இப்படியாக அவர்கள் இரவு உணவு உண்டு விட்டு, அவரவர் அறைக்குள் நுழைந்தனர்.
அவள் உள்ளே நுழைந்தவுடன், இனியன் அவளை கைகளில் ஏந்தி கொண்டான்.
“என்ன பண்றீங்க?”, என்று அவள் முடிக்கும் முதல் அவளின் இதழ்களை சிறை செய்தவன், அவளை படுக்கையில் கிடத்தி மின்விளக்கை அணைத்து அவளை மொத்தமாக கொள்ளையிட்ட பின் தான் விலகினான்.
அவளில் இருந்து விலகி படுத்தவன், அவள் புறம் திரும்பி, “என்ன டி பசங்க என்ன கலாய்ச்சா ரொம்ப உனக்கு சிரிப்பா இருக்கோ?”, என்று கேட்டவன் ஒரு நொடி கூட அவளை அவனின் கை வளைவுகளில் இருந்து விளக்கவே இல்லை.
“என்னால தான் ஏதும் பேச முடியல.. அவங்களாது பேசுறாங்களே”, என்று மீண்டும் சிரிக்க, “எல்லாம் நேரம் டி…”, என்று நிறுத்தியவன், “கனி”, என்று ஆரம்பித்து இன்று அவனின் அலுவலகத்தில் நடந்த அனைத்தையும் கூறினான்.
அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. “ஹே உங்கிட்ட தான் டி சொல்றேன்”, என்று அவன் அவளை அசைக்க, “நான் இப்போ இதுக்கு என்ன சொல்லணும்? உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஆனா நீங்களும் இந்த மாறி ஆட்டம் போட்டுட்டு இருந்திங்கனா வம்புல தான் மாட்டுவீங்க”, என்று சொன்னவளை மேலும் இறுகி அணைத்து கொண்டான்.
அவளுக்கு அவனின் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்வதை விடவும் அவனுக்கு என்ன வேண்டும்? நம்பிக்கை தானே வாழ்க்கையின் அடித்தளமே! அது இல்லையேல் எந்த ஒரு உறவையும் தக்க வைக்க முடியாது அல்லவா!
இருவரும் உறங்கி விட, அடுத்த நாள் வெய்யோணும் உதித்தான்.
இரு பிள்ளைகளும் தயாராகி இருக்க, அவளும் தயாராகி கொண்டு வந்தாள். பொன்னம்மாளும் கூட வந்தார்.
அங்கு வந்த இனியனோ, “இன்னைக்கு எங்க கிளம்பிட்டீங்க?”, என்று கேட்க , “பசங்களுக்கு ஏதோ போட்டியாம் டா அதான் அதுங்க பள்ளி கூடத்துக்கு போய்ட்டு வரோம்”, என்று செல்ல முற்பட, “நானும் வரேன்”, என்று அவன் சொன்னவுடன், நால்வருக்கும் கண்கள் வெளியே வந்து விடும் அளவு விரிந்தது.
அவனுக்கு தான் இந்த பள்ளி நிகழ்வுகள் எல்லாம் பிடிக்காதே!
கயல் முதன் முதலில் நடித்த நாடகத்தை பார்க்க கூட அவன் வரவில்லை.
“என் இவளோ ஆச்சர்ய படறீங்க? சும்மா… போர் அடிக்குது அதான் நானும் வரேன்”, என்று சொல்லிக்கொண்டு அவனும் கிளம்பிவிட்டான்.
அங்கு சென்றதும் தான் தெரிந்தது அது எத்தனை பெரிய போட்டி என்று!
ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் குவிந்திருந்தார்கள்!
“என்ன காம்பெடிஷன்லலாம் பார்ட்டிசிபேட் பண்றீங்க?”, என்று அவன் கேட்க, இருபிள்ளைகளும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“பதினைந்து வரிகளுக்குள் கவிதை அல்லது பேச்சு”, என்று கம்மி வந்தது கயலின் குரல்.
“தமிழ் தானா?”, என்று சலிப்பாக அவன் கேட்க, ஆனால் எதுவும் இன்று பேசவில்லை.
“சரி ஆல் தி பெஸ்ட்”, என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.
அவர்களுக்கு அதுவே போதும் என்று தான் தோன்றியது.
