48. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

4.7
(131)

நெருக்கம் – 48

அவள் கேட்ட கேள்விக்கு எந்தவிதமான பதிலும் கூறாது விழி விரித்து அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தவனை முகத்திற்கு நேரே தன்னுடைய கரத்தை உயர்த்தி அசைத்தவள்,

“ஹேய் ஆர் யு ஓகே..?” எனக் கேட்க அவனுக்கு விழிகள் சடுதியில் கலங்கிப் போயின.

தாடியடர்ந்த கன்னத்தில் கண்ணீர் வழிந்தே விட அவனுடைய கண்ணீரைக் கண்டவள் தடுமாறி அவனுடைய முகத்தில் இருந்த தன்னுடைய பார்வையை விலக்கிக் கொண்டாள்.

“எனக்கு நிறைய வேலை இருக்கு குரு.. நீங்க பேசினாதான் என்னாலையும் பேச முடியும்… இப்படி அமைதியா இருந்தா என்னால எப்படிப் பேச முடியும்..?” என மீண்டும் அதே மென் குரலில் கூறினாள் அவள்.

“இங்கே உன்னோட வீடு எங்க இருக்கு அபி..” நடுங்கிய தன்னுடைய கரங்களை ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டான் அவன்.

அவனுடைய கரங்களோ எப்போது அவளை இழுத்து அணைத்துக் கொள்வோம் என்பதைப் போல பரபரத்துக் கொண்டிருந்தன.

“பக்கத்துலதான் எனக்குன்னு சின்னதா ஒரு வீடு வாடகை வீடுதான்.. பட் நிம்மதியா இருக்கேன்..” எனத் தன் வார்த்தைகளை அழுத்திக் கூறினாள் அவள்.

“ஓஹ்…. அங்க போய் பேசலாமா..?” எனக் கேட்டான் அவன்.

தயக்கமாக அவனைப் பார்த்தாள் அவள்.

“இல்ல அங்கெல்லாம் நீங்க..” என அவள் மறுப்பாகக் கூற முயற்சி செய்த நொடி “ப்ளீஸ்..” என்றான் அவன்.

மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து வெளியே விட்டவள்,

“சரி வாங்க..” எனக் கூறிக்கொண்டு தன்னுடைய மேடிட்ட வயிற்றின் மீது தன் கரத்தை வைத்தவாறு நடக்கத் தொடங்க அவளையே இமைக்காது பார்த்தவாறு பின் தொடரத் தொடங்கினான் குரு.

அவளுடைய அமைதியான பேச்சும் வீரியமற்ற வார்த்தைகளும் அவனை மேலும் திகைக்க வைத்தன.

கோபப்படுவாள், கத்துவாள் உன்னால்தான் தனக்கு இந்த நிலைமை எனக் கதறுவாள், என்றெல்லாம் எதிர்பார்த்து தன்னைத் திடப் படுத்திக் கொண்டவனுக்கு அவளுடைய அமைதியைக் கண்டு அச்சம் சூழ்ந்தது.

கோபத்தைக் கொட்டித் திட்டி விட்டால் கூட அந்தக் கோபம் கொஞ்ச நேரத்தில் குறைந்துவிடும் அல்லவா..? ஆனால் எதையுமே வெளிக்காட்டாது அழுத்தமாக அமைதியாக பேசும் அபர்ணாவின் இந்தப் புதிய பரிணாமம் அவனை அதீதமாய் அச்சத்திற்குள் அழுத்தியது.

தன்னுடைய அச்சத்தை மறைத்து அவளின் தாய்மை உருவத்தை தன்னுடைய விழிகளில் நிறைத்துக் கொண்டான் அவன்.

மெல்ல மெல்ல ஆடி அசைந்து வரும் தேர் போல நடந்து வருபவளை அப்படியே தன் கைகளில் ஏந்திக் கொண்டு உலா வர வேண்டும் போல ஆசையாக இருந்தது அவனுக்கு,

வெகு சிரமப்பட்டு தன் ஆசைகளை அடக்கிக் கொண்டவன் பிள்ளை வயிற்றோடு நடப்பவளைக் கண்டு இரக்கம் கொண்டான்.

“உன்னால நடக்க முடியுமா அபி..? இன்னும் எவ்வளவு தூரம் போகணும்..?” என அவன் அக்கறையாய் கேட்க,

“தினமும் நடந்து போயிட்டு தானே வரேன்.. எனக்கு பழக்கம்தான்..” என முடித்துக் கொண்டாள் அவள்.

சற்று நேரத்தில் அவள் தங்கி இருந்த வீடு வந்து விட அதைப் பார்த்ததும் மனதில் கலக்கம் ஏற்பட்டது.

செங்கல்லால் கட்டிய சிறிய வீடு அது.

“உள்ளே வாங்க..” என அழைத்தாள் அவள்.

அந்த வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணம் தன் முன்னே நின்றவளை வேகமாக அணைத்துக் கொண்டான் அவன்.

