விஷம் – 48
அர்ச்சனா திடீரென வந்து திருமணத்துக்கு சம்மதம் எனக் கூறியதும் அன்னத்திற்கோ நம்பவே முடியவில்லை.
அவர் பிரார்த்தித்த இறைவன்தான் அர்ச்சனாவின் மனதை மாற்றிவிட்டார் போலும் என எண்ணி மகிழ்ந்து போனார் அவர்.
“நிஜமாதான் சொல்றியாம்மா..?”
“ம்ம்…”
“ரொம்ப சந்தோஷம்மா.. இப்பவாவது உன்னோட வாழ்க்கைய பத்தி யோசிச்சியே.. இப்பவே நான் அந்த தம்பிகிட்ட பேசுறேன்..” என்றவர் வேகமாக தன்னுடைய அலைபேசியை எடுக்க அவருடைய கைகளைப் பற்றித் தடுத்தாள் அர்ச்சனா.
“நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க.. கதிர்கிட்ட நான் பேசுறேன்..” என்றவள் மீண்டும் தன்னுடைய அறைக்குள் வந்தாள்.
எத்தனையோ முறை கதிர் தனக்கு அழைப்பு எடுத்திருக்கிறான் என்பதை நினைவு கூர்ந்தவள் அவனுடைய அலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து அவனுக்கு அழைத்தாள்.
ஏனோ மனம் முழுவதும் பதற்றமாக இருந்தது.
இதுவரை அவள் பெரிதாக அவனிடம் பேசியதே இல்லை. அவன் பேச முயன்றாலும் இயல்பாக தவிர்த்து விடுவாள் அவள்.
இப்போது பெருமூச்சுடன் வேறு வழி இன்றி அவனுக்கு அழைக்க,
அவளுடைய அலைபேசியில் இருந்து அழைப்பு சென்ற அடுத்த நொடியே அந்த அழைப்பை ஏற்றிருந்தான் கதிர்.
“ஹேய் அர்ச்சனா… இது நீதானா..? நீ எனக்கு கால் பண்ணத என்னால நம்பவே முடியல…” என அவன் இன்ப அதிர்ச்சியில் தடுமாறியவாறு பேச,
அவளுக்கோ ஒரு நொடி வார்த்தைகள் வெளி வரவே இல்லை.
“கதிர் நீங்க ஃப்ரீயா இருந்தா நாம மீட் பண்ணலாமா..?”
“ஓ மை காட்.. நீ கூப்பிட்டா எப்பவுமே நான் ஃப்ரீ தான்…” என்றான் அவன்.
அவளுக்கோ சற்று எரிச்சலாக இருந்தது.
இருந்தாலும் கதிர் மிகவும் நல்லவன் என்பதை அறிந்து வைத்திருந்தவள்,
“ப்ளீஸ்… ரொம்ப எக்சைட் ஆகாதீங்க கதிர்.. நான் உங்ககிட்ட நிறைய விஷயம் ஷேர் பண்ணனும்னு நினைக்கிறேன்.. பக்கத்துல இருக்க காபி ஷாப்ல மீட் பண்ணலாமா..?” எனக் கேட்டாள்.
“இதோ பத்து நிமிஷத்துல நான் அங்க வந்துருவேன்..” என்றான் அவன்.
“இல்ல.. இல்ல… பத்து நிமிஷத்துல வேணாம்.. ரெண்டு மணி நேரம் கழிச்சு காபி ஷாப் வாங்க..”
“ஓகே ஷ்யூர்மா.. கண்டிப்பா வந்துரு.. உனக்காக நான் அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன்…” எனக் கூறிவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்து விட இவ்வளவு வேகம் இவனுக்கு ஆகாது என எண்ணிக் கொண்டாள் அர்ச்சனா.
அடுத்த நொடியே விஷ்வா கொடுத்துச் சென்றிருந்த அவனுடைய அலைபேசி எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தியவள்,
யாழவன் இன்னும் உயிருடன் இருக்கும் விடயத்தை அவனிடம் கூற, அவனுக்கோ மனதில் அவ்வளவு நிம்மதி.
“சின்ன வயசுல இருந்து ஒன்னாவே இருந்தோம்.. என்கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டாங்களே..” என வருத்தப்பட்டான் விஷ்வா.
“உண்மைய நிறைய நாளைக்கு மறைக்க முடியாது விஷ்வா..” என்றாள் அர்ச்சனா.
“இப்போ நீ என்ன பண்ணப் போற அர்ச்சனா..?”
“மறைஞ்சிருந்தவங்கதான் வெளிய வரணும்… யாழனை வெளியே வர வைக்கப் போறேன்…” என்றவள் விஷ்வாவுக்கு நன்றி கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டு சற்று நேரம் யாழினி உடன் தன்னுடைய நேரத்தை செலவு செய்யத் தொடங்கினாள்.
“கூடிய சீக்கிரமே உன்னோட அப்பாவை பார்த்துடலாம் கண்ணம்மா..” என்றவளுக்கு விழிகளில் கண்ணீர் வழிந்தது.
