அவன் தொட்டதே தீது என்பதைப் போல வேகமாக தன்னுடைய பாதங்களை உருவி எடுத்த தன் மனைவியை வலியோடு பார்த்தான் அவன்.
“தொடாதீங்க குரு…” மறுத்தாள் அவள்.
“ஹேய் யாரோ மாதிரி விலகி நிற்க முடியல.. என்னால சுத்தமா முடியலடி…”
“யாரோ மாதிரி இல்ல… நீங்க யாரோதான்… டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிக் கொடுத்துட்டு தானே வந்தேன்..”
“அ.. அத நான் கி.. கிழிச்சுட்டேன் அபி…”
“ஓஹோ….” இகழ்ச்சியாக இதழ் பிதுக்கினாள் அவள்.
அமைதியாக அவளை ஏறிட்டுப் பார்த்தான் அவன்.
“உங்க இரண்டாவது கல்யாணம் என்ன ஆச்சு..? அந்த பொண்ணுக்கும் குழந்தை பிறக்கலைன்னு வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டீங்களா..?” என அவள் கேட்க அவனுக்கோ செருப்பால் அடித்த உணர்வு.
முகத்தில் அறை வாங்கியதைப் போல தடுமாறி பின்னால் நகர்ந்து விழிகளை மூடித் திறந்தவனுக்கு நொடியில் முகத்தில் வேதனை அப்பிக் கொண்டது.
அவன் முகம் நொடியில் மாறிப் போன விதத்தைக் கண்டவள் “இங்க இருந்து கிளம்பிடுங்க குரு..” என்றாள்.
சம்மனமிட்டு அமர்ந்திருந்தவன் மெல்ல எழுந்து மண்டியிட்டு அமர்ந்து அவளுடைய மேடிட்ட வயிற்றின் மீது தன் கரத்தைப் பதித்து “எப்படி டி..?” என குரல் நடுங்கக் கேட்டான்.
இவ்வளவு நேரமும் இந்தக் கேள்வியைக் கேட்காமல் அடக்கி வைத்திருந்தவனுக்கு அதற்கு மேல் அமைதி காக்க முடியவில்லை.
“நான் இங்க வந்ததுக்கு அப்புறமா இன்னொருத்தர் கூட ஒன்னா…” என அவள் கூறி முடிக்கும் முன்னரே,
“வலிக்குது அபி வேணாம்.. என்ன காயப்படுத்தனும்னு உன்னையே நீ கலங்கப்படுத்திக்காத..” என்றிருந்தான் அவன்.
விழிகளை மூடித் திறந்தவள், “உங்க குழந்தைதான்.. ஆனா எப்படின்னு எனக்கே தெரியல.. மூணு மாசம் வரைக்கும் பீரியட்ஸ் வந்துட்டுதான் இருந்துச்சு.. தல சுத்து வாந்தியும் இருந்துச்சு.. இங்க பொன்னுதாயின்னு ஒரு பாட்டி இருக்காங்க… அன்னைக்கு தல சுத்துதுன்னு நான் சொன்னப்போ அவங்க தான் என்னோட கைய புடிச்சு பாத்து நான் கர்ப்பமா இருக்கேன்னு என்கிட்ட சொன்னாங்க.. என்னால நம்பவே முடியல… அதுக்கு அப்புறமா ராஜேஷ் அப்பா இங்க இருக்க ஹாஸ்பிடலுக்கு என்ன கூட்டிட்டு போனாங்க… அங்க வச்சு செக்கப் பண்ண போதுதான் நான் கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்சது..” என்றவளுக்கு குரல் நடுங்கியது.
அவனுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
ஐயோவென ஊமையாகக் கதறியது அவனுடைய உள்ளம்.
இந்தப் பாவத்தை எல்லாம் எங்கே சென்று கழுவப் போகின்றேன் என மருகித் தவித்தான் அவன்.
இதோ இத்தனை ஆண்டுகளாக அவன் எதற்காக காத்திருந்தானோ அது அவனுக்குக் கிடைத்துவிட்டது.
அவனுடைய குழந்தை இந்த உலகத்திற்கு வருவதற்கு காத்துக் கிடக்கிறது ஆனால் மகிழ்ச்சி சிறிதும் தோன்றவே இல்லையே..!
