💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 67
சற்று முன் சொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டதும், தலை சுற்றிப் போய் அமர்ந்திருந்தான் தேவன்.
நாளை வினிதாவுக்கும் அஷோக்கிற்கும் நிச்சயதார்த்தம் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. வினிதாவின் நண்பியொருத்தி அவளை வாழ்த்தி ஸ்டேட்டஸ் வைத்திருந்ததைப் பார்த்தவனுக்கு உலகம் தலை கீழாகச் சுழலும் உணர்வு.
என்ன செய்வது என்றே புரியவில்லை அவனுக்கு. அறையில் அங்குமிங்கும் நடந்தவன் கட்டிலில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொள்ள, அங்கு வந்த ரூபன் அதிர்ந்து விட்டான்.
“டேய் தேவா! என்னாச்சு? ஏன் இப்படி இருக்க?” என்று படபடப்போடு வினவ, “அவ..அவ ஏன்டா இப்படி பண்ணுறா? என்னை மொத்தமா சாகடிக்கனும்னே முடிவு பண்ணிட்டாளா? நான் என்னடா தப்பு பண்ணுனேன்?” தலையில் அடித்துக் கொண்டு கதறியவனைக் கண்டு,
“எதுவும் இல்ல டா. ரிலாக்ஸ். இவ்ளோ டென்ஷன் ஆகாத தேவா. மெதுவா மெதுவா மூச்சு விடு” அவனது முதுகை நீவி விட்டு தண்ணீர் அருந்த வைத்தான் சகோதரன்.
விருட்டென்று வெளியேறியவன், புயல் வேகத்தில் பைக்கைக் கிளப்பி வினி வீட்டின் முயன்றால் சென்று நின்றான்.
“வினிதா! வெளியே வா” அவனது சத்தம் கேட்டு பெண்கள் முதல் சிறுவர்கள் வரை வந்து நிற்க, முகம் வெளிறிப் போய் அவன் முன்னே தோன்றினாள் அவள்.
பின்னால் திரும்பி அவள் பார்த்த பார்வையில் அனைவரும் உள்ளே சென்று விட, “என்ன தேவ்? இங்கே எதுக்கு வந்த?” என்று கேட்டவளுக்கோ இதயம் வெளியில் வந்து தாறுமாறாக அடித்துக் கொண்டது.
“ஏன் நான் வரக்கூடாதா? நான் வருவேன். அஷோக் கூட சந்தோஷமா நிச்சயதார்த்தம் பண்ணிப்பனு நெனச்சு ஒதுங்கி இருப்பேன்னு நினைக்கிறாயா?” அவன் கடுமையாக கேட்டு கேள்வியில் அவள் திக்கென்று அதிர்ந்து போனாள்.
இது எப்படி இவனுக்குத் தெரிந்தது என்று யோசித்தவள், பின்னர் தலையைக் குனித்துக் கொள்ள, “நீ தலை குனிஞ்சு நிக்கிறத பாக்க வரல. என்னைப் பார்த்து பதில் சொல்லு. என்ன நடக்குது? நீ சந்தோஷமா இந்த நிச்சயதார்த்தத்துக்கு ஒத்துக்கிட்டு இருப்பனு நான் நம்ப மாட்டேன்.
நீ எவ்வளவு தான் மனச கல்லாக்கிக்கிட்டு பொய் சொன்னாலும் அது எனக்கு தெரியும். உன் முகத்துல சந்தோஷம் இல்லை என்று தெரிஞ்சுக்க எனக்கு ஒரு செக்கன் கூட பத்தாது. எனக்கு உன்னைத் தெரியும் வினி. சொல்லு என்னாச்சு? என்ன நடக்குது? இப்போவாச்சும் வாய் திறந்து பேசுடி”
“ஐயோ ப்ளீஸ் தேவ்! நான் எதுவும் சொல்லற நிலைமையில இல்ல. இங்கிருந்து போயிடு” தலையில் கை வைத்தாள் வினிதா.
