47. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

4.9
(125)

நெருக்கம் – 47

எப்படியாவது அபர்ணாவைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு வந்திருந்த குருவுக்கு அவளைப் பார்த்த நொடி சகலதும் மறந்து உலகமே உறைந்து போனதைப் போலத் தோன்றலானது.

ஒரு முறை, இரு முறை அல்ல ஓராயிரம் முறை அவளைத் தேடித் தேடி ஏமாற்றம் மட்டுமே கிடைத்திருக்க இன்றோடு அந்த ஏமாற்றம் முடிவுக்கு வந்திருந்ததை அவனால் அவ்வளவு எளிதாக நம்பத்தான் இயலவில்லை.

தன் தேவதைப் பெண்ணைக் கண்டால் ஓடிச் சென்று இறுக அணைத்துக் கொள்ள வேண்டும்..

எண்ணற்ற முத்தங்களை வழங்கி நான் உன்னை காதலிக்கிறேன் எனத் தன் காதலைக் கூற வேண்டும்…

அவளைத் தன் கையில் பூமாலை போல தூக்கிச் சுற்ற வேண்டும் என்றெல்லாம் பலவற்றை நினைவில் சேமித்து வைத்திருந்தவனுக்கு அக்கணம் அவளைப் பார்த்ததும் அனைத்தும் மறந்து போனது.

மூளை ஞாபகப்படுத்தும் வேலையைச் செய்யத் தவறியது போலும்.

அதுவும் நிறைமாதக் கர்ப்பிணியாக நின்றிருந்த அபியைக் கண்டதும் அதிர்ச்சியின் உச்சத்தை எய்தி இருந்தான் அவன்.

அவனுடைய மூளை சிந்திக்க மறுத்தது.

அக்கணம் எப்படி, ஏது என்றெல்லாம் அவனால் ஆராய்ச்சி செய்ய முடியவில்லை.

தன்னவளை அதுவும் குழந்தையை சுமக்கும் தன்னவளைக் கண்டதும் உடல் முழுவதும் பலவீனமாகி நடக்க முடியாமல் கால்கள் மடிந்து தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன், அவளைக் கண்டுகொண்ட ஆனந்தத்தில் அதைக் கதறலாய் வெளிப்படுத்தினான்.

அவள் அவனுக்குக் கிடைத்தது உலகையே வென்றது போன்ற உணர்வைக் கொடுத்தது.

குழந்தை எப்படி சாத்தியம் என்ற கேள்வியை எல்லாம் தூக்கித் தூரப் போட்டவன், இத்தனை மாத தேடுதலுக்கும் முடிவு வந்து விட்ட பேரானந்தத்தில் திளைத்தான்.

ஏங்கி ஏங்கி அழுதவாறு அவளுடைய முகத்தைப் பார்க்க அக்கணம் அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அது அந்நியப் பார்வை.

அந்தப் பார்வையில் சுரீர் என இருந்தது அவனுக்கு.

என்ன பார்வை இது..?

ஒற்றைப் பார்வை உயிரை உருக்கி விடுமா என்ன..?

ஒற்றைப் பார்வை அவனைத் துடிக்கச் செய்யுமா என்ன..?

ஆம் அவளுடைய ஒற்றைப் பார்வை அவனுடைய உயிரை உருக்கி எடுத்து அவனைத் துடிக்கவும் செய்தது.

யார் என்றே தெரியாத ஒருவனைப் பார்ப்பது போல பார்த்தவளைக் கண்டு கலங்கிப் போனவன் மெல்ல தள்ளாடியவாறு எழுந்து நின்றான்.

அவனுடைய மூளை சிந்திக்கும் வேகத்திற்கு அவனுடைய உடலோ ஈடு கொடுக்க மறுத்தது.

அந்த உணவுக் கடையின் முதலாளியோ,

“அபர்ணாஆஆ… அந்தப் பையன் யாருன்னு பாரும்மா…? எதுக்காக கடைக்குள்ள வந்து அழுறான்னு பாத்து என்னன்னு பேசி அனுப்புங்க…” எனக் கறாராய் கூற அந்த வார்த்தைகள் அவனுடைய காதில் விழுந்தாலும் கூட அவற்றைக் கவணியாது அவள் நின்ற இடத்தை நோக்கி மெல்ல மெல்லத் தன் அடிகளை எடுத்து வைத்தான் குருஷேத்திரன்.

