விஷம் – 09
“இப்போ வரைக்கும் லவ் பண்ணத் தோணல மாம்.. இனி தோணும்னு தோணுது… அப்படி தோணிச்சுன்னா கண்டிப்பா சொல்றேன்..” என சற்று நேரத்திற்கு முன்பு யாழவன் கூறிய வார்த்தைகள்தான் அர்ச்சனாவின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன.
இதை அவள் எப்படி எடுத்துக் கொள்வது..?
விளையாட்டுக்காக பேசினானா..?
இல்லை நிஜத்தைத்தான் கூறினானா..?
இதோ எதுவுமே நடவாதது போல அருகில் இயல்பாக நடந்து வருகின்றானே..?
அவளுக்குத்தான் தொண்டை அடைத்தது.
பேச நா எழவே இல்லை.
முக்கியமாக அவன் அருகில் அவளால் இயல்பாகவே இருக்க முடியவில்லை.
காரை நெருங்கியதும் கார்க் கதவைத் திறந்து விட்டான் யாழவன்.
அமைதியாக உள்ளே ஏறி அமர்ந்தவளுக்கோ படபடப்பு.
அவளுடைய படபடப்பையும் அமைதியையும் கண்டு புருவம் உயர்த்தியவன்,
“ஹேய் வாட் ஹப்பன்.?” எனக் கேட்டான்.
“இல்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க உங்க அம்மாகிட்ட சொன்னதெல்லாம் சும்மாதானே..? எல்லாமே ஃபன்தானே..?” என அவனைப் பார்த்துக் கேட்டாள் அர்ச்சனா.
“இல்லையே நான் சீரியஸாதான் பேசினேன்..” என அவன் கூறியதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“அச்சு.. எனக்கு சுத்தி வளைச்செல்லாம் பேசத் தெரியாது.. அம்மா சொல்லும் வரைக்கும் லவ் பண்ற ஐடியா எல்லாம் எனக்கு இல்லவே இல்லை.. ஆனா அவங்க சொன்னதுக்கு அப்புறம் பண்ணினா என்னன்னு தோணுது..? உன்னோட கேரக்டர், நீ பேசுற விதம், நீ நடந்துக்கிற விதம் எல்லாமே ரொம்ப புடிச்சிருக்கு.. நான் பார்த்துப் பழகிய பொண்ணுங்க மாதிரி நீ இல்ல அச்சு… ஒருவேளை லவ் வந்தா கண்டிப்பா உன்கிட்டே வந்து சொல்லுவேன்..” என நேரடியாக அவன் கூறி விட அவள்தான் திணறிப் போனாள்.
‘கடவுளே இவருக்கு என் மேல காதல் வரவே கூடாது..’ என சட்டென இறைவனிடம் அந்த நொடியே பிரார்த்திக்கத் தொடங்கினாள் அர்ச்சனா.
அவள் விழி மூடி பிரார்த்திப்பதைக் கண்ட யாழவனின் இதழ்களோ புன்னகையில் விரிந்தன.
“என்ன எனக்கு லவ் வரக் கூடாதுன்னு பிரே பண்றியா..? இல்ல சீக்கிரமா லவ் வந்துடனும்னு ப்ரே பண்றியா..?” என அவன் உருவம் உயர்த்திக் கேட்க,
“அச்சோ இல்ல.. நான் உங்களுக்கு லவ் வரவே கூடாதுன்னுதான் வேண்டிகிட்டேன்..” என்றாள் அவள்.
சத்தமாக சிரித்தான் அவன்.
“கிரேட் எஸ்கேப்தான்.. எனிவே ஆல் தி பெஸ்ட்..” என்றவன் சிரித்தவாறு காரை செலுத்தத் தொடங்க அவளுக்கும் புன்னகை இதழ்களில் தவழ்ந்தது.
சற்று நேரத்தில் அவளுடைய வீடு வந்திருந்தது.
இருவரிடமும் அமைதி மட்டுமே.
