சொர்க்கம் – 55
ஒரே ஒரு புகைப்படம் அவனுடைய மனதை சுக்குநூறாக நொறுக்கி விட்டிருந்தது.
அவளை முதல் முறை பட்டுப் புடவையில் பார்க்கின்றான்.
தலை நிறைய மல்லிகைப் பூவைச் சூடி அழகில் தேவதையாக மிளிர்ந்து கொண்டிருந்தவளை என்றும் போல் இன்று அவனால் இரசிக்க முடியவில்லை.
கை கால்கள் எல்லாம் அவனுக்கு உதறத் தொடங்கியது.
அவளுடைய கழுத்தில் இருப்பது தாலிக்கயிறு தானே..?
திருமணம் முடிந்து விட்டதா..?
அதுவும் அவளுக்கும் அந்த வீணாப்போனவனுக்கும்..!
ஒரு போதும் இனி திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்றல்லவா என்னிடம் கூறினாள்.
இப்போது ஏன் இப்படி.?
அவளுக்கு என்னுடைய நினைவு வரவே இல்லையா..?
அவளைத் திருமணம் செய்து கொள்வதாக நான் கேட்டிருந்தேனே.
என்னுடைய மாற்றம் அவளுடைய மனதைத் தொடவே இல்லையா..?
என்னுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்துவிட்டு எப்படி இன்னொருவனை அவளால் திருமணம் செய்து கொள்ள முடிந்தது..?
நோ..
இருக்காது..
யாரோ போட்டோஷாப் செய்து இந்த ஃபோட்டோவை தனக்கு அனுப்பி இருக்கக் கூடுமோ..?
விழிகளில் கண்ணீர் வழிந்து அவனுடைய கரத்தில் விழுந்தது.
திடுக்கிட்டுப் போனான் அவன்.
அழுகின்றேனா..?
இன்னும் நன்றாக வாய்விட்டுக் கதறி அழவேண்டும் போலத்தான் இருந்தது.
ஆனால் இந்தப் புகைப்படத்தில் அவனுக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லை.
அவளுடைய குணத்தைப் பற்றி நன்கு அறிந்தவனாயிற்றே.
அவள் ஒருபோதும் பணத்திற்கோ வேறு எதற்குமோ மயங்கும் ரகம் அல்லவே.
அவள் நேர்மையின் சின்னம்.
ஒருபோதும் வேறு ஒருவனைத் திருமணம் முடிக்க அவள் சம்மதிக்கவே மாட்டாள் என நினைத்துக் கொண்டவன் தன்னுடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
அதே கணம் அவனுடைய பிஏவிடமிருந்து அவனுக்கு இன்னொரு போட்டோ வந்திருப்பதாக குறுஞ்செய்தி உணர்த்த,
அதனைத் திறந்து பார்த்தவனுக்கு இதயமே நின்றுவிடும் போலத்தான் இருந்தது.
கழுத்தில் தாலியோடு கௌதமனின் மார்பில் சாய்ந்து இருந்தாள் செந்தூரி.
இருவரும் கோயிலில் அணைத்தவாறு நின்றிருந்த அந்தப் புகைப்படத்தைக் கண்டு இவனுக்கு இரத்த நாளங்கள் வெடிப்பது போலாயின.
நொடியும் தாமதிக்காது தன்னுடைய பிஏவை அழைத்தவன் அவன் அழைப்பை ஏற்றதும்,
“நீ அனுப்பின போட்டோ நிஜமா..?” எனக் கேட்டான்.
இல்லை இல்லை கர்ஜித்தான்.
“ஆமா சார்.. இப்போ இந்த போட்டோதானே ரொம்ப வைரலா இன்ஸ்டா முழுக்க சுத்திட்டு இருக்கு..
கோயிலுக்கு போன யாரோ ஒருத்தர் இவங்களைப் பாத்து போட்டோ எடுத்து சோஷியல் மீடியால அப்லோட் பண்ணி இருக்கணும்னு நினைக்கிறேன்.. அது வைரலாகி இப்போ எல்லா இடத்திலையும் சுத்திட்டு இருக்கு..
