சிப்பி இமைகளை மெல்ல அசைத்து தன் விழிகளைத் திறந்து பார்த்தவளுக்கு அந்த அறை புதிதாக இருந்தது.
எங்கே இருக்கிறோம் என எண்ணியவாறு மெல்ல எழுந்து கொண்டவள் குனிந்து தன்னைக் கண்டதும் நடந்த அனைத்துமே நினைவிற்கு வரப் பதறிப் போனாள்.
தனியாக இருக்கவே நெஞ்சம் படபடத்துப் போனது.
வேகமாக எழுந்து வெளியே செல்ல முயன்றவள் அந்த அறைக் கதவைத் திறக்க அதுவோ வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதைக் கண்டதும் அவள் இதயம் மீண்டும் வேகமாக துடிக்கத் தொடங்கியது.
‘கடவுளே இன்னைக்கு எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது..? எந்தப் பிரச்சினையும் இல்லாம நான் பத்திரமா வீட்டுக்குப் போய் சேரணும் கடவுளே..” என மானசீகமாக தான் வணங்கும் இறைவனை விழி மூடி அந்த நொடி வணங்கிக் கொண்டவள் விழிகளைத் திறந்த போது சற்றே நிதானம் திரும்பி இருந்தது.
அந்த அறையின் சுவற்றில் யாழவனின் தந்தையின் படம் இருப்பதைக் கண்டடவளுக்கு அப்போதுதான் அந்த அறை யாழவனின் தந்தையின் அறை என்பது புரிந்தது.
தான் மயங்கியதும் தன்னை சிலிண்டர் இருந்த அறையிலிருந்து இங்கே கொண்டுவந்து படுக்க வைத்திருக்கிறான் என்பது புரிந்தது.
அதே கணம் அந்த அறை வெளிப்பக்கமாக திறக்கப்படுவதைக் கண்டு விழிகளை கூர்மையாக்கிக் கொண்டவள் தன்மீது போர்த்தி இருந்த யாழவனின் ஷர்ட்டை இறுகப் பற்றியவாறு அந்தக் கதவையே வெறித்துப் பார்க்க,
கதவை தள்ளித் திறந்து கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தாள் பானுமதி.
அவ்வளவுதான் தன் தோழியைக் கண்டதும் “பானு…” என்ற கதறலோடு அவளை அணைத்துக் கொண்டாள் அர்ச்சனா.
“ஹேய்… அழாதடி… எப்போ சிலிண்டர் ரூமுக்கு போறதுன்னாலும் என்னைக் கூட கூட்டிட்டுப் போவியே… இன்னைக்கு எதுக்குடி தனியா போன..? நல்ல வேளை சார் வந்தாரு.. இல்லன்னா என்ன பண்ணி இருப்ப..? நினைக்கவே உடம்பு உதறுதுடி..” என அவளைக் கடிந்தவாறே அணைத்துக் கொண்டவளுக்கு அர்ச்சனாவைப் பார்க்கப் பார்க்க பாவமாக இருந்தது.
“உ.. உனக்கு எப்படித் தெரியும்..?” என அழுதவாறே கேட்டாள் அர்ச்சனா.
“கீழ போலீஸ் வந்திருக்குடி… நம்ம யாழவன் சார் கீழ வந்து எமர்ஜென்சி வார்ட்ல இருக்க டாக்டரை அடி வெளுத்துட்டாரு.. அந்த அமரையும் பிரபு டாக்டரையும் போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டாங்க…”
“அதுக்குள்ள போலீஸ் வந்திருச்சா..?”
“ஆமாடி… யாழவன் சார்தான் நீ மயக்கத்துல இருக்க எழுந்தா பயப்படுவன்னு என்னை உன் கூட இருக்க சொல்லி இந்த ரூமோட கீயைக் கொடுத்து இங்க அனுப்பினாரு..” என பானுமதி நடந்தவற்றைக் கூற அவளுடைய கரத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவளுக்கு அழுகைதான் அதிகரித்தது.
“அ..சிங்கமா இருக்குடி… இப்படி எல்லாம் ஆகும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சே பார்க்கல..” தேம்பித் தேம்பி அழுதாள் அர்ச்சனா.
*ஆ.. ஆனா அவ.. அவன் என்ன தப்பா தொ.. தொட்டு..” என்றவள் மேலே கூற முடியாமல் மீண்டும் அழுதாள்.
