அடுத்த நாளும் விடிந்தது! கனியின் வாழ்வு மாறப்போகும் நாள்!
கடந்த சில நாட்களாக இனியனிற்கு வேலை சுமை அதிகமாக ஆக ஆரம்பித்தது.
அவனுக்கு வேலையில் இருக்கும் பளுவின் அழுத்தத்தை வீட்டில் காட்ட துவங்கி இருந்தான்.
அனைவரும் பல்லை கடித்து கொண்டு தான் இருந்தார்கள்.
எப்போது வீட்டிற்கு வந்தாலும் ஏதாவது ஒரு வம்பை இழுத்து வைத்தான். கனியும் முடிந்த அளவு பிள்ளைகளை இதில் இருந்து தள்ளி வைக்க தான் நினைத்து கொண்டு இருந்தாள்.
ஆனால் காலம் வேறு ஒன்று நினைத்து இருந்தது அல்லவா!
அன்று அவன் வீட்டிற்கு வருகையில் அச்யுத் மற்றும் கயல் இருவரும் அவர்களின் மதிப்பெண் சான்றிதழை நீட்டினான்.
அவனுக்கோ வேலையில் களைப்பு. மேகனா வேறு வேண்டுமென்றே இவனின் மேல் பல பழிகளை சுமத்தி இருக்க, அதையும் சேர்த்து அவன் சமாளித்து கொண்டு இருந்தான்.
அச்யுத்திற்கு தமிழ் என்றால் உயிர், அப்படியே அவனின் அன்னையை போல, மத்த பாடங்களில் ஓரளவு சுமார் தான். கயல் படிப்பில் படு சுட்டி.
இருவரும் ஒருசேர நீட்டினர். முதலில் நீட்டிய கயலிடம் ஒன்றும் சொல்லவில்லை. கையெழுத்தை போட்டு கொடுத்து விட்டான்.
அடுத்து கொடுத்த அச்யுத்திற்கு தான் பிரச்சனை ஆரம்பமானது.
மதிப்பெண்களை பார்க்க, தமிழில் மட்டும் தொண்ணூற்றி ஐந்து எடுத்து இருந்தான். மீதி அனைத்து பாடங்களிலும் அறுவது சதவீதம் தான்.
அவனுக்கோ கோவம் சுரென்று ஏறி விட்டது.
“அச்யுத்”, என்று அவன் அழைக்கும் போதே அவன் கிடுகிடுத்து விட்டான். அவனின் கெட்ட நேரத்துக்கு பொன்னம்மாளும் கனியும் கோவிலுக்கு சென்று இருந்தனர்.
“அப்பா”, என்று அவனின் குரல் வெளியே வரவே இல்லை.
“இதுக்கு தான் உனக்கு பீஸ் கட்டி இவளோ பெரிய ஸ்கூல்ல படிக்க வெக்குறேனா?”, என்றவன் விட்டான் ஒரு அரை. சுருண்டு விழுந்து விட்டான் அச்யுத்!
“அச்யுத்”, என்று கயல் அவனின் அருகில் வர எத்தனிக்க, ஒரே பார்வை தான் பார்த்தான், கயலின் கால்கள் அப்படியே நின்று விட்டன!
அவளுக்கும் நடுக்கம் எடுக்க துவங்கியது. அவளின் கண்களிலும் நீர் கோர்த்து விட்டது.
இனியன் இன்று அரக்கனாக தெரிந்தான்!
அவளுக்கே இந்த நிலமை என்றால், அச்யுத்திற்கு சொல்லவும் வேண்டுமா?
அச்யுத்தின் கன்னங்கள் வீங்கி விட்டன! அவனின் கண்களில் தண்ணீர்! கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.
இன்று வரை கனி பிள்ளைகளை அடித்ததே இல்லை. அடியால் இல்லாமல் அன்பால் மிரட்டி மாற்றுவாள்.
இனியனை திட்டவே விட்டது இல்லை, இதில் எங்கே இருந்து கை ஓங்க விட்டிருப்பாள்!
