தாயும் சேயும் எந்தப் பிரச்சினையும் இன்றி நலமாக இருந்ததால் அடுத்த நாள் இரவு வீட்டிற்குச் செல்லலாம் என வைத்தியர் கூறிவிட, அபர்ணாவோ பிடிவாதமாக பத்மாவுடன் அவர்களுடைய வீட்டிற்கு வருவதாகக் கூறினாள்.
சோர்ந்து போய் இருப்பவரிடம் எதுவும் கூற முடியாது அமைதியாக இருந்து விட்டான் குரு.
அபியும் குழந்தையும் அவளுடைய வீட்டிற்குச் சென்றுவிட அவர்களைப் பிரிந்து நொடி கூட இருக்க முடியாதவன் அவர்களின் பின்னே அவர்களின் வீட்டிற்குச் சென்றிருந்தான்.
பத்மாவுக்கோ குருவைக் கண்டு அதிசயமாக இருந்தது.
இவன்தான் அபர்ணாவை வீட்டை விட்டு அனுப்பினானா என அதிர்ச்சி அடைந்தார் அவர்.
குட்டி போட்ட பூனை போல தன்னுடைய மகளையே சுற்றிச் சுற்றி வரும் மாப்பிள்ளையைக் கண்டு அவருக்குள் இருந்த மனக் கசப்புகள் யாவும் நீங்கிப் போயின.
“அம்மா இவ ரொம்ப பிகு பண்றாம்மா… அவரப் பார்த்தா பாவமா இருக்கு..” என சாதனா கூறும் அளவிற்கு குரு அனைவரின் மனதிலும் தனக்கான இடத்தைப் பிடிக்கத் தொடங்கி விட்டிருந்தான்.
யாரும் அங்கே தன்னைத் தங்கும்படி கூறாததால் இரவு நேரத்தில் அங்கே தாங்காது காலை முதல் மாலை வரை தன் குழந்தையுடன் நேரத்தை செலவழிப்பவன் மனமே இன்றி இரவில் மட்டும் தன்னுடைய வீட்டிற்குச் சென்று விடுவான்.
அங்கே சென்றதும் அவனுக்கோ தூக்கம் தொலைதூரமாகிப் போகும்.
மீண்டும் விடிந்ததும் ஓடோடி வந்து அவளுக்கும் குழந்தைக்கும் ஆயிரம் முத்தங்களைத் திகட்டத் திகட்டக் கொடுத்துவிட்டு அவர்களோடு நேரத்தை செலவழிப்பவன் மீண்டும் இரவு சென்று விடுவான்.
இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருக்க பத்மாவோ அன்று மாலையில் கிளம்பியவனை “எதுக்காக தம்பி இப்படி அங்கேயும் இங்கேயும் அலைஞ்சுக்கிட்டு இருக்கீங்க..? இங்கதான் அபியோட ரூம் இருக்கே… நீங்க இங்கேயே ஸ்டே பண்ணிக்கோங்க… நைட் போயிட்டு மறுபடியும் மார்னிங் வரத்தானே போறீங்க… அதுக்கு இங்கேயே தூங்கிடலாமே…?” என பத்மா கூறிவிட அவனுக்கோ உள்ளம் துள்ளிக் குதித்தது.
அளவற்ற மகிழ்ச்சியை முகத்தில் காட்டிக் கொள்ளாதவன் பேச்சுக்கு கூட மறுக்காது,
“சரிம்மா…” எனக் கூறிவிட்டு மீண்டும் அவளுடைய அறைக்குள் சென்றுவிட அபர்ணாவுக்குத்தான் அவஸ்தை ஆகிப்போனது.
இன்றோடு குழந்தை பிறந்து 21 நாட்கள் கடந்திருக்க, மீண்டும் உள்ளே நுழைந்தவனை சங்கடமாகப் பார்த்தவள்,
“நீங்க ஆபீஸ்க்கு இப்போ போறது இல்லையா..?” என்றாள்.
“உன்னையும் குழந்தையும் விட்டுட்டு இப்போதைக்கு எங்கேயும் போறதா இல்லை அபி..” என முடித்துக் கொண்டான் அவன்.
“உங்களுக்கு இந்த ரூம் வசதிப்படாது… ஏசி எல்லாம் இங்க கிடையாது… இங்க இருந்து கஷ்டப்படுறதை விட நீங்க உங்க வீட்டுக்கு போய் நிம்மதியா தூங்கலாம்..” என்றாள் அபர்ணா.
சிரித்தான் அவன்.
“என்ன சிரிப்பு..?”
“உனக்காக கண்டில கொசு கடிக்கு மத்தில ஒரு மரத்துக்கு கீழ படுத்திருந்த எனக்கு இங்க தூங்க முடியாதா..? இது ஒன்னும் பெரிய விஷயமே கிடையாது…” என முடித்துக் கொண்டான் அவன்.
