மனம் முழுக்க வேதனை புழுவாய் அரிக்க தூங்க முடியாது ஓவிய அறைக்குள் வந்தவன் ஓவியம் வரைய ஆரம்பித்திருந்தான்.
அபர்ணா இல்லாத நாட்களில் அவளை நினைத்து ஏங்கும் போதெல்லாம் சோறு தண்ணி மறந்து அவளை ஓவியமாக வரைந்து தன் மனதை தேற்றிக் கொள்வான் அவன்.
அதிலும் அவளோடு எப்படி எல்லாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என அவன் நினைத்து ஏங்குகின்றானோ அந்த உணர்வுகள் அப்படியே ஓவியமாக உருவம் பெற்று விடும்.
போகப் போக அவள் இல்லாத நாட்களில் கரங்களின் நடுக்கம் அதிகரித்து விட ஓவியம் வரைவதையே நிறுத்தி இருந்தான் அவன்.
இப்போதோ அவள் மீண்டும் வந்த பின்னர் அவளும் குழந்தையும் தானும் ஒன்றாக இருப்பது போல படம் வரைய முயற்சிக்கலாம் என எண்ணியவாறு உள்ளே வந்து முயன்றவனுக்கு இன்னும் மெலிதாக கைகள் நடுங்கத்தான் செய்தன.
முன்பு போல அவனால் இலகுவாக ஓவியம் வரைய முடியாது போக அப்படியே பாதி வரைந்த ஓவியத்தோடு வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவன் கேவல் சத்தம் கேட்டதும் அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தான்.
அங்கே உறைந்து போய் நின்ற தன்னவளைக் கண்டதும் அவனுக்கோ கற்பனையோ என்று கூடத் தோன்றி விட்டது.
நிஜமாக அவள்தான் வந்திருக்கிறாளா இல்லை அவளுடைய உருவத்தை மனதில் கற்பனை செய்து வரைவதால் தன் கற்பனைதான் உருவமாகத் தெரிகிறதோ என்று குழம்பிப் போனவன் விழிகளை கசக்கி விட்டு மீண்டும் அவளைப் பார்க்க அவளுடைய அழகிய உருவமோ மறையாமல் அப்படியே அவனுடைய கண்களுக்குத் தெரிந்தது.
அதுவும் இன்று அவள் வீட்டில் போட்டிருந்த அதே ஆடையில் கசங்கிய தலையுடன் அழுத விழிகளோடும் நிற்பதைக் கண்டு நிஜத்தில் அவள்தான் வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன் வேகமாக அவளை நெருங்கினான்.
“என்ன அபி..? எதுவும் பிரச்சனையா..? ஹேய் ஆர் யு ஓகே..? இந்த மிட் நைட்ல யார் கூட வந்த..?” என அவன் பதறியவாறு அவளிடம் கேள்விகள் கேட்க அப்போதுதான் சுயத்திற்கு வந்தவள் கண்ணீரோடு அவனைப் பார்த்தாள்.
“இ.. இதெல்லாம் எப்போ வரைஞ்சீங்க..?” என அங்கே இருந்த அவர்களுடைய ஓவியங்களைக் காட்டி அவள் அழுதவாறே கேட்க,
அவனுடைய முகத்திலோ மென்மையான புன்னகை படர்ந்தது.
“என்கூட வா..” என அவளை அந்த ஓவியங்களுக்கு அருகே அழைத்துச் சென்றவன் ஒவ்வொரு ஓவியத்திலும் திகதி மாதம் இருப்பதை அவளுக்கு சுட்டிக் காண்பிக்க ஒவ்வொரு படத்திலும் இருந்த திகதிகளைப் பார்த்தவளுக்கு நில்லாமல் அழுகை பெருகியது.
அவள் இந்த வீட்டை விட்டுச் சென்ற பத்தாவது நாளில் இருந்தே அவளுடைய படங்களை வரைய ஆரம்பித்து விட்டானா..?
அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் அவள்.
“பொ… பொய் சொல்லாதீங்க.. நான் இந்த வீட்டை விட்டுப் போய் பத்தாவது நாளே இதெல்லாம் வரைஞ்சீங்களா..? இல்லன்னா நான் பாக்கணும்ங்கிறதுக்காக இப்போவே வரைஞ்சு இப்படி எல்லாம் டேட் போட்டு வச்சிருக்கீங்களா..?” என அவள் அவனைப் பார்த்து சந்தேகமாகக் கேட்க,
அவள் அருகே வந்தவன்,
“இந்த டைம்ல நீ இங்க வருவேன்னு எனக்குத் தெரியாது.. நீ இந்த வீட்டுக்கு வந்த போது கூட நான் உன்கிட்ட இந்த ஓவியத்தை பத்தி எதுவுமே சொல்லல… இப்போ கூட நீயா தான் இங்கே தேடி வந்த..