“நீ சொல்லலனாலும் நான் போவேன். ஆனா உன்னையும் கூட்டிக்கிட்டு. எனக்கு தெரிஞ்சே ஆகணும் என்ன நடக்குதுன்னு. இப்போ சொல்லுறியா இல்ல உன் அப்பனுக்கு ஃபோன் போட்டு கேட்கவா?” அவன் கேட்டதும் அவளுக்கு நடுங்கிப் போனது.
“ஐயோ அப்படி மட்டும் பண்ணிடாத. நான் அப்புறமா சொல்றேன் டா. ப்ளீஸ்! அவங்க வீட்டுக்கு வர முன்னால போயிடு. உன்னை பார்த்தா பெரிய பிரச்சனை ஆயிடும்” அவனை அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள் வினிதா.
“முடியாது வினி. உன்னை விட எனக்கு பிடிவாதம் அதிகம். இப்போ நீ சொல்லியே ஆகனும். என்ன நடக்குதுனு சொல்லு” அழுத்தம் கூட்டி சொன்னவன், அங்கிருந்து நகர்வதாகத் தெரியவில்லை.
“நாளை எனக்கும் அஷுக்கும் நிச்சயதார்த்தம். இப்போ போறியா?”
“அது எனக்கு தெரிஞ்ச விஷயம். இதைக் கேக்கணும்னு நான் இவ்வளவு தூரம் வரல. ஏன் நடக்குது? நிச்சயதார்த்தத்துக்கு நீ ஏன் சம்மதிச்ச? இல்லல்ல. நீ சம்மதிச்சிருக்க மாட்டனு எனக்கு தெரியும்.
ஆனால் சொன்னா தானே டி ஏதாவது தெரியும். இப்படி கமுக்கமா இருந்து நீயும் கஷ்டத்தை அனுபவிச்சு, என்னையும் கஷ்டப்படுத்துற. சொல்லு வினி” கேட்டுக் கேட்டு ஓய்ந்து போனான் அவன்.
“என்ன சொல்லணும்னு நீ எதிர்பார்க்கிற தேவ்? முடிஞ்சது முடிஞ்சு போச்சு. திரும்பவும் வேண்டாம். இந்த கஷ்டம், அழுகை எல்லாம் வேணாம். அது என் கூடவே போகட்டும். நீ சந்தோஷமா வாழு” என்றவளுக்கு அடிக்க கையை ஓங்கியிருந்தான் தேவன்.
அவள் கண்களை இறுக மூடிக் கொள்ள “ப்ளீஸ் வினி என்னை கோபக்காரனா மாத்தாத. ஏன்டி இப்படி பண்ணுற? என்னைப் புரிஞ்சுக்க மாட்டியா?” கோபத்தில் ஆரம்பித்து இயலாமையில் முடித்தான் தேவன்.
“எனக்கு நிச்சயதார்த்தத்தில் விருப்பம் இல்ல. அது உனக்கே புரியுதுல்ல. ஆனால் இதை நிறுத்தவோ, இதில் இருந்து விலகவோ முடியாத சூழ்நிலையில் இருக்கேன். அவ்வளவு தான் சொல்ல முடியும்” என்று அவள் கூற,
“என் கூட வந்துடு வினி. நான் பாத்துப்பேன்” என்க, அவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.
“வந்துடலாம் தேவ்! ஆனால் என் குடும்பத்துக்கு என்ன பதில் சொல்லுறது?”
“அவங்களே உன்ன பத்தி சிந்திக்கல. நீ எதுக்காக யோசிக்கனும்? உனக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சும் தானே நிச்சயதார்த்தத்தை பண்ணி வைக்க போறாங்க. அப்புறம் நீ எதற்காக இங்கு இருந்து கஷ்டப்படனும்?”
“அவங்க பண்ணுறதை ஏத்துக்க முடியல தான். இருந்தாலும் என்னால அவங்கள உதறித் தள்ளிட்டு வர முடியாது. எனக்கு என் அப்பா, அம்மாவோட மரியாதை முக்கியம். நான் வரமாட்டேன். ஒரு நிமிஷம் போதும் உறவுகளை உதறித் தள்ள. ஆனால் அது கூட சேர்ந்து வாழ எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தெரியும். என் குடும்பத்தை இழக்க நான் விரும்பல” அவள் கண்களில் கண்ணீர் அருவியென வழிந்தது.