எப்படித் தோன்றும்..?
தன் உயிரானவளை சிதைத்து விட்டு இப்போது அவளைப் பற்றி சிந்திக்காமல் குழந்தையைப் பற்றி மட்டும் அவனால் சிந்திக்க முடியவில்லை.
அவனுக்கு இருவரும் வேண்டும். அனைத்தையும் விட அவனுக்கு அவள் வேண்டும்.
அவனோ தனக்குள் சிந்தித்து சிந்தித்து தன்னையே கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருக்க அவளோ, மெல்ல இருக்கையை விட்டு எழ முயன்றாள்.
மூச்சை நன்றாக இழுத்து விட்டவள், “இல்ல நானே எடுத்துக்கிறேன்..” எனக் கூறிவிட்டு சற்றே சிரமப்பட்டு எழுந்து கொள்ள அவனுக்கோ மனம் பாரமாகிப் போனது.
“ஏன்டி சிரமப்படுற..?”
“இவ்வளவு நாளும் நான்தானே என்னை பார்த்துக்கிடேன்.. இனியும் என்னோட வேலைகள நானே பார்த்துக்கிறதுதான் நல்லது…” என்றவள் சில ரிப்போர்ட்களை எடுத்து வந்து அவன் முன்பு வைத்தாள்.
“இதெல்லாம் எ.. என்ன அபி..?”
“இதெல்லாம் என்னோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்.. எனக்கு கர்ப்பப்பை குழாய்ல எந்த அடைப்பும் கிடையாது.. என்னோட கர்ப்பப்பை வீக்காவும் இல்லை.. நான் நல்லாதான் இருக்கேன்.. ஒரு அம்மா ஆகுறதுக்கான தகுதி எனக்கு இருக்கு.. அதுக்கு உங்க குழந்தைதான் சாட்சி..” என்றவள் கண்ணீரோடு தன் வயிற்றை தொட்டுக் காண்பிக்க உறைந்து போனான் அவன்.
எங்கே பிழை நேர்ந்தது..?
நான் இவளை அழைத்துச் செல்லும்போதே இவள் கர்ப்பமாகத் தானே இருந்திருப்பாள் அப்படி இருக்கும்போது இவளால் குழந்தையே பெற முடியாது என எதற்காக மாற்றிச் சொல்ல வேண்டும்..?
எவ்வளவு பெரிய தவறு இது..
அவனுக்கோ கழுத்து நரம்புகள் யாவும் புடைத்து எழுந்தன.
“எந்தத் தப்பும் பண்ணாத என்னை வீண்பழி சுமத்தி வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டீங்கல்ல..” என்றவளுக்கு அழுகை தொண்டையை அடைக்க துடித்துப் போனான் அவன்.
“என்ன மன்னிச்சிடு அபி.. பாவம் பண்ணிட்டேன்.. என்ன மன்னிச்சிடு.. அன்னைக்கு உன்ன அவ்வளவு ஈஸியா அனுப்பிட்டேன் ஆனா அதுக்கு அப்புறமா உன்னத் தேடி ஒவ்வொரு நாளும் எப்படி துடிச்சேன் தெரியுமா..? செத்துட்டேன்டி..”
அவளோ அழுகையை அடக்க முயன்று மூச்சு எடுக்க முடியாமல் சிரமப்பட பதறிப் போனவன் அவளுடைய முதுகில் மெல்ல வருடி அவளைச் சமாதானம் செய்தான்.
மெல்ல மெல்ல அவள் சீரான நிலைக்குத் திரும்ப அதன் பின் தான் அவனுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது.
“ஏங்க என்ன பாத்தா உங்களுக்கு எப்படித் தெரியுது..? நீங்க என்ன வீட்டை விட்டு அனுப்பும் போது நான் உங்ககிட்ட எவ்வளவு கெஞ்சினேன்… நான் உங்களை காதலிக்கிறேன்னு கூட சொன்னேன்… நீங்க எதையுமே காதுல கூட விழுத்தவே இல்லை..
