சொர்க்கம் - 53
இக்கணம் முதல் அவளால் சுதந்திரக் காற்றை நிச்சயமாக சுவாசிக்க முடியும்.
இனி என்ன செய்ய வேண்டும்.. எப்படி இருக்க வேண்டும்.. இரவு ஆடையை உடுத்தித் தூங்க வேண்டுமா இல்லையா என அனைத்தையும் அவளால் நிர்ணயிக்க முடியும்.
இனி நான் விநாயக்கின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதை நினைத்தவளுக்கு மனம் அமைதி அடைந்திருந்தது.
காரில் பயணித்துக் கொண்டிருந்தவள் வீதியைப் பார்த்தவாறே இவற்றைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
மறந்தும் அவன் புறம் தன்னுடைய பார்வையை அவள் திருப்பவே இல்லை.
ஆனால் அவனுடைய பார்வையோ நொடிக்கு நொடி அவள் மீது மட்டும்தான் நிலைத்து நின்றது.
அவள் எவ்வளவு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தாளோ அப்படியே அவளுக்கு எதிர்மாறான நிலையில் தவித்துக் கொண்டிருந்தான் விநாயக்.
இன்று காலையில் எழுந்த கணமே அவள் அருகில் இல்லை என்றதும் அவன் துடித்த துடிப்பு அவன் மட்டும்தானே அறிவான்.
அக்கணமே அவளைப் பார்த்து விட வேண்டும் என அவனுடைய ஐம்புலன்களும் துடியாய் துடித்தனவே.
இனி அவளைத் தினமும் அவனுடைய வீட்டில் காண முடியாதா..?
அவனுடைய மனமோ அவளை எதற்காக அனுப்புகின்றாய் என அவனுடன் சண்டை போடத் தயாராகியது.
அவனுடைய மூளையோ இதற்கு மேலும் அவளை அனுப்பாமல் வைத்திருந்தால் அவளுடைய வெறுப்பை மட்டுமே சம்பாதித்து விடுவோம் என அவனை பயமுறுத்தியது.
இதுவரை எதற்கும் அஞ்சாதவன் அவளுடைய வெறுப்பை சம்பாதித்து விடுவோம் என அஞ்சத் தொடங்கினான்.
அவனுக்கோ அவளுடைய அழகிய கருவிழிகள் அவன் மீது காதலை மட்டும்தான் சிந்த வேண்டும். மாறாக அவன் மீது வெறுப்பையோ கோபத்தையோ அவை ஒருபோதும் சிந்தக்கூடாத.
ஆகவேதான் அவன் செந்தூரியின் விடயத்தை மிகப் பொறுமையாகக் கையாள எண்ணினான்.
அதனால்தான் அவள் அழுது மன்றாடியதும் மறுக்க முடியாமல் அவளை அவளுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றான்.
இந்தப் பிரிவு ஒன்றும் நிரந்தரமானது அல்லவே.
இன்னும் சில நாட்களில் அவளை முறையாகப் பெண் கேட்டு அவளைத் தன்னுடைய மனையாளாக மாற்றி விடுவதே அவனுடைய நோக்கமாக இருந்தது.
அவளை முறையாக தன் மனைவி என அனைவருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என அவாக் கொண்டது அவனுடைய மனம்.
தன்னருகே அமைதியாக அமர்ந்திருந்தவளின் மீது பார்வையைத் திருப்பியவன் காற்றில் அசைந்து கொண்டிருந்த அவளுடைய கருங் கூந்தலைப் பார்த்தான்.
அந்தக் கார் கூந்தல் அவளுடைய வலம்புரிக் கழுத்து வளைவை உரசிச் செல்வதைக் கண்டவனுக்கு அவள் மீதிருந்த பார்வையை திருப்ப முடியாது போனது.
வாகனம் செலுத்துவதில் இருந்த கவனம் சிதறுவதை உணர்ந்து மிகச் சிரமப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் தன்னுடைய விழிகளை வீதியை நோக்கித் திருப்பினான்.
