எப்படியோ அன்று முதல் இனியனும் ஏதும் பேசவில்லை. அவனின் அலுவக நண்பரும் பெரியதாக இதை பற்றி அலுவலகத்தில் வாய் திறக்கவில்லை.
திறந்தாள் அவருக்கு அல்லவா அவமானம்! ஒரு பெண் அவரை அனைவரின் முன்னிலையிலும் கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் என்றால் வெளியே அவரால் எப்படி சொல்லிவிட முடியும்!
அச்யுத்தின் பிறந்த நாளிற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருந்தாள் கனி.
அந்த நாளும் வந்தது. அன்று இனியனும் சீக்கிரமே வீடு வந்து சேர்ந்து இருந்தான்.
அச்யுத்தின் நண்பர்களும் வர துவங்கினார்கள். அவன் ஒன்றும் நிறைய ஆட்களை அழைக்கவில்லை. வெறும் பத்து பேரை தான் அழைத்து இருந்தான்.
கயலும் அவளின் பள்ளியில் பயிலும் இரண்டு மூன்று நெருங்கிய தோழியை அழைத்து இருந்தாள். அதில் கயலின் தோழியில் ஒருவள் சற்று மெலிந்த விலை ஆடையை தான் உடுத்தி இருந்தாள்.
அச்யுத்தின் நண்பர்களில் இரண்டு மூன்று பேறும் சாதாரண உடை தான் அணிந்திருந்தார்கள்.
அவர்கள் படிப்பது என்னவோ பெரிய பள்ளியில் தான்!! ஆனால் அந்த பள்ளியிலும் இப்படி பண வரவில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு அனுமதி கொடுப்பது உண்டு!
அதில் சேர்ந்தவர்கள் தான் இவர்களும், பணத்தில் இறைவன் குறை வைத்தாலும் அறிவை வாரி வாரி கொடுத்து இருந்தான். ஆம் அவர்கள் தான் அவர்கள் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெறுபவர்கள்!
ஆனால் பிள்ளைகள் இருவருமே, மதிப்பெண், பகட்டு என்று பார்த்து பழகும் நபர்கள் அல்ல! கனியின் வளர்ப்பு அல்லவா அவர்கள்!
“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.”
என்று திருக்குறளை சொல்லி தான் அவர்களை வளர்த்து இருக்கிறாள்.
“படிக்க படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு” என்று வளர்க்கும் போதே சொன்னவள், “பகட்டான நண்பர்கள் படிக்கிற நண்பர்களை விட பண்பான நண்பர்களை தேர்ந்து எடுங்க… ஒரு நல்ல நண்பன் உங்களுக்கு ஒரு நூலகத்துக்கு சமம்”, என்று சிறுவயதில் இருந்து பிள்ளைகளுக்கு தாய் பால் மட்டும் அல்லாது தமிழ் பாலும் சேர்த்து கொடுத்தவள் அல்லவா அவள்!
அவளின் வளர்ப்பும் தான் தப்பி விடுமா என்ன?
கனி அனைவரையும் ஒன்று போல் தான் கவனித்தாள்.
“அம்மா இவ தான் என்னோட நெருங்கிய நண்பி… எங்க வகுப்புலயே இவ தான் முதல் மதிப்பெண் வாங்குற பிள்ளை… அதெல்லாம் விட ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை”, என்று கயல் அவளை அறிமுகம் செய்ய, கனியும் அவளுக்கு புன்முறுவல் கொடுத்தாள்.
அங்கு வந்திருந்த ஒரு பெற்றோருக்கு தான் இது பிடிக்கவில்லை போலும்!
நேராக இனியனிடம் சென்றவர், “மிஸ்டர் இனியன் ஏன் இந்த மாறி லோ கிளாஸ் பிபில் கூடலாம் பசங்கள சேர்த்த விடுறிங்க? நம்ப ஸ்டேட்டஸ் என்ன அவங்க ஸ்டேட்டஸ் என்ன?”, என்று அவர் கேட்கவும், சட்டென அவன் முகம் கருத்து விட்டது.