இந்த நிலைமை நாளை தனக்கும் நேரலாம் அல்லவா..? மருத்துமனையில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையே. இந்த எண்ணம் தோன்றியதும் பானுமதியின் மனதினுள் ஒருவிதமான அச்சம் சடுதியில் பரவியது.
“புடவ கட்டினா கூட இடுப்புத் தெரியக் கூடாதுன்னு பாத்துப் பாத்து கட்டுறவடி நான்.. இ.. இப்போ என்ன இந்த நிலைமைல நிக்க வச்சுட்டானே.. அருவருப்பா இருக்கு பானு.. உடம்பெல்லாம் கூசுது.. என்னால இதை தாங்கிக்கவே முடியல.. ரொம்ப கஷ்டமா இருக்கு…” என அழுதவளை எப்படி சமாதானம் செய்வது என்றே பானுமதிக்குத் தெரியவில்லை.
அவளைப் பற்றித்தான் பானுமதிக்கு நன்றாகத் தெரியுமே.
அவளைப் பொறுத்தவரை இது அவளுக்கு மிகப்பெரிய அடிதான்.
அதே கணம் வாயிலில் நின்று அவள் பேசிய அனைத்தையும் கேட்ட யாழவனுக்கோ ஒருமாதிரியாகிப் போனது.
“எக்ஸ்கியூஸ் மீ…” என்றவாறு உள்ளே நுழைந்தவன்,
“இட்ஸ் ஓகே அர்ச்சனா.. இனி அவங்களால உனக்கு எந்த பிரச்சனையும் வராது.. உனக்கு மட்டும் இல்ல இந்த ஹாஸ்பிடல்ல வேலை பார்க்குற எந்த பொண்ணுக்கும் இனி எந்தப் பிரச்சினையும் வராது… அதுக்கு நான் பொறுப்பு..” என்றான் அவன்.
அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
அவளுடைய சிவந்த உதடுகள் அப்போதும் அழுகையில் துடித்தவாறுதான் இருந்தன.
அவளுடைய சங்கடத்தைப் புரிந்து கொண்டவன்,
“நீ வீட்டுக்கு கிளம்பு.. ரெண்டு நாள் லீவு எடுத்துக்கோ.. அதுக்கப்புறமா வேலைக்கு வந்தா போதும்..” என அவளிடம் கூற அவளுக்கும் அதுதான் சரி எனப்பட்டது.
ஆனால் இந்த நிலைமையில் அவளால் தன்னுடைய ஸ்கூட்டியை செலுத்த முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லவே இல்லை.
ஆட்டோ பிடித்தும் இந்த நிலையில் அவளால் செல்லவே முடியாது.
“வாட் அர்ச்சனா..?” என மீண்டும் கேட்டான் அவன்.
“இ.. இல்ல சார்… என்னால இப்போ என் ஸ்கூட்டில போக முடியாது.. கை… கையெல்லாம் நடுங்குது ட்ரைவ் பண்ண முடியும்னு தோணல..”
“ஐயோ சார் எனக்கு பைக் ஓட்டவே தெரியாது.. லைசன்ஸ் கூட இல்ல.. என்னோட ஹஸ்பண்ட்தான் என்ன வந்து கூட்டிட்டுப் போவாரு..” என்றாள் பானுமதி.
“சரி ஓகே, நானே உன்னை ட்ராப் பண்றேன் கம்..” என்றவன் முன்னே நடக்க ஒரு நொடி தயங்கி நின்றவளின் கரத்தைப் பற்றிக் கொண்ட பானுமதியோ,
“இதைவிட வேற நல்ல ஆப்ஷன் உனக்கு கிடைக்காது.. சார் கூடவே பத்திரமா வீட்டுக்குப் போயிரு… இந்த டைம்ல ஆட்டோக்காரனைக் கூட நம்ப முடியாது..” என்றாள் பானுமதி.
“ஆனா இப்படியே எப்படி எல்லார் முன்னாடியும் போறது..?” தயங்கினாள் அவள்.
“எமர்ஜென்சி எக்ஸிட் இருக்கு வா..” என்றான் யாழவன்.
அதன் பின்னர் அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை. மறுப்பதற்கு அவளுக்கு வேறு வாய்ப்பும் இல்லை.
அமைதியாக அவன் பின்னே நடந்தாள் அவள்.
எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக அவளைக் கீழே பத்திரமாக அழைத்துச் சென்றவன் தன்னுடைய காரை எடுத்து வந்து முன்பக்க கார்க் கதவைத் திறந்து விட கண்ணீரோடு காருக்குள் ஏறிக் கொண்டவளிடம் மௌனம்.
