அபர்ணாவின் குடும்பமோ அவளை அழைத்துக் கொண்டு அவளுக்கு உதவி செய்தவர்களை எல்லாம் சந்திக்கச் சென்றுவிட அவர்களைப் பின்தொடர்ந்து செல்வதா இல்லை இங்கேயே நிற்பதா எனத் தெரியாது அமைதியாக நின்றிருந்தான் அவன்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தின் பின்பு சிரித்தவாறு நடந்து வந்தவர்களைப் பார்த்தவனுக்கு நெஞ்சில் அமைதி குடி கொண்டது.
இப்போதுதான் எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு அவளுடைய மத்தாப்புச் சிரிப்பைக் கண்குளிர காண்கிறான்.
ஆனால் அவன் அவளோடு இருந்த போதெல்லாம் இந்தச் சிரிப்பை அவள் சிந்தவே இல்லையே தன்னை நிஜமாகவே வெறுத்து விட்டாளா..?
நெஞ்சில் வலி கூடியது.
பெருமூச்சோடு வேகமாக தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்தவன் அவர்களுக்கு முன்பு கொண்டு வந்து நிறுத்தினான்.
“வாங்க அங்கிள்… நானே ட்ரோப் பண்றேன்..”
“எங்களுக்கு யாரோட உதவியும் தேவை இல்லைன்னு சொல்லுங்க..” என்றார் பத்மா.
ரகுநாத்துக்கு சங்கடமாகிப் போனது.
குருவோ இறுகிப்போனான்.
“அப்பா நாங்க பஸ்ல போகலாம் பா..” என்றாள் அபி.
காரை விட்டு இறங்கி வந்தவன்,
“நானும் கொழும்புதான் போகப் போறேன்… நீங்களும் அங்கதான் போகப் போறீங்க… அப்புறம் எதுக்காக தனித்தனியா போகணும்..? நானே ட்ரோப் பண்றேன்… வாங்க..” என மீண்டும் அழுத்தமான குரலில் அவன் அழைக்க,
“வாட் பஸ்ல கூட்டிட்டுப் போகப் போறீங்களா…? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..?” என அவன் கேட்க,
“குருஉஉ…” என அதட்டி அழைத்தாள் அபர்ணா.
“நீ வாய மூடு.. இல்லன்னா நான் மூட வைப்பேன்..” என்ற அவனுடைய கர்ஜனையில் அபர்ணாவின் வாய் தானாக மூடிக்கொண்டது.
“என்னோட பொண்டாட்டி இப்போ நிற மாசமா இருக்கா.. அவளால பஸ்ல ட்ராவல் பண்ண முடியாது.. அவள என்ன விட பத்திரமா வேற யாராலயும் கூட்டிட்டுப் போகவும் முடியாது.. நீங்க பிடிவாதம் பிடிச்சு பஸ்ல கூட்டிட்டுப் போய் அவளுக்கோ இல்லன்னா என்னோட குழந்தைக்கோ ஏதாவது ஆச்சுன்னா அவளோட அம்மா அப்பான்னு கூட பார்க்காம உங்க ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டுருவேன்… நான் நெனச்சா இங்க இருந்து கிளம்புற எந்த பஸ்ஸையும் நகர விடாம பண்ண முடியும்..
ஒழுங்கு மரியாதையா கார்ல ஏறுறீங்களா… இல்ல என்னோட பொண்டாட்டியைத் தூக்கிட்டு உங்களை இங்கேயே விட்டுட்டு நான் கிளம்பட்டுமா..?” என்றவன் அதிரடியாக அவளை இழுத்து தன்னுடைய கையணைப்பில் வைத்துக் கொள்ள அத்தனை பேரும் அதிர்ந்து பதறித்தான் போயினர்.
இவ்வளவு நேரமும் அமைதியாக பணிந்து போய் தலை குனிந்து நின்றவன் திடீரென அந்த இடமே அதிரும் வண்ணம் கர்ஜித்து ஆடிய ஆட்டத்தில் பத்மாவுக்கோ விழிகள் பிதுங்கியே விட்டன.
