7. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

5
(25)

வரம் – 07

தன்னுடைய ஒட்டுமொத்த பொறுமையையும் முழுதாக இழந்திருந்தான் ஷர்வாதிகரன்.

கரத்தில் இருந்த அதி நவீன கையடக்கத் தொலைபேசியை தரையில் போட்டு உடைத்து விடும் நோக்கில் அவன் தன் கரத்தை மிகுந்த சினத்தோடு ஓங்கி உயர்த்த மீண்டும் திவாகரிடமிருந்து அழைப்பு வந்தது அவனுக்கு.

‘ப்ச்… இவன் ஒருத்தன் பொண்டாட்டி மாதிரி எனக்கு அடிக்கடி கால் பண்ணிகிட்டே இருப்பான்..’ என அத்தனை கோபத்திலும் சலித்துக் கொண்டவாறு அவனுடைய அழைப்பை ஏற்ற ஷர்வாவோ,
“நவ் வாட்..?” எனக் கேட்க,

“சாக பயமா இருக்கு பாஸ்… இன்னும் ஒரு பிகரை கூட கரெக்ட் பண்ணல.. கல்யாணம் பண்ணல… ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடல… ஃபர்ஸ்ட் நைட்ட விடுங்க இதுவரைக்கும் ஒத்த கிஸ் கூட அடிக்கல… அப்படி இருக்கும்போது எப்படி பாஸ் என்னால சாக முடியும்…? வேணும்னா எல்லாத்தையும் அனுபவிச்சு என்ஜாய் பண்ணதுக்கு அப்புறமா சூசைட் ட்ரை பண்ணவா…?” எனக் கேட்டவனை அலைபேசியினூடாகவே முறைத்தவன்,
“இப்போ நீ ஃபோனை வைக்கலைன்னா நீ எங்க இருந்தாலும் தேடி வந்து நானே உன்னைக் கொன்னுடுவேன்…” எனக் கர்ஜித்தான் ஷர்வா.

“பாஸ் பாஸ் இன்னொரு விஷயம் சொல்லனும் பாஸ்… அதுக்காகத்தான் கால் பண்ணினேன்.. ஒரே ஒரு நிமிஷம் பொறுமையா இருங்க… ப்ளீஸ்…”

“என்னடா சொல்லித் தொலை…”

“அந்தம்மா பிரஸ்ல மட்டும் நம்மள பத்தி தப்பா சொல்லல… போலீஸ் கம்ப்ளைன்ட் வேற கொடுத்துருக்காங்க பாஸ்… அவங்கள அவார்ட் ஃபங்ஷனுக்கு வரவிடாம பண்றதுக்காக நாம அவங்கள ரொம்ப மிரட்டினோம்னு பொய் கம்ப்ளைன்ட் வேற கொடுத்திருக்காங்க…”

“ஓஹ்…?”

“ஆமா பாஸ்… போலீஸ நான் சமாளிச்சிட்டேன்… பட் என்னால பிரஸ்ஸதான் கண்ட்ரோல் பண்ண முடியல…”

“நான் பாத்துக்குறேன்…” என சுருக்கமாக முடித்துக் கொண்டான் ஷர்வா.

“அப்புறம் பாஸ்…. பாஸ்….” என திவாகர் கத்தியது அவனுடைய கதை வந்து அடையும் முன்னரே அழைப்பைத் துண்டித்திருந்தான் ஷர்வாதிகரன்.
இவளுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்..?

இதுவரை அவன் இப்படி ஒரு பெண்ணை சந்தித்ததே இல்லை.
அடங்காத ஆத்திரத்தில் திவாகருடன் பேசியவாறு தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்திருந்தவன் காரை ஸ்டார்ட் செய்து வேகமாக செலுத்தத் தொடங்கினான்.

மனம் முழுவதும் எரிச்சல் கலந்த சினம் பொங்கியது.

இன்று இரண்டில் ஒன்றைப் பார்த்து விட வேண்டும்.

இப்போது அவள் எங்கே இருக்கக்கூடும் என்பதை அறிந்து வைத்திருந்தவன் காரை நேரே அவளுடைய சைட்டுக்கு செலுத்தினான்.