கைகளை அவன் கன்னங்களில் வைத்து இருக்க, இனியனின் மனம் இறுகி விட்டது போல, அச்யுத்தின் கைகளை பிடித்து அவனை இழுத்தவன், “படிக்க முடியலைன்னா சொல்லிடு, உன்ன ஏதாச்சு கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்து விடறேன். என் காசும் வேஸ்ட் ஆகுது… ச்ச என்னக்குனு வந்து பொறந்திருக்க பாரு”, என்று அவன் சொல்லி மீண்டும் அடுத்த கன்னத்தில் ஒரு அரை!
இந்த முறை மயங்கியே விட்டான் அச்யுத்!
ஒன்பது வயது பிள்ளை அவன்! அவனோ திடகாத்திரமான ஆண்மகன்!
அவன் அடித்தால் அந்த சிறு பிள்ளையால் தாங்க முடியுமா என்ன?
கயல் பதறி விட்டாள். இனியனுக்கும் இப்போது தான் அவன் செய்த முட்டாள் தானம் நெற்றி பொட்டில் அறைந்தது.
“ஐயோ அச்யுத்”, என்று கயல் அருகில் வந்து அவனை எழுப்ப, இனியனும் அவனின் அருகே வரும் போதே, “கிட்ட வராதீங்க”, என்று வீடே அதிர கத்தி இருந்தாள் கயல்விழி.
பன்னிரண்டு வயது சிறுமி தான்! கண்ணகியும் கூட மதுரையை எரிக்கும் போது பன்னிரண்டு வயது சிறுமி தான்!
இன்று கயலும் அவளின் சகோதரனுக்காக கண்ணகியாக மாறி விடுவாளோ!
அவளின் குரலில் இனியன் அரண்டு தான் விட்டான். கயல் இப்படி எல்லாம் பேசுபவள் அல்லவே!
அவன் தன்னை சமன் செய்து கொண்டு, “கயல் அவன் மயங்கிட்டான்”, என்று அவன் அடுத்த அடி எடுத்து வைக்கும் போதே, “வேண்டாம் அப்பா கிட்ட வராதீங்க…நீங்க அப்பாமாறி இல்ல எங்களுக்கு ஏமன் மாறி தான் தெரியுறீங்க”, என்று அவள் எழுந்து நின்று கத்தும் போதே உள்ளே நுழைந்து இருந்தனர் பொன்னம்மாளும் கனியும்!
கனியின் கண்களில் பட்டது என்னவோ கயல் இனியனிடம் கத்தும் காட்சி தான்.
அப்படியே அவளின் கண்கள் கீழே போக, அங்கு மயங்கி இருந்தான் அச்யுத்.
அவளின் கைகளில் இருந்த கூடை விழுந்து விட்டது. எவ்வளவு தைரியமான பெண்மணியாக இருந்தாலும், தாய் உள்ளம் அல்லவா! பதறி விட்டாள்!
“அச்யுத்”, என்று அவள் அலறிக்கொண்டு, அவனின் அருகில் செல்ல, பிள்ளையிடம் மூச்சு பேச்சு இல்லை.
“என்ன ஆச்சு?”, என்று பொன்னம்மாள் கயலை பார்க்க, “உங்க மகன் தான் அச்யுத்த அடிச்சிட்டாரு”, என்று சொன்னதும் தான் தாமதம், “டேய்! இனியா நீயா டா இப்படி?”, என்று கேட்டவர் அதற்கு பிறகு இனியனின் முகத்தை கூட பார்க்கவில்லை.
கனிக்கு அவளின் மடியில் கிடத்தியுள்ள மகன் மட்டும் தான் கண்களில் தெரிந்தான்.
“கயல் போய் தண்ணி கொண்டு வா”, என்று அவளின் அன்னையின் வார்த்தைக்கு இணங்கி, அவளும் உடனே தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
கனி அச்யுத்தின் முகத்தில் நீரை தெளிக்க, அவனின் கண்கள் அசைந்தது.
அப்போது தான் கவனித்தாள், அவனின் உடல் அனலாக கொதிப்பதை!
பயத்தில் அவனுக்கு உடல் நடுங்கவும் ஆரம்பித்து இருக்க, “அத்தை போய் வெளிய ஆட்டோவை கூப்பிடுங்க, மருத்துவமனைக்கு தான் கூட்டிட்டு போகணும்”, என்றவளிடம், “எதுக்கு ஆட்டோ? நான் கார் எடுக்குறேன்”, என்றவனுக்கு அவள் பதில் சொல்லவே இல்லை.
