளுக்குள் கோபத் தீயை மூட்டிவிட்டிருந்தது.
“அம்மா ப்ளீஸ்.. இனி கதிரைப் பத்தி எதுவுமே என்கிட்ட பேசாதீங்க.. நான் அரணை பாக்க போகணும்.. டைம் ஆயிடுச்சு இந்நேரத்துக்கு அவன் என்ன தேட ஆரம்பிச்சிருப்பான்..”
“இனி நீ அங்க போக வேணாம்மா.. கதிர் வீட்ல இருந்து உன்னை பார்க்க வர்றேன்னு சொல்லிருக்காங்க..” என அன்னம் அழுத்தமாகக் கூற அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
தன்னுடைய அன்னையின் மீது மித மிஞ்சிய கோபம் அதிகரிக்க,
“யாரக் கேட்டு அவங்கள வரச் சொன்னீங்க..?” எனக் கோபத்தில் கத்தியவள் வெளியே காலிங் பெல் சத்தம் கேட்க கதிர்தான் வந்திருக்கின்றானோ என்ற கோபத்தில் வேகமாக சென்று கதவைத் திறந்தவள் அங்கே கதிர் இல்லாது யாழவனின் நண்பன் விஷ்வா நிற்க, அவனைப் பார்த்து குழம்பிப் போனாள்.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.