7. செந்தமிழின் செங்கனியே!

4.8
(32)

செந்தமிழ் 7

 

இனியன் கோவமாக காரை நிறுத்தி இருந்தான். இன்னுமும் அவனுக்கு கோவம் தீர்ந்த பாடு இல்லை. என்னவெல்லாம் செய்து விட்டாள் என்கிற ஆத்திரம் ஒரு பக்கம். நாளை அவன் அலுவலகத்தில் அவனுக்கு என்ன அவமானம் நிகழுமோ என்கிற பதற்றம் வேறு!

ஆனால் அவனுள் காரில் இருந்த யாருக்கும் எந்த வித பதற்றமும் இல்லை. அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தான்.

“நான் தான் வேணான்னு சொன்னேன்ல”, என்று அடிக்குரலில் அவன் சீறிக்கொண்டு அவனின் காரை விட்டு கீழே இறங்க, “உங்க நண்பரும் தான் வாய மூடல”, என்று சொல்லிக்கொண்டே அவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவளின் பின்னே கயல், அச்யுத் மற்றும் பொன்னம்மாளும் நுழைய கடைசியாக முகத்தை தேய்த்து கொண்டு இனியனும் நுழைந்தான்.

நடந்தது இது தான்,

அந்த நபர், “தமிழ்லாம் சுத்த வேஸ்ட் சார்”, என்று அவன் மேலும் தொடர, “நான் கொஞ்சம் பேசலாமா சார்?”, என்று செங்கனி கேட்டாள்.

“சொல்லுங்க மேம்”, என்று அவளை பார்க்க, “உங்களுக்கு வலிச்சா என்னனு கத்துவீங்க சார்?”, என்று தன்மையாக மிக மிக தன்மையாக கேட்டாள்.

“அம்மானு தான்”, என்று அவன் தோளை உலுக்கி கொண்டு கூற, “ஒஹ்ஹஹ் ஏன் சார் மாம் இல்ல வேற மொழிகள்ல லாம் கத்த மாட்டிங்களா? தமிழ் தான் வேஸ்ட் ஆச்சே…”, என்று அவள் கைகளை கட்டிக்கொண்டாள்.

அவனின் முகமோ சிவந்தது. “சின்ன வயசுல இருந்தே கூப்பிட்றதுனால பழகிருச்சு இனி மாத்திக்குறேன்”, என்று அவனின் குரல் கடுமையாக, “யாரை அம்மவயா?”, என்று அவள் கேட்கவுடன், விரிந்தது அந்த அற்பனின் கண்கள் மட்டும் அல்ல இனியனின் கண்களும் தான்.

“வாட் இஸ் திஸ் மிஸ்டர் இனியன்?”, என்று அவன் இனியனை பார்க்க, அவனை இரண்டு சொடக்கிட்டு அழைத்தவள், “நான் தான பேசிட்டு இருக்கேன் என்கிட்ட பேசுங்க… எதுக்கு என் புருஷன் கிட்ட பேசுறீங்க.. தமிழ்ல பேசுனா பயமா?”, என்று கேட்கவும், இன்னும் அவனின் கோவம் அதிகமானது.

“என்ன இப்படி பேசுறீங்க கொஞ்சம் கூட மென்னேர்ஸ் இல்லாமா?”, என்று அவளின் முன் சீற, “எதுக்கு கோவ படறீங்க? நான் எவளோ நிதானமா பேசுறேன்… உங்க இங்கிலிஷ் பிரெஞ்சுலாம் நிதானம்னா என்னனு சொல்லி தரலயா? இப்படி ஆர்ப்பாட்டம்லாம் பண்ண கூடாது அதுவும் உங்க மொழில சொல்லனும்னா பப்ளிக் நியூசன்ஸ்… ஆனா பாருங்களேன் எங்க தமிழ்ல இதெல்லாம் சொல்லிருக்காங்க.. அறிவு இருக்குறவங்க எப்படி இருப்பாங்க…. சில அற்ப ஜென்மங்கள் எப்படி இருப்பாங்கனும்…”, என்று அவள் சொல்லும் போதே, “அம்மா அந்த மூதுரை தான நான் சொல்லட்டுமா?”, என்று சொல்லவும் ஆரம்பித்தான் அச்யுத்.

“அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.”

என்று அச்யுத் முடிக்க, “இத யாரு பாடுனாங்கனு உங்களுக்கு தெரியுமா மிஸ்டர் அறிவாளி?”, என்று அவள் நக்கலாக கேட்க, அவனின் முகம் சிறுத்து போனது.

“ம்கூம் இதெல்லாம் எங்கேயிருந்து இந்த ஜென்மங்களுக்கு தெரிய போகுது?”, என்று பொன்னம்மாள் நொடித்து கொண்டார்.

“இந்த பாடலை பாடுனது ஔவையார் சார்… இந்த பாடலுக்கு அர்த்தம் என்னனு தெரியுமா?”, என்று கேட்க, “நான் சொல்றேன்”, என்று கயல் தான் கூற ஆரம்பித்தாள்.

“அறிவும் ஆற்றலும் உடைய பெரியவர்கள் எப்போதும் அடக்கமா இருப்பாங்க; ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டாங்க. அரைகுறை அறிவும் ஆற்றலும் உள்ளவங்க தான் குதிச்சிகிட்டே இருப்பாங்க. குடம் முழுதும் நீர் இருக்குமானால் தளும்பாது; குடத்தில் பாதி அளவிற்குத் தான் நீர் இருக்குமானால் குடத்தைத் தொடும் போதெல்லாம் நீர் சலசலத்து ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும்.”, என்று அவள் நிறுத்த,

“மீதி பாதி நான் தான் சொல்லுவேன்”, என்று ஆரம்பித்த அச்யுத், “இத தான் ஒரு உவமையோட சொல்ராங்க, மடைத்தலையில்ல, அதாவது ஓர் ஓடையில கொக்கு ஒற்றைக் காலில் பேசாமல் நின்று கொண்டிருக்கும்! அது பேசாமல் நிற்பது கண்டு சின்னச் சின்ன மீன்கள் அதைச் சுற்றி இப்படியும் அப்படியும் ஓடிக் கொண்டிருக்கும். சுற்றி வரும் மீன்களிலே எது பெரியது என்று தேர்ந்தெடுக்கும் வரை கொக்கு பேசாமல் நின்றிருக்கும். ஒரு பெரிய மீன் அருகே வரும் போது – அவ்வளவு தான்! – பாய்ந்து அதன் அலகினால் அதைக் கொத்தி எடுத்துக் கொண்டு பறந்து விடும். எனவே யாரையும் அவரது அடக்கம் கருதி எளிதாக எடை போட்டுவிட வேண்டாம் என்கிறார் ஔவையார்!”, என்று அவன் முடித்தான்.

“எவ்வளவு தத்துவமான பாடல் இல்லையா சார்? அதனால தான் தமிழ் படிச்சவங்களுக்கு “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும். அப்படினு தெரியும் புரியல, அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும்; அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும். அதுலயும் நாவடக்கம் ரொம்ப முக்கியம் சார். நீங்க சொல்ற மொழில இதெல்லாம் உங்களுக்கு சொல்லித்தரல போல”, என்று அவள் உச்சு கொட்டி பேசினாள்.

இனியனுக்கு நிலை கைமீறி போவதாக தோன்றியது. அவர்களை அனைவரும் பார்த்து வேறு கொண்டிருந்தார்கள்.

“கனி விடு”, என்று அவன் சொல்ல, அவள் நிறுத்தினாள் தானே!

