47. காதலோ துளி விஷம்

4.8
(87)

விஷம் – 47

அர்ச்சனாவின் அன்னையோ கவலையில் மூழ்கிப் போயிருந்தார்.

காலையில் அவளைப் பார்ப்பதற்காக கதிரும் அவனுடைய அண்ணனும் வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து விட்டு சென்றது வேறு அவருக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

எப்படி அர்ச்சனாவிற்கு இதைப் பற்றி சொல்லி புரிய வைப்பதென்று அவருக்குப் புரியவில்லை.

எப்படியாவது தன் மகளின் வாழ்க்கையை கரை சேர்த்து விட்டால் போதும் என துடித்தது அவருடைய தாய் உள்ளம்.

இப்போதெல்லாம் தான் பேசுவதை அர்ச்சனா காது கொடுத்து கேட்பதே இல்லையே..

இதோ அரணைப் பார்த்துவிட்டு வந்தவள் இத்தனை மணி நேரமாக சோறு தண்ணி கூட இன்றி அலைபேசியை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டு அவருக்கோ உள்ளம் மருகியது.

நாளையாவது அவளையும் கதிரையும் சந்தித்துப் பேச வைக்க வேண்டும் என்ற முடிவை உறுதியுடன் எடுத்தவர் அர்ச்சனா இந்தத் திருமணத்திற்கு சம்மதித்து விட வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.

தன்னுடைய அறைக்குள் அமர்ந்திருந்து அரவிந்தனின் எண்ணுக்கு அழைப்பு எடுத்த அர்ச்சனாவின் இதயமோ பந்தயக் குதிரை போல தடதடத்துக் கொண்டிருந்தது.

முதலாவது அழைப்பை அவன் ஏற்காது போக பயந்து போனாள் அவள்.

இது அரவிந்தனுடைய அலைபேசி எண் தானா..?

ஒருவேளை எண்ணை மாற்றி விட்டானோ..?

இன்னும் ஏன் அழைப்பை எடுக்காமல் இருக்கின்றான் என்றெல்லாம் நொடி நேரத்தில் அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.

மீண்டும் அவனுடைய எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்த இரண்டாவது ரங்கிலேயே அழைப்பை ஏற்றவன் “ஹலோ..” என்றதும்தான் அவளுக்கு உயிரே வந்தது.

“ஹலோ நீங்க அரவிந்தன்தானே..?” நடுங்கிய குரலில் கேட்டாள் அவள்.

“எஸ்… நீங்க யாரு..?”

“நா.. நான் உங்க ஃப்ரண்ட் யாழவனோட வைஃப் அர்ச்சனா பேசுறேன்…” என்றதும் மறு முனையில் இருந்தவனோ சில நொடிகள் மௌனம் காத்தான்.

“ஹலோ..?” பதற்றத்துடன் மீண்டும் அழைத்தாள் அர்ச்சனா.

“சொல்லுங்க சிஸ்டர்.. எப்படி இருக்கீங்க..?” என அவன் கேள்வி கேட்க,

“என்னோட யாழனுக்கு அன்னைக்கு என்ன ஆச்சு..? அவர் இன்னும் உயிரோடதான் இருக்காரா..?” என பொறுமை இன்றி நேரடியாக விடயத்திற்கு வந்தாள் அர்ச்சனா.

மீண்டும் மறுமுனையில் இருந்தவனிடம் மௌனம்.

அவனுக்கு எதுவோ தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவள்,

“ப்ளீஸ் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க… என் யாழனுக்கு என்ன ஆச்சு..? யாழனோட பேரண்ட்ஸ் என்கிட்ட எதையோ மறைக்கிற மாதிரி ஃபீல் ஆகுது.. தயவு செஞ்சு உங்களுக்கு ஏதாவது உண்மை தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்..” என அவள் மன்றாடிக் கேட்க,

அரவிந்தனோ தடுமாறிப் போனான்.

அவனுக்குத்தான் அனைத்தும் தெரியுமே..

அர்ச்சனாவிடம் உண்மையை கூறுவதா வேண்டாமா என்ற குழப்பம் அவனுக்குள் மேலோங்கியது.

யாழவனைப் பற்றிய செய்திகளை அவனுடைய தந்தை மிகவும் இரகசியமாக வைத்திருக்கும் போது அவருடைய அனுமதியின்றி அதை வெளியிட்டால் ஏதாவது பிரச்சனை தனக்கு வரக் கூடுமோ என தயங்கினான் அவன்.

