சொர்க்கம் - 57
கௌதம் செந்தூரியின் திருமணப் புகைப்படத்தைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் பொறாமையில் வெந்து வேகிக் கொண்டிருந்தான் சேகர்.
எப்படியாவது அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவன் பல திட்டங்களை வகுத்து ஒவ்வொன்றாக செயல்படுத்திக் கொண்டு வந்த நேரத்தில் திடீரென இவள் யாரோ ஒரு புதியவனுடன் தாலியோடு புகைப்படத்தை பதிவிட்டிருக்க இவனுக்கோ ஆத்திரமாத்திரமாக வந்தது.
இவளுடைய மனதில் இவள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்..?
என்னைத்தானே காதலித்தாள்.?
விநாயக் மிரட்டியதால்தான் அந்த ஒழுக்கம் கெட்டவனிடம் சென்றாள்.
அவன் அவளை விடுவித்ததும் நேரே என்னிடம் வந்துதானே வாழ்க்கைப் பிச்சை கேட்டிருக்க வேண்டும்.
யாரோ ஒரு துணை நடிகனைப் பிடித்து அவனைத் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு இவளுக்கு எப்படி தைரியம் வந்தது..?
இவளுக்கு நிச்சயம் புத்தி மலுங்கி விட்டது.
என்னுடைய நினைவு ஒரு நொடி கூட இவளுக்கு வரவே இல்லையா..?
எத்தனை முறை அவள் பின்னால் நாய் போல அலைந்து இருப்பேன்.
‘சே… எல்லாம் கைகூடி வர்ற நேரத்துல பான உடைஞ்ச மாதிரி என்னோட திட்டமெல்லாம் நாசமா போச்சே.. படம் நடிக்க வந்த தைரியத்துல என்னையவே கழட்டி விடுறியா..? உனக்கு இந்த சேகர்னா யாருன்னு காட்டுறேன்டி..
உனக்கு புருஷன்னு ஒருத்தன் வந்தா அது நானா மட்டும்தான் இருக்கணும்..’ என வஞ்சகத்துடன் நினைத்துக் கொண்டவன் அவர்கள் இருவருடைய புகைப்படத்தையும் காட்டி அடியாள் ஒருவனிடம் பேரம் பேசத் தொடங்கியிருந்தான்.
******
‘எல்லாரும் நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நினைச்சுகிட்டு இருக்காங்க.. எங்க அம்மா இதைப் பார்த்திருப்பாங்களா..? அவங்ககிட்ட எப்படி இதப் பத்தி சொல்லி புரிய வைக்க போறேன்னு தெரியல..”
“உண்மைய சொல்லு..” என்றான் அவன்.
“செருப்பாலயே எனக்கு அடிக்கப் போறாங்க டா..” என்றாள் அவள்.
“ஒரு தடவ தானே வாங்கிக்கோ..” என்றவன் சிரிக்கத் தொடங்கி விட அவனை முறைத்து முறைத்து இவளுக்கு கண் வலியே வந்து விட்டது.
“இவ்வளவு ரணகளத்திலையும் எப்படித்தான் உன்னால இப்படி கிளுகிளுப்பா இருக்க முடியுதோ தெரியல டா… பைத்தியக்காரா..”
“ஹா ஹா ஹா.. சரி நடந்து முடிஞ்சதெல்லாம் விடு.. இனி நடக்கப் போறத பாத்துக்கலாம்.. அம்மா கேட்டா உண்மைய சொல்லிடு.. ரெண்டு நாளைக்கு அப்புறம் இது ஷூட்டிங்கு ரிகர்சல் பண்ணினப்போ எடுத்த போட்டோன்னு சோஷியல் மீடியால சொல்லிடலாம்..”
“நம்புவாங்களா கௌதம்..?”
“நடக்காத கல்யாணத்தையே நடந்துருச்சுன்னு நம்பிட்டாங்க.. உண்மையை நம்ப மாட்டாங்களா..? அதெல்லாம் நம்புவாங்க.. நீ கவலைய விடு..”
“ம்ம் சரிடா…”
“ஓகேடி.. எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு.. நான் கிளம்புறேன்.. ஏதாவது அவசரம்னா கால் பண்ணு..”
“ம்ம் சரிடா.. நீ பத்திரமா போ..”
“சரிங்க மேடம்..” என்றவன் அங்கிருந்து கிளம்பி விட கதவைப் பூட்டிவிட்டு மீண்டும் உள்ளே வந்தவளுக்கு நெஞ்சம் பிசைந்தது.