“என்ன ஆச்சு சார்? சிலை ஆகிட்டீங்களா? எங்கள மாறி தமிழ் படிச்சவங்களுக்கு பண்பு, பாசம், அறிவு, அடக்கம்லாம் உங்கள விட நிறைய இருக்கு, இவளோ ஏன்! இன்னைக்கு நம்ப பிள்ளைங்களாம் மத்த ஆசிரியர்களை எல்லாம் மிஸ் இல்லனா டீச்சர்னு கூப்பிட்றாங்க… ஆனா என்னைக்கும் தமிழ் ஆசிரியையை மட்டும் தான் தமிழ் அம்மானு கூப்பிட்றாங்க… எப்படி தாயை மாற்ற முடியாதோ அதே மாறி தமிழையும் அழிக்க முடியாது… தாய் மொழியை மறப்பது தாயையே மறப்பதற்கு சமம்…அத உங்கள மாறி மரகழண்ட ஜென்மத்துக்குலாம் புரிய வைக்க முடியாது”, என்று அவள் சொல்லி முடித்தாள்.

அருகில் இருந்தவர்களும் இந்த பேச்சுக்களை எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்க, “அதானே தமிழ் படிக்கறது குத்தமா என்ன?”, என்று ஒருவர் கேட்க, “இந்த மாறி அள்ளுங்கல்லால தான் நம்ப தாய் மொழிக்கே அவமானம்”, என்று மற்றொருவர் பேசினார்.

“உங்க வைப் ரொம்ப பேசுறாங்க”, என்று இனியனிடம் புகார் வாசிக்க, “உங்க மனைவி பேசாம இருக்கறதுனால தான் நீங்க ரொம்ப பேசுறீங்க”, என்று அவள் மீண்டும் பேச, “கனி ப்ளீஸ் ஸ்டாப் இட்”, என்று இனியன் சற்று குரல் உயர்த்தவும் தான் அமைதி ஆனாள்.

உடனே அங்கிருந்து அவளை இழுத்து கொண்டு சென்று விட்டான்.

வீட்டிற்கு வந்தவன், “எதுக்கு இப்போ அந்த ட்ராமா பண்ணிட்டு இருந்த?”, என்று கேட்க, “நான் ட்ராமா பண்ணேனா? உங்க நண்பன் ரொம்ப அழகா பேசுனத நீங்களும் பார்த்தீங்க தான?”, என்று அவளும் அவனுக்கு இணையாக பேசினாள்.

“அது அவனுடைய கருத்து”, என்றவனிடம், “அதே மாறி அம்மா அவங்க கருத்தை சொன்னாங்க..”, என்று அச்யுத் வந்து அவனின் தாயின் முன் நின்றான்.

“இப்போ எவளோ பேறு முன்னாடி அசிங்கமா போச்சு”, என்று அவன் நெற்றியை நீவ, “அப்பா அசிங்கமானது அந்த மாமாக்கு தான்”, என்று கயல் சொல்ல, “உங்க அம்மா உங்கள நல்லா ட்ரெயின் பண்ணி வெச்சிருக்கா”, என்று சொல்லும்போதே, “அவ எதுக்கு டா ட்ரெயின்லாம் பண்ணனும்? நம்ப கிட்ட தான் கார் இருக்கே”, என்று பொன்னம்மாள் சொல்லவும், அச்யுத்தும் கையாளும் கொல்லென்று சிரித்து விட்டனர்.

“அம்மா”, என்று பற்களை கடித்தான் இனியன்.

“இந்த வீட்ல இருக்க எல்லாம் பைத்தியமா தான் இருக்கீங்க”, என்று அவன் சொல்ல, “டேய்!!! நீ தான் டா பைத்தியமா இருக்க உங்கிட்ட மாட்டிகிட்டு நாங்க முழிக்கிறோம்”, என்று பொன்னம்மாள் சொல்லவும், கை எடுத்து கும்பிட்டவன், “நான் பேசவே இல்ல போதுமா”, என்று சொல்லி அறையினுள் நுழைந்து கொண்டான்.