அவனோ ஆர்ம் கட் பனியன் மட்டுமே அணிந்திருப்பதைப் பார்த்தவளுக்கு அப்போதுதான் அவனுடைய ஷர்ட் தன்னிடம் இருப்பது புரிந்தது.
தயக்கமாக வேறு இருந்தது.
“இனி எந்த டாக்டர் சொன்னாலும் தனியா திங்க்ஸ் எடுக்க எங்கேயும் போகாத.. ஸ்டோர் ரூம்ல இருக்க திங்ஸ் அப்புறம் சிலிண்டர்ஸ் எடுக்குறதுக்காக வேறு ஆளுங்கள பெர்மனென்டா வச்சுக்கலாம்..” என அவன் கூற, அவனுடைய விழிகளை சந்தித்தாள் அவள்.
அப்போதுதான் இதுவரை அவனுக்கு நன்றியே சொல்லவில்லை என்பது புரிந்தது.
எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றி இருக்கிறான் ஆனால் ஒரு வார்த்தை நன்றி கூட அவனுக்குக் கூறவே இல்லையே.
நன்றி கூறலாம் என அவள் மெல்ல தன்னுடைய இதழ்களைப் பிரிக்க,
“உன்னோட வீடு எங்க இருக்கு..?” எனக் கேட்டான் அவன்.
வீடு என்றதும்தான் அவளுக்கு தன்னுடைய அன்னையின் நினைவே எழுந்தது.
சட்டென குனிந்து தன்னைப் பார்த்தாள் அர்ச்சனா.
அவளுடைய கோலம் மிக மோசமாக இருந்தது.
அன்னை மட்டும் அவளை இந்த நிலையில் பார்த்தால் அவ்வளவுதான்..
இன்று நடந்ததெல்லாம் தெரிந்தால் பதறிப் போய்விடுவாரே.
அது மட்டுமா அதன் பின்னர் அவளால் இந்த வேலைக்குக் கூட வர முடியாதல்லவா..?
விழிகள் மீண்டும் கலங்கின.
இத்தனை காலமாக அவர் உழைத்துத்தான் தன்னையும் தன்னுடைய தங்கையையும் படிக்க வைத்தார். இப்போதுதான் அவள் வேலைக்குச் சென்று அவருடைய பாரத்தை சற்றே குறைத்திருக்கிறாள்.
இப்போது மட்டும் இந்தப் பிரச்சனை தெரிய வந்தால் தன்னை வேலையை விட்டு நிற்கச் சொல்லிவிட்டு அவர் மீண்டும் சுமை தூக்க ஆரம்பித்து விடுவாரோ என எண்ணி கலங்கிப் போனாள் அவள்.
அவளுக்குச் சிந்தித்துத் சிந்தித்து தலை வலிக்கத் தொடங்கியது.
தன் தலையை அழுத்தமாக பற்றியவாறு கண்ணீர் உகுத்தவளைப் பார்த்து காரை நிறுத்தினான் யாழவன்.
இவள் மிகவும் மென்மையானவள் என்ற எண்ணம்தான் அவனுக்கு அக்கணம் தோன்றியது.
“என்ன ஆச்சு அர்ச்சனா..? வீடு எங்கே இருக்குன்னுதானே கேட்டேன்.. அதுக்கு ஏன் இந்த அழுகை..?” மென்மையாகக் கேட்டான் அவன்.
“ஓஹ்.. புரியுது… சரி அப்போ என்னோட வீட்டுக்கு வா.. வீட்ல அம்மா இருக்காங்க… ட்ரெஸ் மாத்திட்டு பிரெஷ் ஆனதுக்கு அப்புறமா உன்ன உங்க வீட்லையே கொண்டு போய் விடுறேன்..” என்றான் அவன்.
அவளுக்கோ மீண்டும் தயக்கம்.
இவ்வளவு உதவி செய்தாலும் நம்புவதற்கு சற்று தயக்கமாகவே இருந்தது.
மீண்டும் ஏதாவது ஆபத்தில் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க,
அவனோ தன்னுடைய ஃபோனை எடுத்துத் தன் அன்னைக்கு அழைத்தவன் நடந்த அனைத்தையும் அன்னையிடம் கூறிவிட்டு அவளிடம் பேசுமாறு கூற அவரும் அர்ச்சனாவிடம் பேசினார்.