இந்தப் பிரச்சினை சரியாக எவ்வளவு காலம் எடுக்குமோ..?
‘கடவுளே நீ தான் எல்லாத்தையும் சரி பண்ணிக் கொடுக்கணும்.. யாருக்கு எத கொடுக்கணும்னு எங்க எல்லாரையும் விட உனக்குத்தான் நல்லா தெரியும்.. யாருக்கும் எந்தக் கஷ்டமும் வரக்கூடாது..’ என மனம் உருக இறைவனைப் பிரார்த்தித்து விட்டு அருகே இருந்த மேஜையைப் பார்த்து தன் தலையில் தானே தட்டிக் கொண்டாள்.
“அச்சச்சோ… ஹெல்மெட்டை விட்டுட்டுப் போயிட்டானே.. இவன்கிட்ட எத்தனை தடவை ஹெல்மெட் மறக்காதன்னு சொல்லிருக்கேன்.. சொல்றத கேக்குறதே கிடையாது..” எனத் திட்டியவாறே அவனுக்கு அழைப்பை எடுத்தாள்.
அடுத்த சில நொடிகளிலேயே அழைப்பை ஏற்றவன் ஒற்றைக்கரத்தில் அலைபேசியைப் பிடித்துப் பேசியவாறு பைக்கில் வேகமாகச் செல்ல,
“டேய் பைத்தியம்.. ஹெல்மெட்டை மறக்காதன்னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்..” திட்டினாள் அவள்.
“அட ஆமால்ல.. ஹெல்மெட் போட்டு வந்ததே மறந்து போச்சு.. இட்ஸ் ஓகேடி.. அது உன்னோட வீட்லயே இருக்கட்டும்.. நெக்ஸ்ட் டைம் வரும்போது எடுத்துக்கிறேன்..”
“ஃபோன் பேசும்போதாவது வண்டிய ஒரு ஓரமா நிறுத்திட்டுப் பேசலாம்ல..? பைக்கை ஓட்டிட்டே பேசணுமா..?”
“அதெல்லாம் எனக்கு ஒன்னும் ஆகாதுடி.. நீ எதுக்கு சும்மாச் சும்மா பயப்படுற..?” எனப் பேசிக்கொண்டு இருந்த நேரம் படீர் என்ற பெரிய சத்தமும் அதைத் தொடர்ந்து அருகே நின்ற மக்களின் அலறல் சத்தமும் ஆஆஆ என்ற கௌதமின் அலறலும் அவளை நடுநடுங்கச் செய்தது.
“கௌ… கௌதம்.. ஏய்.. கௌதம் பே.. பேசுடாஆஆஆ ஹலோஓஓ… ஹலோஓஓஓ.. கௌதம் பேசு கௌதம்.. என்ன ஆச்சுடா.. ஏதாவது பேசுடா எரும..” என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் அழைப்பு துண்டிக்கப்பட்டதே புரிந்தது.
வேகமாக மீண்டும் அவனுடைய அலைபேசிக்கு அழைப்பை எடுத்தவள் போன் சுவிட்ச் ஆஃப் என வருவதைக் கண்டு நடுங்கிப் போனாள்.
எதுவோ மோதும் சத்தம் கேட்டதே..
என்னவாயிருக்கக் கூடும்..?
விபத்து நேர்ந்து விட்டதோ..?
ஐயோ என் கௌதம் அலறும் சத்தம் கேட்டதே என எண்ணியவளுக்கு நெஞ்சுக் கூடு காலி ஆகியது.
அடுத்த கணமே,
“கௌதமாஆஆஆஆஆ..” என அலறினாள் செந்தூரி.
******
ஆறு மணி நேரத்தின் பின்.
தன்னுடைய வீட்டில் இருந்த பாரையே காலி செய்வது போல குடித்துக்கொண்டே இருந்தான் விநாயக் மகாதேவ்.
அவனுடைய மனதை அழுத்தும் வலியை தாங்கிக் கொள்ள போதையைத் தவிர அவனுக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை.
இன்னும் இரண்டு நாட்களில் ஷூட்டிங் தொடக்கம் அவனுடைய வெளி வேலைகள் அனைத்தையும் அப்படியே நிறுத்திவிட்டு ஏதாவது ஒரு நாட்டிற்குச் சென்று தனியாக நிம்மதியாக இருக்க வேண்டும் என எண்ணத் தொடங்கி இருந்தது அவனுடைய காயம் கண்ட மனம்.
