ஷக்தி மகிழவன் பேசியதைக் கேட்டு உறைந்த நிலைக்குச் சென்ற பிரகிருதி, பேச்சற்றுத் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று விட்டாள்.
அவளது அமைதி அவனது இதயத்தைத் தாறுமாறாகத் துடிக்க விட்டது. ஏதோ உள்ளுக்குள் உடைந்த நிலை. ஆனால், எப்போதும் போல வெளியில் சொல்லி விட வார்த்தைகள் தேடி, உணர்வின் உருவம் தேடித் தொய்ந்து போகிறான்.
இனி அவள் தன்னுடன் இருக்க மாட்டாள் என்பது மட்டும் அவனுக்கு நிச்சயம்.
அன்று அவனது புத்தகம் படிக்கும் நேரமும் கடந்து விட்டது. என்னவோ அதைத் தொடவும் விருப்பமிருக்கவில்லை அவனுக்கு. ஒன்றும் செய்யத் தோன்றாமல், நெஞ்சின் பாரத்தின் கனம் புரியாமல் அப்படியே படுத்திருந்தான்.
சிறிது நேரத்தில் அறைக்கு வந்தாலும் வருவாள் என, அவ்வப்பொழுது அறை வாயிலைப் பார்த்தவனின் விழிகளில் அலைப்புறுதல்கள் அதிகரித்தது.
காலையில், அலாரம் வைத்தது போல எழும் ஷக்திக்கு எழவே பிடிக்கவில்லை. உடலை யாரோ கட்டிலோடு கட்டிப்போட்டது போலப் பாரமாக இருந்தது. நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். காய்ச்சலேதும் அடிக்கவில்லை. ஆனால் உடல் வலித்தது.
மனத்தில் ஏற்பட்ட அழுத்தத்தின் வெளிப்பாடு எனப் புரியாதவனாக மெல்ல எழுந்தவன், சோர்வுடனே வெளியில் வந்தான்.
காலை, மதிய உணவுகள் ஹாட் பாக்ஸில் வீற்றிருந்தது. அவளைக் காணவில்லை. அலுவலகத்திற்குக் கிளம்பி விட்டாளெனப் புரிந்தது.
அவளைக் காணாத ஒரு விடியல், ஏன் இத்தனை ஆழமாய் தாக்குகிறது? தற்போது, தான் என்ன செய்ய வேண்டுமெனப் புரியாமல் குழம்பி நின்றவனுக்குத் தலை வலித்தது.
அலுவலகம் சென்றவனுக்கும் ஒரு வேலையும் செய்ய இயலவில்லை. பாதியில் வீட்டிற்கு வந்து விட்டான். அவனைப் பொறுத்த வரையில் அவனது ரொட்டின் மாறி விட்டால் அழுத்தமாகி விடுவான். ஒரு விதப் பதற்றம் மனத்தை நிறைக்க, அதனை உணர்ந்து கொள்பவனுக்கு வெளிப்படுத்த இயலாது. அன்று முழுதும் சரியாக உண்ணாமல், மாலை வேளையில் புத்தகத்தில் மூழ்கிப் போனான்.
அந்நேரம் அறைக்குள் வந்த பிரகிருதி, ஷக்தியைப் பார்த்து விட்டுக் கைப்பையை ஓரமாக வைக்க, அவளது வரவு உணர்ந்தும் நிமிரவில்லை அவன்.
அவனை யோசனையாகப் பார்த்தவள், பின் “நீங்க ஓகேவா மகிழ்?” என்றாள் மெல்லமாக.
உள்ளுக்குள் பல லட்சம் உணர்வுகள் திரண்டு, கரை புரண்டு ஓடினாலும், “ஐ ஆம் பைன்!” என்ற ஒற்றைச் சொல்லில் ஒடுங்கிக் கொண்டான்.