யாழவனின் அன்னையிடம் பேசி முடித்துவிட்டு அலைபேசியை அவனிடம் நீட்டியவளுக்கு அப்போதுதான் சற்று நிம்மதியாக இருந்தது.
“இப்போ என்னோட வீட்டுக்கு உன்ன அழைச்சிட்டுப் போகலாம்ல..? இல்ல இன்னும் என்னை நம்பி வரத் தயக்கமா இருக்கா..?” என அவன் வெளிப்படையாகக் கேட்க,
சற்றே சங்கடத்துடன் புன்னகைத்தவள்,
“உங்களை சந்தேகப்படுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… கொஞ்சம் பயமா இருக்கு.. நா.. நான் இப்போ தெ… தெளிவா இல்ல சாரி..” என்றாள்.
“இட்ஸ் ஓகே..” என்றவன் மீண்டும் கேள்வியாகப் பார்க்க,
“உங்க வீட்டுக்கே போகலாம்..” என சிறு புன்னகையை பதிலாகக் கொடுத்தாள் அவள்.
அதன் பின்னர் யாழவனோ அவளை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்குச் சென்றான்.
சற்று நேரத்தில் அவனுடைய வீட்டை கார் நெருங்கியிருந்தது.
மிகப் பிரமாண்டமான அந்த பெரிய வீட்டைக் கண்டு மலைத்துப் போனாள் அவள்.
இவ்வளவு பெரிய வீட்டிற்குள் செல்லத்தான் வேண்டுமா என்ற எண்ணம் தோன்றி விட தயங்கி காருக்குள்ளேயே அமர்ந்திருந்தவளின் கரத்தை அழுத்தமாகப் பற்றியவன்,
“ஹேய் ஃப்ரீயா இரு.. பீ கூல்.. உனக்காக அம்மா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க உள்ள வா..” என அழைத்தான்.
“ம்ம்..” என்றவள் காரில் இருந்து இறங்கியதும் அவன் கூறியது போலவே வாயில் வரை வந்து நின்றார் அவனுடைய அன்னை ரூபாவதி.
வெளியே நின்ற வேலையாட்களைக் கண்டு அவள் தயங்குவதை புரிந்து கொண்டவன் தன்னுடைய ஒற்றை விழிப் பார்வையால் அவர்களை அப்புறப்படுத்த அவளோ நடுக்கத்தோடு காரிலிருந்து கீழே இறங்கினாள்.
“வாம்மா உள்ளே வா..” என்ற ரூபாவதியோ அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் அழைத்துச் சென்றுவிட பெருமூச்சோடு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டான் யாழவன்.
நான்கு நாட்களில் லண்டனுக்கு திரும்ப வேண்டும் என்ற முடிவில் வந்தவன் தன் முடிவை அக்கணம் முற்றிலுமாக மாற்றிக் கொண்டான்.
இந்த மருத்துவமனையில் நிறைய விடயங்களை மாற்ற வேண்டி இருக்கிறது என எண்ணியவன் தன்னுடைய பிளைட் டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு அந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
சற்று நேரத்தில் தன் அன்னையுடன் வெளியே வந்த அர்ச்சனாவைக் கண்டதும் அவனுடைய விழிகள் அகலமாக விரிந்தன.
கிழிந்த தாதி ஆடையை மாற்றி விட்டு அன்னையின் புடவை ஒன்றை அணிந்து வந்தவளை அவனுக்கு இரசிக்க வேண்டும் போலத் தோன்றியது.
இவ்வளவு நேரமும் கொண்டை போட்டிருந்த அவளுடைய கூந்தல் விரிந்து இடை தாண்டி தொங்கியது.
“வாவ் லாங் கெயார்..” என மெல்ல முணுமுணுத்தன அவனுடைய தடித்த உதடுகள்.
“நான்தான் சொன்னேன்ல.. என்னோட பிளவுஸ் உனக்கு கொஞ்சம்தான் பெருசா இருக்கும்னு..” என ரூபாவதி கூற அவளோ அவரைப் பார்த்து புன்னகைத்தவள் புடவைத் தலைப்பை எடுத்து தன் தோளில் போர்த்திக் கொண்டாள்.
விட்டால் அந்த பிளவுஸினுள் இன்னொருவர் புகுந்து கொள்ளலாம் போல அவ்வளவு பெரிதாக இருந்தது.
