“குரு கண்ணாஆஆ எங்கப்பா இருக்க..? சீக்கிரமா வா சாப்பிடலாம்…” என அழைத்தார் குருஷேத்திரனின் அன்னை தேவி.
“இதோ மா பூஜை பண்ணிக்கிட்டு இருக்கேன்… டூ மினிட்ஸ்ல வரேன்..” என்றான் குரு.
சொன்னதைப் போலவே இரண்டு நிமிடத்தில் கையில் விபூதியோடு வெளியே வந்து தன்னுடைய அன்னைக்கு நெற்றியில் விபூதியைப் பூசியவன்,
“குட் மார்னிங் மா..” என வாய் நிறைய சிரிப்போடு கூற, அவனைப் பார்த்ததும் அந்த அன்னையின் முகத்திலோ புன்னகை பூத்தது.
இன்றாவது தன்னுடைய காதலைப் பற்றித் தன் அன்னையிடம் கூறிவிட வேண்டும் என வந்திருந்த குருவுக்கு அத்தனை தயக்கமாக இருந்தது.
இதோ அவனுக்கு 26 வயது ஆரம்பித்திருந்த போதும் கூட இன்னும் அவன் அன்னைக்கு கட்டுப்பட்ட செல்ல மகன்தான்.
சிறுவயதிலேயே விபத்தொன்றில் அவன் தன் தந்தையை இழந்து விட அதன் பின்னர் அவனுக்கு தாயும், தந்தையுமாக மாறிப் போனார் தேவி.
மொத்த பிஸ்னஸையும் தான் ஒருவரே சமாளித்தவர் குருவுக்கு அப்பா இல்லை என்ற ஏக்கம் தெரியக்கூடாது என மிகுந்த அன்போடும் கண்டிப்போடும் வளர்த்து இருந்ததன் விளைவு அமைதியான அதட்டிப் பேசினால் கூட அழுது விடும் சுபாவம் உள்ள பிள்ளையாக வளரத் தொடங்கினான் அவன்.
கோபத்தில் யாராவது திட்டி விட்டுச் சென்றாலும் ஏன் அடித்தால் கூட அமைதியாக கண்ணீரோடு கடந்து விடுவான் சிறு வயது குருஷேத்திரன்.
அவனுடைய அந்தப் பழக்கமே அவனுடைய இளம் வயதிலும் தொடர்ந்து விட கோபம், திமிர், தீய பழக்கங்கள் என எதுவுமே அவனிடம் இல்லாமலேயே இருந்தது.
தன்னுடைய 25ஆவது வயதிலிருந்து அன்னையுடன் அவர்களுடைய அலுவலகத்திற்கு செல்லத் தொடங்கியவனுக்கு அப்போதுதான் தாராவை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
தாராவின் தந்தையும் குருவின் அன்னையும் பிஸ்னஸ் பார்ட்னராக இருந்தது அவர்கள் இருவரும் சந்திப்பதற்கு இலகுவாகப் போய்விட சிறிது காலத்திலேயே தாராவிற்கு அழகான ஆண்மகனாய் அதட்டிக் கூட பேசத் தெரியாத அந்தக் கோடீஸ்வரன் மீது பார்வை விழுந்து விட அவளோ அவனைக் காதலிக்கத் தொடங்கினாள்.
பெண்களுடன் பேச மறுக்கும் குணம் கொண்டவனோ ஆரம்பத்தில் தாராவை விட்டு விலகிச் செல்ல அவனைத் துரத்தித் துரத்திக் காதலித்து தன்னுடைய காதலுக்குப் பச்சை கொடியும் பறக்கவிட்டு சாதித்தாள் தாரா.
இதோ அவர்கள் காதலிக்கத் தொடங்கி பல மாதங்கள் கடந்து விட்டிருந்தன.
இன்றாவது தன்னுடைய அன்னையிடம் தன் காதலைப் பற்றிக் கூறிவிட வேண்டும் என எண்ணியிருந்தவனுக்கு அச்சம் பிறந்து விட தயங்கித் தயங்கி அவர் அருகே நின்றவனை,
“என்னடா கண்ணா எதுக்காக அப்படி பாத்துக்கிட்டே இருக்க சாமி கும்பிட்டதானே..! வா வந்து சாப்பிடு..” என அவர் அழைக்க,
“ஒன்னும் இல்லம்மா சரி வாங்க சாப்பிடலாம்..” என மென்மையான குரலில் கூறியவன் அவருடன் இணைந்து உணவை உண்டு முடித்தான்.