சற்றே குழம்பியவளுக்கு அவனிடம் எப்படிப் பேசுவதென்று தெரியவில்லை. ஆனால் அவன் படித்த பக்கத்தையே, படித்த வார்த்தைகளின் மீதே கை வைத்து மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருந்தான்.
“இப்ப நான் என்ன செய்யணும்?” நிமிர்ந்து பரிதாபமாகக் கேட்டவனை அதிர்ந்து பார்த்தவளுக்கோ மனம் வலித்தது.
“புக்கை மூடி வச்சுட்டு ரெஸ்ட் எடுங்க. என்ன ஆச்சு உங்களுக்கு? ஆபிஸ் போனீங்களா? சாப்பாடு எல்லாம் அப்படியே இருக்குற மாதிரி இருக்கு…” எனக் கேட்க, “தெரியல, சாப்பிட முடியல.” என்றான்.
‘பிடிக்கலை என்று சொல்ல இயலாமல் சாப்பிட முடியலை.’ என்றவனின் கூற்றில் அவளும் குழப்பமாகி, “உடம்பு சரி இல்லையா மகிழ்?” எனக் கேட்டு அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.
“உடம்பு ஹீட்டா இல்ல, ஆனா இங்க ஏதோ ஹீட்டா இருக்குற மாறி இருக்கு.” என நெற்றியைத் தொட்டவளின் கரங்களைப் பற்றி நெஞ்சில் வைத்துக் கொண்டான்.
அவனது தீண்டலில் தவித்து மருகியவள், நடுங்கியபடி கையை விடுவித்துக் கொள்ள, அவனது இதயச் சூடு இன்னும் அதிகமானது.
“என்னை விட்டுட்டு உன் வீட்டுக்குப் போகப் போறியா ருதி?” உணர்வைக் காட்டத் தெரியாதவனென்று யார் சொன்னது?
‘ஒற்றைக் கேள்வியில் தனது ஒட்டு மொத்த ஏக்கத்தையும் குவித்துக் கேட்கிறானே! அல்லது தனக்கு மட்டுமே அவனது உடைந்த உணர்வுகள் கண்ணாடியாய் பிரதிபலிக்கிறதா?’ எனத் தனக்குள் ஒரு பட்டிமன்றமே நிகழ்த்திய பிரகிருதி,
“அப்போ இது என் வீடு இல்லையா மகிழ்?” என்றாள் தானும் ஏக்கம் சுமந்து.
“இது உன் வீடு தான். ஆனா, இப்போ உனக்கு என்கூட இருக்கத் தோணாது தான?” ஷக்தியின் குரல் அவளை அசைத்தது.
“ஏன் தோணாது?”
“இதுக்கு முன்னாடி, எனக்கு மேரேஜ் பண்ண அம்மா நிறையப் பொண்ணு பார்த்தாங்க. எல்லார்கிட்டயும் நான் நேராப் பேசி என்னோட ப்ராப்ளமைச் சொன்னேன். அப்புறம் என்னவோ, என் கூட இருக்க செட் ஆகாதுன்னு சொல்லிட்டாங்க. உனக்குத் தெரிஞ்சு தான் இந்த மேரேஜ் நடக்குதுன்னு நினைச்சேன் ருதி. உன்னை… உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்ல?” எனும்போதே அவனறியாது கண்ணீர் சுரப்பிகள் சுரந்தது.
“மத்தவங்க மாதிரி நான் போக மாட்டேன் மகிழ். எனக்கு உங்க கூட இருக்கணும்னு மட்டும் தான் தோணுது. உங்கள விட்டு நீங்க என்னை அனுப்பிட மாட்டீங்க தான?” அவன் கண்களின் எதிரொளிப்பில் அவளது கண்களிலும் குளம் கட்டியது.
“ஐ நீட் யூ பார் எவர் ருதி… அப்போ என்கூட இருப்பியா?” இம்முறை வியப்பாகக் கேட்டான்.