பிரம்மாண்டமாக உயர்ந்து நின்ற அவளுடைய புதிய கட்டிடத்தின் மீது பார்வையை பதித்தவாறு அந்த வளாகத்தினுள் தன்னுடைய காரை உள்ளே செலுத்தி நிறுத்தியவன் மட்டற்ற கோபத்தில் அங்கே நின்றவனை நெருங்கி “உன்னோட மேடம் எங்கே…?” எனக் கேட்க அவனை இவ்வளவு அருகில் பார்த்த குருவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“ஹா… ஹாங் சார்…..? எ..என்ன கேட்டீங்க..?” எனத் திணறியவாறு கேட்ட குருவின் சட்டைக் காலரைப் பற்றிக் கிட்டத்தட்ட தரையில் இருந்து ஒரு அடி துயரத்திற்கு அவனை மேலே தூக்கியவன்,

“யு ஃப***** மோரான்… என்னப் பாத்தா உங்களுக்கு எப்படித் தெரியுது..?” என அவன் கோபத்தில் கர்ஜிக்க நீரை விட்டு வெளியே வந்த மீனைப் போல தன் கால்களை பலமாக உதறித் துடித்தவன் அவனிடமிருந்து விடுபட முயன்றவாறே “ஐயோ என்ன விட்ருங்க சார்…” என அலறினான்.

அடுத்த கணமே அவனுடைய சட்டை காலரை விடுவித்தவன் தன் ஒற்றைக் கரத்தால் அவனுடைய கழுத்தை வலுவாகப் பற்றிக் கொண்டான்.

“இப்போ உன்னோட மேடம் இங்க வந்தாகணும்… இல்லன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னோட மூச்ச நிறுத்திடுவேன்…” என அவன் அழுத்தமாகக் கூற குருவுக்கோ கண்கள் இருளத் தொடங்கிவிட்டன.

மோஹஸ்திரா புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தக் கட்டிடத்தின் மேல் பகுதியில்தான் இருக்கிறாள் என்பது குருவுக்கு நன்றாக தெரிந்திருந்த போதும் கூட மிகவும் கோபமாக வந்திருக்கும் ஷர்வாவிடம் அதனைக் கூற அவன் விரும்பவில்லை.
அவள் மீது இருந்த விசுவாசம் அவள் இருக்கும் இடத்தைக் கூற விடாது தடுக்க விழிகள் சொருகிய போதும் அமைதியாகவே தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தான் அவன்.

அந்த நொடி குருவின் அலைபேசி அலற,

இப்போது ஷர்வாவின் கரத்தின் அழுத்தமோ தளர்ந்தது.

தன்னுடைய மற்றைய கரத்தால் அவனுடைய பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து அதில் ஒளிர்ந்த அவளுடைய பெயரைப் பார்த்ததும் இகழ்ச்சியாக தன்னுடைய உதடுகளை வளைத்தவன் அழைப்பை ஏற்று தன் காதில் வைத்த அடுத்த நொடி,

“என்ன பாக்கணும்னா என்கிட்ட அப்பாயின்மென்ட் எடுக்கணும் உங்களோட இஷ்டத்துக்கு எல்லாம் என்னால உங்களை மீட் பண்ண முடியாது மிஸ்டர் ஷர்வாதிகரன்.. முடிஞ்சா அப்பாயின்மென்ட் எடுத்துட்டு அப்புறமா வாங்க.. எனக்கு டைம் இருந்தா மீட் பண்ணலாம்…” என அவள் தெனாவட்டான குரலில் கூற, அவனுக்கோ முகம் இறுகியது.

அவள் இங்கே எங்கேயோ இருந்து தன்னைப் பார்த்துக் கொண்டுதான் பேசுகிறாள் என்பது புரிந்த ஷர்வாவின் விழிகளோ சுற்றிலும் வேகமாக அவளைத் தேடி அலசின.

புதிதாக கட்டப்பட்டு கொண்டிருந்த பலகைகளால் ஆன அந்த ஆரம்ப கட்டிடத்தின் மேல் பகுதியில் அவள் நிற்பதை சில நொடிகளில் கண்டு கொண்டவன் அடுத்த நொடியே முழுதாக குருவை விலக்கி விடுவித்துவிட்டு தன் கரத்தில் இருந்த அலைபேசி அழைப்பை சடாரென துண்டித்தான்.

அடுத்த கணம் யாருடைய அனுமதியும் அவனுக்கு தேவையே இல்லை என்பதைப் போல அவள் நின்ற இடத்தை நோக்கி அவன் செல்ல குருவுக்கு உள்ளம் பதறியது.

