நடுங்கிய கரங்களுடன் தன்னுடைய பைக்கை செலுத்திக்கொண்டு அன்றைய இரவே தன்னுடைய வீட்டை வந்து அடைந்தவனுக்கு சொல்லில் அடங்காத வேதனை அவன் மனதைத் தாக்கியிருந்தது.
உள்ளே நுழைந்த தன்னுடைய மகனைப் பார்த்தவர்,
“என்னப்பா நாளைக்கு காலையில தானே வர்றேன்னு சொன்ன..? இப்பவே வந்துட்ட..?” எனக் கேட்டவர் அவனுடைய சிவந்திருந்த முகத்தைக் கண்டதும் பதறிப் போனார்.
“என்ன ஆச்சுடா..? ஏதாவது பிரச்சனையா..? உன்னோட ப்ரெண்ட் எப்படி இருக்கான்..? நல்லா இருக்கான்தானே..? அவனுக்கு எதுவும் இல்லையே… நீ ஏன்டா அழுதுகிட்டே வர்ற…? அம்மாகிட்ட சொல்லுப்பா… என்னதான் ஆச்சு..?” என அவர் தவிப்போடு கேட்டவாறு அவனை நெருங்க அவ்வளவுதான் உடைந்து போய் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினான் அவன்.
“எ.. என்னப்பா… என்ன ஆச்சு..? சொல்லு அம்மா பாத்துக்கிறேன்…” என அவர் கேட்க அப்பொழுதுதான் முட்டாள்தனமாக தன்னுடைய அத்தனை வேதனையையும் தன் அன்னையின் முன்பு போட்டு உடைத்து விட்டோம் என்பதை உணர்ந்து வேகமாக தன்னுடைய கண்களைத் துடைத்துக் கொண்டவன்,
“இ.. இல்லம்மா பிரபுவ நினைச்சுத்தான் ரொம்ப கவலையா இருந்திச்சு.. அதனாலதான் அழுதுட்டேன்.. ம… மத்தபடி எதுவும் இல்லை… அவனுக்கு சின்ன அடிதான்… சீக்கிரமா குணமாயிருவான்..” எனத் திணறியவாறே கூறி முடித்தவனுக்கு மீண்டும் மீண்டும் தாயை ஏமாற்றுகிறோமே என்ற எண்ணமும் சேர்த்து வாட்டியது.
“இதுக்குப் போய் எதுக்குப்பா இவ்வளவு வருத்தப்படுற..? அவனுக்குத்தான் எதுவும் ஆகலைல.. கடவுள் நல்லவங்களா சோதிப்பாரு கைவிடமாட்டாரு… நீ எத நினைச்சும் பயப்படாத… நாளைக்குப் போய் அந்தப் பையனை பார்த்துட்டு வந்துடலாம்… இப்போ போய் நீ தூங்கு..” எனக் கூற,
சரியென தலையை அசைத்து விட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தவனுக்கோ ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன.
அவள் கேட்டதும் சரிதானே..?
தன்னை அவ்வளவு நெருக்கமாக அவள் நெருங்கியும் தன்னுடைய உணர்வுகளைத் தூண்டிய போதும் கூட தன் உடலில் எந்தவிதமான மாற்றமும் நிகழவே இல்லையே..
என்னால ஏன் அவளுடைய ஆசைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை..? நிஜத்தில் உடலுறவு கொள்வதற்கு நான் தகுதியற்றவனா..?
அந்த நினைவே அவனுக்குள் பயத்தை ஏற்படுத்த நெற்றி ஓரம் வியர்க்கத் தொடங்கியது.
‘சே அப்படி எல்லாம் இருக்காது… டென்ஷனா இருந்ததாலதான் என்னால அவ மேல ஃபோகஸ் பண்ண முடியல… மத்தபடி வேற எந்தக் குறையும் என்கிட்ட இல்ல..” என தனக்குள்ளேயே உருப்போட்டுக் கொண்டவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனம் வேதனையில் மருகிக் கொண்டே இருந்தது.
தவிப்போடு தன்னுடைய போனை எடுத்தவன்,
“சத்தியமா என்கிட்ட எந்தக் குறையும் இல்லடி… உன்னை சந்தோஷமா வச்சுப்பேன்… என்கிட்ட பேசாம இருக்காத ப்ளீஸ்..” என அவன் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்க அவளிடம் இருந்தோ எந்தப் பதிலும் அவனுக்கு கிடைக்கவே இல்லை.
துடித்துப் போனான் அவன்.
அன்று இரவு முழுவதும் மனதில் வலியுடன் தூங்காமல் கழிந்தது அவனுக்கு.