எப்போதும் அவன் படத்தை நடித்து முடித்து விட்டு வெளிநாட்டிற்குச் செல்வதுதான் வழக்கம்.
இன்றோ இந்த சூழ்நிலைகளை சில காட்சிகளை முக்கியமாக அவளை மறப்பதற்காகத்தான் நாடு தாண்ட எண்ணினான் அவன்.
இங்கே இருந்து அவளைப் பார்த்தால் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிப் போய் விடுவோம் என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
விலை மதிப்பில்லாத முதல் காதலை அல்லவா அவன் இழந்து விட்டான்.
தன் காதலை உடனேயே கூறியிருக்க வேண்டுமோ..?
காதலை அவன் உணர்ந்த அடுத்த நொடியே நான் உன்னை காதலிக்கிறேன் என அவளுடைய செவிகளை அடைக்கும் அளவிற்கு சத்தமாக கத்திச் சொல்லிருக்க வேண்டுமோ..?
காதலைச் சொல்வதில் ஒருபோதும் தாமதிக்கக்கூடாது என்பது எவ்வளவு உண்மை?
வெறும் இரண்டே நாட்களில் மொத்தமாக அவனை விட்டு கை நழுவிப் போய்விட்டாளே.
இனி மீண்டும் அந்தக் காதல் அவனுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை அல்லவா..?
கண்ணீர் பெருகியது.
கரத்தில் இருந்த போத்தலை தரையில் அடித்து உடைத்தவன் வெறிகொண்டவன் போல அலறினான்.
அந்த அறையே அதிர்ந்தது.
ஒரு சில விடயங்களை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாதல்லவா..?
அப்படித்தான் இருந்தது அவனுடைய நிலையும்.
நெஞ்சம் முழுவதும் வலித்தது.
அவனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்தின்றி தவித்து துடித்துக் கொண்டிருந்தான் விநாயக்.
இந்த உலகத்தில் யாரேனும் நேரத்தை கடக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து இருப்பார்களா..?
அப்படி மட்டும் இருக்குமெனில் எவ்வளவு செலவானாலும் சரி அவன் இதுவரை சேர்த்து குவித்து வைத்திருந்த மொத்த சொத்தையும் விற்றாவது நேரத்தை கடக்கும் இயந்திரத்தை வாங்கி இறந்த காலத்திற்குச் சென்று செந்தூரிக்கு நல்ல முறையில் அறிமுகமாகி இருப்பான்.
நடந்த அனைத்தையும் மாற்றி அமைத்திருப்பான்.
அவளை தன்னுடைய மனைவியாக தன் இதயம் நேசிக்கும் காதலியாக மாற்றியிருப்பான்.
ஆனால் இதெல்லாம்தான் இனி நடப்பதற்கு வாய்ப்பே இல்லையே.
நடந்து முடிந்ததை மாற்றுவதற்கான எந்தக் கருவியும் இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லையே.
இதற்கு மேல் என்னால் இந்த அழுத்தத்தைத் தாங்க முடியாது.
இரத்த அழுத்தம் உயர்ந்து தலையில் உள்ள நரம்பு ஏதேனும் வெடித்து விடுமோ என்ற அச்சம் அவனுக்குள் எழுந்தது.
இன்றே வேறு எங்காவது சென்று விடலாம் இனி ஒருபோதும் இந்தியாவிற்கு திரும்பி வரவே கூடாது என்ற உறுதியான முடிவை எடுத்தான் அவன்.
முடிவெடுத்த பின் தயங்குவது அவனுடைய இயல்பல்லவே.
தள்ளாடியவாறு எழுந்து நின்றவன் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு மேலாக தேடி தன்னுடைய அலைபேசியைக் கண்டுபிடித்து சக்கரவர்த்திக்கு அழைப்பெடுத்தான்.
அவனால் எவ்வளவு நஷ்டம் ஏற்படுகின்றதோ அதைவிட இருமடங்கான பணத்தை சக்கரவர்த்திக்குக் கொடுத்து விட்டு இங்கிருந்து லண்டன் சென்று விடலாம் என அழைப்பை எடுக்க சில நொடிகளில் அவனுடைய அழைப்பை ஏற்றவர்,
“சொல்லுங்க விநாயக்..” என்றார் சோர்வான குரலில்.