சட்டென தரையில் கிடந்த தன்னுடைய அலைபேசியை எடுத்து மோகஸ்திராவிற்கு அழைத்தவன்,

“மேடம் அவர் உங்ககிட்ட தான் வராரு.. என்னால அவரை நிறுத்த முடியல… என்ன பண்ணட்டும்..?” என அவன் பதற்றத்தோடு கேட்க,

“லீவ் இட்…. நான் பாத்துக்குறேன்…” என நிதானமாகக் கூறியவள் சற்றும் பதற்றப்படவே இல்லை.

குருவின் அழைப்பைத் துண்டித்து விட்டு இன்னும் சற்று நேரத்தில் மேலே வரப்போகும் அவனை எதிர்கொள்ளும் திடத்துடன் நின்றாள் அவள்.
ஷர்வாவோ அவள் நிற்கும் இடம் தெரிந்ததும் வேகமாக படிகளில் மேலே ஏறியவன் முழுவதும் கட்டைகளாலும் பலகைகளாலும் வேலைக்காக நிறுத்தப்பட்டு இருந்த இடத்திற்குள்ளாக நுழைந்து அவள் நின்ற இடத்தை வந்தடைந்திருந்தான்.

கயிற்றினால் இழுத்து கட்டப்பட்டிருந்த பலகைகள் சற்றே உடைந்தால் கூட பரலோகம் போல இருந்தது அந்த இடம்.
வேலை முடிக்காத இடத்தில் இப்படி நிறைய பேர் நிற்பது பாதுகாப்பு அல்லவே என நொடியில் கணக்கிட்டது அவனுடைய மனம்.

இப்போது யாருடைய பாதுகாப்புக்காகவும் அவன் வரவில்லை என்பதை நினைவு கூர்ந்தவன் தன்னுடைய கோபத்தை சிறிதும் குறைக்காது அவளை நெருங்கி அவளுடைய மணிக்கட்டை அழுத்தமாகப் பிடித்து தன்னருகே இழுத்தவன், அவளை கனல் பொங்கப் பார்த்தான்.

அவனுடைய பார்வையை சட்டென அலட்சியப்படுத்தியவள் அவன் பிடித்திருந்த தன்னுடைய கரத்தை உதறி விடுவித்துக் கொள்ள முயன்ற நேரம் அவனுடைய பிடியோ மேலும் இறுகியது.

அந்த இறுக்கமான பிடியில் அவள் மணிக்கட்டு மிக மிக சிவந்து போக அதனால் உண்டான வலியில் அவள் முகமோ சட்டென உணர்வைத் தொலைத்தது.

“நீயே பிரஸ்ஸ கூப்பிட்டு நீ சொன்னதெல்லாம் பொய்யின்னு சொல்லணும்… இல்லன்னா நடக்கறதே வேற…” என அவன் கோபத்தில் கர்ஜிக்க,
“வாட் ரப்பிஷ்…. என்ன மிஸ்டர் ஷர்வா இந்த மோஹஸ்திராவையே மிரட்டிப் பார்க்கலாம்னு நினைச்சீங்களா…? உங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுற ஆள் நான் கிடையாது.. என்ன நடந்தாலும் நான் அத ஃபேஸ் பண்ணிக்கிறேன் ஐ டோன்ட் கேர் அபௌட் யுவர் ஆங்ரி..” என பல்லைக் கடித்தவாறு ஆனால் நிதானமாக கூறினாள் மோகஸ்திரா.

“ஏய்….” என அதீத சீற்றத்தோடு கர்ஜித்தவன் சினத்தில் அவளுடைய கழுத்தை இறுகப்பற்றி அழுத்தி விட ஆங்காங்கே நின்ற மற்றையவர்களின் பார்வையோ அதிர்ச்சியோடு அவர்கள் மீது படிந்தது.

அவன் தன்னுடைய கழுத்தை அழுத்தமாகப் பற்றி நெரிக்கத் தொடங்கியதும் ஒரு வினாடி கூட தாமதிக்காது உயர்ந்த மோஸ்திராவின் மென்மையான கரமோ வேகமாக ஷர்வாவின் கன்னத்தில் கோபத்தோடு மோத பளார் என்று விழுந்த அறையில் ஒரு கணம் திகைத்துப் போனான் அவன்.

அடுத்த நொடியே அவன் மிருகமாக மாறிவிட அவள் அணிந்திருந்த வெண்ணிற ஷர்ட்டை கிழித்து விடுபவன் போலப் பிடித்து அவளை வேகமாக தன்னருகே இழுத்தவன் தன்னுடைய மற்றைய கரத்தால் அவளை ஓங்கி அறைய முயன்ற நேரம் படார் என உடைந்து விழுந்தது புதிதாக வைக்கப்பட்டிருந்த ஒரு தூண்.