முதலில் அமைதியை யாழவனே தகர்த்தான்.
“ஹேய்..”
“ம்ம்…?”
“உன் கன்னத்துல இருந்த வீக்கம் கூட இப்போ இல்லாம போயிடுச்சு… ரொம்ப டயர்டா இருந்துச்சு அதனால வீட்டுக்கு வந்துட்டேன்னு உங்க அம்மாகிட்ட சொல்லு..”
“ம்ம்… சரி…”
“நாளைக்கு நீ லீவு எடுக்கறதுன்னா கூட எடுத்துக்கலாம்..” என்றவன் காரை நிறுத்த அவனைப் பார்த்து சிறு தலைசைப்பைக் கொடுத்தவள் எதுவுமே கூறாது கடகடவென காரைவிட்டு கீழே இறங்கி அவளுடைய வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் உள்ளே செல்லும் வரை காரில் அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தவனோ அவள் அவளுடைய வீட்டு வளாகத்தினுள் நுழைந்ததும் காரை வெட்டித் திருப்ப அப்போதுதான் அவளுக்கு மூச்சே வந்தது.
உடலில் வியர்வை வேறு அதிகமாக சுரக்க நிதானமின்றி தவித்தாள் அவள்.
நேரமோ இரவு ஒன்று என அவளுடைய கைக்கடிகாரம் காட்ட பெருமூச்சோடு அவளுடைய வீட்டுக் கதவைத் தட்டினாள் அர்ச்சனா.
சில நிமிடங்களில் யாரது என்ற சத்தத்தோடு அவளுடைய அன்னை கதவை நெருங்க,
“அம்மா நான்தான் அர்ச்சனா வந்திருக்கேன்..” என்ற அவளுடைய குரலில் அவரோ கதவைத் திறக்க உள்ளே நுழைந்தவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது.
“என்னம்மா இன்னைக்கு நைட் டியூட்டின்னு தானே சொன்ன.. இப்படி மிட்நைட்ல வந்திருக்க..? ஏதாவது பிரச்சனையா..?” என அவளுடைய சோர்ந்து போன முகத்தைப் பார்த்து அவளுடைய அன்னை வினவ வேகமாக மறுத்து தலையசைத்தவள்,
“இல்லமா ஃபீவர் வந்த மாதிரி இருந்துச்சு.. ரொம்ப டயர்டா வேற இருந்துச்சு.. அதனால தான் டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்துட்டேன்..” என்றாள்.
“இதுக்குத்தான் சொன்னேன் உன்னை நைட் ஷிப்ட் எல்லாம் பார்க்க வேணாம்னு.. நான் சொல்றத நீ எங்க கேக்குற..” என அவளுடைய அன்னை அவளைக் கடிந்து கொள்ள,
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லமா.. தூங்கி எழுந்தா எல்லாமே சரியாயிடும்.. நான் இப்போ தூங்குறேனே..” எனத் தன் அன்னையிடம் கெஞ்சலாகக் கூறிவிட்டு வேகமாக அவள் அவளுடைய அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
தன்னுடைய அறைக்குள் வந்ததும்தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
அவன் தைத்துக் கொடுத்த அந்த தாதி ஆடையைக் கழற்றி விட்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டவள் அருவருப்பு தீர குளித்து முடித்தாள்.
அவளுக்கு அமரின் செயல்கள் மீண்டும் நினைவில் வர உடல் அக்கணம் நடுங்கி அடங்கியது.
‘பொறுக்கி..’ என அவனை மனதிற்குள் திட்டியவள்
சீத்ரு துணியால் தைக்கப்பட்ட நைட்டி ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள்.
மீண்டும் யாழவனின் எண்ணம்தான் அவளுக்குள் எழுந்தது.
மிகவும் நேர்மையானவன் என எண்ணிக்கொண்டது அவளுடைய மனம்.
பின்னே இதே இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நிச்சயமாக காவல் அதிகாரிகளுக்கு சொல்லி இருக்கவே மாட்டார்களே.