“வேற எங்க போக? என்னை அனுப்பிட்டு நீங்க ஜாலியா இருக்கலாம்னு பார்க்குறீங்களா?” மூக்கைச் சுருக்கிப் போலிக் கோபம் காட்டினாள் பிரகிருதி.
“சே சே… நீ இருந்தா தான் ஜாலியா இருக்கு.” என்றவனின் கரங்கள் கண்களின் நீரை உணர்ந்து, “ஏன், என் கண்ணுல தண்ணி வருது…” எனத் திகிலாகக் கேட்டான்.
மீண்டும் ஒரு சுருக்கென்ற வலி அவளுள்.
“நான் போயிடுவேன்னு பயந்துட்டீங்க மகிழ். அதனால அழுதிருக்கீங்க!” என அவன் கண்ணீரைத் துடைத்து விட்டவள்,
“என்னை நிஜமாவே உங்களுக்கு அவ்ளோ பிடிக்குமா மகிழ்?” எனக் கேட்டாள் அவனை நெஞ்சினில் நிரப்பியபடி.
“சொல்லத் தெரியல. ஆனா நீ வேணும் ருதி. அவ்ளோ தான்… உன்னை பர்ஸ்ட் பர்ஸ்ட் பார்க்கும்போதே உன்கூடப் பேசணும்னு ஆசையா இருந்துச்சு. இதுக்கு முன்னாடி யார்கிட்டயும் நானா போய் பேசுனது இல்ல…” எனத் தன்னிலை விளக்கம் கொடுக்க முனைந்தான்.
அவனது கூற்றில் அகம் மகிழ்ந்தவள், “எனக்கு உங்களைப் புரிஞ்சுக்க கொஞ்சம் டைம் ஆகலாம் மகிழ். அதுவரை எனக்கு உங்களை, உங்க ஆக்டிவிட்டீசைப் புரிய வைங்க. அப்புறம், நீங்க எதையும் விளக்கமா சொல்லலைன்னாலும் புரிஞ்சுப்பேன்… ஓகே வா?” எனத் தலையாட்டிக் கேட்க, “யா ஷ்யூர்? உனக்கு நான் டச் பண்ணுனா… வந்து… என் கூட… என் டச் அக்செப்ட் பண்ணிப்பியா?” என்றான் குழப்பம் கலந்து.
அவனால், உடல் ரீதியான ஆழமான உணர்வுகள், காதலினால் தூண்டப்படும் மென் உணர்வுகளை அப்படியே வெளிப்படையாகக் கேட்டிட இயலாது. சில நேரங்களில், மனது எதிர்பார்ப்பது எது? உடல் எதிர்பார்ப்பது எது? என்று கூடக் குழம்பி விடுவான்.
அவள் மீது கொள்ளை ஆசை கொட்டும் அருவியாய் அவனுள் ஊறினாலும், அது காதலா, காமமா எனப் பிரித்தறிய இயலாது. ஆனால், அவளை உணர இயலும். இதைப் பற்றிய முழு குழப்பம் அகலாமலேயே, தன்னுடனே அவள் எப்போதும் கைப்பிடித்துத் தோள் சாய்ந்து இருக்க வேண்டுமென்ற பேராசையைத் தான் இப்படிக் கேட்டு வைத்திருக்கிறான்.
அவனது கேள்வியில் அரண்டு நின்ற பிரகிருதி, “இப்..இப்பவேவா? கொ… கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமா?” என அவன் தாம்பத்யம் பற்றிக் கேட்கிறான் எனத் தவறாக எண்ணிக்கொண்டு படபபடத்தாள்.
“ம்ம்!” எனத் தலையசைத்தவனுக்குள் சின்னதாய் ஒரு சரிவு.
“நீ அழும்போது மட்டும் தான் கையைப் பிடிச்சுக்கணுமா?” ஆடவனின் கருவிழிகள் அவள் விழிகளுடன் கலக்க முற்பட்டது.