“நீ பண்ணது தான் சரி கனி… என்ன பேச்சு பேசுறான் அந்த பீட்டர்”, என்று சொன்னவரிடம், “அது யாரு அப்பத்தா பீட்டர்?”, என்று கயல் பார்க்க, “அதான் அந்த இங்கிலிஷ் பிரெஞ்சுனு பேசுனானே அவன் தான் இப்படி எல்லாம் சீன் போடுறவங்கள பீட்டர்னு தான் சொல்லுவோம்”, என்று அவர் சொல்லவும், “இது நல்லா இருக்கே இதோட நாங்களும் உங்கள பின்தொடருவோம்”, என்று அச்யுத்தும் வழி மொழிந்தான்.

பின்பு அனைவரும் இரவு உணவு உண்டு விட்டு உறங்க செல்ல, அங்கு அவளுக்காக காத்து கொண்டு இருந்தான் இனியன்.

“ஏன் கனி உனக்கு இவ்வளோ கோவம் வருது? அவன் தமிழை பத்தி தான பேசுனான்”, என்று இனியன் சாதாரணமாக தான் கேட்டான்.

“உங்களுக்கு அத்தைய பத்தி யாராச்சு பேசுனா கோவம் வராதா?”, என்று அவள் கேட்க, “கண்டிப்பா வரும் ஏன் வரமா? என் அம்மாவை பத்தி ஒருத்தன் பேசுனா நான் வெட்டி போற்றுவேன்”, என்று சொல்லவும், “அதே மாறி தான்… எனக்கு தமிழ் தாய் மாறி தான். உண்மையா சொல்லனும்னா எனக்குன்னு இல்ல… எல்லா தமிழர்களுக்கும் வரணும்… நம்ப மொழி நம்ப அடையாளம் இல்லையா? தாயும் தாய் மொழியும் ஒன்னு தான்.. நான் மத்த மொழி கத்துக்க வேணாம்னுலாம் சொல்லல, எத்தனை மொழி வேணா கத்துக்கலாம் ஆனா தாய்மொழியை மறக்க கூடாது.”, என்றவள் பேசுவதை பார்த்து கொண்டு தான் இருந்தான்.

“இப்போலாம் யாரும் அவங்க பசங்கள தமிழ் படிக்க வைக்க விரும்பறது இல்ல”, என்றவனிடம், “அது ஒரு ஒருத்தரோட எண்ணம் அத நம்ப மாத்த முடியாது. அம்மானு எப்படி ஒருத்தரோ… அதே மாறி தான் தாய்மொழியும்! எனக்கு ஒண்ணே ஒன்னு தான்! இந்த காலத்து ஆளுங்களுக்கு புரியல எந்த மேற்கத்திய காலாச்சாரத்துக்கும் மொழிக்கும் அவங்க மோகத்தோட தேடுறாங்களோ அதோட அடித்தளமே தமிழ் தான் தெரியுமா? நம்ப மொழில இருந்து எத்தனை மொழிகள் உருவாகி இருக்கு? எத்தனையோ சொற்களுக்கு நம்ப மொழி தான் அடித்தளமே!!! இப்போ எல்லாரும் பேசுற காதல் கல்யாணம், மேற்கத்தி பாணில காட்டுற வாழ்க்கையெல்லாம் நம்ப நூல்கள் காட்டலன்னு நீங்க நினைக்கிறீங்களா? ஒரு தாசி குளத்துல பிறந்த மாதவியையும் பத்தினினு சொன்ன உன்னதமான தமிழ் மொழி நூல் மணிமேகலை இல்லையா? காதலி காதலனுக்காக ஏங்குற எத்தனையோ அழகான பாடல்கள் அகநானூறுல இருக்கு!!! இதெல்லாம் தெரி யாமா தமிழ்ல ஒண்ணுமே இல்லனு சொல்ற அறிவில்லாத ஜென்மத்து கிட்டலாம் என்ன பேசுறது”, என்று சொல்லி படுத்து விட்டாள்.

இப்போது அவள் யாரை அறிவில்லாத ஜென்மம் என்று சொல்லிக்கொண்டு இருந்தாள் என்று விழித்து என்னவோ தமிழினியின் தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 32

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!