அப்படிக் கூறினால் அவர்களுடைய மருத்துவமனையின் மரியாதை அல்லவா கெட்டுப் போய்விடும்.
யாழவனோ இதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலை கொள்ளாது தவறு செய்தவர்களை உடனே தண்டித்ததோடு மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததையும் எண்ணி அவளுக்கு வியப்பு மேலிட்டது.
காலையில் அவனைப் பற்றி நான் தவறாக பேசியிருந்தும் கூட எனக்கு இவ்வளவு உதவி செய்து இருக்கின்றான் என்றால் அவன் எவ்வளவு நல்லவனாக இருக்கக்கூடும்.
அவன் மட்டும் இல்லை என்றால் அவளுடைய கதி அதோ கதி அல்லவா..?
தெய்வம் போல வந்து காப்பாற்றி விட்டான் என எண்ணியவள் சட்டென தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
இப்போது வரை அவன் செய்த அத்தனை உதவிக்கும் அவள் ஒற்றை வார்த்தையில் கூட நன்றி உதிர்க்கவே இல்லையே.
அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான்..?
மேலும் மேலும் அவனிடம் உதவியைப் பெற்றுவிட்டு சிறு நன்றியைக் கூட செலுத்தாது வந்து விட்டோமே எனக் குற்ற உணர்ச்சி அவளை கொஞ்சம் கொஞ்சமாகக் குடையத் தொடங்கியது.
மெல்ல படுக்கையில் வந்து விழுந்தவளுக்கு மீண்டும் மீண்டும் அந்த நினைவே வந்த தொல்லை செய்ய தூக்கத்தை தொலைத்தாள் அவள்.
*****
அடுத்த நாள் காலையில் எழுந்தவளோ முதலில் வேலைக்குத்தான் தயாராகத் தொடங்கினாள்.
அவளுடைய அன்னையோ “ரொம்ப டயர்டா இருக்கு ஃபீவர்னு சொன்னியே… இன்னைக்கு எதுக்கு வேலைக்குப் போற..? லீவு போடலாமே..” எனக் கேட்க,
“இல்லம்மா பேஷண்ட்ஸ் ரொம்ப அதிகமா இருக்காங்க.. இன்னைக்கு லீவ் எல்லாம் எடுக்க முடியாது.. இப்போ நான் ஓகேதான்..” என்றவள் உணவைக் கூட மறுத்துவிட்டு ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு வேகமாக தன்னுடைய ஸ்கூட்டியில் மருத்துவமனையை நோக்கி செல்லத் தொடங்கினாள்.
அமரும் அந்த வைத்தியரும் காவல் நிலையத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்ததால் மருத்துவமனை செல்வதற்கு அவளுக்கு எந்த அச்சமும் ஏற்படவில்லை.
இனி இப்படி ஒரு ஆபத்து ஏற்படாது என யாழவன் அவளிடம் உறுதி அளித்திருக்கின்றானே, அந்த தைரியம் வேறு அவளை அடுத்த நாளே வேலைக்குச் செல்ல உந்தியது.
முதல் வேலையாக யாழவனைப் பார்க்க வேண்டும்.
அவனைப் பார்த்து நன்றி கூறினால்தான் அவளுக்கு உணவே இறங்கும்.
எவ்வளவு பெரிய உதவியை செய்து இருக்கிறான் நன்றி கெட்டத்தனமாக அல்லவா நடந்து கொண்டு விட்டோம்.
இந்த எண்ணமே அவளை இரவு முழுவதும் உறங்கவிடவில்லை.
மருத்துவமனைக்குள் வந்தவளை முதலில் எதிர்கொண்ட பானுமதிக்கோ பேரதிர்ச்சி.
“என்னடி இன்னைக்கு வேலைக்கு வந்திருக்க… அதுவும் இவ்ளோ சீக்கிரமாவே வந்துட்ட.. சார் உன்ன லீவு தானே எடுக்க சொன்னாரு..?”