விடியற்காலையில் தூங்கி வெகு தாமதமாகவே எழுந்து கொண்டவன் இன்றைய நாள் தன் தேவதையின் பிறந்தநாள் என்பதை உணர்ந்து பதறி அவளுடைய அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.
முதல் மூன்று அழைப்பை அவள் எடுக்காது விட இவனுக்கோ நெஞ்சம் பதறியது.
மீண்டும் மீண்டும் ஓயாது அவன் அழைப்பை எடுத்த வண்ணமே இருக்க ஒரு கட்டத்தில் அவனுடைய அழைப்பை ஏற்று பேசினாள் தாரா.
“சொல்லு…” எந்தவித உற்சாகமும் இன்றி வெறுமையாக ஒலித்தது அவளுடைய குரல்.
அந்த வெறுமையான குரலில் கூட ஆயிரம் உணர்வுகளைக் கண்டுபிடித்து குதூகளித்தது அவனுடைய காதல் கொண்ட மனம்.
“ஹாப்பி பர்த்டே மை டியர் ஏஞ்சல்… இந்த வாழ்க்கைல உனக்கு எல்லா விதமான சந்தோஷமும் கிடைச்சு நீ எப்பவுமே ஹாப்பியா இருக்கணும்… ஐ லவ் யூ சோ மச்…” என அவன் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தைக் கூற அந்த வாழ்த்தில் சற்றே கோபம் குறைந்தவள்
“சரி விடு எதனால உனக்கு அப்படி ஆச்சுன்னு தெரியுமா..?” என மீண்டும் அதைப் பற்றி கேட்டாள் தாரா.
“எனக்கே தெரியலடி… இப்போதானே ஃபர்ஸ்ட் டைம்.. ரொம்ப பதட்டமா இருந்துச்சு..” என தன் மனதை மறையாமல் கூறினான் அவன்.
“சரி பரவால்ல விடு… நாம இன்னைக்கும் ட்ரை பண்ணி பார்க்கலாம்..” என தாரா வெளிப்படையாகக் கூறியதும் அவனுக்கோ சற்றே முகத்தில் விருப்பமில்லாத உணர்வு தோன்றி மறைந்தது.
கட்டாயம் இந்த உறவு இப்போது அவசியம் தானா..?
இதில் காதல் எங்கே இருக்கிறது..? மோகம் மட்டும் தானே இருக்கிறது..?
தாலி கட்டி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அனைவரின் முன்பும் ஆசி பெற்று மனைவியாக அவளைத் தொட்டு ஆள்வது தானே சிறந்தது.. அதை ஏன் தாரா புரிந்து கொள்ளவில்லை என எண்ணியவன் இப்போது மறுத்துக் கூறினால் நிச்சயம் தன்னுடைய இயலாமையால்தான் இப்படிக் கூறுகிறான் என நினைத்துக் கொள்வாள் என எண்ணி அவளிடம் பேசவே தயங்கினான்.
“ஷேத்ரா நான் உனக்காக இன்னைக்கு காலைல பத்து மணிக்கு பீச் ஹவுஸ்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன்… சீக்கிரமா வந்துரு… நேத்து மாதிரி என்னை ஏமாத்திடாதே..” எனக் கூறிவிட்டு,
“ஐ லவ் யூ…” என்ற வார்த்தையோடு அவள் அழைப்பைத் துண்டித்து விட இவனுக்கோ அக்கணமே அச்சம் மனதுக்குள் எழுந்து கொண்டது.
நேற்றைய தினம் போல இன்றும் அவனால் இயலாமல் போய்விடுமோ..?
தன்னில் தான் ஏதேனும் குறை இருக்கிறதோ…?
ஒரு பெண்ணை திருப்திப் படுத்த வில்லை என்றால் அவன் ஆண் இல்லையா..?
எல்லா ஆண்களுக்கும் இப்படித்தான் முதலில் இருக்குமா..?
இல்லை தனக்கு மட்டும்தான் இப்படியா..?
யாரிடம் கேட்பது..?
ஆனால் இதைப் பற்றி எல்லாம் வெளிப்படையாக கேட்கலாமா..?
தந்தை இருந்திருந்தால் கூட அவன் கேட்டிருப்பானா என்பது சந்தேகம்தான்.
நண்பர்கள் கூட அவனுக்கு மிக அரிது.
அதுவும் எப்போதாவது சென்று பார்த்து விட்டு வருவதோடு சரி. அப்படி இருக்கையில் யாரிடம்தான் இதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வது..?
