இழக்கக்கூடாததை இழந்துவிட்ட வேதனையில் ஆழ்ந்து போயிருந்தது நம் நாயகனின் ஹிருதயம்.
அபர்ணாவை இழந்து இன்றோடு சில மாதங்கள் முடிந்திருந்தன.
அவனுக்கோ ஒரு யுகமே முடிந்து போனாற் போலத்தான் தோன்றியது.
எங்கே மாயமாக மறைந்து போனாளோ…
கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
அவள் இல்லாத நாட்களில்தான் உண்மையான காதல் என்றால் என்னவென்று நன்றாக உணர்ந்து கொண்டான் அவன்.
தன்னைக் காதலிக்கிறேன் எனக் கதறி அழுதவளை கொஞ்சம் கூட இரக்கமின்றி துரத்தி விட்டதற்கு தினம் தினம் நரகத்தில் நரக வேதனையை அனுபவிப்பவனைப் போலத்தான் தற்போது தன்னுடைய நாட்களைக் கழிக்கலானான் அவன்.
ஆரம்பத்தில் அவனைத் திட்டி சாபமிட்ட அபர்ணாவின் குடும்பத்தினர் கூட திருமணத்தை நிறுத்திவிட்டு அபியைத் தீவிரமாகத் தேடத் தொடங்கி அவளுக்காக முழுவதுமாய் மாறிப் போய் நின்ற குருவைக் கண்டு தங்களுடைய திட்டலை நிறுத்திக் கொண்டனர்.
என்னதான் இருந்தாலும் இவனால் தானே தன்னுடைய மகள் காணாமல் போய்விட்டாள் என்ற ஆதங்கமும் கோபமும் இன்னும் அவர்களுக்கு இருக்கத்தான் செய்தது.
என்றாவது ஒருநாள் அவள் தங்களைத் தேடி வந்து விட மாட்டாளா என்ற ஏக்கமே அவர்களை நடமாடச் செய்ய குருவிடம் இருந்து மொத்தமாக ஒதுங்கிக் கொண்டது அபர்ணாவின் குடும்பம்.
குருவோ உடல் அளவிலும் மனதளவிலும் வெகுவாய் மாறிப் போயிருந்தான்.
கன்னத்து எலும்புகள் தெரியும் அளவுக்கு மெலிந்து போனது அவனுடைய கட்டுடல் தேகம்.
38 வயதிலும் அழகாக இளமை ததும்ப இருந்த அவனுடைய உருவமோ எட்டே மாதங்களில் எலும்பே உருவாக மாறிப்போனது.
மனதில் நிம்மதி இல்லை என்றால் முகத்திலும் முதுமை வந்துவிடும் போலும்.
எதற்காக வாழ்கின்றோம் எதற்காக சம்பாதிக்கின்றோம் எதற்கு இப்படி நடை பிணமாக நடமாடிக் கொண்டிருக்கின்றோம் என்றே தெரியாது தன்னுடைய நாட்களை அவன் நகர்த்திக் கொண்டிருக்க கிட்டத்தட்ட சில மாதங்களுக்குப் பிறகு அவனைத் தேடி வந்திருந்தார் அபர்ணாவின் தந்தை.
அவரைக் கண்டதும் அவனுக்கும் அதிர்ச்சியே மேலிட்டது.
சட்டென எழுந்து வெளியே சென்றவன் அவரை உள்ளே வரும்படி அழைத்தவனுக்கு அவரைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது.
“உங்க மேல எனக்கு இன்னும் கோபம் இருக்குதான்… ஆனா எங்களுக்கு குறையாத வேதனையை நீங்களும் அனுபவிக்கிறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்..” என்றவர் தன்னுடைய நடுங்கிய கரங்களால் ஒரு பொதியை அவனிடம் நீட்ட தன்னுடைய புருவங்களை உயர்த்தியவாறு அதனை வாங்கிப் பார்த்தான் குருஷேத்திரன்.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..” என அந்தப் பொதியில் இருந்த சிறிய வாழ்த்து மடல் ஒன்றில் எழுதி இருக்க அந்த வாழ்த்து மடலோடு 60,000 ரூபாய் இருப்பதைக் கண்டு புரியாது புருவம் சுருக்கினான் குரு.
“என்ன அங்கிள் இது..? ஏன் இந்தப் பணம்..? யாருக்கு இந்த வாழ்த்து..?”
அவரோ உடல் குலுங்க அழுதே விட்டார்.
“தம்பி என்னோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பாப்பா இப்படித்தான் அவளே வாழ்த்து மடல் செஞ்சு அவளோட சேவிங்ஸ் மணில ஏதாவது கிப்ட் வாங்கிக் கொடுப்பா.. நேத்து எனக்கு பர்த்டே.. இன்னைக்குத்தான் இந்த பார்சல் எனக்குக் கிடைச்சுது.. அவ கையாலேயே பண்ணின வாழ்த்து மடல்தான் இது… எனக்கு நல்லா தெரியும் தம்பி. இந்த பரிசை அனுப்பினது என்னோட பாப்பாதான்… இத வச்சு அவ எங்க இருக்கான்னு உங்களால கண்டுபிடிக்க முடியுமா..?