அந்தப் பாரிய தூணோ அடுக்கப்பட்டிருந்த பலகைகளின் மீது விழுந்து விட அந்தத் தூணின் பாரத்தைத் தாங்க முடியாத கயிற்றினால் பிணைக்கப்பட்ட பலகைகளோ, கயிறு அறுந்ததனால் தன் பிணைப்பை இழந்து ஒவ்வொன்றாக சரியத் தொடங்க கிட்டத்தட்ட ஒன்பதாவது தளத்தில் நின்றவர்களுக்கோ உள்ளம் பதறிப் போனது.

புதிதாக கட்டிய கட்டடத்தின் பலத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரிய தடிகளும் பலகைகளும் சரிந்து கொண்டே வர சற்று தள்ளி ஆங்காங்கே நின்றவர்களோ வேகமாக பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடத் தொடங்கினர்.

சடசடவென சரிந்து கொண்டிருந்த மரக்கட்டைகளைக் கண்டு அதிர்ந்த மோகஸ்திராவோ உடல் விறைத்துப் போய் அதிர்ச்சியில் அப்படியே நிற்க சட்டென அவளை இழுத்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் அந்த இடத்திலிருந்து அவளை இழுத்துக் கொண்டு வேகமாக மறுபக்கம் நோக்கி ஓடத் தொடங்கினான்.

அதற்குள் அவர்கள் கால் வைத்த இடத்தில் இருந்த பலகைகளும் சற்றே நகர்ந்து விட கரணம் தப்பினால் மரணம் என்பதைப் போலானது அவர்களுக்கு.

கிட்டத்தட்ட பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நான்கடி தூரத்தையாவது பாய்ந்து தாண்ட வேண்டும் சரியாக தாண்டா விட்டால் கீழே அதல பாதாளத்தில் விழவேண்டியதுதான் என்பதை உணர்ந்து கொண்டவன் உறைந்து போய் நின்றவளின் தோலை உலுக்கி,

“ஏய் இடியட்.. ஜம்ப்…” என்க,
அவளோ காதை கேளாதவள் போல உறைந்து போய் நின்றிருந்தாள்.

“ப்ச்… கமான் நாம அந்தப் பக்கம் போயாகணும்…” எனக் கூற அவளோ அவனை அதிர்ந்து போய் பார்த்தாள்.
இவ்வளவு உயரத்தில் இருந்து அந்தப் பக்கம் பாய்ந்து செல்வது என்ன சிறு விடையமா..?

நோ என்னால் முடியாது என அவள் மறுக்க இவர்கள் நின்ற பக்கமோ இன்னும் பலவீனமடைந்து கொஞ்சம் கொஞ்சமாக தரையை நோக்கி சரிந்து கொண்டிருந்தது.

அதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்பதை உணர்ந்தவன் சட்டென அவளைத் தூக்கி தன்னுடைய தோளில் போட்டுவிட்டு ஒரே பாய்ச்சலில் மறுபக்கம் பாய்ந்து விட அவன் பாய்ந்த வேகத்திலும் அழுத்தத்திலும் மேலே அந்தரத்தில் சாய்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரிய மரக்கட்டைகள் அதிர்ந்து கடகடவென அவர்கள் மேலே கொட்டியது.

நொடியில் நடந்து முடிந்த சம்பவத்தை சமாளிக்க முடியாது அந்த ஒன்பதாவது தளத்தின் கான்கிரீட் தரையில் இருவரும் சேர்ந்து விழ ஷர்வாவின் மேலே தொப்பென சரிந்தாள் மோகஸ்திரா.

அவளுக்கு மேலே சற்றே கனமான மரக் கட்டைகள் விழுந்து விட “ஆ….” என்ற அவளுடைய அலறலில் தனக்கு வெகு அருகாமையில் இருந்த அவளுடைய முகத்தைப் பார்த்தான் ஷர்வாதிகாரன்.
கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட பாரமான மரக் கட்டைகள் அவள் மீது கிடக்க ஏதோ மிகப்பெரிய இரும்புத் தூணை தன்னுடைய முதுகில் சுமப்பதைப் போல வலித்தது அவளுக்கு.

மூச்சு விட முடியாது முகம் சிவக்க வலியோடு இதழ்களை சுழித்தவாறு திணறியவளின் முகத்தை மிக மிக அருகாமையில் கண்டு தடுமாறிப் போனான் ஷர்வாதிகரன்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “7. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!