அதன் பின்னரோ பகல் முழுதும் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை இரவு முழுவதும் தூங்காது அழத் தொடங்கி விட குழந்தையைத் தூக்கி வைத்திருந்த அபர்ணாவைப் பார்த்தவன்,
“அவனை என்கிட்ட கொடு அபி… நைட்ல இவன் இப்படித்தானா..? பகல்ல ரொம்ப சமத்தா இருப்பானே..?” எனக் கூறியவாறு குழந்தையை தன்னுடைய கரத்தில் வாங்கிக் கொண்டவன் தூக்கி வைத்தவாறு நடக்கத் தொடங்கி விட அக்கணம் அவனை பிடிக்கத்தான் செய்தது அவளுக்கு.
பொறுப்பான தந்தைதான் எண்ணிக் கொண்டது அவளுடைய மனம்.
நேரமோ இரவு 11:30 கடந்து விட குழந்தையின் அழுகை மீண்டும் தொடங்கியது.
“என்னடி மறுபடி அழுறான்.. இப்போ என்ன பண்றது..?” என அவன் இதழ்களைப் பிதுக்கி சோகமாகக் கேட்க,
“பால் கொடுத்தா சரியாயிடுவான்… என்கிட்ட கொடுங்க..” என குழந்தையை வாங்கியவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த குருவைக் கண்டு தேகம் படபடக்க குனிந்து கொண்டாள்.
தான் இருப்பதால்தான் சங்கடம் கொள்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன் “நான் வேணும்னா கொஞ்ச நேரம் வெளியே இருந்துட்டு வரவா..?” என குரு கேட்க,
“ஐயோ வேணாம்.. அப்பா ஹால்லதான் படுத்திருப்பாரு… இந்த டைம்ல நீங்க வெளியே போனா ஏதும் நினைச்சுப்பாங்க.. இங்கேயே இருங்க..” என்றவள் தன் மீது மெல்லிய துணி ஒன்றை போர்த்தி விட்டு ஆடையை விலக்கி குழந்தைக்கு பாலை கொடுத்துவிட்டு அவளுடைய அங்கம் தெரியாமல் அந்த துணியால் மூடிவிட்டவள் அவனைப் பார்க்கவே இல்லை.
ஆனால் அவனின் பார்வையோ அவள் மீது மட்டும்தான் நிலைத்திருந்தது.
தடுமாறி தன் சிகையை கோதிவிட்டுக் கொண்டவன் அவள் சிரமப்பட்டு அமர்ந்திருப்பதைக் கண்டு தலையணை ஒன்றை எடுத்து அவளுக்கு வசதியாக முதுகுப் பக்கம் வைத்தவன் அவளை நன்றாக சாய்ந்து அமர வைத்தான்.
சற்று நேரத்தில் குழந்தையோ பாலைக் குடித்துவிட்டு தூங்கி விட ஆடையை சரி செய்து விட்டு குழந்தையை படுக்கையில் கிடத்தியவளுக்கு முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
“என்னோட பட்டுப் பையன்..” எனக் குனிந்து குழந்தையின் நெற்றியில் மென்மையாக முத்தத்தை பதித்து விட்டு அவள் நிமிர்ந்த போது அவளை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தது வளர்ந்த குழந்தை.
அந்த ஏக்கப் பார்வையில் தடுமாறியவள்,
“நீங்க தூங்கலையா..?” எனக் கேட்க,
“இன்னைக்கு உன் கூட இருக்கேன்ல நிம்மதியா தூங்குவேன்..” என்றவன் படுக்கையில் அவளுக்கு அருகே நெருங்கி அவளை அணைத்தவாறு படுத்துக்கொள்ள திடீரென தனக்கு இவ்வளவு நெருக்கத்தில் வருவான் என்பதை எதிர்ப்பாராது அதிர்ந்து போனாள் அவள்.
விலகச் சொல்லலாமா இல்லை நானே விலகிச் செல்லலாமா என எண்ணி அவனுடைய முகத்தைப் பார்க்க அவனோ விலகவே மாட்டேன் என்பதைப் போல அவளுடைய முகத்தைப் பருகுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய ஆழ்ந்த பார்வையில் முகம் சிவந்து போவதை அவளால் தடுக்க முடியவில்லை.
கடந்த அரை மாதத்திற்கு மேலாக அவன் தன்னையும் குழந்தையையும் பார்த்துப் பார்த்து அன்பாக கவனித்துக் கொள்வதில் அவளுடைய உள்ளம் நெகிழ்ந்து போயிருந்தது.