‘ஏன்டி நீ இவ்வளவு அழகா இருக்க..? எதுக்காக என்னோட மனச இப்படித் தடுமாற வைக்கிற..?’ என மனதிற்குள் புலம்பியவன் தன்னுடைய ஒற்றைக் கரத்தால் தன் சிகையை அழுத்தமாகக் கோதிக் கொண்டான்.
“விநாயக்…”
“சொல்லு பேபி..”
“ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்க வீட்டுக்குப் போகாதீங்க.. எங்க வீட்டுக்கே என்னைக் கூட்டிட்டுப் போங்க..” என அவள் மென் குரலில் கூற,
காரின் வேகத்தை குறைத்தவன் “ஏன்…?” என்றான்.
“இல்ல இதுக்கு அப்புறமாவும் நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லை.. இனி நானே எங்க அப்பாவை பார்த்துக்கிறேன்.. அந்த ஹாஸ்பிடல்ல இருந்து அவரை வேற ஏதாவது ஹாஸ்பிடலுக்கு மாத்தணும்.. என்னால இனி உங்களுக்கு எந்தச் சிரமமும் வேணாம்..”
“ப்ச்.. இதோ பார் நீ அழுதேங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் உன்ன அனுப்புறதுக்கு சம்மதிச்சேன்… என்னோட சில முடிவுகள்ல எந்த மாற்றமும் இருக்காது.. உன்னோட அப்பா குணமாகும் வரைக்கும் நான் பார்த்துக்குறதா சொன்னேன்.. சோ நானே பார்த்துக்கிறேன்.. வேணும்னா நீ படம் நடிச்சு முடிச்சதுக்கு அப்புறம் வர்ற சம்பளத்துல அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துடு..
இப்போ நான் பாக்குறதை வேணாம்னு சொல்லாத..” என அவன் இறுக்கமான குரலில் கூற வேறு வழி இன்றி அமைதியாக இருந்தாள் அவள்.
இவனுடன் பேசி வெல்வது என்பது எளிதல்லவே.
“சரி ஓகே.. ஆனா என்ன எங்க வீட்டிலேயே விடுங்க..” என்றதும் அதன் பின்னர் அவன் எதுவும் கூறவில்லை.
அவளுடைய வீட்டிற்கு முன்னே காரை நிறுத்தியவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அந்த ஆழ்ந்த பார்வை ஏக்கப் பார்வையாக மாறியது.
தன்னைப் பிரிவதில் அவளுக்கு எந்தக் கவலையும் இல்லையா..?
தனக்கு மட்டும்தான் இந்த வேதனையா என்பதைப் போல அவளைத் தழுவியது அவனுடைய பார்வை.
அவளோ அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது என கார்க் கதவை வேகமாகத் திறந்தவள் விட்டால் போதும் என அவனுக்கு ஒற்றைத் தலையசைப்பைக் கூடக் கொடுக்காது காரில் இருந்து இறங்கி அவளிடம் இருந்த இன்னொரு சாவியின் மூலம் அந்த வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்து விட ஏமாற்றத்தில் முகம் வாடிப் போனான் விநாயக்.
அவள் இறங்கிச் சென்ற அதே வேகத்தில் அவனும் காரை விட்டு இறங்கி அவளுடைய வீட்டிற்குள் நுழைந்து உள்ளே சென்றவளை இழுத்து தன்னுடைய கைவளைவுக்குள் நிறுத்தி அவளுக்கு எண்ணற்ற முத்தங்களை அள்ளி வழங்கி விட வேண்டும் போலத்தான் அவனுக்கு ஆசையாக இருந்தது.
ஆனால் எதற்கெடுத்தாலும் அவளை இழுத்து அணைத்து அவளுடைய சம்மதம் இல்லாமல் முத்தமிட்டால் தன்னை பெண் பித்தனாக எண்ணிவிடுவாளோ என அமைதி காத்தான் அவன்.
சில நொடிகள் அவளுடைய வீட்டு வாயிலையே பார்த்த வண்ணம் காரில் அமர்ந்திருந்தவன் பெருமூச்சோடு தன்னுடைய வீட்டை நோக்கிக் காரைச் செலுத்தினான்.