இவ்வளவு பெயிண்டிங்கையும் ஒரே நாள்ல வரைஞ்சுட முடியாது அபி..
இது ஒவ்வொன்னும் என்னோட உசுரோட கலந்த உணர்வுகள்..
கிட்டத்தட்ட 100க்கு மேல வரைஞ்சு வச்சிருக்கேன்.” என்றான் அவன்.
“அப்போ இவ்வளவு காதலா வரைஞ்சு வச்சிருக்கீங்க..? உங்களுக்குத்தான் என் மேல காதலே கிடையாதே… என்னை அனுப்பிட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ண ட்ரை பண்ணவர் எப்படி இப்படி எல்லாம் வரைஞ்சீங்க..?” என அவள் கோபத்தோடு கேட்க,
“அப்போ இந்த முட்டாளுக்கு உன் மேல இருந்த காதல் புரியல.. மூணாவது நாளே எதையோ மிஸ் பண்ற மாதிரி இருந்துச்சு… ஆபீஸ்ல கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நீ சமோசாவ சாஸ்ல முக்கி சாப்பிடுவியே அப்படியே அத்தனை பேரும் முன்னாடியும் சாப்பிட்டேன்.. அப்போ கூட புரியலை…
அதுக்கப்புறம் உன்னை காணோம்.. நீ வீட்டுக்குப் போகலன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் உன் மேல எவ்வளவு காதல் வெச்சிருக்கேன்னு புரிஞ்சுகிட்டேன்… என்னோட காதலை புரிஞ்சிக்கிற நேரம் நீ எங்க இருக்கன்னு என்னால கண்டுபிடிக்க முடியல அபி… குழந்தை எதுவுமே தேவையில்லை நீ மட்டும் போதும்னு உன்ன ஊர் ஊரா தேடி அலைஞ்சு மாதவன கண்டுபிடிச்சு மாதவன் மூலம் சுரேஷ்ஷ கண்டுபிடித்து அங்க தேடி வந்து பார்த்தப்போ அங்க நீ இல்லைன்னு தெரிஞ்சதும் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..?
அதுவும் அந்த ராஸ்கல் என்கிட்டயே உன்னைத் திருடின்னு சொன்னான்.. உண்மைய கண்டுபிடிச்சு அந்த நாயை அடி வெளுத்துட்டேன்..” என்றதும் சுரேஷின் நினைவில் முகம் கசங்கியவள் அவன் அடிவெளுத்து விட்டேன் எனக்கூறியதும் மலர்ந்து சிரித்தாள்.
“பொறுக்கி ராஸ்கல்.. என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினான்..” என அவள் கூற தெரியும் என்றவன் அவனுடைய காலில் கத்தியை சொருகியது தொடக்கம் கையை உடைத்தது வரை கூற இவளுக்கோ உள்ளம் குளுகுளுவென இருந்தது.
அன்று அவன் எல்லை மீறி அவளைத் தொட முயன்ற போது எப்படி பதறிப் போனாள் எவ்வளவு கெஞ்சினாள் அன்று அவன் செய்த அநியாயத்திற்கு இந்தத் தண்டனை வேண்டும்தான் என குளிர்ந்து போனது அவளுடைய மனம்.
அதை விட குரு கூறிய வார்த்தைகளில் அவளுடைய உள்ளம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.
அவன் தன்னை தனக்காக மட்டுமே தேடி இருக்கிறான்.
அவனுக்கும் என் மீது காதல் இருந்திருக்கிறது. அந்தக் காதலை நான் சென்றதன் பின்புதான் உணர்ந்திருக்கிறான் உணர்ந்ததும் கல்யாணத்தை நிறுத்தி விட்டு அவளை மட்டுமே தேடி அலைந்திருக்கிறான் என்பதெல்லாம் தெரிந்ததும் அவளுடைய காயம் கொண்ட மனமோ நொடியில் சமாதானமாகியது.
போதும் அவனை தவிர்த்து தவிக்க விட்டதெல்லாம் போதும்.
இந்த நொடியே அவனை அணைத்து அவன் ஆசையாக வரைந்து வைத்திருந்த ஓவியங்களில் இருப்பதைப் போலவே அவனுடன் வாழ்ந்து காட்ட வேண்டும் என எண்ணியவள் மெல்ல அவனை நெருங்கி வந்தாள்.
“அபி..?” அதிர்ந்து நம்ப முடியாது தன்னை நெருங்கியவளைப் பார்த்தவனுக்கோ இதயம் தொண்டைக்குள் வந்து துடிக்கத் தொடங்கியது.