ஆனால் பழைய நினைவுகள் வந்து அவளுடைய முகத்தில் அடித்தாற் போல சில வலி உணர்வுகளை தருவித்து விட்டு சென்றுவிட இறுகிப் போனாள் அவள்.
அக்கணம் அவன் அதீத ஆசையோடும் பெருங் காதலோடும் அவளுடைய இதழ்களை நோக்கிக் குனிந்தவன்,
“ஐ லவ் யூ சோ மச் அபி..” என்றான்.
“ஐ ஹேட் யூ..” என்றாள் அவள்.
சட்டென தீச்சுட்டாற் போல விலகினான் அவன்.
“இப்பவும் நீங்க என்னை ஃபோர்ஸ் பண்ணிட்டுத்தான் இருக்கீங்க குரு..”
“என்ன அபி சொல்ற..? நான் உன்ன எதுக்குமே ஃபோர்ஸ் பண்ணலையே..” என வலியோடு கூறினான் அவன்.
“என்னால உங்க கூட சேர்ந்து வாழ முடியாதுன்னு சொன்னேன். பட் நீங்க அதை கொஞ்சம் கூட மதிக்கவே இல்லையே.. இதோ எங்க வீட்லையே வந்து ஸ்டே பண்ணிட்டீங்க..” சலிப்பாக கூறினாள் அவள்.
அமைதி காத்தான் அவன்.
“எனக்கு நிம்மதி வேணும் குரு.. உங்ககிட்ட இருந்து தனிமை வேணும்.. என் மேல உண்மையாவே காதல் இருந்தா இனி என்னப் பார்க்க வராதீங்க..” என்றதும் அவளுடைய படுக்கையில் இருந்து எழுந்து கொண்டவன்,
“நீ தூங்கு நான் போயிடுறேன்..” என்றான்.
அவனுடைய விழிகள் சிவந்து கலங்கின.
உணர்ச்சிப் பேரலையை அடக்கிக் கொண்டவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அபியின் கூந்தலை மெல்ல வருடி விட்டான்.
“பத்திரமா இரு அபி..”
“ம்ம்…”
“நீ சொல்றதும் சரிதான்.. இந்தக் கொடுமைக்காரன் உனக்கு வேணாம்.. நீ பத்திரமா இரு.. நம்ம குழந்தைய நல்லா பாத்துக்கோ.. நான் இனி வரமாட்டேன்.. உன்னை எதுக்கும் ஃபோர்ஸ் பண்ணவும் மாட்டேன்..
தெரியாம பண்ற தப்புக்குத்தான் மன்னிப்பு கிடைக்கும்.. தெரிஞ்சே தப்பு பண்ணிட்டு உன்கிட்ட மன்னிப்பு கேட்டு நிற்கிறது முறையே இல்லடி.. உனக்கு என்னை பிடிக்கும்னு நினைச்சேன் அபி… என் கூட வாழ்றதுல உன்னோட மனசுல ஒரு ஓரத்திலயாவது சின்ன ஆசை இருக்கும்னு நினைச்சேன்…
உன்னோட பழைய காதல் மறுபடியும் எனக்கு கிடைக்கும்னு நம்பினேன்… ஏன்னா நானும் உன்ன ரொம்ப லவ் பண்றேன்டி… எல்லாமே சரியாயிடும்னு சின்னதா ஒரு நம்பிக்கை இருந்துச்சு..
ஆனா என்னால உன்னோட நிம்மதி போகுதுன்னு இப்போதான் புரிஞ்சுகிட்டேன்.. என்னோட சந்தோஷத்தை விட எனக்கு உன்னோட சந்தோசம்தான் முக்கியம்.. நான் இல்லைன்னா நீ நிம்மதியா இருப்பேன்னா அந்த நிம்மதிய நான் உனக்கு கொடுக்கிறேன்.. இனி நான் வரவே மாட்டேன்…” என்றவன் கலங்கிய விழிகளோடு குனிந்து அவளுடைய இதழ்களில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.
அவனுடைய விழிகளில் வழிந்த கண்ணீர் அவளுடைய கன்னத்தைத் தொட அழுத்தமாக அவளுடைய இதழ்களை முத்துமிட்டு விட்டு பிரிந்து கொண்டவன்,
“திஸ் இஸ் மை லாஸ்ட் கிஸ்…” என வலியோடு சிரித்து விட்டு எழுந்தவன்,
“டேக் கேர் அபர்ணா..” என்ற வார்த்தையோடு அந்த அறையை விட்டு வெளியேறிவிட இவளுக்கோ நெஞ்சம் படபடத்துப் போனது.
‘கடைசி முத்தமா..?’
அப்போ இனி அவன் வரவே மாட்டானா..?
ஏனோ ஒரு விதமான பதற்றம் அவளைச் சூழ்ந்து கொள்ள தலையைப் பிடித்துக் கொண்டாள் அபர்ணா.