தன்னுடைய உடலில் ஏதோ ஒரு பாகத்தை இழந்தாற் போல அவனுக்கு வெறுமையாக இருந்தது.
இந்தக் காதல் ஏன் என்னைத் தீண்டியது..?
எனக்கே தெரியாமல் என்னை மொத்தமாக கொள்ளையிட்டு விட்டதே.
ஒரு சிறு பெண்ணின் மீது இப்படி பைத்தியம் பிடித்து தடுமாறி நிற்போம் என அவன் தன் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.
தன்னை நினைத்து சிரித்துக் கொண்டவன் சீக்கிரமாக அவளை தன்னுடையவளாக மாற்றிக் கொள்ளும் எண்ணத்தில் அங்கிருந்து புறப்பட்டான்.
******
இரண்டு நாட்களுக்குப் பிறகு..
தன்னுடைய வீட்டின் ஹாலில் அமர்ந்து மல்லிகை மலர்களை மாலையாக தொடுத்துக் கொண்டிருந்தாள் நம் நாயகி.
அவளுடைய மனம் வெகு நாட்களுக்குப் பின்னர் சற்றே மகிழ்ச்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போலும்.
தந்தையின் பேச்சிலும் உடலிலும் முன்னேற்றம் வருவதே அவளுடைய மகிழ்ச்சிக்கான காரணம் என்றால் அது மிகையாகாது.
காலையில் அவருக்குப் பிடித்த உணவை செய்து எடுத்துக் கொண்டு அன்னையையும் அவரையும் பார்த்துவிட்டு வந்தவள் மன நிறைவோடு கோவிலுக்குச் செல்லலாம் என மல்லிகை மலர்களைப் பறித்து மாலை தொடுக்கத் தொடங்கினாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னை இங்கே விட்டுச் சென்ற விநாயக் மீண்டும் வந்து தன்னைத் தொந்தரவு செய்வானோ என எண்ணியிருந்த அச்சமெல்லாம் இப்போது ஒன்றுமே இல்லாமற் போயிருந்தது.
அவனால் இனி எந்தத் தொந்தரவும் இருக்கப் போவதில்லை என எண்ணி மகிழ்ந்து கொண்டவளுக்கு உள்ளத்தின் ஓரம் சிறு ஏமாற்றம் பரவுவதை தடுக்க முடியவில்லை.
இந்த இரண்டு நாட்களும் அவளுடைய படுக்கையில் படுத்துக் கொண்டவளுக்கு இரவு விழிப்பு வந்தால் கூட தன் அருகே விநாயக் இருக்கின்றானா என விழிகள் தேடுவதை உணர்ந்து திகைத்துப் போனாள் அவள்.
அவனை அதிகமாக வெறுப்பதால்தான் இத்தனை முறை நினைக்கின்றோமா என்ற கேள்வி அவளுக்குள் அடிக்கடி எழுத்தான் செய்தது.
வெறுப்புக்கம் விருப்புக்கும் நூல் அளவு தான் வித்தியாசம் என்பதை அக்கணம் வசதியாக மறந்து போனாள் அவள்.
நேற்று கௌதமைச் சென்று பார்த்துவிட்டு வந்தவள் அவனால் நன்றாக நடக்க முடிவதை எண்ணி திருப்தி கொண்டாள்.
அனைத்து பிரச்சினைகளும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக் கொண்டு வருவதாலோ என்னவோ அவளுடைய முகத்தில் வெகு நாட்களுக்குப் பின்பு சிரிப்பு கூட அவ்வப்போது முகிழ்த்து மறைந்தது.
கிட்டத்தட்ட மல்லிகை மாலையை முழுதாக அவள் தொடுத்து முடித்து விட திருப்தியோடு பூக்கூடையை எடுத்து வைத்தவள் தன்னுடைய அலைபேசி சிணுங்குவதைக் கண்டு இந்த நேரத்தில் யாராக இருக்கக்கூடும் என எண்ணியவாறு ஃபோனைப் பார்த்தாள்.