“ரொம்ப நல்லா வரைஞ்சு இருக்கீங்க ஓவியரே..” என்றவள் அவனுடைய கன்னத்தில் அப்பியிருந்த மஞ்சள் நிற பெயிண்டை தன்னுடைய பெரு விரலால் துடைத்து விட அவனுக்கோ தேகம் அவளுடைய நெருக்கத்தில் படபடத்துப் போனது.
தன் உடலோடு பட்டும் படாமலும் நெருங்கி நின்றவளைத் தன்னுடலோடு இறுக்கி அணைக்க வேண்டும் போன்ற ஆவேசமான உணர்வு அவனை ஆட்கொள்ள தன் கரத்தில் இருந்த மெல்லிய தூரிகையை இறுகப்பற்றினான் அவன்.
அவன் பற்றிய வேகத்தில் அந்த மெல்லிய தூரிகையோ இரண்டாக உடைந்து விட,
அதைப் பார்த்தவுடன் அவளின் இதழ்களோ சிரிப்பில் மலர்ந்தன.
“ஏன் பிரஷ்ஷ உடச்சிட்டீங்க..? சரி இப்போ என்ன வரைஞ்சுட்டு இருந்தீங்க..?” எனக் கேட்டவள் அவன் பாதி வரைந்து வைத்திருந்த ஓவியத்தை சென்று பார்த்தாள்.
அங்கு குழந்தையும் காதலோடு பார்க்கும் அவனும் மட்டுமே படத்தில் இருக்க அவளுடைய படமோ முழுமை பெறாது இருந்தது.
“நீங்களும் உங்க பையனும் மட்டும் தான் இருக்கீங்க.. ஏன் இன்னும் என்னை வரையல.” என அவள் கேட்க,
“நீ என்ன காதலா பாக்குற மாதிரி என்னால கற்பனை பண்ணவே முடியல அபி… என்னால உனக்கு நிம்மதி இல்லைன்னு சொன்னேல்ல.. உன்னோட காதல் இல்லாமயே போயிடுச்சுன்னு நினைச்சுக்கிட்டே வந்தேன்…
என்னால வரையவே முடியல.. உன்னை நினைச்சாலே கை எல்லாம் நடுங்குது… ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ப்… மனச ஒருநிலைப்படுத்தவே முடியல… ரொம்ப நேரமா நீ என்னை காதலா பாக்குற மாதிரி வரைய ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்…” என வலியோடும் சோர்வோடும் அவன் கூற,
அங்கே இருந்து சிறிய இருக்கையை எடுத்து அவனின் முன்பு அமர்ந்து கொண்டவள்
“என்னைப் பார்த்து இப்போ வரைங்க..” எனக் கூற,
அவனோ மறுப்பாக தலை அசைத்தவன்,
“நீ என்னை காதலா பாக்குற மாதிரி என்னால வரைய முடியாது…” என்ற வார்த்தைகளை அவளுடைய காதல் பார்வையில் அப்படியே விழுங்கிக் கொண்டான் அவன்.
என்ன பார்வை இது..?
அவளுடைய விழிகளில் ததும்புவது முழுவதும் காதல் தானே..?
திகைத்துப் போனான் அவன்.
அந்தக் காதல் பார்வை என்னைத்தான் தழுவுகின்றதா..?
அவனால் நம்பவே முடியவில்லை.
ஆனந்தத்தில் தேகம் பரபரக்க வேகமாக அவளை நெருங்கியவனை வேண்டாம் என தலையசைத்து மறுத்தாள் அவள்.
“ஓவியத்த வரைஞ்சுட்டு என்கிட்ட வாங்க..” என அவள் கட்டளையாய் கூற,
அவளை அள்ளி அணைக்கும் ஆசையில் வேக வேகமாக பிரஷைத் தேடியவன் கீழே உடைந்து கிடந்த பிரஷைக் கண்டு ப்ச் என ஆட்சேபக் குரலை எழுப்பி விட்டு வேகமாக வேறொரு தூரிகை ஒன்றை எடுத்து வந்தவன் தன்னால் முயன்ற வேகத்தில் அவளை வரைவதற்கு சித்தம் கொண்டான்.
கரங்கள் இன்னும் வேகமாக நடுங்கின.
மனமோ வெகுவாக தடுமாறியது.
மிகச் சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவளைப் பார்த்தவன் அவ்வளவுதான் மொத்தமாக சித்தம் பிழைத்தவன் போல அந்தக் காதல் பார்வையில் உறைந்தான்.
இதற்காகத் தானே இத்தனை மாதங்கள் ஏங்கினான்.
இந்த ஒன்றுக்காகத் தானே இவ்வளவு நாள் தவம் கிடந்தான்.
இதோ அவளுடைய அத்தனை ஒட்டுமொத்த காதலையும் திரட்டி என்னை கொக்கி போட்டு இழுப்பது போல பார்க்கிறாளே..
ஐயோ..!!
இரக்கமற்றவள்.