“அத்தை ஆட்டோவை கூப்பிடுங்க”, என்று அழுத்தமாக வந்தது கனியின் வார்த்தைகள்.
பொன்னம்மாள் முதலில் தயங்கினாலும், மறுபடியும் கனி அழுத்தி சொல்லவே அவரும் சென்று ஆட்டோவை அழைத்து வந்தார்.
கனியே தான் அச்யுத்தை தூக்கினாள். இனியன் கிட்டே வரவும், கனியும் கயலும் பார்வையாலேயே அவனை தள்ளி நிறுத்தி விட்டனர்.
மூவரும் ஆட்டோவில் ஏறி அச்யுத்துடன் செல்ல, தனித்து விட பட்டது என்னவோ இனியன் தான்!
அவனுக்கும் மனது பிசைய ஆரம்பித்தது! அவனும் காரை எடுத்து கொண்டு ஆட்டோவை பின்தொடர்ந்து மருத்துவமனையை அடைந்து விட்டான்.
அச்யுத்திற்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர். மூன்று பெண்களும் வெளியே அமர்ந்திருக்க, இனியனும் அங்கு தான் நின்று இருந்தான். ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை கூட யாரும் பேசவில்லை!
அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர், “ஏன் மா உங்களுக்குலாம் கொஞ்சமாச்சு அறிவு இருக்கா? குழந்தையை போட்டு அப்படியா அடிப்பீங்க? கன்னம் ரெண்டும் எப்படி வீங்கி இருக்கு தெரியுமா? ச்ச… இப்போல்லாம் மனிதர்களுக்கு மனசாட்சியே இல்லாம போயிருச்சு போல! அந்த பையனுக்கு ஒன்பது பத்து வயசு இருக்குமா? மிஞ்சி மிஞ்சி போனா என்ன தப்பு பன்னிருக்க போறான்? எக்ஸாம்ல பெயில் ஆகிட்டானா? இல்ல விளையாடும் போது எதையாச்சு ஒடச்சிட்டானா? அதுக்கு இப்படி போட்டு அடிப்பீங்களா?”, என்று கனியை பார்த்து கொண்டு தான் கேள்வி கேட்டார்.
ஆனால் இனியனிற்கு தான் செருப்பால் அடித்தது போல் இருந்தது. செய்தது அவன் தானே!
“உங்கள மாறி பரெண்ட்ஸ் இருக்கறதுனால தான் பசங்களாம் எக்ஸாம்ல பெயில் ஆனா இல்ல ஏதோ ஒரு சின்ன பெயிலியர்னா கூட சூசைட்லாம் அட்டெம்ப்ட் பன்றாங்க”, என்று தலையில் அடித்து கொண்டார்.
“என் பேரன் எப்படி இருக்கான் டாக்டர்?”, என்று பொன்னம்மாள் வினவவும், “அதிகமா பீவர் இருக்கு… ட்ரிப்ஸ் போட்ருக்கோம்… இன்னைக்கு நைட் டெம்பரசர் கொறஞ்சிதுன்னா நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.. நைட் இட்லி இல்ல ரசம் சாதம் கொடுங்க”, என்று சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.
இனியனிற்கு குற்ற உணர்ச்சியில் நிற்கவே முடியவில்லை! அப்படியே அமர்ந்து விட்டான்.
“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது தான் எத்தனை உண்மை! அவன் செய்த தவறு தானே இது!
“கயல்”, என்று கனி அழைக்க, “அம்மா”, என்றவளிடம், “என்ன நடந்துச்சு?”, என்று கேட்க, அவளும் நடந்த அத்தனையும் கூறினாள்.
அவனும் நிமிர்ந்து பார்த்தான். கைகளை கட்டி கொண்டு இருந்தவள், “உங்களுக்கு அவன் ஏன் மத்த பாடத்துலலாம் அதிகமா வாங்கல அப்படிங்கிறது பிரச்சனையா? இல்ல தமிழ்ல ஏன் அதிகமா மதிப்பெண் வாங்கிருக்கான்னு பிரச்சனையா?”, என்றவள் குரலில் கடினம் இல்லை ஆனால் அழுத்தம் இருந்தது.