நொடிக்கு அதிகமாக அவனைக் காணாமல் தவிர்த்தவள், “கையைப் பிடிச்சுக்கலாம். பிடிக்கிறதுக்கு முன்னாடி என்கிட்டக் கேட்டுக்கோங்க…” என்றதில்,
“இப்போ பிடிச்சுக்கவா?” என்றான் ஆழ்குரலில்.
மெலிதாய் அவள் இதழ்களில் புன்னகை அரும்ப, தலையாட்டிச் சம்மதம் கொடுத்திட, அவளது கரத்தை மென்மையாகப் பற்றிக் கொண்டான்.
பாவையின் கன்னங்களில் ரோஜாப்பூ மலர, அக்கன்னங்களைக் கண்ணெடுக்காமல் பார்த்த ஷக்தி மகிழவன், “உன் சீக்ஸ் ரெட் ஆகுது… ஏன்?” என்றான் தலையைச் சாய்த்து.
கீழுதட்டைக் கடித்துப் பெருவிரலை நிலத்தில் அழுத்தி, சிவப்பைக் கட்டுப்படுத்தியவள், “அது அப்படித்தான்…” என அவனைப் பார்க்க இயலாமல் வெட்கத்தில் தோய்ந்தாள்.
“இல்ல, இல்ல மகிழ்…” வேகமாக நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, மலர்ந்திருந்த தன்னவளின் வதனம் கண்டு அவனுள் பேரமைதி பிரவாகமெடுத்தது.
அதில் இன்னும் இறுக்கமாகக் கையைப் பற்றிக்கொண்டான் உரிமையாக.
அதன்பிறகான நாள்கள், இனிமையாய் நகர்ந்தது. அவனைப் புரிந்து கொள்ளப் பிரம்மப் பிரயத்தனப்பட்டாள்.
முக்கியமாக, அவனது உணவு விஷயத்தில் எதையும் மாற்ற நினைக்கவில்லை. ஞாயிற்றுக் கிழமையும் காலையில் இட்லி அவிக்க விழைந்தவளைத் தடுத்தவன், “சண்டே எப்பவும் தோசை தான ருதி?” என்றான் கேள்வியாக.
“அன்னைக்கு நான் சர்ப்ரைஸ் பண்ணது உங்களுக்குப் பிடிக்கலையா?” தோசையை வார்த்தபடி பிரகிருதி கேட்க,
“சர்ப்ரைஸ் ஓகே ருதி. ஆனா ஃபுட் ரொட்டின் மாறுனா எனக்கு ஒரு மாதிரி கன்பியூஸ் ஆகிடும். அன்னைக்கு லைட்டிங், கேண்டில் லைட் ப்ரிபரேஷன், உன்னோட ஸ்மைலிங் பேஸ் இது எல்லாம் என்னைக் கொஞ்சம் அமைதியாக்குச்சு. அதனால தான் அப்போஸ் பண்ணாம சாப்பிட்டேன்.” என்றவனின் பேச்சில் உள்ளம் உவகை கொண்டது பிரகிருதிக்கு.
பிடிக்கவில்லை என்றாலும், தனக்காக உணவு உண்டு இருக்கிறான்… இதுதான் அவன் சொல்ல வரும் அர்த்தம். அது புரிந்ததாலோ என்னவோ, அவளுக்கு வானத்தில் பறப்பது போலான உணர்வு.
“இன்னைக்கு என்ன பிளான் மகிழ்?” ஒரு வித எதிர்பார்ப்போடு அவள் கேட்க, “ஆஸ்யூஸுவல் தான்… முன்னாடியே எதுவும் பிளான் பண்ணலையே” என்றான் விழி நிமிர்த்தி.
“ம்ம்ம் ஆமா… பீச்சுக்குப் போவோமா மகிழ்? உங்களுக்கு ஓகேவா?” எனக் கேட்க, “போகலாம் ருதி!” என்றவனின் முகத்தில் ஆர்வம் வழிந்தோடியது.