“அப்படின்னா உன் காதலை இழக்க நெனச்சுட்டியா?” என்று கேட்க, அவள் இதழ்களில் விரக்திப் புன்னகை.
“என்ன பண்ணுறது? இழந்து தான் ஆகனும்கிற சூழ்நிலையில நான் இருக்கேன். உன் காதலுக்காக நியாயம் கேட்க வந்திருக்கேன்னு புரியுது. அதுக்கு பதில் சொல்லக் கூடிய நிலைமையில நான் இல்ல. என்னை ஏமாற்றுக்காரியாக் கூட நினைச்சுக்கோ. என்ன நினைத்தாலும் பரவாயில்லை.
நான் பண்ணுறது தப்புன்னு வெளியில் இருந்து பார்த்தா புரியும். ஆனா என்னால என் அப்பாவை விட்டுக் கொடுத்துட்டு வர முடியாது. இப்படி சிக்கல்ல மாட்டிக்கிட்டு இருக்கும் போது தெரியுது நான் காதலிச்சு இருக்கவே கூடாதுன்னு. காதலிச்சு தப்பு பண்ணிட்டேன்.
எந்த பக்கத்துக்கு போனாலும் அடுத்த பக்கத்துக்கு நான் செய்றது தப்பா தான் தெரியும். ஆனால் முடியல தேவ். இப்போ இருக்கிற சூழ்நிலையில என்னால அவரை விட்டுக் கொடுக்க முடியல. ப்ளீஸ் போயிடு” மன்றாடிக் கேட்டாள் அவள்.
“அப்பா அப்பா அப்பா! அப்போ என் காதலுக்கு வால்யூவே இல்லையா?” அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
“உனக்கு இந்த சிட்டுவேஷன் புரியாது தேவ். ஏன்னா உன் வீட்டுல காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாங்க. அதனால உனக்கு இந்த வலி, கஷ்டம், என்னுடைய இக்கட்டு எதுவும் புரியாது. ஒன்னே ஒன்னு கேட்கிறேன். உங்க அம்மா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாங்க.
அவங்களுக்கு நீ எது பண்ணாலும் ஓகே. அவங்க உன் கூட நிப்பாங்க. ஆனால் ஒரு வேளை உங்க அம்மா வேணாம்னு சொல்லி இருந்தா, நீ இப்படி வந்திருப்பியா? என்னை லவ் பண்ணி இருப்பியா? அதுக்கு மட்டும் எனக்கு பதில் வேணும்” அவள் அழுத்தமாகக் கேட்க, அவனிடம் மௌனம் மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
அவள் கேட்பது உண்மை தான். மேகலை அவனது காதலுக்கு மறுப்பு தெரிவித்தது இல்லை. இருப்பினும் அவர் வேண்டாம் என்று சொல்லி இருந்தால் அவன் நிச்சயம் காதலித்து இருக்க மாட்டான். அதே நிலையில் அல்லவா இவளும் இருக்கிறாள் என்பது அவனுக்கு புரியவே செய்தது. இருந்தாலும் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தது.
“அப்படின்னா என்னை விட்டு போயிடுவியா வினி? ஏன் இப்படி பேசுற? என்னால தாங்க முடியலடி. நான் வேணா உன் அப்பா கிட்ட பேசட்டுமா?” உருகி உருகிக் காதலித்த பெண்ணை இன்னொருவன் நிச்சயம் செய்வதை எவன் தான் விரும்புவான்?
“அய்யோ வேண்டாம் தேவ். எதுவானாலும் நானே பார்த்துக்கிறேன். இதெல்லாம் உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு தான் இருந்தேன். ஆனா நீ வந்து எல்லாம் கேட்டுட்ட. என்னால மறைக்க முடியல. என் நிலைமையை நீ புரிந்து கொள்வனு நம்புறேன். ஒருத்தரோட சூழ்நிலையை வெளியில் இருந்து பார்த்தா அவங்க அவங்களுக்கு நான் தப்பா தான் தெரிவேன்.