“உங்கள என்கூட பிறந்த அண்ணனா நினைச்சு கேட்கிறேன் ஹெல்ப் பண்ணுங்க… தயவு செஞ்சு உண்மைய சொல்லுங்க.. அவர் உயிரோட இருக்காரா..?”. என அவள் அழுதே விட அவனுக்கோ அர்ச்சனாவை நினைத்துப் பாவமாக இருந்தது.

“சாரிமா இப்போ என்னால எதுவுமே சொல்ல முடியாது..” என்றான் அவன் கனத்த குரலில்.

அவளுக்கோ எதுவோ உள்ளே உடையும் உணர்வு.

இத்தனை மணி நேரமாக கண்கள் வலிக்க வலிக்க முகப்புத்தகத்தில் தேடி இவனைக் கண்டுபிடித்தது இந்த எதிர்மறையான பதிலைக் கேட்பதற்கா..?

மீண்டும் அவள் வாழ்க்கையில் தோற்று விடுவாளோ..?

உள்ளம் பதறியது.

இல்லை இல்லை இதற்கு மேல் அவள் வேதனைப்படவோ வாழ்க்கையில் தோற்றுப் போவதற்கோ எதுவுமே இல்லை.

சட்டென அலைபேசியை இறுக்கப் பற்றியவள்,

“அண்ணா யாழன் மட்டும் உயிரோட இருந்தா அவர் கூட சந்தோஷமா வாழணும்னு ஆசைப்படுறேன்.. எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க.. ரெண்டு குழந்தையையும் அவர் கூட சேர்ந்து வளர்க்கணும்னு நினைக்கிறேன்… எங்களுக்குள்ள நடந்த எல்லா பிரச்சனையையும் சரி பண்ணி மறுபடியும் சந்தோஷமா வாழணும்னு ஆசைப்படுறேன்.. தயவுசெஞ்சு சொல்லுங்க அண்ணா… என்னால எந்த பிரச்சனையும் உங்களுக்கு வராது… யாருக்கும் வராது…” என தேம்பி அவள் அழுது விட,

அவள் யாழவனுடன் சேர்ந்து வாழப் போகின்றேன் என்று சொன்ன வார்த்தையே அரவிந்தனுக்குப் போதுமானதாக இருந்தது.

யாழவனும் அதைத்தானே விரும்பினான்.

அவளைப் பார்ப்பதற்கே தவமாய் தவம் கிடந்தானே.. அர்ச்சனா மட்டும் மீண்டும் அவனிடம் சென்றால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவான் என எண்ணியவன்,

“ஆமாம்மா உன்னோட யாழன் இன்னும் உயிரோடதான் இருக்கான்… ஆக்சிடென்ட் ஆனதுமே இங்கே இருந்து வேற ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனோம்… கிட்டத்தட்ட செத்துப்போன மாதிரி கிடந்தவனை காப்பாத்தினாங்க.. ஆனா கோமாக்கு போயிட்டான்… ரெண்டு மாசமா போராடி கோமால இருந்து அவனை வெளியே கொண்டு வந்துட்டோம்…” என அவன் கூறக் கூற இவளுக்கோ தேகம் முழுவதும் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

கால்கள் பலவீனமானதைப் போல இருந்தன.

உயிரோடு இருக்கின்றானா..?

என்னவன் உயிரோடுதான் இருக்கின்றானா..?

ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் பேரலையாய் வந்து அவளைத் தாக்க எப்படி அந்த நொடியை கடப்பது என அவளுக்குப் புரியவில்லை.

உறைந்து போய்விட்டாள் பெண்ணவள்.

தேகம் படபடத்தது.

இரண்டு மாதங்களாக கோமாவில் இருந்தான் என்றால் இப்போது எப்படி இருக்கின்றான்..?

மனம் விடை அறிய விளைந்தது.

உடனடியாக அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.

இக்கணமே கட்டி அணைத்து கதறி அழவேண்டும் போல இருந்தது

உணர்வுகளை அடக்க முடியாது தத்தளித்தாள் அவள்.

“அர்ச்சனா லைன்ல இருக்கியா மா..?” எனக் கேட்டான் அரவிந்தன்.