தாரா இன்று வெளியே செல்லலாம் என்று அழைத்திருக்க எப்படி தாயிடம் பொய் கூறிவிட்டு செல்வது எனத் தயங்கியவன், செல்லவில்லை என்றால் அவள் கவலைப்படுவாளே என்ற காரணத்தினால் பொய் கூறவும் முயன்றான்.
“அம்மா என்னோட ஃப்ரெண்ட் பிரபுக்கு இன்னைக்கு பர்த்டே நான் போயிட்டு வரட்டுமா..?” என சிறுவன் போல அவன் அனுமதி கேட்டு நிற்க,
அந்தத் தாய்க்கோ உள்ளம் இளகியே போனது.
“தாராளமா போயிட்டு வாப்பா இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடணும்..” என அவர் பெண்பிள்ளைக்குக் கூறுவது போல கூறி அனுப்ப சரியெனத் தலை அசைத்தவன் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு தாராவின் பீச் ஹவுஸை நோக்கி செல்லத் தொடங்கினான்.
அங்கே தானே அவள் அவனுக்காகக் காத்திருப்பாள்.
அன்னையை ஏமாற்றுகிறோமோ என்ற குற்ற உணர்ச்சி அவனை ஏதோ செய்தது.
இதுவரை பொய் சொல்லி ஏமாற்றிப் பழக்கம் இல்லாதவன் கொஞ்சம் பதற்றமான மனநிலையிலேயே அங்கே செல்ல அவனை ஆர்ப்பாட்டமாக வரவேற்றாள் தாரா.
அவளைக் கண்டதும் அவனுக்கோ கண்கள் கனிந்து போயின.
தன்னுடைய தாய்க்குப்பின் அவன் உயிரையே வைத்து நேசிக்கும் ஒரு பெண் என்றால் அது இவள்தானே.
“ஹேய் ஷேத்ரா… வா..” என ஆர்ப்பாட்டமாக அழைத்தவளைக் கண்டு இவனுக்கு உள்ளம் மகிழ்ச்சியில் பொங்க,
“ஏய் அம்மாதானே அம்மாகிட்ட என்ன பயம்..? என் கேர்ள் பிரண்ட பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு வந்தா குறைஞ்சா போயிடுவ..” எனச் சற்றே சிடு சிடுத்தாள் அவள்.
அவளுடைய கோபமான பேச்சில் அவனுக்கோ முகம் வாடியது.
“சாரி தாரு… அம்மாவை எப்படி எதிர்த்துப் பேச முடியும்..?” எனச் சிறு பையனைப் போல கேட்டவனின் மீது கோபம் கொள்ள முடியாது சிரித்தவள்,
“அச்சோ நீ ரொம்ப ஸ்வீட்..” என அவனுடைய கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்ச இவனுக்கோ முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.
“ஹேய் நாளைக்கு என்னன்னு உனக்கு ஞாபகம் இருக்கா..?” என அவள் சிரித்தவாறு கேட்க,
“உன்னோட பர்த் டேய நான் மறப்பேனா..? எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு தாரு…” என்றவனின் அருகே நெருங்கி அமர்ந்தவள் அவனுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு,
“இன்னைக்கு நைட் உன் கூட என்னோட பர்த்டே செலிப்ரேட் பண்ணலாம்னு இருக்கேன்.. நீ இங்கேயே ஸ்டே பண்ணிடு..” என கண்களில் ஆசை மின்ன அவள் கூற,
அவனோ அடுத்த நொடியே அதை மறுத்தான்.
“ஏய் நாம ரெண்டு பேரும் ஒரே வீட்ல தனியா எப்படி இருக்கிறது..? நைட்டாகறதுக்குள்ள அம்மா வீட்டுக்கு வந்துடணும்னு சொல்லித்தான் அனுப்பி வச்சாங்க… நான் சீக்கிரமே கிளம்பனும் தாருமா… நாளைக்கு காலையிலேயே உன்ன பாக்க வரேன்… உன்னோட பர்த் டேவ ரொம்ப கிராண்டா செலிப்ரேட் பண்ணலாம்..” என தன் கையைப் பிடித்திருந்தவளின் கரத்தைப் பற்றியவாறு அவன் கூறினான்.
இவளுக்கோ நொடியில் முகம் மாறியது.
“அவ்வளவுதானா..? அப்ப நான் உனக்கு முக்கியமே இல்லையா..? உனக்கு அம்மா மட்டும்தான் முக்கியமா ஷேத்ரா…? மத்த லவ்வர்ஸ்லாம் எப்படி இருக்காங்கன்னு தெரியுமா..? ஆனா நீ மட்டும் ஏன் இப்படி இருக்க..? என் மேல உனக்கு ஆசையே இல்லையாடா…?” என அவள் சற்றே தவிப்போடு கேட்க அவனுக்கோ உள்ளம் உருகியே போனது.