“நல்லா பண்ணுங்க”, என்று சொல்லிவிட்டு கனியும் பொன்னம்மாளும் கூட சென்று விட்டனர்.
கயல் ஒரு பிரிவிலும், அச்யுத் அவனின் வயது பிரிவிலும் கலந்து கொண்டனர்.
கயலுக்கு தான் முதலில் போட்டி துவங்கியது.
போட்டியை நடத்தும் ஆசிரியர் ஒருவர் போட்டியின் விதிமுறைகளை கூறினார்.
“பதினைந்து வரிகளுக்குள் கவிதை அல்லது பேச்சு இருக்க வேண்டும்.. உங்களுக்கான தலைப்பு சுமைதாங்கி”, என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
கயலோடு சேர்த்து அந்த பிரிவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் பங்கேற்றனர்.
அனைவருக்கும் ஒருசேர பத்து நிமிடங்கள் வழங்க பட்டது. பின்பு அவர்களின் கைகளில் இருந்த பேனா பறிக்கப்பட்டு விட்டது.
ஒவ்வொருவராக அவர்கள் எழுதியதை வந்து பேச, கயலின் முறையும் வந்தது.
“அனைவருக்கும் வணக்கம்”, என்று ஆரம்பித்தவள், அவள் எழுதிய பொன்னான எழுத்துக்களை பேச துவங்கினாள்.
“மழலையில் புத்தகத்தை சுமந்து,
பருவ வயதில் கனவுகளை சுமந்து,
மங்கையாய் மன்னவனை நெஞ்சில் சுமந்து,
தாயாய் கருவறையில் பிள்ளையை சுமந்து,
வாழ்க்கை முழுதும் உறவுகளை சுமந்து,
என்றும் சுமையை சுமையாய் கருதாமல்,
வரமாய் நினைத்து சுமக்கும் சுமைதாங்கியே!
பெண்ணே! உன் சுமையை இறக்கி வைக்கும்,
நேரம் தான் கனிந்திடுமோ?
இப்படிக்கு
எதிர்கால சுமைதாங்கி ஆகிய நான்”, என்று முடித்து இருந்தாள்.
அரங்கமே ஒரு நிமிடம் அமைதியில் இருந்தது. பின்பு ஒருவரின் பின் ஒருவராக கைதட்ட ஆரம்பித்து, எதிரில் அமர்ந்து இருந்த போட்டியின் நீதிபதிகள் கூட எழுந்து நின்று விட்டனர்.
வெறும் பனிரெண்டு வயது சிறுமி அவள், எவ்வளவு பெரிய தத்துவத்தை உரைத்து விட்டாள்.
அதுவும் அவளின் “எதிர்கால சுமைதாங்கி ஆகிய நான்”, என்கிற வார்த்தைகளில் அவள் சொல்லும் போதே அத்தனை வலியும் இருந்தது.
பெண்களின் வாழ்க்கை முழுக்க சுமைதாங்கிகள் தானே!
என்ன தான் நவீன காலத்தில் ஆண் பெண் சமம் என்று உரைத்தலும் தாய்மை அடையவில்லை என்றால் இப்போதும் ஒரு பெண்ணை அல்லவா ஏசுகிறது இந்த சமுதாயம்?
“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”, என்று பாடிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பெண்ணாய் பிறந்து இருந்தால் நிச்சயம் அப்படி ஒருபோதும் எழுந்திருக்க மாட்டார் என்பது தானே நிதர்சனம்.
அவள் பேசி முடிய, அடுத்து இருந்த மாணவர்களும் பேசி முடித்தனர்.
போட்டியின் முடிவுகள் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்படும் என்று கூறிவிட்டனர்.
அடுத்து அச்யுத்தின் போட்டியும் துவங்கியது. அவனுக்கு கொடுத்த தலைப்பு, “வீட்டில் வாழும் தெய்வம்”, சொல்லும் போதே, ஒன்பது வயது பிள்ளைகள் நீங்கள் யாரை வேண்டுமானாலும் உங்களின் வீட்டின் வாழும் தெய்வமாக நினைத்து பேசலாம் என்று சொல்லிவிட்டனர்.
அவன் தான் அவனின் போட்டியின் கடைசி பங்கேற்பாளர். அதுமட்டும் இன்றி அவனின் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்தனர். போட்டி கடினம் தான் என்று அனைவருக்கும் தெரிந்தது.