அந்த ஆர்வத்தைத் துணி கொண்டு துடைப்பது போல வந்திறங்கினர் ஆர்த்தியும், ரவிதரனும்.
ஆர்த்திக்கு மகளைப் பற்றித் தெரியும். ஆதலால், சென்னைக்கு வந்ததுமே அவளுக்கு அழைத்து விட்டார். இன்னும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வருவதாக…
அதில் முகம் மாறி விட்டவள், “மகிழ் அம்மா, அப்பா வர்றாங்களாம். இன்னைக்கும் பிளான் கேன்சல்…” என்றாள் ஏமாற்றமாக.
அது அவனிடமும் பிரதிபலிக்க, “உன்னைப் பார்க்க நினைச்சு இருப்பாங்க ருதி” எனச் சமாதானம் செய்தான்.
“ம்ம்!” எனச் சுருண்ட மனத்தைத் திடப்படுத்தி பெற்றோரின் வரவிற்காகக் காத்திருக்க, மதியம் தாண்டிய வேளையில் இருவரும் வந்தனர்.
“வாங்கம்மா, வாங்கப்பா…” என அழைத்தவளின் முகத்தில் பெற்றோரைக் கண்ட மகிழ்வு அப்பட்டமாகத் தெரிய, “எப்படி இருக்க பிரகா?” என அவள் தலை கோதினார் ஆர்த்தி.
“நல்லாருக்கேன்மா…” எனத் தலையசைத்தவள் தந்தையைப் பார்க்க, அவரோ அவளிடம் நலம் விசாரிக்காமல் ஷக்தியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
“என்னமா, திடீர்னு வந்துருக்கீங்க?” மகளுடன் அடுக்களையை நோட்டம் விட வந்த ஆர்த்தியிடம் வினவ,
“உன் அப்பாவுக்குச் சென்னைல வேலை இருக்குன்னு சொன்னாரு. கையோட உன்னையும் பார்த்துட்டு, அப்படியே மறுவீட்டுக்கு அழைச்சுட்டுப் போகலாம்னு வந்தோம். உன் மாமியார் வீட்டுக்குப் போயிட்டுச் சொல்லணும். ஊர்ல எல்லாரும் கேக்குறாங்க, ஏன் இன்னும் மறுவீட்டுக்கு அழைக்கலைன்னு…” என்றதில்,
“அவருகிட்டக் கேட்டுக்கலாம்மா… வேலை இருந்துச்சுன்னா?” என மறைமுகமாக மறுத்தவளுக்கு இப்போது இந்த வீட்டை விட்டு எங்குச் சென்று தங்கினாலும் சௌகரியமாக இருக்காதென்று தான் தோன்றியது.
மகளின் மாற்றம் தாயாக அவருக்கும் மகிழ்வாகத் தான் இருந்தது.
இரண்டு வாரங்கள் கடந்தும் எந்தப் பிரச்சினையும் வரவில்லையே என்றதே அவருக்கு நிம்மதி தான்.
“இப்படியே அவரைப் புரிஞ்சு நடந்துக்க பிரகா… நாளைப் பின்ன பிரச்சினை எதுவும் வந்துச்சுன்னா, உன் அப்பாவுக்குத் தான் மன உளைச்சல்!” என்றிட, அவளது முகத்தில் இருந்த மலர்வே காணாமல் போனது.
கூடவே, “ரெண்டு பேருக்குள்ள எல்லாம் நல்லாத்தான போகுது…” எனக் கேட்க,
“ம்ம், நல்லாப் பேசுவாங்கமா” என்றாள் அவர் கேட்பது புரியாதவளாக.
“அதில்லடி. சட்டு புட்டுன்னு குடும்பம் நடத்திக் குழந்தை உண்டாகிடு. புரியுதா?” என விவகாரமாகக் கூற,
திருதிருவென விழித்தவள், பயத்துடன் தலையசைத்தாள்.