அதிலும் அவன் இறுதியாக அபர்ணா என்று அழைத்தது வேறு அவளைக் கொல்லாமல் கொன்றது.
அந்த நள்ளிரவில் அவன் தட்டு தடுமாறி மின் விளக்கைக் கூட ஓளிரச் செய்யாது நடந்து வீட்டின் கதவை குரு திறக்க அக்கணம் மின் விளக்கை ஒளிரச் செய்தார் அபர்ணாவின் அன்னை பத்மா.
“என்ன தம்பி இந்த நேரத்துல எங்க போறீங்க..?” என அவர் அதிர்ச்சியாகக் கேட்க,
“எங்க போறதுன்னே தெரியலைமா.. என்னால இனி யாருமே கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறேன்..” என அவன் கூற அவரோ திகைத்துப் போனார்.
“அம்மா ஒரு நிமிஷம் என் கூட வெளியே வரீங்களா..?” என பத்மாவை அவன் வெளியே அழைக்க சரி என்றவர் அவனோடு வெளியே வந்தார்.
தன்னுடைய காரைத் திறந்தவன் அதற்குள் வைத்திருந்த ஒரு கோப்பை விரித்து சில பத்திரங்களை எடுத்து பத்மாவின் கரத்தில் கொடுத்தவன்,
இந்த அக்கவுண்ட்ல இருக்கிற மொத்த பணமும் நான் அபர்ணாவுக்காக போட்டு வச்சிருக்கிறது… இதுலையே ஏடிஎம் கார்டு பின் நம்பர் எல்லாத்தையும் வச்சிருக்கேன்..
அவகிட்ட இதெல்லாம் நான் கொடுத்தேன்னு சொல்லாதீங்க.. ரோசக்காரி எல்லாத்தையும் பறிச்சு என்னோட மூஞ்சிலேயே தூக்கி எறிஞ்சிடுவா..” என்றவனின் குரல் கரகரப்போடு வெளியே வந்தது.
“தேவைப்படும்போது எல்லாத்தையும் உபயோகப்படுத்துங்க… அவளைப் படிக்க வைங்க… என் பையன பார்த்துக்கோங்க…” என்றவனின் குரல் தழுதழுத்து விட பதறிப் போனார் பத்மா.
“இதெல்லாம் எதுக்கு தம்பி என்கிட்ட கொடுக்குறீங்க..? நீங்களே இருந்து அவங்க ரெண்டு பேரையும் நல்லா பாத்துக்கலாமே..?”
“அழகான மீன் தொட்டி மாதிரிதான் அவளோட காதல்மா..
அதுக்குள்ள அன்பு எதிர்பார்ப்பு ஆசை ஏக்கம் காதல்னு ஆயிரம் மீனுங்க..
நான் அந்த மீன் தொட்டியை உடைச்சிட்டேன்மா.. அதுக்குள்ள இருந்த மீனுங்க எல்லாமே செத்துப் போயிருச்சு..
மறுபடியும் அந்த மீன் தொட்டிய ஒட்ட வைக்க முடிஞ்ச என்னால அவளோட உணர்வுகளுக்கு மறுபடியும் உயிர் கொடுக்க முடியல.
அவளுக்கு நிம்மதி வேணுமாம்.. எனக்கும் அவ நிம்மதிதான் வேணும்.. அதனாலதான் போறேன்..” என்றவன் அதன் பின்னர் அமைதியாகினான்.
அவனால் பேச முடியவில்லை.
தொண்டை அடைத்தது.
எவ்வளவு கம்பீரமாகப் பேசி நான் இப்படித்தான் என்பது போல நிற்பவன் இப்போது கண்கலங்கி நிற்பதைக் கண்டு அவருக்கோ நெஞ்சே அடைத்துவிட்டது.
“ஐயோ கவலைப்படாதீங்க தம்பி.. இதெல்லாம் வேணாம்… கூடிய சீக்கிரமே உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற எல்லா பிரச்சினையும் சரியாயிடும்.. நீங்க எத நினைச்சும் கவலைப்படாதீங்க..” என அந்தப் பத்திரங்களை அவர் அவனிடம் கொடுக்க,
“இல்லம்மா நீங்களே வச்சுக்கோங்க நான் கிளம்புறேன்..” என்றவன் அவசர அவசரமாக தன்னுடைய காருக்குள் சென்று அமர்ந்து கொண்டான்.
இன்னும் சற்று நேரம் அங்கே நின்றாலும் கூட எங்கே தன்னுடைய கண்ணீரைக் கண்டு விடுவாரோ என்ற பதற்றத்தில் உள்ளே வந்து அமர்ந்தவனுக்கு வெகுவாய் உள்ளம் வலித்தது.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️