அவனின் முறை வரவும், ஆழ்ந்த மூச்சை எடுத்து பேச ஆரம்பித்து இருந்தான்.
“தினமும் கோவிலை நாடும் அற்ப மனிதா,
தினசரி உனை ஈன்றவளை தான் காண்பாயோ?
தீபம் ஏற்றி கடவுளை தொழுகிறாயே!
தியாக செம்மலும் வீட்டிலே இருக்க,
கோவிலை நாடுவது தான் நியாயமா?
கோவம் வரும்போது பொறுமை காத்து
கோ மகனாய்/ மகளாய் உனை வளர்க்க
அவள் செய்த தியாகத்தின் முன்
கடவுளும் தான் சமமாகிடுவானோ?
கருவறையில் இருக்கும் கடவுளை துதிப்பதோடு
உன்னை கருவறையில் சுமந்தவளையும் துதிக்கலாமே!
வீட்டில் வாழும் தெய்வம் இருக்கையில்
வீட்டை தாண்டி போவது ஏனோ?”, என்று அவன் முடிக்கும் போதே, அவனின் கவிதைக்கு விசில் பறந்து விட்டது.
(இக்கவிதை எனை ஈன்றவளுக்காக சமர்ப்பணம்)
இதற்கு மேல் ஒரு அன்னையை எவ்வாறு புகழ முடியும்? ஒன்பது வயது பிள்ளை அவன்! அவனின் கவிதையில் தமிழின் சிறப்பான வார்த்தைகள் இல்லை, ஆனால் மட்டுமே உணர்த்தும் தாய்மையின் உண்மை இருந்தது.
அனைவரும் அவனை பாராட்டி தீர்த்து விட்டனர். சிறிது நேரம் கழித்து பரிசுக்களை அறிவிக்க, இரு பிள்ளைகளும் அவர்களின் பிரிவுகளில் முதல் பரிசை தட்டி சென்றனர்.
செங்கனிக்கும் பொன்னம்மாளுக்கும் மகிழ்ச்சி தான். இனியனும் கூட அசந்து தான் விட்டான்.
“நீங்க தான் அந்த பசங்களோட அம்மாவா?”, என்று ஒரு மாணவியின் பெற்றோர் கேட்கவும், கனி ஆமாம் என்று தலையசைக்க, “ரொம்ப நல்லா வளத்து இருக்கீங்க மா… உண்மையா இந்த காலத்து பிள்ளைகளும் சரி பெற்றோர்களும் சரி தமிழ எல்லாம் யாரும் மதிக்கறதே இல்ல… ஆனா உங்க பிள்ளைங்க பேசுனதுலயே தெரிஞ்சிது எவளோ தமிழ் வளம் அவங்க கிட்ட இருக்குனு”, என்று அவர் சொல்லவும், “என் மருமக பிஏ பிஎட் தமிழ் தான் படிச்சிருக்கா”, என்று பொன்னம்மாள் சொல்லவும், “அதான் உங்க ஜீன் உங்க பிள்ளைங்களுக்கு அப்படியே இருக்கு”, என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
“நீ ரொம்ப நல்லா பிள்ளைங்கள வளக்குற மா “, என்று பொன்னம்மாளும் அவளை பாராட்ட தவற வில்லை.
அங்கிருந்த நிறைய பெற்றோர்கள் கனியை புகழ்ந்து தள்ளி விட்டனர்.
இனியனுக்கும் கூட பெருமை தான், அவனுக்கு பேறும் புகழும் என்றால் சொல்லவும் வேண்டுமா?
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.”
என்கிற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, இன்று தான் அவள் தாய்மையின் உச்சகத்தை உணர்கிறாள்.
அவரின் மார்பில் மீண்டும் பால் சுரந்தால் கூட சொல்வதற்கில்லை.
எந்த தமிழை அனைவரும் உதாசீன படுத்த துவங்கினார்களோ, இன்று அதே தமிழை வைத்து அவளின் பிள்ளைகள் அவளை உயர்த்தி விட்டது போல் தோன்றியது.
பிள்ளைகளை வளர்ப்பது தான் எத்தனை கடினம்.
