52. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

4.7
(117)

நெருக்கம் – 52

வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் காலையில் வெகு சீக்கிரமாகவே எழுந்து கொண்ட அபர்ணாவுக்கு உடல் மிகவும் சோர்வாக இருப்பதைப் போலத் தோன்றியது.

உடல் சோர்வாக இருக்கின்றதென போர்வையை இழுத்து மூடிக்கொண்டு மீண்டும் உறக்கத்தை தழுவும் நிலையில் அவள் இல்லையே.

தனக்கான வேலைகள் அங்கே காத்துக் கொண்டிருக்கின்றன. லீவு கூறாமல் விடுப்பு எடுக்கவும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

கட்டாயம் வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டும்.

பெருமூச்சோடு எழுந்து கொண்டவள் குளிரைத் தாங்க முடியாது தன்னுடைய ஆடைக்கு மேலே இன்னொரு டி-ஷர்ட் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டவள், கைகளை உடலுக்குக் குறுக்காக கட்டியவாறு அந்த வீட்டின் ஜன்னல்களைத் திறந்தாள்.

திறக்கும் போது அவன் இங்கே இருப்பானா இல்லை தன்னுடைய காருக்குச் சென்றிருப்பானா..? இரவு முழுவதும் எங்கே தூங்கி இருப்பான்.. போன்ற கேள்விகள் அவளுடைய மனதில் அணிவகுக்க தன் தலையை உலுக்கி விட்டுக் கொண்டவள் நேற்று அவன் அமர்ந்திருந்த மரத்தைப் பார்த்தாள்.

அடுத்த கணம் தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு.

உடலைக் குறுக்கியவாறு மரத்துக்கு கீழே வெற்றுத் தரையில் படுத்திருந்தான் குருஷேத்திரன்.

பதறிப் போனாள் அபர்ணா.

தங்கத் தட்டில் பிறந்து வளர்ந்த பணக்காரன் எதற்கு இவ்வளவு குளிருக்கு மத்தியில் புற் தரையில் படுத்து உறங்க வேண்டும்..?

இவனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கின்றது..?

ஐயோ வென்றானது அவளுக்கு.

அவன் உடலைக் குறுக்கிப் படுத்திருந்த விதமே அதீத குளிரில் சிரமப்பட்டுக் கொண்டே தூங்கி இருக்கிறான் என்பதை உணர்த்த கலங்கிப் போனாள் அவள்.

மனம் கேட்கவில்லை.

தன்னைத் தேடி வந்தவனை வீட்டுக்குள் அனுமதிக்காது வெளியே விட்டால் சென்று விடுவான் என நினைத்துத்தான் அவள் அப்படிச் செய்தாள். ஆனால் அவனோ ஒரு இரவு முழுவதும் வெளியே குளிருக்குள்ளேயே படுத்திருந்திருக்கிறான் என்பது தெரிந்ததும் மனம் வலிக்கத் தொடங்கியது.

என்னதான் தனக்கு தீமை செய்தவனாக அவன் இருந்தாலும் கூட ஒரு உயிரை இப்படி எல்லாம் வதைத்து அதில் திருப்தி காணும் ஈனப் பிறவியல்ல அவள்.

இப்போது கூட அவனைப் பிடிக்காதுதான்.. அவனை விட்டு முழுமையாக விலகி விட வேண்டும் என்றுதான் அவள் துடிக்கிறாள்.

அதற்காக அவன் இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டும் என அவள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. விரும்பவும் இல்லை.

மென்மையான மனம் தாளாது தவிக்க உள்ளே இருந்த போர்வையை எடுத்துக்கொண்டு வேகமாக அவனை நோக்கி விரைந்து நடக்கலானாள் அந்த நிறை மாத கர்ப்பிணி.

போர்வையோடு அவன் அருகே சென்றவள் அவனை நெருங்கியதும் தயங்கித் தாமதித்தாள்.

நடுங்கியவாறே படுத்திருந்தவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

அவன் இன்னும் உறக்கத்தில்தான் இருக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்டவள் மெல்ல அவனை இன்னும் நெருங்கி தன் கரத்தில் இருந்த போர்வையை அவன் மீது போர்த்தி விட்டு பெருமூச்சோடு விலக முயன்ற கணம் அவளுடைய கரத்தைச் சட்டென பிடித்துக் கொண்டான் குரு.