அது அருகே பிள்ளைகளுக்கு ஜூஸ் கொடுத்து கொண்டிருந்த கனியின் காதுகளையும் அடைந்தது.
“ஒரே கிளாஸ் தான”, என்று சொல்லிக்கொண்டே அந்த நபருக்கும் ஜூஸ் அவர் நீட்ட, அவரோ கண்கள் சுருக்கி அவளை பார்த்தார்.
“இல்ல.. எல்லா பிள்ளைகளும் ஒரே கிளாஸ் தானே படிக்கிறாங்க… சார் தெரியாம தான் கேக்குறேன்.. பள்ளியில ஏற்ற தாழ்வு வர கூடாதுனு தான் பள்ளி சீருடைனு ஒன்னு வச்சிருக்காங்க தெரியுமா? சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு நிறைய உடையவர்கள் மேலோர். இப்படி பாரதியார் பாட்டெல்லாம் நீங்க கேட்டதே இல்லையா?”, என்றவள் செல்ல இத்தனைக்கும் முன், “அதுக்கு அர்த்தம் தெரியுமா?”, என்று கேட்டாள்.
அவளே தொடர்ந்தாள், “அதுக்குலாம் அர்த்தம் தெரிஞ்சா நீங்க ஏன் சார் இப்படி இருக்க போறீங்க? இதான் அதுக்கு அர்த்தம், நீதியை உயர்த்திப் பிடிக்கும் அறிவும், கல்வியும் அன்பும் நிறைய உடையவர்களே பெரியவர்கள். ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் சாதிகள் இல்லை. பணம் பக்கட்டும் கூட இல்லை. நீங்கலாம் பெரியவங்களா இல்லையானு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க”, என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
அதற்கு மேல் அந்த நபரும் இனியனிடம் ஏதும் பேசவில்லை.
ஆனால் இனியனிற்கு தான் மனது அரித்து கொண்டே இருந்தது.
அச்யுத்தின் பிறந்த நாள் விழா முடிய, எல்லா பிள்ளைகளுக்கும் சிறு சிறு பொருட்களை அன்பளிப்பாகக கனியும் கொடுத்தாள்.
கயலின் தோழியின் முறை வரும் போது, “அம்மா இவளுக்கும் உங்கள மாறி தமிழ்னா ரொம்ப பிடிக்கும் உங்க கிட்ட இருக்க தமிழ் புத்தகம் ஏதாச்சு இவளுக்கு கொடுங்களேன்”, என்று அவள் சொல்லவும், உடனே அவளின் அறைக்கு சென்றாள் செங்கனி.
அவள் எடுத்து கொண்டு வந்தது என்னவோ கம்ப இராமாயணம் தான். விளக்க உரையுடன் இருந்தது.
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கெணுமே பிறந்ததில்லை’ என்று பாரதி கூறியதும் தான் எத்தனை எத்தனை உண்மை.
கம்ப இராமாயணத்தை படித்த மக்கள் மட்டுமே அறிந்த ரகசியம் அல்லவா அது!
வால்மீகி இராமாயணத்தில் அவர் குகனை ஒரு காட்டுவாசி என்பதுடன் இராமனின் பக்தன் என்று தான் காட்டியிருப்பார். ஆனால் கம்பன் அவரை ஒரு காட்டிற்கே ராஜா என்று ராமனிற்கு அவன் குறைந்தவன் அல்ல என்று சொல்லிருப்பார்!
அப்போதே வேற்றுமையை ஒழித்தவர் கம்பன் அல்லவா!
“இத படி உனக்கு ரொம்ப பிடிக்கும்”, என்று சொல்லி அவளுக்கு கொடுக்க, அந்த பிள்ளைக்கோ முகமெல்லாம் புன்னகை.
இப்படியே அவனைவரும் செல்ல, பிள்ளைகளும் உறங்க சென்று விட்டனர்.