“யாருன்னு தெரியலப்பா.. இதோ விசாரிக்கிறேன்..” என்ற அவளுடைய குரல் அவனை பலமாகத் தாக்கத்தான் செய்தது.

சரிதான் கண்டதுமே ஓடி வந்து கட்டி அணைப்பதற்கு அவன் ஒன்றும் நல்ல கணவன் அல்லவே..

அவளைப் படாதபாடு படுத்தி வீட்டை விட்டு அனுப்பிய என்னைப் பார்த்தால் யார் என்று தெரியவில்லை என்றுதான் கூறுவாள் என தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவன் நிற்க முடியாமல் நடுங்கிய தன் கால்களை சமாளிப்பதற்காக அங்கிருந்த இருக்கை ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டான்.

அவளுக்கோ அந்த தடுமாற்றம் எல்லாம் இல்லை போலும்.

அவள் இலகுவாக அவனை நோக்கி நடந்து வருவதைக் கண்டதும் இவனுக்குத்தான் இதயம் அதிவேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

முதல்முறையாக ஒருவரைப் பார்த்து அத்தனை பயம் கொண்டான் அவன்.

இதுவரை இல்லாத தயக்கம், அச்சம், குற்றஉணர்வு, பேசுவதற்கு வார்த்தைப் பஞ்சம் என அனைத்தும் ஒன்றாக வந்து அவனை ஆட்கொள்ள மருகினான் அவன்.

“குட் மார்னிங் சார் என்ன சாப்பிட்றீங்க..? பொங்கல், பரோட்டா இடியப்பம், இட்லி, தோசை, நெய் தோசை, பேப்பர் தோசை, மசாலா தோசை, பூரி, உளுந்து வடை, பருப்பு வடை இருக்கு.. இதுல என்ன வைக்கட்டும்…?” என யாரோ ஒரு அந்நியனிடம் உரையாடுவதைப் போல அவள் கேட்க,

“அ…. அபி… அபிஇஇஇ.. நா.. நான் சா.. சாரிஇஇஇ சாரிடிஇஇ..” என்று திணறினான் அவன்.

பொலபொலவென அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அவனுடைய வார்த்தைகள் கூற மறுத்த விடயத்தை கண்ணீர் தெளிவாக கூற,

தாயைப் பார்க்கும் சேயைப் போல அவளுடைய முகத்தை அவன் பார்த்து நிற்க அவளோ,

“குட் மார்னிங் சார் என்ன சாப்பிட்றீங்க..? பொங்கல், பரோட்டா, இடியப்பம், இட்லி, தோசை, நெய் தோசை, பேப்பர் தோசை, மசாலா தோசை, பூரி, உளுந்து வடை, பருப்பு வடை இருக்கு இதுல என்ன வைக்கட்டும்..” எனக் கூறியதை அச்சுப்பிசாகாமல் மீண்டும் கூற அவனுக்கோ அவள் தன்னிடம் பேசப் போவதில்லை என்பது புரிந்து போனது.

அடி மனம் முழுவதும் வேதனை பரவியது.

தன் வேதனையை வெகு சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டான் அவன்.

இவ்வளவு நாள் அவளைப் பார்க்காத ஏக்கத்தை அக்கணமே தீர்த்து விடுவதைப் போல அவளை விழுங்குவதைப் போல பார்த்தும் வைத்தான்.

உச்சி முதல் பாதம் வரை தன்னுடைய தேவதைப் பெண்ணை அவனுடைய லேசர் விழிகள் அளவெடுத்து தன் மனதிற்குள் சேமித்துக் கொண்டே இருக்க அவளுக்கோ எரிச்சல் ஆகிப்போனது.

