நெருக்கம் – 44
விடியற்காலையில் இலங்கையின் ‘மீன் பாடும் தேன் நாடு’ எனப் பன்னெடுங் காலமாக அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தை வந்தடைந்திருந்தான் குருஷேத்திரன்.
தன்னவள் இங்கே இருப்பதாலோ என்னவோ அந்த மாவட்டத்திற்குள் நுழைந்த மாத்திரமே அவனுடைய இதழ்களில் சிறு புன்னகை கூட தோன்றி மறைந்தது.
ஒரு நாளில் தன்னை எப்படி எல்லாம் படுத்தி எடுத்து விட்டாள் இந்தச் சிறு பெண்.
எப்படி எனக்குள் இவ்வளவு ஆழமாக ஊடுருவி விட்டாள்..?
அவள் மீது கொள்ளை அன்பை வைத்துக்கொண்டு கண்மூடித்தனமாக இவ்வளவு நாளும் இருந்த தன்னை மீண்டும் மீண்டும் திட்டிக் கொண்டான் அவன்.
சில நாட்களாக புரியாது இருந்த அனைத்து விடயங்களும் இக்கணம் அவனுக்குப் புரிந்தது.
கீர்த்தனா தன்னை பெயரைச் சுருக்கி அழைக்க சொன்னபோது பிடிக்காமல் போனதற்கான காரணமும்
அவளுடைய பெயரை தன்னருகே பத்திரிகையில் பார்த்ததும் மனம் வெறுத்ததற்கான காரணமும்
அவள் தன்னை நெருங்கி முத்தமிட்ட போது அருவருப்பாக இருந்ததற்கான காரணமும்
ஏன் பித்து பிடித்ததை போல எதையோ சிந்தித்துக் கொண்டு அவன் அவனாக இல்லாததற்கான காரணமும் அபி மட்டும்தான் என்பதை அக்கணம் தெள்ளத்தெளிவாக பட்டவர்த்தனமாக ஆணித்தரமாக உணர்ந்து கொண்டான் அவன்.
மீண்டும் காதல் வராது என்று அல்லவா எண்ணினான்..
அதுவும் அவன் காதலால் அத்தனை வேதனைப்பட்டு, அவமானப்பட்டு உடைந்து நொறுங்கிப் போய் காதலை வெறுத்து ஒதுக்கிய பின்பும் மீண்டும் காதல் மலரும் என அவன் கிஞ்சித்தும் எதிர்பார்த்து இருக்கவில்லை.
காதல் அத்தியாயத்தை 12 வருடங்களுக்கு முதலே தன் வாழ்க்கையில் குழி தோண்டி புதைத்து விட்டதாக அவன் எண்ணி இருக்க அந்தக் குழியில் இருந்து செடியாக தோன்றி இப்போது விருட்சமாக அல்லவா வளர்ந்து நிற்கிறது அபி மேல் அவன் கொண்ட காதல்.
நிஜத்தைக் கூற வேண்டும் என்றால் அவனுக்கு தித்திப்பாகத்தான் இருந்தது.
இந்த நேசம் அவனுடைய காலம் முழுவதும் போதும்.
இறுதிவரை அவளோடு வாழ்ந்து விட்டு இறந்து போய்விடலாம் எனக் காதலோடு எண்ணிக் கொண்டவன் மாதவன் கொடுத்த முகவரியை வந்தடைந்து விட்டோம் எனப் புரிந்து தன்னுடைய காரை நிறுத்தினான்.
இதோ இங்கே தான் தன்னுடைய தேவதைப் பெண் இருக்கிறாள் அவளைப் பார்த்ததும் ஓடிச் சென்று கட்டி அணைப்பதா..?
இல்லை நான் செய்த தவறுக்கு அவளுடைய கைகளைப் பிடித்து கண்ணீர் வடிப்பதா..?
இல்லை அவளுடைய வெண்ணிற பிஞ்சுப் பாதங்களைப் பிடித்து கெஞ்ச வேண்டுமா..?
அவள் பாதங்களைப் பிடித்து மன்றாடுவதற்கு கூட அவன் தயார் தான்.
தன் மலர்வதனப் பெண் அவளை இக்கணமே தன்னோடு அழைத்துப் போய்விட வேண்டும் என்ற உறுதியோடு நடுங்கிய கரங்களால் தன் கார்க் கதவை மெல்லத் திறந்தவனுக்கு ஏதோ பரீட்சை எழுதப் போகும் மாணவனைப் போல படபடப்பு தொற்றிக் கொண்டது.
நெஞ்சுக்குள் இருந்த இதயமோ இடம் மாறி வாய்க்குள் வந்து துடிக்கத் தொடங்க எச்சில் கூட்டி விழுங்கியவன் காரில் இருந்து இறங்கி நின்றான்.