அருகினில் வீசும் அவளுடைய ஆயுத மூச்சை அவன் அறியாமல் போவானா..?

அவள் அருகே வந்ததுமே உணர்ந்து கொண்டவன் தூங்குவது போல அமைதியாகப் படுத்திருந்தான்.

இது தெரியாது அவன் அருகே நெருங்கி வந்து போர்வையை போர்த்தி விட்டவளின் கரத்தை அவன் அழுத்தமாக பிடித்துக் கொள்ள அவளுக்கோ விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.

“தேங்க்ஸ் அபி..” அவளுடைய கரத்தைத் தன் பெருவிரலால் மென்மையாக வருடியவாறு அவன் நன்றி கூற தன் கையை வேகமாக உருவி எடுத்துக் கொண்டவள்,

“உங்களுக்கு என்ன சம்திங் சம்திங் படத்துல வர்ற ஜெயம் ரவின்னு நினைப்பா..? இப்போ எதுக்காக இந்தக் குளிர்ல படுத்துக் கிடந்து இப்படிக் கஷ்டப்படுறீங்க..? உங்களுக்குத்தான் அவ்வளவு பெரிய வீடு இருக்குல்ல…? அங்கேயே போய் இருக்க வேண்டியதுதானே…? இங்கே இருந்து எதுக்காக என்னை டார்ச்சர் பண்றீங்க..?”

“நான் உன்ன எந்தத் தொல்லையும் பண்ணவே இல்லையே… நீ சொன்னதுக்கு அப்புறமா வீட்டுக்குள்ள கூட வராம வெளியே தானே படுத்து இருந்தேன்..” என்றான் அவன்.

அவளோ திணறிப் போனாள்.

வெளியே படுத்திருந்து குளிருக்குள் அவன் அவதிப்படுவதைப் பார்க்கும் போது தனக்கு அது இம்சையாகத் தானே இருக்கின்றது.

“தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்பிப் போயிருங்க குரு…”

“அப்போ நீயும் என் கூட வா… நாம ரெண்டு பேரும் ஒன்னாவே கிளம்பலாம்…” என்றவனைப் பார்த்து முறைத்தவள்,

“என்னவோ பண்ணித் தொலைங்க… செத்தாலும் உங்க கூட நான் வரமாட்டேன்..” எனக் கூறிவிட்டு அவள் திரும்பி நடக்க இவனுக்கு விழிகளில் வெறுமை குடி கொண்டது.

“நான் செத்தாலுமா..?” என அவன் கரகரப்பான குரலில் கேட்டு விட உறைந்து போய் அசைவற்று நின்று விட்டாள் அவள்.

நெஞ்சுக் கூட்டுக்குள் குளிர் பரவியது.

விழிகள் கலங்கிவிட அவனைத் திரும்பிப் பார்க்காது இம்முறை வேகமாக நடக்கத் தொடங்கினாள் அபர்ணா.

பெருமூச்சோடு எழுந்து அமர்ந்தவன் அவள் போர்த்தி விட்ட போர்வையைத் தன் கரத்தில் எடுத்து முகர்ந்து பார்த்தான்.

அந்தப் போர்வை முழுவதும் அவளுடைய வாசனை பரவிப் படர்ந்து இருப்பதைப் உணர்த்தவனுக்கு உடல் சிலிர்த்தது.

விழிகளை மூடி அந்தப் போர்வையைத் தன் மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டவனுக்கு அவள் மேல் தோன்றிய காதலும் ஏக்கமும் இன்னும் இன்னும் அதிகமாக காதலெனும் அவஸ்தைக்குள் முழுவதுமாக சிக்கிக் கொண்டாள் குருஷேத்திரன்.

அபர்ணாவோ அதன் பின்னர் அவனைப் பற்றி சிந்திக்கக் கூடாது என எடுத்த அவசர முடிவோடு அவனை மறந்து விட்டு வேலைக்குத் தயாராகி செல்லத் தொடங்கினாள்.