அவனோ தன்னுடைய கார்க் கதவைத் திறந்து வலுக்கட்டாயமாக அவளை தன்னுடைய காருக்குள் அமர்த்தியவன் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரின் ஆக்சிலேட்டரை அழுத்த இதற்கு மேலும் தாமதித்தால் எங்கே தன்னுடைய மகளை மட்டும் அழைத்துக் கொண்டு தங்களை அப்படியே விட்டு விட்டுச் சென்று விடுவானோ எனப் பயந்தவர்கள் எதுவும் கூறாது காரின் பின் இருக்கையில் அமைதியாக ஏறி அமர்ந்து கொண்டனர்.
அடுத்த நொடி காரை மிதமான வேகத்திலேயே செலுத்தத் தொடங்கினான் குரு.
உள்ளே இருக்கும் தன்னவளுக்கு எந்தவிதமான அசௌரியமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவன் வளைந்த வளைவுகள் நிறைந்த பாதைகளின் தொடக்கத்தில் காரை நிறுத்திவிட்டு அபர்ணாவின் சீட்டை சற்றே பின்புறம் சாய்த்து அவளை வசதியாக இருக்கச் செய்துவிட்டு மீண்டும் வண்டியை செலுத்தத் தொடங்க அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அபர்ணாவின் பெற்றோர்களின் மனம் சற்றே அமைதி அடைந்தது.
யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.
அவளுமே அவனுடைய கர்ஜனையில் மிரண்டுதான் போயிருந்தாள்.
காலைச் சுற்றும் பூனைக்குட்டி போல ஒரு நாள் முழுவதும் தன்னையே சுற்றிச் சுற்றி தன்னுடைய கடைக்கண் பார்வைக்காக ஏங்கித் தவம் கிடந்தவன் ஒரே நொடியில் அந்நியன் போல மாறி கத்திய கத்தில் பயந்துதான் போனாள்.
எப்படியும் கொழும்பு சென்றதும் அம்மா வீட்டிற்குத்தானே செல்லப் போகின்றோம் என்ற நிம்மதியில் அமர்ந்திருந்தவளுக்கு மெல்ல மெல்ல உறக்கம் தழுவிக் கொண்டது.
தன்னை மறந்து விழிகளை மூடி அவள் உறக்கத்தின் வசத்தில் ஆட்பட்டு விட அடிக்கடி அவளைப் பார்த்தவாறு காரை செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.
பின் இருக்கையில் அமர்ந்தவாறு அமைதியாக வந்து கொண்டிருந்தவர்களை நோக்கித் தன் பார்வையைத் திருப்பியவன் “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்ககிட்ட ரூடா பேசினதுக்கு சாரி அங்கிள்… சாரிம்மா.. முன்னாடி அபி விஷயத்துல நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்.. அது எனக்கே தெரியும்…. ஆனா இனி அவளோட விஷயத்துல சின்ன தப்புக் கூட பண்ணக் கூடாதுன்னு இருக்கேன்..” என்றவன் லாவகமாக அந்த வளைந்த சாலையில் காரை செலுத்த “எனக்கு புரியுதுப்பா..” என்றார் ரகுநாத்.
ஒரு மணி நேரத்தில் காரை நிறுத்தி அனைவருக்கும் உணவு வாங்கியவன் அதை பத்மாவின் கரத்தில் கொடுத்து,
“அம்மா இதை நீங்களே அவ எழுந்ததும் சாப்பிடக் கொடுத்துடுங்க.. நான் கொடுத்தா சாப்பிட மாட்டா..” என்றவன் அவர்களுக்கான உணவையும் கொடுத்துவிட்டு மீண்டும் காரை செலுத்தத் தொடங்கினான்.
சற்று நேரத்தில் அவள் எழுந்ததும் பத்மாவோ அவளுக்கு உணவைக் கொடுக்க மறுப்பேதும் கூறாமல் அந்த உணவை வாங்கி உண்டாள் அபி.
சில மணி நேரத்தில் கொழும்பை வந்தடைந்தவனுக்கு புருவங்கள் சுருங்கின.
காரை நேராக அபர்ணாவின் அன்னையின் வீட்டிற்குச் செலுத்தியவன் வீட்டை வந்தடைந்து காரை நிறுத்தியதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல வேகமாக காரை விட்டு இறங்கினாள் அபி.
“மாப்ள உள்ளே வாங்க..” என அழைத்தார் ரகுநாத்.