“என்னம்மா இது..? உன் மேல ஆசை இல்லாம இருக்குமா..? ஆனா எல்லாத்துக்கும் கால நேரம் வரத்தானே வேணும்… கூடிய சீக்கிரமே அம்மாகிட்ட நம்ம லவ்வைப் பத்தி பேசுறேன்… அதுக்கு அப்புறமா உங்க அப்பாகிட்டையும் பேசி சம்மதம் வாங்கலாம்..” என்றவனைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள்
“இன்னைக்கு நீ என் கூடதான் இருக்கணும் ஷேத்ரா.. என்னோட பர்த்டே இன்னைக்கு உன்கூடதான் ஆரம்பிக்கணும்…. ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லாதடா…”
“ஆ… ஆனா அது தப்புடி…”
“ப்ச்…. எந்தக் காலத்துலடா இருக்க..? அவனவன் லிவிங் ல வாழ்றாங்க… ஜஸ்ட் நாம பர்த்டே செலிப்ரேஷன் பண்ணலாம்னு தானே கேட்கிறேன்…. எல்லா பொண்ணுங்கள மாதிரியும் எனக்கும் என்னோட லவ்வர் கூட இருக்கணும்னு ஆசை இருக்காதா..? உன்ன ஹக் பண்ணனும்… உன்னோட நெஞ்சுல சாயணும்.. உன்னோட கைய புடிச்சுகிட்டு இரவு முழுக்க பேசிக்கிட்டே இருக்கணும்னு எனக்கும் ஆசை இருக்கும் தானே… ஏன் ஷேத்ரா அந்த ஆசை எல்லாம் உனக்கு இல்லையா..? என்கூட நீ எங்கேயுமே வெளியே வர்றதில்லையே…. ஏன்னு கேட்டா அம்மா திட்டுவாங்க ஆட்டுக்குட்டி திட்டுவாங்கன்னு சொல்ற…. பொண்ணு மாதிரி பிஹேவ் பண்ணாதடா. கொஞ்சமாவது ரகடா இரு…” என்றாள் அவள்.
“நல்ல பையனா இருந்தா உடனே பொண்ணு மாதிரின்னு சொல்லிடுவீங்களே..?” என அவன் சிரித்தபடியே கேட்க அவனுடைய கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சியவள்,
“நீ நல்ல பையன் இல்லடா… ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பபபபபப நல்ல பையன்….” என்றாள்.
“ஹா ஹா..” சிரித்தான் குருஷேத்திரன்.
அதன் பின்னர் அவளுடைய காதலில் அவனும் அவனுடைய காதலில் அவளும் மூழ்கிப் போக நேரம் போனதே இருவருக்கும் தெரியவில்லை.
மதிய உணவை இருவரும் உண்டு முடித்துவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தனர்.
நேரம் அவர்களுக்கு மிக வேகமாக கழியத் தொடங்கியது.
அவளோ மெல்ல எழுந்து சோபாவில் அமர்ந்திருந்தவனின் மடியில் வந்து அமர்ந்து கொள்ள அவனுக்கோ இதயம் தாறுமாறாக துடிக்கத் தொடங்கியது.
“தாரா…” என மெல்ல அழைத்தவனுக்கு உடலில் படபடப்பு கூடிப் போக,
அவளோ அவனுடைய கழுத்தை வளைத்து அவனுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தவள்,
“இதுவரைக்கும் உனக்கு நான் மட்டும்தான் கிஸ் பண்ணி இருக்கேன்… நீ என்ன கிஸ் பண்ணதே கிடையாது…. இன்னைக்கு நீதான் பண்ணணும் கமான் கிஸ் மீ…” என்க,
அவனுடைய பார்வையோ அவன் தன் கரத்தில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தின் மீது பதிந்து மீண்டது.
நேரம் சென்று கொண்டே இருக்கிறது என்பதை உணர்ந்தவன் ஆசையாய் அவளைப் பார்த்தான்.
அவனுக்குள்ளும் ஆசைகள் இருக்கும் தானே..?
அதுவும் அவன் உயிராக காதலிக்கும் காதலி மீது ஆசை இல்லை என்றால்தான் அதிசயம்..