“இல்லடி நேத்து அவருக்கு தேங்க்ஸ் சொல்லவே மறந்துட்டேன்.. ரொம்ப கில்ட்டியா இருக்கு.. அவரப் பார்த்து தேங்க்ஸ் சொன்னாதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கும். அதனாலதான் சீக்கிரமாவே வந்துட்டேன்..”
“அடிப்பாவி எவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்காரு.. அவருக்கு போய் தேங்க்ஸ் சொல்ல மறந்துட்டேன்னு சொல்றியே..”
“அடியே நான் என்ன வேணும்னா பண்ணினேன்.. நேத்து ரொம்ப ஷாக் ல இருந்தேன்டி.. இன்னைக்கு சார் ஹாஸ்பிடலுக்கு வருவார்தானே..?” என அர்ச்சனா ஆவலுடன் கேட்க தன்னுடைய இரு கைகளையும் விரித்து தெரியாது என்பது போல செய்கை செய்தாள் பானுமதி.
“எனக்கு எப்படித் தெரியும்..? நேத்துதான் வந்தாரு.. இதுவரைக்கும் அவர் இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தது கூட இல்ல.. இன்னைக்கு வருவாரா இல்லையான்னு தெரியலையே..”
“அதுவும் சரிதான்..” என்றவளின் குரலோ சோர்ந்து போனது.
சற்று நேரத்தில் அதிகமான வேலைகள் இருவரையும் இழுத்து விட தத்தமது வேலைகளில் இருவருமே மூழ்கிப் போயினர்.
ஆனால் அர்ச்சனாவின் விழிகளோ அந்த மருத்துவமனையில் அடிக்கடி யாழவனைத் தேடி அலசுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.
சற்று நேரத்தில் தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு முதலாவது தளத்திற்கு வந்தவள் அங்கே இருந்த ஹாலினுள் அமர்ந்து சிலரோடு பேசிக்கொண்டிருந்த யாழவனைக் கண்டதும் சட்டென முகம் மலர்ந்தாள்.
இவ்வளவு நேரமும் சோர்வாக இருந்த அவளுடைய உடலில் அத்தனை உற்சாகம்.
அவனைப் பார்த்த கணம் புது உதிரம் பாய்ந்தது போல உணர்ந்தவளுக்கோ தன்னை எண்ணியே வியப்பாக இருந்தது.
வேகமாக அந்த ஹாலினுள் நுழைந்து அவனை நெருங்கியவள் அவன் முன்னே வந்து நிற்க,
மருத்துவமனையின் சீர்திருத்தங்களைப் பற்றி அவனுடைய தந்தையின் நண்பர்களுடன் முக்கியமாக உரையாடிக் கொண்டிருந்தவனோ அனுமதியின்றி தன் முன்னே வந்து நின்ற அர்ச்சனாவை “எக்ஸ்கியூஸ் மீ.. கெட் அவுட்…” என்ற கர்ஜனையுடன் தள்ளி நிறுத்திவிட்டு தன்னுடைய பேச்சைத் தொடங்கி விட அவளுக்கோ முகத்தில் அறைந்தாற் போல இருந்தது.
விக்கித்துப் போய் விழிகள் கலங்க அப்படியே நின்று விட்டாள் பெண்ணவள்.
Pavam da ava
அதானே கமல்ஹாசன் மாதிரி ஆஹா வந்துருச்சினு காதல் வந்துட்டா எப்படி? ஆயிரம் தடைகளை தாண்டி வந்தா தானே காதலின் அருமை புரியும். ஏம்மா நீ வேற ஆர்வக் கோளாறினால் வந்து அவன் கிட்ட திட்டு வாங்கற. விடு பார்த்துக்கலாம். நம்ம வினிமா சினிமா ரேஞ்சுக்கு ஹீரோவ சுத்தல்ல விடுவாங்க. ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக.👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🤩🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️