“நாங்க இன்னொரு நாள் வர்றோம் அங்கிள்.. அபி கிளம்பு… நாம நம்ம வீட்டுக்குப் போகலாம்..” என்றதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
மிரட்சியோடு திரும்பி அவனைப் பார்த்தவள்,
“நான் அங்க வரமாட்டேன்.. இங்கதான் இருக்கப் போறேன்..” எனக் கூற,
“இட்ஸ் ஓகே.. அப்போ நானும் என்னோட ட்ரஸ் எல்லாம் பேக் பண்ணி எடுத்துட்டு இங்கேயே வந்துடுறேன்… நம்ம ரூமை அரேஞ்ச் பண்ணி வை..” எனக் கூற அவளுக்கோ அவன் மீது ஏகத்துக்கும் சீற்றம் எகிறியது.
தன் பெற்றோரின் முன்பு விவாதிக்க விரும்பாதவள் அவனைத் திட்டத் துடித்த இதழ்களை அழுந்த மூடி அவனை வெறித்துப் பார்த்து விட்டு தன்னுடைய வீட்டிற்குள் வேகமாக நுழைந்து விட திகைத்துப் போய் அவனைப் பார்த்தவாறு நின்ற அவளுடைய பெற்றோர்களை நெருங்கியவன்,
“சாரி.. இதுக்கு மேல என்னால அவள விட்டுட்டு இருக்க முடியாது… இங்கிருந்து நான் போறதா இருந்தா அவ கூட தான் போவேன்..” என்றவன் அடுத்த நொடி அவளின் பின்னாலேயே அவள் சென்ற அறைக்குள் நுழைந்து அந்த அறையின் கதவைப் பூட்ட திகைத்துப் போய் அவனைப் பார்த்தவள்,
“ஐயோ என்ன பண்றீங்க..? உள்ள அக்கா இருக்காங்க…” என அங்கே நின்ற சாதனாவைக் கண்டு திகைத்தவாறு கூற,
“சாரி சிஸ்டர்… கொஞ்ச நேரம் நீங்க வெளிய இருக்க முடியுமா..? நான் என்னோட வைஃப் கிட்ட கொஞ்ச நேரம் தனியா பேசணும்..” என இவன் கூற சாதனாவும் விட்டால் போதும் என வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் வெளியே சென்றதும் மீண்டும் அந்த அறைக் கதவைப் பூட்டி விட்டு அவளை ஆழ்ந்து பார்த்தான் அவன்.
“உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..? எதுக்காக இப்படி சைக்கோ மாதிரி பண்றீங்க..? எனக்குத்தான் உங்க கூட வாழ ஆசை இல்லைன்னு சொல்லிட்டேனே… என்னை நிம்மதியா இருக்க விட வேண்டியது தானே…?”
“அவ்ளோ சீக்கிரமா என்னால உன்ன விட முடியாது அபி..”
“விட முடியாதா ஏதோ ரொம்ப நல்ல புருஷன் மாதிரி பேசுறீங்க.. நீங்க எனக்கு பண்ணதெல்லாம் மறந்து போச்சா..?”
“நாம் பண்ணினது தப்புதான்டி, ஆனா அதுக்காக உன்னை விட்டுட்டு விலகி இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லையே..”
ஐயோ கடவுளே ஏன் இப்படி படுத்தி எடுக்குறீங்க..? அக்காவே அந்த அயோக்கியன் கூட வாழ முடியாதுன்னு பிரிஞ்சு வந்துட்டாங்க…. அவங்க முன்னாடி இப்படி உள்ள வந்து கதவைப் பூட்டுறீங்களே அவங்க மனசு கவலைப்படாதா…?” என தன் சகோதரிக்காக நினைத்து வேதனை குரலில் கேட்டாள் அவள்.
“நீ நம்ம வீட்டுக்கு வரலைன்னா நான் இங்கேயே தங்க வேண்டி வரும்… அப்போ உன்னோட சிஸ்டரோட மனசு கஷ்டப்படாதா..? அதனாலதான் சொல்றேன் நீ கிளம்பி நம்ம வீட்டுக்கு வா…..”
சே…!!
தன் தலையைப் பற்றிக் கொண்டவள்,
“சரி நான் உங்க வீட்டுக்கு வரேன்.. இந்த குழந்தைக்காகத்தானே இவ்வளவு பாடு படுறீங்க..? இவனைப் பெத்து உங்க கைல கொடுக்கிறேன்… நீங்க ஆம்பள தான்னு ஊருக்கே சொல்லி பெருமைப் பட்டுக்கோங்க… அதுக்கு அப்புறமா நான் இங்கே வந்துருவேன்…. என்னையோ என் பையனையோ நீங்க இனி தொல்லை பண்ணவே கூடாது…” என அவள் கூற,
இப்போதைக்கு அவளை அழைத்துச் சென்றால் மட்டும் போதும் என எண்ணியவன் அவளை அழைத்துச் செல்வதற்காக சரி என்றான்.