குழந்தைக்காகத்தான் உன்ன கல்யாணம் பண்ணினேன்.. உன்னால குழந்தை பெத்துக்க முடியாது அதனால போயிடு.. நான் இன்னொரு கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்லித்தானே என்னை விரட்டி விட்டீங்க.. அதுக்கப்புறம் எப்படிங்க என்னால உங்க கிட்ட வர முடியும்.?
எனக்கும் என்னோட மனசுக்கும் அந்த இடத்துல எந்தவிதமான மதிப்புமே இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் எதுக்காக உங்களைத் தேடி வரணும்..?
குழந்தை பெத்துக்க முடியாது என்கிற குறையோட எங்க வீட்டுல நின்னு அவங்கள கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சேன் அதனாலதான் அங்கேயும் போகல… அப்புறம் குழந்தை எனக்குள்ள வளருதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா எனக்குன்னு ஒரு சொந்தம் வந்ததா நினைச்சுக்கிட்டேன்…
இரவு பகலா அதிகமாக வேலை பார்த்தேன்.. என்னோட கவலைய மறக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன்.. ஆனா இப்போ வரைக்கும் ஏதோ ஒரு குறைக்காக ஒதுக்கப்பட்டுட்டோமே என்கிற வலி என்னோட மனசுல இருந்துகிட்டேதான் இருக்கு.. அப்படி இருக்கும்போது எப்படி என்னால உங்களைத் தேடி வர முடியும்..?
எங்க அம்மா அப்பாவையே நான் தேடிப் போகல உங்களைத் தேடியா வரப்போறேன்..” எனக் கசப்பான புன்னகையோடு அவனைப் பார்த்துக் கூறியவள் தலையை மறுப்பாக அசைத்துக் கொண்டாள்.
“தப்புதான்டி… தப்புதான்…” அகற்றினான் அவன்.
“முடிஞ்சதெல்லாம் பேசுறதால இப்போ எந்த பிரயோஜனமும் கிடையாது குரு.. என்னை இப்படியே விட்ருங்க..” என்றவளின் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் அவன்.
“அப்படி எல்லாம் உன்ன விட முடியாது… இனி என்னால ஒரு நிமிஷம் கூட உன்னை விட்டுட்டு இருக்க முடியாது..” என்றதும் அவனை இகழ்ச்சியாக பார்த்தவள்,
“என்ன குழந்தை செண்டிமெண்ட்டா…?” எனக் கேட்டாள்.
அவனோ அவளைப் பார்த்து “இல்லை..” என்றான்.
“இவ்வளவு நாளும் வேணாம்னு தள்ளி வெச்ச என்ன இப்போ குழந்தை வந்ததுக்காக ஏத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா..?”
“ஐயோ இல்லடி… உன்ன பாக்குற இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு சத்தியமா நீ பிரக்னண்டா இருக்கன்னு கூடத் தெரியாது.. நான் உன்னைத் தேடித்தான் வந்தேன் அபி… உனக்காக மட்டும் தான் வந்தேன்..”
“ஆனா எனக்கு உங்க கூட வர விருப்பம் இல்லைங்க..”
“சரி என்ன விடு உங்க அம்மா, அப்பா உன்ன நினைச்சு எவ்வளவு வருத்தப்படறாங்கன்னு தெரியுமா..? உங்க அம்மா தினம் தினம் உன்ன நெனச்சு அழுதுகிட்டே இருக்காங்க… அவங்களுக்காகவாவது வா ப்ளீஸ்… என்மேல தானே கோபம் எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு… அவங்கள தண்டிக்காத..” என அவன் கூறியதும் தன் பெற்றோரின் நினைவில் அவளுக்கோ மனம் கசங்கிப் பிசைந்தது.
தனக்காக அவர்கள் உருகிக் கரைந்து கொண்டிருக்கின்றனர் என்பதை குருவின் வாயிலாக அறிந்தவள் துடித்துப் போனாள்.
“நான் அவங்ககிட்ட ஃபோன் பண்ணிப் பேசுறேன்.. நான் ஒரு வார்த்தை சொன்னா அவங்களே என்ன இங்க வந்து பார்த்துட்டு போவாங்க… நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க..” எனக் கூறியவளின் கன்னங்களைப் பற்றிக் கொண்டவன்,
“உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு இனி ஒரு அடி கூட நான் நகர்றதா இல்ல.. நீ வந்தா போகலாம்.. இல்லன்னா நானும் இங்கேயே இருக்கேன்..”