இருவருக்கும் மெடல் அணிவிக்க பட்டது. கிடைத்தவுடன் அவர்கள் சென்றது என்னவோ கனியிடம் தான்.
“அம்மா”, என்று ஓடிவந்த பிள்ளைகள் இருவரின் மெடலையும் கழட்டி அவளுக்கு அணிவித்தார்கள்.
மெடல் ஒன்றும் அவளுக்கு புதிதல்ல! அவளே தங்கப்பதக்கம் வென்றவள் தான்!
ஆனால் இன்று பிள்ளைகள் வாங்கியதை அவள் அணியும் போது அது அவள் வாங்கிய தங்க மெடலை விடவும் உயர்ந்ததாக தோன்றியது.
அவளின் கண்களில் ஆனந்த கண்ணீர்.
இருவரும் ஒன்று சேர்ந்து அவளின் கன்னங்களில் முத்தம் பதித்தனர்.
அதை இனியனும் அவனின் கைபேசியில் புகைப்படம் எடுக்க தவற வில்லை.
“பாத்துக்கோ டா எப்போ பாரு தமிழ் எதுக்குன்னு கேப்பியே இன்னைக்கு அந்த தமிழால தான் உன் பசங்களுக்கு மட்டும் இல்ல உனக்கும் பேரும் புகழும்.. உன் பேருலயே தமிழ் வச்சிருக்க… எதுக்கு தான் உனக்கு போய் தமிழினியன்னு வச்சேனோ”, என்று பொன்னம்மாள் புலம்பவும், “அப்பத்தா அப்போ அப்பாக்கு இங்கிலிஷ் இனியன்னு வச்சிருங்க”, என்று அச்யுத் சொல்ல, அனைவரும் சிரித்தனர்.
“அடேய் இதான் சாக்குன்னு நீ எல்லாம் என்னை கலாய்க்குறல”, என்று அச்யுத்திடம் சென்று அவனின் தலையில் செல்லமாக கொட்டினான்.
“அப்பா அடுத்த வாரம் என் பர்த்டே வருதுல என் பிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிடலாமா?”, என்று அச்யுத் கேட்க, அவனும் கனியை பார்த்தான்.
“ஆமாம் அவனும் கேட்டுகிட்டே இருக்கான்… அடுத்த வாரம் வெறும் அவன் பிரண்ட்ஸ் மட்டும் கூப்பிடலாமே”, என்று அவளும் சொல்ல, “அதான் வீட்டோட மாகாராணியே சொல்லிட்டாங்களே… அடுத்த வாரம் உன் பிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிடு”, என்று சொன்னதும், அச்யுத் மேலும் கீழும் குதிக்க ஆரம்பித்து விட்டான்.
அப்போது அங்கு வந்திருந்தார் இனியனின் அலுவலக நண்பர் ஒருவர்.
“மிஸ்டர் இனியன் இவங்க உங்க பசங்க தான?”, என்று அவர் கேட்க, “ஆமா மிஸ்டர் வினோத் இப்போ தான் இவங்க ப்ரைஸ் வாங்கினாங்க பாக்கலயா?”, என்று இனியன் பெருமையாக கூற, “யா பார்த்தேன் தமிழ்ல தான?”, என்று அவர் கூறிய விதமே தமிழை சிறுமை படுத்துவது போல் தான் இருந்தது.
“தமிழலாம் இந்த காலத்துக்கு எதுக்கு இனியன்? பசங்களுக்கு பிரெஞ்சு, ஜேர்மன்னு ஏதாச்சு கத்து கொடுத்தா பியூச்சர்க்கு யூஸ் ஆகும்ல? தமிழே எனக்கு பிடிக்கல”, என்று அவன் சொல்லிக்கொண்டு செல்ல, செங்கனி அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தாள்.
“தமிழ்லாம் சுத்த வேஸ்ட் சார்”, என்று அவன் மேலும் தொடர, “நான் கொஞ்சம் பேசலாமா சார்?”, என்று செங்கனி கேட்டாள்.
அனைவரும் அவளை தான் பார்த்தனர். தமிழை மூச்சாக கருதுபவள் முன், தமிழை சாடியவனுக்கு என்ன பதில் அடி கொடுப்பாள் செந்தமிழின் செங்கனி?
Wow kavithai rendum super