எரிச்சலோடு வேறு வழி இன்றி வந்த வேகத்தில் அந்த வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய தந்தையை நோக்கிச் சென்றவள்,
“அப்பா அவரோட குழந்தை பிறந்து கொஞ்ச நாளைக்கு அப்புறமா இங்க வரேன்… அதுவரைக்கும் அங்கேயே இருக்கேன்… நான் அங்க போகலைன்னா இவர் இங்க இருந்து போக மாட்டாரு…” என வேறு வழி இல்லாமல் கூற,
“அவன் மிரட்டுறான்னு நீ பயப்படாதம்மா… நாம வேணும்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்..” என்ற அன்னையைப் பார்த்து இயலாமையோடு தலையசைத்தவள்,
“ஆறு மாசம் அவர் கூட வாழ்ந்த அனுபவத்துல சொல்றேன்மா… போலீஸாலையோ வேற யாராலையோ நமக்கு உதவி பண்ண முடியாது… அவரோட தேவை முடியும் வரைக்கும் அவர் கூட இருந்தாலே போதும்.. அதுக்கப்புறமா அவரே அனுப்பி வெச்சிடுவாரு…” எனக் குத்தல் மொழியாகக் கூறியவள் வெளியே வந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சாதனாவை அணைத்து விடுவித்துவிட்டு அமைதியாக சென்று அந்தக் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
பத்மாவின் விழிகளிலோ தன் மகளை எண்ணி கண்ணீர் நிறைந்தது.
“எந்தத் தப்பும் நடக்காதுமா.. இந்த முறை நான் உங்களுக்கு வாக்கு கொடுக்கிறேன்… அவளை என்னோட குழந்தை மாதிரி பாத்துப்பேன்… அபியை பாக்கணும்னா நீங்க எப்ப வேணும்னாலும் நம்ம வீட்டுக்கு வரலாம்..” என வெளியே நின்றவர்களிடம் கூறியவன் தலையை அசைத்து விட்டு தன்னுடைய காரில் ஏறி காரை செலுத்தத் தொடங்கினான்.
அக்கணம் அவனுடைய மனதில் மெல்லிய சாரல் வீசியது.
குருவின் மனநிலைக்கு எதிர் மாறான மனநிலையில் இருந்தாள் அவள்.
எப்போதும் இவன் தன்னை அவனுடைய விருப்புக்கு ஏற்றவாறு ஆட்டிப்படைத்துக் கொண்டே இருக்கிறான் என எண்ணி எரிச்சலாக இருந்தது அவளுக்கு.
அவனோ வீட்டிற்கு செல்கிறான் என எண்ணியிருந்தவள் நேராக அவன் மருத்துவமனையில் வண்டியை நிறுத்தியதும் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
“அபிமா ஆர் யூ ஓகே..? உனக்கு டயர்டா இருக்கா..?” எனக் கேட்க, இல்லை எனத் தானாக ஆடியது அவளுடைய தலை.
“ஓகே குட்… என்கூட வா… இங்க கொஞ்ச பேருக்கு என்னோட ஸ்டைல்ல வைத்தியம் பார்க்க வேண்டி இருக்கு..” என்றவன் கண்டியில் பரிசோதித்து எடுத்து வைத்திருந்த அவளுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு அவளுடைய கரத்தைப் பிடித்து அழைத்தவாறு அந்த மருத்துவமனைக்குள் நுழைய “பிரச்சனை வேணாம் குரு..” என படபடப்போடு கூறினாள் அவள்.
அவனோ அவள் கூறியதை கவனத்தில் கொள்ளாது அடங்காத ஆத்திரத்தோடு அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தான்.
💜🔥💜
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.8 / 5. Vote count: 123
No votes so far! Be the first to rate this post.
Post Views:1,694
2 thoughts on “53. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”
Deepti
Wowwwwwww semaaaaa lovlyyyyyyyyyy nd awesome epiiii super guruuuuuu……
Wowwwwwww semaaaaa lovlyyyyyyyyyy nd awesome epiiii super guruuuuuu……
Super sis 💞