மரத்தடியில் இருந்தவனைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ வரம் கேட்டு தவம் செய்யும் முனிவரைப் போலவே அவளுக்குத் தோன்ற பெருமூச்சு மீண்டும் கிளர்ந்தது.

அதன் பின்னர் அவளுக்கு அவனைப் பற்றி சிந்திக்க நேரமே கிடைக்கவில்லை.

வேலை அவளை ஆக்கிரமித்துக் கொள்ள கஸ்டமர்களின் தட்டுக்களை எல்லாம் சேகரித்து கழுவுவதற்காக அவள் கொண்டு செல்ல கிட்டத்தட்ட அவற்றை பறிக்காத குறையாக அவன் முன்னே வந்து நின்றான் குரு.

“என்கிட்ட கொடு நான் கழுவுறேன்…”

“யோவ் உனக்கு என்ன பைத்தியமா..?” என ஏக வசனத்தில் அவனைப் பார்த்துக் கேட்டவளுக்கு சீற்றம் சீற்றமாக வந்தது.

“ஆமாடி லவ் பைத்தியம் முத்திருச்சு..” என்றவன் அந்தத் தட்டுக்களை பறித்தெடுக்க அவளுக்கோ எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

“குரு நீங்க என்ன பண்றீங்கன்னு உங்களுக்குப் புரியுதா இல்லையா..? இது நான் வேலை பார்க்கிற இடம்… இங்கே வந்து தயவு செஞ்சு என்னை தொல்லை பண்ணாதீங்க… ராஜேஷ் அப்பா பார்த்தா எனக்குத்தான் திட்டுவாரு…” எனத் தவிப்போடு கூறினாள் அவள்.

“எவனாவது உன்னத் திட்டினா அடுத்த நிமிஷம் அவனோட மண்டைய பொளக்குறேன்..” என்றவனை முறைத்துப் பார்த்தவள்,

“அவரைத் திட்டினீங்கன்னா நடக்கிறதே வேற… நீங்க விரட்டி விட்டுட்டு நிம்மதியா இருந்துட்டீங்க… ஊர் ஊரா வேலை தேடித் திரிஞ்ச எனக்கு இவர்தான் வேலையும் தங்குறதுக்கு வீடும் கொடுத்து பொண்ணு மாதிரி பாத்துக்கிட்டாரு… அவரையே திட்டுவீங்களா…?” என இவள் உச்சகட்ட கோபத்தில் கத்த அடங்கிப் போனான் அவன்.

சில நிமிடங்கள் அவன் தட்டைக் கொடுப்பான் என்று வேடிக்கைப் பார்த்தவள் அவன் கொடுக்கப் போவதில்லை என்பதை தாமதமாக உணர்ந்து தன் தலையில் அடித்தவாறு வெளியே சென்று சாம்பார் பரிமாறத் தொடங்க சற்று நேரத்தில் மீண்டும் வந்து அவளுடைய சாம்பார் வாளியை பறித்து எடுத்தான் குரு.

“நீ கொஞ்ச நேரம் அந்த சேர்ல இருந்து ரெஸ்ட் எடு… இதெல்லாம் நான் பாத்துக்குறேன்…” என்றவனின் மண்டையை உடைத்து விடலாமா என்ற வெறி அவளுக்குள் எழுந்தது.

அதன் பின்னர் அங்கே அவளை அவன் எந்த வேலையும் செய்யவிடாமல் போக விழிகள் கலங்கிவிட்டன அவளுக்கு.

நிம்மதியாக வாழவே விட மாட்டானா என எரிச்சலோடு எழுந்து கொண்டவள் அந்த இடத்தை விட்டு கோபத்தோடு வெளியேற அவளுக்குப் பின்னாலேயே வந்தான் குரு.

“ஹேய் ஏன்டி கோபப்படுற..? உனக்கு உதவிதானே பண்றேன்..” என அவளுடைய கையைப் பிடித்து இழுத்தவனை ஓங்கிப் பளாரென அறைந்தாள் அவள்.