“சரி அத விடுங்க… இல்ல தெரியாம தான் கேட்குறேன்… எல்லா பசங்களும் நூத்துக்கு நூறு வாங்க முடியுமா என்ன? அப்படினா எல்லாரும் ஐன்ஸ்டீன், அப்துல் கலாம், எடிஸன்னா தான் இருக்கனும்… எல்லா குழந்தைகளும் ஒன்னு கிடையாது… சிலர் நல்லா படிப்பாங்க.. சிலர் நல்லா ஓவியம் வரைவாங்க… சிலர் நல்லா விளையாடுவாங்கா… எல்லாருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்… அது என்னனு கண்டுபிடிச்சு அதுல பசங்கள ஊக்குவிக்கறது தான் நல்ல பெற்றோருக்கு அழகு… ஆனா நமக்கு தான் அதெல்லாம் வராதே!!! நம்ப சல்லி பைசாக்கு பிரயோஜனம் இல்லாதா ஸ்டேட்டஸ்க்காக பிஞ்சு உள்ளத்துல நஞ்ச விதைக்குறோம். உங்க கனவுக்கு ஏங்க பிள்ளைங்களை பாடைல ஏத்துறீங்க? உங்களுக்கு உங்க பையன் இல்ல பொண்ணு என்ஜினீயர், டாக்டர் ஆகணும்னு எண்ணம் இருந்தா அது அவங்க தப்பு இல்ல! உங்க தப்பு! நீங்க யாரு அவங்களுக்காக கனவு காண? அவங்க அவங்க கனவை அவங்க தான் காணனும்!”, என்று நிறுத்தியவன், அடுத்து பொன்னம்மாவின் பக்கம் தான் திரும்பினாள்.
“அத்தை இதோட என் பிள்ளைங்களோட படிப்பு செலவை நான் பாத்துக்குறேன்… யாரும் என் பிள்ளைங்களுக்கு செலவு செய்ய வேண்டாம்… முதல்ல இந்த பள்ளிக்கூடத்தையும் மாத்திரனும்… இந்த மருத்துவமனைக்கான செலவு கூட நான் என் அம்மா எனக்கு போட்ட நகையை வித்து கட்டிக்குறேன்”, என்று அவள் சொல்லவும், இனியன் அதிர்ந்து விட்டான்.
“என்ன டி பேசுற?”, என்று அவன் எழுந்து அவளின் கையை பிடிக்கவும், அவனின் கையை தட்டி விட்டவள், “என்கிட்ட படிப்பு இருக்கு, அத விட தைரியம் இருக்கு… நாலு பேருக்கு சொல்லிக்கொடுத்து கூட நான் என் பசங்கள படிக்க வச்சிருவேன்… உங்க காசு இனி எங்களுக்கு வேண்டாம்… என் பிள்ளைகளுக்கும் எனக்கும் வேண்டவே வேண்டாம்… அதுக்கு தான இப்படி வந்து அவன படுக்க வச்சிட்டீங்க”, என்று அவள் சொல்லவும், “எனக்கு அவன் மேல பாசம் இல்லனு சொல்லவரியா? அவன் நல்லா இருக்கணும்னு தான் அடிச்சேன்”, என்றவனிடம், அவளின் கையை காட்டி வேண்டாம் என்று நிறுத்தி விட்டாள்.
“நீங்க அவன அடிச்சது தப்பு இல்ல, ஆனா அவன் நல்லா இருக்கணும்னு அடிக்கல, உங்க கோவம், வேலை சுமையை பிள்ளை கிட்ட காட்டிட்டீங்க.. உங்க காசுல படிக்கிறாங்கனு தான இந்த பேச்சு அடிலாம்.. இனி உங்க காசு என் பிள்ளைங்களுக்கு வேண்டாம்”, என்று அவளின் முகத்தை திருப்பி கொண்டாள்.
ஆம், முடிவெடுத்து விட்டாள்! தனித்து அவளின் சுயத்தை உயர்த்த முடிவெடுத்து விட்டாள்!
Kandippa uyartthum sis
Kani🔥