அவங்க உங்களோட படத்துல நடிக்கிற ஹீரோயின்னு எல்லாருக்குமே தெரியும்தானே சார்.. அதனாலதான் இவ்வளவு தூரத்துக்கு ட்ரெண்டாயிருக்கு..” என அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
விநாயக்தான் ஆத்திரத்தில் ஃபோனை அப்படியே தூக்கி சுவற்றில் எறிந்து அதை நொறுக்கி விட்டிருந்தானே.
அப்புறம் எப்படி அவனுடைய பிஏவால் விநாயக்குடன் தொடர்ந்து பேச முடியும்..?
உடைந்து சிதறிய ஃபோனை வெறித்துப் பார்த்தவன் அப்படியே மண்டியிட்டு தலையைப் பற்றியவாறு தரையில் அமர்ந்து விட்டான்.
அடுத்து என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை.
தலையைக் கொண்டு போய் சுவற்றில் மோத வேண்டும் போல இருந்தது.
ஏமாந்து போன உணர்வை அவனால் தாங்கவே முடியவில்லை.
அந்தப் புகைப்படத்தில் அவன் அவளுக்கு அணிவித்துவிட்ட சங்கலியும் கழுத்தில் இருக்கின்றதே.
அதை அவன் தாலியாகத்தானே எண்ணினான்.
ஆதலால்தானே கௌதமிடமிருந்து பிடுங்கி வந்து மீண்டும் அவளுக்கு அணிவித்து விட்டான்.
நான் கட்டிய தாலி அவளுடைய கழுத்தில் இருக்கும் போது இன்னொருவனின் தாலியை அவளால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிந்தது..?
சில நொடிகள் கூட என்னுடைய முத்தம் அவளைத் தடுக்கவில்லையா..?
ஒரு நொடியேனும் என்னுடைய அணைப்பு அவளுக்கு நினைவில் வரவே இல்லையா..?
திருமணத்தைப் பற்றி நான் பேசியதை எல்லாம் மறந்து போய்விட்டாளா..?
எப்படி எப்படி அவளால் முடிந்தது..?
நான் அவளை அழைத்து வந்து வேதனைப்படுத்தி இருக்கின்றேன்தான்.
ஆனால் ஒவ்வொன்றாக அதை திருத்திக் கொள்ள முயன்றேனே.
அதையெல்லாம் நினைத்து என்னை ஒதுக்கி விட்டாளா..?
என்னுடைய காதல் ஆரம்பித்த உடனே கருகிவிட வேண்டுமா என்ன..?
அவனை அறியாமலேயே கண்ணீர்த் துளிகள் வேகமாக வழிந்த வண்ணமே இருந்தன.
சட்டென தன் புறங்கையால் கண்ணீரைத் துடைத்துவிட்டு எழுந்து கொண்டவன் நடந்ததை நேரில் சென்று அறிந்து கொள்ள வேண்டும் என நினைத்தான்.
அதற்கு முன்னர் இப்படிச் சிறுவன் போல குலுங்கிக் குலுங்கி அழுவதில் எந்தப் பயனும் இல்லை.
இல்லை அழுது வடியும் அளவிற்கு நான் ஒன்றும் கோழை இல்லை.
ஒருபோதும் அவள் இந்தத் திருமணத்திற்கு சம்மதம் கூறி இருக்கவே மாட்டாள்.
அடுத்த நொடியே தன்னுடைய கார் சாவியை எடுத்துக் கொண்டவன் வேகமாக அவளுடைய வீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.
அவன் சென்ற வேகத்திற்கு குறுக்கே எந்த வாகனம் வந்தாலும் அடித்து நொறுக்கி விடுவது போல இருந்தது அவனுடைய வேகம்.
****
கௌதமனின் ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்தவளுக்கு மனதின் படபடப்பு சற்றும் குறையவே இல்லை.
அவளுடைய மனமோ விநாயக் தன்னை காதலித்திருக்கக் கூடாது என இறைவனை அக்கணமும் பிரார்த்தித்துக் கொண்டது.
அவனுடைய மனதை காயப்படுத்த அவள் விரும்பவில்லை.
அதே நேரம் இந்த பழிவாங்கலையும் அவள் சற்றும் விரும்பவில்லை.
கௌதமுக்காக அவன் கேட்ட அனைத்தையும் பண்ணியவள் தன் கழுத்தில் தொங்கிய தாலியை குனிந்து பார்த்தாள்.
“டேய் கௌதம்.. நான் இத இப்போ கழட்டிடவா..?”