உள்ளே கனி நுழையவும், அவன் தான் பேசத்துவங்கினான்.
“எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும்”, என்று சொல்லவும், “இருங்க எடுத்துட்டு வரேன்”, என்று அவள் அறையை விட்டு செல்ல முற்பட, “கனி நில்லு”, என்று சொன்னதும் அவனை தான் பார்த்தாள்.
“பசங்களுக்கு தராதரம் பார்த்து பழக சொல்லிக்கொடு!”, என்று அவன் சொல்லவும், “தராதரம்னா என்ன அர்த்தத்துல சொல்றிங்க?”, என்று அவளும் அவனை கேட்க, “இப்படி தான் லோ கிளாஸ் பசங்க கூடலாம் பிரண்ட்ஷிப் வச்சிப்பாங்களா?”, என்று அவன் சொல்லிக்கொண்டே அவனின் சட்டையை கழட்டினான்.
“பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி நீங்க கூட அதே கிளாஸ்ல தான் இருந்திங்க நினைவு இருக்கட்டும்”, என்று அவள் சொல்லவும் அவனுக்கோ சுருக்கென்று கோவம் வந்து விட்டது.
“ஆனா இப்போ என் நிலை அப்படி இல்ல”, என்று அவனும் பதில் அளிக்க, “நானும் இல்லனு சொல்லல… ஆனா கடந்த காலத்தை மறக்காதீங்க… அப்பறோம் உங்க கீழ்த்தனமான எண்ணத்தை முதல்ல கைவிடுங்க… கோர்ட் சட்டை போட்டவன் எல்லாம் கோமேதமும் இல்ல, கோணி பை தைக்கிறவன் கூமுட்டையும் இல்ல”, என்று சொல்லிவிட்டு அவள் அறையை விட்டு சென்று விட்டாள்.
அவனிற்கு கோவமாக வந்தது! அவன் என்ன சொன்னாலும் அதற்கு பதில் வைத்து இருக்கிறாள் அல்லவா!
“இந்தாங்க தண்ணி”, என்று அவனின் முன் அவள் நீட்ட, “நான் எது சொன்னாலும் கேட்க கூடாதுனு இருக்கியா?”, என்றவனிடம், “நல்லது சொன்னா கேட்டுக்கலாம்”, என்று சொல்லி நகர போக, அவளின் கையை பிடித்து இருந்தான்.
“அப்போ நான் கெட்டது பேசுறேன்னு சொல்ல வரியா?”, என்று நேரடியாக கேட்டு விட்டான்.
அவளோ ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு, “இப்போ என்ன தான் வேணும் உங்களுக்கு?’, என்று சலிப்பாக கேட்டாள்.
அவளுக்கு அசதியாக இருந்தது. இன்று நிறைய விருந்தாளிகள் வந்திருந்தார்கள் அல்லவா!
விட்டால் போய் படுத்து விடலாம் என்று தான் தோன்றியது!
“இனி பசங்க அந்த மாறி பசங்க கிட்டலாம் பேச கூடாது சொல்லி வை”, என்று சொல்லவும், அவளுக்கு கோவம் வந்து விட்டது.
“லூசா நீங்க? பசங்களுக்கு இவங்கள மாறி நண்பர்களை வச்சிக்கோன்னு வேணா நம்ப சொல்லலாம், இவங்க தான் உன் நண்பனா இருக்கணும்னு சொல்றது கேவலமா இருக்கும்! உங்க புத்தி ஏன் இப்படி எல்லாம் போகுது? நல்லா தானே இருந்திங்க.. இதையெல்லாம் பசங்க கிட்ட சொல்லாதீங்க… அப்பறோம் உங்க மேல இருக்க கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்டும்”, என்று மனதில் உள்ளதை பேசிவிட்டாள்.
அவனுக்கும் சுலென்று கோவம் வந்து விட்டது.