போஸ்ட் ஆபீஸ்ல போய் விசாரிச்சுப் பார்த்தேன்.. எந்த அட்ரஸ்னு குறிப்பிடல கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாங்க.. உங்களால் முடிஞ்சா என் பொண்ண கண்டுபிடிச்சு கொடுத்துடுங்களேன்..” என அவர் அழுகையோடு கூற சடாரென நிமிர்ந்தான் குருஷேத்திரன்.
“எ.. என்ன சொல்றீங்க..? நிஜமாதான் சொல்றீங்களா..? இது அபி அனுப்பியதா..?” என்றவனின் உடலோ நடுங்கத் தொடங்கியது.
அவளுக்கு எதுவும் ஆகவில்லை அவள் நன்றாக இருக்கின்றாள் என்பது அக்கணம் உறுதியாகிவிட பல மாதங்களின் பின்பு நிம்மதியாக உணர்ந்தான் அவன்.
நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்த பெரும் பாரம் அக்கணம் அவனை விட்டு விலகியது போலத் தோன்றியது.
விழிகள் கலங்கிவிட அவள் செய்து அனுப்பி இருந்த வாழ்த்து மடலை கரங்கள் நடுங்க வருடிக் கொடுத்தவன் அவள் அனுப்பி வைத்த பணத்தைப் பார்த்து கண்ணீர் சிந்தினான்.
“எ… என் பொண்ணு எங்கேயோ வேலை பாக்குறான்னு நினைக்கிறேன் தம்பி…” என்றவர் வாயை மூடிக்கொண்டு கதறி அழத் தொடங்கிவிட தன்னை மீறி அவரை அணைத்துக் கொண்டான் குரு.
“இது போதும் அங்கிள்… இது போதும்… என்னோட அபி எங்க இருக்கான்னு கண்டுபிடிக்கிறதுக்கு இது ஒன்னே போதும்… இனி நான் பார்த்துக்கிறேன்… நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாம போயிட்டு வாங்க… நான் திரும்பி வரும்போது அபி கூடதான் வருவேன்..” என கண்களில் கண்ணீர் வடிய அவருக்கு வாக்குக் கொடுத்தவன் அடுத்த கணமே அந்தப் பரிசுப் பொதியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
கைகளும் கால்களும் பரபரத்தன.
இத்தனை மாதங்களாக இல்லாமல் போயிருந்த வேகம் அக்கணம் அவனுடலில் வந்து ஒட்டிக்கொள்ள,
“ட்ரைவர்…’ என சத்தமான குரலில் கத்தி அழைத்தான் அவன்.
அடுத்த கணம் காரோடு அவன் முன்னே ட்ரைவர் வந்து நிற்க, “மெயின் போஸ்ட் ஆபீஸ்க்கு வண்டிய விடுங்க…” என்றவன் அடுத்து நிகழ்த்தியதெல்லாம் அதிரடிதான்.
எங்கிருந்து வந்தது… எப்படி வந்து சேர்ந்தது…? யார் கொண்டு வந்தது..? என அலசி ஆராய்ந்து வந்திருந்த இடத்தை தன்னுடைய பண பலத்தின் மூலம் கண்டுபிடித்தவனுக்கு வியப்பு மேலிட்டது.
ஆம் அந்தப் பொதி இலங்கையின் கண்டி எனும் மாவட்டத்தில் இருந்துதான் வந்து சேர்ந்திருந்ததாக அவனுக்கு தகவல் வர சில நொடிகள் செயலற்று போய் அசையாது நின்றான் அவன்.
எப்படி அங்கே போனாள்..?
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு போய் மட்டக்களப்பில் இருந்து கண்டி வந்திருக்கிறாளா..?
எத்தனையோ இடங்களில் அவளைத் தேடித் திரிந்தவனுக்கு மனதின் ஓரம் பாரமாய் ஏதோ ஒன்று அழுத்தியது.
போனது போகட்டும் இந்த முறை அவளை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்ற உறுதியோடு அடுத்த கணமே கன்டியை நோக்கிப் புறப்பட்டான் குருஷேத்திரன்.
சில மணி நேரத்தில் கண்டியை வந்தடைந்திருந்தவனுக்கு பெரிதாக தடுமாற்றம் ஏற்படவே இல்லை.
நேரடியாக அங்கிருந்த பிரதான தபால் நிலையத்திற்குச் சென்றவன் எந்தக் கிளை தபால் நிலையத்திலிருந்து இந்தப் பொதி வந்தது என விசாரித்துக் கண்டுபிடித்து நேரே அந்த தபால் நிலையத்திற்குச் சென்றவனுக்கு இந்தப் பரிசுப் பொதியை அனுப்பியது 20 வயது பையன் என்பது தெரிய வர தலை வலிக்கத் தொடங்கியது.