இரண்டு மணி நேரம் குழந்தையுடன் செலவழித்து விட்டு மீண்டும் தன்னுடைய ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு அவள் வெளியே கிளம்ப,
அன்னத்தின் பார்வையோ அவள் மீது கேள்வியாய் படிந்தது.
“அம்மா நான் கதிர் கூட பேசலாம்னு முடிவு எடுத்திருக்கேன்.. இப்போ அவரைப் பார்க்கத்தான் போறேன்..”
“எ…என்ன பேசப் போற..?” என பதற்றமாகக் கேட்டார் அவர்.
“பேசிட்டு வந்து சொல்றேன்மா.. கீர்த்தனாகிட்ட பாப்பாவ பாத்துக்க சொல்லுங்க..” எனக் கூறி விட்டு வெளியே வந்தவள் அவளுடைய வீட்டிற்கு அருகே இருந்த காபி ஷாப் நோக்கி வேகமாக நடந்தே செல்லத் தொடங்கினாள்.
எப்படியாவது தன்னுடைய திட்டத்திற்கு கதிரை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணம்தான் அக்கணம் அவளுள் ஓடிக்கொண்டிருந்தது.
****
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு..!
தன் அறையை விட்டு வெளியே வந்த யாழவனின் முகமோ குழப்பத்தை குத்தகைக்கு எடுத்தாற் போல இருந்தது.
அங்கே அரணை மடியில் வைத்துக் கொஞ்சியவாறு அமர்ந்திருந்தார் ரூபாவதி.
அவரை நெருங்கியவன் தன் அன்னையின் மடியில் படுத்திருந்த மகனைக் கண்டு நெகிழ்ந்து போனான்.
அக்கணமே தன் மகனை அள்ளி அணைத்து கொஞ்ச வேண்டும் போல கரங்கள் பரபரத்தன.
யாழினி பிறந்த பின்பு அரணை அவன் ஒருபோதும் தூக்கவே இல்லை.
எப்போது அவன் யாழினியைத் தூக்கிக் கொஞ்சுகின்றானோ அப்போதுதான் அரணையும் தூக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தவனுக்கு உள்ளம் சில்லு சில்லாய் சிதறி வேதனையை உண்டு பண்ணியது.
“யாழவா அர்ச்சனாகிட்ட உண்மைய சொல்லிடுவோமா..?” என சற்றே பதற்றத்துடன் கேட்டார் ரூபாவதி.
குழந்தை மீது பதிந்திருந்த தன் கவனத்தை தாயின் மீது திருப்பியவன்,
“ஏன்மா..? என்ன ஆச்சு..? அச்சு ஏதாவது உங்ககிட்ட கேட்டாளா..? இன்னைக்கு அவளோட முகம் ரொம்ப டல்லா இருந்துச்சு… எதையோ ரொம்ப திங்க் பண்ணிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு.. என்னால அவளை அப்படி பாக்க முடியலம்மா… ரொம்ப அப்சட்டா இருக்கு..” என்றான் அவன்.
“நீ உயிரோடதான் இருக்கியான்னு எங்ககிட்ட கேட்டா… அரவிந்தன் பத்தி விசாரிச்சா.. அவளுக்கு ஏதோ சந்தேகம் வந்துருச்சோன்னு தோணுதுப்பா…”
“ஓஹ்…?” என்றவனின் விழிகள் கலங்கியது.
“என்னப்பா..?”
“அவள நேர்ல பாத்து நான் உயிரோடதான் இருக்கேன்னு கத்தணும் போல இருக்குமா.. ஆனா அதுக்கு அப்புறமா என்ன நடக்கும்னு நினைச்சாலே பயமா இருக்கு.. இப்போ நான் செத்து போயிட்டேன்னு பரிதாபத்துல இப்படி இருக்கா… மறுபடியும் என்ன பார்த்தா கிளாராவோட ஞாபகங்கள் வந்து என்ன வெறுத்திடுவாளோன்னு பயமா இருக்கு.. என்ன வெறுத்தா கூட பரவால்லம்மா.. அவ மறுபடியும் கஷ்டப்படக்கூடாது.. என்னால இனி அவ வேதனைப் படக்கூடாதுன்னு நினைக்கிறேன்..” என்றான் அவன்.
அவருக்கோ ஐயோ வென்றிருந்தது.
இவன் எப்போது இந்த அர்ச்சனாவை மறந்து மகிழ்ச்சியாக இருப்பான் என்ற எண்ணம் அவருக்குள் ஏக்கமாய் எழுந்தது.
“யாழவா…”
“என்னம்மா..?”
“நம்ம அர்ச்சனாவை கதிர்னு ஒரு பையன் கல்யாணம் பண்ணிக்க கேட்டிருக்கான்னு உன்கிட்ட சொன்னேன்ல..?”
“ஆமா.. ஆனா என்னோட அர்ச்சனாதான் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாளேம்மா..” என்றான் அவன்.