அவன் முன்னே இருந்த ரெஸ்டாரண்டைப் பார்த்தவனுக்கு முகம் கசங்கியது.
இந்தக் கடையில்தான் தன்னவள் வேலை பார்க்கிறாளா..?
யாரோ நெஞ்சுக்குள் கரத்தை நுழைத்து இதயத்தை கசக்கிப் பிழிவதைப் போல வலிக்க தடுமாறிப் போனான் அவன்.
சீக்கிரமாக அவளை அழைத்துக்கொண்டு அவளுடைய அன்னையின் வீட்டிற்குச் செல்ல வேண்டும்..
எத்தனையோ முறை அழைப்பை எடுத்தவரை ஒரு மாதிரியாக சமாதானப்படுத்தி தானும் அபியும் வெளியே இருப்பதாகக் கூறி அழைப்பை துண்டித்திருந்தவனுக்கு உள்ளம் குற்ற உணர்வில் மருகியது.
இன்று அவளை அழைத்துக் கொண்டு அவளுடைய வீட்டிற்கு சென்றதன் பின்னர் தன்னவளை தங்களுடைய இல்லத்திற்கு அழைத்துச் செல்லலாம் என்ற முடிவோடு அந்த ரெஸ்டாரண்டை நெருங்கியவனுக்கு விடலைப் பையன் போல உள்ளம் துள்ளிக் குதித்தது.
அபிமீது அவன் கொண்ட அதீத காதலை உணர்ந்த பின்பு இப்போதல்லவா அவளை முதல் முறையாக அவன் காணப் போகின்றான்.
ஆர்வமும் அவசரமும் போட்டி போட ரெஸ்டாரண்டின் கதவை தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனின் விழிகள் ஆவலாக அந்த இடம் முழுவதையும் அலசி ஓய்ந்தது.
சிலர் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருப்பதையும் சில வேலையாட்கள் ஓடியோடி நிற்க நேரமில்லாமல் அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தவனுக்கு தன் மனைவியும் இப்படித்தான் வேலை செய்து கஷ்டப்பட்டிருப்பாளோ என தவித்தது அவனிதயம்.
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என எண்ணி கசப்பாக புன்னகைத்துக் கொண்டான் அவன்.
அதற்கு மேல் ஒரு நொடி கூட அவன் தாமதிக்கவே இல்லை அங்கே சுரேஷ் யார் என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டவன் நேரே அவனிடம் சென்று நின்றான்.
“சொல்லுங்க சார் நான்தான் சுரேஷ்.. உங்களுக்கு என்ன வேணும்..?” எனக் கேட்டான் அவன்.
“இங்க அபி… அபர்ணா… அபர்ணாங்கிற பொண்ணு வேலை செய்றாங்கள்ல அவங்கள நான் பாக்கணும்.. அவங்கள கூப்பிட முடியுமா ப்ளீஸ்..?” என அவன் கேட்க சட்டென மாறிப்போனது சுரேஷின் முகம்.
“சாரி சார்.. அப்படி யாரும் இங்கே இல்லை..” எனக் கூறிவிட்டு அவன் விலகிச் செல்ல முயல சட்டென அவனுடைய கரத்தை அழுத்தமாகப் பிடித்து நிறுத்தினான் குருஷேத்திரன்.
இவ்வளவு நேரமும் கனிந்து போயிருந்த அவனுடைய முகத்தில் நொடியில் பூத்தது அதீத சீற்றம்.
குரு பிடித்த அழுத்தத்தில் சுரேஷின் கரம் வலிக்கத் தொடங்க அவனுடைய முகத்திலோ பயம் அரும்பியது.
சட்டென நிதானித்து தன் கரத்தை எடுத்தவன்,
“சாரி சாரி… ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணி வந்துருக்கேன்… எனக்கு அவ வேணும்… இப்போ சொல்லு என்னோட அபி எங்க..?” என மீண்டும் கேட்டான் குரு.
“நீங்க யாரைப் பத்தி பேசுறீங்கன்னு எனக்குத் தெரியல.. நீங்க கேக்குற மாதிரி யாருமே இங்கே இல்லை..” என மீண்டும் சுரேஷ் அதையே கூறிவிட அவ்வளவுதான் ரௌத்திர மூர்த்தியாக மாறிப் போனான் அவன்.
“ஏய்…” என தன் ஆட்காட்டி விரலை அவனை நோக்கி எச்சரிப்பது போல நீட்டியவன் அந்த இடமே அதிரும் வகையில் கர்ஜித்து இருக்க அங்கே உணவு உண்டு கொண்டிருந்தவர்களோ பயந்து இருக்கையை விட்டு எழுந்து நின்று விட்டனர்.
“சார் எதுக்காக இப்போ வியாபாரம் பண்ற இடத்துல வந்து பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்கீங்க..? போலீஸைக் கூப்பிடவா..?” என சுரேஷ் கூற,
மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட்டவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கீழே விழுந்து உடைந்து போயிருந்த அவனுடைய போனை வெளியே எடுத்தான்.