“எதை..?”
“இ.. இந்தத் தாலியை..”
“வீட்டுக்குப் போனதும் சாமிப் படத்துல கழட்டி வெச்சிடு சிந்து..” என்றான் அவன்.
அதே கணம்,
“கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா..? இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா..” என்ற ரிங்டோன் கௌதமனின் அலைபேசியில் அலற,
அவனுடைய முதுகில் பட்டென அடித்து விட்டாள் செந்தூரி.
“டேய் என்னடா பாட்டு வச்சிருக்க..? எரும எரும..”
“ஹா ஹா.. அடியே ஒரு மாசமா நான் இந்த ரிங்டோன்தான்டி வச்சிருக்கேன்… பட் நம்ம சிட்டுவேஷனுக்கு செம்மையா சூட்டாகுதுல்ல..?” எனக் கூறிச் சிரித்தவன் மீண்டும் ஒரு அடியை அவளிடம் பரிசாக வாங்கிவிட்டு ஸ்கூட்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான்.
“ஸ்ஸ் ஆஆஆ.. அடிக்காதடி ராட்சசி.. என் ப்ரண்டு கால் பண்றான்..”
“எதே ப்ரண்டா…? என்னத் தவிர வேற யாரும் உனக்கு ப்ரண்டே இல்லைன்னு சொன்ன.. அப்போ அதெல்லாம் பொய்யா..?” எனக் கேட்டாள் அவள்.
“ஷுட்டிங் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் செட்ல ஜீவான்னு ஒருத்தன் ரொம்ப நல்ல பையன்.. முறைக்காதடி.. உன் அளவுக்கு எல்லாம் க்ளோஸ் ஃப்ரெண்ட் கிடையாது.. ஜஸ்ட் ஃப்ரெண்ட்..” என்றவன் அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்து “சொல்லு மச்சான்..” என்றான்.
மறுபக்கம் கௌதமனின் நண்பன் என்ன கூறினானோ கெளதமின் உடல் இறுகி விறைத்து விட அவனையே பார்த்துக் கொண்டிருந்த செந்தூரிக்குப் புருவங்கள் சுருங்கின.
“என்னடா சொல்ற..?” என தன்னை மீறிக் கத்தியவன் கரங்கள் நடுங்க அந்த அழைப்பைத் துண்டித்து விட்டு செந்தூரியைப் பார்த்தான்.
“என்னாச்சு கௌதம்.. ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க..? ஹேய் என்னன்னு சொல்லுடா…” என படபடத்தாள் செந்தூரி.
“நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நினைச்சு விஷ் பண்றான்டி… நாம கோயில்ல ஒன்னா இருந்த போட்டோவை யாரோ எடுத்து சோஷியல் மீடியால அப்லோட் பண்ணிட்டாங்களாம்.. அது ரொம்ப வைரலா போயிட்டு இருக்குன்னு ஜீவா சொல்றான்டி..” என அவனும் அவளுக்குக் குறையாத பதற்றத்துடன் கூறியவன் வேக வேகமாக தன்னுடைய ஃபோனை எடுத்து இன்ஸ்டாவைத் திறக்க அவனையும் டேக் செய்து யாரோ ஒரு நபர் அந்தப் போட்டோவை பதிவிட்டிருந்தான்.
தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அதிகமானோர் ஷேர் செய்து வைத்திருக்க இவனுக்கோ தொண்டைக் குழிக்குள் பயப்பந்து உருள்வதைப் போல இருந்தது.
செந்தூரிக்கு உடல் நடுங்கி விட்டது.
வேகமாக அவனுடைய கரத்தில் இருந்த ஃபோனைப் பறித்துப் பார்த்தவள்,
‘புதுமண ஜோடி..’ என்ற கேப்ஷனுடன் அவர்களுடைய புகைப்படம் இருப்பதைக் கண்டு பதறிவிட்டாள் அவள்.
அவர்களுடைய விளையாட்டு வினையாகி விட்டிருந்தது.
இதில் விநாயக்கின் ரசிகர்கள் வேறு இந்த புது ஹீரோயின் விநாயக்கிற்கு துரோகம் செய்துவிட்டாள் என இஷ்டத்திற்கு விமர்சனங்களை அள்ளிக் குவித்து வைத்திருக்க கண்ணீரோடு அவனுடைய கரத்தில் ஃபோனைத் திணித்தவள்,
“இப்போ என்னடா பண்றது..?” என நடுக்கத்துடன் கேட்டாள்.