இவ்வளவு நாட்களும் மறுத்தவன் இன்று அவளுடைய நெருக்கத்தில் மறுக்க முடியாது பட்டும் படாமலும் அவளுடைய கன்னத்தில் மெல்ல முத்தத்தை பதித்து விட்டு விலகிக் கொள்ள,
“ப்ச்… என்னடா இது..? சின்ன பசங்களுக்கு கிஸ் பண்ற மாதிரி பண்ற..? இப்படித்தான் லவ்வருக்கு கிஸ் பண்ணுவாங்களா..? இங்க பண்ணு…” என்றவள் தன்னுடைய உதட்டை சுட்டிக் காண்பிக்க தடுமாறிப் போனான் அவன்.
“அவசரப்படாத தாரா… இப்போ நான் கிளம்புறேன்… டைம் ஆயிருச்சு வீட்டுக்குப் போகணும்….” என தன் மடி மீது இருந்தவளை எழும்பும் படி கூற
அவளுக்கோ ஏமாற்றமாகிப் போனது.
“சரி போ… உனக்கு என் மேல கொஞ்சம் கூட ஆசையே இல்லல்ல.? நீ என்ன லவ் பண்றியான்னே எனக்கு சந்தேகமா இருக்கு…”
“ஹேய்ய் ஏன்டி இப்படி பேசுற..?”
“சரி சார் நான் பேசவே இல்ல… நீங்க போய் உங்க அம்மாவையே கொஞ்சுங்க..”
“இப்போ என்ன ஆச்சுன்னு அழுகுற..? ஏன் தாரா நீயே என்னை புரிஞ்சுக்கலைன்னா எப்படி..?”
“இன்னைக்கு ஒரு நாள் தானே என் கூட இருக்க சொல்றேன்.. அதுவும் என்னோட பர்த்டேன்னு தானே கேட்கிறேன்… உங்களால அது கூட முடியாதா..? எவ்ளோ பேர் எப்படி எல்லாம் என்ஜாய் பண்றாங்க தெரியுமா..? ஷாப்பிங் போறாங்க… தியேட்டர் போறாங்க… பார்க் போறாங்க… பீச் போறாங்க… நாம மட்டும் எங்கேயுமே போறதில்லை… கேட்டா அம்மாகிட்ட பர்மிஷன் வாங்கணும் உங்க அப்பாகிட்ட பேசணும்னு சொல்லிட்டே இருக்கீங்க… என்னோட லவ் லைப்பே வேஸ்டா போகுதுன்னு தோணுது ஷேத்ரா.. சரி சரி என்னோட அழகை புலம்பல் எல்லாத்தையும் நீங்க எதுக்கு கேக்கணும்..? நீங்க கிளம்புங்க…. உங்களுக்காக உங்க அம்மா வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க…” என கோபத்தில் அவள் யாருடனோ பேசுவது போல மரியாதையாக அவனுடன் பேச அவனுக்கோ உள்ளத்தில் வேதனை கூடியது.
“இப்படி எல்லாம் பண்ணக்கூடாதுடி…” என அவன் மறுத்துக் கூற அடுத்த நொடியே மீண்டும் அவனுடைய கழுத்தை வளைத்து அவனுடைய உதடுகளை நெருங்கியவள் தானே முத்தத்தை அவனுக்குக் கொடுக்கத் தொடங்கியிருந்தாள்.
அவனுக்கோ பதற்றத்தில் கரங்கள் நடுங்கத் தொடங்கி விட்டிருந்தன.
சற்று நேரத்தில் அவள் விலகிய போது அவனோ அவளுடைய கரங்களைப் பிடித்துக் கொண்டவன் “பயமா இருக்குடி..” எனக் கூற அவளோ சிரித்தே விட்டாள்.
“ஹா… ஹா.. அச்சோ சோ ஸ்வீட் டா நீ..” என்றவள் அவனுடைய தலை முடிக்குள் தன்னுடைய கரத்தை நுழைத்து,
“நான் சொன்ன மாதிரியே உங்க அம்மா கிட்ட சொல்லு..” எனக் கூற தன்னுடைய மூச்சை வேகமாக உள்ளே இழுத்து வெளியே விட்டவன் பயத்துடனேயே தன்னுடைய அன்னைக்கு அழைப்பை எடுத்தான்.
(அட என்னடா இது..? நம்ம குருவா இப்படி..? அப்படித்தானே நினைக்கிறீங்க… 12 வருஷத்துக்கு முன்னாடி இருந்த குரு இப்படித்தான்…! ரொம்ப ரொம்ப அப்பாவியான ஒரு கேரக்டர்.. ரொம்ப நல்லவனும் கூட..)
Super sis
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️