“சாரிங்க… நான் சம்பாதிக்கிறது எனக்கும் என்னோட பிள்ளைக்கு மட்டும்தான் போதும். உங்களை எல்லாம் உட்கார வெச்சு என்னால சோறு போட முடியாது..” என எரிச்சலோடு கூறினாள் அவள்.
மனம் உடைந்து போனது.
“நான் பாத்துக்குறேன்டி..” என்றான் அவன்.
“உங்க பணம் ஒன்னும் எனக்கோ என் பிள்ளைக்கோ தேவை இல்லை..”
“அது எனக்கும் குழந்தை தான்டி..”
“இப்படிப் பேச அசிங்கமா இல்லையா குரு..” என அவள் சட்டென்று கேட்டு விட முகம் சுருங்கிப் போனது அவனுக்கு,
“ஓ மை காட்.. இதுக்காகத்தான் சொல்றேன்.. எனக்கு யாரையும் கஷ்டப்படுத்த விருப்பமில்லை.. யாரோட மனசையும் நோகடிக்க நான் விரும்புறதும் இல்லை… இங்க நீங்க இருந்தீங்கன்னா என்ன அறியாமலேயே நான் உங்களை ஏதாவது சொல்லிடுவேன்னு எனக்குப் பயமா இருக்கு… ப்ளீஸ்… இங்கிருந்து போயிருங்க… முடிஞ்சு போன வாழ்க்கை முடிஞ்சு போனதாவே இருக்கட்டும்… நீங்க உங்க வாழ்க்கைய பாருங்க… நாங்க எங்களோட வாழ்க்கையை பாத்துக்குறோம்..” என்றவள் அசதியோடு எழுந்து மெல்ல தரையில் அமர்ந்து அப்படியே அந்த வெற்று நிலத்தில் சரிந்து படுத்து விட இவனுக்கோ உள்ளமும் உடலும் பதறிப் போனது.
ஐயோ தரை ஜில்லென்று இருக்கிறதே..
அவளுக்கு குளிருமே..
வேகமாக மடித்து வைத்திருந்த பாயை எடுத்து விரித்து விட்டவன் அசதியோடு தரையில் கிடந்தவளை அப்படியே அள்ளித் தூக்கி மெல்ல பாயில் கிடத்த அவனை உறுத்து விழித்தாள் அவள்.
அவனோ அவளுடைய பார்வையை கிஞ்சித்தும் கவனிக்காதவன், மெல்ல அவளின் அருகே தானும் சரிந்து படுத்துத் தன்னுடைய வலிமையான கரத்தை அவளுடைய மணி வயிற்றின் மீது மெல்ல வைத்து வருடத் தொடங்க இவளுக்கு வெறுப்பாக இருந்தது.
‘சாரி மன்னிச்சிடுங்கன்னு இவங்க வந்து நின்னதும் நாங்க பட்ட கஷ்டம் எல்லாத்தையும் மறந்து இவங்க வளர்த்த நாய் மாதிரி இவங்க பின்னாடியே போகணுமா..? ச்சை… ஏன் இந்த ஆம்பளைங்க இப்படி இருக்காங்க.’ எனக் கசப்போடு எண்ணிக் கொண்டவள் அவனுடைய கையைத் தட்டி விட்டாள்.
நீ தட்டி விட்டால் விலக வேண்டுமா என்பதைப் போல விடாப்படியாகத் தன்னுடைய கரத்தை அவளுடைய வயிற்றுக்கும் மார்புக்கும் இடையே செலுத்தி அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவன் பல மாதங்களாக தூங்காத பொழுதுகளை எல்லாம் சேர்த்து அக்கணம் தூங்க முடிவு செய்தான்.
தன் தேவதைப் பெண்ணை கண்டு கொண்ட நொடி தூக்கமோ அவனை சில நொடிகளிலேயே ஆக்கிரமித்துக் கொண்டது.
Lovlyyyyyyyyyy epiiiiii ❤️❤️❤️❤️❤️❤️
Semma super ❤