மேடிட்ட அவளுடைய வயிறு அவளை இறுக்கமாக அணைப்பதற்கு தடாப் போட அதிர்ந்து விலகியவன் அவளின் பின்புறம் சென்று வயிற்றுக்கும் மார்புக்கும் இடையே தன்னுடைய கரத்தைக் கோர்த்து அவளை பின்னால் இருந்து இறுக்கமாக அணைத்துக் கொள்ள,

அவள் உடலில் ஒரு விதமான நடுக்கம் இழையோடி மறைந்தது.

அவளை அணைத்துக் கொண்டவனுக்கோ விழிகளில் ஏராளமாக பெருகியது கண்ணீர்.

பெருகிய கண்ணீர் அவனுடைய கன்னத்து தாடியை வருடி அவளுடைய கழுத்தடியில் தேங்க அவன் அழுகிறான் என்பதை உணர்ந்து அசையாது நின்றாள் அவள்.

“எங்க உன்ன கண்டுபிடிக்கவே மாட்டேனோன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா..? நீ இல்லாத நாள்ல நான் நானாவே இல்லடி.. உன்ன ரொம்ப மிஸ் பண்ணினேன்… இலங்கை முழுக்க தேடினேன்… எத்தனையோ பேப்பர்ல விளம்பரம் கொடுத்தேன்… எதையுமே நீ பார்க்கலையா..?” என தவிப்போடு அவன் வினவ,

“எல்லா விளம்பரத்தையும் பார்த்தேன்…” என மீண்டும் ஒற்றை வார்த்தையில் அவனை உடைய வைத்தாள் அவள்.

நொறுங்கிப் போனான் அவன்.

அவன் அனைத்த்திருந்ததில் எந்தவித சலனமும் இல்லை என்பதைப் போல இறுகிப்போய் நின்றிருந்தாள் அவள்.

தானாகவே அவனுடைய கரங்கள் அவளுடைய மேனியில் இருந்து அகன்றன.

தான் தேடி அலைந்தது அனைத்தும் தெரிந்தும் தன்னை தவிர்த்து விட்டு மறைந்திருந்திருக்கிறாள் என்பது பட்டவர்த்தனமாகப் புரிந்தது.

“அ..‌ அபி என்ன தேடி வரணும்னு உனக்குத் தோணவே இல்லையா..?”

“தோணலை…” பட்டென பதில் வந்தது அவளிடம் இருந்து.

முகம் சுருங்கிப் போனது அவனுக்கு.

அவள் மீது இருந்த பார்வையை சற்றே நகர்த்தினான் அவன்.

சிறிய ஹாலும் அந்த ஹோலோடு ஒட்டியவாறு சமையலறை ஒன்று மாத்திரமே இருந்தது அந்த வீட்டில்.

இதில் படுக்கை அறையே இல்லையே..

அவள் எங்கே தூங்குவாள் என்பதைப் போல அதிர்ந்து தன்னுடைய விழிகளை துலாவியவனுக்கு அந்த ஹாலின் ஓரத்தில் மடிக்கப்பட்டு வைத்திருந்த பாயைக் கண்டதும் மனம் சுணங்கிப் போனது.

உள்ளே ரணமாய் வலித்தது.

ஓரமாக இருந்த சிறிய நாற்காலி ஒன்றை எடுத்து அவன் முன்னே வைத்தவள் “உட்காருங்க….” எனக் கூற கலங்கிப் போனான் அவன்.

“இல்ல… நீ.. நீ இரு..” என்றவாறு அவளுக்கு அவன் இருக்கையைக் கொடுக்க,

“இல்ல நீங்களே இருங்க…” என்றாள் அவள்.

“இ.. இல்ல அபி நீ இரு..” என்றவன் நாற்காலியை அவளுக்கு அருகே நகர்த்தி வைக்க அதற்கு மேல் மறுக்காது அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள் அவள்.

“சாரி என்னால ரொம்ப நேரம் நிக்க முடியாது… கால் வீங்கி இருக்கு… தரைல உட்கார்ந்தா எழுந்துக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… தப்பா எடுத்துக்காதீங்க…” என்றவள் அந்த நாட்காலியில் அமர்ந்து விட அவளுக்கு எதிரே தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டான் அவன்.

என்ன பேசுவது எப்படித் தொடங்குவது என்று அவனுக்குத் தெரியவில்லை.

கால் வீங்கி இருக்கின்றது என்றாளே எனத் தவித்தவன் தன்னுடைய தயக்கத்தை உதறிவிட்டு தன் முன்னே இருக்கையில் அமர்ந்திருந்தவளின் கால்களைப் பிடித்து அவளுடைய நீண்ட பாவாடையை விலக்கி பாதங்களைத் தன்னுடைய மடியில் வைக்க பதறிப்போய் தன் கால்களை அவனிடமிருந்து இழுத்து எடுத்துக் கொண்டாள் அவள்.

“ப்ச்… இப்படி எல்லாம் நீங்க பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லை ப்ளீஸ்… என்ன சங்கடப் படுத்தாதீங்க..” என்றாள் அவள்.