“சார் உங்களுக்கு என்ன வேணும்னு சொன்னா நல்லா இருக்கும்.. நான் மத்த கஷ்டமரையும் கவனிக்கணும்..” என மென் குரலில் கூறியவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்தவன்,

“எனக்கு நீதான் வேணும்…” என்றிருக்க இவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

“சாரி சார் என்னை இங்கே விக்கிறது கிடையாது…” என பளிச்சென்று பதில் கூறியவள்,

“இந்த நாள் உங்களுக்கு இனிய நாளா அமையட்டும் தேங்க்யூ..” என்ற பதிலோடு அவள் விலகிச் சென்று விட இவனோ படபடத்துப் போனான்.

அவள் எப்படி தன்னை விட்டு விலகிப் போகலாம்..?

எங்கே இப்படியே தன்னை விட்டுப் பிரிந்து வேறு எங்கும் சென்று விடுவாளோ எனப் பதறியவன் அவளின் பின்னேயே செல்ல முயற்சிக்க அந்தக் கடையின் முதலாளி அவனை நிறுத்தினார்.

“யாருப்பா நீ.. அங்க என்னோட கடை ஸ்டாஃப் மட்டும்தான் போக முடியும்… வேறு யாருக்கும் அனுமதி கிடையாது… உனக்கு என்ன வேணும்…?” என அவர் சற்று கடினமான குரலில் விசாரிக்க தன் தலையைக் கோதிக் கொண்டவன்,

“ஐ நீட் ஹெர்.. நான் அவள கூட்டிட்டுப் போறேன்…” என ஒரே வரியில் தன் தேவையைக் கூறி முடித்திருந்தான்.

அவளோ சமைக்கும் அறைக்குள் வேகமாக சென்றவள் உள்ளே நுழைந்து அந்த சுவற்றின் மீது சாய்ந்து விழி மூடி நின்று கொண்டாள்.

உடலின் படபடப்பு மறைய மறுத்தது.

இத்தனை மாதங்களுக்கு பின்பு இங்கே குருவைக் கண்டதும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

நிஜமாகவே பதறி படபடத்துப் போனாள் அவள்.

அவன் பார்ப்பதற்கு முதல் அவனுடைய கண்களில் படாமல் மறைந்து விட வேண்டும் என எண்ணியவள் அவன் தன்னைப் பார்த்துதான் கதறி அழுகிறான் என்பது தெரிந்ததும் தன்னை கட்டுப்படுத்த படாத பாடு பட்டுப்போனாள்.

அடுத்த சில நொடிகளிலேயே தன்னை சமன்படுத்திக் கொண்டாள் அவள்.

பயந்து போய் ஓடி ஒழிவதற்கு அவள் ஒன்றும் பழைய அபர்ணா அல்லவே.

அழுது துடித்து பயப்படுவதற்கு இனி அவள் அஞ்சி நடுங்குவதற்கு இந்த உலகில் என்னதான் பயங்கரமாக இருக்கப் போகின்றது..?

எல்லா பயங்கரத்தையும்தான் பார்த்து விட்டாளே..!

அனைத்து கஷ்டங்களையும் தாண்டி தன் சொந்தக்காலில் நிற்கத் தொடங்கியவளுக்கு உணர்வுகளை கட்டுப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு பெரிதாக அக்கணம் தோன்றவில்லை.

நொடியில் தன்னை இரும்பாக இறுக்கிக் கொண்டவள் அவன் அருகே சென்று என்ன உணவு வேண்டும் என்பது வரை கேட்க அவன்தான் தடுமாறிப் போனான்.

அவளிடம் இருந்த உணர்வுக் கட்டுப்பாடு கூட அவனிடம் இல்லாது போக வார்த்தைகள் தடுமாறி பேச முடியாது திணறியவனைப் பார்க்கும்போது அவளுக்கு சற்றே ஏளனமாகக் கூட இருந்தது.

தவறு செய்தவர்களிடம் இந்த தடுமாற்றம் இருக்கத்தானே வேண்டும் என எண்ணிக்கொண்டவள் அவன் விழிகள் கலங்கி பேசத் தொடங்கியது தானும் தடுமாறத்தான் தொடங்கினாள்.