அவனுக்குத்தான் காதல் தோற்றுப் போன வலி. இவருக்கு என்ன பிரச்சனை..? குரலில் ஏன் இவ்வளவு சோர்வு என அவ்வளவு போதையிலும் நினைத்துக் கொண்டவன்,
“எ… என்னால இப்…போதைக்கு இந்த படத்துல ந.. நடிக்க முடியாதுஉஉஉ.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. எவ்.. எவ்வளவு லாஸ் ஆகுதோ அதுக்கான ப.. பணத்தை நான் செட்டில் பண்றேன்ன் சக்கரவர்த்திஇஇஇ…” என அவன் போதையில் கூற,
அவரிடம் இருந்து பெருமூச்சு வெளிவந்தது.
“நானும் படம் சம்மந்தமா உங்ககிட்ட பேசணும்னுதான் இருந்தேன் சார்.. இந்த படத்தை கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைக்கிறதுதான் நல்லது.. கைவசம் இன்னொரு படம் வச்சிருக்கேன்.. அத நான் முதல்ல எடுத்து முடிக்கிறேன்.. அதுக்கப்புறம் இந்தப் படத்தை பார்த்துக்கலாம்.. உங்களுக்கும் கைல அடிபட்டுருச்சு.. அந்த கௌதம் பையனும் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி ஆக்சிடன்ட்ல அடிபட்டு ஸ்பாட்லயே இறந்துட்டானாம்.. இப்பதான் தகவல் வந்துச்சு.. மனசுக்கு கஷ்டமா போச்சு..
கேரக்டர்ஸ் எல்லாம் மறுபடியும் மாத்தி பிரஸ்கிட்ட சொல்லி போஸ்டர் எல்லாம் அவுட் பண்றது இப்ப முடியாத காரியம்.. சோ இந்த படத்துல இருந்து எல்லாருமே கொஞ்சம் பிரேக் எடுத்துக்கலாம்..” என்றதும் அதிர்ந்து விட்டான் விநாயக்.
“எ.. என்ன சொல்.. சொல்றீங்க..? யார் இறந்து போனாங்க.. கௌ.. கௌதமா..?”
“ஆமா அந்தப் பையன்தான்.. ரொம்ப நல்ல பையன்.. ஹெல்மட் போடாம வண்டில ரொம்ப ஸ்பீடா ஃபோன் பேசிக்கிட்டே போயிருக்கான் போல.. ஆக்சிடெண்ட் ஆயிருச்சு.. ரொம்ப ப்ளட் லாஸ் ஆயிடுச்சுன்னு குமார் சொன்னான்.. காப்பாத்த முடியலையாம்..
இந்த உலகத்துல யார் எப்போ வருவா எப்போ போவாங்கன்னு தெரியாதுல்ல..?” என்றவர் பேசிய முடிப்பதற்கு முன்னரே அவருடைய அழைப்பைத் துண்டித்தவனுக்கு தலை விறைத்து விட்டது.
அவன் செந்தூரியிடம் மிரட்டி விட்டு வந்தது உண்மைதான். ஆனால் அந்த வார்த்தைகள் பழித்ததைப் போல இப்படி ஆகிவிட்டதே.
சிந்தை கலங்கிப் போனான் அவன்.
ஒரு உயிரைக் கொன்று தான் வாழ நினைக்கும் ஈனப்பிறவி அவன் அல்லவே.
இனி இறுதிவரை தூரியைப் பார்க்காமலேயே வாழ்ந்து விடுவோம் என்றுதானே நினைத்திருந்தான்.
ஏன் இந்த கொடூரமான திருப்பம்..?
இறந்த அந்த உயிருக்காக சில நொடிகள் அமைதியாய் நின்றான் அவன்.
அதைத்தவிர வேறு என்ன செய்வதென்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவனுடைய மனம்தான் அமைதியாக இருந்தது. உடல் ஒரு இடத்தில் நிற்க முடியாது போதையில் தள்ளாடியது.
சட்டென உடல் முழுவதும் வியர்த்து விட படபடத்து நின்றவனுக்கு செந்தூரியின் நினைவு நெஞ்சை அழுத்தியது.
அவள் இப்போது எந்த நிலையில் இருப்பாளோ..?
அவளுக்கு உதவியாக நான் அவள் அருகே இருக்க வேண்டுமே என எண்ணியவனால் நடக்கக்கூட முடியவில்லை.
மிகச் சிரமப்பட்டு அந்த அறையின் கதவு வரை நடந்து சென்றவன் அப்படியே போதையில் தரையில் சரிந்து விழுந்து விட அவனுடைய விழிகளோ தாமாக மூடிக்கொண்டன.
😎🥺😎
Ayyayyo Gowtham