அவளுடைய மௌனம் அவனுக்குள் சிறு பயத்தை தோற்றுவித்தது.

அவளுக்கு பதிலே கூற முடியவில்லை.

வாயைத் திறந்தால் கேவல்தான் வெளிப்பட்டது.

அந்த சிறு கேவலும் விம்மலாக மாறி வெடித்துவிட நன்றாகவே பயந்து விட்டான் அரவிந்தன்.

“ஐயோ என்னமா ஆச்சு..? ஏன் அழுகுற..? யாழவனுக்கு எதுவுமே இல்லை.. அவன் இப்போ நல்லா இருக்கான்.. ரெண்டு மாசத்திலேயே கோமால இருந்து முழிச்சிட்டான்.. இப்போ அவன் கம்ப்ளீட்லி ஆல்ரைட்..” என அவளை சமாதானம் செய்தான் அரவிந்தன்.

“நி.. நிஜமாதான் சொல்றீங்களா அண்ணா..? நிஜமாவே அவர் உயிரோடு இருக்காரா..? அவர் நல்லா இருக்காருதானே..?” என தேம்பியபடியே அழுகையுடன் அவள் கேட்க,

அவனுக்கோ உள்ளம் உருகிப் போனது.

“அவன் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கியேமா.. எப்படி அவன அப்போ அவாய்ட் பண்ணின..?”

“கோ.. கோபத்துல அப்படி பண்ணிட்டேன்ணா.. அதுக்காக என்ன பார்க்க கூட வராம என்கிட்ட இருந்து இப்படி விலகி இருக்கணுமா…?” துடிதுடித்துப் போனவளாய் கேட்டாள் அவள்.

“அவன் உன் மேல உசுரே வச்சிருக்கான்மா… எங்க நீ அவன பார்த்தா உன்னோட நிம்மதி தொலைஞ்சுடுமோன்னுதான் உன் கண்ணுல படாம மறைஞ்சு அன்னைக்கு ஓடினான்.. அவனால நீ நிறைய கஷ்டத்தை அனுபவிச்சிட்டேன்னு சொன்னான்.. இப்போ வரைக்கும் நீ நல்லா இருக்கணும்னுதான் உன்னை சந்திக்க வராம இருக்கான்னு தோணுது.. எப்படி இருந்தாலும் யாழவன் உன்னோட நல்லதைப் பத்தி மட்டும்தான் யோசிப்பான்..

அவனத் தேடிப் போமா.. அவன்கிட்ட பேசி பிரச்சனையை முடிச்சு சந்தோஷமா வாழுங்க.. நான் இப்போ பிரான்ஸ்ல இருக்கேன்மா.. இல்லனா உன்ன வந்து நேரிலேயே பார்த்து என்னால முடிஞ்ச உதவிய உனக்குப் பண்ணிருப்பேன்..” என்றான் அரவிந்தன்.

“நீங்க என்கிட்ட எல்லா உண்மையும் சொன்னதே ரொம்ப பெரிய உதவிதான்.. ரொம்ப நன்றி அண்ணா… நீங்க பண்ண ஹெல்ப்பை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்..” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.

அழைப்பைத் துண்டித்து விட்டு அப்படியே படுக்கையில் சரிந்தவள் கதறித் தீர்த்து விட்டாள்.

இப்போதே யாழவனுடைய வீட்டிற்குச் சென்று ஆவேசமாக அங்கே இருக்கும் அனைவரிடமும் சண்டை போட வேண்டும் போல கோபம் எழுந்தது.

எப்படி என்னிடம் இவ்வளவு பெரிய உண்மையை மறைக்கலாம் என திட்ட வேண்டும் போல வெறி எழுந்தது.

தன்னை அடக்கிக் கொண்டாள் அர்ச்சனா.

என்னுடைய நல்லதுக்காக என எண்ணி என்னை விட்டு விலகி மறைந்திருக்கும் யாழவனே என்னைத் தேடி வர வேண்டும்..

அவனே இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என எண்ணியவள் தன்னுடைய அறையை விட்டு வெளியே சென்று தன் அன்னையின் முன்பு நின்றாள்.

“அம்மா எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்.. சீக்கிரமா பத்திரிக்கை அடிங்க..” என்றாள் அவள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 87

No votes so far! Be the first to rate this post.

1 thought on “47. காதலோ துளி விஷம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!