“நீ தான் டி பசங்கள கெடுக்குற!! அவங்களுக்கு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கொடுத்து கெடுத்து வச்சிருக்க”, என்று அவன் கத்த, “கத்தாதீங்க…”, என்றவள், “நான் கெட்டது எதுவும் சொல்லிக்கொடுக்கல நல்லது தான் சொல்லி தரேன்.. அதனால தான் நீங்க அவங்க கிட்ட கொஞ்சம் கூட சிரிச்சி பேசலனா கூட மரியாதையை கொடுக்குறாங்க… இல்ல தெரியாம தான் கேட்குறேன்… பள்ளிக்கூடத்துக்கு காசு கட்டுனா மட்டும் போதாது… பசங்க எப்படி படிக்கிறாங்க.. என்ன பன்றாங்க? இவங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது ஏதாச்சு ஒன்னு உங்களுக்கு தெரியுமா?”, என்று அவள் கேட்க, அவனிடம் பதில்லை.
அவன் தான் பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறான் அல்லவா!
அவனுக்கு எங்கிருந்து இதெல்லாம் தெரிய போகிறது?
“பெத்தா மட்டும் போதாது கொஞ்சமாச்சு அவங்களுக்குனு நேரம் ஒதுக்குங்க… அப்பறோம் இவங்க சொன்னாங்க அவங்க சொன்னாங்கனு பசங்க மேல உங்க ஆசை விருப்பு வெறுப்பு எல்லாம் திணிக்காதிங்க… அவங்க ஒன்னும் நீங்க வீட்ல வச்சிருக்க மிக்ஸி, கிரைண்டர் மாறி இயந்திரம் இல்ல.. உணர்வு உள்ள குழந்தைகள்… உங்களோட மண்டைல இருக்க கழவுயெல்லாம் அவங்க தலைல கொட்டி அவங்க குழந்தை தனத்தை குப்பை ஆக்கிடாதீங்க…”, என்று சொன்னவளுக்கு தான் மூச்சு வாங்கியது.
அவனிடம் இருந்த தண்ணீர் கோப்பையை வாங்கி அவளும் பருகிக்கொண்டாள்.
“உனக்கு பணத்தோட அருமை தெரியல”, என்று மீண்டும் அவன் அங்கேயே வந்து நிற்க, “உங்களுக்கு தான் பாசம், பண்பு, அன்போட மதிப்பு புரியல.. புரியும் போது உங்களுக்கே தெரியும்.. இப்போ போய் தூங்குங்க நாளைக்கு வேலை இருக்குல… அப்பறோம் அதுக்கும் என்ன தான் குறை சொல்லுவீங்க”, என்று சொல்லவும், “உங்கிட்ட ஒன்னு கேட்கணும்”, என்றவனை பார்த்தாள்.
“இன்னும் என்னங்க?”, என்றவளிடம், “எல்லாத்துக்கும் எப்படி ஒரு தமிழ் பாட்டு வச்சிருக்க?”, என்று அவன் கேட்க, “அதெல்லாம் அப்படி தான் உங்களுக்கு சொன்னா புரியாது”, என்று சொல்லிவிட்டு சென்று செல்லவும், “சொல்லிட்டு போய் தூங்கு டி”, என்று கையை பிடித்து கொண்டு கேட்க, “ஏனா நான் இதெல்லாம் மதிப்பெண் எடுக்க படிக்கல..உணர்ந்து படிச்சேன்… அதனால எப்பவோம் எனக்கு மறக்காது”, என்று சொல்லவும், அவனுக்கே ஆச்சர்யம் தான் இப்படியும் தமிழ் மேல் பற்றுள்ள மக்கள் இருக்கிறார்களா என்று!
இருவரும் ஒன்று சேர போய் படுக்க, நாளை விடியும் நாள் அவள் வாழ்வை புரட்டி போடும் நாளாக இருக்க போவதை அறியாமல் உறங்கி விட்டாள் செங்கனி!
Ayyayyo enna nadakka pohudho