அதில் இருந்த அபர்ணாவின் புகைப்படம் ஒன்றை எடுத்து சுரேஷிடம் காட்டியவன்,
“இந்த பொண்ணு உங்க ரெஸ்டாரண்ட்ல வேலை செய்றதுக்காகத்தான் கொழும்பிலிருந்து இங்க வந்தா… அவளை மாதவன்தான் அனுப்பி வச்சாரு… மாதவனோட பிரண்ட்தானே நீங்க…? அவர் சொல்லிதான் நான் இங்க அவளைத் தேடி வந்தேன்… ப்ளீஸ் அவ எங்க இருக்கான்னு சொல்லுங்க… அபி இங்கதான் வந்தான்னு எனக்குத் தெரியும்…” என குரு கூற,
புகைப்படத்தை பார்த்து விட்டு நிமிர்ந்து குருவின் முகத்தைப் பார்த்தவன்,
“இவளா..? இவள கடைல இருந்து விரட்டி விட்டுட்டோம்… சரியான திருடி… நான் கொஞ்சம் அசந்து இருந்தா என்னோட எல்லா பணத்தையும் திருடிட்டு போயிருப்பா… என்னோட ப்ரண்டு சொன்னானேன்னு பாவம் பார்த்து வேலைக்கு சேர்த்ததுக்கு எனக்கே துரோகம் பண்ணப் பாத்தா..” என அவன் கூறிக் கொண்டே போக அடுத்த கணம் ஓங்கி அவனுடைய செவிலில் பளார் என அறைவிட்டு இருந்தான் குருஷேத்திரன்.
அவனுக்கோ உதிரம் கொதித்துக் கொண்டிருந்தது.
யாரைப் பார்த்து திருடி என்கிறான்..?
பணத்திற்கு ஆசைப்படும் பெண்ணா அவள்..?
என்னிடம் குவிந்து கிடக்கும் அத்தனை பணத்தையும் வேண்டாம் எனத் துச்சமாகத் தூக்கி எறிந்துவிட்டு சென்றவள் அல்லவா அவள்.
அவன் வாங்கிக் கொடுத்த எதையுமே கொண்டு செல்லாதவள் அணிந்திருந்த நகைகளைக் கூட கழற்றி வைத்துவிட்டு செல்லும் தன்னுடைய தேவதைப் பெண்ணா திருடி..?
எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் இவனுக்கு..?
கை நரம்புகள் முழுவதும் புடைத்துக் கிளம்ப அவனுடைய கழுத்தை இறுக்கியவன்,
“டேய் அவ யார் தெரியுமாடா..? அவளோட ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியுமா..? தி கிரேட் குருஷேத்திரனோட பொண்டாட்டிடா அவ… அவ நினைச்சா இந்த இலங்கையே விலைக்கு வாங்க முடியும்.. என்கிட்ட கொட்டி கிடக்கிற பணத்தையே வேணாம்னு துச்சமா தூக்கி போட்டுட்டு வந்தவ இங்க உன்னோட சில்லறப் பணத்தை திருடினாளா…? அறைஞ்சே கொன்னுடுவேன்…” என அவன் கர்ஜிக்க,
குருஷேத்திரனின் வார்த்தைகளின் வீரியமும் அவன் நிமிர்ந்து நின்று அதட்டிய விதமும் அவன் சமூகத்தில் நிச்சயம் பெரும்புள்ளி என்பதை உணர்த்தி விட பயந்து போனான் சுரேஷ்.
கழுத்து வேறு இறுகிக் கொண்டே போக மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு தன்னுடைய கழுத்தை விடுவிக்க துடியாய் துடித்தவன் “சார் விட்டுருங்க ப்ளீஸ்..” என மிகச் சிரமப்பட்டு பேசினான்.
கோபத்தில் அவனை உதறித் தள்ளினான் குரு.
அவனுக்கோ அமைதி அடைந்த இதயம் மீண்டும் பந்தயக்குதிரை போலத் துடிக்கத் தொடங்கியது.
அவள் இங்கே இருக்கிறாள் என்ற நம்பிக்கையில்தான் சற்றே நிம்மதியாக இங்கு வந்து சேர்ந்திருந்தான் அவன்.
ஆனால் இப்போது அவள் இங்கே இல்லை என்றதோடு அவள் மீது திருட்டுப் பழியும் சுமத்த பதறிப் போனான் குரு.