என்ன பண்றதுன்னு தெரியாத ஒரு நிலைமைல நான் இருக்கேன். காதல் தான் வேணும்னு வந்துடலாம். ஆனால் நாளைக்கு என் குடும்பம் அடைய போற அவமானத்துக்கு நான் பொறுப்பாக நினைக்கல. குடும்பம் குடும்பம்னு இருக்கேனா ஏன் காதலிச்சனு நீ கேட்கலாம். அதுக்கு சத்தியமா என் கிட்ட பதில் இல்லை. எனக்கு தெரியல தேவ். என்ன உணர்றேன்னு எனக்கு புரியல” அவளிடம் விம்மல் வெடித்தது.
அவள் நிலை அவனுக்குப் புரிந்தது. இனி என்ன செய்வது? அவள் கோபமாக பேசி இருந்தால் கூட இவன் திருப்பி பேசி இருப்பான். அவளின் அழுகை அவனது மனதை உலுக்கியது.
உருகி விட்டான் தேவன். தனது காதலில் சந்தோஷம் என்பதே மலராதா என்ற ஏக்கம் அவனுள்.
“வினி” என்று கை நீட்ட அவளோ நடுங்கும் உதடுகளோடு அவனைப் பார்த்தாள்.
“உனக்கு குடும்பம் தான் பெருசுன்னு சொல்லுற. காதலை விட்டுக் கொடுக்கிறேன்னு சொல்லுற. எப்படி வேணா போடி, உனக்கு நான் வேணாம்லனு என்னால சொல்ல முடியல. எனக்கு நீ வேணும்! அதைத் தவிர என்னால வேறு எதையுமே சொல்ல முடியல.
நீ எனக்காக வந்தா சந்தோஷப்படுவேன். இல்லனாலும் என் மனசுல நீ தான் இருப்ப. இந்த சினிமால வர்ற மாதிரி பொண்ண துக்கிட்டு போறது, ஃபைட் பண்ணுறது எல்லாம் என்னால பண்ண முடியல. அதெல்லாம் வெறும் சினிமா தான். நமக்குன்னு நடக்கும் போது, அந்த நிலைமையில நாம இருக்கும் போது அப்போ புரியும் அந்த வலி, அந்த வேதனை எப்படி இருக்கும்னு.
நீ என்னிக்கும் என் காதலுக்கு துரோகம் செய்ய மாட்டனு எனக்கு தெரியும். அதை விட்டுக் கொடுத்துடாத வினி. நான் உன்னை காதலிக்கிறேன். இந்த நிலைமையில உன் காதலை சந்தேகப்படுறது சரி இல்ல. அந்த தப்பை நான் பண்ண மாட்டேன். நீ மனசார என்னை விட நினைக்கலனு எனக்கு புரியுது. எது பண்ணாலும் உன்னை ஏத்துப்பேன் வினி.
உனக்கு நிச்சயம் ஆனாலும் என் மனசுல நீ இருப்ப. ஏன்னா மனசார எனக்கும் உனக்கும் எப்போவோ கல்யாணமாயிடுச்சு. நான் உன் கூட வாழ்ந்துட்டேன் வினி.நான் போறேன் டி. எதுவா இருந்தாலும் கால் பண்ணு. உன்னை நெனச்சிட்டு நான் இருப்பேன்” அவன் கண்கள் கலங்க விடைபெற்றான்.
அவளுக்கோ மனம் அனலில் இட்ட புழுவாகத் துடித்தது. அவனின் கோபத்தைக் கூட தாங்குபவளால், இந்தக் கலக்கம் சூழ்ந்த முகத்தைப் பார்க்க இயலவில்லை. ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி? காதலிச்சது ஒரு தவறா?’ அவளின் உள்ளம் ஆதங்கத்தோடு கூக்குரலிட்டது.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி