8. நேசம் நீயாகிறாய்!

4.5
(11)

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎

 

நேசம் 08

 

நீல நிற சாரி அணிந்திருந்த மனைவியைப் பார்த்தவாறு உள்ளே சென்றவன் ஊதா நிற ஷர்ட் அணிந்து வந்தான்.

 

“நான் ப்ளூ கலர் போட்டிருக்கேனே. அதுக்கு மேட்சா போடனும்னு ஒரு சின்ன எண்ணமாவது இருக்கா?” என்று புலம்பியவளைப் பார்த்து,

 

“என்ன சொன்ன?” என்று அவன் வினவ,

 

“ஒன்னும் இல்லை. ஊதா கலருல ஊரையே மயக்க போறீங்கனு சொன்னேன். செம்ம சூப்பர்” ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து தள்ளினாள்.

 

“நெஜமாவா? எனக்கு வேற ஏதோ கேட்டுச்சே” என அவன் யோசிக்க, “உங்களுக்கு கேட்டா நான் என்ன பண்ணுறது? சும்மா பேச்சு வளர்க்காம வாங்க” என்று‌ முறைத்தாள்.

 

“இப்போ நீ எதுக்கு முறைச்சு பார்த்துட்டே இருக்க? கொஞ்சம் சிரிச்சா மாதிரி வா. இல்லனா உங்க வீட்டுல என்ன நெனச்சுக்க போறாங்க”

 

“ஊடல்னு நெனப்பாங்க” சட்டென சொன்னவள் பல்கோணியில் நின்று தன் வீட்டைப் பார்த்தாள்.

 

“ஊடல் நமக்குள்ள வர சான்ஸே இல்லை. நீ பேச்சுக்கு கூட அப்படி சொல்லாத. அப்பறம் தமிழை கொச்சைப்படுத்துற மாதிரி ஆகிடும்” என்று சொன்னவனை, “அப்படி என்ன கொச்சைப்படுத்திட்டேன் நான்?” புரியாமல் பார்த்தாள்.

 

“காதல் இருந்தால் தான் ஊடல் வரும். காதல்ல உருவாகுற கோபத்தையே ஊடல்னு சொல்லுவாங்க. நீ ஊடல்னு சொல்லுறத பார்த்தா நமக்குள்ள காதல் இருக்குமோனு சந்தேகமா வருது” புருவம் உயர்த்திக் கேட்டான் கணவன்.

 

“எதே காதலா? வாய் வாய் வாயைக் கழுவுங்க. காதல்னு பேச்சுக்கு கூட சொல்ல வேண்டாம்” கன்னத்தில் போட்டுக் கொண்டாள் தேனு.

 

“அப்போ வெறும் கணவன் மனைவியா?”

 

“அதுவும் இல்லை” சட்டென கன்னங்களைப் பொத்திக் கொண்டாள்.

 

சற்று முன்பு அவன் தந்த முத்தம் நினைவுக்கு வந்தது. ஆம் என்றால் இப்போதும் அதைச் செய்வானோ என்று நினைத்தாள்.

 

“கணவன்‌ மனைவின்னதும் எதுக்கு இவ்ளோ ஷாக்? ஓஓ பயப்படுறியா?” என்று அவன் கேட்க,

 

“பயமா எனக்கா? நோ நெவர்” கன்னம் மறைத்த கைகளைக் கீழிறக்கி நின்றாலும் இதயம் எக்குத்தப்பாக துடிக்கத் துவங்கிற்று.

 

‘டேய்‌ ரஷ்யாக்காரா! என்னையே பதற வைக்குறல்ல. உனக்கு இருக்குடா’ உள்ளுக்குள் புகைந்தாள்.

 

“நான் டாக்டர் மா. உன் வாய் இல்லனு சொன்னாலும், கண்ணுல கிலோ கணக்குல பயம் கொட்டுது. சோ என் கிட்ட பொய் சொல்ல முன்னாடி பல தடவை யோசிச்சுக்கோ” என்று சொன்னவன் கீழே செல்ல,

 

“ரொம்ப ஓவரா பண்ணாதீங்க. வாயில ஊசியை ஏத்தி தச்சி விட்றுவேன் பாருங்க” அவனை முறைத்தவாறே பின்தொடர்ந்தாள் மனைவி.

 

இருவரும் வீட்டிற்குச் செல்ல, “வாங்க வாங்க” என ஆரத்தி சுற்றி வரவேற்றார் சுசீலா.

 

“துருவன் எங்கே?” உடன் பிறந்தவனைத் தேடினாள் தேனு.

 

“ரூம்ல தான் இருந்தான் தேனு. போய் பேசு” என சுகுமாரன் கூறவும், தலையசைப்போடு தம்பியின் அறை நாடிச் சென்றாள்.

 

சுகுமாரனுடன் தொழில் சார்ந்து பேசலானான் ராகவ்.

 

“டேய் தடியா” அவனது தலையில் கொட்ட, அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான் துருவன்.

 

“வா அக்கா! எப்போ வந்த?” அக்காளை அன்போடு பார்த்தான் அவன்.

 

“நான் வர்றது கூட தெரியல உனக்கு. நீ வந்து எனக்கு ஆரத்தி எடுப்ப, உன் கையால் ஜூஸ் போட்டு தருவனு எதிர்பார்த்தா இப்படி பண்ணிட்டியே” அவன் தோளில் மெல்லமாய் அடித்தாள்.

 

“சாரிக்கா! நானும் அதையெல்லாம் யோசிச்சுட்டு தான் இருந்தேன். ஆனால் பண்ண முடியாம போச்சு” முகம் வாடக் கூற,

 

“சும்மா சொன்னா உடனே ஃபீலிங்ஸை பிழிஞ்சு ஊத்துவியா? சகிக்கல, உன் மூஞ்சைப் பார்க்க சகிக்கவே இல்ல டா” அவனது முடியைக் கலைத்து விட்டாள்.

 

“என் ஹேர் ஸ்டைல்” கோபம் கொண்டு தலையணையை எடுத்து அவளை அடிக்க, “மை ஆங்ரி பேட் இஸ் பேக்” அவனது கன்னத்தைக் கிள்ளினாள் பெண்.

 

சட்டென அவள் மடியில் தலை வைத்துக் கொண்டான் துருவன். அவன் முகம் ஏதோ சரியில்லை என்பதைக் காட்டிக் கொடுக்க, எதுவும் கேட்காமல் தலை வருடி விட்டாள்.

 

“மாப்பிள்ளை வீடு பிடிச்சிருக்கா, மாமியார் கொடுமை நடந்ததா, நாத்தனார் சண்டை வந்ததானு தோண்டித் துருவாம இப்படி துருப்பிடிச்ச அம்மிக்கல்லு மாதிரி இருக்கிறது நல்லாவே இல்ல துருவா. எழுந்து வா சண்டை போடலாம்” அவனது கையைப் பிடித்து இழுக்க,

 

“என் பெயரை கிண்டல் பண்ணுறல்ல. அதை யார் வெச்சதுனு ஞாபகம் இருக்கா?” அவளை முறைத்துப் பார்த்தான்.

 

“அது மறக்கக் கூடிய விஷயமா? என் தம்பி பாப்பாவுக்கு நானே பெயர் வைக்கனும்னு ஆசைப்பட்டு வெச்ச பெயர் அது. அதைப் போய் கிண்டல் பண்ணுவேனா நான். ஆனாலும் நீ பண்ண வெச்சுட்ட பார்த்தியா? அதான் வேணாங்குறது” முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வது அவள் முறையாயிற்று.

 

இதழ் பிரித்துச் சிரித்தவனோ, “ராகவ் அண்ணாவும் வந்திருக்கார்ல. வா போகலாம்” என எழுந்து செல்ல, “டேய் அவனை அண்ணானு கூப்பிடாத. நான் தான் உனக்கு அக்கா” சண்டைக்கு வந்தாள் சகோதரி.

 

அவளது சண்டையில் புன்னகைத்து “நீ என் அக்கா. ஆனால் அவரும் எனக்கு ஸ்பெஷல் தான்கா. உன்னைப் போலவே என் மேல அன்பா இருக்கிற ஒரு ஜீவன்” என்றான், உணர்வு பொங்க.

 

“எனக்கு கோவம் வந்துரும் பாரு. என்னைப் போலனு சொல்லாத. நானும் அவனும் ஒன்னா?” மூக்கு விடைக்கக் கூறினாள்.

 

எனினும் அவள் மனம் பூரித்துப் போனது. தனக்கென வருபவன் தன் தம்பியை அன்போடு பார்க்க வேண்டும் என்பது அவளது ஆசை. அவ்விடயத்தில் அவ்வாசைக்கு அதிகமாகவே ராகவ் இருக்க, அவனை ஓர் நொடி அன்புப் பார்வையால் தழுவினாள்.

 

“வா துருவா! தூங்கிட்டு இருந்தியா?” என்று ராகவ் கேட்க, “ஆமாண்ணா. இனி எங்கே தூங்குறது ராட்சசி வந்தாச்சே” என தமக்கையை நோக்க, அவளோ முறைத்தாள்.

 

“பார்த்தியா சுசீ. எப்போவும் என் பொண்ணு சண்டைக்குப் போவானு குறை சொல்லுவ. இப்போ இவன் தானே ராட்சசினு சொல்லுறான்” என்று சுகுமாரன் மனைவியிடம் சொல்ல,

 

“இன்னிக்கு ஒரு நாள் நடந்தது உங்க கண்ணுக்குத் தெரியுது. ஆனால் நான் தினமும் பார்க்குறேனே” முகத்தைத் திருப்பிக் கொண்டார் சுசீலா.

 

சாப்பிட அழைத்து அனைவரையும் அமர வைத்துப் பரிமாறினார் சுசீலா. அவரது கை வண்ணத்தில் விதவிதமான உணவுகள் மேசையை நிறைத்திருந்தன.

 

“இன்னிக்கு அக்காவுக்காக இவ்ளோ சமைச்சிருக்கீங்கள்ல. எனக்கும் இப்படி தருவீங்களாம்மா?” துருவன் தாயிடம் செல்லச் சண்டைக்கு வர,

 

“உனக்கு அப்படி வராது. ஏன்னா நீ தினமும் இதே வீட்ல இருக்கப் போற. ஆனா நான் வேற வீட்டுல இருந்து வர்றேன்ல” பெருமையாக கூறி விட்டு, “ஆனா இந்த ஸ்பெஷல் லன்ச் எனக்கில்லை, அவங்களோட அருமை மாப்பிள்ளைக்கு தான்” எனவும் சிலுப்பிக் கொள்ள, கணவனின் கண்கள் அவளை நோக்கின.

 

“ப்ரீத்தி எங்கண்ணா?” என துருவன் கேட்க, “அவ வீட்டுக்கு போக ரெடியாகுறா” என்று பதிலளித்தான் ராகவ்.

 

“அப்போ அண்ணானு சொன்னது சரி. ஆனால் இப்போ அவர் உனக்கு மாமா டா” என்றவாறு பரிமாறினார் சுசீலா.

 

“எனக்கு பழகிருச்சு மா. சட்டுனு மாத்திக்க முடியல”

 

“அவனுக்கு தோணுற மாதிரியே கூப்பிடட்டும் அத்தை. மாமாங்குறதை விட அண்ணானு கூப்பிடுறப்போ இன்னும் உரிமை கூடுற மாதிரி இருக்கு” என ராகவ் கூறியதும் சரியென ஒப்புக் கொண்டார் அவரும்.

 

சாப்பிட்டு முடித்து தோட்டத்தைச் சுற்றி வந்தாள் தேன் நிலா. அழகான பூக்களை வருடி, “ஹேய் மை டார்லிங்ஸ். கோவிச்சுக்கிட்டீங்களா? நானும் உங்களை விட்டுப் பிரியாம இருக்கனும்னு எவ்ளோவோ ட்ரை பண்ணுனேன். ஆனா விதி நம்மளை எதிரும் புதிருமா நிற்க வெச்சிருச்சு” என்றவள் தொடர்ந்து பேசினாள்.

 

“விதி இல்லை சதி. அந்த டாக்டர் பையன் செஞ்ச சதியால நமக்குள்ள பிரிவு வந்துருச்சு பார்த்தீங்களா?” சோகமாக கன்னத்தில் கை வைத்துப் பார்க்க,

 

“இந்தப் பிரிவுக்கு மதி இல்லாதது தான் காரணமே தவிர சதியும் இல்லை விதியும் இல்லை” என்ற குரலில் சடாரெனத் திரும்ப, ஊஞ்சலில் வந்து அமர்ந்தான் ராகவேந்திரன்.

 

“மதி இல்லையா? புரியல” நெற்றியில் தட்டியவாறு கேட்க, “அறிவுக்கும் மதினு சொல்லுவாங்க. உனக்கு அறிவு இல்லாததால தான் இந்த கல்யாணம் நடந்தது. ஐ மீன், அறிவு இருந்தா நீ எப்படியாச்சும் கல்யாணத்தை நிறுத்தி இருப்ப. உன்னால நிறுத்த முடியலல்ல?” கைகளைக் கோர்த்து பிடரியில் வைத்துக் கொள்ள,

 

“அப்போ எனக்கு அறிவு இல்லைனு சொல்லுறீங்களா?” சிலிர்த்துக் கொண்டு வந்தாள் அவள்.

 

“நீயே ப்ரூஃப் பண்ணிட்ட. அதை என் வாயால வேற சொல்லனுமா?” சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் கேட்க, அவளுக்கு கடுப்பாகிப் போனது.

 

“உங்களுக்கு தான் அறிவு இல்லை. மூளையில் முழுக்க முழுக்க களிமண். அதனால் தான் கல்யாணம் வேணானு சொன்ன பொண்ணை கட்டிக்கிட்டு எந்த சந்தோஷமும் இல்லாம இருக்கீங்க” என அவள் சொல்ல, ஒரு நொடி அமைதியாக நின்றான்.

 

“ஆமா சந்தோஷமா தான் இருக்கேன்னு பதிலுக்கு பதில் பேசுங்க பார்ப்போம். இப்போ பேச முடியாது. ஏன்னா நீங்க சந்தோஷமா இல்லல்ல?”

 

“சந்தோஷம்னா எதைக் கேட்கிற? எனக்கு புரியல” புருவம் இடுங்கியது அவனுக்கு.

 

“புதுசா கல்யாணமான ஜோடி பார்க்க எப்படி இருப்பாங்க? சந்தோஷமா சிரிச்சு பேசி கொஞ்சி குலாவி எவ்ளோ ஹேப்பியா இருப்பாங்க”

 

“சிரிச்சு பேசி கொஞ்சி குலாவுறதுன்னா எப்படி?” அவளை ஆழ்ந்து நோக்கினான்.

 

“சீரியல்ல எல்லாம் பார்த்ததில்லையா? அடிக்கடி முத்தம் கொடுத்துப்பாங்க. கட்டிப் பிடிச்சுப்பாங்க. ஜாலியா சிரிச்சு பேசுவாங்க. ஊரு சுத்துவாங்க” விரல்களை எண்ணியவாறு அவள் பட்டியலிட,

 

அவள் கையைப் பிடித்து அறையினுள் அழைத்துச் சென்றான்.

 

“எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க?” எனக் கேட்பதற்குள் அவளை இழுத்து அணைத்திருந்தான் வேங்கை.

 

“எ..என்னங்க” அவ்வணைப்பில் அதிர்ந்து நின்றவளுக்கோ பேச்சு வர மறுத்தது.

 

கணவனாயினும் ஒரு ஆடவனின் முதல் அணைப்பு, அவளுள் ஆயிரமாயிரம் உணர்வலைகளை ஒற்றை செக்கனில் தேகம் முழுவதும் ஊடுறுவ உறைந்து போயிருந்தாள் பாவை.

 

ஏதோவொரு வேகத்தில் அணைத்தவனும் இப்போது சித்தம் தடுமாறிப் போக, சட்டென்று தன்னிலை மீண்டு விலகி நின்றான்.

 

“எதுக்கு கட்டிப் பிடிச்சீங்க?” அவள் மெதுவாகக் கேட்க, “உன்னை மட்டும் தான் அப்படி பண்ணலாம்” என்றவனது கண்கள் அவளது கழுத்தில் தொங்கிய தாலியை சுட்டிக் காட்டின.

 

“நைட் வெளியே போறோம்” என அவன் சொன்னதும், “நெஜமாவா?” அனைத்தும் மறந்து துள்ளிக் குதித்தாள்.

 

“ம்ம்” தலையசைப்புடன் அவன் வெளியேற, வெளியே செல்லும் ஆசையில் மகிழ்ந்தவள் இந்த சந்தோஷம் நெடுநேரம் நீடிக்கப் போவதில்லை என்பதை அறியவில்லை.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி

2024-11-15

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!