ரவிதரனும், மருமகனை மறுவீட்டிற்கு அழைத்து விட்டு, லேகா மற்றும் பிரகாசத்தைப் பார்க்கச் சென்றனர்.
எப்போதும், புன்னகை மாறாமல் இருக்கும் பிரகிருதியின் முகம் இருளடைந்து இருந்ததை அவன் மனம் உணர்ந்ததோ என்னவோ, “என்ன ஆச்சு ருதி?” எனத் தானாகக் கேட்டான்.
“அது… அது… அம்மா வந்து பேபி பெத்துக்கச் சொன்னாங்க.” சொல்லும்போதே முணுக்கெனக் கண்ணில் நீர் கோர்க்க, முன்னொரு முறை அவள் அழும்போது, ‘என் கையைப் பிடிச்சுக்கக் கூடத் தோணலையா?’ எனக் கேட்டது நினைவு வந்தது.
கையைப் பிடித்தால் அவள் அமைதியாகி விடுவாள் எனக் கணித்தவன், “உன் கையைப் பிடிச்சுக்கவா ருதி?” என்றதும் “சரி!” என்றாள்.
ஷக்தி அவளது கையைப் பிடித்துத் தனது கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டு, “பேபி பெத்துக்கலாம். அதனால என்ன இப்போ?” என்றவனுக்கு அவளது உள்மனத் தவிப்புகள் புரியவில்லை.
அவளாகக் கூறாமல் அவனால் புரிந்து கொள்ள இயலாது என உணர்ந்தவளுக்கும், எப்படி விளக்குவதென்று புரியாது போக, “எனக்கு… எனக்குப் பயமா இருக்கு. கொஞ்ச நாள் ஆகட்டுமா?” என்றதில்,
“என் மேல பயமா?” அவனும் குழப்பமாகக் கேட்டான்.
“இல்ல… உங்க மேல இல்ல. அது… பேபிக்காக நம்ம, நம்ம க்ளோஸ் ஆகணும்னா… எனக்கு, எனக்கு டச்சிங் அவ்ளோ பிடிக்காது…” எனத் திணறியவள் தனது நிலையைப் புரிய வைக்க முயன்று தோற்றாள்.
அதில் அவனிடம் அகப்பட்டு இருந்த கரம் நடுங்கத் தொடங்கியது. அவளது தோள்பட்டைகள் இறுகிப் பின் தளர்ந்தது.
“இப்போ நான் டச் பண்றேனே, இதுவும் வேணாமா ருதி?”
“இல்ல இல்ல, இது பிடிச்சுருக்கு. பேபிக்காக டச் பண்றது தான்… பயம்…” என்றதும் சில கணங்கள் அவளது கூற்றை உள்வாங்கி நிதானித்தவனுக்கு, அவளது பயம் எதுக்கென்று புரிந்தது.
“உன்னை நான் எதுக்கும் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன் ருதி. இப்போ கேட்ட மாதிரி எப்பவும் உன்னைக் கேட்டு தான் டச் பண்ணுவேன், ஓகேவா? அண்ட், நீயே இன்னும் பேபி மாதிரி தான் இருக்க… சோ நமக்கு பேபி இப்போ அவசரம் இல்ல…” என்று இயல்பாகப் பேசி அவளது உதறல்களை உடைக்க முற்பட்டான்.
அவனது இறுதி வரியில் அவளை மீறியும் புன்னகைத்து விட்டவள், “நான் பேபி தான்…” என மூக்கைச் சுருக்கிக் கூற, “ம்ம் பேபியே தான்…” என்றவனின் கண்களும் சிரிப்பில் விரிந்தது.
அவர்களைச் சேர்த்து வைத்தவர்களே, அவர்களது சிரிப்பைக் குலைக்க முயற்சிக்கப் போகிறார்கள் எனப் புரியாதவனாக தன்னுணர்வில் கலந்தவளையே கண்ணிமைக்காமல் ஆழ்ந்து ரசித்தான் ஷக்தி மகிழவன்.