ஆனால் இப்போது அணிவதற்கு வேறு ஆடை இல்லை அல்லவா மறுப்பேதும் கூறாமல் அதை அணிந்து கொண்டவளுக்கு இயல்பாக இருக்கவே முடியவில்லை.
“யாழவா அவனுங்கள போலீஸ்ல புடிச்சு கொடுத்துட்டியா..?” என கோபமாகக் கேட்டார் ரூபாவதி.
“எஸ்மா.. இப்போதான் நடந்த விஷயத்தை அப்பாக்கும் இன்பார்ம் பண்ணினேன்..”
“சரிடா உன்னோட ரூம்ல ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்குல்ல.. இந்த பொண்ணுக்கு கொஞ்சம் மருந்து போட்டு விடு.. இவ ரொம்ப பயந்து போய் இருக்கா.. நான் குடிக்கிறதுக்கு ஏதாவது எடுத்துட்டு வர்றேன்..” என்றவர் சமையலறையை நோக்கிச் சென்றுவிட கைகளைப் பிசைந்தவாறு நின்றவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“இப்பவும் பயமா இருக்கா..?” என மென்மையான குரலில் கேட்டான்.
“ம்ஹூம்… இல்ல..” என்றாள் அவள்.
“குட்… கம் வித் மீ…” என்றவன் முன்னால் நடக்க அவனைப் பின் தொடர்ந்து சென்றவள் அவனுடைய அறை வந்ததும் தயங்கினாள்.
“உள்ள வா அச்சு..” இயல்பாக அழைத்தான் அவன்.
“ம்ம்..”
அவனுடைய அறையே இன்னொரு வீடு போல இருந்தது.
“என்னோட வீட்டை விட இந்த வீடு ரொம்ப பெருசா இருக்கே..” வியந்தாள் அவள்.
அவனுடைய இயல்பான பேச்சும் அழைப்பும் அவளை சற்றே இயல்புக்குத் திரும்ப வைத்தது.
“உனக்குப் பிடிச்சிருக்கா..?” என தன் அறையைக் காட்டிக் கேட்டான் அவன்.
“ம்ஹூம் இல்லை.. பிடிக்கலை..” என அவள் மறுத்ததும் அவனுக்கு புருவங்கள் வியப்பாக உயர்ந்தன.
எத்தனையோ கோடிகள் செலவழித்து அவ்வளவு அழகாக அலங்கரித்து வைத்திருந்த அவனுடைய அறையை அவளுக்குப் பிடிக்கவில்லையாமே.
“வாட்.. நிஜமாவே பிடிக்கலையா..? வை..? இன்டீரியர் டிஸைன் எதுவும் நல்லா இல்லையா..?” எனக் கேட்டான் அவன்.
“டிஸைன் எல்லாம் நல்லாதான் இருக்கு..”
“அப்போ ஏன் பிடிக்கல..?”
“இவ்ளோ பெரிய ரூமை கூட்டிப் பெருக்கணுமே.. கஷ்டமா இருக்காதா..?” என அவள் கேட்க, சிரித்து விட்டான் அவன்.
“ஓஹ் இதுதான் உன்னோட ப்ராப்ளமா..? அதுக்கெல்லாம் ஆளுங்க இருக்காங்க.. அவங்க பாத்துப்பாங்க..” என்றவன் அங்கிருந்த சோபாவில் அவளை அமரும்படி கூறிவிட்டு மருந்தை எடுத்து வந்தவன் அவளுடைய ஒரு பக்கக் கன்னத்தைப் பற்றி அவளுடைய உதட்டோரம் வழிந்து இருந்த உதிரத்தை பஞ்சினால் துடைக்க அவ்வளவுதான் பதறிவிட்டாள் அவள்.
அந்த நொடி அவளுடைய மயிர்கால்கள் அத்தனையும் குத்திட்டு நிற்க,
அவன் தொட்டதும் அவளுடைய உடலில் சடுதியில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அவனுக்கோ புருவங்கள் உச்சி மேட்டைத் தொட்டன.
எப்பா அவன் தேடும் ராமன் நீ இல்லை. ஆனாலும் விஷக் குட்டி உன்னை தானே இவளோட கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கும். ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக 👌👌👌👌👏👏👏👏👏😍😍😍😍🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️
எப்பா அவன் தேடும் ராமன் நீ இல்லை. ஆனாலும் விஷக் குட்டி உன்னை தானே இவளோட கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கும். ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக 👌👌👌👌👏👏👏👏👏😍😍😍😍🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️