“இல்.. இல்லப்பா… இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் அர்ச்சனாவோட அம்மா கால் பண்ணாங்க.. அர்ச்சனா கதிர கல்யாணம் பண்றதுக்கு சம்மதம் சொன்னான்னு சொன்னாங்க… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல…” என்றதும் உறைந்து விட்டான் அவன்.
தலை விறைக்கத் தொடங்கியது அவனுக்கு.
கதிர் அவளைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டது…
அவளைப் பின்தொடர்ந்தது..
அவளை முன்பே காதலித்திருந்தது அனைத்தையும் அறிந்து வைத்திருந்தவனுக்கு அவன் மீது பொல்லாத கோபம் எழுந்தது என்னவோ உண்மைதான்.
ஆனால் எப்படியும் இந்த திருமணத்திற்கு அர்ச்சனா ஒருபோதும் சம்மதிக்க மாட்டாள் என்ற அபார நம்பிக்கை அவனுடைய கரங்களை கட்டிப்போட்டிருந்தது.
இப்போது அவள் சம்மதம் கூறிவிட்டாள் என்பது தெரிந்ததும் முற்றாக உடைந்து போனான் அவன்.
இதயம் பிளந்தது போல இருந்தது.
“எ.. என்னம்மா சொல்றீங்க..? அ.. அச்சு சம்மதம் சொல்லிட்டாளா..?” என அவன் அதிர்ந்தவனாய் கேட்க, ஆம் என்றார் அவர்.
மீண்டும் அமைதியானான் அவன்.
கதிரால் அர்ச்சனாவிற்கு பிரச்சனை வருமோ என தன்னுடைய ஆட்களை வைத்து அவனைப் பற்றி முழு விபரங்களையும் சேகரித்தவனுக்கு அவன் மிகவும் நல்லவன் என்ற உண்மை புரிந்தது.
ஆகையால்தான் கதிரை மிரட்டவோ எச்சரிக்கவோ செய்யாமல் அப்படியே விட்டு விட்டான் அவன்.
ஆனால் இப்போது அர்ச்சனாவை முழுதாக இழக்க வேண்டி வருமோ என்ற பயம் அவனைக் கவ்விக் கொண்டது.
“என்னப்பா யோசிக்கிற..? நீ என்ன செய்ய சொல்றியா அதையே நான் பண்றேன்.. கல்யாணத்த நிறுத்த சொல்லி சம்மந்தி அம்மாகிட்ட பேசவா..? நீ உயிரோட இருக்க விஷயத்தை அவங்ககிட்ட சொல்லிடட்டுமா..? அது தெரிஞ்சா அவங்களே கல்யாணத்தை நிறுத்திடுவாங்க..” என அவர் கூற மறுப்பாக தலை அசைத்தான் அவன்.
“நான் அந்தப் பையன்கிட்ட பேசணும்மா..” என்றான் அவன்.
“அவன்கிட்ட பேசுறதுக்கு உனக்கு என்னடா இருக்கு…? நீ எதுக்கு யாரோ ஒருத்தன்கிட்ட பேசணும்..? இதுக்கு முன்னாடி அர்ச்சனாவ பொண்ணு கேட்டு வந்திருக்காங்கன்னு சொன்னதும் அந்த பையன பத்தி விசாரிக்க ஆளுங்கள அனுப்பின.. இப்போ நேராவே போய் பேசணும்னு சொல்ற..? நீ என்னதான் உன்னோட மனசுல நினைச்சுகிட்டு இருக்க..? நீ பேசுறதா இருந்தா அர்ச்சனா கிட்ட பேசு.. இதோட எல்லா பிரச்சனையையும் நீயே முடிச்சு வச்சிரு..” என கோபமாகக் கூறினார் ரூபாவதி.
“இப்போ திடீர்னு நான் எப்படி அவ முன்னாடி போய் நிக்க முடியும்..? ஒரு வேளை நிஜமாவே அவனைப் பிடிச்சுத்தான் கல்யாணத்துக்காக சம்மதம் சொல்லி இருந்தான்னா மறுபடியும் நான் அவளோட வாழ்க்கைய குழப்புற மாதிரி போயிருமே.. உண்மை என்னன்னு தெரியாம என்னால அடுத்த மூவ் எடுத்து வைக்கவே முடியாதும்மா… ஒருவேளை அவ ஆசப்பட்டு இந்த கல்யாணத்தை பண்ணிக்கணும்னு நினைச்சிருந்தான்னா நான் அதுக்கு குறுக்கா நிக்கவே மாட்டேன்.. என்னோட சந்தோஷத்தை விட எனக்கு அவளோட சந்தோஷம் மட்டும்தான் முக்கியம்..” என்றவன் அடுத்த நொடியே தொப்பி ஒன்றை எடுத்து மாட்டியவாறு வீட்டை விட்டு வெளியேற ரூபாவதிக்கோ அழுகைதான் வந்தது.
ஒற்றை மகனைப் பெற்றுவிட்டு அவன் படும் தவிப்பைக் காணச் சகியாது வேதனை கொண்டார் அவர்.
அக்கணம் அவருடைய மனம் அர்ச்சனாவை அடியோடு வெறுத்தது.
🌻💜🌻