ஓய்வு கூட எடுக்க நேரம் இன்றி அந்தப் பையன் வேலை செய்யும் கடையைக் கண்டுபிடித்து அவனை சந்திப்பதற்காக அவன் அங்கே செல்லத் தொடங்கினான்.
ஒருவேளை அபர்ணா அந்தப் பையனிடம் கொடுத்து இந்த பொதியை போஸ்ட் பண்ண சொல்லி இருக்கலாம் என்ற எண்ணமே அவனுக்குள் இருந்தது.
இம்முறை அவள் கிடைத்து விட வேண்டும் என எண்ணிக்கொண்டவன் முதல் முறையாக இறைவனையும் துணைக்கு அழைத்தான்.
சாரா உணவகம் என்றிருந்த அந்த ரெஸ்டாரண்டில்தான் அந்தப் பையன் வேலை செய்வதாக தகவல் கிடைத்திருக்க நேரே அங்கே சென்றவன் தன்னுடைய காரை ஓரிடத்தில் பார்க் செய்துவிட்டு காரில் இருந்து இறங்கி அந்த ரெஸ்டாரண்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
மலைப்பிரதேசமான கண்டியின் குளிர் அவனைத் தாக்க சில்லென்று இருந்த அந்தக் கால நிலையிலும் கூட பதற்றத்தில் அவனுக்கு வியர்க்கத்தான் செய்தது.
இம்முறையும் அவளைக் காணாமல் ஏமாந்து போனால் அவனால் அந்த வலியை சிறிதும் சகித்துக் கொள்ள முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தவன் பெருமூச்சோடு உள்ளே நுழைய தன்னுடைய இணையை உணர்ந்து கொண்டாற் போல அவனுடைய இதயமோ வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் புதிதாக ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வது போல இருந்தது.
படபடக்கும் தன் இதயத்தை அழுத்தமாக வருடிவிட்டவன் என்ன இது என அதிர்ந்து தன்னுடைய விழிகளால் அந்த இடத்தைச் சுற்றிலும் பார்க்க,
அடுத்த கணம் அவனுடைய பார்வையோ அசைவற்று அப்படியே நின்றது.
விழிகள் தெறித்து வெளியே வந்துவிடும் போல விரிந்தன.
கால்கள் பலமிழந்து நடுங்கத் தொடங்கின.
தலைக்குச் செல்லும் உதிரம் நின்று விட்டதைப் போல தலை விறைப்படைய தன் கண்களை கசக்கி விட்டுக் கொண்டவன் விழிகளை இன்னும் நன்றாக விரித்து தன் கண்ட காட்சி நிஜம்தானா என்பதைப் போலப் பார்த்தான்.
ஆம் அவன் கண்ட அனைத்தும் நிஜம்தான்.
யாரைத் தேடி இத்தனை மாதங்களாக ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தானோ அவள்தான் அங்கே நின்றிருந்தாள்.
அதுவும் குழந்தையை சுமந்த பெரிய வயிற்றோடு உணவுபா பாத்திரங்களை ஏந்தியவாறு பரிமாறிக் கொண்டிருந்த தன் மனைவியைக் கண்டவனுக்கு தலை சுற்றிப் போனது.
அபி என பெரும் குரல் எடுத்து அலற முயன்றவனுக்கு வாயிலிருந்து வார்த்தைகள் வராமல் சதி செய்து விட திக்கித் திணறி அவளை நெருங்க முயன்று முடியாமல் கால்கள் மடங்கி அப்படியே அந்த இடத்தில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டவன் தன் மொத்த கட்டுப்பாடுகளையும் இழந்து அவளைப் பார்த்தவாறே கதறிக் கதறி அழத் தொடங்கினான்.
தன் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் அபியைப் பார்த்தவனுக்கு எதையுமே நம்ப முடியவில்லை.
தன் கைகள் முழுவதும் பாவங்கள் நிறைந்தது போல அவற்றை உயர்த்திப் பார்த்தவன் தன் முகத்திலேயே தன் கரங்களால் அறைந்து கொண்டான்.
அங்கே உணவு உண்டு கொண்டிருந்த அனைவரின் பார்வையும் தரையில் மண்டியிட்டு கதறிக் கதறி தன்னை அடித்தவாறு அழுது கொண்டிருந்த அவனின் மீது பதிய வேலை செய்து கொண்டிருந்த அபர்ணாவின் பார்வையும் அப்போதுதான் அங்கே அழுது கொண்டிருந்த குருஷேத்திரனின் மீது பதிந்தது.
Wowwwwww semaaaaaaa epiiii ❤️❤️❤️
Ninachen Abi masama irupanu super