ஆரம்பத்திலிருந்து யாரோ ஒருவனைப் போல அவர் தன்னோடு பேசுவதை புரிந்து கொண்டவன்,

“இங்க யார்கிட்டயாவது சொல்லணும்னா சொல்லிடு அபி.. நாம இன்னைக்கு நைட் இங்கே இருந்து நம்ம வீட்டுக்கு கிளம்பிடலாம்..” என அவன் கூற,

“நம்ம வீடா…? எந்த வீடு..? நீங்க என்ன துரத்தி விட்டீங்களே… அந்த வீடா…?” என அவள் நிதானமாகக் கேட்க இவனுக்கோ நொடியில் முகம் மாறிப் போனது.

அவனுடைய முகம் தொங்கிப் போனதைப் பார்த்ததும் தன்னுடைய கீழ் உதட்டை மடித்து கடித்துக் கொண்டவள்,

“எனக்கு உங்கள கஷ்டப்படுத்தறதுல கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல குரு.. யாரையும் பழிவாங்குற நோக்கமோ இல்ல வார்த்தைகளால குத்திக் காட்டுற எண்ணமோ என்கிட்ட இல்ல.. அத நான் விரும்பவும் மாட்டேன்… ஆனா நான் உங்க கூட இருந்தேன்னா மறுபடியும் மறுபடியும் நான் உங்களை கஷ்டப்படுத்திக்கிட்டேதான் இருப்பேன்…. ஏன்னா நான் இத்தனை மாசத்துல அனுபவிச்ச வேதனையும் கஷ்டங்களும் வார்த்தைகளால சொல்ல முடியாது குரு.

ஆரம்பத்துல தனியா இருக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்… எந்த அனுபவமும் இல்லை.. வீட்ல காபி கூட போட்டதில்லை… இப்போ நான் சமைக்காத சாப்பாடே இல்லைன்னு சொல்லலாம்… எல்லாமே பழகிருச்சு… வாழ்க்கையில இவங்க இருந்தாதான் நம்மளால வாழ முடியும் இவங்க இல்லைனா நம்மளால வாழ முடியாதுன்னு எதுவுமே கிடையாது..

கண்ண மூடினா எனக்கு நினைச்சு பாக்குறதுக்கு அழகான நிறைய விஷயங்கள் இருக்கு.. என்னோட அம்மா அப்பா.. நான் உங்க மேல வச்ச காதல்… இது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இந்த அழகான நினைவுகளோடு என்னால கடைசி வரைக்கும் வாழ்ந்துட முடியும் குரு…

இதை விட்டுட்டு நான் உங்க கூட வந்தேன்னா எனக்கும் கஷ்டம் உங்களுக்கும் கஷ்டம் புரிஞ்சுக்கோங்க.. என்னால இந்த இடத்தை விட்டு எங்கேயும் வர முடியாது..” என அழகாக தெளிவாக அவனுக்குப் புரியும் படி எடுத்துக் கூறினாள் அவள்.

“என்ன நீ ஹர்ட் பண்ணினா கூட எனக்கு சந்தோஷம்தான்… ஆனா இனி ஒரு நிமிஷம் கூட என்னால உன்னப் பிரிஞ்சு வாழ முடியாது… இத்தனை மாசமா தெருத்தெருவா பிச்சைக்காரன விட மோசமா உன்னத் தேடி அலைஞ்சு திரிஞ்சிட்டேன்… இதுக்கு மேலயும் என்னால ஒரு செகண்ட் கூட உன்னை பிரிய முடியாது…” என்றான் அவன்.

அவனைப் பார்த்து சிரித்தாள் அவள்.

“நீங்க மாறவே இல்லைல..? எப்பவுமே அடுத்தவங்கள உங்களோட இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறதுதான் உங்களுக்கு பிடிக்கும்ல..?”

பெருமூச்சோடு அவளைப் பார்த்தவன் அவள் விலக்கிய கால்களை மீண்டும் எடுத்து தன்னுடைய மடியில் வைத்து இதமாக அவளுடைய பாதங்களை அழுத்தி விடத் தொடங்கினான்.

“சரி ஓகே… நீ எங்கேயும் வர வேண்டாம்… நான் உன்னை வற்புறுத்தவும் மாட்டேன்… ஆனா நானும் இங்கிருந்து போக மாட்டேன்… இங்கேயே உன் கூடவே நானும் ஸ்டே பண்ணிக்கிறேன்…” என்றவனை அதிர்ந்து போய் பார்த்தாள் அவள்.

“இங்க நீங்க விரும்புற எந்த ஆடம்பரமும் கிடையாது… ஏசி கிடையாது… ஃபேன் கிடையாது… பெட் கிடையாது… பிரிட்ஜ் பெட்ரூம் கூட கிடையாது… உங்களால ஒரு நாள் கூட இங்க தாக்குப் பிடிக்கவும் முடியாது…” என்றவளின் பாதத்தில் குனிந்து அழுத்தமாக முத்தம் வைத்தவன்,

“இங்க நீ இருக்கியே அது மட்டும் போதும்..” என்றிருந்தான்.

தீச் சுட்டாற் போல தன்னுடைய பாதத்தை உருவி எடுத்துக் கொண்டாள் அபர்ணா.

🔥💜🔥

Happy Diwali dears 💜 😍 🪔

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 131

No votes so far! Be the first to rate this post.

1 thought on “48. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!