தன்னுடைய அலைபேசியை வேகமாக எடுத்து கூகுளுக்குள் நுழைந்தவன் தன்னுடைய சந்தேகங்களை கூகுளிடம் கேட்க அதுவோ ஆண்மை குறைபாடு என்ற பதிலை அவனுக்குக் கொடுத்தது.
இடிந்து போனான் அவன்.
வழமையை விட பதற்றம் அதிகரித்தது.
ஏசி அறையிலும் வியர்த்து வழிந்தது.
காய்ச்சல் அடிப்பது போல இருக்கிறதாக காரணம் கூறி இன்று வர முடியாது எனத் தாராவிடம் கூறி விடலாமா என்று கூட எண்ணினான் அவன்
அடுத்த நொடியே அவ்வளவுதான் அவள் தன்னை வெறுத்து ஒதுக்கி விடுவாள் என்பது புரிந்ததும் நேரத்தைப் பார்த்தான். நேரமோ 9 மணி எனக் காட்டியது
10:00 மணிக்கு அவளைத் தேடிச் செல்ல வேண்டும்.
அங்கே ஏதோ பரீட்சை எழுதுவது போல அவளோடு உடலுறவுக்குத் தயாராக வேண்டும்.
ஏதோ உள்ளுக்குள் கசந்தது.
பிடிக்காத சுழலுக்குள் தள்ளப்படுவது போல, மூச்சு முட்டுவது போல, தலை வெடிப்பது போல, அருவருப்பது போல கூட அவனுக்குள் பல விதமான உணர்வுகள் எழ தன் தலையைப் பிடித்துக் கொண்டான் குருஷேத்திரன்.
இப்போது எனக்கு இது வேண்டாம் என வெளிப்படையாக மறுக்க வேண்டும் என எழுந்த எண்ணத்தை தாராவின் கோபத்திற்குப் பயந்து மனதிற்குள்ளேயே மறைத்தவன் தயங்கியவாறே தயாராகி வந்தான்.
மனம் முழுவதும் பாரம் ஏறிப்போனது.
10 மணி நெருங்க நெருங்க மனதுக்குள் ஒரு விதமான படபடப்பு அதிகரித்தது.
அன்னையிடம் எதையோ கூறிவிட்டு தன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு சாலையில் செல்லத் தொடங்கியவனின் சிந்தனை முழுவதும் தனக்கு குறைபாடு இருக்குமோ என்றும் அப்படி எதுவும் ஆகி விடக்கூடாது அவள் வைக்கும் இந்த தேர்வில் எப்படியாவது நான் பாஸாகி விட வேண்டும் என்றும் சிறுவயது பையனைப் போல தன் மனதுக்குள் புலம்பிக் கொண்டு சென்றவன் அங்கே நுழைந்ததும் வந்து அணைத்துக் கொண்ட தாராவை உணர்வுகள் இன்றி வெறித்துப் பார்த்தான்.
நடுங்கிய கரங்களை தன்னுடைய பேண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டவனுக்கு வேண்டாம் என அந்த இடத்தில் வெளிப்படையாக கூறி விட வேண்டும் போல இருந்தது.
அவன் ஒன்றும் ஆசைகள் அற்ற ஆண் இல்லைதான். ஆனால் அவனுடைய மனம் முரண்டு பிடிக்கிறதே.
இது எல்லாம் தவறு என ஆணித்தரமாக கூறி அவளுடைய கருத்துக்கு முரண்படுகின்றனவே.
அப்படி இருக்கையில் எப்படி என்னால் ஒத்துழைக்க முடியும்..?
ஒத்துழைப்பதற்கு முதலில் என்னால் முடியுமா..? இல்லை நிஜமாகவே எனக்கு ஆண்மை குறைபாடா..?
அந்த எண்ணமே தொண்டைக்குள் வந்து எதையோ அடைப்பதைப் போல இருக்க உறைந்து போய் நின்றிருந்தான் அவன்.
அவளோ அவனை அழைத்துக் கொண்டு அவளுடைய அறைக்குள் நுழைந்தாள்.
“வா ஷேத்ரா இன்னைக்கு என்னோட பர்த்டே உன்னாலதான் ஹேப்பியா மாறப் போகுது..” எனக் கூறியவள் அவனை நெருங்கி அவனோடு இழைந்து அவனை முத்தமிடத் தொடங்கி விட அவனுக்கோ நேற்று எழுந்த உணர்வுகள் கூட இன்று இருந்த பதட்டத்தில் சற்றும் எழவே இல்லை.
மரக்கட்டை போல அசைவற்று நின்றவன் அவள் அவனை நிமிர்ந்து பார்த்ததும் சட்டென தன் பார்வையை மாற்றிக் கொண்டு அவளை தானும் அணைத்துக் கொண்டான்.