“மன்னாங்கட்டி…. நான் கேட்டனா..? எனக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு நான் உங்ககிட்ட வந்து கேட்டேனா..? நீங்க உதவி பண்ணல… உபத்திரவம்தான் பண்றீங்க… ஐயா சாமி நான் வேலை பார்க்கிற இடத்துல வந்து இப்படி எல்லாம் பண்ணி என்னோட வேலையையும் போக வச்சிடாதீங்க… அப்புறம் நானும் என்னோட பிள்ளையும் நடுத்தெருவுல நின்னு பிச்சைதான் எடுக்கணும்…” என கண்ணீரோடு அவள் கூற அவளுடைய வார்த்தைகளின் வீச்சில் நொறுங்கிப் போனான் அவன்.

அவள் அடித்ததை விட அவளுடைய வார்த்தைகள்தான் அவனுக்கு அதிகம் வலித்தன.

“சாரி…” என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டவன் தன் கன்னத்தை அழுத்தமாக வருடி விட்டுத் தள்ளி நிற்க அவர்களின் முன்பு ஒரு ஆட்டோ வந்து நின்றது.

அந்த ஆட்டோவில் இருந்து தன் அன்னையும் தந்தையும் வந்திறங்கியதைக் கண்டவள் அதிர்ந்து போய் அவர்களைப் பார்த்தாள்.

“சாரி அபி…. நான்தான் அவங்ககிட்ட நீ இங்க இருக்கேங்கிற விஷயத்தை சொன்னேன்…” என மெல்லிய குரலில் கூறினான் குரு.

இத்தனை மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய அன்னையையும் தந்தையையும் பார்த்தவளின் விழிகள் நீரால் நிறைந்தன.

உடல் நடுங்கத் தொடங்கியது.

அதற்கு மேல் தாமதிக்காது விரைந்து அவர்களை நெருங்கியவளை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார் அவளுடைய தந்தை.

“என்ன பாப்பா இப்படி பண்ணிட்டியே… உனக்கு எங்களோட ஞாபகம் வரவே இல்லையா..? கல்யாணம் பண்ணிக் கொடுத்தா அப்பா அம்மா அப்படியே உன்னை கைவிட்டுட்டோம்னு அர்த்தமா..? எதுக்காக பாப்பா இப்படி பண்ணின..? உன்னை இத்தனை மாசமா எங்கே எல்லாம் தேடி அலைஞ்சோம் தெரியுமா..?” என அவர் கண்ணீரோடு கூற,

“சாரிப்பா… ரொம்ப ரொம்ப சாரி.. உங்க யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சேன்… அதனாலதான் வரல… என்ன மன்னிச்சிடுங்கப்பா…” எனக் கதறினாள் அவள்.

தன் மகளின் உச்சந்தலையில் மென்மையாக முத்தம் பதித்து அவளுடைய கண்ணீரைத் துடைத்து விட்டார் ரகுநாத்.

பத்மாவோ புடவைத் தலைப்பை தன் வாயில் அடைத்தவாறு குலுங்கி அழுதார்.

நிறைமாத வயிற்றோடு கன்னங்கள் வற்றி எலும்பும் தோலுமாக இருந்த தன்னுடைய மகளைக் கண்டு அவருக்கோ உயிர் துடித்தது.

“ம்மாஆஆ…” என்ற கதறலோடு தன்னுடைய அன்னையை நெருங்கியவளை கைநீட்டி தடுத்தார் பத்மா.

“அங்கேயே நில்லு.. உனக்கு நான் அம்மா கிடையாது.. என்ன அம்மான்னு நினைச்சிருந்தா நீ என்கிட்ட வந்திருப்ப… நாங்க யாரோ என்கிறதாலதானே உன்னோட புருஷன் விரட்டி விட்டதும் யாருமே வேணாம்னு ஒதுங்கி வந்துட்ட.. எத்தனை வருஷமா என்னோட உயிரா உன்ன வளர்த்தேனே.. ஒரு நிமிஷம் கூடவா என்னோட ஞாபகம் உனக்கு வரல..? ஒரு கால் பண்ணியாவது எப்படி இருக்கேன் எங்கே இருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே… பாவி…! நடப்பிணமா திரியிறேன்டி நான்…. என்கூட பேசாத…” என்றவளின் அழுகை கதறலாக மாற துடித்துப் போனாள் அவள்.