சட்டென பேச்சை முடித்துக் கொண்டு சமைக்கும் அறைக்குள் நுழைந்தவளுக்கு இதயம் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே பயணிப்பது போன்ற ஒரு வித்தியாசமான உணர்வு தோன்றியது

பழைய ரணங்கள் யாவும் கிண்டப்பட்டு மீண்டும் உடல் முழுவதும் வலிப்பது போலத் தோன்ற அதற்கு மேல் அங்கே நின்று வேலை செய்யும் நிலையில் தான் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவள் தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பி விடலாம் என்ற எண்ணத்தில் வெளியே வர அந்த வாயிலையே அடைத்தவாறு கைகளைக் கட்டி நின்று கொண்டிருந்தான் குருஷேத்திரன்.

இனி என்னைத் தாண்டி எங்கும் செல்ல முடியாது என்பதைப் போல இருந்தது அவனுடைய ஆழ்ந்த பார்வை.

அந்த ஆழ்ந்த பார்வையை அறவே வெறுத்தாள் அவள்.

“அபி.. போ.. போகலாம் வா..” எதுவுமே நடவாதது போல அவளை நோக்கித் தன் கரத்தை நீட்ட,

“ஏய் யார் நீ..? எவ்வளவு தைரியம் இருந்தா எங்க கண்ணு முன்னாடி எங்ககிட்ட வேலை செய்ற பொண்ண கூப்பிடுவ… முதல்ல இங்கிருந்து வெளியே போ.. இல்லன்னா நடக்கிறதே வேற..” என எச்சரித்தார் அந்தக் கடையின் முதலாளி ராஜேஷ்.

“ஷீ இஸ் மை வைஃப்..” என அழுத்தமாகக் கூறினான் அவன்.

திகைத்துப் போய் அவளுடைய முகத்தைப் பார்த்தார் அவர்.

“ராஜேஷ் அப்பா எந்த பிரச்சனையும் இல்ல.. நான் பாத்துக்குறேன்பா… என்னால சமாளிக்க முடியும்… நீங்க வேலைய பாருங்க… இன்னைக்கு ஒரு நாள் லீவு எடுத்துக்கிறேன்…” என்ற அபர்ணாவைப் பார்த்தவர்

“சரிமா ஏதாவதுன்னா எனக்கு கால் பண்ணு..” எனக் கூறிவிட்டு அவர் விலகிக் கொள்ள இப்போது நேராக அவனுடைய விழிகளைச் சந்தித்தவள்,

“உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்… பேசலாமா..?” எனக் கேட்டாள்.

அவளுடைய நடை உடை பாவனை பேச்சு எல்லாவற்றிலும் ஏற்பட்டிருந்த மாற்றத்தை சட்டென உணர்ந்து கொண்டவன் அவளைப் பார்த்து ஆமென தலையை அசைத்தவாறு தன்னுடைய கரத்தை முன்னே நீட்டிக் காட்ட அவளோ தன் ஹேண்ட் பேக்கின் வாரைத் தன் தோளில் மாட்டியவாறு முன்னே நடக்கத் தொடங்கினாள்.

இன்று ஏற்பட்ட அதிக அதிர்ச்சியால் சற்றே அவளுடைய கால்கள் தடுமாற பதறிப் போய் அவளை நெருங்கித் தாங்கிக் கொள்ள முயன்றவனின் கரத்தில் சிக்காமல் விலகியவள்,

“நோ…. ஐ கேன் மேனேஜ்..” என்ற வார்த்தையோடு அந்தக் கடையை விட்டு வெளியேறியிருக்க பெருமூச்சோடு அவளை பின்தொடர்ந்து சென்றான் அவன்.

கடையை விட்டு வெளியே வந்ததும் ஒரு இடத்தில் நின்று அவனை அழுத்தமாகப் பார்த்தாள் அபர்ணா.

தன்னைத் திட்டப் போகிறாள் என நினைத்தவன் அவள் அடித்தால் கூட வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவள் முன்னே நிற்க,

“எப்படி இருக்கீங்க குரு..? நல்லா இருக்கீங்களா…? எங்க அப்பா அம்மா எப்படி இருக்காங்க..? எல்லாரும் நல்லா இருக்காங்கதானே..?” என மென் புன்னகையோடு அவள் கேட்க,

அவளை நம்ப முடியாது அதிர்ந்து பார்த்தான் அவன்.

அந்த மென் புன்னகை அவனைப் பதற வைத்தது.

💜💜💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 125

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!