வரையாமல் அவள் அருகில் வரக்கூடாதாமே..
என்னுடைய உயிர் உருகி தரையில் உருண்டு அவளிடம் ஓடிவிடும் போலிருக்கிறதே…
ஹும்ம்…
பெருமூச்சை விட்டுக்கொண்டு மீண்டும் வரைவதற்கு தூரிகையை அவன் ஏந்த அவனுடனேயே அவன் போராட வேண்டி இருந்தது.
“அ.. அபி ஐ கான்ட்.. என்னால முடியல.. இப்பவே உன் பக்கத்துல வரணும் போல இருக்கு… உன்ன இறுக்கமா ஹக் பண்ணனும் போல இருக்கு… மூச்சுமுட்டுற அளவுக்கு உன்ன முத்தங்களால குளிப்பாட்டணும் போல இருக்கு.. ப்ளீஸ் என்ன தடுக்காத…” என்றான் அவன்.
அவன் கூறக் கூற அவளுடைய கன்னங்களோ சிவந்தன.
ஆனால் தன்னுடைய பார்வையை சிரிதும் தளர்த்தாதவள் இன்னும் அவனை ஆழ்ந்து காதலாய்ப் பார்த்து தலையை சரித்தவாறு,
“தாராளமா நீங்க என் பக்கத்துல வரலாம்… எவ்வளவு நேரம் வேணும்னாலும் என்ன ஹக் பண்ணலாம்… மூச்சுமுட்டுற அளவுக்கு எத்தனை கிஸ் வேணும்னாலும் எனக்குப் பண்ணலாம்.. ஆனா அந்த ஓவியத்தை முடிச்சிட்டு என்கிட்ட வாங்க…” என அவள் மீண்டும் கூறிவிட அவள் சொல்லிய விதத்தில் அவனுடைய ரத்த நாளங்களும் சூடேறிப் போயின.
அவளே அனுமதி கொடுத்துவிட்டாள்.
அழுத்தமாக தன்னுடைய சிகையை கோதிக் கொண்டவன்,
“ஓகே ஓகே.. ஊப்ஸ்… என்னால முடியும்..’ என்றவன் சிரமப்பட்டு அவளுடைய ஆழ்ந்த விழிகளுக்குள் சிக்காமல் மெது மெதுவாக அவளுடைய காதல் பார்வையுடன் கூடிய உருவத்தை வரைய ஆரம்பித்தான்.
மிகவும் சிரமமாக இருந்தது.
ஒரு ஓவியம் வரைவதற்கு இவ்வளவு சிரமப்படுவான் என அவனே சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை.
அரை மணி நேரத்திற்குள் வரைந்து முடித்து விடுபவன் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவளை ஓவியத்தில் செதுக்கிக் கொண்டிருந்தான்.
அவளை வரையத் தொடங்கியது முதல் அவனுடைய விழிகள் கண்ணீரை சொரிந்து கொண்டுதான் இருந்தன.
அது ஆனந்தக் கண்ணீர்.
ஒருவாறாக முழுவதும் அவளை வரைந்து முடித்ததும் அவனுடைய கரத்தில் இருந்த தூரிகையோ கீழே தரையில் விழ,
“அபிஇஇஇ..????” என தழுதழுத்த குரலில் அவளை அழைத்தான் அவன்.
அவளோ இருக்கையை விட்டு எழாது தன்னுடைய கரங்களை விரித்தவள் வா என்பதைப்போல விழிகளால் அவனை அழைக்க வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல அவளை நோக்கி பாய்ந்து ஓடியவன் அவளை நெருங்கியதும் சட்டென மண்டியிட்டு தரையில் அமர்ந்து இருக்கையில் அமர்ந்திருந்தவளின் மடியில் தன் முகத்தைப் புதைத்து அவளை அப்படியே அணைத்துக் கொண்டான்.
தீராத காதல் அவளுடையது.
தாளாத அன்பு அவனுடையது.
தன்னுடைய மடியில் முகம் புதைத்து தன்னை அணைத்துக் கொண்டவனின் கண்ணீர் தன் மடியை நனைப்பதை உணர்ந்து கொண்டவள் அப்படியே அவன் மீது கவிழ்ந்தாள்.
“ஐ லவ் யூ குரு..”
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவனுடல் அழுகையில் குலுங்கியது.
“நானும்டி…” தழுதழுத்தான் அவன்.
“நீ.. நீங்க என்ன காதலிக்கிறதை விட நான் அதிகமா உங்களை காதலிக்கிறேன் குரு.. ப்ளீஸ் அழாதீங்க என்னால தாங்கிக்க முடியல..” என்றவள் அவனுடைய உச்சந்தலையில் முத்தம் பதிக்க அக்கணமே மோட்சம் கிடைத்தது போல இருந்தது அவனுக்கு.