“இங்க ரோட்ல நின்னு எதையும் பேச வேணாம்.. முதல்ல வீட்டுக்குக் கிளம்பலாம் சிந்து.. வா..” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு அவளுடைய வீட்டை நோக்கி வேகமாக செல்லத் தொடங்கியிருந்தான்.
அவனுடைய மனம் உறுத்தத் தொடங்கியது.
தங்களுக்குள் நடந்து முடிந்துவிடும் என எண்ணி செய்த செயல் இப்படி உலகிற்கு வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டதே.
அதுவும் தவறாக அல்லவா பரவி இருக்கிறது.
இதனால் செந்தூரிக்கும் தனக்கும்தான் பாதிப்பு என்பதை உணர்ந்து கொண்டவன் செந்தூரியின் வீட்டின் அருகே விலை உயர்ந்த கார் நிற்பதைக் கண்டு திகைத்தான்.
“சிந்து உங்க வீட்டுக்கு யாரோ வந்திருக்காங்க..”
அவளோ அங்கு நிற்கும் காரைக் கண்டதும் பதறிப் போனவள் வேகமாக அவனுடைய ஸ்கூட்டியில் இருந்து இறங்கினாள்.
“உனக்கு அது யாருன்னு தெரியுமா..?”
“வி.. விநாயக்..” என்றவளுக்கு இதயம் வாய்க்குள் வந்து தன் துடிப்பைத் தொடர்ந்தது.
“பயமா இருக்குடா..”
“நான்தான் சொன்னேன்ல.. என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன்.. பயப்படாத.. நான் அனுப்பின மெசேஜ்கு ஏதாவது திட்டி ரிப்ளை அனுப்புவான்னு நினைச்சேன்.. ஆனா நமக்கு முன்னாடியே உன்னோட வீட்டுக்கு வந்து நமக்காகக் வெயிட் பண்ணிட்டு இருப்பான்னு சத்தியமா எதிர்பார்க்கலடி..” என்றவன் அவளுடைய கரத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.
அவளுக்கு அவனுடைய இறுகிய பிடி அக்கணம் அவசியமாகத்தான் இருந்தது.
இல்லாவிட்டால் எங்கே அச்சத்தில் மயங்கி விழுந்து விடுவோமோ என்று கூட அவளுக்கு தோன்றத் தொடங்கி விட்டிருந்தது.
நடுங்கிய கரங்களில் தன்னுடைய வீட்டின் திறப்பை எடுத்து கௌதமிடம் கொடுத்தவள் “வீட்டைப் பூட்டிட்டுதான் வந்தேன்.. அவன் காருக்குள்ள இருப்பான்னு நினைக்கிறேன்..” என்ற அவளுடைய வாக்கியத்தை பொய்யாக்கி விட்டு அவளுடைய வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருந்தான் விநாயக்.
“வா கௌதம் இப்படியே ஓடிப் போயிடலாம்..” என்றவளைப் பார்த்து கௌதமுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
இந்த அளவிற்கா தன்னுடைய தோழியை அவன் பயமுறுத்தி வைத்திருக்கின்றான்..?
“நாம ஏன் ஓடணும்..? நாம என்ன தப்பு பண்ணினோம்..? கல்யாணம் பண்றது பண்ணாதது நம்ம முடிவு.. அதுல எவனும் தலையிட முடியாது.. நீ வா… நான் பாத்துக்குறேன்…” என்றவன் திறந்திருந்த வீட்டுக்குள் அவளை அழைத்துச் செல்ல அங்கு ஒற்றைக் கையால் தன்னுடைய நெற்றியை அழுத்தி விட்டவாறு அமர்ந்து இருந்தவன் கழுத்தில் தாலியுடன் கௌதமனின் கரத்தோடு கரம் கோர்த்து உள்ளே வந்த செந்தூரியைக் கண்டு உயிரோடு மாண்டு போனான்.
விழிகள் சிவந்து போயின.
Rendu nala ethir parthute iruthen sis Rendu epi yavathu poturukalam 😔💕💕💕💕
Super and waiting for next epi sis