படுக்கையில் விழுந்து ஆடைகள் களைந்து இருவரின் உடலும் உரசியும் கூட அவனுக்கு மனம் ஒன்ற மறுத்தது.
எவ்வளவோ முயன்றும் அவனால் அவளோடு ஒன்று கூட முடியாது போய்விட,
அடுத்த சில நிமிடங்களிலேயே வெறித்த பார்வையோடு அவனை விட்டு விலகி எழுந்தவள் வெறுப்போடு அவனைப் பார்த்தாள்.
“முதல்ல இங்கிருந்து வெளியே போ…” என கோபமாகக் கத்தி விட அவனோ அவளை அடிபட்ட பார்வை பார்த்தான்.
“இ.. இல்ல ஏதாவது சின்ன பிரச்சனையா இருக்கும்டி டாக்டர்கிட்ட போனா சரியாயிடும், நம்ம டாக்டர்கிட்ட போகலாம் தாரு..”
“வாட் நாம போகணுமா..? நான் எதுக்கு உன் கூட வரணும்..? நீ தான் போகணும்… உனக்குத்தான் குறை… முதல்ல ஆம்பளையா இருந்தா தானே ஒரு பொண்ண பார்த்தா ஆசை வரும்… எப்ப பார்த்தாலும் நீ தள்ளித் தள்ளி போகும்போதே நான் சந்தேகப்பட்டுருக்கணும்.. இந்த மரமண்டைக்கு அப்போ புரியல இப்போதான் எல்லாமே புரியுது… இது தெரியாம பொண்ணு மாதிரி பிஹேவ் பண்ணிக்கிட்டு இருந்த உன்ன ரொம்ப ஸ்வீட்னு கொஞ்சிக்கிட்டு இருந்திருக்கேன்… ச்சை… போதும்… நான் ஏமாந்தது போதும்…
அவ்வளவுதான்… எல்லாமே முடிஞ்சு போச்சு… நமக்குள்ள இனி எதுவுமே கிடையாது… தயவு செஞ்சு இங்க இருந்து போ… உன்னை கல்யாணம் பண்ணி என்னோட வாழ்க்கையை நாசம் பண்ண நான் விரும்பல.. இதுக்கு மேல என்ன பாக்க வராத… எனக்கு மெசேஜ் ஆர் கால் பண்ணாத.. எல்லாமே முடிஞ்சு போச்சு.. வெளியே போ…” என அவனைப் பேசக்கூட விடாது அவள் திட்டிவிட,
சட்டென நெருங்கி அவளுடைய கரங்களைக் கெஞ்சுதலாகப் பற்றிக் கொண்டவன்,
“ஐயோ…. ப்ளீஸ்டி இப்படி சொல்லாத… நீ இல்லாம என்னால வாழவே முடியாது தாரு.. நம்மளோட காதல் உண்மையானது தானே..? அப்படின்னா நீ எப்படி என்ன வேணாம்னு சொல்லலாம்..? நான் இல்லாம உன்னால வாழ முடியுமா..? அவசரப்படாத பேபி என்ன வேணாம்னு சொல்லாதே..”
“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா..? உன்ன மாதிரி ஒரு பொட்டைய கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னால வாழ முடியாது.. நல்லவேளை கல்யாணம் பண்ணி ஏமாறுறதுக்கு முதலே தப்பிச்சிட்டேன்..” என அவள் அமிலமாய் வார்த்தைகளை உமிழ, உடைந்து போய் அழுதே விட்டான் அவன்.
“நீ இல்லனா செத்துருவேன்டி…”
“ஓ மை காட்… உன்ன கல்யாணம் பண்ணினா நான் செத்துருவேன் பரவாயில்லையா..? ஒரு பொண்ண திருப்திப் படுத்த முடியாத நீ எல்லாம் என்ன எழவுக்கு லவ் பண்ணின.. எப்படி உன்ன மாதிரி ஒரு அம்மாஞ்சிகிட்ட இவ்வளவு நாளா ஏமாந்து இருக்கேன்னு எனக்கே புரியல.. முதல்ல இங்கிருந்து வெளியே போ…” என்றதும் உடைந்து போய் அசைவற்று நின்று விட்டான் அவன்.
“இவ்வளவு திட்டியும் உனக்கு கொஞ்சம் கூட ரோசமே வரல பாத்தியா..? சத்தியமாவே நீ ஆம்பள இல்லடா…” என்றவள் அங்கிருந்து சென்றுவிட இடிந்து போனான் குரு.
Super 👌 💖
Pavam guru
Guru 🙄🙄😔😔