கௌதமிடமிருந்து தான் அழைப்பு வருகின்றது என்பது புரிந்ததும் உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்,
“ஹேய் சொல்லுடா.. ஹாஸ்பிடல்ல இருந்து இன்னைக்கு காலையிலேயே டிஸ்சார்ஜ் பண்றாங்கன்னு சொன்னேல்ல.. பண்ணிட்டாங்களா இல்லையா..?” என அவள் கேட்க,
“அதெல்லாம் காலையிலேயே பண்ணிட்டாங்க.. முக்கியமான விஷயம் சொல்லத்தான் உனக்கு கால் பண்ணேன் செந்தூரி..” என்றான் அவன்.
“என்ன கௌதம் சொல்லு…?”
“இன்னும் அரை மணி நேரத்துல புடவை கட்டி ரெடியாகி பக்கத்துல இருக்க காளி கோயிலுக்கு வந்துடு.. நான் தாலியோட ரெடியா இருக்கேன்..” என கௌதம் கூறியதும் சில நொடிகள் அசைவற்று எதுவும் பேசாது மௌனமாக நின்றாள் அவள்.
அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வராது போக “ஏய் என்னாச்சுடி..? நான் பேசுறது கேக்குதா..? ஹலோ… லைன்ல இருக்கியா சிந்து..?” எனக் கேட்க,
“ஹாங் இருக்கேன் கௌதம்..” என்றாள் அவள்.
“நான் சொன்னது புரிஞ்சுதா..? அரை மணி நேரத்துல உன்னால வர முடியுமா..? இல்லனா நானே உன்னோட வீட்டுக்கு வந்து உன்னைக் கூட்டிட்டுப் போகட்டுமா..?” எனக் கௌதம் கேட்க,
“இல்ல வேணாம் நீ கோயிலுக்குப் போயிடு.. நான் நேரா கோயிலுக்கு வந்துடுறேன்..” எனக் கூறியவள் அதற்கு மேல் எதுவும் பேசாது. அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
தான் செய்யப்போகும் இந்தக் காரியத்தால் மீண்டும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ..?
அச்சம் அவளுடல் முழுவதும் விஷம் போல பரவியது.
இனி ஒன்றும் செய்ய முடியாது. அவள்தான் அவனுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாளே..
அவன் உதவியாக கேட்டதைப் பண்ணித்தான் ஆக வேண்டும் என எண்ணியவள் தொடுத்து முடித்த மலர் மாலையை பூஜை அறையில் இறைவனுக்கு சாற்றிவிட்டு விழி மூடி சில நொடிகள் மனமுருக இறைவனை வேண்டினாள்.
நடக்கும் அனைத்தும் நல்லதாகவே நடக்க வேண்டும் இறைவா என இறைவனிடம் கோரிக்கையை வைத்துவிட்டு வெளியே வந்தவள் தன்னுடைய அறைக்குள் நுழைந்து பட்டுப் புடவை ஒன்றை வேகமாக தன் உடலில் சுற்றத் தொடங்கினாள்.
ஏனோ கரங்கள் நடுங்கியது. அன்னையிடமும் தந்தையிடமும் இந்த நாடகத்தைப் பற்றி கூறி விடுவோமா என அவளுடைய மனம் கேள்வி எழுப்பியது.
ஆனால் இந்தப் போலி திருமணத்தைப் பற்றித் தெரிந்தால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை புரிந்து யாருக்கும் தெரியாமலேயே இந்த நாடகத்தை நடத்தி முடித்து விடலாம் என எண்ணினாள் அவள்.
அவர்கள் நினைப்பது அப்படியே நடந்து விட்டால் இறைவன் என்றொருவன் எதற்கு இங்கே இருக்கின்றான்..?
யாருக்கும் தெரியாமல் நாடகமாக முடித்து விடலாம் என இவர்கள் போட்ட திட்டம் இன்னும் சில மணி நேரத்தில் இந்த உலகம் முழுவதும் பரவப் போகின்றது என்பதை அறியாது மணப் பெண் போல தயாராகி முடித்திருந்தாள் அந்தப் பேதை.
Super and intresting sis
Super sis 💖