இருமியவாறு அச்சத்தோடு இரண்டடி பின்னால் நகர்ந்து அவனைப் பார்த்த சுரேஷை நெருங்கியவன்,
“இதோ பார் எனக்கு என்னோட மனைவி வேணும்… அவ இங்கதான் வந்தா… உன்னோட கடைல வேலை பார்த்திருக்கா… அவள எங்கன்னு நீ இப்போ சொல்லியே ஆகணும்… அவளுக்கு என்ன ஆச்சு…?” என ஒவ்வொரு வார்த்தைகளாக அவன் அழுத்திக் கேட்க இன்னும் இன்னும் பின்னால் நகர்ந்தான் அவன்.
இவனுக்கோ பொறுமை பறந்தது.
தன்னவளை ஏதேனும் செய்து விட்டார்களோ எனப் பதறியவன் அடுத்த ஒரு நொடி கூடத் தயங்காது அருகே இருந்த சிறிய கத்தியை தன் கரத்தில் ஏந்திக் கொண்டவன் அங்கே பயந்து போய் அவனை பார்த்துக்கொண்டு உணவை உண்ணாமல் எழுந்து நின்றவர்களை பார்த்து “அவுட்.. நான் கண்ண மூடி திறக்கறதுக்குள்ள இங்க இருக்க அத்தனை பேரும் இப்போவே வெளியே போகணும்…” எனக் கர்ஜித்தான்.
அடுத்த சில நொடிகளில் அவர்கள் அந்த ரெஸ்டாரண்டை விட்டு வெளியேறிவிட வேலை செய்பவர்கள் மட்டும் பயத்தோடு பார்த்த வண்ணம் அங்கேயே நின்றிருந்தனர்.
அக்கணம் சுரேஷ் அலறியே விட்டான்.
“ஐயோ என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க.. அந்தப் பொண்ணு திருடினதால இனிமே உனக்கு இங்க வேலை இல்லைன்னு சொல்லி அவளை அனுப்பி வச்சிட்டேன்… இங்க வேலைக்கு வந்த அடுத்த நாளே அவ இங்க இருந்து போயிட்டா… இப்போ அவ எங்க இருக்கான்னு எனக்கு சத்தியமா தெரியாது சார்.. என்ன விட்டுருங்க ப்ளீஸ்.. என்ன விட்ருங்க..” என அவன் பதறியவாறு கூற இவனுக்கு தலை விறைத்தது.
அக்கணம் அந்த ரெஸ்டாரண்டின் ஓரத்தில் சிறிதாக பூட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமராவைப் பார்த்தவன் “இந்த சிசிடிவி கேமராவோட ஃபுட்டேஜை எனக்கு காட்டு..” என்றான்.
அதிர்ந்து போனான் சுரேஷ்.
அவனுக்கோ உடலில் வியர்த்து வழியத் தொடங்கியது.
எங்கே தான் செய்த தவறு கண்டுபிடிக்கப்பட்டு விடுவோமோ.. அந்தப் பெண்ணிற்கு செய்த அநியாயத்தை கண்டறிந்து விடுவார்களோ என எண்ணி நடுங்கிப் போனவன்,
“நீங்க யாரு..? நான் எதுக்கு உங்களுக்கு என்னோட ரெஸ்டாரன்ட் கேமராவோட ஃபுட்டேஜை காமிக்கணும்..? அதெல்லாம் காமிக்க முடியாது.. முதல்ல இங்கிருந்து வெளியே போங்க.. இல்லன்னா நான் போலீஸைக் கூப்பிடுவேன்…” என நடுங்கிய குரலில் கூறினான் அவன்.
அடுத்த நொடி அவனுடைய சட்டைக் காலரைப் பற்றி தன்னருகே இழுத்து எடுத்தவன் தன் கரத்தில் இருந்த கத்தியை அவனுடைய தொடையில் ஏற்றி விட வலியில் அலறிய சுரேஷின் கால்களில் இருந்தோ, உதிரம் கொட்டத் தொடங்கியது.
“என்னோட அபிக்கு மட்டும் உன்னால ஏதாவது பிரச்சனைன்னு தெரிஞ்சதுன்னா இந்த இடத்துல நான் உன்ன கொன்னு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்டா… ஸ்டாப் அந்த ஃபுட்டேஜ்ஜை எனக்கு காமிங்க..” என குரு இந்த இடமே அதிரும் வண்ணம் கத்த,
எங்கே தங்களையும் அவனுடைய கரத்தில் இருந்த கத்தியால் குத்தி விடுவானோ எனப் பயந்த வேலையாள் ஒருவன் முன்னே இருந்த லேப்டாப்பின் அருகில் வந்து அன்றைய நாள் நடந்த சம்பவத்தை ஒளிபரப்பத் தொடங்கினான்.
💜🔥🔥💜
ஒரு எபிசோடை 1200 வார்த்தைகள்ல போடுறேன்..
அதைப்போய் குட்டி எபிசோடுன்னு சொல்றீங்களே இதெல்லாம் நியாயமா டியர்ஸ்..?
மீ பாவம்ல..
Super sis 💕