“அம்மா ப்ளீஸ்… அவளைத் திட்டாதீங்க.. இந்த நிலைமைல அவளால தாங்கிக்க முடியாது..” என பொறுக்க முடியாது ஆதரவாக குரு பேசிவிட அவ்வளவுதான் வெடித்துவிட்டார் அபர்ணாவின் அன்னை.

“ஏய் நீ யாரு..? என்னோட பொண்ணுகிட்ட நான் என்ன வேணாலும் பேசுவேன்.. எங்களுக்குள்ள நீ வராத… எப்போ என்னோட பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சேனோ அன்னைக்கே பிடிச்சது சனி.. அவ உன்ன மட்டும் கல்யாணம் பண்ணிக்கலைன்னா இன்னைக்கு எங்க கூட நல்லா இருந்திருப்பா… இப்படி ஊரு பேரு தெரியாத இடத்துல கடையில வேலை செஞ்சு கஷ்டப்படணும்னு என்னோட பொண்ணுக்கு என்ன தலை எழுத்தா..? ஐயா ராசா நீ இதுவரைக்கும் பண்ணதே போதும்… தயவு செஞ்சு இங்கிருந்து போயிரு..” என முகத்தில் அடித்தாற் போலத் திட்டிவிட அந்த அவமானத்தை சகிக்க முடியாது அவனுடைய கை முஷ்டிகள் இறுகின.

“பத்மா என்ன பேச்சுப் பேசுற..? மாப்பிள மட்டும் இல்லேன்னா இப்போ நம்ம பொண்ண கண்டு புடிச்சிருக்கவே முடியாது… இவ்வளவு கஷ்டப்பட்டு அவர்தானே நம்ம பொண்ண கண்டு பிடிச்சு நம்மள இங்க வர வச்சாரு.. ஏதோ தப்பு நடந்து முடிஞ்சது முடிஞ்சு போச்சு.. இனி அதப் பத்தி பேசாத..” என கண்டித்தார் ரகுநாத்.

கோபத்தோடு தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டவர் அழுது கொண்டிருந்த தன் மகளைக் காணச் சகியாது அவளை வேகமாக அணைத்துக் கொண்டார்.

“கிளம்பு பாப்பா.. போதும் நீ கஷ்டப்பட்டதெல்லாம் போதும்… நம்ம வீட்டுக்குப் போயிடலாம் வா..” என்ற அன்னையின் வார்த்தைகளை மறுக்கத் தோன்றவில்லை அவளுக்கு.

ஏதோ தலையில் சுமந்த பெரிய பாரம் விலகியது போல நிம்மதியாக உணர்ந்தவள் தன் அன்னையின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

“கிளம்பலாம் பாப்பா…” என்ற தந்தையைப் பார்த்தவள்,

“ராஜேஷ் அப்பாகிட்ட சொல்லணும். இன்னொரு பாட்டி இருக்காங்க அவங்க கிட்டயும் சொல்லணும்… அவங்கதான் எனக்கு எல்லா உதவியும் பண்ணாங்க..’ என்ற தன் மகளின் தலையை வருடிவிட்டவர்

“சரிமா யார் யார் கிட்ட சொல்லணுமோ அவங்ககிட்ட எல்லாம் சொல்லிடலாம் வா… நாங்களும் அவங்க கிட்ட நன்றி சொல்லணும்..” எனக் கூறியவாறு தன் மகளை அழைத்துக் கொண்டு மீண்டும் அந்த கடைக்குள் ரகுநாத் நுழைய அவரின் பின்னாலேயே பத்மாவும் சென்றார்.

அந்த இடத்தில் தனித்து தனியாக விடப்பட்டிருந்தான் குரு.

அவளாவது தன்னை அழைப்பாளா என்பதைப் போலப் பார்த்தவன் இனி ஒருபோதும் அவள் தன்னை அழைக்க மாட்டாளோ என்ற அச்சத்தில் இடிந்து போய் நின்றான்.

💜🔥💜

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 117

No votes so far! Be the first to rate this post.

1 thought on “52. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!